தாம் வித்திட்டது கனி கொடுப்பது கண்டு மகிழ்ச்சி அடைபவர்



தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என பெருமையடைய வேண்டியவர்கள் பலர் இருக்க, அந்த சரித்திர நாயகரை, நேரில் கண்டு உரையாடவும், நெருங்கிப் பழகவும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் தந்தை காலம் சென்ற மருத்துவர் அர்ச்சுனன் அவர்கள் தந்தை பெரியாரின் தொண்டு பற்றி இளைஞர்களான எங்களுடன் பகிர்ந்திருந்தாலும், தந்தை பெரியாரின் அறிமுகம் என் உடன்பிறவா சகோதரர், என் இனிய மாணவ நண்பர், விடுதலை ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மூலமே கிடைத்தது. 1968 முதல் 1973 வரை தந்தை பெரியார் அவர்களிடமும், அன்னை மணியம்மையார் அவர்களிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டோம்.

எங்கள் இல்லத்து இளைஞர்களால் எழுதப்பட்டு, தொகுக்கப்பட்ட குடும்ப மலருக்கு ஏறக்குறைய 16 பக்கம் தன் கைப்பட எழுதி மதிப்புரை அளித்தார்கள் தந்தை பெரியார் அவர்கள். தான் வித்திட்டது வளர்த்து, காய்த்து கனியளிக்கும்போது ஏற்படும் விவசாயியின் மகிழ்ச்சியைப்போல், தான் கொண்ட கொள்கையினால், போராட்டங்களின் விளைவினால் பின்தங்கிய மாணவர்கள் ஒருசிலர் பெரிய பதவிகளில் அணிவகுக்கும்போது அதனைக் கேட்டு, கண்டு பெருமகிழ்ச்சியடைவார் தந்தை பெரியார். 1968-69இல் என் தமையன் திரு .ராஜமோகன் அய்.பி.எஸ். திருச்சியில் மாவட்ட கண்காணிப்பாளராக பதவி வகித்த காலத்தில், அவர் தோற்றுவித்த போலீஸ் கிளப் பற்றிய சர்ச்சையை பார்ப்பன டி.அய்.ஜி. பெரிதாக்கியபோது, விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதி எச்சரித்தார் பெரியார். இதற்கு முன் திரு.மலையப்பன் அய்..எஸ்., என்ற ஒரு மாவட்ட அதிகாரிக்கு மட்டுமே தலையங்கம் எழுதியிருந்தார். இது ஒரு சரித்திரக் குறிப்பு என்றாலும், சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள், கிராமப்புற சூழ்நிலையில் இருந்து வந்து, சிறப்பாகப் பணியாற்றும் பலருக்கும் தந்தை பெரியார் அவர்களும், அவர் கண்ட இயக்கமும் கவசமாக இருந்து வந்திருக்கிறது: அதுவே உயர்பதவி வகித்த பலருக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளது என்பது பலர் அறிந்ததே.






Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை