கனிவுடன் செய்தால், எதுவும் அமையும்



நான் பார்த்த - அறிந்த மூத்த தலைவர்களுள் செயற்கரிய செய்த பெரிய தலைவர் தந்தை பெரியார்தான்! ஒரு சமயம் என் வீட்டில் (பெரியார் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் வீட்டில்) மதியம் உணவு முடிந்த நேரம்! அப்போது மாம்பழ சீசன்! கனிந்து கனியாத நிலையில் உள்ள மாம்பழம் ஒன்றை எடுத்தார் பெரியார். பெரியார் எப்போதும் தன்னிடத்தில் எவர்சில்வர் கத்தி வைத்திருப்பார்; அந்த மாம்பழத்தை இலகுவாகத் தோலை சீவி எடுத்தார்! அதாவது, எடுத்த பாங்கு அற்புதமானது. ஆரம்பத்தில் எடுத்த தோல், பழம் பூராவும் ஒரே சீராக ஒரு வளையம் மாதிரி எடுத்து முடித்தார். எல்லோருக்கும் ஆச்சரியம். எனக்கு புத்தியில் புலப்பட்டது. பொறுமையுடனும், தன்மை அறிந்து கனிவுடனும் செய்தால், எதுவும் அமையும் என்பது அறிவிற்பட்டது.

ஈரோடு பெரியார் வீதியில் (முன்பு கோர்ட் வீதி) தற்போது பெரியார் - அண்ணா நினைவகம் இருக்கும் கட்டடத்தில் ஒரு வழக்கறிஞர் குடியிருந்தார். அவரை வீட்டைக் காலி செய்வதற்கு வாடகை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் முன்சீப் கோர்ட்டில் போட்டிருந்தோம். எதிர் வழக்காடினார். நான், பெரியார் அவர்களை சாட்சியாக விசாரிக்க கோர்ட்டிற்குக் கூட்டி சென்றுவிட்டேன். ஒரே கூட்டம்! பெரியாருக்கு தனி நாற்காலி கொடுத்து உட்காரச் சொன்னார்கள். வாதி நாங்கள் - எங்கள் வக்கீல் கேட்கும் கேள்விகளுக்கு அய்யா அருமையாக நிதானமாக, உண்மையாக பதில் கூறினார். நான் அருகில் இருந்து உதவி செய்தேன். பெரியார், அவர் என்ன கேட்கிறார் என்பார். அதை அப்படியே கூறுவேன். இதை எதிர்வாதி வக்கீல் ஆட்சேபித்தார். முன்சீப் அவர்கள் நிராகரித்துவிட்டார். மேலும், என்னைப் பார்த்து அவர் கேட்பதைத்தான் அப்படி சொல்லுகிறார். அதனால் தவறில்லை என்றார். அதன்பின் எல்லா வழக்கறிஞர்களும், எதிர்வாதம் செய்த வழக்கறிஞரிடம் வெகுவாகக் கூறி, ஊடிஅயீசடிஅளைந னநபசநந பெற ஏற்பாடு செய்தார்கள். நான் ஒரு சாமான்யன்; ஆனாலும் நான் கேட்டுக் கொண்டதற்காக கோர்ட்டுக்கு வந்தார். அதாவது நமக்காக மற்றவர்கள் ஈடுபட செய்யும் காரியத்தின் தன்மை மத்தியமாம்; தானே செய்வதுதான் உத்தமம் என்று சொல்லுவார்கள். அது எவ்வளவு சரியானது என்பதை நான் அனுபவத்தில் இதன்மூலம் அறிந்தேன்.
ஒரு சமயம், பெரியார் திடலில் பெரியார் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தபோது, மாவட்டக் கல்வி உயர் அதிகாரி காண வந்தார்! பெரியார் மகிழ்ச்சியோடு உபசரித்தார். என் அக்காள் காந்தி எம்..,பி.டி., அவர்களுக்கு நல்லாசிரியர் விருது சிபாரிசு செய்து கிடைத்து இருக்கிறது என்று பெருமையோடு சொன்னார் வந்த அதிகாரி! பெரியார் சாதாரணமாக, மகிழ்ச்சி என்று மாத்திரம் கூறி, எந்த முகபாவனையும் இல்லாமல் இருந்தது அதிசயமாக இருந்தது. அதிகாரி போன பின் கூறினார், என்னிடம் ஏதோ, அவருக்கு சகாயம். அரசு தரப்பில் வேண்டி வந்திருப்பார். அதனால் தான் காந்திக்கு அந்த அதிகாரி சிபாரிசு செய்த செய்தியை முதலில் சொன்னார். ஆனால், மேலும் பேச்சு கொடுக்காததனால் போய்விட்டார் என்றார். இதிலிருந்து பெரியார் அவர்கள், உரையாடல் செய்ய வருகிறவர்களின் குறிப்பு உணர்ந்து செயல்படும் திறமை உள்ளவர் என்பது புலனாகிறது.

- ஈரோடு எஸ்.ஆர்.சாமி

தந்தை பெரியார் 118ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை