எம்.எம்.தண்டபாணி தேசிகர் இசை விருந்து
30.08.1942 அன்று காஞ்சிபுரத்தில் சாம்பசிவம்
- மங்கையர்க்கரசி மணவிழாவில் பெரியார் கலந்து கொண்டார். விழாவில் எம்.எம். தண்டபாணி தேசிகர் இசை விருந்து அளித்தார். தேசிகரின் இன்னிசை விருந்தைப்பற்றி பேசவேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் பெரியார் பேசினார்: எனக்கும் இன்னிசைக்கும் வெகு தூரம். இன்னிசை என்பதே எனக்கு என்ன தென்பது விளங்காது.
காரணம் நமது இன்னிசைகளில் பலர் பலவிதமாக எண்ணி பாடுவதாலேயே ஆகும். ஆனால் நமது இசை அரசு பாடிய இன்னிசையை நான் நன்கு அனுபவித்தேன். அவர் நல்ல தமிழிலேயே பாடினார். அத்துடன் நில்லாது எளிய முறையிலும், மக்கள் உணரும் வண்ணமும், உணர்ச்சி ததும்பப் பாடினார். நான் அவர் பாடும்போது மக்களைக் கவனித்தேன். மக்கள் அவர் பாடலில் ரசித்ததைக் கண்டு நான் மகிழ்ந்தேன். அவர் பாடும்போது என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். அதற்குக் காரணம் அவர் பக்தி ததும்பிய முறையிலும் சில கடவுள்கள் மீதும் பாடினார். அப்படி பாடியது அவர் மீது குற்றமில்லை என்றே நினைக்கின்றேன்.
காரணம் நமது தமிழிலே மக்கள் முன்னேற்றத்திற்கான வகையில் பாடல்கள் அமைக்கப்படவில்லை. அத்துடன் அப்படி பாடுபவர்களை மக்கள் ஆதரிப்பதும் இல்லை. நாம் இப்படிப்பட்ட அருமையான இசை அரசுகளை ஆதரித்தால் இன்னும் நல்ல முறையில் மக்கள் முன்னேறும் வகையில் பாடுவார்கள்.
நான் நம் தேசிகருக்கு ஒரு வார்த்தை கூறுகின்றேன் - வெறும் சங்கீதம் இருந்தால்தான் இசை நன்றாக இருக்கும் என்று எண்ணுவதை விட பாடுகின்ற பாட்டில் மக்கள் எப்படி முன்னேற வேண்டும். அவர்கள் வாழ்க்கை எப்படி நடத்த வேண்டும் என்பன போன்ற அறிவு ஊட்டும் பாடல்களைப் பாடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு தமிழ்ப் பாடல்களில் நல்ல மாதிரியான இசை இல்லை என்று கூறும் நமது எதிரிகள் இன்று பாடிய தேசிகரின் பாடல்களைக் கேட்டால் அம்மாதிரி பிதற்ற மாட்டார்கள் என்றார்.
நூல்: உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – II
Comments
Post a Comment