கல்லூரிக்கு நன்கொடை
தமது குறிக்கோளை அடைவதற்குத் தக்க விலை கொடுக்க பெரியார் தயங்கியதில்லை.
பார்ப்பனர் அல்லாதார் கல்லூரிக் கல்வி பெற வேண்டுமென்பதில் பெரியார் முனைப்பாக இருந்தார்.
எனவே, பெரியார் திருச்சியில் கலைக் கல்லூரி ஒன்றைத் தொடங்குவதற்காக, அய்ந்து இலட்சம் ரூபாய்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கியது நாடறிந்த செய்தியாகும்.
உயர் கல்வி இயக்குனர் என்ற முறையில் இதைப்பற்றி கவனிக்கும் பொறுப்பு என்னுடையதாக இருந்தது.
பெரியார், ஈரோடு சிக்கைய்யாவை டாக்டர் இலட்சுமண சுவாமியிடம் அழைத்துச் சென்றார். தனியார் கல்லூரி தொடங்க ஏற்பாடு செய்துவிட்டார். அய்ந்து இலட்சம் மூலதனம் எடுத்து வைக்கவும் ஒப்புக் கொண்டு வந்தார். இச்செய்தி என் காதுக்கு எட்டியது.
அய்யாவுக்கோ உடன் இருப்பவர்களுக்கோ கல்லூரி நடத்தும் தொல்லை வேண்டாம். தங்கள் சார்பில் நடத்தும் கல்லூரியில், பார்ப்பனரல்லாத ஆசிரியர்களையே நியமிப்பார்கள். நம்மவர், நாலுபேர், நான்கு திங்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். குழுச் சண்டை, நிர்வாகத்தோடு மோதுதல் நாள்தோறும் நடக்கும்; இயக்க வேலையைப் பாதிக்கும். அய்யா கல்லூரி நடத்த வேண்டாம் என்று பெரியாருக்குச் சொல்லி அனுப்பினேன். அதுவும் சரி! டாக்டர் இலட்சுமணசுவாமி முதலியார் என்ன நினைப்பார்? அய்ந்து இலட்சம் கட்டுவதற்கு அஞ்சி ஒதுங்கி விட்டேனென்று நினைப்பாரே! சொன்ன அய்ந்து இலட்சத்தைக் கொடுத்து விடுகிறேன். அரசே, கல்லூரி நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா? என்று பெரியார் கேட்டார். இதற்கு ஏற்கெனவே முன் எடுத்துக்காட்டு இருந்தது.
முதல் அமைச்சர் மீ. பக்தவத்சலம் பெரியார் விருப்பத்திற்கு இணங்கினார். அதைப் பெரியாருக்குத் தெரிவித்தேன். திருச்சியிலிருந்த பெரியார் - தானே தொலைபேசியில் பேசினார். அய்ந்து இலட்ச ரூபாய்க்கு காசோலையை எனக்கு அனுப்புவதாகக் கூறினார். பெரிய தொகையைக் கொடுப்பதால், அய்யாவே முதல் அமைச்சரிடம் காசோலையைக் கொடுப்பது நல்லது என்றேன். தயங்கினார். இருமுறை வற்புறுத்தினேன்; இசைந்தார். குறிப்பிட்ட நாள், பெரியார் மீ. பக்தவத்சலத்தை அவர் இல்லத்தில் கண்டு, காசோலையை வழங்கினார். பெற்றுக் கொண்ட முதல் அமைச்சர், அய்யா, விரும்புகிற பெயரை கல்லூரிக்கு இடலாம் என்றார்.
மன்னிக்கணும், என் பெயர் வைப்பதற்காக இதைக் கொடுக்கவில்லை என்று பெரியார் பதில் சொன்னார்.
தங்கள் பெயர் வேண்டாமென்றால் வேறு எவருடைய பெயரை வேண்டுமென்றாலும் மெதுவாகச் சொல்லி அனுப்புங்கள், அப்படியே போட்டுவிடுவோம் என்று திரு. பக்தவத்சலம் மீண்டும் சொன்னார்.
மன்னிக்க வேண்டும்; தேவைப்பட்டால், இன்னும் பணம் கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டு, பெரியார் விடை பெற்றுக் கொண்டார்.
Comments
Post a Comment