எதிரிகளே ஏற்கும் அய்யாவின் தொண்டு!



தமிழர் சமுதாய முன்னேற்றத்துக்காகத் தந்தை பெரியார் தம் அரை நூற்றாண்டு தொண்டு எவ்வளவு தூரம் பூத்துக் கனிந்து குலுங்குகிறது என்பதற்கு ஓர் ஆதாரம். எந்தப் பார்ப்பன இனத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து தந்தை பெரியார் போராடி வருகிறாரோ, அந்தப் பார்ப்பன சமுதாயத்திலிருந்தே ஒருவர், தந்தை பெரியார் அவர்களுடைய தன்னிகரில்லா தொண்டுபற்றி, பிரதமர் இந்திராவுக்கு எழுதிய கடிதமும், அதற்குப் பிரதமர் எழுதிய பதிலுமே கீழே தரப்பட்டுள்ளவைகள், கடிதத்தை எழுதியவர், சென்னை நகர வழக்கறிஞரும், பாராளுமன்றப் பணிகளுக்கான ஆய்வகத்தின் பிரதம நிர்வாகியும் பிராமண சேவா சங்கத் தலைவராக இருந்த திரு. ஆர்.வி. கிருஷ்ண அய்யரின் மகனுமான திரு. ஆர்.கே.பாலசுப்ர மணியம் என்பவராவார். எடுப்பார் கைப்பிள்ளைகளாய், ஏமாளிகளாய் இன்னும் இருந்துகொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள், நமது கடும் எதிரிகளின் இந்த விளக்கத்தைக் கண்டாவது மனம் திருந்தட்டும்; உண்மையை உணரட்டும்.

அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களே!
இந்த மாநிலத்தில் நிலவிவரும் நிலைமைகளுக்கு அரசியல் பின்னணி என்னவென்று தாங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்றும், இந்த மாநிலத்தின் நிர்வாகமும் இந்த மாநிலத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றமும் தலையிட்டுத் தடுக்கப்படக்கூடாது என்பதற்காகவும் ஆசைகொண்டு அந்த ஆசையின் உந்துதல் காரணமாகவே நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அரசியலும் அரசியல் போன்ற ஜாம்பவான்களின் அரசியல் வாழ்க்கையும்கூட வகுப்புவாதத்தையும் ஜாதியையும் சுற்றியே பின்னப்படுகின்றன என்பதுபற்றி எந்தவிதமான அய்யப்பாடும் இல்லை. இந்த விஷயத்தில் கருத்து மாறுபாடே இருக்கமுடியாது. இந்த மாநிலத்தின் அரசியல் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதாருக்கும் இடையே பின்னப்பட்டிருக்கிறது.

இந்த மாநிலத்தில் காமராசர் ஆட்சிக்கு வந்தது பிரதானமாக அவர் பிராமணர் அல்லாதவர் என்பதாலும், பிராமணரான ராஜாஜிக்கு எதிரானவர் என்பதாலும்தான். இதன் விளைவு என்ன? இந்த மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் பிராமணர் அல்லாதவர்களாக இருப்பதால் பொதுமக்களின் வாக்கினைப் பெற்று ஆட்சி அமைக்கும்முறை அமலுக்குக் கொண்டுவரப்பட்டதும் மக்கள் தொகையில் இன்று மூன்று சதவீதமே உள்ள பிராமண சமூகம் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்ததும்கூட இந்தப் பாணியை அடிப்படையாகக் கொண்டுதான்.

இந்த அளவு பிராமணர் அல்லாத மக்களை தட்டி எழுப்பிய ஒரு சிறப்பு வாய்ந்த தனி மனிதர் திரு. பெரியார் .வெ. ராமசாமி என்ற புகழ்மிக்க முன்னாள் காங்கிரஸ்காரர்; 94 வயதான திராவிடர் கழகத் தலைவர்.

விடுதலைப் போராட்டத்தில் திரு. ராமசாமி முன்னணியில் இருந்தார். 1925ஆம் வருடத்தில்தான் கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்திலிருக்கும் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோயிலில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட பிறகுதான் வரவிருந்த விடுதலை மூலமும் மக்களின் வாக்குரிமை மூலமும் இந்த மாநிலத்தின் பொது வாழ்வில் பிராமணர் அல்லாத சமூகத்தினர் உண்மையானப் பங்கினைப் பெறவேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். வைக்கம் வீரர் என்று விருது வழங்கப்பட்ட திரு. ராமசாமி பிராமணர் அல்லாதார் இயக்கத்தைத் துவக்கினார். பிராமணர் அல்லாதவர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் வாழ்வில் சிறிதளவு முன்னேற்றம் அடைந்திருப்பதற்கான சிறப்பு இந்த ஒரே ஒரு தனிமனிதருக்கே பூரணமாகப் போய்ச் சேரவேண்டும்.

திரு.ராமசாமி இந்த மாநிலத்தில் ஒரு சக்தியாக இருக்கிறார். எந்தவொரு நல்ல காரியத்துக்கும் முன்னின்று உழைக்கும் பெரிய இயக்க வீரராக உள்ளார். இன்றும்கூட அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். எந்த அளவு அவர் விடாமுயற்சி உடையவராக இருக்கவேண்டும், எந்த அளவு நம்பிக்கையில் திடமானவராக இருக்கிறார் என்பதை நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாது.

இந்த மாநிலம் பிற்படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணமாயிருப்பது ஜாதிமுறையே என்ற புதிய சிந்தனையைத் தூண்டி விட்டிருப்பவர் அவரே. அவர் தனி நாடு கேட்பது இங்கே உள்ள காரியங்களைச் சரிப்படுத்தி அமைக்கத்தான்.

தங்களது கொள்கைகளினால் ஜாதி அமைப்பு முறை ஒழிக்கப்பட்டுவிடும் என்று பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் மனிதனின் புதிய தலை முறை உருவாகி வந்து கொண்டிருக்கிறது என்பதையும் உணர்ந்த மறுவினாடியே அவருக்கு தனி நாடு எதுவும் தேவைப்படாது என்றே நான் கருதுகிறேன்.
இந்தப் பாகுபாடு சமயத்தின் மூலமே அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களின் மூடநம்பிக்கை காரணமாகத்தான் பிராமணர்கள் இந்த மாநிலத்தில் பிரதானம் பெற்றிருந்தார்கள். ஏழ்மைப்பட்ட அறியாமையுள்ள பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களை பிராமணர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று திரு. ராமசாமி கூறும்போது இது சரியான கூற்றேயாகும்.

திரு. ராமசாமியின் வேலைத் திட்டத்திற்கும் தங்கள் வேலைத் திட்டத்திற்கும், திரு. ராமசாமிக்கும், தங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை. அவர் எந்தவிதமான பதவியையும் நாடாதவர். எனவே, அவரைத் தாங்கள் பார்க்கவும், அவருடன் பேசவும், தங்களது முற்போக்குக் கொள்கைக்கு ஆதரவாளராக அவரை ஆக்கிக் கொள்ளவும் தாங்கள் சில சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவர் அறிவார்ந்த ஒரு மனிதர் என்பதால் தங்களையும் தங்கள் செயல் திட்டங்களையும் அவர் ஆதரிப்பார் என்பதில் நான் உறுதி கொள்கிறேன். இந்த மாநிலத்தின் நலத்திற்காகவும், இந்த தேசத்தின் நலத்திற்காகவும் வேண்டி தாங்கள் இவ்வாறு செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இக்கடிதத்திற்குப் பிரதமரிடமிருந்து வந்த பதில்:-
பிரதமரின் சார்பில் அவரது தனிச் செயலாளர் என். கே. சேஷன் 3-10-72 தேதியிட்டு அனுப்பி உள்ள பதிலில் L.No/O.PMS 22802 கூறப்பட்டிருப்பதாவது:

1972 செப்டம்பர் 30ம் தேதியிட்ட தங்கள் கடிதம் தொடர்பாக இது எழுதப்படுகிறது. அந்தக் கடிதத்தை எழுதியமைக்காக நன்றி கூறும்படி பிரதமர் என்னைப் பணித்திருக்கிறார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்த விஷயங்களைத் தாம் பார்த்துக் கொண்டதாகவும் தங்களிடம் கூறச் சொல்லியுள்ளார் பிரதமர் இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


- தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை