திருவரங்கத்தில் தேர்தல் பொது கூட்டத்தில் பெரியார் உரை



17-02-1967ல் திருவரங்கத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகச் சார்பில் தந்தை பெரியார் .வெ. ராமசாமி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு:
தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே !

இன்றைய தினம் நடைபெறும் இக்கூட்டத்தின் முக்கியமான நோக்கம் நாளை வருகிற 18 ம் தேதி நடைபெறப் போகும் தேர்தலிலே, நமக்குள்ள ஓட்டுரிமையை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிச் சிந்திப்பதற்குத்தான். எந்த வேட்பாளர்கள் இந்த தேர்தலில் அதிகமாக வெற்றி பெறுகிறார்களோ, அந்தக் கட்சியினர்தான் இந்த நாட்டை ஆளப் போகிறார்கள். அவர்களுடைய ஆட்சியில் தான் நாம் குடிமக்களாக இருக்க வேண்டும். ஓட்டுப் பெற்றவர்கள், சரியாக அந்த ஓட்டைப் பயன்படுத்துகிறார்களா என்பது ஒரு பெரிய பிரச்சினை தான். ஏன்? அவர்கள் அந்த ஓட்டைப் பயன்படுத்தத்தக்க அறிவும் தகுதியும் பெற்று இருக்கிறார்களா? ஏதோ நாங்களும் சமதர்மம் மக்களுக்கு உறுதி கொடுத்துவிட்டோம் ஜனநாயகத்தையும் தந்தோம் என்று சொல்லுவதற்காக மக்களுக்கு ஓட்டுக்கொடுத்திருக்கிறார்களா என்பது சிந்திக்க வேண்டியதுதான்



நாங்கள் மனித சமுதாயச் சீர்திருத்தக்காரர்கள் - சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளையெல்லாம் நீக்க வேண்டுமென்கிற எண்ணத்தின் மீது அரசியலையும், பதவியையும் நாம்லட்சியம் பண்ணாமல் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று பாடுபடுகிறோம். மக்களைத் திருத்துவதிலேயும், முதலாவது காரியமாக, மக்களிடத்தில் ஒழுக்கம், நாணயம், நேர்மை உண்டாக்க வேண்டுமென்பதில் பொதுக்காரியமாகக் கொண்டு, நாங்கள் தொண்டாற்றி வருகிறோம். அந்தப்படி மக்களுக்கு நாணயம், ஒழுக்கம், நேர்மை ஏற்பட வேண்டுமென்று பாடுபடுகிற நாங்கள் இந்த ஜனநாயத்தை ஏற்றுக் கொள்ளலாமா? இந்த ஓட்டுரிமையையும் இந்த அரசியல் முறையும் தொடர்ந்து நம்ம நாட்டில் இருக்கலாமா? என்பதுதான் எங்களுடைய பெரிய கவலையாய் இருக்கிறது.

வெள்ளைக்காரன் காலத்தில் தேர்தல் தோழர்களே! இந்த எலக்ஷன் முறையின் காரணமாக, பதவிக்கு வருவதற்குத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற காரணத்திற்காக ஓட்டுப் பெற்று, அதனால் பலனை உண்டாக்குவதைவிட இந்த ஓட்டு காரணமாக எவ்வளவு நல்ல வேட்பாளனையும் அயோக்கியனாக்கி விடுகிறார்கள். எவ்வளவு யோக்கியர்களா இருந்தாலும் வேட்பாளர்கள் ஒழுக்கத்தோடு இல்லை. நான் சீமையில் தேர்தல் நடந்ததைப் பார்த்துவிட்டுத் தான் வந்திருக்கிறேன். முன்பெல்லாம் ஓட்டு இங்கு இருந்தது வெள்ளைக்காரன் காலத்திலே. ஆனால் ஒரு அளவுக்குத் தகுதிபார்த்து கொடுப்பான். அபேட்சகர்களும் தகுதியுள்ளவர்களாகவே நிற்பார்கள். அப்ப பணம் கொடுக்காமல் தேர்தல். நாணயம், ஒழுக்கம் கெடாமல் காரியம் நடக்கும். அப்படித்தான் இருந்தது. அவன் போன பிறகு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கனும்ன்னு ஆரம்பிச்சப் பிறகு வேட்பாளர்களான இரண்டு பேர் நிற்பதில் போட்டி ஏற்பட்டு நாணயம் இல்லாமல் போய் விடுகிறது. காரணம் என்னா? கொள்கையில் கூட அவர்களுக்கு இலட்சியம் இல்லை. தேர்தலில் நின்று விட்டால் சரி, எப்படியாவது ஜெயிக்கணும். அதுக்கு எந்தவிதமான பித்தலாட்டமான ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்யணும். எவ்வளவு யோக்கியமான ஓட்டராக இருந்தாலும் அவன் எந்த அளவிற்கு நாணயமாயிருந்தாலும் அவனை நாணய மற்றவர்களாக ஆக்கி எந்த விதத்திலாவது ஓட்டுவாங்கணும். இதுதான் ஓட்டுரிமையிலே ஏற்படுகிற பலன்.

பணநாயகமே ஜனநாயகம் (போலி ஜனநாயகம்)

எந்த அளவிற்குப் போய்விட்டது? ஒரு அபேட்சகர் 5000 ரூபாய் செலவு பண்ணினான் முதலிலே. அப்புறம் 10 ஆயிரம் ஆச்சி, 50 ஆயிரம் ஆச்சி செலவு. பிறகு 75 ஆயிரம் ஆச்சி. இப்ப சாதாரணமாக சில இடங்களில் போய் ஒரு லட்சம் வரை செலவாகிறது, மற்ற செலவுகள் எல்லாம் இல்லாமல். இந்த ஒரு இலட்சம் ரூபாய் அவன் செலவு பண்ணி 50 ஆயிரம் 50 ஆயிரம் என்று பணம் செலவு பண்ணி அவன் பதவிக்கு வந்த பின்பு அவன் போட்ட பணத்தை எடுக்கப்பார்ப்பானா இல்லையா? (கைத்தட்டல்) ஓட்டர்களிடையே நாணயத்தைக் கெடுத்து எப்படியாவது ஓட்டு வாங்கணும் (சிரிப்பு). நீங்க நினைச்சுப்பாருங்க. ஓர் எல்லையை வைச்சாங்க, சர்க்காரிலும் 10 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய்தான் செலவு பண்ணலாம்னு.

10 ஆயிரம் 20 ஆயிரம் ஒழுக்கத்துக்கு கேடான காரியத்துக்குச் செலவு செய்கிறான் எலக்ஷனில். நல்லா நினைச்சிக்கங்க. 10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு பண்ணி எலெக்ஷனில் ஜெயிக்கனும்ன்னா, உண்மையான ஜனநாயத்திலே 100 க்கு 95 பேருக்கு வசதி வாய்ப்பு இருக்குமா? எத்தனை பேரு நம்ம ஜனங்களிலே இலட்ச ரூபாய் செலவு பண்ணி எலக்ஷனிலே ஈடுபட வாய்ப்போடு இருக்கிறாங்க? எந்தக் கட்சிக்காரனும் அபேட்சகரை எதிர்த்து நிற்கும் ஆளு ஓட்டுக்கு வந்தாலும், அவனிடம் ஓட்டர்கள் ரூ 5 கொடுக்கறீயா, 10 ரூபாய் கொடுக்கறீயான்னு கேட்கலாம். இது ஒண்ணும் ரகசியமில்லே. நம்ம நாடு பூராவும் தெரிந்திருக்கிற ரகசியம் இது. இதைப் பற்றி யாருக்கும் கவலையில்லையே. இலட்சியம் பண்றதில்லையே? எல்லாக் கட்சிக்காரர்களும். காந்தியார் காலம் தொட்டு மக்களுக்கு ஓட்டுக் கொடுத்துவருகிறாங்க. ஓட்டுக்குப் பணம் கொடுத்து அவர்களை ஏச்சி, எப்படியாவது பதவிக்கு வரணும் அது தான் அபேட்சகர்களின் நோக்கம். இப்படி பணம் கொடுத்துப் பதவிக்கு வந்த பிறகு அதுதான் ஜனநாயகம்ன்னு பேசுறாங்க.

நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நான் ஒரு சமுதாய சீர்த்திருத்தக்காரன் என்பதனாலே இதைச் சொல்லுகிறேன். நான் அரசியலில் இருந்தால் கூட இந்த அயோக்கியத்தனமான காரியங்களை எல்லாம் நானும் பண்ணித்தான் ஆகணும். காந்தி அரசியலில் நின்னாலும் பணம் கொடுத்துதான் ஆகணும், ஜவஹர்லால் நேரு எலக்ஷனில் நின்னாலும் அவரும் பணம் கொடுத்துதான் ஆகணும். நம்ம காமராசர் எலக்ஷனில் நிற்கணும்ன்னு சொன்னாலும் அவரும் இலட்சரூபாய் செலவு பண்ணித்தான் ஆகணும், அப்புறம் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவேணுமா? இப்படி எல்லாம் எலெக்ஷனில் ஜெயிச்சிவரணும்ன்னா இதுஎன்னா ஜனநாயகம்? வெங்காய ஜனநாயகம் (சிரிப்பு கைத்தட்டல்) பணத்தினாலே ஜெயிக்கலாம், பித்தலாட்டத்திலே ஜெயிக்கலாம். மக்களை ஏய்க்கிறதினாலேயும் ஜெயிக்கலாம். (சிரிப்பு) அப்படி ஜெயிச்சி வந்ததுக்கு, அப்புறம், அதை ஜனநாயகம் என்கிறான்.

  ஜனநாயகத்தில் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்கிறான். ஏன் இதையெல்லாம் சொல்றேன்னா? பணம் கொடுக்கிறதாலே நாணயம் கெட்டு போகுது ஒழுக்கம் கெட்டுப்போவுது.
 இந்த முறையிலே நல்லவன் யோக்கியன் வரமுடியாமல் போயிடுது. நல்ல மனுஷன் வருவதுக்கு வாய்ப்பும் இல்லாமல் போயிடுது, இந்த மாதிரியான தேர்தல் முறையினாலே. ஆனதினாலே இந்தமாதிரியான, ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான, ஜனநாயகத்தை ஒழிக்கத்தான் நான் பாடுபடுகிறேன். (கைத்தட்டல்) இது மாறணும் விரைவிலே. (கைத்தட்டல்) சுத்த காலிபசங்களை கொண்டுவந்து விட்டுடறாங்க, மகா அயோக்கியத்தனங்களைச் செய்யப்பயப்படாமே துணிஞ்சி தேர்தலில் வந்திடுகிறாங்க. பணத்துக்குத்தான் ஓட்டுதந்தாங்கண்ணு அவனுக பதவிக்கு வந்த உடனே பொறுக்கித்திங்க ஆரம்பிக்கிறாங்க. இந்த மாதிரி நிலை நீடிக்கிறதினாலே நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு கஷ்டப்படுகிற மக்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை. காமராஜர் (ஆட்கள்) வந்தால் எப்படியோ? நல்ல வாய்ப்பினாலே நமக்கு நல்ல காரியம் ஏதோ நடக்கும் அப்படீன்னு ஒரு நம்பிக்கை பேரிலே ஏதோ என்னால் ஆன தொண்டை செய்ய வேண்டி இருக்கிறது. ஜனநாயகத்திலே வந்தவன் எல்லாம் யோக்கியமாக நடந்து கொள்கிறானோ?

ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியிலிருந்து (14-7-1937லே) போயி காங்கிரஸ்காரன் (15-7-1937ல்) பதவிக்குவந்தான் காந்தியோட செல்வாக்கினாலே. அப்ப ஜஸ்டிஸ் கட்சிக்காரனை வைதார்கள் காங்கிரஸ்காரன். நல்லா கவனியுங்க நீங்க. காங்கிரஸ்காரரு, ஜஸ்டிஸ் கட்சியில் சுத்தக் காலிபசங்க எல்லாம் வந்துவிட்டானுங்க பதவிக்கு. ஜஸ்டிஸ் கட்சி சுதந்திரத்துக்கு விரோதமான கட்சி வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக்கும் கட்சி  . என்று அப்படிச் சொல்லி பதவிக்கு வந்தானுங்க காங்கிரஸ்காரன் 1937 லே.

பள்ளிகளுக்கு மூடுவிழா செய்த ராஜாஜி

அப்படி பதவிக்கு வந்தவங்க என்ன பண்ணினாங்க? அந்த காங்கிரசுக்காரனுங்க. நீங்கள் நல்லா கவனிங்க.அந்தக் காலத்திலே ரொம்ப யோக்கியர்ன்னு சொல்லப்பட்டவர் ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) நான் ஆரம்ப காலத்திலே அவருக்குச்சிஷ்யனாக இருந்தவன். அவரு வந்தார் பதவிக்கு 1937லே . வந்ததும் அவரு செய்த வேலை என்னா? பள்ளிக்கூடத்துக்குப் பணம் இல்லேன்னு சொல்லி 2300 ஆரம்பப் பள்ளிக்கூடத்தை மூடினாரு (ராஜாஜி)- ன்னு சொன்னா அது முட்டாள் தனம்ன்னு தானே சொல்லணும். இவ்வளவு பித்தலாட்டம் செய்து, தேர்தலிலே ஜெயிச்சவங்க பள்ளிக் கூடத்தை மூடறேன்னு சொல்லிட்டா பதவிக்கு வந்தாங்க? ஏற்கனவே அந்த சமயத்தில் 100 க்கு 95 பேருக்குப் படிப்பு இல்லே. ஜனங்களுக்கு ஒண்ணும் கேட்கிறதுக்கு ஆளுங்க இல்லே. மூடு பள்ளிக்கூடத்தை! ஏன்டா மூடினே? 2300 பள்ளிக்கூடத்தை என்றால் பணமில்லை அரசாங்கத்திடம் என்றார். ஜனநாயகம்ன்னா அதைத் தானே குறிக்கிறது.

அப்புறம் பதவிக்கு வந்தாங்க (10-4- 1952லே ராஜாஜி - மீண்டும்) பித்தலாட்டம் பண்ணி ஒழுக்கக் கேடான காரியமெல்லாம் பண்ணி பதவிக்கு வந்த உடனே, கிராமப்புற 6000 பள்ளிக்கூடத்தை மூடுன்னாரு (ராஜாஜி) (1952இல்). அதுக்கும் அரசாங்கத்திடம் பணமில்லேன்னாங்க. அப்படி பள்ளிக்கூடத்தை மூடினதினாலே என்னா ஆச்சீன்னா? அப்ப ஜனங்கள் 100க்கு3 பேருதான் படிச்சபோது. காங்கிரஸ் காரங்கதான் அவருக்கு கீழே மந்திரிகள் இருந்த போது தானே எல்லா காரியமும் நடந்தது. கொடிகட்டி பறந்தாங்க அன்னைக்கு. அப்படி ஆண்ட அவுங்க மேலே குத்தம் சொல்றதா? இல்லை அந்த ஜனநாயக முறையிலே குறை சொல்றதா?

பதவியை வெறுத்து தொண்டறம் புரிந்த பெரியார்

இந்த எலக்ஷனிலே இப்ப நடக்கிற போராட்டம் எல்லாம் பள்ளிக் கூடத்தை மூடினவனுக்கும் (ராஜாஜிக்கும்) - பள்ளிக்கூடத்தை திறந்தவனுக்கும் (காமராஜீக்கும்) தான் (கைத்தட்டல்). இப்ப எலக்ஷனில் நடக்கிற போராட்டம் யார் யாருக்கும்ன்னா? மூடினவனுக்கும் திறந்தவனுக்கும் தான் போராட்டம். (பலத்த கைத்தட்டல்) எனக்கு இது ரொம்ப கஷ்டம் தான். ஏன்னா? நான் இந்த மக்களுக்காகப் பாடுபட்டவன், நாற்பது வருஷமாக. என் காலடியில் மந்திரிபதவி வந்தபோது ராஜாஜியே என்கிட்டே வந்து  நீ மந்திரி பதவி எடுத்துக்க, நீ கையெழுத்து போடு நான் உனக்குக் கீழே இருந்து வேலை செய்கிறேன். உனக்கு ஒரு காசு செலவில்லாமல் பண்ணி வைக்கிறேன். நீ கதர் கூட கட்டவேண்டாம்  ன்னு கெஞ்சின காலத்திலே கூட நான் வேண்டாம் ன்னுட்டு மக்களுக்குத் தொண்டு செய்து வந்தேன். நான் இம்மாதிரி தேர்தலில் ஈடுபட்டுத் தொண்டு செய்து கொண்டிருந்தால் இந்த தேர்தல் காலத்தில் மக்கள் என்னை எப்படி மதிப்பார்கள்? எப்படியோ நான் அரசியலிலிருந்து தப்பிச்சிகிட்டு தேர்தலும் வேண்டாம், ஓட்டும் நமக்கு வேண்டாம் அப்படீன்னு இருந்து விட்டேன். (கைத்தட்டல்). எலெக்ஷன் நடந்தால் நம்ம வேலை எவனோ எக்கேடு கெட்டு போகட்டும்.

நீங்கள் தேர்தலில் ஈடுபட்டு கெட்டுப் போகாதீங்கன்னு சொல்றேன். சாதாரண மக்களாலே முடிவதில்லையே?. எல்லாக் காலித்தனங்களும் பண்ணித்தான், அயோக்கியத்தனங்களை செய்து தான், ஒருவன் தேர்தலில் நிற்க வேண்டி இருக்கிறது. யோக்கியமானவன் இதெல்லாம் செய்வதற்கு பொது வாழ்வுக்கு எவன் வருவான்? பொறுக்கித்தின்றதுக்குத் தான் தேர்தலுக்கு வருவான் (கைத்தட்டல், சிரிப்பு). ஆகவே, தோழர்களே! நாளைக்கு உங்களைக் கேட்பானுங்க என்னடா நீ ஒழுக்கம் நாணயம்னு பேசறே ஏன் இந்தத் தேர்தலில் ஈடுபட்டாய் என்று கேட்பாங்க. ஏன் ?சமுதாயத் தொண்டு இன்னும் பாக்கி இருக்கு எனக்கு. இந்த போட்டியிலே நாம தப்பினால்தான் ஏதோ நாம அமைதியாக வாழலாம். இதிலே ஏமாந்தோம் இதிலே தோல்வி அடைந்தால் அமைதியைக் காத்து நாம் இரத்தம் சிந்தும் படியான நிலைமை வந்தாலும் வந்திடும்.

மேலை நாடுகளில ஜாதி அமைப்பு இல்லை

ஆனதினாலே நான் இங்கு இந்த தடவை எப்படியாவது என் கருத்தைச் சொல்லிவிட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கிறேன். இந்தத் தேர்தல் கொள்கையை வைத்துத்தான் நடக்கிறது. என்னா இத்தேர்தல்ன்னா? ஒரு கொள்கை மக்களுக்குச் சமுதாயத்துறையிலே சமதர்மம். பொருளாதாரத் துறையிலேசமதர்மம்.அப்படிஎன்றால் சமுதாயத் துறையிலேபார்ப்பான், சூத்திரன்; பள்ளன்; பறையன்; சக்கிலி இம்மாதிரியான ஜாதி அமைப்பு இருக்கவே கூடாது. அகராதியிலே கூட அம்மாதிரியான சொற்கள் இருக்கவே கூடாது. மக்கள் எல்லாம் ஒண்ணு ஒரே பிறவியாக இருக்கவேண்டும். ஒரே சொல்லாக மனிதன் என்று தான் சொல்லவேண்டும். சமதர்மம் என்பது காமராஜருடைய கொள்கை. இதுவெல்லாம் அதிசயமான கொள்கை அல்ல. இந்த நாட்டில் இதுவரைக்கும் இந்த ஜாதி அமைப்பு இருப்பதை இல்லாது செய்யவேண்டுமே ஒழிய, இது இங்குதான் இருக்கு. இந்த மாதிரியான அமைப்பு உலகில் வேறு எங்குமில்லை. இந்த நாட்டை தவிர. வெள்ளைக்காரன் நாட்டில் பறைய வெள்ளைக்காரன், பார்ப்பான் வெள்ளைக்காரன், சூத்திர வெள்ளைக்காரன் என்று கிடையாது. துலுக்கனுடைய நாட்டினை எடுத்துக்கிட்டாலும் பறைத்துலுக்கன், பாப்பாரத்துலுக்கன் (சிரிப்பு) சூத்திரத்துலுக்கன்னு கிடையாது. இன்னும் ரஷ்யாவை எடுத்துக்கிட்டாலும் சரி. ஜப்பானை எடுத்துக் கிட்டாலும் சரி. மனுஷன் தான் அங்கே. மேல் ஜாதிக்காரன், கீழ் ஜாதிக்காரன் கண்டால் தீட்டு என்கிற ஜாதி அமைப்பு முறையும் அங்கேயில்லை.

இந்த நாட்டில் ஜாதி முறைக்கு என்னா நிபந்தனை இருக்குதுன்னா? மேல் ஜாதிக்காரன், கீழ் ஜாதிக்காரனுடைய பெண்டாட்டியை பாலாத்காரமாய்ப் பிடிச்சி இழுத்து ரகளை பண்ணி (அவளை) அனுபவிச்சாலும் அது தப்பும் அல்ல. பாவமும் அல்ல. (சிரிப்பு, கைத்தட்டல்). அதை அனுபவிச்சவன் மோட்சத்துக்கு போவான். (சிரிப்பு, கைத்தட்டல்) அது தான் ஜாதி அமைப்புத் தத்துவம். நாமெல்லாம் கொஞ்சம் உசாரானதினாலே அவனுங்க இதைச் சொல்லப்பயப்படுகிறானுங்க.அப்படி நாம (அவர்களை) செய்திட்டால் நம்ம பொம்பளைங்க கதி என்ன ஆகும்ன்னு? (சிரிப்பு) ஆனால் அவன் (மேல் சாதிக்காரன்) அப்படி அனுபவிக்கஉரிமை இருக்குது சாஸ்திரப்படி சம்பிரதாயப்படி மனுதர்ம சாத்திரம் வாங்கிப் பாருங்க.

குலக்கல்வி திட்டம் தீட்டிய ராஜாஜி

பாப்பான் பாதுக்காக்கப்பட்டப் பதிவிரதையான பொம்பளையைப் பலாத்காரமாக கெடுத்தாலும் அது தப்பல்ல. திருப்பியும் எழுதுகிறான் ஒரு கீழ் மகன் ஒரு கெட்டுப் போன குச்சிக்காரப் பாப்பாத்தியை கையில் தொட்டாலும் அவனை சித்திரவதை பண்ண வேண்டியது. இந்த உண்மை நமக்குத் தெரிஞ்சதுக்கு அப்புறம் மற்றதெல்லாம் எப்படி இருக்கும்ன்னு நீங்க நினைச்சிக்கங்க? இந்த மாதிரி இருந்து வருகிற ஒரு ஜாதி அமைப்பே ஒழிக்கவேணும்ன்னு சொல்லி இப்பதான் நாம நினைக்கவே முடிஞ்சிது. இது ஏற்பட்டு எத்தனையோ ஆயிர வருஷமாச்சி. இது வரையிலும் ஆயிரக்கணக்கான - மகாத்மாக்கள் ரிஷிகள், முன்னோர்கள், பக்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், வெங்காயம்கள், (சிரிப்பு) எத்தனையோ பேர்கள் இருந்திருந்தும் இப்படியுள்ள ஓர் (ஜாதி) அமைப்பை மாற்ற வேணும்ன்னு எவனுமே பாடுபடலே. ஆமாம். எவனுமே பாடுபடலே. நாங்கள் தான் இதற்காக உழைச்சிகிட்டு இருக்கிறோம். நாம ஒரு 40 வருஷமாக உழைச்சதன் பயனாக, நல்ல வாய்ப்பா காமராஜர் வந்தார். அவர் பதவிக்கு (முதலமைச்சராக) வந்தக் காலத்தில் ரொம்ப அக்கிரமம் பன்ற அளவுக்குப் போயிட்டானுங்க பாப்பானுங்க. அவர் பதவிக்கு வந்த உடனே என் மீது ஆத்திரப்பட்டு வராமல் அவர் மீது ரகளை பண்ண ஆரம்பிச்சாங்க.

கடைசியாக காமராஜர் பதவிக்கு வருவதற்கு முதல் நாள் அரசாங்கத்தில் இருந்த பள்ளிக் கூடங்களை எல்லாம் மூடிடு. சூத்திரப் பசங்க (பிள்ளைகளெல்லாம்) ஒரு நேரம் தான் படிக்கனும். மறு நேரம் அந்தப் பசங்க அவனவன் ஜாதித்தொழிலைச் செய்யனும். ஜாதித்தொழில் செய்யாதப் பையனைப் பள்ளிக் கூடத்திலே விடாதே, அப்படீன்னு முதல் அமைச்சர் இராஜாஜி உத்தரவு போட்டாலும் அந்த உத்தரவினுடைய ஆதிக்கம் என்னான்னா? அது காங்கிரஸ் போட்ட உத்தரவுதானே? காங்கிரஸ்காரங்களும் அப்போது அதைப் பற்றிக் கவலைப்படலே. அதை அவர்கள் எதிர்க்கலே. தாங்கள் பதவியில் இருந்தால் போதும்ன்னு நினைச்சாங்களே தவிர, நம்ம சமுதாயத்தை ஜாதித் தொழில் பண்ணிட சொன்னானுங்களேன்னு, எவனுக்கும் ஆத்திரம் வரலே. இந்த தொகுதியில் நிற்கிறானே காங்கிரசை எதிர்த்து நிற்கிற அந்தக் கட்சிக்காரனுக்கும் ஆத்திரம் வரலே. அப்ப எங்களுக்குதான் ஆத்திரம் வந்தது.

குலக்கல்வித்திட்டத்திற்கு எதிரான போராட்டம்

அந்த ஆத்திரத்திலேதான் நாங்கள் அந்தக் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தோம்எடுத்துக்க கத்தி ஒரு மாசத்துக்குள்ளே இந்த (குலக்கல்வித் திட்ட) உத்தரவு மாறாது போனால், எந்தப் பாப்பானையும், பாப்பாத்தியையும் யாராய் இருந்தாலும் சொருகு. (கைத்தட்டல்). பெட்ரோல் வாங்கிக்கோ நெருப்புக் குச்சி வாங்கிக்கோ வையி அக்ரகாரத்துக்கு எல்லாம் நெருப்பு. (சிரிப்பு, கைத்தட்டல்) ஏன்னா? நம்ம பிள்ளைகளை ஜாதித் தொழில் செய்யணும்கிறான். நாமெல்லாம் படிக்காமல் இருக்கனும்ன்னு செய்யறான். நாம ஜாதித் தொழில் செய்ய வேணும்ன்னு. அப்படி ஒரு நிர்ப்பந்தம் வந்திட்டால் நாம அதை எதிர்த்து போராட்டத்தில் 10, 20 பேரைச் சுட்டு நாம தூக்கிலே போனால்தான் என்ன தப்பு? அந்த நிலையிலே தான் நாம இந்த முயற்சியைப் பண்ணினோம்.

திட்டத்தை திரும்பப் பெற்றார் ராஜாஜி

ஏதோ வாய்ச்சிது. பயந்தானுங்க அவனுங்களும் (பார்ப்பானுங்களும்) (சிரிப்பு, கைத்தட்டல்) இல்லாதிருந்தால் ஏதாவது ஆகியிருக்கும். அது என்னா ஆயிருக்கும்ன்னு தெரியாது. நாங்களும் அதில் ஒழிஞ்சியிருப்போம். எல்லாப் பார்ப்பானுங்களும் சேர்ந்துகிட்டு ராஜகோபாலாச்சாரி கிட்டேபோயி நீ பண்ணின அக்ரமத்தாலே அக்கிரகாரத்துக்கெல்லாம் ஆபத்தாய்ப் போச்சி. நாங்கள் தனியாகத் தொழிலுக்குக் போக பயமாய் இருக்குது. எங்க பொம்பளைங்க தனியா வெளியே நடக்க பயமாயிருக்குது. நீ இப்படி (குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்தி) பண்ணிட்டியேன்னு (முதலமைச்சரான) இராஜாஜி அதற்குச் சமாதானம் சொல்ல முடியாமே ஒரு காரணமும் சொல்லாமல் பதவியை விட்டு (ராஜாஜி) ஓடினாரு. (12 .04.1954இல்) அப்ப வந்தார் காமராஜர் அந்த இடத்தைப் பூர்த்தி பண்ணி (13.04.1954இல்) அப்பவும் அவருக்கும் ரகளை பண்ணினாங்க. எப்படியோ அவரு சமாளிச்சி வந்தாரு. அப்பவும் அவரை சும்மா விடலே. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாங்க. சமாளிச்சிட்டார். காமராஜர் பதவி ஏற்றதும் ராஜாஜி செய்ததை எல்லாம் மளமளன்னு மாற்றினார். ராஜகோபாலாச்சாரியாரால் மூடின பள்ளிக்கூடத்தை எல்லாம் காமராஜர் திறன்னார். இனி இரண்டு நேரமும் படிப்புண்ணார். ஒரு நேரப் படிப்பு இல்லேன்னார். அடுத்து ஜாதித் தொழிலையும் எவனும் பண்ண வேண்டியதில்லேன்னுட்டார்.

ஜாதி ஒழிய சமுதாயமும் பணக்காரன் ஒழிய பொருளாதார சமதர்மமும் மலரும்:

இந்தப்படி மூணு உத்தரவைப் போட்டார் காமராஜர். நம்ம காலிலே நிற்கலாம் இனி என்று தன் பதவியைச் சரி பண்ணிக்கிட்டார். இனி யாரும் அவரை ஒண்ணும் பண்ண முடியாது என்று தைரியம் அவருக்கு வந்திட்டுது. அதற்கப்புறம் இது மாத்திரம் பண்ணினால் பத்தாது. இந்த ஜாதியை எப்படியாவது ஒழிச்சாகணும். ஜாதி இருப்பதால் தானே இந்த அக்ரமம் எல்லாம் பண்றான். ஆனதினாலே இந்த ஜாதியை ஒழிக்கிறது எப்போ? 1954 லே காமராஜர் பதவிக்கு வந்தாரு. அந்த வருஷமேஇதைபண்ணிட்டார். காங்கிரசிலே ஜாதியை ஒழிக்க வேணும்ண்ணு. ஜாதியை ஒழிச்சால் மட்டும் போதாது, இந்தப் பணக்காரப் பசங்களால் ரொம்ப தொல்லை. அவன் பணம் சம்பாதிக்கிறதுக்காக, எந்த அயோக்கித்தனமும் பண்றது. ஒழுங்கா சம்பாரிச்சா சொல்ல வேணாம். அத்தோடு அவனோடு பார்ப்பானும் சேர்ந்துகிறது. இரண்டு பேரும் சேர்ந்துக்கிட்டதினாலே அவரு இந்தப் பணக்காரப் பசங்களை எல்லாம் ஒழிக்கணும். பாப்பான்களையும் ஒழிக்கணும். அதற்கு என்னாவழி? சமதர்மம். என்னா சமதர்மம்? சமுதாய சமதர்மம், ஜாதி ஒழிக்கணும். பொருளாதார சமதர்மம்ன்னா பணக்காரனை ஒழிக்கணும். 1954 லேயே இதை முடிவு பண்ணிட்டார் 1954 ஏப்ரலிலேயே. ஆவடியிலே காங்கிரஸ் மாநாட்டிலே. 1954 டிசம்பரிலே, அந்த மாதிரி தீர்மானம் பண்ணிட்டார். உடனே பாப்பானுங்க கவிழ்ப்பது என்று ஆரம்பிச்சாங்க.

ஆனால் காமராசர் தம்மைப் பலப்படுத்திக்கிட்டார். அதற்கு வேண்டிய காரியங்களை செய்துகிட்டே வந்தோம். பார்ப்பானுங்க பெரும்பாலும் காங்கிரசிலே இருந்துவிலகிட்டானுங்க.ஒருஆளு கூட இல்லே. மந்திரி பாப்பானுங்க தவிர ஏதோ காமராஜரை நத்திப் பிழைக்கிறவன் இருந்தாங்க. நாலு அஞ்சு ஆளுகள் தவிர. எல்லா பாப்பானுங்களும் காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டான். காமராஜருக்கு நல்ல ஆதரவு. ஆனால் பாப்பானுங்க காமராசரை ஒழிக்கிறதுன்ணு கங்கணம் கட்டிகிட்டு இருந்தானுங்க. இந்த அளவுக்குப் போன உடனே 1964இல் காங்கிரஸ் கூடியது. அதில் காங்கிரசினுடைய கொள்கையும் சமதர்மம் என்று அறிவித்தார்கள்.

மைனர் போராட்ட கலவரம்

அடுத்தாப்பிலே, ஜாதியை ஒழிக்கிறதுக்கும் பணக்காரனை ஒழிக்கிறதுக்கும் தான் காங்கிரசு நடத்த வேண்டியது. அப்படீன்னு காமராசர் பட்டாங்கமாகச் சொல்லிவிட்டார். அவரு எங்க கொள்கைக்கே வந்து விட்டார். கொஞ்ச நஞ்சம் இருந்த பாப்பானுங்களும் போயிட்டானுங்க(சிரிப்பு). பணக்காரன்களும் காங்கிரசை விட்டு விலக ஆரம்பிச்சிட்டாங்க. எந்த அளவுக்கு துரோகம் பண்ணணுமோ, சூது பண்ணணுமோ இரண்டிலே ஒண்ணு செய்தாகணும்ன்னுட்டானுங்க; காங்கிரசை விட்டுப் போனவங்க. போயி அவனுங்க பண்ணின காலித்தனத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் 1954-லிலே காங்கிரசின் லட்சியம் சமதர்மம் என்றதுமே 1965-லேயே காலித்தனத்திலே இறங்கிவிட்டானுங்க. பள்ளிக்கூடத்து பையன்களையெல்லாம் தூண்டி பணத்தைக் கொடுத்து காளிப் பசங்களையும் குண்டர்களையும் கூலிக்கு அமர்த்தி, 1965 ஜனவரி 25ம் தேதி போராட்டத்தை ஆதாரமாய்வைச்சி என்கிட்டேயே ரகளைக்கு கிளம்பிட்டானுங்க. இந்தஊரில் (திருச்சியில்)நடந்த அக்கிரமங்கள் எல்லாம் மற்றும் வெளியூரில் நடந்த அக்கிரமங்கள் எல்லாம், கரூரில் நடந்தது எல்லாம், திருப்பூரில் நடந்தது எல்லாம், மதுரை ஜில்லாவில் நடந்தது எல்லாம், குமார பாளையத்திலும் இன்னும் ஒரு 20,30 இடத்திலே நடந்ததெல்லாம் கொலை, கொள்ளை, பண்டங்களை எல்லாம் நாசம் பண்ணினாங்க.

கச்சேரிக்கு நெருப்பு (போலீஸ் ஸ்டேஷனுக்கு நெருப்பு) வைக்கிறது. முன் சீப் கோர்ட்டைச் சாம்பலாக்குகிறது. வீதிகளில் போகிற பஸ்களை எல்லாம் நிறுத்தி நெருப்பு வைச்சி கொளுத்தி சாம்பலாக்குகிறது. அப்ப கேள்வி இல்லை. கேட்பாரில்லை. அரசாங்கத்துக்குத் தெரியும். இதைச் செய்கிறவங்க சின்ன பிள்ளைங்க, தெரியாமல் பண்றானுங்க அப்படீன்னு நாங்கள் அவுங்களை என்னா பண்றது? அந்த அளவுக்கு அந்த பசங்க போறாங்கன்னா ஆளுங்களை கையை கட்டிப்போட்டு கீழே தள்ளி அவன் மேலே வண்டியைவிட்டு ஏத்தி; அவன் வாயிலே ஒண்ணுக்கு இருந்து, அவன்உடல் பூரா பெட்ரோலை ஊத்தி எரிச்சி சாம்பலாக்குகிற அளவுக்கு வந்தாங்க. இதில் எல்லாப் பாப்பானுங்களும் ஈடுப்பட்டானுங்க. இதையெல்லாம் நம்ப சர்க்காரே இன்ன ஆளுபண்ணிட்டாங்க-ன்னு சர்க்கார் அதைக் கண்டுக்கலே, சர்க்காராலே ஒண்ணும் செய்ய முடியலே. பணக்காரனெல்லாம் அந்தக் காரியத்துக்குப் பணம் கொடுத்தானுங்க. ஏன்? என்னடான்னா? இந்தி புகுத்தினான்னு ஏதோ சாக்கு வைச்சி. இந்த மாதிரி ரகளை பண்ணினாங்க.

இந்தியை அப்ப புகுத்தவுமில்லே வெங்காயமுமில்லே. எல்லா ஆளுகளும் இந்தக் காலித்தனம் செய்தானுங்க. இந்தியா பூராவும் ரகளை நடந்தது. அய்தராபாத்திலே, டில்லியிலே, பம்பாயிலே, கல்கத்தாவிலே, பீகாரிலே மளமளன்னு எல்லா இடங்களிலேயும் நடந்தது. இன்னமும் சில இடங்களிலே நடக்குது. கலவரம் தீர்ந்ததுன்னு சொல்றதுக்கு இல்லே. சமதர்மம் ன்னு சொன்னதினாலே இது நடக்குது. நம்ம ஜனங்களும் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படறதில்லே. என்னமோ அந்த மாதிரி இருந்தது நிலைமை.

கலகக்காரர் பெரியார்

1965 லே நடந்த அந்தக் கலவரத்தின் போது நான்தான் எடுத்துக்கங்க எல்லாரும் கத்தியை, சர்க்காராலே பாதுகாக்க முடியலே, சொருவுங்க எவனைக் (பாப்பானை) கண்டாலும் (கைத்தட்டல்) அப்படீன்னு அறிக்கை போட்டிருந்தேன். விடுதலை யிலே. அந்த அறிக்கையைத் தூக்கிக்கிட்டு சர்க்கார் என்கிட்டே வந்தது. இந்த மாதிரி நீஅறிக்கை போட்டது தப்பு, வாபஸ் வாங்குன்னுட்டு. அக்கலவரத்தின் போது என் வண்டியை எல்லாம் அடிச்சிக் கல்லால், கண்ணாடியை எல்லாம் உடைச்சாங்க. அதுக்கு எனக்கு 3000 (ஆயிரம் ரூபாய்) செலவு செய்தேன்னு சொன்னேன். (கைத்தட்டல்)

கலெக்டர், அய், ஜி அவுக இருவரும் என் வீட்டுக்குவந்து என்னா இந்த மாதிரி அறிக்கை போட்டிருக்கிறீயே நியாயமான்னுகேட்டாங்க. வேறு நாதி இல்லையே என்றேன் நான். அவர்கள் நாங்க பார்த்துக்க மாட்டோமா? அப்படீன்னு கேட்டாங்கநீங்க எல்லாம் யாராவது செத்ததுக்கு அப்புறம் தானே வருவீங்க என்றேன். நீங்க பார்த்து கிட்டதைத்தான் நான் பார்த்துகிட்டேனே. தினமும் பத்திரிகை பார்க்கிறோம். எந்தத் தகவலும் தங்களுக்கு வரலேன்னாங்க. தினமும் பத்திரிகையைப் பார்க்கிறோம் என அவர்கள் சொன்னாங்க. நிர்வாகம் அப்படித் தானே இருக்குது. உங்கள் அறிக்கைப்படி ஒண்ணும் நீங்க செய்திடவே வேண்டாம் என்றார்கள். நான் கத்தியை எடுத்து சொருகுன்னு அறிக்கை விட்டதை அவர்கள் கேட்டுக் கொண்டதுக்கு ஏற்ப நான் வாபஸ் வித்திட்றா செய்கிறேன்னேன். அப்புறம் ஏதேதோ பண்றேன்னாங்க. ஆனால் பட்டாளம் வந்த பின்புதான் கலவரம் நின்னுது. இன்னமும் பஸ்சை எரித்துக் கொண்டு தான் இருக்கிறான்.

நேற்று கூட இரண்டொரு இடத்தில் காலித்தனம் பண்ணி ஆயிரம் பசங்க பள்ளிக்கூடத்துக்கு முன்னே நின்னு உள்ளே போகிறவங்களை யாரையும் விடாதேன்னு அடிச்சி வாத்தியாரெல்லாம் இதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிறாங்க. இந்தமாதிரி காலித்தனமெல்லாம் நடந்தது. வாத்தியாரும் கேட்கிறதில்லை. பள்ளிக் கூட பசங்களும் கேட்கிறதில்லை. அரசாங்கமும் கண்டுக்கிறதில்லே. சர்க்கார் போலீஸ்க்குத் தந்த உத்தரவு பள்ளிக்கூடத்துக்குள்ளே போகக்கூடாது. மாணவர்களை அடிக்கக் கூடாது என்று.

காமராசரை கொல்ல பார்ப்பனர் திட்டம்

இந்த மாதிரி அக்ரமம் ஒவ்வொரு இடத்திலேயும் நடந்துகிட்டு இருக்குது. இங்கே மாத்திரமல்ல டில்லியிலே காமராசரையே கொல்றதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க. டெல்லியிலே தீர்மானம் பண்ணி அவர் வீட்டு முன்பு நாடு பூரா உள்ள சாமியார் பசங்கள் எல்லாம் சேர்ந்து அம்மணமாய் உள்ளசாமியார்களும் நிர்வாணமாய் (சூலாயுதங்களோடு) ஊர்வலமாய்ப் போய் காமராசர் வீட்டுக்குள் புகுந்து நெருப்பு வைச்சானுங்க. அவரு எப்படியோ தப்பிச்சுகிட்டு ஓடினார். அவனுங்க அவ்வளவு ரகளையெல்லாம் பண்ணினாங்க. பாப்பானும் பணக்காரனும் சேர்ந்து தான் இந்த ரகளையிலே ஈடுபட்டானுங்க. நம்ம ஆளுங்களுக்கும் இது பற்றிய உணர்ச்சியில்லை. இவுகளும் பதிலுக்கு பதில் காரியங்களைத் துணிந்து செய்திருந்தாங்கன்னா அவனுங்களும் பயப்பட்டிருப்பானுங்க. அவனுங்க பண்ணிக்கிட்டே இருப்பதற்குத் திருப்பி அதற்கு எதிர்ப்பாக ஏதும் செய்யலே. எதுக்காக கலவரம் பண்ணினான்? எதுக்காக காமராசரைக் கொல்ல முயற்சித்தான்? இந்தசமதர்மம்-ன்னு
அவர் சொன்னதினாலேயே தான். ஏன் அவரை அப்ப எதிர்த்தாங்கன்னா பாப்பான் கையிலே மண்வெட்டி வந்திடும் பாப்பாத்திகைக்கு களக்கட்டு வந்திடும் என. முட்டாள் தனமா பயப்படுகிறான். அப்படி ஒண்ணும் வராது.

யாகம், அபிஷேகம் செய்பவருக்கு தண்டனை சட்டம்

ஜாதி ஒழிஞ்சால்- ஜாதி பற்றிய நம்பிக்கையே இருக்காது. எல்லாரும் ஒன்று எல்லாம் ஒன்றாகிவிடும். காமராஜர் சமதர்மத்துக்காக பாடுபடுகிறார். இது பார்ப்பானர்களுக்கும் பணக்காரர்களுக்கும் எதிர்ப்பாய்த் தோணுது. அவர்கள் எல்லாம் இந்த சமதர்மத்துக்கு எதிராகவே காலித்தனத்தில் ஈடுபட்டானுங்க. அக் கலவரத்தின் போது நமக்கும் இந்த சமதர்மம் ஏற்பட்டால் ஒழிய நாடு எவ்வளவு தான் திருத்தமடைந்தாலும் நாட்டிலே நெய்யும் பாலும் ஆறாக ஓடினாலும் கூட ஜாதி அமைப்பு முறை ஒழியும் நிலை வந்துவிட்டால் யாகம் செய்ய நெய்யை நெருப்பிலே ஊற்றி எரிச்சால் ஒரு மாதம் தண்டனைன்னு வந்துவிடணும்.

பாலை சாமி தலையிலே ஊற்றினால் 24 அடி சவுக்காலே அவனை அடிக்கனும்ன்னு சட்டம் வந்து விடணும். இந்த மனுதர்மம் எல்லாம் அப்ப அப்படிதான். டாக்டர் அம்பேத்கர் எழுதியிருக்கிறார் ஒரு புஸ்தகம் ஜாதியை ஒழிக்கிறது எப்படீன்னு? நெய் ஊற்றி சோறு தின்னவங்களை சமுகத்திலே ஒதுக்கி வைச்சி மிகமிக கொடுமை பண்ணினதோடு பால் ஊற்றி தின்னவங்களையும்அக்ரமம் பண்ணியிருக்கிறாங்கன்னு. மனுதர்மப்படி அப்ப இவைகள் பழக்கத்தில் அப்படி இருந்திருக்கிறது.

ஊதிய உயர்வும் உற்பத்தி பெருக்கமும்

ஆனதினாலே தான், நாங்கள் ஆதரவு தருகிறோம். இருந்தாலும், நிலைமை எப்படி இருந்தாலும், எதோ ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுப்போச்சி. ஜாதியை ஒழிக்கிறதுன்னு அதுவும் ஒரு உண்மையான ஒரு தலைவரால் சொல்லப்பட்டு காரியம் நடக்கிறதே, அதுக்கு ஆரம்ப கட்டமாக எல்லாத்துக்கும் கல்வி சொல்லிக் கொடுத்துட்டாரு. 100 க்கு 50பேர் இப்ப படிச்சிருக்கிறாங்க. அதுவும் சும்மா இல்லை. சம்பளமில்லாமல் கொடுத்து இருக்கிறாரு. சோறுபோட்டு (படிப்பு) சொல்லி கொடுக்கிறாரு. இன்னும் அவர் மீது என்னா சந்தேகம் படமுடியும்? காலேஜ் படிப்பும் ஒழுங்காய் நடந்து கிட்டு இருக்குது. 100 க்கு 8 பேர் தான் முன்பு படிச்சாங்க. கொத்துக் காரங்க 6 ரூபாய் வாங்கினவங்க இப்ப 10 ரூபாய் வாங்குகிறாங்க. 5 அனா, 6 அணா வாங்கிட்டு மண்ணு சுமந்தவங்க பொம்பளைங்க. (1-3/4 ரூபாய் 2 ரூபாய் வாங்கிகிட்டு இருக்கிறாங்க.) இன்னைக்கு 30 ரூபாய் வாங்கிகிட்டு இருந்த போலீஸ்காரர் இன்று 130 ரூபாய் வாங்கிகிட்டு சேவகம் பண்றார். இதே மாதிரி எல்லா துறையிலும் எல்லா செலவும் இப்ப உயர்ந்திட்டுது. இன்னும் இது வளரப் போவுது. நடக்காத காரியம்ன்னு ஒண்ணுமில்லையே? இவ்வளவு நிலை வந்தபோது ஆத்திரப்பட்டு காமராஜரை ஒழிக்கணும், காங்கிரசை ஒழிக்கணும்கிறானே.

இந்த நாட்டிலே இப்ப வளர்ச்சியடையாத துறை எது? எந்த துறை இப்ப நடக்கலே? எந்த அளவுக்கு இப்ப நடந்திருக்குதுன்னா? வெளியூரிலே இருந்து வந்துக்கிட்டு இருந்த சாமான்கள் இங்கே இருந்து வெளி நாட்டுக்குப் போவுதே. அமெரிக்காவிலிருந்து, ஜப்பானிலிருந்து, இங்கிலாந்திலிருந்து, இன்னும் என்னென்னமோ வெளி நாடுகளிலிருந்து இந்த நாட்டுக்கு வந்து கிட்டு இருந்த சாமான்கள் இன்னைக்கு இங்கே இருந்து வெளியே அன்ணிய நாட்டுக்கு போகுது. அவ்வளவுக்கு சாதனங்கள்சாமான்கள் உற்பத்தி. பக்குவம் பண்ணக் கூடிய சாமான்கள் சாதனங்கள் உற்பத்தி மளமளன்னு நடக்குது. 5 ஆண்டு திட்டம் முடிவாய்ப் போச்சின்னா 1 ரூபாய்க்கு வாங்கின துணிகள் எல்லாம் நாளைக்குப் பத்து ரூபாய் ஆகப் போவுது. இன்னைக்கு 5 ரூபாய் வாங்கிட்டு வேலை செய்கிற கொத்துக்காரனும் ஆச்சாரியும் 10 ரூபாய் வாங்கப் போகிறான். 5ஆவது வருஷத்திலே. நேற்று 100 ரூபாய் வாங்கின போலீஸ்காரன் 200 ரூபாய் வாங்கப் போறான். எல்லாருக்கும் சம்பளம் உயரும். தொடர்ந்து வளரும். அதற்குத் தகுந்தாப்பிலே பண்டங்களின் விலையும் ஏறப் போவுது.சாப்பிடாதவன் எல்லாம் சாப்பிடப் போறான். அனுபவிக்காதவன் எல்லாம் அனுபவிக்க ஆரம்பிக்கிறான். காசோ கையிலே வருது. எவனாலேயும் சும்மா இருக்க முடியுமோ? அந்த மாதிரி ஓர் வளர்ச்சி சமூகத்திலே நாம் இருக்கிறோம். எதிராக எவ்வளவோ எதிரிகள் செய்தும் காமராசர் ஒண்ணும் பயப்படலே. அவரு காரியத்தைச் சாதித்துக்கிட்டே போறதுன்னு உட்கார்ந்து கிட்டு இருக்கிறாரு.

இந்த தேர்தலில் அவர் வெற்றிப்பெற போராரு. அதில் ஆட்சேபனை இல்லை. மளமளன்னு காரியங்கள் நடக்கப் போவுது. கட்டுப்பாடாய் இருந்து, கொடுமை பண்ணுகிறானுங்க பணக்காரனும் பார்ப்பானும். சொல்லப் போனால் கோவிச்சிக்கிறான்.ஏன்னா? நாங்கள் எல்லாம் உங்களுக்கு ஓட்டுப் பண்ணலாம்ன்னுட்டுதான் இருக்கிறோம். இந்த ராமசாமி நாய்க்கன் எங்களை இப்படி எல்லாம் திட்டுகிறானே. நாங்கள் எப்படி ஓட்டு பண்ணுவோம்? என்கிறானுங்க. இதெல்லாம் குறும்பு (சிரிப்பு) அவன் கிட்டே நீங்கள் சத்தியம் வாங்கினால் கூட அவன் (காமராசருக்கு) ஓட்டு பண்ணமாட்டான். (சிரிப்பு) இவனாலே அவன் (பார்ப்பான்) அடிமைகள் கூட நமக்கு ஓட்டு பண்ணமாட்டாங்க. நடக்கிறகாரித்தைக் கெடுக்கிறானே தவிர, ஒரு நாளும் நம்ம ஆளு அதை உணருவதில்லை.

பாப்பான் மேலே துவேஷப்படாதவன் பிறப்பே சந்தேகமாய் உள்ளது

                நான் சொல்றேன், எதுக்காக நீ காமராசரைத் திட்டுறே? இந்த ஊரிலே நமக்கு வேண்டியவர் இருக்கிறார். இந்த முனிசிபல் சேர்மன். வீ.கே(ரெங்கநாதன்) இருக்கிறார். ரொம்ப நியாயமாக நடந்துகிறாரு. எல்லாம்எனக்குத் தெரியும்?அவரை எல்லாம் திட்டவேணும்ன்னு எனக்கு ஆசையில்லை. எல்லாரையும் தான் சொல்றேன் நான். கண்டபடி திட்டவேணும்ன்னு இல்லை. ஆனால் என் கொள்கைப்படி தேசத்தை வைத்துப்பார்த்தால் தேசபக்தன் என்றால் பாப்பானைக் கண்டால் எனக்குத் துவேஷமாய்த்தான் இருக்கு.நான்சொல்றேன்னுநீங்க கோவிச்சிக்காதீங்க. பாப்பான்மேலே துவேஷப்படாதவன் அவன் பிறவியிலேயே எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான். (சிரிப்பு), ஏன்னா எனக்கு அப்படிதோணுது. ஏன்? அவன் நம்மை தேவடியாள் மகன்கிறான், குச்சிக்காரிமகன்கிறான். எங்கே எட்டியிருந்தாலும் தீட்டுங்கிறான் எங்கே கண்டாலும் பரிகசிக்கிறான் அதே போக்கிலே போகிற பாப்பான் மீது துவேஷப்படக் கூடாதுங்கிறான். அவன் சொல்றபடி நடந்துக்கங்கிறான். அவன் கிட்டே நாம கெஞ்சணும். இதெல்லாம் அவன் செய்தால் குரும்புதானே? அந்த மாதிரி செய்யாது இருக்கிறவனை வேணும்ன்னா, அடே நாம ஒண்ணும் பண்ணலேயே ஏன் நம்ம பேரிலே தூஷிக்கிறான் அப்படீன்னு அவன் கேட்டால் அதில் நியாயம் உண்டு.

பார்ப்பன அக்கிரமத்தை எதிர்ப்பது துவேஷமாகுமா?

நம்மை ஒழிக்கிறதுங்கிறானுங்க அவன் சங்கராச்சாரியாய் இருந்தாலும் சரி. சூத்திரப்பசங்க தண்ணி எடுக்கக் கூடாதுன்னு (பாப்பாத்தி) சொல்லிட்டுப் போறாள். சூத்திரப்பசங்களை தடிஎடுத்துத் தண்டப்பிரயோகம்பண்ணி அவுங்களை ஒழிக்கணும் கிறானுங்க. சூத்திரப் பசங்களை ஒழிக்கவேணும்ன்னா நியாயம் பார்க்காதே, தர்மம் பார்க்காதே, தடிஎடுத்துகிட்டு அடிங்கிறான். எந்த விதமான அயோக்கியத்தனம் பண்ணினாலும் சூத்திரனை ஒழித்துக் கட்டுங்கிறான். இவனுங்ககிட்டே எல்லாம் துவேஷம் காட்டாதேங்கிறான் இவனுங்க எவனுக்குப் பிறந்தவன்?சுத்தமான சூத்திரனுக்குப் பிறந்தவன் இப்படிப் பேசுவானா? பாப்பானுங்க எல்லாம் அக்ரமம் பண்ணாதீங்கன்னு இவன் பேச வேண்டாமா? அவனுங்களும் நாம அப்படி செய்ய மாட்டோம்ன்னு பாப்பானுங்க சொல்ல வேண்டாமோ? இது மாதிரி எல்லாம் நடப்பிலே வைச்சிட்டு அதைப்பற்றி பேசக்கூடாதுன்னா? சுத்தமான பிறவிக்காரன் சமதர்மத்தைஎதிர்க்கலாமோ? நாங்களே முன்வந்து பிரசாரம் பண்ணுகிறோம் சமதர்மம் வேணும்ன்னு அவன் பார்ப்பானெல்லாம் வெளியிலே வர வேண்டாமோ? எல்லாத்துக்கும் ஆனது எங்களுக்குன்னு பாப்பான் இதைச் சொல்ல வேண்டாமோ? நம்ம குடும்பம் கெட்டுப் போகும். காலிப் பசங்களை நம்பி வாழ முடியாது எங்க வீடு மிஞ்சாது என்று, சமதர்மத்துக்கு நீங்கள் முன்வந்து பிரச்சாரம் பண்றீங்களோ? பார்ப்பான் பன்ற அக்கிரமத்தை எதிர்த்து நான் பிரச்சாரம் செய்தால் அது துவேஷம்ன்னா என்னா அர்த்தம்? எப்படித்தான் நாம உருப்படியாக முடியும்? ஒரு வேலை கிடைக்கலேன்னா அவனை (மந்திரியை) ஒழிச்சி கட்டுங்கிறான்.

நீங்க செய்கிற பிரசாரம் பொய்யும் புரட்டும் நிறைந்த பிரசாரம். நீ கண்டபசங்களுக்கெல்லாம் படிப்பு சொல்லிக் கொடுக்கப் போக பள்ளிக் கூடத்திலேயே ஒழுக்கம் கெட்டுப் போச்சீங்கிறே. சோறுப்போட்டுப் படிப்பு சொல்லிக்குடுத்தா பள்ளிக்கூடம் எல்லாம் கஞ்சித் தொட்டி ஆயிபோச்சின்னு எழுதுறே. சம்பளமில்லாமல் படிப்புச் சொல்லிக்கொடுத்தால் பள்ளிக்கூட மரியாதையே போயிடுச்சீங்கிறே. என்னாகேடு உனக்கு?நீதான் 100 க்கு 100 (பேர்) படிச்சிறுக்கிறீயே? இவ்வளவாவது நல்லது செய்கிற காமராசரை நீயே முன்வந்து அவரைப் பாராட்ட வேண்டாமா? அப்புறம் எதுக்கு நாங்க? அப்புறம் எப்படி நாங்க உன்னோடு ஒற்றுமையாய் இருக்க முடியும்? எப்படி உன்னோடு ராசியாய் இருக்க முடியும்? வேற்றுமையில்லாமல் அன்பாய் இருக்க முடியும் நாங்க?

கல்லாதோர் இல்லாநிலை உருவாகும்

ஆகவே தோழர்களே! பழி பாவம் வரும். நாம அதைப் பற்றி கவலைப்படக்கூடாது. ஏதோ நீ பண்ணிகிட்டு போ. நீ எவ்வளவோ மானக் கேடாய் ஒழுக்கக்கேடாய் நடந்தாலும் சரி. இதைக் கடைசி முயற்சியாக நினைச்சிக்கிட்டு எப்படியாவது காமராசருடைய அந்த (சமதர்ம) திட்டம் நிறைவேறுவதற்கு நிறையா நிறையா அவருக்கு நாம் சரக்கு சப்ளை பண்ணவேணும். அந்த சரக்கு என்னா? அவராலே நிறுத்தப்பட்ட (வேட்பாளர்கள்)அத்தனை பேரையும் (இந்த தேர்தலில்) நாம் ஜெயிக்க வைச்சி நாம் அவருக்குக் கொடுக்கணும். அடுத்தநாளே ஆரம்பிச்சிடுவார். என்ன என்ன சொன்னாரோ அவற்றை எல்லாம் அஞ்சு வருஷத்துக்குள்ளே ஜாதி ஒழிஞ்சி போகும். அஞ்சு வருஷத்துக்குள்ளே இந்தநாட்டிலே படிக்காதவனே இருக்கமாட்டான். அஞ்சு வருஷத்துக்கு உள்ளே உயர் ஜாதிக்காரனே இருக்க மாட்டான் தெரிஞ்சிக்கங்கோ.

சமதர்மத்துக்கு காமராசரின் விளக்கம்

காமராசர் சமதர்மத்துக்கு அர்த்தம் சொல்றாரே ஒருத்தன் அவரை சமதர்மம்ன்னா என்னான்னு கேட்டான்? இவரை (அக்கேள்வியைக் கொண்டு) மடக்கலாம்னு அவரு சொன்னார்:-எனது இலட்சியம் சமதர்மம், எல்லாத்துக்கும் படிப்பு,எல்லாத்துக்கும்வீடு, எல்லாத்துக்கும் சோறு, எல்லாத்துக்கும் வேலை.அவ்வளவுதான். அதற்கு எவனும் பதில் சொல்ல முடியலே. அது எப்படி சமதர்மம் ஆகனும்ன்ணு, எவனும் அவரிடம் கேட்கலே? ராஜாஜியைக் கேட்டால், தி.மு.. (வினர்) எனக்குப் பிறந்த பிள்ளைங்கங்கிறார். நீயில்லாமல் நானில்லே என்கிறான் இவன் (தி.மு.) பதிலுக்கு.நாம எல்லாருக்கும் அவரு(ராஜாஜி தன்னை) ராமன் மாதிரி என்கிறார்.அது மாத்திரம் அல்ல. நம்மை அவமானப்படுத்தி (அனுமார்கள் படை என) சொல்லி இருக்கிறார். இந்த பசங்களுக்கு மானம் வெட்கம் இருந்தால், இரண்டுக் கன்னத்திலே அல்ல போட்டுக்கணும் ( சிரிப்பு)

                இந்தமாதிரி காலி பசங்களை வைச்சிகிட்டு, அவுங்ககிட்டே அரசாங்கத்தைக் கொடுக்கிறேன்னுட்டு பேசுறியே இது யோக்கியமானதா? என்பதற்கு கல்கியில் ராஜாஜி என்ன சொல்கிறார்:-இந்த பசங்களை வைச்சிகிட்டு காமராசரை ஒழிச்சாதான் அவருக்கு அவமானம் வரும். என அதையே சொன்னார்: இந்தப் பசங்களை வைச்சி ஒழிச்சா தான் காமராசருக்கு அவமானம் வரும். காங்கிரஸ்காரருக்கு வெட்கம் வரும். அவரு (ராஜாஜி) இந்தப் பசங்களை (தி.மு. வினரை) எவ்வளவு கீழ்த்தரமாக நினைச்சிகிட்டு அவரு (ராஜாஜி) சொல்றாரு. ஒரு மனுஷனைப் பார்த்து செருப்பாலடிச்சாதான் இந்தப் பயலுக்குப் புத்திவரும்ன்னா செருப்படி என்னா பலமாகவா படும்? (கைத்தட்டல், சிரிப்பு)

கையிலே அடிக்கிறதைவிட கம்மியாதான்படும். தடீன்னா பலமா விழும் அடி. ஏன் அதை அப்படி அவரு சொல்றாரு? அது போல இவனுங்களாலே தான்அவரு வெட்கம் வரும்னா அந்தப் பசங்களாலே என்கிறார். கேட்டார் காமராசர். என்னா? காலிப்பசங்களை வைச்சிகிட்டுதான் ஆட்சி நடத்துகிறதுன்னா அதுக்கு அவரு என்னா பதில் சொல்லணும் காமராசருக்கு? அவுங்க கிட்டே எனக்கு:- ராமன் பெண்டாட்டியை இராவணன் சிறை பண்ணினதுக்கு அப்புறம் அனுமார் போயி, அதன் பிறகு இராமன் இலங்கைக்குபோயி அவளை கூட்டிகிட்டு வரலியா அந்த மாதிரிதான் நான் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்கிறார் ராஜாஜி. அதுக்கு பிறகாவது அந்தப் பசங்களுக்கு (தி.மு. வினருக்கு) வெட்கம் வர வேண்டாமா? (பலத்த கைத்தட்டல்) குரங்கு ன்னு அவுங்களை சொல்லுவது என்னா விளையாட்டா? இந்த மாதிரி நடக்குது வாழ்வு. எவ்வளவு அயோக்கியத்தனமா ராஜாஜி பேசுகிறார்.

இலட்சியவாதி பெரியார்

யார் பேரிலேயும் எனக்கு துவேஷமில்லே. நான் உள்ளதைச் சொல்றேன். வேகப்பட்டு என்னா பண்றது? நான் வேகப்பட்டு சும்மா இருக்க முடியுமா? நீ மானத்தோடு உயிர் வாழ்வதே கஷ்டமாகுமே. நீங்க உருப்படியாக மாட்டிங்க. நாம இருந்து இதை எப்படி சமாளிக்கிறது? என்கிற எண்ணமில்லை? (கோட்சே பார்ப்பான்) காந்தியைக் கூட கொன்னு போட்டீங்க. காந்தியைக் கொன்னதுக்கு அப்புறம் நீ செய்கிற காரியம் எல்லாம் தோல்வி அடையப் போவுது. காந்தியைக் கூட கொன்று போட்டீங்க. காந்தியைக் கொன்னதுக்கு அப்புறம் நீங்கள் சாதித்தது என்ன? அவருக்குப் பின் நேரு வந்திட்டார் கவனிக்க. அதே மாதிரி இப்ப காமராசரைக் கொல்லப் பார்க்கிறீங்க. அவர் ஒருத்தரோடு காரியம் முடிஞ்சிப் போகாது. என்னைக்கு நாம சௌகரியமாக; இருக்கிறது? நாம் சௌகரியமாய் இருக்க ஏற்பாடு பண்ணுங்க. காமராசர் பேரிலே உங்களுக்கு ஆத்திரம் வரலாம். இந்த ஆளு அவ்வளவு கெட்டவர் அல்ல. உதாரணமாகச் சொல்றேன். இப்ப காமராசர் சட்டசபைக்கு ஆட்களை (வேட்பாளர்களாக) நிறுத்தினதிலே 6,7 பார்ப்பனர்களை நிறுத்தியிருக்கிறாரே அவரு. நானே அந்தப் பாப்பானுங்களுக்கு எல்லாம், வேலை பண்றேனே?. இவுக எல்லாம் காமராசர்ஆளுகண்ணு ஓடி-ஓடி. கேவலமாய்ப் போயிடுமே அவுங்களுக்கு (தி.மு.கவினருக்கும், ராஜாஜிக்கும்) ன்னு
நான் வேலை செய்கிறேன். நமக்கு அவரு (காமராசர்) ஆளுக வரணும்.

தோழர்களே! இப்ப ரொம்ப நெருக்கடியான காலம். நல்லா வளரணும். நாம ரொம்ப வளர்ந்துகிட்டு வருகிறோம் எல்லா துறைகளிலேயும். இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே நல்ல திட்டங்கள் வர இருக்குது. வரப்போகிற தேர்தலிலே நாமும் கட்டுப் பாடாய் இருந்து நிறையா ஓட்டு செஞ்சி 100 க்கு 90 பேரு எப்படியும் 230 பேர் நின்னா அதில் எப்படியாவது 200 பேருக்குக் குறையாமல் வந்தாகணும். நீங்க இதற்கு ஆதரவு தரணும். மக்களுடைய முழு ஆதரவு அப்ப தான் இருக்குதுன்னு. அந்தப்படி மேலும் பலமாகச் செய்ய காமராசர் முழு வெற்றி பெற்று அவரு உற்சாகம் பெறணும். அவரின் சமதர்ம திட்டத்தை இனிமேல் மாற்றமுடியாது. அது காமராசர் சொன்னாலும் மாறாது. என்னைக் கொன்னாலும் மாறாது. வேறு எவனைக் கொன்னாலும் மாறாது. இன்னமே வருகிறவன் இன்னும் கொஞ்சம் வேகமாக வருவான். திட்டத்தை வேகமாய் செய்வான். காந்தியைக் கொன்னுபுடலாம்ன்னு நினைச்சே, செய்தே. காந்தியை (கோட்சே பாப்பான்)

கொன்னதுக்கு அப்புறம். எதிலே மிஞ்சிச்சி. அதன்பிறகு தீவிரமாகத் தானே செயல்படுது. காந்தியைக் கொல்லாமல் இருந்தால் இந்த மாதிரிஎல்லாம் வந்திருக்காதே. அந்த ஆளு விடமாட்டாரே. அந்த ஆளை கொல்ல முயன்றே நீ. ஆனால் அவர் அதுக்குமேலே மிஞ்சிய காரியம் வந்துட்டுதே, சமதர்மம்ன்னு.அவுங்களை எதிர்க்கிற ராஜாஜிக்கு என்ன யோக்கியதை இருக்குது? இந்த விஷமத் தனத்தினாலே இந்த ஒரு கட்சி (சுதந்திரமாக) (மிராஸ்தாரருக்கு) இருக்குதே தவிர, பொது வாழ்விலே இவருக்கு என்ன இருக்குது?

என்கிட்டே சில பாப்பானுங்க வந்து சொல்றானே. நான் பாப்பானாட்டம் வந்து பிறந்திட்டேன். அவ்வளவுதான். நீ நினைக்கிறாப்பிலே நான் ஒரு அயோக்கியன் அல்ல. என்ன பண்றது? எப்படியோஅந்தப் பதவியிலே இருக்க வேண்டியதாச்சி அப்படீன்னுட்டு ஒவ்வொரு பாப்பானும் விசனப்படறானே. என்னடா ஆயிப்போச்சி? நான்பார்ப்பான் ஆனதினாலே கெட்டுப் போச்சி என்கிறான் அவன். ஏண்டா உத்தியோகத்துக்கு விண்ணப்பம் போட்டியே? என்ன பண்றது? நானும் பாப்பான்கிறதை மறைச்சிகிட்டுதான் விண்ணப்பம் போட்டேன். எப்படியோ கண்டுபிடிச்சி எனக்கு இல்லேன்னுட்டாங்க என்கிறான். (சிரிப்பு) அப்படி பலமாக செய்யாட்டாலும் அந்த துறையில், அந்த முறை வந்திட்டுது. நாளாக நாளாக இது வளர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும்.

அய்யா , காமராசருக்கு தேர்தல் பிரச்சாரம்

எனவே தோழர்களே! நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தை முன்னிட்டு நான் சொல்லலே. இந்த தேர்தல் இந்த சந்தர்ப்பம் தவிர மறு சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்காது. இப்ப நடக்கிற முறை மிகக் துணிச்சலாய் காமராசர் தவிர வேறு யாராலும் நடத்த முடியாது. என்னா அவர் மொட்டை மரம். அவருக்குப் பிள்ளை குட்டி பெண்டாட்டி ஏதாவது உண்டான்னா அவருக்கு ஒண்ணுமே இல்லை? மக்களின் நன்மைக்காகத்தான் உயிரைக் கொடுக்கிற முறையிலே அவர் இறங்கினவர். நம்ம பொதுமக்களுக்கும் அவர் மேலே பற்று ஏற்பட்டுப் போச்சி- உலகமெல்லாம் அவரை (காமராசரை) பாராட்டுகிறாங்கன்னு. அவரைப் பற்றிப் பத்திரிகைகளில் வருகிறதை எல்லாம் நீங்கள் படிச்சிப்பார்த்தால் உங்களுக்குத் தெரியும். ஆனதினாலே அவர் நம்மவர் நம்ம நாட்டவர். இந்தியாவுக்கே ஒரு பெரும் தலைவராக விளங்குகிறார். அவருக்கு வரும் பெருமை எல்லாம் நம்ம வீட்டுப் பிள்ளைக்கு வந்த பெருமையாக நாம் நினைக்கணும்.பார்ப்பானெல்லாம் நிற்கிறானே, அன்னக்காவடியானாலும் அவனுக்கு வந்த பெருமையைத் தனக்கு வந்ததாக நினைக்கிறானே. நம்மவனுக்கு அப்பெருமை வந்தால் அது நமக்கு வந்த பெருமையாக நினைக்கவேண்டாமா?

ஆனதினாலே, ஒவ்வொருவரும் நல்லபடி சிந்தியுங்கள். நேரமாயிட்டுது. நேற்றிரவு 1.30 மணிக்கு கூட்டத்திலிருந்து வந்தேன் மாயவரத்திலிருந்து. இங்கு வந்து சேர விடியற்காலை 4.30 மணியாச்சி. இப்ப இன்று காலை 9 மணிக்கு வண்டி ஏறினேன். எல்லா இடங்களிலும் பேசிய பிறகு இதுதான் முடிவான கூட்டம். ஏறக்குறைய இப்ப மணி இரவு 12.30 மணியாச்சி. நாளைக்கும் எனக்குப் பணி இருக்கு பகல் பூராவும். அப்புறம் அரியமங்கலத்தில் இருக்கு. நாளானைக்கும் ஈரோடு. இத்தோடு என்பேச்சை முடிச்சிக்கிறேன்.

வணக்கம்.                                             


 நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி

(தந்தை பெரியார் உரைத் தொகுப்பு)

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை