பெரியார் என்கிற மூச்சுக்காற்று திராவிட சமுதாயத்திற்கு எப்போதும் தேவை!
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு உங்களைச் சந்திக்கின்ற இந்த வாய்ப்பில்,
எல்லா கருத்துகளையும் எடுத்து வைக்க முடியாது என்பதற்காகத்தான், அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் காலத்திலிருந்தே இந்த இயக்கம் ஓர் அருமையான பிரச்சார ஏற்பாட்டைச் செய்து, தொடர்ந்து சிறுசிறு வெளியீடுகள், புத்தகங்கள், ஆராய்ச்சிக்குரிய பெருநூல்கள் இவற்றையெல்லாம் வெளியிட்டு வருகிறோம்.
அந்தப் பக்கங்களையும், அதனுடைய அடக்கத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்தால், லாபமில்லாமல் ஏறத்தாழ அடக்க விலைக்குத் தரக்கூடிய அளவிற்கு, மக்கள் மத்தியில் கருத்துகளைப் பரப்புவதற்காக கொள்கைகளைப் பரப்புவதற்காக - பல்வேறு நூல்களை அச்சிட்டு இங்கே கொண்டு வந்திருக்கிறோம்.
இவற்றை நீங்கள் வாங்கவேண்டும்;
படிக்கவேண்டும்;
பிறருக்கும் கொடுத்துப் பரப்பவேண்டும்.
காரணம் இந்தக் கொள்கை என்பது எப்படிப்பட்ட ஆதாரப்பூர்வமான கொள்கை, மறுக்கப்பட முடியாத தத்துவங்கள், ஏற்கப்படவேண்டிய
பகுத்தறிவு கருத்துகள் என்பதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வதற்கு அந்த நூல்கள் உங்களுக்குத் துணை நிற்கக்கூடிய, உதவக்கூடிய வாய்ப்பைத் தரும். ஆகவே, இந்தக் கூட்டத்தில் இருக்கின்றவர்கள் எங்களுடைய உரையை எவ்வளவு சிறப்பாக ஒத்துழைத்துக் கேட்கிறீர்களோ, அதைவிட முக்கியம் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தோடு திரும்புங்கள்.
புத்தகத்தோடு திரும்பினால், உங்கள் வாழ்க்கை புத்தகமாக ஆகும்; புதிய அகமாக நல்ல உள்ளத்தோடு, மூடநம்பிக்கையற்ற, பழைமை பாசிகள் அகன்ற, மூடநம்பிக்கை கண்மூடி வழக்கங்களெல்லாம் மண் மூடிப் போகக்கூடிய
- ஒரு வெளிச்சம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இந்த நூல்கள் மூலமாகக் கிடைக்கும்.
நூலைப் படி! நல்ல நூலைப் படி...
ஏற்கெனவே நூல்களால்தான் நம்முடைய நாட்டில் தொல்லைகளே! அந்த நூல்களால் ஏற்பட்ட தொல்லைகளை,
இந்த நூல்கள்தான் மாமருந்தாக இருந்து போக்கக்கூடிய வாய்ப்பை அளிக்கும்.
ஆகவேதான்,
இந்த நூல்களை வாங்கிப் படிக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
அதுமட்டுமல்ல, புரட்சிக்கவிஞர்
அவர்கள்,
நூலைப் படி!
நல்ல நூலைப் படி
என்று ஒரு அழகான பாடலை எழுதியிருக்கிறார்.
இங்கே புலவர் சுப்பண்ணனார் அவர்கள், அவரைச் சார்ந்த தோழர்கள், வயது முதிர்ந்தவர்கள் இடையறாது புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பெயரால், ஒரு அற்புதமான பணிகளை நாமக்கல்லில் செய்து வருகிறார்கள்.
அது பாராட்டத்தக்க பணியாகும்.
அந்தப் புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்,
நூலைப் படி!
சங்கத் தமிழ் நூலைப் படி
முறைப்படி நூலைப் படி
காலையில் படி
கடும் பகல் படி
மாலை இரவு
பொருள் படும் படி
நூலைப் படி
பொய்யிலே கால்படி
புரட்டிலே முக்கால்படி
வையம் ஏமாறும்படி
வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி ......
நூலைப் படி முறைப்படி
நூலைப் படி
என்று.
புராணங்களைப்பற்றியெல்லாம் மிக அழகாக அந்தப் பாட்டில் சொல்லியிருப்பார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.
அவைகளையெல்லாம் பற்றி புரிந்துகொள்ளவேண்டுமானால்,
இந்த நூல்களையெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்களுக்கு விடியலைத் தரும்; அதுதான் உங்களுக்கு வெளிச்சத்தைத் தரும்
நோய் வந்தவர்கள் தலை சிறந்த மருத்துவர்களைத் தேடிச் செல்லும்பொழுது, அந்த நோய்க்கென்று இருக்கின்ற சிறப்பு மருத்துவர்களிடம் செல்வார்கள்.
அதுபோன்று,
மூட நம்பிக்கை நோய்க்கு, மதவெறி நோய்க்கு, பெண்ணடிமை நோய்க்கு தீர்வு வேண்டுமானால்,
அது பெரியார் என்ற மாமருத்துவருடைய மருந்துகளைத் தேடித்தான் செல்லவேண்டும்.
அதுதான் உங்களுக்கு விடியலைத் தரும். அதுதான் உங்களுக்கு வெளிச்சத்தைத் தரும். அதுதான் உங்களுடைய வலியை நீக்கும், காலங்காலமாக.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதைப்பற்றி எனக்கு முன்பாகப் பேசிய செயலவைத் தலைவர், பொருளாளர் எல்லோரும் சொன்னார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார். பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல. பெரியார் ஒரு சகாப்தம் என்று சொன்னார். ஒரு சகாப்தம் மட்டுமல்ல,
பெரியார் ஒரு திருப்பம்
- காலகட்டம் என்று சொன்னார்கள்.
தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம் -
கொள்கைகள் என்பவை எல்லா காலத்திற்கும் தேவை - ஆனால்,
முன்பு எப்பொழுதும் தேவைப்பட்டதைவிட,
இப்பொழுதுதான் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார் என்கிற நிலையை, இங்கே இருக்கின்றவர்கள் உணர்ந்திருக்கிறார்களோ என்னவோ,
நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.
இங்கு நாம் ஊதுவது போர்ச் சங்கு!
பெரியார் இப்பொழுது எங்கே சென்றிருக்கிறார்?
இமயத்திற்குப் பக்கத்தில் சென்றிருக்கிறார்!
பிகாரில் தேர்தல் நடைபெறவிருக்கிறது
- அங்கே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பார்ப்பனர்களுக்காக,
உயர்ஜாதிக்காரர்களுக்காக சமூகநீதியை குழிதோண்டி புதைப்பதற்காகத்தான் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் இது இரண்டாவது மண்டல் புரட்சி என்று லாலு பிரசாத் அவர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னால், அது பிகாருக்கு மட்டுமல்ல,
எல்லோருக்குமே தெரிய வேண்டிய செய்தி (அப்பொழுது 8 மணி ஆனதால், சங்கு ஊதப்பட்டது)
இங்கே ஊதப்பட்ட சங்கு 8 மணி சங்கு மட்டுமல்ல;
எச்சரிக்கை சங்காகும், அதனை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்குகின்ற திராவிடனைத் தட்டி எழுப்ப, சங்கு ஊதியாவது அவனை எழுப்பவேண்டும் என்று சொல்வதைப்போல,
இங்கே ஊதப்பட்டது 8 மணி சங்கு;
இங்கு நாம் ஊதுவதுப் போர்ச் சங்கு! - ஒரு சமுதாயத்திற்கு ஆகச் செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்த இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் என்ன நிலை என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைய இளைஞர்கள் ஏராளமானோர் படித்திருக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஒரு காலத்தில் இவர்கள் படிக்கவில்லையே என்று சொல்வதற்குப் பதிலாக, இவர்களுக்குரிய வேலை கிடைக்கவில்லையே என்று சொல்லக்கூடிய அளவிற்கு, தந்தை பெரியாரால், பாபா சாகேப் அம்பேத்கரால், பச்சைத் தமிழர் காமராசரால், திராவிடர் இயக்கத்தால் இந்தப் பெருமை ஏற்பட்டிருக்கிறது. கல்வி நீரோடை நாடெலாம் பாய்ந்தோடி யிருக்கிறது. இன்றைக்குத் திரும்பிய பக்கமெல்லாம் பொறியியல் கல்லூரிகள். மெட்ரிக்குலேசன் பள்ளிகள்,
பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. எங்கே பார்த்தாலும் செப்பனிடப்பட்ட சாலைகள். ஒரு காலத்தில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்கிற நிலை மாறி, பொறியியல் கல்லூரிகளில் லட்சம் இடங்கள் காலியாக இருக்கின்றன என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு இடங்கள் அதிகம்; அந்த அளவிற்கு மாணவர்கள் வரவில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு கல்வி நிலை பெருகியிருக்கிறது என்றால், நீங்கள் எந்தக் கட்சிக்காரர்களாக வேண்டுமானாலும் இருங்கள், அது உங்கள் உரிமை. யாருக்கு ஓட்டுப் போடுவது? தெரிந்தோ, தெரியாமலோ கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொறிந்துகொள்ளவேண்டுமானாலும், அது உங்கள் உரிமை. அருள்கூர்ந்து ஒன்றை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்,
இன்றைக்கு
80 விழுக்காட்டினர் படித்திருக்கிறார்கள்; அதிலும் பெண்கள் அதிகமாகப் படித்திருக்கிறார்கள். பெண்கள் மருத்துவர்களாக, பெண்கள் நீதிபதிகளாக,
பெண்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக, பெண்கள் வழக்குரைஞர்களாக,
பெண்கள் பொறியாளர்களாக ஆக எல்லாத் துறைகளிலும் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்றால்,
இவை எல்லாம் எப்படி நடந்தன நண்பர்களே,
பெரியார் பிறப்பதற்கு முன்! பெரியார் பிறந்ததற்குப் பின்! இப்படித்தான் வரலாற்றை எதிர்காலத்தில் கணிக்கப் போகிறார்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்தவேண்டியது நமது கடமை!
எதிர்கால வரலாறு என்பது ஏதோ காவி மயமாகத் திணிக்கப்பட்ட வரலாறாக இருக்காது; எதிர்கால வரலாறு பெரியாரை மய்யப்படுத்திய வரலாறாகத்தான் இருக்கும்.
பெரியாருக்கு முன் என்ன நிலை இருந்தது? நூறாண்டுகளுக்கு முன்பு என்ன நிலை இருந்தது? இன்றைய வாட்ஸ் அப் இளைஞர்களுக்கு இது தெரியாது; தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை. இணைய தளத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்குத் தெரியாது;
பேஸ்புக்கைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டு,
முகநூலில் மட்டுமே தங்கள் முகத்தைப் புதைத்துக் கொள்பவர்களுக்குத் தெரியாது.
ஆகவேதான்,
மோடி முகநூல் அலுவலகத்திற்கு ஓடிப் போய், முகநூலை சரிப்படுத்திவிட்டால், இவர்களை நாம் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று பிரதமர், மாற்றம் மாற்றம் என்று சொல்லி வருகிறார்.
ஆனால், முகநூல் பார்ப்பது தவறல்ல; நீங்கள் இணைய தளத்தில் மூழ்கியிருப்பது தவறல்ல; நீங்கள் டுவிட்டரில் மிகப்பெரிய அளவிற்கு ஈடுபாடு கொண்டிருப்பது தவறல்ல. ஆனால், உங்கள் வேர்கள் எப்படிப்பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள்.
வேர்களை அழிக்க - வேர்ப் புழுக்கள் உள்ளே நுழைந்திருக்கின்றன
ஒரு மரம் பச்சை பசேல் என்று இருக்கிறது;
கிளைகளில் கனிகள் காய்த்துத் தொங்குகின்றன. இவை எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. பழத்தைப் பலர் பறித்து சுவைக்கிறார்கள்;
அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், இந்தப் பழத்தை பறித்து சுவைக்கிறவர்களிலே பலர் எத்தனை பேர் அந்த மரத்தின் வேர் நன்றாக மண்ணில் வேரூன்றி ஒவ்வொரு பருவத்திற்கும் தவறாமல் அந்தக் கனியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அந்த மரம் என்று நினைக்கிறார்களா?
அருள்கூர்ந்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். நீங்கள் நினைக்கிறீர்களோ,
இல்லையோ,
தோட்டக்காரனுக்கு இருக்கின்ற கவலை, அந்த மரத்தினுடைய வேர்கள் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதுதான்.
அதுபோன்று திராவிடர் கழகத்துக்காரன் - ஒரு தோட்டக்காரன்;
தந்தை பெரியார் ஊன்றிய விதை இருக்கிறதே,
அது ஆல்போல் தழைத்து அருகுபோல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய கனிகள் இன்று பயன் தந்துகொண்டிருக்கிறது. ஆனால், வேரை அழிக்கவேண்டும் என்று வேர்ப் புழுக்கள் உள்ளே நுழைந்திருக்கின்றன.
வேரை வெந்நீர் கொட்டி அழிக்கவேண்டும்; அது வளர்ந்துவிட்ட மரமாக இருந்தாலும்கூட,
அதனை நாம் சாய்த்துவிடவேண்டும் என்கிற தொடர் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவேதான், இந்த இயக்கம் திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறது.
எதற்காக இந்த திராவிடர் விழிப்புணர்வு மாநாடு என்பதை எண்ணிப் பாருங்கள். விழித்தால்தான் நமக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். நம்முடைய சமுதாயத்திற்கு எவ்வளவு பெருமைகள்;
நாம் சாதாரண அன்னக்காவடிகளா?
இந்த நாட்டை ஆண்ட பரம்பரை என்கிற பெருமை உடையவர்கள் அல்லவா! ஆண்டவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுடைய காலடியில் வீழ்ந்தார்கள். பார்ப்பனியம் அவைகளையெல்லாம் அப்படியே விழுங்கிவிட்டது.
விழுங்கிக் கொண்டிருந்த பார்ப்பனியத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்த பெருமை தந்தை பெரியார் என்கிற தத்துவத்திற்குத்தான்; அந்த மாமருத்துவருக்குத்தான் உண்டு.
இன்றைக்கு எட்டி நில்! கிட்டே வராதே! தொடாதே!
என்று சொல்ல முடியுமா? ஆனால்,
ஒரு நூறாண்டுகளுக்கு முன்பாக, சொன்னார்களே! ஆதாரங்களோடுதான்
நாங்கள் பேசுவோம். 1899 சென்னை தலைநகரத்தில் ஒரு நாடக நோட்டீஸ் விளம்பரம்.
பஞ்சமர்களுக்கு இடமில்லை
சென்னையில், தலைநகரத்தில் லட்சுமி விலாஸ் நாடகக் கொட்டகை என்று ஒற்றைவாடை தெருவில் இருந்தது; நாமெல்லாம் பிறக்காத காலத்தில்.
ஒரு பெரிய நோட்டீஸ் அடித்து, அதில் அபிராம சுந்தரி சரிதம் நடக்கும் என்று விளம்பரம் எல்லாம் போட்டு, அந்தக் காலத்தில் அந்த நாடகம் பார்ப்பதற்கு மிகப்பெரிய அளவிற்கு இருக்கின்ற சேர் ஒரு ரூபாய்; கேலரி எட்டணா, தரைக்கு நாலணா என்றெல்லாம் போட்டு, கதை சுருக்கத்தைப் போட்டு கீழே போட்டிருப்பார்கள்; பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று போட்டிருப்பார்கள்.
அந்த நோட்டீசை நாங்கள் வைத்திருக்கிறோம்.
(பின் இணைப்பு காண்க) சுயமரியாதை இயக்கத்தினுடைய ஆவணக் காப்பகங்களில் இருக்கக்கூடிய பல்வேறு ஆவணங்களில் அந்த நோட்டீசும் ஒன்றாகும். காசு கொடுத்தால்கூட பஞ்சமருக்கு இடமில்லை. சில பேர் சொல்கிறார்கள்,
பொருளாதாரம் வந்துவிட்டால், ஜாதி ஒழிந்துவிடும்;
பொருளாதாரத்தில் உயர்ந்தால் ஜாதி ஒழிந்துவிடும் என்று. கண்டிப்பாக இல்லை. அதற்கு என்ன அடையாளம் என்றால், நூறாண்டுகளுக்கு முன்பாக அடித்த நோட்டீசே ஆதாரம்.
இன்றைக்கும் அந்த வருணாசிரம தருமம் மிகப்பெரிய அளவில் இருக்கிறதே! நாடகம் பார்க்கவேண்டுமானால்கூட,
ஜாதி சான்றிதழைக் காட்டவேண்டும்.
வசதி இருந்தாலும், பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று சொன்னார்களே!
இன்றைக்கு அப்படி நோட்டீசு அடிக்கக்கூடிய துணிவு, தைரியம் யாருக்காவது உண்டா? அப்படி அடித்தால் அவன் எங்கே இருப்பான்?
நாடகக் கொட்டகைகள் இருக்குமா?
நாடகத்தில் நடிப்பவர்கள் இருப்பார்களா?
காவல்துறைதான் சும்மா இருக்குமா?
இவையெல்லாம் எப்படி வந்தது? சரசுவதி பூஜை கொண்டாடியதால்தான் வந்ததா?
ஆயுத பூஜை கொண்டாடியதால் வந்ததா? காளியாத்தாளுக்கும், மாரியாத்தாளுக்கும் திருவிழா கொண்டாடியதால் வந்ததா? பெரியார்! பெரியார்!! பெரியார்!!! அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
பெரியார் என்ன செய்தார் என்று சிலர் கேட்கிறார்கள்,
பெரியார் வேறொன்றும் செய்யவில்லை,
நீ முழங்காலுக்குக்கீழே வேட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறாயே,
அந்த வேட்டியை மற்றவர்கள் உருவாமல் பார்த்துக் கொள்வதற்கு, பெரியாருடைய கைத்தடிதான் உனக்குப் பாதுகாப்பாக இருந்தது. தோளில் போட்டுக் கொண்டிருக்கிறோமே துண்டு,
நம்மால் எப்படி போட முடிந்தது என்று தெரியுமா?
இந்த மேடையில் அமர்ந்திருக்கிறவர்கள் அனைவரும் படித்திருக்கிறோமே, எல்லோருமே கல்லூரிக்குச் சென்று படித்திருக்கிறோமே,
பட்டங்கள் வாங்கியிருக்கிறோமே!
இப்பொழுது எவ்வளவு நீதிமன்றங்கள் இருக்கின்றன.
ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் என்றால், அய்யர், அய்யங்கார், சாஸ்திரிகள், சர்மாக்கள்தானே வழக்குரைஞர்களாக இருந்தார்கள். ஆனால், இப்பொழுது அந்த நிலை இருக்கிறதா? என்பதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெருமைப்படவேண்டிய ஒரு செய்தி
இப்பொழுது நம் சமுதாயத்தினர் பல பேர் மருத்துவர்களாக இருக்கிறார்கள். நான் இரண்டு நாள்களுக்கு முன்பாக கோவைக்குச் சென்றிருந்தேன்.
அங்கே ஒரு மருத்துவரைப்பற்றி கேள்விப்பட்டேன். பரமத்திக்குப் பக்கத்திலுள்ள ஒரு சாதாரண கிராமத்திலிருந்து, ஒரு எளிய தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படித்து மருத்துவராகியிருக்கிறார்.
அவருடைய பெயரைச் சொல்வதில் தவறில்லை. உலகப் புகழ்பெற்ற மருத்துவராக இருக்கிறார்.
இந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெருமைப்படவேண்டிய ஒரு செய்தி இது. அந்த மருத்துவரின் பெயர் டாக்டர் பழனிவேல். லேப்ராஸ்கோப்பி முறை என்கிற அறுவை சிகிச்சையில் ஒரு முறை இருக்கிறது. அந்தத் துறையில் அவர் எழுதிய பாட நூல் உலகப் புகழ்பெற்று,
லண்டன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில்,
கொரியா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எல்லாம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் எப்படி முடிந்தது? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே, அறிவை கொடுக்காதே!
இப்படி சொன்னது மனுதர்மம்.
இது எந்தக் காலத்திலேயோ இருந்ததுதானே,
இப்பொழுது அதற்கு என்ன? உங்களுக்கு வேற வேலையே இல்லையா சிலர் கேட்கலாம். வேறு வேலை இல்லை எங்களுக்கு,
இந்த வேலைதான்.
திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டை ஏன் நடத்துகிறோம்?
ஏன் இந்த வேலை என்றால், இப்பொழுது மத்தியில் மோடி ஆட்சி வந்த பிறகு என்ன சொல்கிறார்கள் என்றால், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சட்டம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொன்ன அந்த அரசியல் சட்டத்தைக் குழிதோண்டி புதையுங்கள் - அதற்கு விடை கொடுங்கள் என்று சொல்கிறார்கள். இப்பொழுது நாங்கள் திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டை ஏன் நடத்துகிறோம் தெரியுமா? மனுதர்மம் இந்திய அரசியல் சட்டமாக வரவேண்டும் என்று இன்று முயற்சிக்கிறார்கள்; அதனை ஒழிப்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு மாநாடுகளை நாங்கள் நடத்துகின்றோம்.
1937 ஆம் ஆண்டு ஜாதியை ஒழிக்க வழி என்ன? என்று பஞ்சாபில் ஜாதி ஒழிப்பு அமைப்பினர் மாநாடு ஒன்றை நடத்துவதற்காக அண்ணல் அம்பேத்கர் அவர்களை அழைக்கிறார்கள். அதற்காக, நீங்கள் எழுதி அனுப்புங்கள்,
அதை புத்தகமாக அச்சடிக்கவேண்டும் என்கிறார்கள். பேச்சை எழுதி அனுப்புகிறார். ஜாதி ஒழிப்பு சங்கமான ஜாக்பட் தோரக் மண்டல் என்று அந்த அமைப்புக்குப் பெயர் பஞ்சாப் மொழியில். அம்பேத்கர் எழுதி அனுப்பியதைப் பார்த்தார்கள்; அதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை.
ஜாதி ஒழிய கடவுளை ஒழிக்கவேண்டும்; பார்ப்பனர்களை ஒழிக்கவேண்டும்;
இந்து மதத்தை ஒழிக்கவேண்டும்; இந்து மதத்திற்கு ஆதாரமான கடவுள்களை ஒழிக்கவேண்டும். ஜாதிக்கு எவை எவை ஆதாரமோ அதையெல்லாம் ஒழிக்கவில்லையானால்,
ஜாதியை ஒழிக்கமுடியாது. இவையெல்லாம்தான்
அடிப்படையானது என்று அம்பேத்கர் அவர்கள் அந்தப் புத்தகத்தில் ஜாதி ஒழிப்பு என்பதைப்பற்றி Annihilation of Caste என்று தலைப்புப் போட்டு வந்த புத்தகத்தில்,
அவருடைய தலைமை உரை அது. அதைப் பார்த்தவுடன்,
அவர்கள் சொல்கிறார்கள், இவையெல்லாம் மிகவும் எதிர்ப்பை உண்டாக்கும்.
அதனால்,
இந்த இந்தப் பகுதிகளை யெல்லாம் நீங்கள் எடுத்துவிடவேண்டும். உங்களைத்தான் மாநாட்டிற்குத் தலைவராகப் போட்டிருக்கிறோம். நாங்கள் வேண்டுமானால் அந்தப் பகுதியை வெட்டி எடுத்துவிடுகிறோம்.
நீங்கள் வந்து உரையாற்றுங்கள்;
உங்களுக்குத்தான் சிறப்பு இடம் கொடுத்திருக்கிறோம் என்றார்கள்.
அந்த சங்கத்திற்குப் பெயர் என்ன? ஜாதி ஒழிப்பு சங்கம்.
நம்மாட்களில் பல பேர் சாதாரண விளம்பர வியாதி உள்ளவன் என்றால் என்ன நினைத்திருப்பார்கள்.
நீங்கள் எதை வேண்டுமானாலும் வெட்டிக் கொள்ளுங்கள்;
எனக்குத் தலைமைப் பதவி கொடுத்தால் போதும் என்று சொல்லியிருப்பார்கள்!
கொள்கை உறுதியாளர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்
ஆனால், அம்பேத்கர் அவர்கள் எப்படிப்பட்ட கொள்கை வாதி; எவ்வளவு பெரிய லட்சியவாதி என்பதற்கு அடையாளம், அவர் உடனே சொன்னார், என்னுடைய கருத்தை, நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக இருந்தால், நான் அந்த மாநாட்டிற்கு வருவேன். இல்லையென்றால்,
நான் அந்த மாநாட்டிற்கு வந்து உரையை நிகழ்த்துவதற்குத் தயாராக இல்லை. உங்களுடைய அழைப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்ன கொள்கை உறுதியாளர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
ஜாதியை ஒழிக்க வழி!
அதைத் தெரிந்துகொண்ட தந்தை பெரியார் அவர்கள், அம்பேத்கர் அவர்களுக்கு நேரிடையாக அறிமுகம் கிடையாது. உடனே அம்பேத்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அந்த ஆங்கில உரையை குடியரசுப் பதிப்பகத்திற்கு அனுப்புங்கள் என்று சொல்லி, அதை தமிழில் மொழி பெயர்த்து, நாலணாவிற்கு 1934இல் போட்டார்.
ஜாதியை ஒழிக்க வழி! என்ற நூலாகும். இப்பொழுது அதை பல பேர் வெளியிட்டிருக்கிறார்கள். (அதுதான் அம்பேத்கரை தமிழர்கள் முதன்முதலில் அறிய வாய்ப்பைத் தந்தது.)
மனுதர்மம் முதல் அத்தியாயம் 87ஆவது சுலோகம் அந்த பிரம்மாவானவர் என்று தொடங்குகிறது.
அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தை காப்பாற்றுவதற்காக முகம்,
தோள்,
தொடை,
பாதம் இவைகளின்றும் முறையே உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு ஜாதிகளை உருவாக்கினார்.
பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன்,
தொடையில் பிறந்தவன் வைசியன், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்று இம்மைக்கும்,
மறுமைக்கும் கருமங்களின்படி பகுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்னமும் பெரியார் ஏன் தேவைப்படுகிறார்? நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.
பகுத்தறிவுச் சிந்தனை வரவேண்டாமா?
விண்வெளி பயணம் சென்று வந்துவிட்டார்கள்.
நம்மாட்கள் நேற்றுவரை செவ்வாய் தோஷம், செவ்வாய் தோஷம் என்று சொன்னார்கள்.
விஞ்ஞானிகள் செவ்வாய்க்கோளுக்கே விண்வெளியை அனுப்பி விட்டார்கள்.
இப்பொழுதும் செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள்.
இன்னமும் அந்த மருந்து வேலை செய்யவில்லை என்றுதானே அர்த்தம். பகுத்தறிவு சிந்தனை வரவேண்டாமா?
மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாக்கவேண்டும் என்று இப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாம் கொஞ்சம் அசந்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு,
மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்கி விடுவார்கள். அதற்காகத்தான் பெரியார் தேவைப்படுகிறார். ஏன் கருப்புச் சட்டைத் தேவைப்படுகிறது?
ஏன் அம்பேத்கர் தேவைப்படுகிறார்?
அவரே ஒரு காலகட்டத்தில் சொன்னார், என்னை வாடகைக் குதிரையாக்கி,
என்னை வேலை வாங்கினார்கள் என்று.
உனக்கு அவசியம் வரும்பொழுது, பாரதம் எழுதவேண்டும் என்றால், ஒரு கீழ் ஜாதி வியாசன் தேவை.
உனக்கு இராமாயணம் எழுதவேண்டுமென்றால், கீழ்ஜாதிக்காரனான ஒரு வால்மீகி தேவை.
உனக்கு அரசியல் சட்டம் வேண்டுமென்றால்,
தாழ்த்தப்பட்டவனாகிய நான் தேவை என்றார் அம்பேத்கர்.
கீதை, கீதை என்கிறார்களே,
அதென்ன கீதை? கீதையைப்பற்றி பேசுகிறவர்கள்,
பார்ப்பனர்களில் நிறைய படித்தவர்கள்,
பேராசிரியர்கள் ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம்.
ஆனால்,
அதைத் தவிர கீதையில்
700 சுலோகங்கள் இருக்கின்றன. அந்த 700 சுலோகங்களைப் படித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்றால், சந்தேகம்தான்.
ஆனால், எல்லோரும் என்ன சொல்வார்கள், பகவான் கிருஷ்ணன் கீதையில் சொன்னபடி என்று மேற்கோள் காட்டுகிறார்கள்.
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்
நான்கு வகை ஜாதிகளை நானே உண்டாக்கினேன். அந்த வருண தருமத்தை நானே விரும்பினாலும்கூட மாற்ற முடியாது என்று சொல்கிறானாம்.
யார் யாருக்கு என்ன ஜாதி தொழிலோ அதைத்தான் செய்யவேண்டும் என்று சொல்வதுதான் கீதை.
மனுதர்மத்தில் குலதர்மம் என்று சொன்னார்களே,
அதை அப்படியே மிக நாசூக்காக அன்றைய காலகட்டத்தில் நேரிடையாக செயல்படுத்தினார்கள்.
இன்றைக்கு பின்புலத்தில் இருந்து செயல்படுகிறார்கள்.
ஆக பார்ப்பனியத்தினுடைய பணி என்னவென்று வரலாற்றில் பார்த்தால், தெளிவாகத் தெரியும்.
பெரியார் கொடுத்த குரலால்தான் குலக்கல்வி திட்டம் ஒழிந்தது!
ராஜாஜி அதைத்தான்
1952இல் செய்தார், அவனவன் அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும். அரை நேரம் படிப்பு; அரை நேரம் வேலை. சிரைப்பவன் பிள்ளை சிரைக்கவேண்டும்; வெளுக்கிறவன் பிள்ளை வெளுக்கவேண்டும் என்று ஒரு புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அன்றைக்குப் பெரியார் கொடுத்த குரல் இருக்கிறதே, அதுதானே குலக்கல்வி திட்டத்தை ஒழித்தது. இன்றைக்கு நம் ஆள் முத்தன் மகன் முனியன், வெளிநாட்டில் பணியாற்றுகிறாரே,
இவையெல்லாம் எப்படி வந்தது? பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள் அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததால்தான், இன்றைக்கு குப்பன் மகன் சுப்பன் சுவிட்சர்லாந்தில் கணினி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
பெரியார் என்கிற மூச்சுக்காற்று
திராவிட சமுதாயத்திற்கு எப்பொழுதும் தேவை!
மீண்டும் குலக்கல்வித் திட்டம் வந்தால் என்னாகும்? நம் ஆட்கள் படிக்கத்தான் முடியுமா? பணிக்காக வெளிநாட்டிற்குச் செல்லத்தான் முடியுமா? எனவே, இந்த இயக்கம் என்பது இருக்கிறதே,
எப்போதும் தேவைப்படுகின்ற இயக்கம். எப்படி மூச்சுக்காற்று எப்பொழுதும் தேவையோ, அதுபோன்று பெரியார் என்கிற மூச்சுக்காற்று இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு, திராவிட சமுதாயத்திற்கு எப்பொழுதும் தேவை.
எந்தக் காலத்திலும் ஆபத்து வந்துகொண்டே இருக்கிறது. இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்கிறார்களே,
மறுபரிசீலனை செய்யவேண்டும் என்கிறார்களே!
அந்த இட ஒதுக்கீடு இருப்பதினால்தானே இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் ஒன்றிரண்டு பேர் மேலே வந்திருக்கிறார்கள். எங்கள் விகிதாச்சாரத்திற்கு நாங்கள் இன்னும் வரவில்லையே!
ஒடுக்கப்பட்டவன்,
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் உண்டா?
எவ்வளவு பெரிய சட்டத்தை நிறைவேற்றினாலும்,
அந்தச் சட்டம் செல்லாது என்று ஒரு சிவப்புக் கோடு போடுகின்ற அதிகாரம் இன்றைக்கு யாருக்கு இருக்கிறது தெரியுமா? உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கிறது.
இன்றைக்கு நாட்டையே யார் ஆளுகின்றார்கள் என்றால், அமைச்சர்கள் ஆளவில்லை, நீதிமன்றங்கள்தான் ஆளுகின்றன. நீதிமன்றங்கள்தான் உத்தரவிடுகின்றன.
நாட்டில் எந்தப் பிரச்சினையானாலும் பொது நல வழக்குகளைப் போட்டு நீதிமன்றங்களைத்தான் நாடுகின்றனர். கடைசியாக உச்சநீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான் தீர்ப்பு சொல்கிறார்கள்.
அருமைப் பெரியோர்களே, நீங்கள் எந்தக் கட்சிக்காரராக வேண்டுமானாலும் இருங்கள்; இந்தக் கேள்வியை வேறு எந்த மேடையிலாவது, வேறு யாராவது கேட்டிருப்பார்களா? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் இருக்கிறார்கள்.
அதில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி யாராவது உண்டா? அல்லது மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இருந்தால்தானே, உச்சநீதிமன்ற நீதிபதியாகச் செல்ல முடியும் என்று நீங்கள் யாராவது குறுக்குக் கேள்வி கேட்க முடியுமா?
தந்தை பெரியார் உழைப்பினால் விளைந்த பலன்!
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டாலோ,
உயர்நீதிமன்றத்தில்,
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 10
பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள்.
தந்தை பெரியார் உழைப்பினால் இந்தப் பலன் விளைந்தது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்குத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் இல்லை. பல உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இல்லை என்கிற நிலைதான். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதிகளாவது இருக்கிறார்களா?
கிடையவே கிடையாது. அத்தனை பேரும் உயர்ஜாதிக்காரர்களாகவே உள்ளனர்.
அதற்குத்தகுந்தபடி நீதி வளைகிறது; நீதி எப்படி போகிறது என்பதைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. அதுபற்றி பேசவேண்டுமானால்,
நீண்ட நேரமாகும். ஆகவே, பெரியார் நீண்ட நாள்களுக்கு முன்பாகவே சொன்னார், நீதி கெட்டது யாரால்? என்று தனி புத்தகமே போட்டிருக்கிறோம்.
பெரியார் சொல்லாத விஷயமே இல்லை. அதனால்தான், கண்ணதாசன் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார் என்று. நீதிமன்ற நீதிக்கும் நீதி சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில், இன்றைக்கு சமூகநீதி, இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறதா?
அதற்குக் காரணம் என்ன? சூத்திரனுக்கு,
நாலாம் ஜாதிக்காரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே!
என்று மனுதர்மம் கூறுகிறது.
அதை மீறி, இந்த இயக்கம் வந்ததினால்தானே இப்பொழுது எல்லோரும் படித்திருக்கிறீர்கள்.
நாளைக்கு மனுதர்மம் இந்திய அரசியல் சட்டமாகக் கொண்டு வரப்பட்டால் என்னாகும்? வெளிப்படையாகவே சொன்னார்களே,
கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி அசோக் சிங்கால், சுஷ்மா சுவராஜை முன்னிலையில் வைத்துக்கொண்டு, தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்;
அந்தத் தீர்மானம் என்னவென்றால்,
இப்பொழுதுள்ள இந்திய அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு,
மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டமாக்கவேண்டும் என்று.
அப்படி மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டமாக்கினால் என்னாகும்?
சூத்திரன் கீழான ஜாதி.
தந்தை பெரியார் அவர்கள் கூட்டத்தில் உரையாற்றி முடித்தவுடன் ஒருவர் சீட்டெழுதிக் கொடுத்தார். அந்தச் சீட்டில், அய்யா நீங்கள் இங்கே சொன்னீர்கள், தலை, தோள், தொடை,
காலில் பிறந்தவர்கள் என்று சொன்னீர்கள், நான் பஞ்சம ஜாதியைச் சேர்ந்தவன்.
நாங்கள் எங்கே பிறந்தவர்கள் என்று சொல்லுங்கள் என்று.
உடனே தந்தை பெரியார் அவர்கள் பளிச்சென்று சொன்னார், நீங்கள்தான் முறையாக அப்பா, அம்மாவுக்கு பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்தவர்கள் என்றார்!
கடவுளை அசிங்கப்படுத்துகிறவர்கள் அவர்கள்தான். நாங்களா கடவுளை அசிங்கப்படுத்துகிறோம். நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள், கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்,
அவர்கள் சொன்ன இடத்தில் எல்லாம் பிறக்க முடியுமா? என்று.
எங்களைப் பார்த்து சிலர் கேட்பார்கள்,
இந்து மதத்தை மட்டுமே தாக்கிப் பேசுகிறீர்களே என்று. நீ இந்து என்றால், நான் இந்து இல்லையா! எனக்குப் புத்தி வந்தது; இந்து என்றால் அசிங்கமாக இருக்கிறது என்கிறேன், நீ இல்லை என்கிறாய். உனக்கு இன்னும் புத்தி வரவில்லை.
பெண் கேலி (ஈவ்டீசிங்)
தவறு என்று எல்லா கல்லூரிகளிலும் எழுதிப் போட்டிருப்பார்கள். இந்தப் பெண் கேலிக்கு யார் முன்னோடி? படக் கதையில் போட்டிருப்பார்களே, கோவில்களில் போட்டிருப்பார்களே!
பகவத் கீதை எழுதிய பகவான் கிருஷ்ணன் ஆதிகாலத்தில் என்ன செய்தார், வாலிப பருவத்தில் என்ன செய்தார்? பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பார்கள்; கரையோரத்தில் சேலைகளையெல்லாம் வைத்திருப்பார்கள். இவன் அந்தச் சேலைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு,
மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு இருப்பார்.
இந்தப் படத்தை அவர்கள்தான் அச்சடித்திருக்கிறார்கள்; இதை நாங்கள் போடவில்லை.
பெரியாரா அச்சடித்தார்? இல்லை விடுதலையா அச்சடித்தது? முரசொலியா அச்சடித்தது?
நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள், எங்கள்மேல் ஏன் கோபப்படுகிறீர்கள். எக்ஸ்ரே கருவி உடைந்த எலும்பைக் காட்டினால், அந்தக் கருவியை யாராவது உடைப்பார்களா?
நீ ஏன் உடைந்த எலும்பை காட்டுகிறாய் என்று. அப்படி அது காட்டினால்தானே, உடைந்த எலும்பை சரி செய்ய முடியும்.
மரத்தில் ஏறி உட்கார்ந்த கண்ணன், புல்லாங்குழலை எடுத்து வாசித்தானாம்;
அப்பொழுது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள், அய்யோ,
கிருஷ்ணா!
உடைகளைக் கொடுத்துவிடு! என்று கடவுளிடம் கெஞ்சுகிறார்களாம்.
உடனே கண்ணன், கைகளைத் தூக்கிக்கொண்டு தண்ணீரை விட்டு வெளியே வாருங்கள் என்று சொன்னானாம்.
இதுதான் கடவுளின் யோக்கியதையா? இந்தக் கடவுள்தான் சொன்னானாம், நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன்.
அதை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று.
இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்தில் உள்ளது?
அப்பொழுதுதான் பெரியார் கேட்டார், பெரியாருக்கும், கடவுளுக்கும் சண்டையா,
சச்சரவா?
எங்களுக்கும்,
கடவுளுக்கும் எந்த சண்டையும் கிடையாது. இருக்கின்றவனிடம்தான் சண்டை போட முடியும். இல்லாதவனிடம் சண்டை போட முடியுமா? இதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.
ஆகவே,
பெரியார் ஏன் கடவுளைப்பற்றி பேசினார். ஏன் புராணத்தைப்பற்றி பேசினார். ஏன் இந்து மதத்தைப்பற்றிப் பேசினார்.
பிறக்கும்பொழுதே இவன் கீழ்ஜாதி, இவனுக்குப் படிப்பை கொடுக்காதே என்று இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்தில் உள்ளது?
அதற்குப் பரிகாரம் தேடுவதற்குத்தானே இட ஒதுக்கீடு; எந்த வழியாக நாம் சிறைச்சாலைக்குள் சென்றோமோ, அந்த வழியாகத்தானே நாம் விடுதலை பெற்று வரவேண்டும்.
குறுக்கு வழியில் சுவர் ஏறி குதித்தால் விட்டுவிடுவார்களா? அதைத்தானே தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
எனவேதான், பண்பாட்டின் மீட்டுருவாக்கம் என்று சொன்னார். எனவே,
இந்த இயக்கம் என்பது இருக்கிறதே நண்பர்களே,
இந்த சமுதாயத்தில் இருக்கின்ற இழிவைத் துடைத்தெறிவது.
இந்த இயக்கம் இல்லாவிட்டால்,
இன்றைக்கு உங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பில்லாமல் போயிருக்கும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்களே,
அது இந்த இயக்கத்தினால் விளைந்த பலன்தானே!
இட ஒதுக்கீட்டின் வரலாறு எல்லாம் இன்றைய வாட்ஸ் அப் இளைஞர்களுக்குத் தெரியாதே! இந்த வரலாறெல்லாம் பேஸ்புக் இளைஞர்களுக்குத் தெரியாதே! அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டினுடைய நோக்கம்; அதுதான் இந்த திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டினுடைய குறிக்கோளாகும்.
வேர் மண்ணில் புதைந்திருக்கும்; அந்த வேர் மீது அக்கறை இருக்கவேண்டுமானால், தண்ணீர் ஊற்றவேண்டும். வேர்ப்புழுவின் பாதிப்பு வராமல் பாதுகாக்கவேண்டும் அந்த வேரை!
மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
பா.ஜ.க.விற்கு அரசியல் ரீதியான முதலாளி யார் என்றால், ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பு.
அந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெருமை என்னவென்றால், இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு இருக்கிறது என்றால், அது ஆர்.எஸ்.எஸ்.
என்பது யாரும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.
காந்தியாரைக் கொன்ற கோட்சே பயிற்சி எடுத்த ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பு,
காமராசரை உயிரோடு கொல்ல முயன்ற அமைப்பு. இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா?
இன்றைக்கு அவை எல்லாவற்றையும் மறைத்துவிட்டு,
மாற்றம்,
மாற்றம் என்று சொன்னார்கள்.
காங்கிரஸ் மேலிருந்த கோபத்தால்,
மாற்றி வாக்களித்தார்கள். ஆனால், இன்றைக்கு வந்த மாற்றம் என்னவென்றால், ஏமாற்றம்தான் மிச்சம்.
சோனியா காந்தி பிகாரில் என்ன பேசினார்கள்? எங்களுக்குச் சுயமரியாதை முக்கியம் என்றுதான் பேச வேண்டியுள்ளது.
யாராக இருந்தாலும், கடைசியில் தந்தை பெரியாரின் கொள்கைக்கு வந்தாகவேண்டும்.
ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்,
தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைபெறுகிறது. அப்படி போராடிப் போராடி, எல்லாக் கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது?
கருப்புச் சட்டைத்தான் அதற்கு மருந்து. நெருக்கடி வந்தால், அதற்குத் தீர்வு கருப்புச்சட்டைதான்.
அதிலேயும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அய்யப்பன் கருப்புச் சட்டை இருக்கிறது;
அது சீசன் சட்டை. அய்யோ அப்பா! அய்யோ அப்பா என்கிறார்கள். ஹரிகர புத்திரா என்கிறார்கள். அதனை நாங்கள்தான் விளக்கினோம், ஹரி என்றால் விஷ்ணு; ஹரன் என்றால், சிவன்.
விஷ்ணுவிற்கும்
- சிவனுக்கும் எப்படி பிள்ளை பிறக்க முடியும்? அதனை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும் பிள்ளை பிறக்குமா? இதைத்தானே ஊர் முழுவதும் கத்திக்கொண்டு சுற்றி வருகிறார்கள்.
ஹரிஹர புத்திரா! ஹரிஹர புத்திரா! என்று.
இதனை விளக்கிச் சொன்னால், உங்களுக்குச் சங்கடமாகத்தான் இருக்கும்.
இன்றைக்குக் குஜராத் நிலைமை என்ன? இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் குஜராத்தில் உள்ள பட்டேல் சமுதாயத்தினர்.
ஆனால்,
இன்றைக்கு அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஹர்தீக் பட்டேல் என்கிற இளைஞனின் தலைமையில் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
பட்டினியாக இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்
இட ஒதுக்கீட்டை,
வகுப்புவாரி உரிமைப்படி எல்லோருக்கும் கொடுப்பதில், பெரியாருக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால், இருப்பது கொஞ்சம்தான். சாப்பிடவேண்டியவர்கள் நிறைய பேர். டிமாண்ட் அன்ட் சப்ளை என்று சொல்கிறார்களே,
பொருளாதாரத்தில்
- அதுபோன்று,
சப்ளை குறைவாக இருக்கிறது;
டிமாண்ட் அதிகமாக இருக்கிறது.
அப்படி இருக்கையில், அதனை யாருக்குக் கொடுப்பது? நீண்ட நாள்களாக சாப்பிட்டு சாப்பிட்டு பெருத்துப் போயிருப்பவர்களுக்குக் கொடுப்பதா? சாப்பாடு என்றாலே என்னவென்று நீண்ட நாள்களாகப் பார்க்காமல் பல நாள்கள் பட்டினியாக இருக்கிறார்களே அவர்களுக்குக் கொடுப்பதா?
என்கிற நிலை வரும்பொழுது,
பட்டினியாக இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று சொல்வதுதான் சமூகநீதி, இட ஒதுக்கீடு. இதைச் சொன்னதுதான் நீதிக்கட்சி; இதைத்தான் சொன்னது திராவிடர் கழகம். பெரியார் காங்கிரசை விட்டு வெளியே வந்ததே இதற்காகத்தான்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில்
69 சதவிகிதம் என்பது சட்டமாக்கப்பட்டு விட்டது.
பெரியார் காலத்தில்கூட இந்த நிலைமை இல்லை. பெரியாருடைய தொண்டர்கள் - பெரியாருடைய பணியைச் செய்ததினால் ஏற்பட்டிருக்கிறது.
ஏனென்றால்,
பெரியார் என்பது வெறும் உருவமல்ல; பெரியார் என்பது தத்துவம், ஒரு காலகட்டம்,
ஒரு திருப்பம். ஆகவே, பெரியாருடைய அந்தப் பணி வளர்ந்து, உத்தரப்பிரதேசம் மற்ற மாநிலங்களிலும் பரவியிருக்கிறது.
மண்டல் காற்று வீசுகிறது என்றார், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் ஊர்வலம் நடத்தினோம்;
அந்த ஊர்வலத்தில் முழக்கம் எழுப்புவோம்; அந்த முழக்கம் என்னவென்றால், கான்ஸ்டபிள் எல்லாம் நம்மாளு; அய்.ஜி., அய்.பி.எஸ். எல்லாம் அவாளா? என்று.
ஆனால், இன்றைய நிலைமை என்ன? நம்மாள்கள் எல்லாம் காவல்துறையில் உயரதிகாரிகளாக இருக்கிறார்கள்!
ஒருமுறை அய்.ஏ.எஸ்.
அதிகாரிகள் பெரியாருக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நன்றிப் பெருக்கோடு பெரியாரை அழைத்து, சென்னையில் ஒரு விழாவை நடத்தி, அய்யா நீங்கள் இல்லையானால்,
நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்று நன்றியுணர்ச்சியோடு சொன்னபோது,
அய்யா அவர்கள் என்ன சொன்னார் தெரியுமா?
நீங்களெல்லாம் ஏதோ வந்திருக்கிறீர்கள் சரி! நீங்கள் சொன்ன பாராட்டுரை என் காதில் ஏறவில்லை; நான் என்ன நினைக்கிறேன் என்றால், இந்த உயர்நீதிமன்றம் இருக்கிறதே 110 ஆண்டாகி இருக்கிறதே
(அப்போது)
இதுவரையில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர்கூட நீதிபதியாக வரவில்லை. அது ஏன்? உங்களுக்குத் தகுதி இல்லையா? திறமை இல்லையா? ஆற்றல் இல்லையா? அந்தக் கவலைதான் எனக்கு. அதற்காக இனி நான் போராடுவேன் என்று அய்யா அவர்கள் சொன்னார்.
அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார்.
இந்த ஆட்சி கண்டிப்பாக அதனைச் செய்யும், இந்த ஆட்சி செய்யாமல் வேறு எந்த ஆட்சி செய்யும் என்று அய்யா அவர்கள் பேசிவிட்டு வந்தார்.
அய்யா அவர்கள் என்னை அழைத்து, விடுதலையில் தலையங்கம் எழுதுங்கள் என்று கூறினார்.
உடனடியாக விடுதலையில் தலையங்கத்தை எழுதினோம்.
கலைஞர் அவர்கள் விடுதலை தலையங்கத்தைப் படித்து முடித்துவிட்டு, சட்ட அமைச்சர் மாதவனை உடனே அழைக்கிறார், பட்டியலை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்கிறார்.
மாவட்ட நீதிபதிகள் யார்? யார்? என்கிறபோது, வரிசையில் 12 ஆவது இடத்திலுள்ள ஜோலார்பேட்டையைச் சேர்ந்த,
ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் மாவட்ட நீதிபதியாக இருக்கிறார்.
உடனே தலைமை நீதிபதி வீராசாமியிடம் பேசச் சொன்னார்.
சமூகநீதி அடிப்படையிலே வரதராஜன் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது என்று வலியுறுத்தப்பட்டது.
12 ஆவது இடத்திலிருந்த மாவட்ட நீதிபதி வரதராஜன் உயர்நீதிமன்ற நீதிபதியாக 1971 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார்.
பிறகு அவரே, உச்சநீதிமன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாகவும் உயர்ந்தார்.
பார்ப்பான் ஏன் தி.மு.க.வை வெறுக்கிறான்?
பார்ப்பானுக்கு என்ன கோபம்? ஆரியத்திற்கு என்ன கோபம்? அக்கிரகாரத்திற்கு என்ன கோபம் கலைஞர் மேல்? தி.மு.க.
மேல்?
பெரியாரின் சாதனை!
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதி மேலே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், 80 வயது பார்ப்பான் வழக்குரைஞராக இருக்கிறான். அந்த வழக்குரைஞர் வாதாடும்போது என்ன சொல்லி வாதிடவேண்டும்,
ஓ, மை லார்ட்! அதைச் சொல்லித்தானே ஆரம்பிக்கிறார்கள்.
ஓ,
என் கடவுளே, கடவுளுக்குச் சமமானவரே என்று சொல்லித்தானே ஆரம்பிக்கவேண்டும். ஓ தாழ்த்தப்பட்டவனே!
என்று சொல்ல முடியுமோ?
பார்ப்பானேயே சொல்ல வைத்தாரே அதுதானே பெரியாரின் சாதனை! இதுதானே ரத்தம் சிந்தாதபுரட்சி!
இதுதானே திராவிட இயக்கத்தின் சாதனை!
அவன் என்ன மகிழ்ச்சியாக அந்த வார்த்தையைச் சொல்லுவானா?
உள்ளுக்குள்ளே என்ன நினைத்துக் கொண்டு சொல்வான் -
பெரியார் ஒழிக! கலைஞர் ஒழிக! தி.மு.க.
ஒழிக!
திராவிடர் கழகம் ஒழிக! என்று நினைத்துக் கொண்டுதானே,
ஓ மை லார்ட்! என்று சொல்லுவான்.
அவன் என்ன நினைக்கிறான் என்பது நமக்கு முக்கியமல்ல,
அவன் அப்படி நினைக்க நினைக்க இந்த இயக்கம் வெற்றி பெறுகிறது என்பதுதான் முக்கியம்!
நீண்ட நாள்களுக்கு முன்பு, பழனியில் பார்ப்பனர்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.
அதில்,
பாப்பாத்திக்களும் கலந்துகொண்டனர். அந்த ஊர்வலத்தில் எனக்குப் பாடை கட்டி தூக்கினார்கள்.
பழனியில் பாடை கட்டி தூக்கிய பார்ப்பனர்கள்!
அந்த ஊர்வலம் நடைபெற்று ஒரு 10 நாள்கள் கழித்து அங்கு சென்றேன், என்னிடம் செய்தியாளர்கள்,
என்னங்க உங்களுக்குப் பாடை கட்டித் தூக்கினார்களே,
பிராமண சங்கத்தினர் அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று.
வரவேற்கிறேன், மிகவும் மகிழ்ச்சி என்றேன்.
பார்ப்பான் வீட்டில் சாவு விழுந்தால்,
அவர்கள் தூக்கமாட்டார்கள்; அதற்குப் பதிலாக சவுண்டி பார்ப்பான்களை வைத்துத்தான் தூக்குவார்கள்.
பார்ப்பனர்கள் வீட்டில் யாராவது இறந்துபோனால், சவுண்டி பார்ப்பானை வைத்துத் தூக்குகின்ற பார்ப்பனர்கள், ஒரு சூத்திரன்
(எனது)
பாடையைத் தூக்கினார்கள் என்றால், பெரியார் வெற்றி பெற்றார் என்றுதானே அர்த்தம். ஜாதி ஒழிந்துபோனது என்றுதானே அர்த்தம். எனக்கு மிகவும் சந்தோசம் என்றேன் செய்தியாளர்களிடம்!
பெரியார் எப்படி எங்களை வளர்த்திருக்கிறார் என்றால், அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல்,
எதிர்க்க எதிர்க்க நாங்கள் உயருவோம். அதனால்தான் இன்று பெரியார் அவர்கள் உலகளாவிய பெரியாராக இருக்கிறார்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில்
69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால், திராவிடர் கழகம் எழுதி கொடுத்த சட்டம்தானே அது. அதனுடைய வரலாறு இன்றைய இளைஞர்கள் பல பேருக்குத் தெரியாதே! நீங்கள் எந்தக் கட்சிக்காரராகவாவது இருங்கள்;
பா.ஜ.க.வோ,
ஆர்.எஸ்.எஸ்.சோ,
யாராக இருந்தாலும் நாங்கள் யாரையும் எதிரி என்று கருதுவதில்லை.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு,
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இன்றைக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது என்றால், அதன் காரணமாக அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக நம்மாட்கள் வருகிறார்கள் என்றால், அந்த
69 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தானே!
இந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டார்கள் என்றால், நம்மாட்கள் உயர முடியுமா? அதற்குக் குரல் கொடுக்க இந்த இயக்கம் தேவையில்லையா?
பெரியார் தேவைப்படவில்லையா? பெரியார் என்கிற மாமருந்து இருந்தால்தானே வேர்ப்புழுக்களை எல்லாம் அழிக்க முடியும்.
மூன்று பார்ப்பனர்களை வைத்து நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட்டம்!
முதன்முதலாக இட ஒதுக்கீட்டுக்காக அரசியல் சட்டத்தில் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் ஒரு சட்டம் இடம்பெற்றது என்றால், தமிழ்நாட்டிலுள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்தான். அந்தச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை நிறைவேற்றியவர் யார்? இன்றைய முதலமைச்சராக உள்ள ஜெயலலிதா அவர்கள்தான்.
பெரியார் அவர்களுடைய காலத்திற்குப் பின்பு, பெரியார் தொண்டர்களுடைய சாதனை - பெரியாருடைய பணியின் சிறப்பு அது. பெரியாருக்கு அதுதான் உண்மையான பெருமை!
அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் யார் தெரியுமா? காங்கிரஸ் தலைமையில் இருந்த நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். நரசிம்மராவ் யார் தெரியுமா? அவர் ஒரு ஆந்திரப் பார்ப்பனர்.
அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள். இவர் உத்தரப்பிரதேச பார்ப்பனர் ஆவார்.
குடியரசுத் தலைவர் பார்ப்பனர்; பிரதமர் பார்ப்பனர்;
முதலமைச்சர் பார்ப்பனர் என்றாலும் பெரியார் வென்றார். சமூகநீதியை சாய்க்க முடியவில்லை.
அதனால்தானே தமிழ்நாட்டில் இன்றைக்கு
69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இருக்கிறது.
இவ்வளவு பேரையும் வைத்து வேலை வாங்கி, இன்றைக்கு இட ஒதுக்கீட்டின் பயனை நீங்கள் அனுபவிக்கின்றீர்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த இயக்கம் தோழர்களே!
நீங்கள் மானத்தோடு இருங்கள்; சூத்திரப்பட்டத்தைத் தாங்கிக் கொண்டு இருக்காதீர்கள்
அதற்காக எங்களை சட்டசபைக்கு அனுப்புங்கள் என்று உங்களைக் கேட்கிறோமா? எங்களை அமைச்சராக்குங்கள் என்று கேட்கிறோமா?
நீங்கள் மானத்தோடு இருங்கள் என்று கேட்கிறோம்.
நீங்கள் சூத்திரப்பட்டத்தைத் தாங்கிக் கொண்டு இருக்காதீர்கள் என்று சொல்கிறோம்.
நீங்கள் மனிதர்களாக இருங்கள் என்று சொல்கிறோம்.
உழைக்காத சோம்பேறிப் பயல் பார்ப்பான்;
உழைக்கின்ற என் சகோதரன் ஏன் அவன் பறையன்? எதற்காக அவன் தோட்டி? எதற்காக அவன் பள்ளன்? எதற்காக அவனைத் தொடாதே, எட்டி நில்! என்கிறீர்கள்!
மலத்தை மிதிக்கிறார்கள்,
மிதித்த இடத்தை மட்டும் கழுவிக் கொள்கிறார்கள்;
சகதியை மிதிக்கிறார்கள், அந்த இடத்தை மட்டும் தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள். என்னுடைய சகோதரன் இந்த நாட்டின் மண்ணுக்குரிய மைந்தன், அவன் உழைப்பு இல்லாவிட்டால்,
நீ மனிதனாக இருக்க முடியாது. நீ சக்கிலி பையன் என்று கேவலமாகப் பேசுகிறாயே,
அவன் செருப்பு தைத்துக் கொடுப்பதால்தான், நீ கால் சூட்டைத் தாங்கிக் கொள்கிறாய்.
ஜாதியை மூலதனமாக வைத்துக்கொண்டு வித்தை காட்டுகிறார்கள்
ஜாதி, ஜாதி என்று சொல்லி ஜாதியைப் பிரித்து, நம்மை எவ்வளவு அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
அய்யா சொல்வார், மலம் எடுக்கின்றவர்களுக்கு நாற்றம் தெரியாது; பழகிப் போனதால் என்பார். அதுபோன்று நிறைய பேருக்கு இந்த ஜாதியில் இருந்ததினால், அது பழகிப் போயிற்று. இப்பொழுது அந்த ஜாதி உடைகிறது என்றதும், அந்த ஜாதியை மூலதனமாக வைத்துக்கொண்டு வித்தை காட்டுகிறார்கள்.
இப்பொழுது புதிதாக ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கவுரவக் கொலை என்று. ஒரு ஜாதியில் உள்ள பெண் இன்னொரு ஜாதியில் உள்ள இளைஞரைக் காதலித்தால்,
அந்தப் பெண்ணை கொலை செய்யவேண்டும்; அதற்குப் பெயர் கவுரவக் கொலையாம். ஜாதி என்பதற்கு அறிவியல் பூர்வமான அடிப்படை ஆதாரங்கள் உண்டா?
இப்பொழுது உடல் உறுப்புக் கொடையளிக்கிறார்கள்;
பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகம் என்று வைத்திருக்கிறோம்.
இறந்ததும் உடலைக் கொடையாக மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கலாம். இப்பொழுது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தால்,
அவரின் உறுப்புகளைக் கொடையாக அளிக்க முன்வருகிறார்கள்.
குருதிக் கொடை அளிக்கிறார்கள்;
விழிக்கொடை கொடுக்கிறார்கள்.
சாதாரணமாக விபத்துகள் நடக்காத நாளே கிடையாது; நெடுஞ்சாலையில் ஒரு விபத்து நடக்கிறது;
அந்த விபத்தில் அடிபட்டவர் ஒரு அய்யங்கார்;
அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்கிறார்கள்;
அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும்;
அதற்காக ரத்தம் தேவைப்படுகிறது என்று மருத்துவர் சொல்கிறார். உடனே அந்த அய்யங்காரிடம் உங்கள் ரத்த குரூப் என்ன என்று கேட்டால், அய்யங்கார் ரத்தம் என்றா சொல்வார்? ஏ-1
பாசிட்டிவ் ரத்தம் என்று சொல்கிறார் அந்த அய்யங்கார்.
நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று!
உடனே மருத்துவமனையிலிருந்து விளம்பரம் கொடுக்கிறார்கள்,
ஏ-1
பாசிட்டிவ் ரத்தம் தேவை என்று.
அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு, ஒரு இளைஞர் வருகிறார்; என்னுடைய ரத்தம் ஏ-1 பாசிட்டிவ்தான்; நான் இதற்குமுன் பலமுறை ரத்தம் கொடுத்திருக்கிறேன்; இது ஏழாவது முறையாகக் கொடுக்க வந்துள்ளேன் என்று சொல்கிறார்.
அய்யங்கார் அவர்கள் மருத்துவரிடம் கேட்கிறார்,
டாக்டர்,
உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொன்னீர்களே, ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இல்லை, உங்களிடம் அனுமதி கேட்கவேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம் என்று மருத்துவர் சொன்னார்.
மருத்துவரோ, ரத்தம் கொடுக்க வந்திருப்பவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்; ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்; அவர்களைத் தொட்டாலே தீட்டு என்று சொல்வீர்களே; தலையிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கொள்வீர்களே!
உங்கள் அனுமதியில்லாமல், அவருடைய ரத்தத்தை உங்கள் உடம்பில் ஏற்றலாமா? அதற்காக உங்களிடம் அனுமதி கேட்க வந்தோம் என்று மருத்துவர் சொல்கிறார்.
அய்யங்கார் என்ன, இல்லை இல்லை, நான் செத்தாலும் பரவாயில்லை என்றா சொல்வார்?
உடனே அய்யங்கார் மருத்துவரின் கையைப் பிடித்துக் கொண்டு, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று! இப்பொழுதெல்லாம் இதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்?
என்று சொல்வார்.
ஏனென்றால், அவர் பிழைக்கவேண்டும் பாருங்கள்; அதனால் அப்படித்தான் சொல்வார். இப்பொழுது ஜாதி எங்கே போனது?
சிறுநீரகம் பொருத்துகிறார்களே,
முதலியார் சிறுநீரகத்தை முதலியாருக்கா பொருத்துகிறார்கள்? வன்னியர் சிறுநீரகத்தை வன்னியருக்கா பொருத்துகிறார்கள்?
பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் கண்களை எடுத்து, சென்னையிலுள்ள போர்ட்டீஸ் மருத்துவமனையில் உள்ள ஒருவருக்குப் பொருத்துகிறார்கள்
- காவல்துறையினரின் ஒத்துழைப்போடு!
இவ்வளவும் எப்படி நடைபெறுகிறது? உன்னுடைய பிரம்மனுக்கு என்ன வேலை? உன்னுடைய கிருஷ்ணனுக்கு என்ன வேலை? இதையெல்லாம் மாற்ற முடியாது என்று சொல்வார்களா?
ஜாதி என்பது கற்பனை! அதனைத் தூக்கிப் பிடிப்பதுதான் இந்து மதம்
பெரியாருக்குத்தான் வேலை;
பெரியாரின் பகுத்தறிவிற்குத்தான் வேலை;
அங்கே அறிவியலுக்குத்தான் வேலை.
ஆகவே,
ஜாதி என்பது கற்பனை! அதனைத் தூக்கிப் பிடிப்பதுதான் இந்து மதம் என்கிற பார்ப்பன மதம்.
இதிலிருந்து எல்லாம் விடுபடுவதுதான் இட ஒதுக்கீடு, சமூகநீதி. அந்தச் சமூகநீதியைப் பாதுகாப்பதற்குத்தான் இந்த இயக்கம் தேவை! பெரியார் தேவை! இதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கேட்டு, இவ்வளவு சிறப்பாக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த அத்துணை பேருக்கும் நன்றி!
மீண்டும் நாமக்கல்லுக்கு வருவோம்; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக அடிக்கடி கூட்டம் போடுவார்கள்;
அங்கே விடுதலை வாசகர் வட்டம் நடைபெறும்.
நீங்கள் அங்கே வரலாம். ஆகவே,
இனிமேல் நாமக்கல்லுக்குப் பெருமையே,
பெரியார் கருத்தைக் கேட்பதற்காக வரலாம் என்று சொல்லி, ஒத்துழைத்த அத்துணை பேருக்கும் நன்றி, காவல்துறையினர் உள்பட நன்றி கூறி விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- 03.10.2015 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நூல் - பெரியார் எப்போதும் தேவைப்படுகிறார்!
முப்பெரும் முழக்கங்கள்
தொகுப்பாசிரியர் - கி.வீரமணி
Comments
Post a Comment