ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி


 பி.ஜே.பி. ஒரு பேரபாயம் என்று நூல் எழுத வந்தவர், ஆர்.எஸ்.எஸ்.-அய் பற்றிச் சொல்லிக் கொண்டு செல்கிறாரே? ஆர்.எஸ்.எஸ்.-க்கும் பி.ஜே.பிக்கும் என்ன தொடர்பு? என்று சிலர் எண்ணக் கூடும்; கேட்கவுங்கூடும். இது நியாயமான, முக்கியமான கேள்வி.
சுருங்கச் சொன்னால் மரத்தின் வேருக்கும் கிளைக்கும் உள்ள தொடர்பு.
இந்துத்வா, இந்து ராஷ்ட்ரா, இந்து நாடு இந்தியா இந்துக்களுக்கே, இந்தியா என்பது ஆரிய நாடு என்ற சித்தாந்தங்கள், நோக்கங்கள் கொண்டே ஒரு நச்சு விதை இந்திய மண்ணில் ஆரியர்களால் ஊன்றப்பட்டபோது, முதலில் வந்த வேர் ஆர்.எஸ்.எஸ்.; அடுத்து வந்த குருத்து இந்துமகாசபை; அடுத்த வந்த தண்டு வி.எச்.பி. அதன்பின் வந்த கிளைகள்தான் ஜனசங்கம், பி.ஜே.பி. வகையறாக்கள்.
இதில் பூத்துக் குலுங்கிப் பழுத்து ஆரியப் பார்ப்பனர்களுக்குப் பலன்தரும் கிளைதான் பி.ஜே.பி.
வேர், தண்டு, கிளை, பழம் எல்லாம் சேர்ந்து மரம் என்பதுபோல, ஆர்.எஸ்.எஸ். முதல் பி.ஜே.பி. வரை எல்லாம் சேர்ந்ததுதான் இந்துப் பாஸிஸம் அதாவது ஆரியப் பாஸிஸம்.
இந்த அமைப்புகள் அனைத்திற்கும் ஆதாரப்பீடம், ஆர்.எஸ்.எஸ். இவை அனைத்துமே ஆட்சியைப் கைப்பற்றி இந்துப் பாஸிஸ ஆட்சியை (ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை) அமைக்க முனையும் அரசியல் அமைப்புகளே.
கலாச்சார அமைப்புகள், தர்ம ஸ்தாபனங்கள், சேவைச் சங்கங்கள் என்பதெல்லாம் ஊரை ஏமாற்றுகின்ற ஒப்பனைகள்; கவர்ச்சிகள், அப்பாவிகளை ஈர்க்கின்ற அலங்காரங்கள்.
ஆர்.எஸ்.எஸ். அஸ்திவாரம் என்றால், இந்துமகா சபை, வி.எச்.பி., ஜனசங்கம் எல்லாம் கோபுர சுவர்கள், கோபுரக் கலசமே பி.ஜே.பி.
எல்லாவற்றையும் சேர்த்து கோபுரம் என்பது போல, இவையெல்லாம் சேர்ந்ததே இந்து ராஷ்டிரம்.
ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு பயங்கரமான அமைப்போ, அதே அளவு பயங்கரவாத அமைப்பு பி.ஜே.பி. இன்னும் சொல்லப் போனால், பி.ஜே.பி. அதிபயங்கர அமைப்பு. காரணம், இது ஆட்சியையும் அதிகாரத்தையும் நேரடியாகக் கையில் எடுக்கும் அமைப்பு.
இந்துராஷ்டிரம் என்னும் ஆரியப் பார்ப்பன பாஸிஸ ஆட்சியை அமைக்க இவை எப்படி ஒவ்வொன்றும் பொறுப்பேற்றுச் செயல்படுகின்றன என்பதை பின்வரும் கட்டுரைகளில் பார்க்கவிருப்பதால்,
இந்த அமைப்புகள் தோன்றி வளர்ந்தமை பற்றியும், இவற்றிற்கிடையேயுள்ள உறவு பற்றியும், இவை அனைத்தும் ஒன்றே என்பதையும், இனி வரும் ஆர்.எஸ்.எஸ். வரலாற்றோடு இணைத்தே பார்க்கவிருக்கிறோம்.
இந்து மகா சபை
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைவிட அதிக தீவிரத்துடன் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தோடு, ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையையே தனக்கும் கொள்கையாகக் கொண்டு அமைக்கப்பட்டதே இந்து மகாசபை. இதை அமைத்தவர் என்.பி.கார்வே. இவரே இந்த அமைப்பின் தலைவரும் ஆவார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸூம் இந்துமகா சபையும் ஒன்றே என்பதை இவரே அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.
இந்துமகா சபைக்கும், ஆர்.எஸ்.எஸ்.-க்கும் அமைப்பு ரீதியான தொடர்பு உண்டு. இரண்டு அமைப்புகளுக்கும் ஒரே இலட்சியந்தான். இரண்டும் பாரதீய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவையே! என்று என்.பி.கார்வே கூறியுள்ளார்.
- (ஆதாரம்: அரிஜன் ஆங்கில வார ஏடு 8.1.1950.)
1931ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகோலா என்ற இடத்தில் நடந்த இந்துமகா சபை மாநாட்டை முன்னின்று நடத்தியவர்களே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான். அம்மாநாட்டு ஊர்வலத்தை பொதுமக்கள் தாக்கியபோது இந்துமகா சபையின் தலைவர்களைக் காத்ததும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான்.
காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.-இல் இருந்து அதைவிட தீவிரமாகச் செயல்படவேண்டும் என்று இந்துமகா சபைக்கு வந்தான்.
இந்து ராஷ்டிரா என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்தினான். அதன் ஆசிரியரும் அவனே.
இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். இனி அவர்கள் இந்துஸ்தானில் இருக்கக்கூடாது. உடனே வெளியேற வேண்டும். முஸ்லீம்கள் இந்துஸ்தானின் பரம எதிரிகள். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் குடியுரிமை கூடாது. இருந்தால் அதைப் பறித்துவிட வேண்டும் என்று எழுதினான்.
ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்துமகா சபையும் ஒன்றே என்பதற்கு இந்த முழக்கமே சிறந்த அடையாளம். ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.
கோட்ஸேக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; அவர் இந்துமகா சபையைச் சார்ந்தவர் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், கோட்ஸே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்க நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
புதுடில்லியில் உள்ள இந்துமகா சபைக் கட்டிடத்தில் ஹெட்கெவார் தங்கியிருந்தார். ஹெட்கெவார் செல்லுமிடமெல்லாம் உடன் சென்றவன் கோட்சே, ஆர்.எஸ்.எஸ். பல நகரங்களில் அமைக்கப்பட ஆலோசனை தந்தவன்; ஹெட்கெவாருக்கு ஆலோசகனாக இருந்தவன் கோட்சே.
ஆதாரம்:  Militant Hinduism in Indian politics  (பக்கம் 18, 19)
எனவே, இவர்கள் வெளியில் கபட நாடகம் ஆடுகிறார்களே தவிர உள்ளுக்குள் இவர்கள் எல்லாம் ஒன்றுதான்.
இந்துமகா சபையின் இளைஞர் அணி தாருண் இந்து சபா பாபுராங் சவர்க்கரால் நிறுவப்பட்டது. அது 1931ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். உடன் அவரால் இணைக்கப்பட்டது.
1932ஆம் ஆண்டு நடைபெற்ற இந்துமகா சபை கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளைப் பாராட்டி நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.-அய் பரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதே ஆண்டில் இந்துமகா சபையின் தலைவராய் இருந்த பாய் பர்மானந்த் இந்து யுவ பரிஷத்தின் கராச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஹெட்கெவாருக்கு சிறப்பு அழைப்பு அனுப்பினார். இதன் மூலம் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பரவியது.
காசியிலும், டில்லியிலும் இந்துமகா சபை ஊழியர்களுடன் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பினை பாபுராவ் சவர்க்கர் ஏற்படுத்தினார். இதன் மூலம் அப்பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். விரிவடைந்தது.
மகாசபையின் முக்கியத் தலைவர் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி லாகூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசும்போது, இந்தியாவின் இருண்ட வானில் மின்னலாகப் பளிச்சிடுகின்ற ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்று பாராட்டினார்.
இந்தி மொழி பேசும் வடஇந்தியப் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற உதவியது இந்துமகா சபையாகும்.
ஆக, இந்துமகா சபையும் ஆர்.எஸ்.எஸ்-ம் ஒன்றே. பெயரால், அமைப்பால் வேறுபட்டாலும் அவர்கள் அனைவரும் ஒன்றே, அவர்கள் நோக்கங்களும் ஒன்றே என்பது இவை மூலம் தெளிவாகும்.
காந்தியைச் சுட்டதன் விளைவாய் மக்களால் வெறுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அதனால் ஏற்பட்ட சரிவை ஈடுசெய்ய கோல்வால்கர் தனது பேச்சாற்றலைப் பயன்படுத்தினார். அவருடைய பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு சிந்தனைக் கொத்து (Bunch of Thoughts)    என்ற நூலாக வெளியிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அந்நூலே ஜீவநாடியாக அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் ஆட்சி அமைப்பான பி.ஜே.பிக்கு இந்நூலே வழிகாட்டு நூல்; வேத நூல் எல்லாம்.
கோல்வால்கர் தனது இயக்கம் (ஆர்.எஸ்.எஸ்.) எல்லா தலைவர்களின், எல்லாக் கட்சிகளின் அங்கீகாரத்தையும் பெற்றது என்பதைப் போல ஒரு கருத்துருவை உருவாக்க, வினோபாவின் பூதான இயக்கம், போர்ச்சுக்கீசியருக்கு எதிரான சத்தியாக்கிரஹப் போராட்டம், அஸாம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணி போன்றவற்றில் இவர்களாகவே நுழைந்து கொண்டு செயல்பட்டனர். தங்கள் மீது இருந்த கெட்ட பெயர் நீங்க வேண்டும் என்பதற்காகவும் இச்செயல்களில் ஈடுபட்டனர். இவையெல்லாம் உளப்பூர்வமான, தொண்டு மனப்பான்மையோடு ஈடுபாட்டோடு செய்யப்பட்ட செயல்கள் அல்ல. இவை ஒரு நடிப்பாகவே செய்யப்பட்டன.
1950 முதல் 1962 வரை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மிகவும் மனம் சோர்ந்து, தான் ஒரு கலாச்சார இயக்கமாகவே இருந்துவிட்டுப் போகலாமா என்ற முடிவிற்குக் கூட வரும்படியான சூழலில், வளர்ச்சியின்றி, மக்களிடையே செல்வாக்கின்றி இருந்தது.
இச்சூழலில் 1962ல், சீனா இந்தியாமீது படையெடுத்தபோது, கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைப்பிடித்த சீன ஆதரவுப் போக்கைக் கண்டிக்கும் வகையில், தங்களுக்கு தேசப்பற்று உள்ளதுபோல்  ஆர்.எஸ்.எஸ். காட்ட முற்பட்டது.
1963இல் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பிலும் ஆர்.எஸ்.எஸ். கலந்து கொண்டது.
காந்தியாரைப் படுகொலை செய்தமையால் தங்களுக்கு ஏற்பட்ட கெட்டப்பெயரை, தங்கள்மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை மாற்றும் முகத்தான் இது போன்ற நடிப்பு வேலைகளில், ஏமாற்று வேலைகளில் ஆர்.எஸ்.எஸ். இறங்கியது.
சுருங்கச் சொன்னால் புலி பசுத்தோலைப் போர்த்திக் கொண்டது.
நாட்டில் எங்கெங்கெல்லாம் இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் வன்மை குன்றியிருந்தனவோ அங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தங்களை வளர்த்துக் கொள்ள முயன்றன.
1964இல் இந்து மதத் தலைவர்களையும், சாமியார்களையும் ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வால்கர் சந்தித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) என்ற இந்து மத தீவிரவாத அமைப்பை உருவாக்கினார். வி.எச்.பி.யும், ஆர்.எஸ்.எஸ்.-ன் குடும்ப அமைப்பே என்பது இதன் மூலம் விளங்கிற்று.
இச்சூழலில் பாலாசாஹிப் தேவரஸ் விரைவாக வளர்ந்து கொண்டிருந்தார். 1965இல் ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
1967இல் பசுவதையை எதிர்த்து பெருங்கிளர்ச்சியில் ஈடுபட்டு, நாடு முழுவதும் கலவரங்களை, வன்கொடுமைகளை நிகழ்த்தினர். பசுவைக் காக்க மனிதனைக் கொல் என்று முழக்கமிட்டனர்.
1970இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன் கிளைகளை தொகுதி வாரியாக மாற்றியமைத்தது. இதுவரை அரசியல் நோக்கை உள்ளுக்குள் வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ். இதன் மூலம் தனது அரசியல் நோக்கை வெளிப்படுத்தியது.
சட்டமன்றத் தேர்தல், தொழிற்சங்கத் தேர்தல், மாணவர் சங்கங்கள் போன்றவற்றில் நேரடியாகத் தலையிட்டது.
1973இல் கோல்வால்கருக்குப் பிறகு பாலா சாஹிப் தேவரஸ் ஆர்.எஸ்.எஸ். தலைவரானார்.
1973இல், டில்லி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சங்கத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தீவரமாகப் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்.-அய் நுழைக்கவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1974-75இல் இந்திராகாந்தியின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டத்தை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் குடும்ப அமைப்பான ஜனசங்கமும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் செல்வாக்கைத் தேடிக் கொண்டன. இவர்களின் வஞ்சக வலையில் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் சில காலம் சிக்கினார். என்றாலும் விரைவாக இவர்களின் உண்மையைப் புரிந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்தார்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகள் மீண்டும் தீவிரவாத நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடவே, 1975இல் இரண்டாம் முறையாக ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அதன் தலைவர் தேவரஸ் மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
1948இல் ஆர்.எஸ்.எஸ். முதல் முறையாகத் தடை செய்யப்பட்டபோது, நேருவிற்கு கோல்வால்கர் எழுதியதுபோல, தேவரஸ் சிறையில் இருந்தபடியே, 1975இல் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். தடையை நீக்குங்கள்; உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறோம் என்று அதில் உறுதியளித்தார்.
தடை நீக்கம்
1977ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் இவர்களின் அரசியல் நுழைவிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனம், அடக்குமுறை ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை உண்டாக்கியிருந்தது.
1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனதா கூட்டணி வெற்றிபெற்றது. இந்திரா காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருந்த ஜனசங்கத்து உறுப்பினர்கள், அதில் தொடர்ந்து உறுப்பினர்களாக நீடித்துக் கொண்டே ஜனதாக் கட்சியிலும் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த இரட்டை உறுப்பினர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஜனதா அமைச்சரவையில் மந்திரிகளானார்கள். அவர்கள் 1.வாஜ்பேயி, 2.அத்வானி, 3.பிரிஜ்லால் வர்மா - ஆகியோர்.
இவ்வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜனசங் என்ற போர்வையில் இரட்டை உறுப்பினர் வாய்ப்பைப் பயன்படுத்தி முதன்முதலாக ஆட்சிப் பொறுப்பில் நுழைந்தது.
இவர்கள் கொஞ்ச நாள் பதவியில் இருந்தாலும் எப்படிப்பட்ட மோசடிகளையும் செய்வார்கள்; எவ்வகையிலும் இந்து ராஷ்ட்டிர முயற்சியை மேற்கொள்வார்கள் என்பதற்கு வாஜ்பேயி இந்த அமைச்சரவையில் இருந்த போது செய்த மோசடிச் செயலே சரியான சான்றாகும். அதை பின்வரும் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
1977 தேர்தலில் ஜனசங்கத்துக்கு, காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பின் காரணமாக 93 உறுப்பினர்கள் கிடைத்தார்கள்.
ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாகவும், இரட்டை உறுப்பினர் பிரச்சினையாலும் ஜனதா ஆட்சி 1981இல் கலைந்தது.
1981இல் நடந்த பொதுத் தேர்தலில், ஜனதா ஆட்சி நிலைக்காததால் மக்கள் கூட்டணி ஆட்சியை வெறுத்து மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்தனர்.
அப்போது (1981இல்) ஜனசங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 16ஆக குறைந்தது.
அதனால் ஜனசங் என்ற பெயரில் தொடர்ந்து அரசியல் கட்சி நடத்த விரும்பாத ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாரதீய ஜனதா கட்சி (பி.ஜே.பி.) என்று பெயரை மாற்றி புதிய வடிவத்தில் அரசியலில் தொடர்ந்து நின்றனர்.
ஒரு பக்கம் தனது அரசியல் அங்கமாக பி.ஜே.பி.யை வளர்த்துக் கொண்டே மறுபக்கம் ஆர்.எஸ்.எஸ். காங்கிரசுடன் உறவு இருப்பதாகக் காட்டிக் கொண்டே இருந்தது.
அரசியல் அங்கமான பி.ஜே.பி. அரசியலில் செல்வாக்குப் பெற இயலாமல் போனாலும், அதனுடைய பீடங்களான ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்றவை இராம ஜென்ம பூமி, இந்து ராஷ்ட்ரா, இராமர் கோயில் என்று பிரச்சினைகளைக் கிளப்பி இந்துக்களை கவர்வதால் வெற்றி பெற்றது.
தூர்தர்ஷன் என்ற இந்திய தொலைக்காட்சி இராமாயணம் தொடர் ஒளிபரப்பியதன் மூலம் இவற்றின் செல்வாக்கு விரைவாக வளர்ந்தது.
இச்சூழ்நிலையில், 1981இல், தமிழ்நாட்டில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சி இவர்களின் கனவைத் தகர்ப்பதாய் அமைந்தது. ஒரு பக்கம் இந்துக்களை ஒன்று சேர்ப்பதில், இராமர் கோயில் பிரச்சினையில், இந்து ராஷ்ட்டிரா பிரச்சாரத்தில் வெற்றி பெற்ற இவர்களுக்கு, இந்து மதத்திலே இழிவு படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையாக மாறினர்.
1981இல் தமிழ் நாட்டில், மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறிய நிகழ்வு. ஆர்.எஸ்.எஸ். குடும்ப இயக்கங்களின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
மீனாட்சிப் புரத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், ஒட்டுமொத்தமாக இந்து மதத்தை விட்டு விலகி, இஸ்லாம் மதத்திற்கு மாறினர். இதைக் கேள்விப்பட்ட ஆரியப் பார்ப்பனர்கள் அலறித் துடித்தனர்.
இந்தியா வெங்கிலுமிருந்து மீனாட்சிப்புரம் நோக்கி ஓடி வந்தனர். இந்நிலை தொடர்ந்தால் இந்து மதக் கூடாரம் காலியாகிவிடும். அதன் மூலம் தங்கள் ஆதிக்கக் கோட்டையும், இந்து ராஷ்ட்ரா கனவும் கலைந்து விடும் என்று துடித்துப் போயினர்.
இதற்கு மாற்றுவழி காணவேண்டும்; இந்துக்களை எப்படியாவது ஓரணியில் திரட்ட வேண்டும்; இந்துமதக் கட்டமைப்பைக் குலைந்து போகாமல் காக்க வேண்டும் என்று திட்டமான ஒரு முடிவிற்கு வந்தனர்.
இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், மலைஜாதியினரும், உயர் ஜாதி இந்துக்களால், இழிவாகவும் கொடுமையாகவும் நடத்தப்படுகின்றனர் என்பதே தாழ்த்தப்பட்டவர்களின் மத மாற்றத்திற்குக் காரணம்.
இது ஆரியப் பார்ப்பனர்களுக்குத் தெரிந்தாலும், அதை மறைத்து, முஸ்லீம்கள்தான் இவர்களைத் தங்கள் மதத்திற்கு மாறும்படியாகச் செய்து விட்டனர் என்று பழியைப் போட்டு, அவர்களைக் கடுமையாகத் தாக்கினர்.
வெளியில் முஸ்லீம்கள் மீது பழிபோட்டாலும், உள்ளுக்குள் மலை ஜாதியினரையும், தாழ்த்தப்பட்டவர்களையும் கவர, அவர்கள் வெறுக்காமல் இருக்க, அவர்களைச் சமாதானம் செய்யும்படியான செயல்களில் இறங்கினர். அவர்கள் மீது அளவிற்கு அதிகமான கரிசனம் காட்டத் தொடங்கினர்.
ஏற்கெனவே கோல்வால்கர் முயற்சியினால், இந்து சாமியார்களைக் கூட்டி உருவாக்கப்பட்ட வி.எச்.பி. மத மாற்றத்திற்குப்பின் தன் பணிகளை, செயல் திட்டங்களை தீவிரப்படுத்தியது.
மதத் தலைவர்கள் அங்கம் வகிக்கக் கூடிய இரு உச்ச நிலை அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. 1. மார்க் தர்ஷக் மண்டல் (வழிகாட்டும் அமைப்பு), இது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை கூடும். 2. தர்ம ஸன்ஸாத் (அறநெறி இயக்கம்). இது தேவைப்படும்போது கூடக் கூடியது. முக்கியமான மடத்தின் தலைவர்கள், சங்கராச்சாரிகள் இதில் முக்கிய பங்கு பெற்றன.
மதத்தின் அங்கீகாரம் ஆர்.எஸ்.எஸ். குடும்ப அமைப்புகளுக்கு முழுமையும் வேண்டும் என்பதற்காகவே சாமியார்கள் இதில் கோர்க்கப்பட்டனர்; சேர்க்கப்பட்டனர்.
வி.எச்.பி. சட்டரீதியான அமைப்பாக மாற்றப்பட்டு, 100 உறுப்பினர்களைக் கொண்ட தர்ம கர்த்தா சபை மற்றும் 51 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகச் சபையை உருவாக்கியது.
வி.எச்.பி. டிரஸ்ட்டாக அமைக்கப்பட்டதால், நேரடியாக இது தன்னோடு அதிக உறுப்பினர்களைச் சேர்க்க இயலாது. இவர்கள் நலம் நாடிகள் என்ற நல்ல போர்வையோடு, தங்களின் உள்ளார்ந்த வன்முறைத் திட்டங்களைச் செயல்படுத்த 13 பிரிவுகளை ஏற்படுத்தினர்.
தர்ம அனுஷ்டானப் பிரிவு ஆலயங்களில் பஜனைகளைப் பாடுவதற்கான ஏற்பாடு செய்கிறது.
தர்மப் பிரச்சாரப் பிரிவு கிறித்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை மறுபடியும் இந்து மதத்திற்கு மாற்றும் வேலையில் ஈடுபடுகிறது.
குருமார்கள் பிரிவு பூசாரிகளுக்குப் பயிற்சியளிக்கிறது. திருவிழாக்களை நடத்தும் பிரிவு ஆங்காங்கே கடவுள் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடக்க தூண்டிவிடும் பணியைச் செய்கிறது. இதைப் பயன்படுத்தி இந்தியா முழுக்க ஒரே மாதிரியான சடங்கு சம்பிரதாயங்களை உருவாக்கவும், படிப்படியாக ஒரே கடவுளான இராமரை வணங்கும்படிச் செய்து, இதர உள்ளூர் கடவுள் அடையாளங்களை அழிக்கும் முயற்சியிலும் வி.எச்.பி. ஈடுபடுகிறது. இங்கு தான் ஆரிய ஆதிக்கத்திற்கான அஸ்திவாரம் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பொதுவான கடவுள், பொதுவான வழிபாடு, பொதுவான சடங்கு என்பதன் மூலம் பார்ப்பனக் கலாச்சாரத்தை, பார்ப்பனக் கடவுளை, பார்ப்பனச் சடங்குகளை மட்டும் நிலை நிறுத்தி, ஒவ்வொரு வட்டாரத்திலும் மரபுவழி வருகின்ற வழிபாட்டு முறைகளை, வழிபடும் கடவுளை அழித்தொழிக்க வேண்டும் என்பதே வி.எச்.பி.யின் முக்கிய இலக்கு.
அதன் மூலம் இந்துக்கள், இந்து கோயில் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் மட்டும் கொண்டுவர வேண்டும் என்று இது முயல்கிறது.
வெவ்வேறு மடங்களுக்கு இடையே காணப்படும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஒரு பிரிவு செயல்படுகிறது.
சமஸ்கிருதப் போதனையைச் செய்ய ஒரு பிரிவு உள்ளது. இதன் மூலம் அவர்களின் செத்த மொழிக்கு உயிர் கொடுக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஹரிஜனங்களுக்குச் சேவை செய்வதாகக் காட்டிக் கொள்வதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது.
பசுக்களைப் பராமரிப்பதற்காக ஒரு பிரிவு உள்ளது. வி.எச்.பி.யின் வன்முறை அமைப்புகளில் இதுவும் ஒன்று.
பஜ்ரங்தள் என்று இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கென்று ஒரு பிரிவு உள்ளது. இதுதான் இந்த அமைப்பின் முக்கியமான ரவுடி அமைப்பாகும். படுகொலைகள், வன்முறைகள் செய்வதற்கென்றே இங்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இதை ஒரு கொலை வெறி கூட்டம் என்றால் மிகையாகாது.
இவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதியிலும் வெவ்வேறு பெயர்களில் செயல்படுகிறார்கள். வங்காளத்தில் விவேகானந்தா சேனை என்று பெயர். பெண்கள் பிரிவிற்குத் துர்க்கா வாஹினி சேனையென்று பெயர்.
இவர்களுடைய வாராந்திரக் கூட்டம் ஹனுமார் ஆலயங்களில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாட்கள் நடத்தப்படும் முகாம்களில் இவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகிறார்கள்.
இந்துக்களைப் பாதுகாக்கும் பிரிவு என்று இவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அப்படியென்றால் முஸ்லீம்களை கிறித்தவர்களைக் கொல்லும் பிரிவு என்பது அதன் உட்பொருள்.
இவர்களுக்குச் சித்தாந்த ரீதியில் பயிற்சியளிக்கப்படுவதில்லை. எப்படி சண்டை செய்வது, எப்படிக் கொலை செய்வது, எப்படி கலவரம் உண்டு பண்ணுவது என்றே இவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.
பஜ்ரங்தள்ளின் முக்கியமான நோக்கு பின்வாங்காதே, அடிக்குப் பதிலடி கொடு என்பதே. பழி வரும்போது பஜ்ரங்தள் மீது பழி போட்டுவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தப்பித்துக் கொள்ளவும் இந்த அமைப்பு அவர்களுக்குப் பயன்படுகிறது.
மாத்ரி மண்டல் பிரிவு வயதான பெண்கள் பிரிவில் பணிமேற் கொள்கிறது.
வெளி நாட்டு ஒருங்கிணைப்புக்குழு, உலகெங்கணும் உள்ள இந்துக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
நிதி சம்பந்தப்பட்ட பணிகளைச் செய்யவும், கொள்கை வெளியீடு களைச் செய்யவும், நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கும் தனிப்பிரிவு உள்ளது.
பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள தனிப் பிரிவு செயல்படுகிறது.
இராமஜென்ம பூமி பிரச்சினைகளை கவனிக்கத் தனிப்பிரிவு உள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் தீவிரமாகவும், வன்முறை வழியிலும் செயல்படும் அமைப்புகளாகும்.
வி.எச்.பி. அமர்த்தியுள்ள எல்லா பிரச்சாரக் குழுக்களும் ஆர்.எஸ்.எஸ்.-அய் சேர்ந்தவர்கள். எனவே, வி.எச்.பி.யின் கொள்கையும், அமைப்பும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆக ஆர்.எஸ்.எஸ்.-ம் வி.எச்.பி.யும் பெயரால் வேறுபடினும் அதுவும் ஆர்.எஸ்.எஸ். குடும்ப அமைப்பேயாகும்.
ஆக, ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை, வி.எச்.பி. ஆகியவை ஆர்.எஸ்.எஸ்-இன் வடிவங்களே என்பது இது வரை தெளிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளின் அரசியல் நுழைவிற்கான அமைப்பாக ஏற்படுத்தப்பட்டதே ஜனசங் என்பதையும், அது 1977இல் ஜனதா கூட்டணியில் இடம் பெற்று 93 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 1981ல் 16 உறுப்பினர்களையும் பெற்று செல்வாக்கு இழந்ததையும் முன்னர் பார்த்தோம்.
இழந்த செல்வாக்கை சரிசெய்து அரசியல் வெற்றி பெற ஜனசங் என்ற பெயரை மாற்றி, பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி.) என்று பெயரை மாற்றிக் கொண்டு புதிய செல்வாக்கைப் பெற முயற்சி மேற்கொண்டது.
ஆனால், 1984இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 இடங்களை மட்டுமே பெற்று பி.ஜே.பி. மேலும் பின்னடைவைச் சந்தித்தது.
அதே நேரத்தில், பி.ஜே.பி.யின் அடிப்படை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., பி.எச்.பி. போன்றவை, இந்து வெறியைத் தூண்டி இந்துக்களை ஓரணியில் திரட்டி, அதை வாக்குகளாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டன.
அதற்கு அவர்கள் உடனடியாக கையிலெடுத்த ஆயுதமே இராமர் கோயில் கட்டும் திட்டம்.
அதுவும் ஏதோ ஒரு இடத்தில் இராமர் கோயில் கட்டினால் பிரச்சினை எழாது, சூடு பிடிக்காது என்பதால், பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் இராமர் பிறந்தார்; எனவே, பாபர் மசூதியை இடித்துவிட்டு அதே இடத்தில் இராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்று ஆவேசமாக முழங்கினர். அதனையே முதன்மை இலக்காக மாற்றினர். இந்திய அரசு தொலைக்காட்சி (தூர்தர்சன்) மூலம் உசுப்பி விடப்பட்டிருந்த இராமர் பக்தி, இவர்களின் முழக்கம் மக்கள் உள்ளத்தில் ஆழப் பதிய உதவியது; அவர்களின் உணர்வைத் தூண்டியது.
இதன் எதிர் விளைவாக முஸ்லீம்கள் பாபர் மசூதியை பாதுகாக்கும் முயற்சியில் திரண்டு தீவிரமாயினர்.
ஆக, உணர்வு கொந்தளிப்பு ஊர் ஊராய்ப் பரவ, இந்து என்ற உணர்வு உசுப்பி விடப்பட்டு, ஊதி ஊதி தீப்பிழம்பாக மாற்றப்பட்டது. இதனால், வட இந்தியப் பகுதியில் குறிப்பாக உத்திரபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் இந்துக்கள் ஒன்று திரண்டனர்.
இதே முழக்கத்தை - இராமர் கோயில் கட்டும் முழக்கத்தை பி.ஜே.பி.யும் முன் வைத்ததால், இந்துக்களின் ஒற்றுமையும் உணர்ச்சியும், உள்ளுக்குள் பி.ஜே.பி.க்கான வாக்கு வங்கியாக உருவாகிக் கொண்டிருந்தன.
இந்த நேரத்தில் அமுக்கமான கமுக்கமான பிரதம மந்திரி நரசிம்ம ராவ் பதவியில் இருந்தது இந்த இந்து வெறிக் கூட்டத்திற்குத் சாதகமாய் அமைந்தது.
அடுத்தத் தேர்தலில் பி.ஜே.பி. கணிசமான வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள், பாபர் மசூதியை இடித்து இராமர் சிலையை வைத்துவிட்டால், இந்துக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றுவிடலாம் என்று முடிவு செய்தனர்.
அத்திட்டத்தின்படி, மத்திய அரசு இருக்க, மாநில அரசு இருக்க, காவல்துறை, ஆட்சியாளர்கள், இராணுவம் எல்லாம் இருக்க - வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, 1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இடிக்கப்பட்டது பாபர் மசூதி மட்டுமல்ல, இந்திய நாட்டின் மத நல்லிணக்கமுந்தான்!
இவ்வளவு அப்பட்டமான அத்துமீறிய அயோக்கியத்தனமான நிகழ்வு, உலக வரலாற்றில் இல்லை. காரணம் இப்படிப்பட்ட காரியங்களை ஆரியப் பார்ப்பன மதவெறிக் கூட்டத்தைத் தவிர வேறு யாரும் செய்யத் துணியார்! அப்போது பிரதமராய் இருந்த நரசிம்மராவ் ஒரு ஆரியப் பார்ப்பனர் என்பதைக் கருத்தில் கொண்டால், எங்கிருந்தாலும் பூணூல் எல்லாம் ஒன்றுதான் என்ற உண்மை விளங்கும்.
இந்த இடிப்பு வேலையை ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங்தள், இந்து முன்னணி, சிவசேனா, சாது சமாஜ், பி.ஜே.பி. அமைப்புகளைச் சேர்ந்த வன்முறைக் கும்பல், கடப்பாரை, சம்மட்டியோடு வந்து, சூலம், வேல், கத்தி போன்ற போர்க் கருவிகளின் துணையோடு செய்தனர் என்பது, இவர்கள் அனைவரும் ஒரே நோக்குடையவர்கள்; பெயரால் வேறுபட்டாலும் ஒரே குடும்பப் பாசம் உள்ளவர்கள் என்பதை விளக்குகின்றது.
இடித்து முடிக்கும் வரை காத்திருந்த நரசிம்மராவ் அரசு, கண்துடைப்பிற்காக வேண்டி, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., மற்றும் அவற்றைச் சார்ந்த அமைப்புகளைத் தடை செய்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் நாள் ஓர் ஆணை பிறப்பித்தது. ஆர்.எஸ்.எஸ். மூன்றாம் முறையாகத் தடை செய்யப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இம்முறை செய்யப்பட்ட தடை ஒரு ஏமாற்று நாடகமாகவே இருந்தது. காரணம், தடை செய்யப்பட்ட அமைப்புகள் அனைத்தும் தாராளமாகச் செயல்படவே செய்தன.

நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்
                                           ஆசிரியர் - மஞ்சை வசந்தன்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை