ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் செயல் திட்டங்களும்


1923ம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் டாக்டர் ஹெட்கெவார் என்பவரால் நான்கு நண்பர்களின் துணையோடு ஆரம்பிக்கப்பட்டது என்பதை முதலிலே பார்த்தோம்.
இந்த இயக்கத்தை ஆரம்பித்த ஹெட்கெவார் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி நாக்பூரைச் சேர்ந்த ஆரியப் பார்ப்பன அர்ச்சகர் ஒருவரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
இவரது முன்னோர்கள் ஆந்திர மாநிலம் குந்த் குர்த்தி என்ற கிராமத்தில் வாழ்ந்தவர்கள். ஹைதராபாத் நிஜாம் (முஸ்லீம் மன்னன்) ஆட்சியினை எதிர்த்து, வெறுப்படைந்து நாக்பூருக்கு வந்தவர்கள்.
இவ்வகையில், முஸ்லீம் மீது அளவற்ற வெறுப்புள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த ஹெட்கெவாருக்கு முஸ்லீம் எதிர்ப்பும் வெறுப்பும் பிறப்பிலேயே அமைந்து விட்டது.
அதேபோல, அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையாகவே அவருக்கு இந்து மதத்தின் மீது அளவற்ற பற்று இருந்தது.
எனவே, பிறக்கும்போதே முஸ்லீம் வெறுப்பு, இந்துமத வெறி என்ற சூழலில் பிறந்த ஹெட்கெவார், மராட்டிய மாநிலச் சூழல் இந்து வெறிக்கு உரமூட்ட, அவரது உடலைப் போலவே, உள்ளமும் முரப்பேறி இந்து வெறி கொண்ட இளைஞனாக வளர்ந்தார்.
மெட்ரிக் படிப்பை நாக்பூரில் முடித்து, மருத்துவப் படிப்பிற்காக கல்கத்தா சென்றார். அங்கு மூஞ்சே என்ற இந்து வெறி கொண்ட ஆரியப் பார்ப்பனரின் உதவியையும் நட்பையும் பெற்றார். இந்துமத வெறி பிடித்திருந்த ஹெட்கெவாருக்கு இந்த மூஞ்சேவும் சூடேற்றிவிடவே, இந்து மதவெறி ஒரு அமைப்பாக உருவாக வாய்ப்பு கிடைத்தது.
ஆம், 1925இல் ஆர்.எஸ்.எஸ்.-அய் உருவாக்கிய 5 பேரில் இவரும் ஒருவர். இந்த அய்வரும் திலகர் என்ற இந்துமத வெறித் தலைவரை குருவாகக் கொண்டவர்கள்.
இந்தத் திலகர் நடத்திய கணபதி மற்றும் சிவாஜி விழாக்கள் மகாராஷ்ட்டிரத்தில் மத ஒற்றுமை சீர்கெட காரணமாயின!
அதேபோல் காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொண்ட மதன்மோகன் மாளவியா, லாலா லஜபதிராய் போன்றவர்கள் திரை மறைவில் நின்று இந்துமத வெறியை வளர்த்தவர்கள்.
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை தோற்றுவித்த மூலகர்த்தாவான மேற்கண்ட மதன்மோகன் மாளவியா, ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப்பட்ட காலந்தொட்டே இப்பல்கலைக்கழகத்தில் தனியாக ஒரு கட்டிடத்தையே ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டிற்கென்று ஒதுக்கித் தந்தார். இவர் இந்துமத வெறிபிடித்த ஆரியப் பார்ப்பனர் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. அதாவது, ஆரியப் பார்ப்பனர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்கள் இந்துமதம் என்ற போது, அது தங்கள் ஆதிக்கத்திற்கான பாசறை என்பதால், ஒரே உணர்வோடு ஆதரிக்கத் தூக்கிப் பிடிக்கத் தவறமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இந்து பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ற்கு கட்டிடத்தை ஒதுக்கிக் கொடுத்ததோடு நில்லாமல், இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.- ல் முழுநேரப் பிரச்சாரகர்களாகச் செயல்படவும் அனுமதித்தார்.
ஹெட்கெவாரும் தனது சீடர்களை இப்பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அங்கு பயின்ற மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சியளிக்கச் செய்தார்.
சுருங்கச் சொன்னால், ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாகவே இப்பல்கலைக்கழகம் செயல்பட்டது.
பின்னாளில், சம்பூர்ணானந்த் சிலையை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார் என்பதற்காக சிலையைக் கங்கை நீர் ஊற்றித் தீட்டுக் கழித்ததும் இப்பல்கலைக்கழகத்தில்தான்.
அதுமட்டுமல்ல, நீ மந்திரியாகிவிட்டால் செருப்பு தைப்பது யார்? என்று முழக்கமிட்ட ஜாதிவெறிப் பிடித்த ஆரிய பார்ப்பனர்களை உருவாக்கியதும் இப்பலைக்கழகந்தான்.
இந்து மதத்தில் உள்ள பெரும்பான்மை சமூகமான தாழ்த்தப்பட்டவர்களை, அதுவும் நாட்டின் பாதுகாப்பு மந்திரியையே (பாபு ஜெகஜீவன்ராம் அப்போது இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியாக இருந்தார்) இவ்வளவு இழிவாக நடத்தியவர்கள் தான், இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று முழக்கமிடுகிறார்கள் என்றால் இதை விட அயோக்கியத்தனமும், ஏமாற்றும் மோசடியும் வேறு இருக்க முடியுமா?
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி வாசகர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதற்காக இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
ஆக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை உருவாக்கியவர்கள் அய்ந்து பேர்கள் என்றாலும், அவர்கள் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் அமைப்பு, சொல்வது ஒன்றும் செய்வது வேறாகவும் செயல்படும் அமைப்பு என்பதால் அதன் அனைத்துச் செயல்பாடுகளும் இரகசியமாகவே வைக்கப்படுகின்றன.
அவ்வகையில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கிய அய்ந்து பேர்கள் யார் யார் என்பதும் இரகசியமாகவே வைக்கப்பட்டது.
என்றாலும், அந்த அய்வரில் ஒருவரான எல்.வி.பராஞ்சிபே என்பவர், ஹெட்கெவார் இறந்தபோது, தனது பழைய நினைவுகளைக் கட்டுரையாக எழுதியபோது, அந்த அய்வர் யார் யார் என்ற விவரத்தை எழுதினார். இக்கட்டுரை கேசரி என்ற நாளேட்டில் 1940ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.
1930இல் ஹெட்கெவார் சிறையில் இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்.ன் தலைமைப் பதவியை ஏற்று நடத்தியவர் இந்த எல்.வி.பராஞ்சிபே ஆவார்.
1. டாக்டர் பி.எஸ்.மூஞ்சி, 2. டாக்டர் எல்.வி.பராஞ்சிபே, 3.டாக்டர் கே.பி.ஹெட்கெவார், 4.டாக்டர் தோல்கார், 5.டாக்டர் பாபாராவ் சவர்க்கார் ஆகிய அய்ந்து பேருந்தான் ஆர்.எஸ்.எஸ்.-அய் 1925இல் துவக்கியவர்கள்.
துவக்கிய இடம் நாக்பூரில் ஹெட்கெவார் வீடுதான்.
இந்த அய்வரில் ஒருவரான பாபாராவ் சவர்க்கார் இறந்தபோது, மராட்டிய மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் எழுதிய கட்டுரையில் மேற்கண்ட அய்வருமே ஆர்.எஸ்.எஸ்.அய் உருவாக்கினர் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.
- (இக்கட்டுரை 31.3.1945ல் விக்ரம் என்ற மராட்டிய வார ஏட்டில் வெளியிடப்பட்டது.)
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்து மதவெறி கொண்ட பாஸிஸவாதிகள் செயல்பட்டு வந்தாலும், காந்தியாரின் ஒத்துழையாமை இயக்க அறிவிப்பு மற்றும் இந்து - முஸ்லீம்களே ஒன்று சேருங்கள்! என்ற முழக்கத்திற்குப் பிறகுதான் இவர்கள் தீவிரம் அடைந்தார்கள்.
இந்து முஸ்லீம் ஒற்றுமை வளர்ந்துவிட்டால் இவர்கள் விரும்பிய இந்து ஒற்றுமை, இவர்கள் விரும்பிய இந்து ராஷ்ட்ரம், இவர்கள் விரும்பிய இந்து நாடு ஆகியவை சாத்தியம் இல்லாமல் போகும் என்பதால், இந்து - முஸ்லீம் ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதில் இந்த இந்துமத வெறியர்கள் தீவிரங்காட்டினர்.
ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டக்கூடிய இந்துராஷ்ட்ரம் அமைய இந்து - முஸ்லீம் ஒற்றுமை பெருந்தடையாக அமைந்துவிடும். நமது ஆதிக்கத்தை நிலைநாட்ட இயலாமல் போகும் என்பதை உணர்ந்த ஆரிய பார்ப்பன மதவெறியர்கள் முஸ்லீம் எதிர்ப்பு என்ற ஆயுதத்தை, தத்துவத்தை உருவாக்கினர்.
அவ்வாறு, முஸ்லீம்களோடு நாடு முழுவதும் மோத, கலவரங்களைத் தூண்ட பயிற்சி பெற்ற இளைஞர்கள் வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர். அதை நிறைவேற்றவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கினர்.
இந்துக் கலாச்சாரத்தைக் காக்கவும், மக்களுக்குத் தொண்டு செய்யவுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று இவர்கள் வெளியில் கூறிக் கொண்டாலும், இவர்களில் உண்மையான நோக்கு, ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டக்கூடிய, இந்து ராஷ்ட்டிரத்தை உருவாக்குவதும்; அதற்கு இந்துக்களை ஒன்று சேர்ப்பதும்; அவ்வாறு ஒன்று சேர்க்க, இந்துக்களுக்கு வெறியூட்ட இந்து - முஸ்லீம் மோதலை நாடு முழுக்க உருவாக்குதுமேயாகும்.
அவ்வாறு முஸ்லீம்களோடு மோத இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது இந்த அமைப்பின் முதல் நோக்கம்.
இரண்டாவதாக, மோதலை உருவாக்குவதற்குரிய வதந்திகளைப் பரப்புவது இரண்டாவது நோக்கம்.
பிரச்சினை உள்ள இடங்களில், பிரச்சினைகளை முடுக்கிவிட்டு அதை மோதலாக மாற்றுவது மூன்றாவது நோக்கம்.
இந்து ஆலயங்களை இடித்துவிட்டு முஸ்லீம்கள் மசூதிகளைக் கட்டிவிட்டார்கள். எனவே அவற்றை இடித்து விட்டு மீண்டும் கோயில் கட்டவேண்டும் என்று நாடு முழுக்க வன்முறைகளில் ஈடுபடுவது நான்காவது நோக்கம்.
ஆரியப் பார்ப்பனர்களின் தாய்மொழியாம் சமஸ்கிருதத்தை வளர்ப்பது அய்ந்தாவது நோக்கம்.
தங்களது நோக்கங்களுக்கு யாரெல்லாம் தடையாக இருக்கிறார்களோ, எதிர்ப்பாக இருக்கிறார்களோ அவர்களையும், முஸ்லீம்களையும் கொல்லவேண்டும் என்பது ஆறாவது நோக்கம்.
இந்த நோக்கங்களை நிறைவேற்ற குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை, வியாபாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைத்து மக்களோடும் தொடர்பு கொள்ளவும், எல்லாத் துறைகளிலும் ஊடுருவவும் பல பெயர்களில் பல அமைப்புகளை ஏற்படுத்தினர்.
அவ்வாறு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் என்னென்ன என்பதை முதலில் பார்க்க வேண்டியது அவசியமாகும். காரணம், அவர்களைப் பற்றியும், அவர்களின் சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றியும், அவர்களின் உண்மையான நோக்கத்தைப் பற்றியும் புரிந்து கொள்ள அது உதவியாய் இருக்கும்.
ஆர்.எஸ்.எஸ். சட்டங்கள் 8ஆவது விதியின்படி நிர்வாகப் பிரிவுகள்:
1.               பிரான்ட் - (மண்டலம்)
2.               விபாக் (மண்டலத்தின் ஒரு பகுதி)
3.               பிராந்திய கேந்த்ரா (மண்டலத் தலைமையகம்)
4.               ஜில்லா - (மாவட்ட அமைப்பு)
5.               ஷாகர் - (நகர அமைப்பு)
6.               மண்டல் - (கிராம அமைப்பு)
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர் அதிகாரக்குழு உறுப்பினர்கள் மற்றும் உயர்நிலைத் தலைவர்கள் (சட்டப்பிரிவு 11ஆவது பிரிவின்படி)
1.               சர் சங் சாலக் - (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்)
2.               சர் கார்ய வாஹக் - (பொதுச் செயலர்)
3.               கேந்தரிய கார்ய காரிமண்டல் 4.      அகல பாரதிய பிரதிநிதி சபா
5.               பிராந்த், விபாக், ஸில்லா, சங்சலக்குகள்
6.               பிரச்சாரக்
7.               பிராந்திய பிரதிநிதி சபா
ஆர்.எஸ்.எஸ்.-அய் தொடக்கிய ஹெட்கெவாருக்கு, அத்ய சர்சங் சாலக் என்று பெயர் (அதிகார விதி 12இன் படி)
14ஆவது விதியின்படி கேந்திரிய மண்டல்
1.               சர் கார்ய வஹா
2.               ஷா சர் கார்யவஹா
3.               அஹில் பாரதீய ஷரிக் ஷிக்கான் பிராமுக்
4.               அஹில் பாரதீய பவுதிக் ஷிக்ஷான் பிராமுக்
5.               அஹல் பாரதீய பிரச்சார பிராமுக்
உறுப்பினர்களுக்குத் தரப்படும் பயிற்சி வகுப்பின் பெயர் - அதிகாரி ஷிக்ஷன் வர்கா.
இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு வியாஸ் பூர்ணிமா என்று பெயர்.
அமைப்பின் பொருளாளருக்கு நிதிபிரமுக் என்று பெயர்.
தினந்தோறும் நடத்தப்படும் பயிற்சிக்கு ஷாகா என்றும், சமஸ்கார் என்றும் பெயர்.
இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு முன்னே செல்வதற்கு கோஷ என்று பெயர்.
அணிவகுத்துச் செல்வதற்கு பாதஞ்சலன் என்று பெயர்.
கட்டளைகளுக்கு ஏகச என்றும், சப்பத என்றும் பெயர்.
முதல் ஆளாக வருகின்றவரை அக்ரே சரோராக என்று அழைப்பர்.
குழந்தை மாநாட்டுக்கு சிசுசங் என்று பெயர்.
ராஷ்டிர சேவிகா சமிதி என்பது பெண்களுக்கான அமைப்பு.
ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிப்படை அமைப்பு ஷாகா நாடெங்கிலும் ஒரே மாதிரியாக இது அமைக்கப்படுகிறது.
ஷாகாவின் உறுப்பினராக ஒருவர் சேரும்போது அவரிடம் கேட்கப்படும் கேள்வி,
கிணற்றில் குதியென்று உன் ஆர்.எஸ்.எஸ். அதிகாரி கட்டளையிட்டால் நீ என்ன செய்வாய்? என்பதுதான்.
நான் உடனே குதிப்பேன் என்று பதில் வரவேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பதில் சொல்லத் தயங்குகின்றவர்கள் கேலிக்கும் சந்தேகத்திற்கும் உரியவர்கள்.
ஷாகாவின் அன்றாடச் செயல்கள்:
ஒரு திறந்த மைதானத்தில் காவிக் கொடி பறக்கும். தலைவர் விசில் ஒலி கொடுத்தவுடன் அது கட்டளையாகக் கொள்ளப்பட்டு, சரியான அணி வகுப்போடு அமைதியாக உறுப்பினர்கள் வந்து நிற்பர். பின் உடற்பயிற்சி ஆரம்பம் ஆகும். சிலம்பம், சூரிய வணக்கம், அணிவகுத்துச் செல்லல் என்று ஒன்றன் பின் ஒன்றாக பயிற்சிகள் நடைபெறும்.
பிறகு, அவர்களது தேச பக்தி பாடல் கூட்டாகப் பாடப்படும். அதன்பின் விவாதங்கள் நடைபெறும். அவர்கள் அமைக்க இருக்கின்ற இந்து ராஷ்டிராவிற்குத் தேவையான செயல்திட்டங்கள் வகுக்கப்படும். அவற்றிற்குத் தடையாக உள்ளவை பற்றியும் ஆராயப்படும்.
என்ன வதந்திகளைப் பரப்பலாம், எங்கு கலவரத்தைத் தூண்டலாம், அதைப் பயன்படுத்தி எப்படி முஸ்லீம்களோடு மோதலை உண்டு பண்ண முடியும், அதை வைத்து எப்படி இந்துக்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் கொண்டு வரலாம் என்பன போன்ற சதித்திட்டங்கள் எல்லாம் அப்போது விவாதித்து முடிவெடுக்கப்படும். முடிவில் கொடிக்கம்பத்தின் முன்னால் வரிசையாக நின்று அவர்களது பிரார்த்தனைப் பாடலைப் பாடுவார்கள். அத்துடன் அன்றைய நடவடிக்கைகள் முடிவடையும்.
இப்படிப்பட்ட முறையான பயிற்சியின் மூலம் இளைஞர்களை அவர்களது மதவெறி இலட்சியத்திற்கு சரியான பலிகடாக்களாக தயார் செய்து விடுகிறார்கள்.
ஹெட்கெவார் உறுப்பினர்களைச் சேர்க்கும்போது 12-15 வயதுக்கு உட்பட்டவர்களையே பெரிதும் விரும்பி சேர்த்தார்.
காரணம், இந்த வயதுதான் நம் விருப்பப்படி அவர்களை வார்த்தெடுக்க உரிய வயது என்பதை அவர் உளவியல் ரீதியாக கண்டு கொண்டிருந்தார்.
வயது அதிகமானால் சுய சிந்தனை வந்துவிடும். சுய சிந்தனை வந்தால் அவர்கள் விருப்பத்திற்கு உறுதியாக வரமாட்டார்கள் என்பதாலே இந்த வயதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட அணுகுமுறையே அவர்களது வஞ்சகச் செயல்பாட்டினை, இந்த நாட்டினை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
ஆர்.எஸ்.எஸ். உண்மையிலே ஒரு கலாச்சார அமைப்பு என்றால், அது சிந்திக்கும் வயதுடைய, உலக அனுபவம் உடைய 35 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்வு செய்து, நீதி நெறிக் கருத்துக்களை பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்து, அவர்களைக் கொண்டு, இச்சமுதாயத்தை மனிதநேயப் பாதையில் கொண்டு சென்றால் அதை ஒரு கலாச்சார இயக்கம் என்று சொல்லலாம். அதைவிடுத்து, பாற்பருவ இளைஞர்களைத் (விடலைப் பருவத்தினரை) தேர்ந்தெடுத்து, அவர்களை, அவர்களது சிந்தனைகளை தங்கள் வன்முறைப் பாதைக்கு ஏற்ப வார்த்தெடுத்து, பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கலந்து நாட்டையும் நல்லிணக்கத்தையும் நாசஞ் செய்கின்ற அமைப்பா கலாச்சார அமைப்பு?
உறுப்பினர்கள் தேர்வின் போது,
நன்கு சிந்திக்கப்பட்ட கருத்துக்களை மூளையில் ஏற்றிக் கொண்டிருப்பவர்களை ஒதுக்கிவிட்டு, சுத்தமான, போதனைகள் ஏறாத மூளைகளைத் தேர்வு செய்யுங்கள் என்றே ஆர்.எஸ்.எஸ். தலைமை பயிற்சி கொடுப்போருக்கு கட்டளையிட்டுள்ளது.
பயிற்சியின்போது, அவர்கள் விரும்புகின்ற கருத்துக்களை ஆழமாக பதித்து அவர்களை ஆர்.எஸ்.எஸ். போதையிலே ஆழ்த்தி விடுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு சித்தாந்தங்களை வகுத்துக் கொடுத்த கோல்வால்கர், அடிக்கடி கூறும் ஒரு உதாரணக் கதையே இதற்குப் போதிய சான்றாகும்.
ஒரு பணக்காரர் ஒருநாள் மாலை, தோட்டத்தில் ஓர் அழகான மயில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் உணவில் கஞ்சாவைக் கலந்து அந்த மயிலுக்குக் கொடுத்தார். மயில் நாள் தோறும் அங்கு வர ஆரம்பித்தது. முடிவில் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட மயில் கஞ்சா இல்லாமலேயே நாள்தோறும் அந்த நேரத்துக்கு அங்கே வந்தது என்பதே கோல்வால்கர் கூறும் கதை.
ஆக, இளைஞர்களை மதமயக்கத்தில் வீழ்த்தி, தங்கள் கட்டளைக்கு அவர்களை அடிமையாக்கிவிட வேண்டும் என்பதை அப்பட்டமாக போதிக்கும் இவர்களின் கலாச்சாரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நான் எந்த கருத்தைச் சொன்னாலும் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். சரியென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கூறிய கருத்துக்களே எதிர்காலத்தில் சரியில்லையென்று போகலாம் என்று கருத்துச் சுதந்திரத்தை, பகுத்தறிவைக் கற்பித்த தந்தை பெரியார் அவர்களை நினைத்துப் பார்த்தால், நமக்கு ஏற்படும் பெருமையும் உயர்வும் உள்ளத்தைப் பூரிக்கச் செய்கின்றன.
அப்படிப்பட்ட பெரியாரின் இயக்கத்தை, மக்களை மதபோதையில் மதியிழக்கச் செய்யவேண்டும்; அப்படி மதியிழந்த பித்தர்களைக் கொண்டு இந்த நாட்டில் மதக்கலவரங்களை உருவாக்கி, இந்துக்கள் என்ற உணர்வை உசுப்பிவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் மோசடி இயக்கத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்களே அதை இங்கு நினைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
ஆர்.எஸ்.எஸ். பயிற்சியில் நுட்பமான கருத்துக்களை வேண்டுமென்றே விவாதிக்காமல் தவிர்க்கின்றனர். உணர்வு தூண்டப்படும் அளவிற்கு அறிவு தூண்டப்படுவதில்லை. உறுப்பினர்கள் சுயசிந்தனை பெறக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கின்றனர். போராளியாக இருந்தால் போதும் - அறிவாளியாக இருக்கத் தேவையில்லையென்பதே அவர்கள் சித்தாந்தம்.
மத்தியதர மக்கள் வாழும் நகரப்பகுதியில் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் விளையாட்டுத் திடல்கள் கிடைப்பது கடினம். எனவே, அவர்களுக்குப் பொழுது போக்கிடங்களும் இருக்காது. அப்படிப்பட்ட சூழலில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நடத்தும் ஷாகாக்கள் அவர்களைக் கவருகின்றன. விளையாடவும் பொழுது போக்கவும் வருகின்ற விடலைகள், இளைஞர்கள் மதுவுண்ட மயிலாய், பின் ஆர்.எஸ்.எஸ். காரர்களையே சுற்ற ஆரம்பித்து, இறுதியில் அவர்கள் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
விளையாட்டு இடங்களும், பொழுதுபோக்கு இடங்களும் அதிகம் உள்ள கிராமப் பகுதிகளில் இவர்களால் காலூன்ற முடியாமல் போவதற்கு இதுவொரு காரணம். இனி கிராம மக்களைக் கவரவும் ஏதாவது வழி கண்டுபிடிப்பார்கள்!
பிள்ளை பிடிக்கின்றவன் மிட்டாய் கொடுப்பதுபோல, மரியாதையையும், கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் கற்றுத் தருகிறோம் என்று கவர்ந்திழுத்து, கடைசியில், மதவெறிகொண்ட கொலை வெறியர்களாக இளைஞர்களை மாற்றிவிடுகிறார்கள்.
எல்லா ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் காலையில் எழுந்தவுடன் மற்றும் உணவு உண்பதற்குமுன் சமஸ்கிருத மந்திரங்கள் சொல்ல வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அச்சாணி பிரச்சாரக்குகள். இவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இவர்கள்தான் அமைப்பை நிறுவி பயிற்சியளிக்கிறார்கள். இவர்கள் மேலிடத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பிரச்சாரக்குகளுக்கு அதிகாரிகள் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சங்சாலக் பதவி வெறும் மதிப்பிற்குரிய பதவி மட்டுமே, சங்சாலக்குகள் முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு காக்கி அரைக் கால் சட்டை, குட்டையான கைத்தடி.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆறு விழாக்களை முதன்மையாகக் கொண்டாடுகிறார்கள்.
1.               இராவணனை இராமன் வென்றதைக் குறிக்கும் நவராத்திரி விஜயதசமி விழா.
2.               இந்து தேசத்தை நினைவூட்டும் மஹரசங்கராந்தி விழா.
3.               இராமருக்குப் பட்டாபிஷேகம் செய்த வர்ஷ்-பிரதிபாடா விழா
4.               சிவாஜி முடிசூட்டிக் கொண்டதைக் குறிக்கும் இந்து சாம்ராஜ்ய திவஸ் விழா.
5. இந்துராஷ்ட்ரம் அமைக்கும் முயற்சியை உயிரைக் கொடுப்போம் என்று உறுதி கூறும் ரக்ஷா பந்தன் விழா.
6.               ஆர்.எஸ்.எஸ்.-இன் காவிக்கொடியை வணங்கும் வியாஸ பூஜை. அதாவது, ஆர்.எஸ்.எஸ்.-இன் காவிக் கொடி
                  அவர்களின் குருவாகக் கொள்ளப்படுவதால், அது குரு வணக்கப்பூசை என்ற பெயரில் ஆரியர்களின் குரு (தேவ குரு) வியாஸர் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அதாவது, இந்த ஆறு விழாக்களும் இவர்களின் நோக்கத்தின் அடையாளங்களாகக் கொண்டாடப்படுகின்றன. அந்த விழாக்களில் எல்லாம் இராமரும், இந்து ராஷ்டிரமும், போர்க் கருவிகள் பூசையும் முக்கியத்துவம் பெற்றிருப்பதை இங்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
முதல் அய்ந்து விழாக்களிலும் இந்துராஷ்டிரம் அமைப்பதற்கான உறுதியை மேற்கொள்ளும் இவர்கள், வியாஸ பூசையின்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நிதி அளிக்கும் - நிதி திரட்டும் வேலையைச் செய்கிறார்கள். இவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு இரசீதும் கொடுப்பதில்லை; கணக்கும் வைப்பதில்லை. வசூலிக்கப்படுவது அனைத்தும் மேலிடத்திற்குச் சென்று விடவேண்டும். யாரும் கணக்கு கேட்க முடியாது. எல்லாம் இரகசியம்.
இரகசியம் என்றாலே மோசடி என்று நான் முன்னமே குறிப்பிட்டேன். மோசடி இயக்கத்திலே எல்லாமே மோசடிதானே!
பெண்களுக்கான ராஷ்டிர சேவிகாசமிதி ஆர்.எஸ்.எஸ்.-இன் பிரிவாகையால், ஆர்.எஸ்.எஸ்.-அய் அப்படியே பின்பற்றிச் செயல்படுகிறது. இதன் தலைவிக்கு பிரமுக் சஞ்சாலக் என்று பெயர்.
திருமணம் செய்து கொள்ளாத பிரச்சாரிணிகள் முழு நேர ஊழியர்களாக நியமிக்கப்பட்டு, உடற்பயிற்சி மற்றும் போதனை வகுப்புகள் நடைபெறுகின்றன. அங்கும் ஆணுக்கு அடிமை, பதிபத்தினி கோட்பாடே போதிக்கப்படுகிறது.
பெண்கள் அமைப்பான ராஷ்டிர சேவிகா சமிதியின் பத்திரிகையின் பெயர் ஜாக்ரிதி.
பெண்களுக்கும் அதே மத வெறியே ஊட்டப்படுகிறது. இந்துராஷ்டிரத்திற்குத் தேவையான குடிமக்களை உருவாக்க வேண்டும் என்ற பொறுப்பு அவளிடம் ஒப்படைக்கப்படுகிறது. குருட்டுத்தனமான, போதையேற்றப்பட்ட வெறிப்பிரச்சாரத்தில் அவர்களும் (பெண்களும்) ஈடுபடுத்தப்படுகிறார்கள். திருமணமான - வெளியில் வர இயலாத பெண்களுக்கு அஞ்சல்வழிப் பயிற்சி அளிக்கின்றனர்.
தொழிலாளர்களுக்கென்று பாரதிய தொழிலாளர் சங்கத்தை நடத்துகிறார்கள்.
இவர்கள் மே தினத்திற்குப் பதிலாக விஸ்வகர்மா பூஜையைக் கொண்டாட முயற்சி செய்கிறார்கள். காரணம், எதிலும் அவர்களுக்கு உலக நோக்கோ, மனித நேயமோ கிடையாது. எல்லாவற்றிலும் மத நோக்குதான்!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், கரசேவையின் போதும் இத்தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பது இங்கு மனதில் கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்பாகும்.
படித்த, மத்தியதர மக்கள் மத்தியில் மதவெறியை, ஆர்.எஸ்.எஸ்.அய் பரப்பும் பணியில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள்,
கிராமங்களில், விவசாயிகள் மத்தியில் அமைப்புகளை ஏற்படுத்துவதில் தோல்வி அடைகிறார்கள்.
விவசாயிகளுக்காக 1971ல் ஆரம்பிக்கப்பட்ட ரயத்து சங்கமும், 1979ல் ஆரம்பிக்கப்பட்ட கிஸான் சங்கமும் வளர்ச்சியடையாமல் போயின.
ஆகையால், கிராமப்பகுதியில் இவர்கள் மதவெறியைத் தூண்ட கோயில் தகராறு, இடத்தகராறு என்று பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் முஸ்லீம்களோடு மோதவிட்டு, இந்துக்களுக்கு மதவெறியை ஊட்டுகின்றனர். இதனால் கிராம மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவதற்கான முயற்சியாக ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் சிசு மந்திர் என்று அமைப்பை ஆரம்பித்தனர். இது ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்கான அமைப்பு.
உயர் கல்விக்காக வித்யா பாரதி நிறுவப்பட்டது. இக்கல்வி நிறுவனங்கள் அரசின் பாடத் திட்டத்தைப் பின்பற்றினாலும் இந்து மதக்கோட்பாடுகளையும், இந்து மதத்திற்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்ற உணர்வையும், சொற்பொழிவுகள் மூலமும், பிரார்த்தனை கூட்டங்கள் மூலமும் செய்கின்றனர்.
ஆயுதம் தாங்கிய இராமர்படம், அயோத்தியில் கட்டப்படவிருக்கும் இராமர் கோயில், முஸ்லீம்களோடு வீரத்தோடு போரிடும் இந்துக்களின் படம் என்று மதவெறியைத் தூண்டும் படங்கள் அக்கல்வி நிறுவனங்களில் பார்வையில் படும்படி வைக்கப்படுகின்றன.
இங்கு சமஸ்கிருதக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். ஓர் ஆரியப் பார்ப்பன அமைப்பே என்பதை புரிந்து கொள்ள இது துணை செய்யும்.
கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் இயங்கா கல்வி நிறுவனங்களிலும், ஆர்.எஸ்.எஸ். வெறி மறைமுகமாக வளர்க்கப்படுவதை அரசும், மக்களும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.
ஆரியப் பார்ப்பனர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், மற்றும் ஆரியப் பார்ப்பனர்கள் பணியாற்றும் மற்றும் பயிலும் கல்வி நிறுவனங்களில், அவர்கள் மெல்ல மெல்ல இந்துமதவெறியை ஊட்டி, ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளை இரகசியமாக நடத்தி வருகின்றனர். இதைப் பற்றிய விவரங்களைப் பின்னர் பார்ப்போம்.
ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல் அமைப்பான பி.ஜே.பி. ஆட்சி புரிகின்ற இடங்களிலெல்லாம் பாடத் திட்டங்களிலே கூட இந்துத்வா மற்றும் இந்துராஷ்டிர கருத்துக்கள் புகுத்தப்படுவது தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது. கல்வியாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும், மதச் சார்பின்மையை விரும்பும் மனிதப் பற்றார்களும் இதில் விழிப்பாக இருந்து தடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் வரலாற்றுத் திரிபுகளின், மதவெறியின் பாதிப்புக்கள் பயங்கர விளைவுகளை, கேடுகளை அழிவை ஏற்படுத்தி விடும்.
தங்கள் வசதிக்கு ஏற்ப திரித்து எழுதப்பட்ட, பல தொகுதிகளைக் கொண்ட வரலாற்று நூலை ஆர்.எஸ்.எஸ். தயாரித்துள்ளது. இத்தகவலை தற்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஸனே கூறியுள்ளார்.
அயல் நாட்டிலிருந்து ஆடுமாடு மேய்க்க இந்தியாவிற்குள் வந்த ஆரியப் பார்ப்பனர்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்களாக பூர்வீகக் குடிகளாகக் காட்டும் வகையில் வரலாற்றை மாற்றியெழுதுகிறார்கள்.
ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட எக்காரியத்தையும் செய்வர் என்பதற்கு இதுவெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
1925இல் ஆர்.எஸ்.எஸ். அமைக்கப்பட்டதிலிருந்து 1930 வரை இந்து முஸ்லீம் கலவரங்கள் உள்ளூர் அளவிலேயே நடந்தது. பரவலாக பெருமளவில் நடக்கவில்லை. காரணம், ஆர்.எஸ்.எஸ். அக்காலக்கட்டத்தில் அதிகம் வளரவில்லை.
ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆரம்ப கால சித்தாந்தக் கருத்துக்களுக்கு 1923இல் வெளியிடப்பட்ட, வி.தா. சவர்க்கார் எழுதிய இந்து என்பவர் யார்? என்ற நூலே உதவியாக அமைந்தது. அதுவே நவீன இந்துத்வா கொள்கைகளின் அடித்தளமாய் அமைந்தது.
இந்து என்பவர், சிந்து நதியிலிருந்து கடல் வரை நீண்டிருக்கும் பிரதேசமாகிய பாரதவர்ஷத்தை தன் தந்தையர் நாடாகவும் புனிதப் பூமியாகவும் அதாவது தன் மதத்தின் தொட்டிலாகவும் கருதுகின்ற நபர் என்ற வரையறையைத் தந்தவரும் இந்த சவர்க்கார்தான்.
1925இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.-ன் ஷாகா பயிற்சிகள் 1926ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. அப்போது ஆர்.எஸ்.எஸ்-க்கு கொடி, சம்பிரதாயச் சடங்குகள், நிர்வாக அமைப்பு, நிதி வருவாய் எதுவும் இல்லை. இந்த அமைப்பு உள்ளூர் அமைப்பாகவே இயங்கியது. நிறுவியவரான ஹெட்கெவாரின் நேரடிப் பார்வையிலே பயிற்சிகள் நடந்தன.
முஸ்லீம்களை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட சிவாஜி மற்றும் ராணாப் பிரதாப் ஆகியோரின் கதைகள் உணர்வுபூர்வமாகக் கூறப்பட்டு இளைஞர்கள் உசுப்பிவிடப்பட்டனர்.
இளைஞர்களைக் கவர விளையாட்டுப் போட்டிகளும், சுற்றுலாப் பயணங்களும் நடத்தப்பட்டன.
1927இல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் நீண்ட கம்பு, வாள், ஈட்டி மற்றும் குத்துவாள் இவற்றைப் பயன்படுத்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
1927இல் நாக்பூரில் இவர்களால் தூண்டப்பட்ட மதக் கலவரத்தில், இவர்கள் இந்துக்களுக்கு பாதுகாவலர்களாக முஸ்லீம்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்று, அதன் மூலம் தங்களுக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் பல இடங்களிலும் தங்கள் அமைப்பை விரிவடையச் செய்தனர்.
முதலில் கலவரம் நடந்த இடம் நாக்பூர். அதாவது ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப்பட்ட இடம். ஹெட்கெவாரின் சொந்தவூர் என்பதை நினைவில் கொண்டால் இதிலுள்ள சூட்சமம் நன்கு விளங்கும். ஆர்.எஸ்.எஸ். வளர கலவரமே அடிப்படை என்பதை அவர்கள் அன்றைக்கே உணர்ந்து அன்று முதல் செயல்படுத்தி வருகின்றனர். இதை தனியொரு கட்டுரையிலே விளக்கியுள்ளேன்.
1928இல் சுயம் சேவக்குகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கு சேர்க்கப்பட்டது. இந்து தேசம் அமைக்க என் உயிரையே அர்ப்பணிப்பேன் என்பது அவ்வுறுதி மொழியின் சாரம். முதல் உறுதிமொழிச் சடங்கு 1928 மார்ச் 31ஆம் தேதி நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உடற்பயிற்சி முறைகளை உருவாக்கிய அன்னா சோஹ்னி 1929இல் ஆர்.எஸ்.எஸ்-லிருந்து வெளியேறினார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குள் நடந்த முதல் மோதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
1929 நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.ற்கான அமைப்பு விதிகள் வகுக்கப்பட்டன.
அமைப்பு முழுவதும் ஒரு தலைவனின் கட்டளையின் கீழ்ச் செயல்பட வேண்டும் என்பதற்காக சர் சங் சலாக் பதவி உருவாக்கப்பட்டது.
முதல் தலைவராக (சர் சங் சலாக்காக) டாக்டர் ஹெட்கெவார் (வாழ்நாள் முழுமைக்கும்) அப்பாஜி கோஷி என்பவரால் முன்மொழியப்பட்டு, தலைவரானார். அவருக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டது. இது ஒரு சர்வாதிகார பாஸிஸ இயக்கம் என்பதற்கு இதுவே அடையாளம், ஆதாரம்.
1930 ஜனவரி 26ஆம் நாளை சுதந்திர தினமாகக் கொண்டாட காங்கிரஸ் கேட்டுக் கொண்டபோது, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காவிக்கொடியை வணங்கி சுதந்திர நாள் கொண்டாட வேண்டும் என்றார்.
மேலும் அந்த ஒரு ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் அவர்கள் ஜனவரி 26ஆம் நாளை சுதந்திர நாளாகக் கொண்டாடவில்லை.
மதச்சார்பின்மையை வலியுறுத்தும் விடுதலையை ஆர்.எஸ்.எஸ். விரும்பாமையே இப்போக்குகளுக்குக் காரணம்.
1930ற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். மெல்ல பரவத் தொடங்கியது. அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-இலும் உறுப்பினராக இருக்கலாம் என்று இவர்கள் கூறியது ஆரியப் பார்ப்பனர்களுக்கு வசதியாகப் போயிற்று. காங்கிரஸில் இருந்து கொண்டே தங்கள் உழைப்பை, ஆதரவை ஆர்.எஸ்.எஸ்.க்கு அளித்து அதை வளர்த்தனர்.
இதை அறிந்த காங்கிரஸ், 1934இல் காங்கிரஸில் உறுப்பினராக இருப்பவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளிலோ, முஸ்லீம் லீகிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது.
1930இல், காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.-ல் சேர்ந்து முக்கியப் பேச்சாளராக, அமைப்பாளராக வளர்ந்தான். 1932இல் ஹெட்கெவாருடனும், பாபுராவ் சவர்க்காருடனும் மேற்கு மகாராட்டிராவில் சுற்றுப்பயணம் செய்தான்.
பின், ஹெட்கெவார் ஆர்.எஸ்.எஸ்.-அய் அரசியல் அமைப்பாக மாற்ற மறுக்கிறார் என்ற காரணத்தைச் சொல்லி, ஆர்.எஸ்.எஸ்.-அய் விட்டு விலகி இந்துமகா சபையில் சேர்ந்தான்.
- (ஆதாரம்: கே..கர்ரான், 1951, பக்கங்கள் 18-19)
இந்துமகாசபையும் ஆர்.எஸ்.எஸ்.-ம் வேறு நோக்கம் கொண்டவையல்ல. எல்லாம் ஒன்றுதான். ஆர்.எஸ்.எஸ். மறைமுக அரசியல் நோக்கங்கொண்ட அமைப்பு. நேரடியாக அரசியலில் ஈடுபட அவர்களாலே உருவாக்கப்பட்ட அமைப்புதான் இந்துமகாசபை.
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான அரசியல் கட்சியாக இந்து மகாசபை தன்னை அறிவித்துக்கொண்டு, தேர்தல்களில் ஈடுபடுவதிலும், மந்திரி சபை அமைப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தியது.
1939இல் ஹெட்கெவார் ஆர்.எஸ்.எஸ்.-அய் அகில இந்திய அமைப்பாக வளர்க்க முடிவெடுத்தார். காரணம் 1937 மற்றும் 38இல் ஆர்.எஸ்.எஸ். விரைவாக வளர்ச்சியடைந்தது.
மராட்டிய அமைப்பாகவே இருந்து வந்த ஆர்.எஸ்.எஸ்-அய் இந்தியா முழுமையிலும் வளர்க்க, ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்களை பஞ்சாப், டில்லி, பீகார், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.
1940இல் நாக்பூரில் நடைபெற்ற அதிகாரிகள் பயிற்சி முகாமில் பங்குபெற நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பயிற்சி பெறுவதற்காக வந்திருந்தனர். (அஸாம், ஒரிஸா, காஷ்மீர், நீங்கலாக) இக்கூட்டத்தில் பேசியது தான் ஹெட்கெவாரின் கடைசி பேச்சு.
என் கண் முன் சிறு அளவில் இந்து ராஷ்டிரத்தைக் காண்கிறேன் என்று ஹெட்கெவார் அப்பேச்சில் குறிப்பிட்டதாக இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஜி.எஸ்.சுதர்சன் பேட்டியில் கூறியுள்ளார்.
- (ஆதாரம்: காக்கியுடையும் காவிக்கொடியும், 1993, ஓரியன்ட் லாங்மன்.)


கோல்வால்கர் தலைமையேற்றல்
1940ல் ஹெட்கெவார் நோய்வாய்ப்பட்டு, பிழைக்க முடியாத நிலையில் இருந்தபோது, அவசரமாக ஒருவருக்கு அழைப்பு அனுப்பினார்.
மரணப் படுக்கையில் இருந்து கொண்டே ஹெட்கெவார் ஒரு துண்டுச் சீட்டில் கீழ்க்கண்ட செய்தியை அவருக்கு எழுதினார்.
“Before giving this body finally in the hand of doctor, I want to tell you, that here after you look after the Organisation and Shoulder the whole responsibility.”
அதாவது,
இறுதியாக இந்தவுடலை மருத்துவர்களிடம் ஒப்படைப்பதற்கு முன், நான் இதை உனக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனிமேல் நீதான் இந்த அமைப்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும்; முழுப் பொறுப்பையும் நீதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்று எழுதினார். அவர் குறிப்பிட்ட அந்த நபர் தான் கோல்வால்கர். 1940 ஜூன் 20ஆம் தேதி ஹெட்கெவார் மரணம் அடைகிறார். அதற்கு முதல் நாள் இச்சீட்டை எழுதியனுப்பினார்.
- (ஆதாரம்: A Study of the R.S.S. by
, ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட
ஆய்வுக் கட்டுரை இது. இதில் 24ஆம் பக்கத்தில் இச்செய்தியுள்ளது.)
தனியொரு நபராய் முயன்று, பின் தன் வீட்டில் நான்கு நண்பர்களின் துணையோடு ஆர்.எஸ்.எஸ்.- அமைத்து, அதை வளர்ச்சி நிலைக்கு உருவாக்கி, தான் இறக்கும்போது உரிய ஒருவரைத் தேடி ஒப்படைத்தார்.
கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பதவிக்கு வருவதற்கு முன் அவர் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பு எதையும் வகிக்கவில்லை. ஆனால், 1938இல் நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். அந்த நூலின் மூலம் கோல்வால்கரின் சிந்தனைத் தெளிவை அறிந்து, தன் வழிக்கு சரியான ஆள் என்பதை முடிவு செய்தே தலைமைப் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரிடம் தலைமைப் பொறுப்பை அவர் ஒப்படைக்க விரும்பவில்லைசித்தாந்தத்தைவிட எதார்த்தமே சிறந்தது என்ற அடிப்படையில்,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்
என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப ஹெட்கெவார் முடிவெடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கோல்வால்கரிடம் ஒப்படைத்தார். கோல்வால்கரும் திறமையோடும், நுட்பத்தோடும் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தினர்.
ஆர்.எஸ்.எஸ். சுதந்திரப் போராட்டங்களில் அதிகம் பங்கெடுக்கவில்லை. கோல்வால்கர் அதை விரும்பவும் இல்லை. காரணம், சுதந்திரப் போராட்டம் என்பது பிரிட்டிஷாரை வெளியேற்றுவது மட்டுமல்ல. இது ஒரு பிற்போக்கான போராட்டம். இந்து தேசம் அமைப்பதே உண்மையான விடுதலைப் போராட்டம் என்று கோல்வால்கர் உட்பட அனைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், தலைவர்களும் எண்ணினர்.
எனவே, 1940இல் நடைபெற்ற விடுதலை போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். விலகியே நின்றது. மாறாக அவர்கள் தங்களது ஷாகாக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதில், நாடு முழுக்க விரிவடையச் செய்வதில் கவனமாய் இருந்தனர்.
புதிய உறுப்பினர்கள் (ஊழியர்கள்) நாடு முழுவதும் சேர்ந்தனர். நிதியும் அதிக அளவில் சேர்ந்தது. வர்த்தகர்கள் மத்தியில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ். அடுத்தக் கட்டமாக அரசு ஊழியர்கள் மத்தியிலும் ஊடுருவியது.
ஆர்.எஸ்.எஸ். வளருகிறது என்றாலே மதவெறி வளருகிறது என்பதுதானே பொருள். எனவே, ஆர்.எஸ்.எஸ். வளர வளர நாட்டில் மதவெறியும், மதமோதல்களும் கடுமையாக மாற மதவாதத் தீ சுடர் விட்டு எரிந்தது.
முஸ்லீம்கள் தரப்புக்கு ஜின்னா ஒரு தீவிரவாதியாக மாறி, தலைமை ஏற்று, அவரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எதிர் சவால் கொடுத்தார்.
1946இல் கல்கத்தாவில் இந்து முஸ்லீம் மோதலில் எண்ணற்ற படுகொலைகள் நடந்தன. இவ்வாறு மதக்கலவரம் கொழுந்துவிட்டு எரிவது ஆர்.எஸ்.எஸ்.-க்கு உற்சாகத்தை அளித்தது. தங்கள் இயக்கத்தை மேலும் வளர்க்க, இந்துக்களுக்கு வெறியூட்டி, இந்துக்களை ஒன்று சேர்க்க இதை ஒரு வாய்ப்பாகக் கருதிச் செயல்பட்டனர்.
இச்சூழலில் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவாகச் செயல்பட்டார். நேரு இதை எதிர்த்தார்.
காந்தியாருக்கு மதவெறிப் போராட்டங்கள் வேதனையைத் தந்தன. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று மனமார எண்ணினார்.
இந்து முஸ்லீம் கலவர உச்சகட்டத்தின் போது இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு 1947 ஆகஸ்ட் 14, 15ல் சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதன் பின் இந்தியாவிலுள்ள முஸ்லீம்களை விரட்ட இந்து மதத் தீவிரவாதிகள் தாக்குதல் செய்தனர்.
பம்பாயில் நடந்த ஹிந்து மதக் கூட்டத்தில் இந்து மதத் தலைவன் தாராசிங் பேசுகையில் முஸ்லீம்கள் உண்மையாகவே ஹிந்துக்களை நேசிப்பவர்களாக இருக்க முடியாது; மேலும் எந்த ஒரு முஸ்லீமும் இந்தியாவிற்கு விசுவாஸமாக இருக்கமாட்டான். எனவே, முஸ்லீம்களை இந்தியாவை விட்டே துரத்தியடிக்க வேண்டும் என்று பேசினான். தாங்கள் இவ்வாறு இழித்துப் பேசப்படுவதை எண்ணி முஸ்லீம்கள் கொதித்தெழுந்தார்கள். அவர்கள் பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை தாக்கினர்.
இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பழிக்குப் பழி என்ற வெறியோடு குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் தாக்கினர். முஸ்லீம்களும் பதிலுக்கு வெறிகொண்டு இந்துக்களைத் தாக்கினர். இருதரப்பிலும் அப்பாவிகளே அதிகம் பலியாயினர். இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதி (பஞ்சாப் மாநிலம்) கொலைக்களமாக மாறியது.
உண்மைகளைக் காட்டிலும் வதந்திகள் அதிகமாகப் பரவவே இரு மதத்தாரும் ஒருவருக்கொருவர் கட்டிழந்து கொலை வெறி மோதலில் ஈடுபட்டனர்.
இருபத்து நான்கு மணி நேரத்தில் இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விடவேண்டும் இல்லையென்றால் ஈவு இரக்கம் இன்றி முஸ்லீம்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், அவர்களால் வெறியேற்றப்பட்ட இந்துக்களும் கொதித்தெழுந்தனர்.
இந்த மத மோதல்களை முடிவிற்குக் கொண்டுவர காந்தியார் 1948 ஜனவரி 13ஆம் தேதி சரியாக 11-55 தனது உண்ணாவிரதத்தைத் துவக்கினார். இரு தரப்பும் சமாதானமாகப் போகும்வரை உண்ணாவிரதம் தொடரும் என்றார்.
முஸ்லீம்கள் உயிரை நாங்கள் பாதுகாப்போம் என்று இந்திய அரசு உறுதிமொழி அளித்தது.
அதன் பிறகு காந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் பரப்பின. ஆனால், உண்மையில் காந்தி இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கே பாடுபட்டார்.
முஸ்லீம்கள் பசுவை, கொன்று உண்பதாக இந்து வெறியர்கள் குற்றம் சாட்டினர். அதை காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. புலால் உண்பது முஸ்லீம் விருப்பம் என்று கூறியதோடு இந்துக்களிலும் உண்பவர்கள் உண்டு என்று கூறிவிட்டார்.
காந்தி பிர்லா மாளிகை பிரார்த்தனையில் குரான் மற்றும் பைபிள் பகுதிகளைப் படிக்கிறார் என்று இந்து வெறியர்கள் கொதித்தனர்.
இவ்வாறு இந்து வெறியர்களின் கண்களுக்கு காந்தி எதிரியாகப் பட்டார். எனவே, அவரைக் கொன்றால்தான் இந்து ராஷ்டிரம் அமைக்க இயலும் என்று ஒரு ஆரிய பார்ப்பனக் கூட்டம் முடிவெடுத்தது.
அதில் முக்கியமானவன் நாதுராம் கோட்சே என்ற சித்பவான் பிராமணன் (பார்ப்பனன்). இவனோடு துணை நின்றவர்கள் கார்கரே மற்றும் ஆப்தே. இவர்களின் திட்டப்படி, வணங்கிய கைக்குள் வைத்திருந்த துப்பாக்கியால், பிரார்த்தனைக்குச் சென்ற காந்தியை வழிமறித்து 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மாலை சரியாக 5-17 மணிக்கு கோட்சே மூன்று முறைச் சுட்டுக் காந்தியைக் கொன்றான்.
கொன்றது காந்தியை அல்ல இந்த நாட்டின் மதச் சார்பின்மையை, மத நல்லிணக்கத்தை, மத ஒற்றுமையை, இந்த நாட்டின் அமைதியை.
இந்த உண்மையை உணர்ந்தே தந்தை பெரியார் அவர்கள் இந்த நாட்டிற்குக் காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள் என்று உணர்வுப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் கூறினார்.
ஆரியப் பார்ப்பனக் கூட்டம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு யார் தடையாக இருந்தாலும் அவர்களைக் கொன்று தீர்க்க அஞ்சமாட்டார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது அப்பட்டமான உண்மை என்பதை காந்தியின் படுகொலை நிரூபித்து விட்டது. காந்தியையே கொன்றவர்கள் எதையும் செய்வார்கள் என்பதை இந்த நாட்டு மக்கள் மனதிற் கொள்ளவேண்டும்.
இந்த ஆர்.எஸ்.எஸ்., ஆரியப் பார்ப்பனக் கூட்டத்தை இந்து மதவெறிக் கூட்டத்தை எதிர்த்து காந்தியார் தன் உயிரையே கொடுத்தபின் அதையே ஒரு பாடமாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் இந்த மனித விரோதக் கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
கோட்சே என்ற ஆரியப் பார்ப்பனன் காந்தியைச் சுட்டுக் கொன்றுவிட்டு, முஸ்லீம்கள் கொன்றுவிட்டனர் என்று அப்பாவி முஸ்லீம்கள் மீது இந்த மோசடிக் கூட்டம் பழியைப் போட்டது.
ஆனால் கொன்றது ஆரியப் பார்ப்பான் என்ற செய்தி நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கலவரம் வராத வண்ணம் அந்த அறிவிப்பைத் தந்தை பெரியார் அவர்கள் வானொலி மூலம் செய்து இந்து மண்ணில் மதக்கலவரம் ஏற்படாமல் தடுத்தார்.
காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். கூட்டம் என்று தெரிந்ததும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சட்ட விரோத அமைப்பு என்று அறிவித்த மத்திய அரசு 1948 பிப்ரவரி 4ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தது.
ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டவுடன் ஷாகாக்களின் உறுப்பினர்கள் ஒளிந்து கொண்டனர். கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் இல்லையென்று வாதம் செய்தனர். உறுப்பினர் அட்டையே இல்லாத, சந்தா இல்லாத அமைப்பாக, எல்லாவற்றையும் இரகசியமாகவே அவர்கள் செய்வது, பழிவரும்போது எங்களுக்குத் தொடர்பு இல்லையென்று சொல்லித் தப்பித்துக் கொள்ளும் தந்திரமேயாகும்.
ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கக் கோரி கோல்வால்கர், நேரு மற்றும் பட்டேலுக்குக் கடிதங்கள் எழுதினார். அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. கையெழுத்து இயக்கம் நடத்தி ஒன்பது லட்சம் கையெழுத்துக்கள் சேர்த்து அளிக்கப்பட்டது.
1948 டிசம்பரில் தடை நீக்கக் கோரி சத்தியாகிரஹப் போராட்டம் நடத்தப்பட்டது. 60,000 சுயம் சேவக்குகள் சத்தியாகிரஹம் நடத்தினர்.
மராட்டிய மாநிலத்திலே, இந்துக்களே ஆரியப் பார்ப்பனர்களை எதிர்க்கவும், தாக்கவும் ஆரம்பித்தனர். காந்தியைக் கொன்றவர்கள் என்ற கோபம் இந்துக்களுக்கு அதிகம் இருந்தது.
எனவே, இது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி, அவர்கள்மீது ஒரு வெறுப்பையும் ஏற்படுத்தியது.
இறுதியில், எழுதப்பட்ட அமைப்பு விதிகளைப் பின்பற்றுவது, உறுப்பினர் பட்டியல் முறையாக வைப்பது, பெற்றோர்கள் அனுமதியுடனே அமைப்புக்குச் சிறுவர்களைச் சேர்ப்பது, கலாச்சார இயக்கமாக மட்டுமே இயங்குவது என்று ஆர்.எஸ்.எஸ். ஒப்புக்கொண்டு உறுதியளித்தபின் 1949 ஜூலை 12ம் தேதி ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

தடை நீக்கப்பட்ட பின்பும் பத்து ஆண்டுகளுக்கு அவர்களால் மக்கள் ஆதரவோடு இயங்க முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மனந்தளர்ந்து போயினர். இச்சூழலில் 1952இல் பொதுத் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட்டுகள் வந்தனர். ஆர்.எஸ்.எஸ்.குள்ளே உட்பூசல்கள் நடக்கத் தொடங்கின.

நூல்- பி.ஜே.பி ஒரு பேரபாயம்
                                           ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை