இந்து பத்திரிகை
1946 இல் மதுரை நகரில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாட்டை- திராவிடர் இயக்க எதிரிகள் (பார்ப்பனர்களும் அவர்தம் அடிவருடிகளும்) தீ வைத்து கொளுத்தினர். முசோலினியின் பாசிச இயக்கம் கருஞ்சட்டை அணிந்திருந்ததுபோல, ஹிட்லரின் நாஜி இயக்கம் யூத இனத்தை அழிக்க முற்பட்டதுபோல- தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் தோன்றியுள்ளது என்று சில விஷமிகள் செய்த பிரச்சாரத்தின் விளைவாகவே- அத்தகைய எதிர்ப்பை திராவிடர் கழகம் சந்திக்க நேர்ந்தது.
இந்த விஷமப் பிரச்சாரம் பற்றி - பெரியார் அவர்களிடம் நேரடியாகக் கேட்டுள்ளார் நூலாசிரியர் மயிலைநாதன். அய்யா கடும் கோபம் அடைந்தார். அய்யா அருகில், புன்னகை பூத்த முகத்துடன் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.கே. (அய்யங்கார்) அமர்ந்திருந்தார். பெரியார் சொல்கிறார். இந்த மாதிரி விஷமப் பிரச்சாரத்தை பார்ப்பனர்கள்தான் செய்து வருகிறார்கள். அதுபற்றி கவலைப்படவில்லை. முசோலினி பற்றியும் ஹிட்லர் பற்றியும் என்னைவிட அய்யாவுக்கு நன்றாகத் தெரியும் (அய்யா என்று ஏ.எஸ்.கே.யை குறிப்பிடுகிறார்) என் கொள்கையும்- முசோலினி- இட்லர் கொள்கையும் ஒன்று தானா? என்பதை அய்யாவே விளக்கட்டும் என்று பெரியார் சொன்னார்.
பெரியாரிடம் எல்லையில்லாத பற்றும் - பாசமும் உடைய ஏ.எஸ்.கே நிமிர்ந்து உட்கார்ந்து விளக்கினார்.
பார்ப்பனர்களுக்கு தாங்கள்தான் படித்தவர்கள் என்ற ஆணவம் இருக்கிறது. பெரியாரை களங்கப்படுத்த அவர்களால் முடியாது. தனி மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவன் அரசியல் நலனுக்காகவே வாழ வேண்டும் என்றும்- ஹெகல் சொன்னான். புய வலிமையையும் மனத் திண்மையையும் தீட்சே வலியுறுத்தினான். யுத்தத்தின் மூலமாக ஒரு நாடு முன்னேற முடியும் என பிஸ்மார்க் சொன்னான். அந்த 3 கருத்துக்களின் கதம்பமாகத்தான் ஹிட்லரும்- முசோலினியும் உருவெடுத்தார்கள். சர்வாதிகாரத்தின் கீழ்தான் மக்கள் நலம் பெற முடியும் என்று கருதினவர்களை பொதுஉடைமை கருத்துக்களை பரப்பும் பெரியாருடன் ஒப்பிடுகிறவர்களை (பார்ப்பனர்களை) படித்தவர்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ஏ.எஸ்.கே கூறினார்.
தொடர்ந்து பெரியார் பேசுகையில்
அந்த மாதிரி முட்டாள்களுக்கு இன்னொரு விஷயத்தையும் சொல்வேன். பார்ப்பான், பார்ப்பன உணர்ச்சியுடன் இருக்கிறவரையில் நான் எதிரிதான். யூதர்கள் விவகாரம் இருக்கட்டும். நான் பார்ப்பன இனத்திற்கே பகையாளி என எந்த ஆதாரத்தின் மீது சொல்கிறார்கள். அய்யாவும் (ஏ.எஸ்.கே) பார்ப்பன வகுப்பில்தான் பிறந்தார். அவரை பார்ப்பனராக எப்போதும் பார்ப்பதில்லை. என் நண்பர் மாவூர் சர் ஆர்.எஸ்.சர்மா, சி.வி.இராஜகோபாலாச்சாரி ஆகியோர் என் கருத்துக்களை ஏற்பவர்கள். இன்னும் சொல்லுகிறேன். என் கருத்துக்களை ஏற்காத அதே நேரத்தில் என்னிடம் நட்பும் விசுவாசமும் உள்ள பார்ப்பனர்கள், என்னுடைய உதவி கேட்டபோதும் தயங்காமல் செய்திருக்கிறேன் கல்கியை கேட்டாலும் விளக்கமாகச் சொல்வார்.
எஸ்.எஸ்.வாசன் ஆனந்த விகடன் பத்திரிகை வாங்கி நடத்த முற்பட்டபோது அதற்கு குடிஅரசு ஏட்டில் தொடர்ந்து விளம்பரம் போட்டு ஊக்கப்படுத்தினேன். வாசன் கடைசி வரை அதை மறக்கவில்லை.
இந்து பத்திரிகை என் கருத்துக்களை வெளியிடுவதே இல்லை அதன் அதிபர் கஸ்தூரி சீனிவாசன் பி.டி.அய். செய்தி நிறுவனத்தை ஆரம்பித்த போது அதில் என்னையும் பணம் போடச் சொன்னார். போட்டேன். ஏன்? ஒரு ஜெர்மன்காரன், லண்டனிலிருந்து ராய்ட்டர் என்ற செய்தி நிறுவனத்தை உலகம் பூராவும் நடத்துகிறான். நம் நாட்டுக்காரன் ஆரம்பிக்கிறபோது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது - அதனால்தான்.
இன்னும் சொல்கிறேன் - சிம்சன் அனந்த ராமகிருஷ்ணன் என் கருத்துக்களை ஏற்கமாட்டார் என்றாலும் என்னிடம் எப்போதும் நட்போடும் விசுவாசத்தோடும் இருக்கிறார். அவர் பிரேசர் அண்ட் ராஸ் கம்பெனியில் கணக்கு பரிசோதகராக இருந்தார். சிம்சனில் 150ரூபாய்க்கு வேலை பார்த்தவர். புத்திசாலித்தனமாக மேனேஜிங் டைரக்டர் அளவுக்கு உயர்ந்து மேலும் இருபது தொழில் யூனிட்டுகள் நிறுவி அமால்கமேசன் ஏற்படுத்தினார். முதன் முதலில் இயந்திரக் கலப்பை உற்பத்தி செய்து காட்டினார். என் ஆதரவும் ஆசியும் வேண்டும் என்று அன்போடு கேட்டார். எப்போதும் அவரை ஊக்கப்படுத்தி வருகிறேன். சமீபத்தில் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பாவுக்கும் போய் வந்தபிறகு மரியாதைக்காக அவர் என்னை சந்தித்தார். தொழிலாளர் யூனியனுக்கு இருபத்தைந்தாயிரம் நன்கொடை தரப்போவதாகவும் அதற்கு என் ஆசி வேண்டும் என்றும் சொன்னார். நம்நாடு தொழில்துறையில் முன்னேற வேண்டும் என்கிற ஆவலினால்தான், பார்ப்பனர் என்றாலும் ஆதரவும் தருகிறேன். என்னை எப்படி ஒரு குறிப்பிட்ட இனத்தின் எதிரி என்கிறார்கள்?
- மயிலைநாதன் தீட்டிய
பெரியார் ஒரு நடைச்சித்திரம் என்ற நூலிலிருந்து.
தகவல்:
அ.சடகோபன்
தந்தை
பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர்
Comments
Post a Comment