குருகுல வாசம்
குடும்பப் பாசம் என்ற தலைப்புத் தரலாமா என ஒரு கணம் நினைத்தேன். ஆனால் இந்தச் சொல்லைக் கற்பித்தவர் இன்று நம்மிடையே காட்சிப் பொருளாக இல்லை. எனவே அதே நிலைமையை விடச் சற்று உயர்ந்த - வேறுபட்ட - இந்தச் சொல்லைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது.
உலகத்தின் மிக உயரிய சிந்தனையாளர்
களில் ஒரு தனி நிலை வகிப்பவரும் - ஒரே பகுத்தறிவாளருமாகிய தன் மதிப்பு இயக்கத்தின் தந்தை பெரியார் அவர்களது பாசறைப் பள்ளியிலே பயின்று, தேர்ச்சி பெற்று, வெற்றிகரமாக வெளிவந்த மாணவருள் நானும் ஒருவனாக அமைந்திருப்பதை வாழ்நாளெல்லாம் எண்ணியெண்ணி மகிழ்தல் கூடும். அந்தப் பள்ளி மாணவருள் தலைசிறந்த இருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்று இணையோ எடுப்போ அற்ற நிலையினைப் பெற்றதும் பெரும் பேறுதான் அல்லவா? நான் பணியில் சிறியேனாயினும் அந்த அணியில் இருந்து வந்தவன் என்ற பெருமையை யார்தான் மறுக்க இயலும்!
காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் படிப்பதுதான் முதல் வேலை. காலைக்கடன் முடிக்கச் செல்லும்போதும் கையில் செய்தித்தாள் இருக்கும்; படிப்பும் தொடரும், பின், முகம் கைகால் கழுவிக் கொண்டு (சில வேளைகளில் குளிப்பதும் உண்டு!) சிற்றுணவு அருந்துதல்; ஒற்றை மாட்டுவண்டியில் ஏறியோ. கைத்தடியினை ஊன்றியவாறு நடந்தோ குடிஅரசு அலுவலகம் வந்து சேர்தல். அன்றையக் கடிதங்களைத் தாமே பார்வையிடல், உறைகளைக் கிழித்து வீணாக்கி உள்ளடக்கமாகிய அஞ்சலைப் படிப்பதில்லை. ஒட்டிய இடத்தில் உறையைப் பிரித்து முழுமையாக வைத்துக் கொண்டால் முகவரிப்பகுதி மீது சிறு தாள் ஒன்றை ஒட்டி மீண்டும் பயன்படுத்த வாய்ப்பு. பிறகு உள்ளிருக்குங் கடிதங்களைப் படித்து அவற்றின் தன்மைக்கேற்ப ஓரத்தில் பென்சிலால் குறிப்புகள் எழுதி எதிரில் பயபக்தியோடு நிற்கின்ற நண்பர் கருணாநிதியிடமோ, என்னிடமோ, மானேஜர் நல்லசாமி இடமோ, காஷியர் கரிவரதசாமியிடமோ தருதல். பின்னர் தாம் ஆற்றி வந்த சொற்பொழிவின் சுருக்கமோ, கட்டுரையோ, தலையங்கமோ எழுதத் துவங்கிவிட்டால் அருகில் யாரும் செல்லக்கூடாது. ஏதாவது இடையிடையே அய்யம் ஏற்படின் எங்களில் யாராவது ஒருவர் பெயர் சொல்லி அழைத்துக் கேட்டுக் கொள்ளுதல்.
அலுவல்கள் முடிந்தபின்னரே அயலூர், உள்ளூர் நண்பர்கள் வந்திருந்தால் அவர்களுடன் உரையாடல்; வயதிற் சிறியோராயினும் என்னங்க! ஏனுங்க? என்று மரியாதையும் கனிவும் மிளிரும் சொற்கள்தாம் அங்கே உதிரும். எழுந்து நின்று வணங்குதல், மனம் விட்டுச் சிரித்தல், ஒரே கலகலப்பு!
வேலைகள் முடிந்ததா? வீட்டுக்குப் புறப்பாடு; ஏம்ப்பா! போகலாமா? என்று குரல் கேட்டதும் எங்கள் குழு - அந்த அழைப்பு எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடந்த பரபரப்பு மிகுந்திடப் பின் தொடரும். ஈரோட்டில் மிக உயர்ந்த பெரியார் மாளிகையின் இரண்டாவது மாடியினை அடைவோம்.
மணியம்மையாரின் எப்போதும் சிரிக்கும் அந்த இனிய முகம் உள்ளே தென்படும். என்னம்மா, சாப்பிடலாமா? இன்றைக்கு ஏதாவது விசேசமா? கறி உண்டா? அது இருக்குமென்றுதான் இந்தப் பட்டாளம் சுறுசுறுப்பாக என் பின்னால் வந்திருக்கு!
அலுவலகத்தில் ஆசிரிய பீடத்தில் அமர்ந்து அந்தத் தோரணையில் காரியத்தில் கண்ணாகப் பணிகளைக் கவனித்தாரே அதே அய்யாதானா இவர்? அல்ல அல்ல; இவர் இப்போது தந்தை பெரியார்.
சாப்பாட்டு மேசை முன் வரிசையாக அமர்வோம். மணியம்மையார் பரிமாறி முடிவதற்குள் அவர்கள் பாடு போதும் போதும் என்றாகி விடும். அவ்வளவு கேலியும் கிண்டலும் அங்கே தவழும். அய்யா துவக்கி வைப்பார் மிக மெதுவாக! தவமணிராசன் தொடர்ந்து குரலெழுப்புவார். நண்பர் கருணாநிதி இடையில் நுழைந்து தவமணியை மேலும் தூண்டிவிடுவார். ஜனார்த்தனம் இதில் கலந்து கொள்ளாமல் விரைவாகச் சாப்பாட்டை விழுங்குவார். நான் சிரித்துக் கொண்டேயிருப்பேன். துவக்கி வைத்த அய்யாவோ எங்கள் அனைவரையும் ரசித்துக் கொண்டே சாப்பிடுவார். மணியம்மையார் பொய்யாகக் கோபித்துக் கொள்வார். ஒருவழியாக அமளி அடங்கும். அவ்வளவு சுவையாக அவர் சமைத்திருந்தும் கேலிக்கு ஆளாகலாமா? தனக்குக் கடைசியில் கெட்டித் தயிர் தனியாக வைத்திருப்பார். எங்களுக்கு இவ்வளவுக்கும் பிறகு அதைப் பார்த்துப் பொறாமை ஓங்கும்!
இடம்மாறி உட்கார்வோம், அய்யா கட்டில் மீது; நாங்கள் எதிரே நாற்காலிகளில், தரையில்... இவ்வாறு இப்போது தான் வகுப்பு துவங்கும். ஏதாவது ஒரு சந்தேகம் கேட்பதுபோல் விஷயத்தைத் தொடங்கி விடுவோம். தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் எவ்வாறு செய்யலாம்; மனித இனத்தில் உறவு முறை தேவையா; இந்தி நுழைவதால் தமிழ் கெடுமா, மக்கள் முன்னேறக் கடவுள் வேண்டுமா இப்படி ஏதோ ஒரு கேள்வியைப் போட்டு விடுவோம். நீண்ட சொற்பொழிவு, தெளிவான விளக்கம், எளிய உவமைகள், ஏற்கெனவே சிந்தித்துத் தாமே முடிவு கண்டுள்ள தீர்ப்புகள்... நேரம் போவதே தெரியாது - மாலை வந்து விடும்.
விடைபெற்றுக்கொண்டு மீண்டும் கச்சேரி வீதிக்கு வருவோம். அலுவல் பாக்கிகளை முடிப்போம். மாலையில் உலவிடச் செல்வோம். நண்பர்கள் நிறைய உண்டு; பொழுதுபோவது தெரியாது; யாவும் இயக்கம் பற்றிய உரையாடலே.
இரவு உணவுக்குப்பின் நேரத்திற்கேற்ப அய்யாவின் விரிவுரை நீளும்; சுருங்கும்; சில சமயங்களில் சிக்கல் நிறைந்த தலைப்பை எடுத்துக்கொண்டால் எங்களுக்குக் கூடத் தூக்கம் வந்துவிடும். ஆனால் முழுமையாக விளக்கங்களை முடிக்காமல் அய்யா போகவிடமாட்டார்.
நண்பர் கஜேந்திரன் அப்போதும் அதிகம் பேசமாட்டார். தானுண்டு, தன் எழுத்துப் பணி உண்டு என்றுதான் இருப்பார். ஆங்கிலம் அழகாகத் தெளிவாக எழுதுவார். அவரும் ஜனார்த்தனமும் சேர்ந்து துரளவஉவைந ஆங்கில இதழை ஓட்டி வந்தனர். குடிஅரசு அலுவலகத்தில் தங்கி, உறங்கி, எப்போதாவது குளித்து (நண்பர் கருணாநிதி மட்டும் விதிவிலக்கு - அவர் நாள் தவறாமல் குளிப்பவர்) காலையும் மாலையும் எதிர் வீட்டுச் சிற்றுண்டி வாங்கி அருந்தி, அய்யா வீட்டில் இருவேளை உணவு உண்டு தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் எவ்வளவோ பேர் தந்தை பெரியாரின் மாணாக்கர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.
இந்த நிரந்தரமான குருகுல வாச மாணவர் தவிர இடையிடையே விடுமுறைக் காலங்களில் மாணவர் பயிற்சி முகாம் வேறு அய்யா நடத்தினார்கள். மாணவப் பருவத்தில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பயிற்சி அளித்தால்தான் அவர்கள் பிற்காலத்தில் அறிவுள்ள சமுதாயத்தினைப் படைத்திட இயலும் எனக் கண்டறிந்த அய்யா அவர்கள் மாணவர்களிடத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு தாமே தமது சொந்தச் செலவில் உணவு, உறையுள் முதலியன ஏற்பாடு செய்து எங்கள் வாயிலாக அநேக மாணவர் பயிற்சி முகாம்களை நடத்தினார்கள். தமிழகத்தின் பல்வேறு திக்குகளிலிருந்து ஆர்வமிக்க மாணவர்கள் திரண்டு வந்து பயிற்சி பெற்றுள்ளனர். தாமே எதிரில் இருந்து அவர்களுக்கு உணவு படைக்குமாறு அய்யா கட்டளையிடுவார்கள். சிறப்பான தலைப்புகளில் விரிவுரைகளும் ஆற்றுவார்கள்.
மிகப்பெரிய செல்வக் குடும்பத்தில் பிறந்தும் தாமே தக்க உதாரணமாக திகழ்ந்து அய்யா அவர்கள் கற்பித்த எளிமைதான் அண்ணா அவர்களிடமும் அவர்தம் தம்பிமார்களிடமும் குடிகொண்டு விளங்கியது. ஆடம்பரங்களை வெறுத்தும், பகட்டான உடைகளை ஒதுக்கியும், சிக்கனமாகச் செலவு செய்தும், குறிப்பிட்ட நேரந் தவறாது காரியங்கள் ஆற்றியும், நாணயம் நேர்மை கடைப்பிடித்தும், நம்பிக்கை உள்ளவர்பால் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தும் அய்யா அவர்கள் வாழ்ந்து காட்டி வரும் வாழ்க்கை நெறிகளைப் பாராட்டாதவர் யார்?
குருகுல வாசம் செய்த காலங்களில் தனிப்பெருந்தலைவராக விளங்கியும் தாம் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்வதும், மூட்டை முடிச்சுகளைப் போர்ட்டர் இல்லாமல் தாமே சுமந்து செல்வதும், பேருந்து வண்டிகளிலும், நடந்தும் ஊர்கள்தோறும் போவதும், நண்பர்கள் தருகின்ற கட்டுச்சோற்றினை வழியில் பயணத்தின்போது உண்பதும், நான்கு முழ வேட்டியும், அரைக்கைச் சட்டையும் அணிவதும், பயணத்தின்பொழுது ரயில் பெட்டியில் உட்கார்ந்தவாறே கைத்தடியில் தலையைச் சாய்த்து உறங்குவதும், பிளாட்பாரங்களிலேயே தங்கியிருப்பதும், ஒற்றை மாட்டு வண்டியிலேயே பல நேரங்களில் ஊருக்குள் சவாரி செய்வதும் உடனிருந்து கண்டு, அனுபவித்து வந்துள்ளதால் உள்ளத்தில் படிந்துள்ள உயர்ந்த நோக்கங்கள்தாம் எவ்வளவு? ஓய்வில்லாது மக்களுக்காகத் தொண்டாற்றி உழைக்கின்ற உழைப்பின் தன்மைதான் எத்தகையது?
உலகத்தில் எந்த அரசியல் கட்சியில் தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையே இப்பேர்ப்பட்ட குடும்பப் பாசம் நிலவியதாக வரலாறு உண்டு? தொண்டர்களுக்கும் தம் வீட்டில் உணவளித்து உபசரிக்கும் தலைவர்கள் வேற எந்த இயக்கத்திலாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? தந்தையென்றும் அன்னையென்றும் அண்ணனென்றும் தம்பியென்றும், மாமன் என்றும் மச்சான் என்றும் உறவு முறையை உள்ளன்போடு கொண்டாடி, யார் யார் என்ன குலம், என்ன ஜாதி என்ன பிரிவு என்பதை எப்போதுமே அறிந்திடாமல் பழகி, பகுத்தறிவும் மூட நம்பிக்கையற்ற முன்னேற்றமும் குடும்பங்களில் நிலவிட வகைசெய்து, தமிழகத்தில் ஒரு தனித்தன்மை வாய்ந்த இயக்கத்தினைக் குருகுலவாச முறையில் வளர்த்து வரும் தந்தை பெரியார் காலத்தை வென்றவர்; காலத்தைக் கண்டவர், காலத்தைப் படைத்தவர் என்று நெஞ்சார வாழ்த்தி முடிக்கின்றேன். வணக்கம்.
- கவிஞர் கருணாநந்தம்
தந்தை
பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment