தியாக உணர்வு
தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமிக்கு தியாக உணர்வு இயற்கையாக அமைந்துவிட்டது. கொழுத்த வருமானம், நகராட்சித் தலைவர் பதவி முதல் இருபத்தொன்பது பொதுப் பதவிகள் ஆகியவற்றைத் தயங்காமல் உதறிவிட்டு, காங்கிரசே எல்லாம் என்று ஏறத்தாழ ஏழாண்டு காலம் ஓய்வின்றி அரும்பாடுபட்டார். பிறகு தமிழ்நாட்டு காங்கிரசின் தலைவர், அனைத்திந்திய காங்கிரசுக் குழு உறுப்பினர், நாளையொரு நாள் அனைத்திந்திய காங்கிரசுத் தலைவராகவே வரக்கூடிய வாய்ப்பு, இவை தரும் பெரும் புகழ் இத்தனையும் பெற்ற நிலையில், அவ்வியக்கம் தாழ்த்தப்பட்டோருக்கும் சமுதாயத்தின் எளிய மக்களுக்கும் பயன்படாது என்று உணர்ந்ததும் பெரியார் நொடியில் காங்கிரசைவிட்டு வெளியேறியது மற்றோர் பெரிய தியாகமாகும்.
பெருந்தியாகியாகிய ஈ.வெ.ராமசாமி, பிறர் தியாகத்தைத் தக்கபடி போற்றத் தவறியதில்லை. வீரர் பகத்சிங் அவர்களை தூக்கிலிட்டது பற்றி, நம் நாட்டுச் செய்தித்தாள்களில் பல ஊமைகளாகி விட்டபோது, பெரியார் தமது வார இதழாகிய, 29.3.1931 நாளிட்ட குடிஅரசு தலையங்கத்தில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா, இல்லையா என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வியல்ல. என்றாலும், அக்கடமைகளைக் காலமறிந்து, இடமறிந்து செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோமெனினும் பகத்சிங் கொள்கைக்குக் காலமும் இடமும் நடப்பும் விரோதமாயில்லை என்றும், பொருத்தமாயுள்ளது என்றும் சொல்லுவோம்.
உண்மையிலே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரியென்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு, அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து கொண்டு, இருந்திருப்பாரேயானால், கண்டிப்பாக அவர் நடந்து கொண்டபடியே நடந்திருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால், அவர் யோக்கியமான மனிதரென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம் என்று எழுதினார்.
பெரியார் எவருக்கும் சிறிதும் தனிப்பட்ட முறையில் தொல்லை கொடுக்க விரும்ப மாட்டார். ஒரு முறை, சேலத்தில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டு வந்தார். ஆத்தூரை நெருங்கும்போது கடும் புயலும் பெரும் மழையும் வந்தன. வேனை ஓட்டமுடியாத நிலை ஏற்பட்டது; மெல்ல ஆத்தூர் பயணிகள் விடுதிக்குள் வேன் நுழைந்தது. அவ்வேளை அங்கு இரு அறைகளிலும் யாரோ தங்கியிருந்தனர். அவர்களை எழுப்பி தொல்லை கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேனிலேயே புயலையும் கடும் மழையையும் பொருட்படுத்தாது தங்கியிருந்தார். விடியும் வேளை, உள்ளேயிருந்த பயணிகள், தந்தை பெரியார் இப்படி திறந்த வெளியில், புயலின்போது இரவை வெளியே கழித்ததைக் கேட்டுப் பதறிப் போனார்கள். பெரியாரோ பொறுமையாகவே பதில் சொல்லிவிட்டு சென்னைக்குப் பயணமானார். வாழ்க்கை முழுவதும் புயல்களைச் சமாளித்தவர் அல்லவா பெரியார்!
- நெ.து.சுந்தரவடிவேலு
நூல்:
புரட்சியாளர் பெரியார்
Comments
Post a Comment