நான் யாருடைய பாராட்டுக்காகவும் உழைக்கவில்லை -கி.வீரமணி

தமிழக அரசின் சிந்தனைக்கு

பெண்களுக்கு மூன்றில் ஒரு பகுதி, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மக்கள் தொகை கணக்கு (Census) சரியாக எடுக்கப்படாத காரணத்தால் பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை உள்ளடக்கி இம்முறை அது - உயர்நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி கடைப்பிடிக்கப்பட வில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆணை பிறப்பிக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, அது கட்டாயமாக்கப்படவில்லை; விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது. (இது ஏன் என்பது எல்லோருக்கும் புரிந்த ஒன்றேயாகும்.) இப்போது நடைபெற்றதில் கணிசமான அளவுக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்; அது மகிழ்ச்சிக்குரியதுதான் என்றாலும், சட்ட ரீதியான உரிமையுடன் இணைந்த பாதுகாப்பே நீண்ட கால பாதுகாப்புக் கண்ணோட்டமாகும். அந்த மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு சரியான உத்தரவாதம் அளிப்பதாகும். எனவே முன்கூட்டியே முறையான ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கீடு, அதையொட்டி தொகுதிகள் பிரித்து அறிவித்தலை செய்வதே சமூகநீதியின் வெளிப்படையாகும். தி.மு.. ஆட்சி இதுபற்றி இணக்கமாக சிந்தித்து செயலாற்ற முன்வரவேண்டும் என்பது நமது கோரிக்கை.
திராவிடர் கழகம் இதனை வற்புறுத்துவது அதன் சமூகநீதிப் பயணத்தில் மற்றொரு முக்கிய கட்டமாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் தேவை

மேலும், இந்திய அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் (Directive Principles of State Policy) 40-ஆவது பிரிவு தெளிவாக The State shall take steps to organise Village Panchayats and endow them with such powers and authority as necessary to enable them to function as units of self-government” என்று தெளிவாகக்-குறிப்பிட்டுள்ளது.

50 ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னரும், இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று மேடைகளில் பல அரசியல் தலைவர்கள் அடிக்கடி கூறியும்கூட, கிராமப் பஞ்சாயத்துகளும், உள்ளாட்சி மன்றங்களும் - அதிகாரமும், நிதியும் சரியாக இல்லாது ஏனோ ஒரு அலங்கார உறுப்புக்களாகவே இதுவரை இருந்துவந்தன.
இனி அந்நிலை நீடிக்கக்கூடாது. பல அதிகாரங்களை அவைகளுக்கு மாநில அரசு பகிர்ந்து அளிப்பதன் மூலம் - இரண்டும் சிறப்பாக சக்திவாய்ந்த வகையில் மக்கள் நல அமைப்புக்களாக பணிபுரியும் வாய்ப்புகள் அதிகமாகும். சாலைகள், குளங்கள், வீடு கட்டுதல், குடிநீர் வசதிகள், பள்ளி மேற்பார்வை அவைகளுக்கு இருக்கவேண்டும். ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சிகளும் குறிப்பிட்ட சுயதேவை பூர்த்தி செய்த கிராம அமைப்புகளாக அமையவேண்டும்.

புதிய கிராம அமைப்பு தேவை

நகர்ப்புறங்களில் மக்கள் கூட்டம் பெருகாத நிலை அப்போது ஏற்படும். பிரான்சில் 10,000 (பத்தாயிரம்) பேர் கொண்ட ஒரு கிராமம் அமைக்கப்படுகிறது. அதில் பள்ளி, மருத்துவமனை, பொது அங்காடி, நூல் நிலையங்கள், பொழுதுபோக்கு, உடல் நலக்கழகம் எல்லாம் அமைத்துவிடுகின்றனர். அங்குள்ளோர் நீண்டதூரம் தங்கள் பிள்ளைகளை அனுப்பவோ, அங்காடிகளுக்குச் செல்லவோ வேண்டுவதில்லை. இவைகளை அப்படி அமைத்தால், அந்த கிராம அமைப்பு (Village Community) பஞ்சாயத்துக்கு தேவையான நிதியுதவியின் பெரும்பகுதியினை அந்த அமைப்புகளுக்கு தந்து உதவிட வாய்ப்பாகும். அரசும் பற்பல வகைகளாலும் மான்யம் உதவிடலாம்.
தற்போது கிராமங்களில் நடைபெறும் குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் பெரிதும் தப்பிவிடுவதும், நிரபராதிகள் மீது குற்றப்பத்திரிகை அளிப்பதும், கிராம அதிகாரிகள் தக்க விசாரணை நடத்தாமல் போதிய சாட்சிகள் கிடைக்காமல் இருப்பதனால் நீதிப்போக்கு மக்கள் வெறுப்புக்கு அடிமட்டத்தில் ஆளாகும் பரிதாபநிலை நடைமுறையாக இன்று உள்ளது.

பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு அதில் ஒரு மேற்பார்வையோடுகூடிய விசாரணைகளை, குற்றப்பத்திரிகை (எஃப்.அய்.ஆர்) தயாரிக்கும் முன்னர் கடமை உணர்வு காட்டிடும் வகையில் ஒரு சிறந்த நடவடிக்கையாக அவைகள் அமைக்கப்பட்டால், பொதுமக்கள் கவனத்திலிருந்து உண்மைக் குற்றவாளிகள் தப்ப முடியாது; கிராம மக்கள் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும்.

ஜாதிக் கலவரப் பகுதிகளில் தண்டவரி

ஜாதிக் கலவரம் எந்தக் கிராமத்தில் ஏற்படினும், தண்டவரி வசூலித்து, ஊராட்சிக்கு அது தரப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிடச்-செய்தால், ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்த நல்வாய்ப்பு ஏற்படும். இவைகளை நடைமுறைப்படுத்த முடியுமா? என்று தயக்கத்துடன் அரசியலாரோ, பொதுமக்கள் பிரதிநிதிகளோ, கட்சித் தலைவர்களோ கேட்காமல், நியாயம் - தேவைதான் என்று ஏற்றுவிட்டால், செயல்படுத்த (ஞடிடவைஉயட றடைட) அரசியல் துணிவுடன் கூடிய உறுதியான செயல்பாட்டில் ஈடுபடவேண்டும். நமது சமுதாய இயக்கம் அவர்களை இத்திசைநோக்கி இழுத்துச் சென்று - அதற்கான முன்னோடி பிரச்சாரக் களம் அமைக்கவும் தயாராக இருக்கிறது!

நீண்ட காலக் கண்ணோட்டச் செயல்கள்  2. உடனடியாக குறுகியகாலச் செயல்கள் என்று இருவகை. இவைகளைப் பிரித்து, அரசும், உள்ளாட்சியினரும், மக்களும் செயல்பட்டால் முடியாதது எதுவுமில்லை என்பது நமது உறுதியான கருத்தாகும்! எங்கெங்கு காணினும் தூய்மைக்கேடு, துப்புரவு அற்றநிலை, சுற்றுச்சார்பு கெட்ட சூழல் இவைகளை தடுத்து நிறுத்துதல் மக்கள் நலத்திற்கு மிகவும் அடிப்படையாகும்! மரங்களை வெட்டாமை, செடி நடுதல், வீடுகளில் காய்கறி மற்றும் பழத்தோட்டங்களை அவரவர் தேவைக்குப் பயிரிடுதல் முதலிய பல பொதுத் - திட்டங்களை நாம் எல்லோரும் சிந்திக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் அரசு செய்யவேண்டும் அரசு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்காமல் அவரவர் பங்கினை அவரவர் செய்தால் ஒட்டுமொத்தப் பலன் பெரும் அளவில் சமுதாயத்திற்குக் கிடைக்குமே! தனிநபர் பொருளாதார வரம்பும் இதனால் உயரக்கூடும்.

தலைநகர் திருச்சிக்கு மாற்றவேண்டும்

தமிழக அரசு, தலைநகரை சென்னையில் வைத்துள்ளதை மாற்றி திருச்சிதான் நடுநாயகமான நகரம் என்பதால் மாற்ற வேண்டும். கன்னியாகுமரியில் உள்ளவர்களும், கோவை நீலகிரியில் உள்ளவர்களும், வேறு எங்குள்ளவர்களும் 400, 450 மைல்கள் பயணம் செய்து பணத்தைச் செலவழிப்பதைத் தவிர்க்க வாய்ப்பு ஏற்படும். அது உடனே முடியாவிட்டால் திருச்சி சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில், சென்னையில் உள்ள தற்போதுள்ள கல்வி தலைமை அலுவலகங்கள், பொதுப்பணித்துறை (P.W.D.) மின்வாரியம், போன்ற பலவற்றை திருச்சிக்கு மாற்றலாமே!
சென்னையில் போக்குவரத்து நெரிசல், மக்கள் பெருக்கம், சுகாதாரக்கேடு போன்ற இவ்வளவு இன்னல்களும் இருக்கின்றதே. உயர்நீதிமன்றம்கூட திருச்சியில் இருப்பதே நடுநாயகச் சிறப்பாகும். தந்தை பெரியார், திருச்சியில் இப்படி வந்தால் மக்கள் அவதி குறையும் என்று தொலைநோக்கோடு சொன்னார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களும் கூட இப்படிச் சொன்னார். அதுபற்றி அரசு சிந்திப்பது நல்லது. சென்னை மாநகரத்தின் நெரிசலைக் குறைக்க உதவும். புதிய சாலைகள் - மேம்பாலங்கள் எத்தனை அமைத்தாலும், அதிக நேரம், பொருள் எல்லாம் மக்களுக்கு வீணாக வழி உண்டு. இதுபற்றி செயல்திறன்மிக்க நமது முதலமைச்சரும் அமைச்சரவையினரும் விருப்பு, வெறுப்பின்றி மெய்ப்பொருள் கண்டு செயலாற்ற முன்வர வேண்டும்.

கி.பி. 2000-த்திலாவது இது நடைமுறைக்கு வர இப்போதிலிருந்தே திட்டமிட்டால் நலம். மக்கள் கருத்து உருவாவது நல்லது. சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாத்தல், மக்கள் நெரிசலைக் குறைத்து, போக்குவரத்து இடைஞ்சல் - விபத்துக்களைத் தவிர்ப்பது, சமூகக் குற்றங்களும்கூட இதனால் வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு.

உணவு முறையில் மாற்றம் தேவை

நமது மக்களிடையே நாம் ஒரு பிரச்சாரத்தினை செய்யவேண்டும். அரிசி சாதத்தினைக் குறைத்து காய்கறிகள், மாட்டிறைச்சி, கோழி, முட்டை, பால் இவைகளை எளிய, நடுத்தர மக்கள் அதிகம் உண்ணும் அளவுக்கு அவைகள் ஏராளம் உற்பத்தி செய்யப்பட்டும், சரியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டும் கிடைக்கும் வகையில் செய்யவேண்டும். மக்கள் தொகை பெருகும்பொழுது அரிசியையே நாம் எப்படி நம்பிக்கொண்டிருக்க முடியும்? அய்யா அவர்கள் கேழ்வரகு, கம்பு இவைகளை எல்லாம் உண்ணவேண்டும் என்று சொன்னார். தந்தைபெரியார் அவர்கள் இக்கருத்தினை பல ஆண்டுகளுக்கு முன் வாழ்வியல் வழிகாட்டியாகக் கூறியதைத்தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன். பழத்தோட்டங்கள் எங்கெங்கும் மலிந்திட வேண்டும். சிறிய நாடான சிங்கப்பூரில் செடி நடுவதில்கூட, பழம் தரும் மரங்களை நடுவதை ஊக்கப்படுத்துவது நல்ல எடுத்துக்காட்டு. எனவே நண்பர்களே! மற்றவர்கள் செய்கிறார்களோ இல்லையோ நமது கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள் இந்த உணவுப் பழக்கத்தை மாற்றியாகவேண்டும்.

நமது மக்களுக்கு அரிசி சாதத்திற்குப் பதிலாக கோதுமை உணவு, ரொட்டி இவைகள் எல்லாம் பயிற்சியாக வரவேண்டும். இளைய தலைமுறை - விடுதிகளை துவக்குவது நல்லது. ரொட்டிகளை Subsidised rate-க்கு சிறிது காலம் கொடுத்து ஊக்கப்படுத்தினால் நல்லது. இருபாலரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் இது எவ்வளவோ உதவிகரமாக அமையும்.
மனிதனை நினை என்ற தந்தை பெரியார் அவர்களின் ஆணையைச் செயல்படுத்த நாம் பழமை, பழக்கவழக்கம் முதலியவற்றை எல்லாத் துறைகளிலும் மாறுதல் அடைய செய்யவேண்டும். முதலில் கழகத் தோழர்களும், தோழியர்களும் நமது குடும்பங்களில் இம்முறையினை கையாளுங்கள். மற்றவர் தானே பின்பற்றுவர் எழுத்துச் சீர்திருத்தம்போல!

ஊர் நலனில் அக்கறை கொள்ளுங்கள்

நம்முடைய தோழர்களுக்கு இன்னும் வேலையிருக்கிறது. நம்முடைய தோழர்கள் ஊர் நலத்திலே அக்கறை கொள்ள வேண்டும். அந்தந்த பஞ்சாயத்துகளில் ஊர்களில் உள்ள பிரச்சினைகளில் கழகத் தோழர்களே, இளைஞர்களே ஈடுபாடு காட்டுங்கள். உள்ளூர் தமிழன் பிரச்சினையிலே இருந்து, உலகத் தமிழன் பிரச்சினைகள் வரைக்கும் நாம் ஈடுபாடு காட்டியாக வேண்டும். அந்த உணர்வு இருந்தால்தான் மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்ன கருத்தைச் சரியாகச் செய்கிறோம் என்பது பொருள்.

அடுத்ததாக நமது இயக்கத்தில் எங்கோ ஒரு கருப்புச்சட்டைக்காரனுக்கு துன்பம் என்றால், எல்லா கருப்புச் சட்டைக்காரர்களும் ஓடி உதவி செய்யவேண்டும். அப்படிப்பட்ட உணர்வுகள் நம்முடைய கழகத் தோழர்களிடையே இருக்கவேண்டும். கழகத் தோழர்களுடைய உறுதியினாலே மற்றவர்களை ஈர்க்கவேண்டும். ஈழத்திலே ஒரு தமிழனுக்கு ஆபத்து என்றால் அதைக் கண்டிக்கக்கூடிய உணர்வு நமக்குத்தான் உண்டு. அதைத்தான் சகோதரர் நெடுமாறன் அவர்கள் இங்கே சொன்னார்கள். நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சகோதரர் நெடுமாறன் அவர்கள் எதை எல்லாம் முன்னால் சொன்னார்களோ அதை அப்படியே நான் வழிமொழிய கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஆட்சிக்காக அல்ல; தமிழின மீட்சிக்காக இருப்பவர்கள்

நம்முடைய இனத்தைக் காப்பது தேசியக் குற்றம் என்று சொன்னால் அந்தக் குற்றத்தை செய்ய ஒருபோதும் தயங்கமாட்டோம். அந்தக் குற்றத்தை செய்வதுதான் எங்களுடைய வாடிக்கையாக, வழமையாக இருக்குமே தவிர, வேறு அல்ல. நாங்கள் ஆட்சிக்காக இருப்பவர்கள் அல்ல; தமிழினத்தின் மீட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள் தமிழின மீட்சி என்பது எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று.

நாங்கள் யாருக்கும் விரோதிகள் அல்ல. இன்னும் கேட்டால் எல்லோரையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு கருப்புச் சட்டைக்காரனுக்கு உண்டு. கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். நாங்கள் எப்போதும் காவலாளிகளே தவிர, உள்ளே அமர்பவர்கள் அல்லர்.

ஆனால் கொள்ளைக்காரர்களால் முதலில் தாக்கப்படக்கூடியவன் காவலாளியே தவிர, உள்ளே இருந்து அனுபவித்துக் கொண்டிருப்பவர் அல்ல. அதுபோலத்தான் நாங்கள் தாக்கப்படுகின்றோம்,சங்கடப்படுகின்றோம். கடைசியாக ஒன்றைச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

வழக்கு நிதி

தந்தை பெரியாருடைய அறக்கட்டளையை கொச்சைப்படுத்தி ஒரு வழக்குப் போட்டிருக்கின்றார்கள். அந்த வழக்கிலே உங்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கின்றது என்பதற்கு அடையாளமாகத்தான் கழகத் தோழர்கள் உண்டியலைத் தூக்கிக்கொண்டு வந்து வழக்கு நிதியைப் பெற்றார்கள். நண்பர்களே! உங்களிடமிருந்து பணம் வாங்கவேண்டும் என்பதற்காக அல்ல இது. இந்த அறக்கட்டளை களினுடைய பணிகளை நினைக்கும்பொழுது எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. சகோதரர் சத்யராஜ் அவர்கள் பெரியார் அறிவியல் கண்காட்சியைப் பார்த்து எவ்வளவு பெருமையோடு சொன்னார்கள். அதைக் கேட்டு நான் மிகுந்த ஆறுதல் அடைந்தேன். நம்முடைய கல்வி நிறுவனத்தைச் சார்ந்த பிள்ளைகள் மிகப் பெரிய அளவுக்கு பகுத்தறிவோடு அந்தக் கண்காட்சியை உருவாக்கியிருக்கின்றார்கள். நாளைக்கும் அந்தக் கண்காட்சி உண்டு. அந்த அறிவியல் கண்காட்சி சாதாரணமானதா?

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை

அய்யா அவர்கள் இந்த நிறுவனத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். அவர்களிடம் கொடுக்கப்பட்ட காசுகள் எப்படிப்பட்டது? இங்கே நான் ஒரு சிறிய பத்திரிகை குறிப்பு வைத்திருக்கின்றேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை சம்பந்தமானது அது. சகோதரர் நெடுமாறன் அவர்கள் இங்கே இருக்கின்றார். அருமைச் சகோதரர் ஜெகவீரபாண்டியன் அவர்கள்  இங்கே இருக்கின்றார். அவர்களுக்கெல்லாம் இந்த வரலாறு மிக நன்றாகத் தெரிந்தது. பெருமைக்குரிய இந்திராகாந்தி அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே நிதி அமைச்சராக இருந்தவர் சி. சுப்பிரமணியம் அவர்கள். சில மாதங்களுக்கு முன்னாலே அந்த அறக்கட்டளையைப் பற்றி ஒரு பேட்டி கொடுத்திருக்கின்றார்.

26.09.1996 அன்று ஒரு தமிழ் நாளிதழில் அந்தச் செய்தி வெளிவந்திருக்கின்றது. அதிலே அவர் சொல்லியிருக்கின்ற கருத்தை இத்துடன் தருகின்றேன்; தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நிலைமைக்காக சொல்லுகின்றேன். சென்னையிலே இருக்கின்ற அந்த அறக்கட்டளையைப்பற்றி சொன்னால்தான் உங்களுக்குப் புரியும் என்பதற்காகச் சொல்லுகின்றேன். தேனாம்பேட்டையிலே அந்த அறக்கட்டளைகளின் சார்பிலே எவ்வளவு கடைகள் இருக்கின்றன? சத்தியமூர்த்தி பவனம் போன்றவைகள் எல்லாம் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.

அந்த அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் என்கிற முறையிலே சி.சுப்பிரமணியம் அவர்கள் ஒரு பேட்டி கொடுத்திருக்கின்றார். அதிலே அவர் ஒரு விளக்கம் சொல்லுகின்றார். அதிலே அவர் என்ன சொல்லுகிறார் என்பதைப்பற்றி சொல்லுகின்றேன்.

தேனாம்பேட்டையில் உள்ள கட்டடங்களை வாடகைக்கு விடுவதிலும், நிலத்தை கண்காட்சிகள் நடத்த வாடகைக்கு விடுவதிலும் அறக்கட்டளைக்கு வருமானம் வருகிறது. இதன்மூலம் வருடத்துக்கு 5 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. (நண்பர்களே ஒரு வருடம் பூராவும் 5 லட்ச ரூபாய்தான் வருமானம் வருகிறது.) இந்த வருமானம் அறக்கட்டளையின் நோக்கத்தை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை.
அறக்கட்டளை வருமானத்தைப் பெருக்க அரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ. 2கோடியே 78 லட்சத்தில் காமராசர் பெயரில் அரங்கம் கட்டப்பட்டது. இதற்காக 3 வங்கிகளில் இருந்து 2 கோடியே ஒரு லட்சம் ரூபாய் கடனாகப் பெறப்பட்டது. அரங்கம் மூலம் அறக்கட்டளைக்கு வருமானம் வந்தாலும் வாங்கிய கடனுக்கு வட்டியும், அபராத வட்டியும் உயர்ந்து, வட்டி மட்டும் ரூ. 86 லட்சத்து 35 ஆயிரம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று சொல்லுகின்றார். அப்படி இருந்தும் அறக்கட்டளையை நிர்வகிக்க முடியவில்லை என்று சொல்லுகின்றார்.

மத்திய அரசுடன் தொடர்புடையவர்கள்

இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் யார் தெரியுமா? மத்திய அமைச்சரவையிலே நிதியமைச்சராக இருந்தவர், மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள், மத்திய அமைச்சரவையிலே செல்வாக்கு உள்ளவர்கள். இவ்வளவு சிறப்பானவர்கள் இந்த அறக்கட்டளையிலே இருக்கின்றார்கள்.

அய்யா அவர்களுக்கு கொடுத்த தொல்லை

நண்பர்களே உங்களுக்கு ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகின்றேன். நம்முடைய அறக்கட்டளையை, இது அறக்கட்டளையே அல்ல என்று 1978-லே சொல்லி, அய்யா அவர்களுடைய காலத்திலே 15 லட்சம் ரூபாய் வரி போட்டு வருமான வரித்துறையினர் அய்யா அவர்களுக்கு சங்கடத்தை உண்டாக்கினார்கள்.

பிறகு அம்மா அவர்களுடைய காலத்திலே-நெருக்கடி காலத்திலே இதே பெரியார் திடலிலே சொத்துக்களை முடக்க (Attachment) நோட்டீசை ஒட்டினார்கள்.

80 லட்சம் ரூபாய் ஒரே தீர்ப்பில் தள்ளுபடி

பிறகு 80லட்சம் ரூபாய் வரி என்று, சொத்துக்களை எல்லாம் ஜப்தி செய்யவந்த நிலைகள் எல்லாம் உண்டு.

அய்யா அவர்களுக்குப் பிறகும், அம்மா அவர்களுக்குப் பிறகும் வழக்கு நடைபெற்று 2, 3 நிலைகளைத் தாண்டி, டிரிபியூனலுக்குச் சென்று அந்த வழக்கை மிகச் சாமர்த்தியமாக நடத்தி, 80 லட்சம் ரூபாயும் ஆதாரப்பூர்வமாக ஒரே அடியில், ஒரே தீர்ப்பில் தள்ளுபடி செய்யப்பட்டது. அது மட்டுமல்ல; இது அறக்கட்டளைதான் என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த மாதிரி இந்த அறக்கட்டளையினை வளர்த்ததனால்தான் ரொம்ப பேருக்கு கண்ணை உறுத்திக்கொண்டிருக்கின்றது. அய்யா காலத்திலே அய்யா அவர்களே சொல்லியிருக்கின்றாரே-1949-லே அண்ணா அவர்கள் இயக்கத்தை விட்டுப் பிரிந்து போனபொழுது என்ன சொன்னார் என்பதை அய்யா அவர்களே சொல்லுகின்றார். புத்தகங்களிலேகூட அந்தச் செய்தி வெளிவந்திருக்கின்றது. அவர்தான் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஆயிற்றே.


அண்ணா அவர்கள் பிரிந்தபோது.....

அய்யா அவர்களே சொல்லுகின்றார்-1949-லே அண்ணா பிரிந்து போகும்பொழுது ரூ.5லட்சத்தை விட்டுவிட்டு போகிறேன் என்று சொன்னார்.

குருசாமி பிரிந்தபோது.....

1969-லே குருசாமி, வேதாச்சலம் போன்றவர்கள் கழகத்தை விட்டுப்போகும்பொழுது அய்யா அவர்களே அதைப்பற்றி பேசியிருக்கின்றார். அறிக்கையும் கொடுத்திருக்கின்றார். அந்த செய்திகள் இப்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற கழகமும் துரோகமும் என்ற நூலிலே வெளிவந்திருக்கின்றது.

அய்யா அவர்கள் 1962-லே சொல்லுகின்றார் - என்னுடைய இயக்கத்திற்கு சொத்து எவ்வளவு தெரியுமா? 5 லட்ச ரூபாயிலிருந்து இப்பொழுது 15 லட்ச ரூபாயாக பெருக்கியிருக்கின்றேன். இந்த சொத்துக்களைப் பாதுகாத்து, என்னுடைய சொத்துக்களை எல்லாம் போட்டு 15 லட்ச ரூபாயாகப் பெருக்கியிருக்கிறேன் என்று அய்யா அவர்களே சொல்லியிருக்கின்றார்கள்.

அய்யா, அம்மா காலத்தில் வருமானம்

அய்யா காலத்திலே 15 லட்ச ரூபாய் சொத்துக்களை விட்டுவிட்டுப் போனார். அப்பொழுது இந்த அறக்கட்டளைக்கு வருமானம் ஒரு லட்சம் ரூபாய். பிறகு அம்மா அவர்களுடைய காலத்திலே இந்த அறக்கட்டளைக்கு வருமானம் 2 லட்சம் ரூபாய்.

47 லட்சம் ரூபாய் வருமானம்

நண்பர்களே, எங்களுடைய இயக்கம் திறந்த புத்தகம்தான். இப்பொழுது பெரியார் அறக்கட்டளைக்கு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? ஒரு ஆண்டுக்கு 47 லட்சம் ரூபாயாக வருமானம் உயர்ந்திருக்கின்றது.

ஏனென்றால், நான் இதிலிருந்து கை வைக்க மாட்டேன். உங்களுடைய மடியில் இருந்துதானே நான் பிச்சை கேட்கின்றேன். வளர்த்து வருகின்றேன். எனக்கென்ன அவமானம்? இவ்வளவு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை நடத்துகின்றோம்.

இதுதான் குற்றமா?

இதற்கு தண்டனை கொடுக்க வேண்டுமானால் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இதுதான் குற்றமா? இதுதான் பலபேருக்கு கண்ணை உறுத்துகிறதா? இதுதான் அறுவடையா? டிரஸ்ட் என்று சொன்னால் நம்பிக்கை என்பது அர்த்தம். வைத்த நம்பிக்கைக்குத் துரோகம் பண்ணக்கூடாது.

நான் யாருடைய பாராட்டுக்காகவும் உழைக்கவில்லை.

கடுகளவு பிறழாமல் தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் ஒரு சாதாரண தொண்டனான என்மீது, ஒரு வேலைக்காரனான என்மீது எந்த நம்பிக்கையை வைத்தார்களோ அந்த நம்பிக்கைக்கு ஒரு கடுகளவு பிறழாமல் உழைக்கக் கூடியவன். நான் தலைவன் அல்ல, தொண்டனுக்குத் தொண்டன்.

எனக்கு அந்த உணர்வு கிடையாது

நீங்கள் ஆசையினாலே என்னை தமிழர் தலைவர் என்று அழைக்கலாம். அல்லது இன்னொரு அடைமொழி வைத்து அழைக்கலாம். ஆனால் என்னுடைய உள்ளத்திலே எனக்கு அந்த உணர்வே கிடையாது. வெளிப்படையாகச் சொல்லுகிறேன்.

உங்களை சுமப்பதிலே மகிழ்ச்சி

எனக்கு எதிலே மகிழ்ச்சி என்று சொன்னால், உங்களுக்காக உழைத்து, உங்களை என்னுடைய தோளிலே தூக்கி சுமப்பதற்கு உரிமை பெற்றவன் என்ற முறையிலே அந்த வலிமையோடு உழைக்கின்றேனே அதில்தான் எனக்கு மகிழ்ச்சி.

சந்திப்பதற்குத் தயார்

இதை சிலர் கொச்சைப்படுத்தலாம், விலக்கப்பட்டவர்களை வைத்து வியாக்கியானம் செய்யலாம், வழக்கு மன்றத்திற்குப் போகலாம் என்று நினைத்தால் அதைச் சந்திப்பதற்கு இந்தப் படை எப்போதும் தயாராக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

பின்பலம் - தெரியும்

ஒருபோதும் நீங்கள் வெற்றிபெற முடியாது. உங்களுக்குப் பின்பலம் எங்கே இருந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். மிக நன்றாகவே தெரியும்.

ஆனால் மூலபலத்தையும் அறிந்தவர்கள் நாங்கள்; ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
எங்களுடைய இயக்கம் திறந்த புத்தகம். எங்களிடையே எந்தவிதமான இரகசியமும் கிடையாது.

ஒருபோதும் நடக்காது

இது என்னுடைய இடமா? இது என்னுடைய சொந்த சொத்தா? இது தமிழ் மக்களுக்கே சொந்தமானது. தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்பதற்காக, அனர்த்தம் செய்யக் கூடியவர்கள் உள்ளே புகுந்து எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிப்போமா? ஒருபோதும் அது நடக்காது.

கோடானுகோடி கருஞ்சட்டைப் படை

துரோகம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதைத் தூக்கி எறியக்கூடிய இலட்சக்கணக்கான, கோடானுகோடி இளைஞர்கள் கருஞ்சட்டைப் படைகள் எங்களிடத்திலே இருக்கிறார்கள். கோடானு கோடி தமிழின உணர்வு படைத்தவர்கள் வளையமாக இருக்கிறார்கள்,

நியாயங்கள் தோற்பதில்லை

உலகம் முழுவதிலும் உள்ள நடுநிலையாளர்கள் இருக்கின்றார்கள். நியாயவாதிகள் இருக்கின்றார்கள்.

நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. காரணம் நம்முடைய நியாயங்கள் தோற்பதில்லை.

நம்முடைய இலட்சியங்கள் எப்போதும் தவறுவதில்லை. வெற்றி நமதே! வீறுகொண்டு நடைபோடுவோம்!

(விடுதலை, 1997 ஜனவரி)

நூல் இலட்சியத்தைநோக்கி 
ஆசிரியர் -கி.வீரமணி 

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை