தந்தை பெரியாருடைய கொள்கைகள் பரவுவதை எந்த பிற்போக்குவாதிகளாலும் அழித்து விட முடியாது!
தந்தை பெரியாருடைய கொள்கைகள் பரவுவதை எந்த பிற்போக்குவாதிகளாலும் அழித்து விட முடியாது!
குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு,
மழை பெய்து கொண்டேயிருக்குமோ என்று சொல்லக்கூடிய ஒரு அச்சத்தோடு அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 137 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சி
அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழா என்கிற இந்தப் பிரச்சார திருவிழாவில்,
கலந்து கொள்ளக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பை எனக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் நம்முடைய மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி. அனைத்து இயக்கத் தோழர்களுடைய ஒத்துழைப்போடு மிகக் குறுகிய காலத்தில் நடைபெறுகிறது.
ஒரு வாரத்திற்கு முன் அவர்கள் ஆர்வத்தோடு கேட்டபொழுது, மழையைக் கருதி,
மற்ற பணிகளைக் கருதி இன்னொரு முறை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். பிறகு மறுபடி வாய்ப்பு எப்படி இருக்குமோ என்று தெரியாத சூழ்நிலையில், நடத்துங்கள் என்று சொன்ன பிறகு, நம்முடைய தோழர்கள் மடத்துக்குளம்,
கணியூர் தோழர்கள், சுற்று வட்டாரத்தில் இருக்கின்ற தோழர்கள் அத்துணை பேரும் மிக வேகமாக சுறுசுறுப்பாக இயங்கி, மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
உடுமலைப்பேட்டையில் நேற்று கடுமையான மழையென்று தோழர்கள் சொன்னார்கள்.
இன்றைக்கும் மழை வருமோ என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,
மாலையில் மழையும் வந்து சென்றது. மழை வருவது என்பது இந்த நேரத்தில் மிகவும் வரவேற்கத்தகுந்தது. ஏனென்றால், எங்கே பார்த்தாலும் குடிநீர்ப் பஞ்சம்; எங்கே பார்த்தாலும் விவசாயிகளுக்குப் பிரச்சினை;
டெல்டா பகுதி விவசாயிகளுக்குத் தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று கட்டுப்பாடாக கருநாடகத்துக்காரர்கள், விதியை மீறி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தினுடைய ஆணை இவைகளைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
மாநில அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசோ, ஏதோ கட்டப் பஞ்சாயத்து செய்வதுபோல,
இரண்டு நாள்களுக்கு முன்புகூட,
நீங்கள் இரண்டு பேரும் ஒத்துப் போங்கள் என்று சொல்கிறது.
இந்தச் சூழ்நிலையில்,
மழை பெய்யுமானால் பரவாயில்லை;
கூட்டத்தை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம், மழை பெய்யட்டும் என்றுதான் நாம் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனாலும், மழை நின்று, நீங்கள் எல்லோரும் கூட்டத்திற்குத் திரளாக வந்திருக்கிறீர்கள்.
பொதுவாக, மழை வரவில்லையே என்று வருண ஜெபம் செய்கிறார்கள்;
வருண ஜெபத்தினால் பெய்யாத மழை, மற்றவர்கள் வேண்டுதலினால் பெய்யாத மழையெல்லாம்,
கடவுள் இல்லை என்று சொல்கின்ற நாத்திகர்களான நாங்கள் வருகின்றபொழுது பெய்கின்றது என்று சொன்னால், இதற்கும் - அதற்கும் சம்பந்தம் இல்லை என்கிற பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத்தான் நீங்கள் முதற்கண் அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
எனவேதான், மழை பெய்யவில்லை என்றால், மிகப்பெரிய அளவிற்கு உலகம் இயங்காது. ஆனால்,
நம் நாட்டில் என்ன செய்கிறார்கள் என்றால், மழை பெய்வதற்காக யாகம் நடத்துகிறார்கள்; அந்த யாகத்தில்,
மரத்தை வெட்டிப் போட்டு யாகம் நடத்துகிறார்கள்.
மரங்களை வெட்டுவதினால், காடுகளை அழிப்பதினால்தான் மழை பெய்யவில்லை.
மலையையொட்டி உள்ள பகுதிகளில் யானைகள் வந்தது, மிருகங்கள் வந்தது என்றால், அதற்கு என்ன காரணம்? மிருகங்கள் இருக்கவேண்டிய இடத்தில் எல்லாம், நாம் சென்று ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டோம்.
அதனால்தான்,
நம் இடத்தை இவர்கள் ஆக்கிரமித்து விட்டார்களே என்றுதானே, அவைகள் அங்கே வருகின்றன. இட ஒதுக்கீடு அவற்றுக்கும் சரியாக இருந்தால், எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.
மாணவர் சுற்றுப் பயணத்தில் இந்தப் பகுதிகளுக்கு வந்திருக்கிறேன்
ஆகவே, இன்றைக்கு அய்யாவின் பிறந்த நாள் விழாவை உடுமலைத் தோழர்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
உடுமலைக்கும்,
எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நாங்கள் எல்லாம் மாணவப் பருவத்தில் இருந்த காலத்தில் (1946), மாணவர் சுற்றுப் பயணம் செய்துள்ளோம்.
- அந்தக் காலத்தில் கோவை அமைப்பாளராக இருந்த பழைய கோட்டை பட்டக்காரரிடத்தில் இருந்த கவிஞர் பாலகுரு அவர்கள், நாங்கள் எல்லாம் மாணவர் பருவத்தில் ஈரோட்டில் பயிற்சி பெற்று வந்தவர்கள்.
இங்கே மாணவர்களாக இருந்து எங்களை வரவேற்றவர்கள் அய்யா உடுமலை கனகராசன் அவர்கள். அவர் பின்னாளில்,
நகர மன்றத் தலைவராக இருந்தவர். அவருடைய இல்லத்தில் நாங்கள் தங்கியிருக்கிறோம்.
அதேபோன்று,
தாரை மணி அவர்கள், உடுமலைக் கவிராயர், அவருடைய பூளவாடி கிராமத்திற்கு எங்களை யெல்லாம் அழைத்து, மாணவர்களுக்கு அவருடைய இல்லத்தில் விருந்து வைத்து, இந்தப் பணிகளை நன்றாக செய்யுங்கள் என்று எங்களை உற்சாகப்படுத்தினார்.
அந்தக் காலத்திலிருந்து இன்றைக்கு நம்முடைய இளைஞர் கிருஷ்ணன்,
தம்பி பிரபாகரன் போன்றவர்கள் வரை, அவர்களுக்கு ஒத்துழைக்கக்கூடிய அத்துணை பேரும் இன்றைக்கு எதைச் சொன்னாலும், உடனடியாக செய்யக் கூடிய ஆற்றல் மிகுந்தவர்களாக தோழர்கள் இருக்கிறார்கள். சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கணியூராக இருந்தாலும், மடத்துக்குளமாக இருந்தாலும் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடியவர்களானாலும் எந்தப் போராட்டமாக இருந்தாலும்,
கலந்துகொள்ளக் கூடிய அளவில் இருக்கிறார்கள்.
நாம் மொழியால் தமிழன்; இனத்தால் திராவிடன்
அய்யாவினுடைய பிறந்த நாளை நாம் ஏன் கொண்டாடவேண்டும்?
இது ஒரு நல்ல கேள்வி. இது ஒரு சடங்கா? சம்பிரதாயமா? இல்லவே இல்லை.
மாறாக,
இது ஒரு நன்றித் திருவிழா. பெரியார் பிறந்திருக்காவிட்டால் நம் நிலை என்ன? நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள், கட்சிகளில் இல்லாமல் இருங்கள்; அல்லது கடவுள் நம்பிக்கையாளராக இருங்கள்;
எப்படி வேண்டுமானாலும் இருங்கள். ஆனால்,
ஒரே ஒரு கேள்வியை, இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு திராவிடக் குடிமகனும், தமிழ்ப் பெருங்குடி மகனும் நாம் மொழியால் தமிழன்; இனத்தால் திராவிடன். சிந்திக்க வேண்டும். இதற்கு மிகப்பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை.
இந்த இயக்கம், திராவிடர் கழகம், தந்தை பெரியார், கருப்புச் சட்டைக்காரர்கள், அரசியலுக்குப் போகாமல்,
இந்தச் சமுதாயப் பணிகளைச் செய்து, போராட்டங்களை நடத்தி, ஈரோட்டுப் பாதையை - பாதையில்லாத ஊர்களுக்கெல்லாம் அமைத்து - மிகப்பெரிய அளவில் ஒரு வாய்ப்பை உண்டாக்கி இருக்கிறார்கள் என்று சொன்னால், இவையெல்லாம் இல்லையானால், நம்முடைய குடும்பங்கள் எப்படி இருந்திருக்கும்?
ரொம்ப காலத்திற்கு முன்பு வேண்டாம்; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன், இந்தச் சமுதாயம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தது.
இன்றைய இளைஞர்கள் ஏராளமாகப் படித்திருக்கிறார்கள்.
திரும்புகிற பக்கமெல்லாம் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள்,
பல்கலைக் கழகங்கள் உள்ளன. மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது; எங்கே பார்த்தாலும் மருத்துவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள். இவை எல்லாம் எப்படி ஏற்பட்டன? இவர்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள்?
எங்களைப் போன்றவர்கள் எல்லாம் பட்டதாரிகள் ஆனது எப்படி? இந்த மேடையில் பார்த்தீர்களேயானால், இரண்டு, மூன்று பேர் வழக்குரைஞர்களாக இருக்கின்றோம். மருத்துவர்களுக்கு நம் இனத்தில் இப்பொழுது பஞ்சம் இல்லை.
ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை உண்டா? இன்றைய இளைஞர்கள் இதனை எண்ணிப் பார்க்கவேண்டும்.
பெரியார் பிறந்து, இந்த சமுதாயத்திற்கு ஒப்பற்றத் தொண்டு செய்தார்; தன்னலம் மறுத்த தொண்டு செய்தார்; பதவி நாடாத தொண்டு செய்தார்; புகழ் தேடாத தொண்டு செய்தார். மக்களுக்காக எதிர்நீச்சல் அடித்துத் தொண்டு செய்தார். எவ்வளவு பெரிய அவமானங்கள் ஏற்பட்ட நேரத்திலும்,
சகதிகள் வீசப்பட்ட நேரத்திலும்,
முட்டைக்குள் மலம் வைத்து அவர்மீது வீசப்பட்ட நேரத்தில், செருப்பு அவர்மீது வீசப்பட்ட நேரத்தில்,
அந்த அவமானங்களையெல்லாம் பெரியார் அவர்கள் இனமானத்திற்காகப் பொறுத்துக் கொண்டு, தன்னுடைய கொள்கைப் பயிருக்கு இந்த எதிர்ப்புகள் எல்லாம் உரங்கள் என்று கருதிய காரணத்தினால்தான், இன்றைக்குத் தொண்டு செய்து பழுத்த பழம் என்று சொல்லக் கூடிய அந்த அறிவாசான் புகழ், உலகம் முழுவதும் இன்றைக்குக் கொண்டாடப்படுகிறது.
திராவிடர் இயக்கம் இல்லை என்றால், நம்முடைய நிலை என்னவாகி இருக்கும்?
இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற சமூகநீதி சட்டம் - 69 சதவிகித இட ஒதுக்கீடு - தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்,
மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் இவர்கள் எல்லோரும் எந்தக் கட்சியில் இருந்தாலும்,
அவர்களுடைய பிள்ளைகள் இன்றைக்கு இட ஒதுக்கீட்டினுடைய பயனை அனுபவிக்கிறார்களே!
இந்த இயக்கம் இல்லாவிட்டால்,
இந்நிலைமை ஏற்பட்டிருக்குமா? பெரியார் பிறந்திருக்காவிட்டால் ஏற்பட்டிருக்குமா? சில பைத்தியக்காரர்கள் உளறுகிறார்களே, திராவிடத்தால் வீழ்ந்தோம்!
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று! அவர்களே பள்ளிக்கூடம் சென்று படித்து, அவர்களே பட்டதாரிகளாகி, அவர்களே தோளில் துண்டு போடுவது; இடுப்பில் வேட்டிக் கட்டுவது எல்லாம் பெரியாருடைய தொண்டுதான் - திராவிடர் இயக்கத்தின் உழைப்பின் காரணமாகத்தான்.
திராவிடர் இயக்கம் இல்லை என்றால், நம்முடைய நிலை என்னவாகி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவேண்டும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை அழகாகச் சொன்னார்; தந்தை பெரியார் அவர்களை மேடையில் வைத்துக்கொண்டு திருச்சியில் பேசும்பொழுது சொன்னார். இந்தத் தலைவர்கள் யாராக இருந்தாலும்,
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பெரியாரின் புகழின் சிதறல்கள் என்று சொன்னார்.
அந்தப் புகழ் சிதறினால் எப்படி இருக்குமோ, அது தான் தமிழ்நாட்டினுடைய பல கட்சித் தலைவர்கள் என்று சொன்னார். இன்றைக்கு தமிழ்நாட்டிலுள்ள எந்தக் கட்சியாக இருந்தாலும்,
திராவிட என்று ஒரு அடையாளம் போட்டிருக்கவேண்டும்.
அப்படி போடவில்லையென்றால், அது இந்தத் தமிழ்நாட்டில் பிறந்த கட்சியல்ல; அதற்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்றுதான் அர்த்தம்.
திராவிடத்தை சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறதா? திராவிடத்தினுடைய கொள்கைகளை சரியாக அமல்படுத்துகின்றதா அந்தக் கட்சி என்பது இரண்டாவது கேள்வி. ஆனாலும்,
அதைச் சொல்லியாக வேண்டும்.
பெரியார் படத்தைப் போடாத கட்சிகள் உண்டா? தமிழ்நாட்டில் எந்தக் கட்சிகளாக இருந்தாலும் பெரியார் படத்தைப் போடுகிறார்கள். அதனால்தான் எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்களுக்கு என்ன பணி என்றால், பெரியாரைப் பரப்புகின்ற பணி இனிமேல் தேவையில்லை.
பெரியாரை இன்றைக்கு எல்லோரும் பேசுகிறார்கள். எந்த அளவிற்கு அதனுடைய தாக்கம் வந்திருக்கிறது என்றால், நேற்று முன்தினம் சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நிகழ்வே போதுமானது
- 6 ஆயிரம் பேர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் எப்படி வந்தன? தந்தை பெரியாரின் உழைப்பால் திராவிடர் இயக்கத் தொண்டால் கல்வித் துறையில் சென்னைப் பல்கலைக் கழகம்தான்
- மூத்தப் பல்கலைக் கழகம். அன்றைய காலத்தில், ஒரே பல்கலைக் கழகம்தான் இருந்தது. ஆனால்,
இன்றைக்குத் திரும்பிய பக்கமெல்லாம் பல்கலைக் கழகங்களாக உள்ளன.
அந்தப் பட்டமளிப்பு விழாவிற்குப் பேருரை நிகழ்த்துவதற்காகச் சென்றவர்,
அண்ணல் காந்தியாரின் பேரன்.தந்தை பெரியார் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்த நண்பர் இராஜகோபாலாச்சாரியார். இவர்கள் நெருக்கமான நண்பர்கள்.
ஆனால்,
அன்பான எதிரிகள் என்று ராஜகோபாலாச்சாரியார் அவர்களே சொன்னாரே, அந்த ராஜகோபாலாச்சாரியாருடைய பேரன். காந்தியாருடைய மகன் - ஆச்சாரியாருடைய மகள். இவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து, அவர்களின் வழி வந்த மகன் கோபாலகிருஷ்ண காந்தி. இவர் வெளியுறவுத் துறைகளில் பல பொறுப்புகளில் இருந்தவர்.
அண்மையில் மேற்கு வங்காளத்தில் ஆளுநராக இருந்தவர். திடீரென்று அவர் பெரியார் திடலுக்கு என்னை பார்க்கவேண்டும் என்று வந்தார். என்னிடம் நீண்ட நேரம் உரையாடி விட்டு, ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டு,
திருக்குறளை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறேன். எளிமையான ஆங்கிலத்தில் இருந்தால், இளைஞர்கள் திருக்குறளைப் படிப்பார்கள் என்று படிப்பகத்தார் சொல்லி என்னை எழுதச் சொன்னார்கள்.
திருக்குறள் ஒரு பொது அறநூல். எல்லா மதத்தையும் தாண்டியது
- அது எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல. இது ஒரு அறநூல். அறத்தை சொல்லக்கூடிய ஒரு நூல். இதை உலகளாவிய மக்கள் அத்துணை பேரும் பின்பற்ற வேண்டியதாகும். நாடு, இனம், மொழி,
ஜாதி இவையெல்லாவற்றையும் கடந்து பின்பற்ற வேண்டிய ஒரு நூலாகும். அதனை நான் எழுதியிருக்கிறேன்.
இந்த நூலுக்கு என்ன சிறப்பு என்றால், இந்த நூலை ராஜாஜி அவர்களுக்கும், பெரியார் அவர்களுக்கும் சமர்ப்பணம் காணிக்கை செய்திருக்கிறேன் என்று சொன்னார்.
அந்தப் புத்தகத்தின் மேலே என்ன எழுதியிருக்கிறார் என்றால்,
இரண்டு பேரும் வடதுருவம்
- தென் துருவம்; கொள்கை ரீதியாக, லட்சிய ரீதியாக சண்டை போடுபவர்கள். ஆனால், இரண்டு பேருக்கும் இடையில் இருந்த அன்புப் பிணைப்பு இருக்கிறதே,
அந்த அன்புப் பிணைப்பை என்றைக்கும் பிரிக்க முடியாதபடி இருந்த அந்த இருபெரும் தலைவர்களுக்கு, சிந்தனையாளர்களுக்கு இந்த நூல் அர்ப்பணிக்கப்படுகிறது என்று சொல்லி, அந்த நூலைக் கொடுத்து உரையாடினார்.
சமூகநீதி, இட ஒதுக்கீடு இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கின்ற அளவிற்கு, வேறு மாநிலத்தில் இல்லை. இரண்டு நாள்களுக்கு முன்புகூட விடுதலையில் அது செய்தியாக வந்திருக்கிறது.
அதில் அவர் சொல்கிறார்,
தமிழ்நாட்டில் எவரும் சாதிக்க முடியாததை செய்து முடித்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் என்று சொல்லி, தமிழ்நாட்டில்தான் ஜாதி ஒழிப்பிற்கு அடித்தளமிட்டார்கள்.
சமூகநீதி,
இட ஒதுக்கீடு இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கின்ற அளவிற்கு, வேறு மாநிலத்தில் இல்லை என்று சொன்னார். இவையெல்லாம் யாரும் எதிர்பார்க்காத செய்தியாகும்.
அவர் எங்கே பேசுகிறார்?
பட்டதாரிகளாகப் பட்டம் பெற்று வெளியே செல்கின்றவர்களுக்கு மத்தியில் உரையாற்றுகிறார்.
அறிஞர் அண்ணா 1967
இல் அவர் முதலமைச்சராக வந்த சில மாதங்களில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் என்கிற முறையில், பட்டமளிப்பு விழா பேருரையை நிகழ்த்தச் சொன்னார்கள்.
ஆங்கிலத்தில் அருமையாக அண்ணா அவர்கள் அந்த உரையை நிகழ்த்தினார்கள்.
அந்த உரையில் அண்ணா அவர்கள் சொன்னார், பெரியாருடைய பகுத்தறிவு சிந்தனைகளைப் பட்டதாரிகளே,
நீங்கள் பின்பற்றுங்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் பகுத்தறிவாளர்களாக மாறுங்கள்.
பெரியாருடைய சிந்தனை என்பது உங்களை ஆட்கொள்ளவேண்டும்.
அதுதான் உங்களை வயப்படுத்தக்கூடியது.
வாழ்க்கையில் நீங்கள் எந்தக் கோணத்தில் நின்றாலும்,
பார்க்கக்கூடியது என்று தெளிவாகச் சொன்னார்.
அந்தப் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொல்லியது அதிசயமல்ல.
ஏனென்றால்,
அண்ணா அவர்கள், பெரியார் அவர்களுடைய மிகப் பெரிய முதல் தொண்டர். பகுத்தறிவுக் குடும்பத்தின் தலைமகன். பெரியாருடன் இருந்த காலம் இருக்கிறதே, அதுதான் என்னுடைய வாழ்வின் வசந்தம் என்று சொன்னவர்.
பெரியாரோடு இருந்தேனே,
எதிர்ப்புகளையெல்லாம் சந்தித்துக்கொண்டு, அவரோடு கூட்டங்களுக்குச் சென்றேனே, அதுதான் என்னுடைய வாழ்வின் வசந்தம் என்று சொன்னார். அதேபோல,
நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அறிஞர் அண்ணா சொன்னார்.
கண்டதும் என்று எல்லோரும் சொல்லலாம்;
ஆனால்,
கொண்டது என்கிற வார்த்தை இருக்கிறதே, அது எவ்வளவு ஆழமான வார்த்தை. திருமணம் செய்தவன் - அதாவது கொண்டவன் சரியாக இருந்தால்,
கண்டவன் பேசமாட்டான் என்று சொல்வார்கள் - தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதுபோன்று,
மிகப்பெரிய அளவிற்கு அண்ணா அவர்கள், கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் என்று சொன்னார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அண்ணா அவர்கள் அப்படி சொன்னது ஒன்றும் அதிசயமில்லை.
ஆனால், இன்றைக்கு காந்தியார் பேரன் பட்டமளிப்பு விழாவில் சொல்கிறார்.
சென்னையின் சிறப்புக்கு பெருமை சேர்ந்தவர்கள் வரிசையில் சமூக தத்துவ விளக்கம் பற்றிய பங்களிப்பில் தந்தை பெரியாரைக் குறிப்பிட்டார். நாட்டில் நிலவிடும் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்விற்கு அடிப்படைக் காரணம், ஜாதி அமைப்பு முறை மற்றும் ஜாதியால் மனிதரில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கப்பட்டு வருவதே ஆகும். ஜாதி பாகுபாடு ஒழிப்பில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் முற்போக்குக்குக் காரணம் தந்தை பெரியாரும்,
அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கமும் தான் அடிப்படைக் காரணம். தந்தை பெரியாரின் சமுதாய மேம்பாட்டுப் பணி போற்றுதலுக்குரியது; ஒடுக்கப்பட்ட மக்களை தூக்கிவிடும் வகையில் உள்ள இடஒதுக்கீடு முறை தமிழகத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு முறை தொடர்ந்திட தந்தை பெரியார் ஆற்றிய பணி மகத்தானது.
இதிலும் தமிழ்நாடு முன் மாதிரியாக உள்ளது. மற்ற மாநிலங்களைவிட மத நல்லிணக்கங்களும், சமய சார்பின்மையும் தமிழ்நாட்டில் அதிகமாக நிலவுகிறது. இதற்குக் காரணமான அரசியல், சமூக சீர்திருத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.
பாரத ரத்னா விருதிற்குரியவர்கள் தந்தை பெரியாரும் - அறிஞர் அண்ணாவும்!
தமிழ்நாட்டைச் சார்ந்த பெரு மக்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி பெருமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வரிசையில் இரு பெரும் தலைவர்கள் பெயர் விடுபட்டுப் போய் விட்டது. அவர்கள்தாம் பெருமைக்கு உரிய தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஆவார். இதுவரை பாரத ரத்னா விருது இரு பெரும் தலைவர்களுக்கு வழங்கப்படாதது ஒரு பெரும் குறையே என ஆதங்கத்தோடு தமது பட்டமளிப்பு விழா பேருரையில் கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டார்.
பெரியாருடைய கொள்கைகள் அவ்வளவு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
பெரியாருடைய சிந்தனைகளை இனிமேல் விதைக்கவேண்டிய அவசியமே இல்லை. பெரியாருடைய சிந்தனைகளை யாராலும் தடுத்துவிட முடியாது; பெரியாருடைய கொள்கைகள் பரவுவதை எந்தப் பிற்போக்குவாதிகளாலும் அழித்துவிட முடியாது. அது ஆல்போல் தழைத்து அருகுபோல் பெருகும்.
எவ்வளவு பெரிய எதிர்ப்பு புயல் போல் கிளம்பினாலும்,
அதனைச் சந்திக்கக்கூடிய ஆற்றல் பெரியாருக்கும் உண்டு; பெரியாருக்குப் பிறகு பெரியார் தொண்டர்களுக்கும் உண்டு.
அதைத்தான் நாம் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.
எனக்கு ஏன் சிலை வைக்கவேண்டும்?
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்குப் பெரியாரைப் பாதுகாக்கவேண்டும். அதுதான் மிக முக்கியமானதாகும். பெரியாரைப் பரப்புவது வேறு; பெரியாரைப் பாதுகாக்கவேண்டும்.
இல்லையென்றால் பெரியாரை அவர்கள் கடவுளாக்கி விடுவார்கள்.
அதனால்தான் அய்யா சொன்னார், அவருடைய சிலை வைக்கும்பொழுது,
எனக்கு சிலை முக்கியமல்ல;
அந்த சிலையின் கீழே அமைந்திருக்கும் பீடத்தில் வாசகம்தான் மிக முக்கியம்.
எனக்கு ஏன் சிலை வைக்கவேண்டும் என்று சொன்னால், கடவுள் இல்லை என்று சொன்ன ஒருவர் இவர்தான் என்று கடவுள் மறுப்பு வாசகத்தை எழுதவேண்டும்.
அப்படி எழுதவில்லை என்றால், என்னை ஒரு அவதாரமாக்கி விடுவார்கள் என்று தெளிவாகச் சொன்னார்.
இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு பெரியாருடைய சிந்தனைகள் என்பது ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கின்ற சிந்தனைகளாக இருக்கின்றன. அதனைத் திரிபுவாதம் செய்யாமல், பலரும் அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு, ஒரு பாதுகாப்பு அரணாகவும் பெரியார் தொண்டர்களாக இருக்கும் நாம் இருக்கவேண்டும்.
பெரியார் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் யார்? ஒன்று ஆர்.எஸ்.எஸ். மதவெறி அமைப்பு. அவர்களுடைய தத்துவம் என்ன? அவர்களுடைய கோரிக்கை என்ன? பெரியாருடைய கொள்கைக்கு நேர் எதிரானது; திராவிடத்திற்கு, திராவிட இயக்கத்திற்கு முரணான ஒரு அமைப்பு இருக்கிறது என்றால், களத்தில் எதிரும் - புதிருமாக ஒரு அமைப்பு இருக்கிறது என்றால், அது ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் என்று சொல்லக்கூடிய அந்த அமைப்பு. அதனுடைய நோக்கம் என்ன? ஜாதியைப் பாதுகாப்பது;
பார்ப்பனர்களை மேன்மைப்படுத்துவது; சமூகநீதியை ஒழிப்பது; வருணாசிரமத்தைக் காப்பது இவைதான் அந்த அமைப்பின் நோக்கங்கள்.
அடிப்படையில் அவர்கள் எந்த அளவிற்கு வெளியே வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் இப்பொழுது, மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று சொல்லி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்,
மோடியைக் காட்டி, குஜராத்தைக் காட்டி, மாற்றத்தை உண்டாக்கலாம் என்று சொன்னார்கள். அப்பொழுது நாங்கள் ஒவ்வொரு இடத்திலும் வந்து சொன்னோம்; நீங்கள் மாற்றம் வேண்டும்; மாற்றம் வேண்டும் என்று சொல்லி ஏமாந்து விடாதீர்கள். இளைஞர்களே, நீங்கள் இணையத்தைப் பார்த்து குஜராத் மாடல் என்பதை பார்த்து ஏமாறாதீர்கள் என்று சொன்னோம்.
அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளும் சேர்ந்து மோடி ஆட்சிக்கு வந்தால், சர்வரோக நிவாரணி போல் அவர் வந்தால் எல்லாவற்றையும் செய்துவிடுவார்.
காவிரிப் பிரச்சினையா? காங்கிரஸ் செய்யாததை இவர் செய்துவிடுவார்;
ஈழப் பிரச்சினையா? இவர் செய்து முடித்துவிடுவார். தமிழக மீனவர் பிரச்சினையா? அதனைத் தீர்த்துவிடுவார் என்றெல்லாம் சொன்னவுடன்,
பல பேர் ஏமாந்தார்கள்.
அப்படி ஏமாந்தவர்கள் எல்லாம் இப்பொழுது வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். சகோதரர் வைகோ அவர்கள் முன்பே வெளியே வந்துவிட்டார். அதேபோன்று, பாட்டாளி மக்கள் கட்சிக்காரர் வெளியே வந்துவிட்டார்.
அவர் வெளியே வந்தாலும்,
நடுவில் ஒரு கொக்கியை மாட்டி, எங்களுடைய வேட்பாளரை முதலமைச்சராக அறிவித்தால்,
நாங்கள் அந்த அணியில் இருப்போம் என்று சொல்கிறார்.
உடனே, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவரான அந்த அம்மையார் சொல்கிறார்,
பா.ம.க.
எங்களுடைய கூட்டணியிலேயே இல்லை என்று.
பா.ஜ.க.விற்கும், மக்களுக்கும் சம்பந்தம் இல்லை!
தமிழகத்தில் யார்தான் அந்தக் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நண்பர் விஜயகாந்த் அவர்களைக் கேட்டால், மக்களோடுதான் கூட்டணி என்று பொதுவாக சொல்கிறாரே தவிர, பா.ஜ.க.வோடு என்று சொல்லவில்லை. அவர் சொல்வதுபோல் இருந்தாலும்கூட, மக்களோடு கூட்டணி என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்,
பா.ஜ.க.விற்கும்,
மக்களுக்கும் சம்பந்தம் இல்லை.
காரணம், பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் உறுப்பினர்களை எப்படி சேர்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மிஸ்டு கால் கொடுத்துதான்.
இந்தியாவிலேயே மிஸ்டு கால் கொடுத்து, கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்த ஒரே கட்சி அதுதான்.
மிஸ்டு கால் கொடுங்கள், மிஸ்டு கால் கொடுங்கள் என்று சொல்வதை எங்கே பார்க்கலாம் என்றால், தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கலாம்.
அதுபோன்று,
மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர்களைச் சேர்க்கிறார்களாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களும்,
நானும் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்பொழுது அவர் வேடிக்கையாக சொன்னார், என்னுடைய செல் பேசிக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்தது, அதில் நீங்கள் பா.ஜ.க.வின் உறுப்பினர் ஆகிவிட்டீர்கள் என்று கூறியிருந்தார்கள் என்று சொன்னார்.
தமிழகத்தில் எப்படியாவது காலூன்றவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
தேர்தல் நடந்த நேரத்தில் இருந்த அளவிற்கு, இன்றைக்கு அவர்களின் நிலை வளர்ந்து இருக்கிறதா?
தனித்துப் போட்டியிடுவோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
திராவிடத்தை வீழ்த்துவோம் என்கிறார்கள்.
அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
எல்லோருமே தனித்தனியாகப் போட்டியிட்டால்,
அவரவர்களின் நிலை என்னவென்று மிகத் தெளிவாகத் தெரியும். ஏனென்றால், தமிழகத்தில் ஏராளமான வருங்கால முதல்வர்கள் இருக்கிறார்களே.
வருங்கால முதலமைச்சர்,
நாளைய முதலமைச்சர் என்று சொல்கின்ற சூழலில், ரொட்டேஷன் முறையில் பழைய காலத்தில் மேயர் பதவியை வைத்திருந்தார்கள் சென்னையில் - அய்ந்தாண்டு காலத்தில்,
5 பேர் மேயராக வருவார்கள்.
அதுபோலக்கூட செய்ய முடியாத அளவு எண்ணிக்கை உள்ளதே!
திராவிடர் கழகத்துக்காரர்கள் எக்ஸ்ரே கருவி போன்றவர்கள்
இவற்றையெல்லாம்விட, அவர்களின் கொள்கை என்ன? ஆட்சிகள் மாற்றம் வரவேண்டும்;
ஜனநாயகத்தில் மாறுதல் ஒன்றும் பெரிய விஷயமல்ல. நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதினால், உண்மையைப் பச்சையாகச் சொல்வோம். எங்களுக்கு ஒன்றும் சங்கடம் இல்லை. எக்ஸ்ரே படம் எடுத்தால்,
உடைந்த எலும்பை, உடைந்ததுபோன்றுதான் இருக்கும்.
போட்டோ கிராபி எடுத்தால்,
கொஞ்சம் டச் பண்ணி காட்டுவார்கள். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், மக்களைப் பார்க்கும் பொழுது அது போட்டோ கிராபி போன்றது.
ஆனால், நாங்கள் விஞ்ஞானத்தில் மருத்துவர்கள் போன்றவர்கள்;
உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டுகின்ற எக்ஸ்ரே கருவி போன்றவர்கள். அப்போதுதான் சிகிச்சை செய்ய முடியும். சில பேர் கேட்பார்கள்,
என்னங்க படத்தை இதுபோன்று காட்டுகிறீர்களே என்று.
உடைந்து போயிருக்கின்ற எலும்பை சரி செய்யவேண்டும் என்றால், எக்ஸ்ரேவைப் பார்த்துதானே செய்யவேண்டும்.
அதுபோன்று, இந்த சமுதாயத்தினுடைய சூழ்நிலைகளை எண்ணிப் பார்க்கவேண்டும் என்கிறபோது,
இன்றைக்கு நாட்டில் இரண்டு அணிகள்தான் இருக்கிறது.
காலங் காலமாக நம்மை அழுத்தி வைத்திருந்தார்கள் அல்லவா! அந்த மனுதர்மம் மீண்டும் அரியணை ஏறவேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்பொழுது மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.
அதனைப் பயன்படுத்திக் கொண்டு, முதலில் நாங்கள் மாற்றத்திற்காகச் சொன்னோம்; அந்த மாற்றத்தைச் சொன்னதினால், பெரும்பான்மை பெற்றிருக்கிறோம் என்பதினால், அதனைப் பயன்படுத்திக் கொண்டு, இப்பொழுது நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்.
மனுதர்மத்தை அரசியல் சட்டமாக ஆக்கவேண்டும் என்கிறார்கள்!
நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். நீங்கள் எந்தப் படம் பார்க்க வேண்டும் என்பதை நாங்கள்தான் சொல்லுவோம். எழுத்தாளர்களே, நீங்கள் என்ன புத்தகம் எழுதவேண்டும் என்பதை நாங்கள்தான் சொல்வோம்; பத்திரிகையாளர்களே, நீங்கள் என்ன கருத்தை சொல்லவேண்டுமோ,
அதை நாங்கள்தான் சொல்லுவோம் என்கிற போக்கு ஆபத்தான போக்கல்லவா!
உலகத் தத்துவங்களில் இதற்கு என்ன பெயர் என்று சொன்னால், பாசிசம் என்று பெயர்.
அசல் மனுதர்மத்தில் பச்சையாக சொல்கிறார்கள்.
அந்த மனுதர்மத்தை அப்படியே அச்சடித்து, மற்றவர்களுக்கு, இளைஞர்களுக்குத்
தெரியவேண்டும் என்பதற்காக பல பதிப்புகளாக அது வெளிவந்திருக்கிறது.
நம்மில் பல பிறக்காத காலத்தில்,
95 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட ஒரு புத்தகம். தமிழில் மொழி பெயர்த்து வந்த புத்தகம் இது. அந்த மனுதர்ம புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படித்து உணர்ந்துகொள்ளலாம். நாம் கொஞ்சம் அசந்தால், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் அமைந்த இந்திய அரசியல் சட்டத்தை, தூக்கி எறிந்துவிடுவார்கள்; அதற்குப் பதிலாக மனுதர்மத்தை அரசியல் சட்டமாக ஆக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே, பொது மேடைகளில் சொல்கிறார்கள்.
விசுவ இந்து பரிசத் என்ற அமைப்பின் தலைவர் அசோக்சிங்கால், பிரவீண் தொகாடியா போன்றவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டு, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று சொல்கிறார். இந்தக் கருத்தினை நீண்ட காலத்திற்கு முன்பாக திலகர் சொல்லியிருக்கிறார். கொஞ்ச நாள்கள் முன்பாக மதுரையில் தீர்மானமும் போட்டார்கள்.
இந்த மனுதர்மத்தின் அடிப்படையில்தான் அவர்கள் ஜாதியைப் பாதுகாக்கவேண்டும்;
வருணாசிரம தருமத்தைப் பாதுகாக்கவேண்டும்.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில், ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1952 ஆம் ஆண்டு முதலமைச்சராக வருகிறார்.
அவர் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு உத்தரவு போடுகிறார்; குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார்.
குலக்கல்வித் திட்டம் என்றால் என்ன? அரை நேரம் படிப்பு; அரை நேரம் வேலை. அதாவது, அவனவன் அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும். குலத்தொழிலை மகன் செய்யவேண்டும். சிரைப்பவன் மகன் சிரைக்கவேண்டும்; மலம் எடுப்பவரின் மகன் மலம் எடுக்கவேண்டும்; செருப்பு தைப்பவனின் மகன் செருப்பு தைக்கவேண்டும்; வெளுப்பவன் பிள்ளை துணி வெளுக்க வேண்டும். துப்புரவு செய்பவருடைய பிள்ளை துப்புரவு பணிகளைச் செய்யவேண்டும் என்பதுதான்.
அன்றைக்கு அதனை எதிர்த்த இயக்கம் - திராவிடர் இயக்கம் - எதிர்த்தத் தலைவர் தந்தை பெரியார் - எதிர்த்த ஏடு விடுதலை. பெரியார் அவர்கள் அன்றைக்கு அதனை கடுமையாக எதிர்த்து,
ஆச்சாரியார் அவர்களே பதவியை விட்டு ஓடும்படி செய்தார். அந்த இடத்தில், காமராசர் அவர்களைக் கொண்டு வந்து அமர வைத்தவர் தந்தை பெரியார்.
பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள், கல்வி வள்ளலாக மாறி, ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் மூடிய பள்ளிக் கூடங்களையெல்லாம் திறந்தார்.
இலவசமாக கல்வியை கொடுக்கத் தொடங்கினார்.
அதற்கு முன்பு தியாகராயர் அவர்கள் மாநகராட்சி தலைவராக இருந்த காலத்திலிருந்து சென்னை கார்ப்பரேசன் அளவிற்கு, மதிய உணவை குழந்தைகளுக்குப் போட்டார்.
இந்தியாவிலேயே முதன் முதலில் மதிய உணவை குழந்தைகளுக்கு அளித்தது திராவிடர் இயக்கம் - சர்.பி.டி.
தியாகராயர் அவர்கள் - சென்னை மாநகராட்சியில்.
அதனை நாடு தழுவிய அளவில் கல்வித் திட்டத்தில் அதனைக் கொண்டு வந்த பெருமை பச்சைத் தமிழர் காமராசர் அவர்களையே சாரும் - மதிய உணவுத் திட்டம். அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டம் வந்தது. அதனை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார் என்பதற்காக, இன்றைக்கு நடப்பதுபோல்,
அ.தி.மு.க.
கொண்டு வந்ததினால், அதனை நிறுத்தவேண்டும் என்று நினைத்தாரா?
கலைஞர் அவர் பங்குக்கு பிள்ளைகளுக்கு முட்டை அளித்தார். முட்டை சாப்பிடாத பிள்ளைகளுக்கு பழம் கொடுங்கள் என்று உத்தரவு போட்டார். ஒழிந்து விடவில்லையே!
இன்றைய ஆட்சியினருக்கு இருப்பதுபோல, தி.மு.க.
ஆட்சியில் திறக்கப்பட்ட அண்ணா பெயரில் நூலகம் இருப்பதை மூடிவிடவேண்டும் என்று நினைத்தால்,
அதை விட குறுகிய மனப்பான்மை - கண்டிக்கத்தக்கப் போக்கு வேறு என்னவாக இருக்க முடியும்?
எனவேதான், ராஜகோபாலாச்சாரியாருடைய குலக் கல்வித் திட்டம் ஒழிந்தது. அதனாலேதான் இன்றைக்கு நம் பிள்ளைகள் எல்லாம் படித்திருக்கிறார்கள்.
அந்தப் பழைய வரலாற்றினை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சொல்லவேண்டும்.
இளைஞர்களுக்குப் பழைய வரலாறுகளை எடுத்துச் சொல்லவேண்டும்!
இன்றைய இளைஞர்கள்,
அதிலும்
18 வயது நிரம்பிய இளைஞர்கள் எல்லோரும் அதிகமாகப் பார்ப்பது பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் என்று இணைய தளத்திலேயே மூழ்கி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பழைய வரலாறுகளை எடுத்துச் சொல்லவேண்டும்.
இன்றைக்கு நாமெல்லாம் வழக்குரைஞர்களாக வந்திருக்கிறோம்.
நீதிபதிகளாக வந்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள
31 நீதிபதிகளில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி ஒருவர் கூட கிடையாது. இதனைக் கேட்பதற்கு நம்மைவிட்டால் வேறு யாரும் கிடையாது. சமூகநீதி வேண்டும் என்று நாம் கேட்கிறோம்.
பெரியார் தொண்டர்கள், இயக்கத் தோழர்கள், திராவிடர் கழகத்துக்காரர்கள்.
ஆகவே, இந்த இயக்கம் இல்லை என்றால் என்னவாகியிருக்கும்? 1954 இல் அந்தக் குலக்கல்வித் திட்டம் ஒழிந்தது. இன்றைக்கு
2015 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு 70 வயது ஆகிறவர்களுக்குக்கூட இதை ஞாபகப்படுத்தவேண்டும்.
வகுப்புரிமையை, சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்களே!
பெரியார் ஏன் இன்னமும் தேவைப்படுகிறார். பெரியாருடைய இயக்கத்திற்கு எதிர்காலத்தில் என்ன வேலை என்பதை நினைத்துப் பாருங்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார்,
அம்பேத்கர் தலைமையில் அமைந்த இந்திய அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு,
மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்ட மாக்கவேண்டும் என்று.
மனோன்மணியம் சுந்தரனார் ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுநீதியை திருக்குறளின் சிறப்பை உணர்ந்தவர்கள் ஏற்பரோ என்றாரே,
வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி என குறளின் பெருமையை பறை சாற்றுகிறார்.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி; தண்டனை என்றாலும் வேறு வேறுதான். மரண தண்டனையை பார்ப்பானுக்கு மட்டும் கொடுக்கக்கூடாது என்று இருக்கிறது மனுதர்மத்தில்.
எல்லோரும் ஜாதியினுடைய அடையாளப்படிதான் இருக்கவேண்டும். ஜாதி தர்மப்படி இருக்கவேண்டும்.
தமிழகத்தில் இருப்பதுபோல்
69 சதவிகித இட ஒதுக்கீடு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது!
நம்மாள் இட ஒதுக்கீட்டைப் புரிந்துகொள்ளாமல்,
கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்து கொள்வதுபோல,
பேசுகிறார்கள்.
இன்றைக்கு அதைப் பயன்படுத்திக் கொண்டு, பாம்பு எப்படி புற்றுக்குள்ளிருந்து வெளியே வருமோ அதுபோல் வருகிறார்கள்;
தடியால் ஒரு அடி அடித்தால், பாம்பு தலையை புற்றுக்குள் இழுத்துக்கொள்ளுமோ அதுபோல் பின்வாங்கிக் கொள்கிறார்கள்.
சமூகநீதி என்பது ஒரு நூறாண்டு காலம் இந்த இயக்கம் - திராவிடர் இயக்கம் - சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியார் -
அதனையொட்டிய நம்முடைய தலைவர்கள் எல்லாம் பாடுபட்டு காப்பாற்றியதன் விளைவுதான். தமிழகத்தில் இருப்பதுபோல்
69 சதவிகித இட ஒதுக்கீடு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
தமிழ்நாட்டில் இருக்கும்
69 சதவிகித இட ஒதுக்கீடு நிலைக்குமா என்று கேட்டார்கள். திராவிடர் கழகம்தான்
69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை வரையறுத்துக் கொடுத்தது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு
18 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு
30 சதவிகிதம்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 20 சதவிகிதம்; மலைவாழ் மக்களுக்கு ஒரு சதவிகிதம் ஆக மொத்தம் 69 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
இந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தில்,
எந்தக் கொம்பனாலும் கை வைக்கப்பட முடியாத அளவிற்கு இந்திய அரசியல் சட்டத்தில்
9 ஆவது அட்டவணைப் பாதுகாப்போடு இருக்கிறது.
இப்பொழுது பெரியார் எங்கே போயிருக்கிறார் தெரியுமா? பா.ஜ.க. ஆளுகின்ற ராஜஸ்தானத்திற்குள் சென்றிருக்கிறார். அங்கே இட ஒதுக்கீடு சட்டத்தை 9
ஆவது அட்டவணைக்குள் கொண்டு போகிறோம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டைப் பார்!
தமிழ்நாட்டை மாடலாகக் கொள் என்று, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் தமிழ்நாட்டைப் பார்த்து இன்றைக்கு வகுப்புவாரி உரிமையை, சமூகநீதியை கற்றுக் கொள்கின்றன.
குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று சொன்னார்கள்; இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது;
கல்வித் துறையில் உலகத்தில் இருக்கின்ற எல்லோரையும் அழைத்து, நம் கல்வித் துறையைப்பற்றி பேசுவதற்காக,
180 நாடுகளுக்கு அழைப்பு கொடுத்து,
அந்தக் கூட்டம் குஜராத்தில் நடைபெறும். அதனைத் தொடங்கி வைப்பவர் பிரதமர் மோடி என்று அறிவிப்பு கொடுத்திருந்தது மத்திய மனித வளத் துறை அமைச்சகம்.
திடீரென்று அந்தக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. குஜராத்தில் நடைபெறாது என்று செய்தி வந்திருக்கிறது. இதுபற்றி செய்தியாளர்கள் கேட்கிறார்கள், அந்தக் கூட்டம் ரத்து செய்வதற்கு என்ன காரணம்? என்று.
காரணம் எல்லாம் சொல்ல முடியாது; அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றனர்.
ஏனென்றால், குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சமுதாயத்தினர் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த நிலையில்,
குஜராத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றால் உண்மை நிலை தெரிந்துவிடும் அல்லவா, அதனால்தான்! அதேபோன்று கேரள மாநிலத்திலுள்ள பார்ப்பனர்கள் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். ஒரு காலத்தில் இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று அவர்கள் தான் முன்னணியில் நின்றார்கள்.
அதனை திராவிடர் கழகம் எதிர்த்தது. தமிழ்நாட்டிற்கு, குஜராத்தைக் கொண்டு வருவோம் என்றனர். ஒருக்காலும்,
குஜராத்தை இங்கே கொண்டு வர முடியாது; கொண்டுவர விடமாட்டோம், கருப்புச்சட்டைக்காரன் இருக்கும் வரையில்; திராவிடர் கழகம் இருக்கும் வரையில் என்றோம். எப்பொழுது தெரியுமா? எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்.
முதலாவது அரசியல் சட்டத் திருத்தம்
1950 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்திய அரசியல் சட்டத்தைக் காட்டி, தமிழ்நாட்டில்
1928 முதல் அமலில் இருந்த வகுப்புவாரி உரிமையை நீதிமன்றத்திற்குச் சென்று செல்லாது என்று செய்தது யார்? தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்தானே!
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவில் ஒரு வராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வாதாடிய வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமா?
இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது இந்தியாவில் உண்டானது என்று சொன்னால், அப்பொழுது நேரு பிரதமராக இருந்தார்; அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தபொழுது, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் செய்த மாபெரும் கிளர்ச்சி
- கட்சி வேறுபாடின்றி மக்கள் அவரோடு இருந்ததனால்தான்,
இன்றைக்கு வகுப்புவாரி உரிமை சட்டம் இருக்கிறது.
நேரு சொன்னார், ஏன் இந்த அரசியல் சட்டத்தைத் திருத்துகிறோம் என்று கேட்டால், இது இந்தியாவில், தமிழ் நாட்டில் மட்டும் நடந்தது என்று மட்டும் நினைக்காதீர்கள்; அதனுடைய எதிரொலி மற்ற இடங்களிலும் கேட்கும். அதனால்தான் அரசியல் சட்டத்தைத் திருத்துகிறோம் என்றார்.
முதல் அரசியல் சட்டத்தை பெரியார் திருத்தினார். பெரியாருக்கு எத்தனை எம்.பி.க்கள் இருந்தார்கள்?
எப்படி அரசியல் சட்டத்தைத் திருத்த முடிந்தது?
பெரியார் இமயமலை; பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டனர். அதெல்லாம் இருக்காது; ஊருக்கு நான்கு வயதானவர்கள் இருப்பார்கள்,
அதோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்கள்.
ஆனால், பெரியார் காலத்தில் இருந்த இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில்
41 சதவிகிதம் (25+16) - காமராசர் ஆட்சிக் காலத்தில். பிறகு தி.மு.க.
ஆட்சி காலத்தில் 49 சதவிகிதம்.
50 சதவிகிதத்திற்குக் கீழ்தான் இருக்கவேண்டும் என்று ஒரு பூச்சாண்டி காட்டினார்கள். அப்பொழுது முதலமைச்சர் அண்ணா அவர்கள் மறைந்து, கலைஞர் ஆட்சிக்கு வந்தார். சட்டநாதன் ஆணையத்தைச் சேர்ந்தோர் திருச்சிக்குச் சென்று பெரியாரைச் சந்தித்தனர். நீங்கள் முதலில் பரிந்துரை செய்யுங்கள்,
49 சதவிகிதம் கொடுக்கலாமே என்றார் பெரியார்.
49 சதவிகிதம் என்பது 50 சதவிகிதத்திற்குக் கீழ்தானே!
அந்தக் கமிட்டியில் இருப்போர், மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது என்று சொன்னார்கள்.
ஏன்? என்று பெரியார் கேட்டார்.
அவர்கள் ஆட்சேபிப்பார்கள் என்று சொன்னார்கள்.
அப்படி ஆட்சேபித்தால்,
நான் சொல்கின்ற பதிலைச் சொல்லுங்கள் என்று பெரியார் ஆரம்பித்தார்.
49 சதவிகிதம் என்பது 50 சதவிகிதத்திற்குக் கீழேதான் என்று சொன்னார்.
இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்திருக்கிறது.
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்கிறதா? இல்லையா என்பதற்கு என்ன அடையாளம் என்றால், இட ஒதுக்கீடு பெரியார் காலத்தில்
49 சதவிகிதம்; பெரியாருக்குப் பிறகு இன்றைக்கு 69 சதவிகிதம்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அத்துணை பேரும் அனுபவிக்கிறார்கள் கட்சி வேறுபாடின்றி.
நாளைக்கு இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டால், உங்கள் பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்ல முடியுமா? இதனை ஒழிப்பதற்குத்தானே இன்றைக்கு நாடி பிடித்துப் பார்க்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.
தலைவர் சொல்லியிருக்கிறாரே!
வடக்கே லாலு பிரசாத், நிதிஷ்குமார் அவர்கள் உடனே என்ன சொன்னார்கள், இரண்டாவது மண்டல் புரட்சி வரும். இட ஒதுக்கீட்டில் நீங்கள் கை வைத்தால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்;
இட ஒதுக்கீட்டை உங்களால் ஒழிக்க முடியுமா? என்று கேட்டனர்.
உடனே அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது;
ஆர்.எஸ்.
எஸ்.
பாம்பு தலையை உள்ளே இழுத்துக் கொண்டது.
இந்து பத்திரிகையில் இன்றைக்கு வெளிவந்த செய்தியைச் சொல்கிறேன்.
பிகாரில் நடைபெறுவது தேர்தல் போராட்டமல்ல!
பிகாரில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Lalu
Prasad - Modi as police file FIR
Lalu Prasad’s remarks
at a public meeting at Terasia in Raghopur of Vaishali district on Sunday last.
He had said the Yadavs should stand “united” as the Assembly polls marked a
“battle between the backward and forward castes.”
அங்கே நடைபெறுகின்ற போராட்டம் தேர்தல் போராட்டமல்ல; பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்,
முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கும் தான்.
வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், புளியேப்பக் காரனுக்கும்,
பசியேப்பக் காரனுக்கும்தான் போராட்டம் நடைபெறுகிறது. நீண்ட காலமாகப் பட்டினி இருக்கிறான் பாருங்கள் அவனுக்கும்,
செரிமானம் ஆகவில்லை என்று ஏப்பம் விடுகிறான் பாருங்கள் அவனுக்கும்தான் போராட்டம் நடைபெறுகிறது.
அதைத்தான் லாலுபிரசாத் சொன்னார்.
Mr. Lalu Prasad also criticised
the RSS, the BJP’s ideological mentor. “The RSS is an organisation of Brahmins
and Mr. Modi should confer the Bharat Ratna on RSS chief Mohan Bhagwat for
suggesting an end to reservation.”
யார் யாருக்கோ பாரத ரத்னா விருது தருவதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார் மோடி. மோகன் பகவத் என்கிற ஆர். எஸ்.எஸ்.
தலைவர் இருக்கிறார்; அவர்தான் இட ஒதுக் கீட்டை ஒழிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்காக அவருக்கு பாரத ரத்னா விருதை நீங்கள் கொடுத்து விடலாம் என்று கிண்டலாகச் சொல்லியிருக்கிறார்.
இது பிகாரின் நிலை. குஜராத்தில் என்ன நிலை என்றால், அன்றைக்கு எந்தப் பட்டேல் ஜாதிக்காரர்கள் இட ஒதுக்கீடே வேண்டாம்; அதனை ஒழித்தே தீருவோம் என்று குஜராத்தில் சொன்னார்களோ, இன்றைக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அவர்கள் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்; எதற்காக கேட்கிறார்கள்;
அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களா? இல்லையா? என்பதெல்லாம் பிறகு.
இட ஒதுக்கீடே வேண்டாம் என்று சொன்னவன், இன்றைக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறான்.
காரணம் என்ன? இன்றைக்கு சமூகநீதியால் எல்லோரும் முன்னேறி வருகிறார்கள்; நாம் பின்தங்கி விட்டோமே என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தோமா?
இந்த இட ஒதுக்கீடு போராட்டம் வந்திருக்கிறது என்றால், அந்தச் செய்தியும் இந்து பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது, அதனைப் படிக்கிறேன் கேளுங்கள்:
On Thursday, Patel women
forced the BJP to cancel meetings or social functions at half a dozen places
across the State.
In Naroda, Ahmedabad, party MLA
Nirmala Waghvani fled the venue of a function in her constituency when more
than 100 women of the Patel community stormed the venue with plates and rolling
pins or spoons.
குஜராத் மாநிலத்தில் ஒரு ஆறு, ஏழு இடத்தில் பா.ஜ.க.வினர் நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல், அந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் காரணமாக நிறுத்திக் கொண்டார்கள். தட்டு, கரண்டி இவையெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பி.ஜே.பி. பெண் சட்டமன்ற உறுப்பினர் ஓடினார் என்று எழுதியிருக்கிறார்கள்.
பிகார், குஜராத், ராஜஸ்தான் இவை வடக்கே உள்ள மாநிலங்கள்.
இங்கே தெற்கே உள்ள கேரளாவில் என்ன நிலை என்பதைப் பாருங்கள்.
பெரியாருடைய சமூகநீதியை யாராலும் அழிக்க முடியாது. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் கண் திறக்கவேண்டும்;
அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தி!?
CPM TO Corner SNDP
on quota- என்ற தலைப்பில் இன்றைய டெக்கான் கிரானிக்கல் நாளிதழில் வந்துள்ள செய்தியைப் படிக்கின்றேன் கேளுங்கள்!
“Backwards and Dalits have now
seen the true face of the RSS, thanks to Bhagwat. It is also a major setback
for the SNDP which is desperately trying to push the community to the Sangh
Parivar camp,” said CPM state secretary Kodiyeri Balakrishnan.
கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது என்றால், இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது; நாங்கள் இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். அதுமட்டுமல்ல,
நாராயண குரு தரும பரிபாலனத்தை எப்படியாவது இழுத்து அதனை ஆர்.எஸ்.எஸ்.
ஆக்கவேண்டும்;
இந்து மதம் என்று ஆக்கவேண்டும் என்று சொல்வது இருக்கிறதே அதைக் கேட்டு நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்;
இதற்காகவே நாங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கப் போகிறோம். அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கேரளா முழுவதும் செய்யவிருக்கிறோம் என்று சி.பி.எம்.
கொடியேறி பாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.
ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு சட்டத்தை 9
ஆவது அட்டவணை பாதுகாப்பிற்கு வருகிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் நாங்கள் இட ஒதுக்கீட்டை எவ்வளவு சுலபமாக ஆக்கியிருக்கிறோம்.
நீங்கள் எல்லோரும் சுலபமாக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறீர்கள். ஆனால், இந்த வரலாறு எல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் எவ்வளவு சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கிறது என்று நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்டால், இன்றைய இளைஞர்கள் தெரியாது என்று பதிலளிக்கிறார்களே!
மூச்சுக் காற்றின் முக்கியத்துவம் எப்போது தெரியும்?
இவ்வளவு பேர் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோமே, மூச்சுக் காற்று விட்டால்தானே நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கு அடையாளம். மூச்சு விடுதல் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிராண வாயு உள்ளே செல்கிறது; கரியமிலவாயு வெளியே வருகிறது. மூச்சு இருக்கிறதா?
இல்லையா?
என்பதை எப்போது சோதித்துப் பார்க்கிறார்கள். மூச்சுக் காற்றின் முக்கியத்துவம் எப்போது தெரியும்?
இதயம் போன்றது திராவிடர் கழகம்
உடலில் மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்; ஆனால், இதயம் ஓய்வு எடுத்தால், உயிர் போய்விடும்.
இதயம் போன்றதுதான் திராவிடர் கழகம். மற்றவர்கள், யார் எப்படி இருந்தாலும், நாங்கள் ஓய்வெடுக்க முடியாது; எங்கள் உடல்நிலையைப்பற்றி கவலைப்படுவதில்லை.
மூச்சுக் காற்றின் முக்கியத்துவம் மூச்சுத் திணறும் போதுதான் தெரியும். மூக்கில் குழாயை வைத்து ஆக்சிஜன் செலுத்தும்போதுதான் தெரியும்.
இந்த இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எப்பொழுது சட்ட வடிவம் கொடுத்தார்கள் தெரியுமா? யாருடைய ஆட்சிக் காலத்தில் தெரியுமா? தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள், சட்டமன்றத்திலேயே தான் ஒரு பாப்பாத்தி என்று சொன்ன அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது.
அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் யார்; காங்கிரஸ் தலைமையில் இருந்த நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது;
நரசிம்மராவ் யார் தெரியுமா? அவர் ஒரு ஆந்திரப் பார்ப்பனர்.
அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள். இவர் உத்தரப்பிரதேச பார்ப்பனர் ஆவார்.
குடியரசுத் தலைவர் பார்ப்பனர்; பிரதமர் பார்ப்பனர்;
முதலமைச்சர் பார்ப்பனர் என்றாலும் பெரியார் வென்றார். சமூகநீதியை சாய்க்க முடியவில்லை.
அந்த சட்டத்தை நிறைவேற்றியதால்,
அந்த அம்மையாரைப் பாராட்டினோம்.
அதனால் சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டத்தைக் கொடுத்தோம்.
அதில் ஒன்றும் தவறில்லையே! அதனால்தானே தமிழ்நாட்டில் இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இருக்கிறது.
மகளிர் உரிமைக் காத்த மாண்பாளர் கலைஞர்
தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில்தானே, இந்தியாவிலேயே தமிழகத்தில் மகளிருக்கு சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்தது கலைஞர்தானே!
திராவிடர் கழகம்தான் அவருக்கு மகளிர் உரிமைக் காத்த மாண்பாளர் என்று பட்டம் கொடுத்தது.
ஆகவே, இந்த இட ஒதுக்கீடு சட்டத்தில் யாரும் கை வைக்க முடியாது. குஜராத்தில் பட்டேல் சமுதாயத்தினர் தான் இடஒதுக்கீடு கோரி வருகிறார்கள் என்பதில்லை. கேரளாவில் உள்ள பார்ப்பனர்கள், கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து நாங்களும் உங்களோடு வருகிறோம்,
எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், நான் சென்னை பெரியார் திடல் அலுவலகத்தில் இருந்தேன்.
அப்பொழுது உங்களைப் பார்ப்பதற்கு நடிகர் எஸ்.வி.சேகர் வருகிறார் என்றார்கள்.
வரச் சொல்லுங்கள் என்றேன்.
அவர் என்னைச் சந்தித்து, நான் பிராமணர் சங்கத்தின் சார்பாக உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றார்.
மிகவும் மகிழ்ச்சி; என்ன விஷயம் சொல்லுங்கள் என்றேன்.
நாங்கள் ஏழு சதவிகிதம் இருக்கிறோம்;
எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன் என்றார்.
நான் உடனே, ஓ!
பெருகிவிட்டீர்களா நீங்கள். 3 சதவிகிதத்திலிருந்து ஏழு சதவிகிதமாக. பரவாயில்லை, எத்தனை சதவிகிதம் என்பதை பிறகு முடிவு செய்து கொள்ளலாம். சரி, அதற்காக என்னிடம் வந்திருக்கிறீர்களே? என்றேன்.
நாங்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறோம். முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்தோம்.
அவர் இட ஒதுக்கீட்டை கொடுத்துவிடலாம், அதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைப் பார்த்து, அவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள் என்றார். அதற்காகத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன் என்றார்.
அப்படியா! நண்பர் சேகர் அவர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த இட ஒதுக்கீடு 50 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு எவ்வளவு இருந்தது தெரியுமா? மக்கள் சதவிகிதத்தில் 2 சதவிகிதமாக இருந்த உங்களுக்கு, 16 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தது. தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டது நீங்கள்தானே!
இட ஒதுக்கீடு செல்லாது என்று நீங்கள்தானே சொன்னீர்கள் என்றேன்.
உடனே அவர், எனக்குத் தெரியாதுங்க, அந்த விவரம் எல்லாம் என்றார்.
இன்றைக்குப் பார்ப்பனர் உள்பட இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் வகுப்புவாரி உரிமையில், அனைவருக்கும் அனைத்தும்;
எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில் தவறில்லை. அடுத்தவர்களின் பங்கை சாப்பிடுவது என்பதுதானே தவறு.
இன்றைக்குப் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார்!
விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் இருக்கை ரிசர்வ் செய்யப்படுகிறது. யாராவது ஜன்னலில் ஏறி இடம் பிடிக்கிறார்களா? ரயிலில் செல்லும்பொழுதுகூட ரிசர்வ் செய்த இடத்திற்கு யாராவது சண்டை போடுகிறார்களா?
அன் ரிசர்வ் கம்ப்பார்மெண்ட்டில்தான் இடம் பிடிப்பதற்குப் போட்டி போடுகிறார்கள்.
இன்றைக்கு இட ஒதுக்கீடு, சமூகநீதியை எந்த ஆர். எஸ்.எஸ்சோ, பி.ஜே.பி.யோ, மற்றவர்களோ நினைத்தாலும் ஒழிக்க முடியாது. இன்றைக்கு அவர்களே வந்து எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கின்ற அளவிற்கு பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார்!
பெரியார் ஏன் தேவைப்படுகிறார்! இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்பதற்கு பகிரங்கமான முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆகவேதான், பெரியார் தேவைப்படுகிறார்.
தமிழர்களுடைய இதயத்தில் ரத்தம் வடிகிறதே!
ஈழத்தில் எங்களுடைய சகோதரிகளான தமிழச்சிகள்
90 ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.
எத்தனை பேர்களுக்கு கை, கால் போனது! ராஜபக்சே என்கிற ஒரு அயோக்கியன்,
இனப்படுகொலை செய்த ஒரு கொலைகாரன். அய்.நா. சபையில் பான் கி மூன் குழு அமைத்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே; அந்தப் போர்க்குற்றத்தை விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
அந்தக் குழுவில் இருந்த நவநீதம் அம்மையார் அவர்கள் விசாரிக்கச் சென்றார், அவரை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தினார்கள்.
மத்தியில் அங்கம் வகித்த தி.மு.க.
ஏன் வெளியேறியது? ஈழப் பிரச்சினையால்தானே,
வெளியேறினார்கள்.
இன்றைய முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதனை எல்லோரும் பாராட்டி, வரவேற்றோம். அமெரிக்கா சொல்கிறது,
உள்ளூர் விசாரணையே போதும்; சர்வதேச விசாரணை வேண்டாம் என்று தீர்மானம் கொண்டு வருகிறது.
இலங்கைக்குள் சீனாவின் ஆதிக்கம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது.
ஆனால்,
நாம் தொப்புள் கொடி உறவு அல்லவா! இந்தியாவின் நிலைப்பாடு அப்படியா! எங்களுக்கு நீங்கள் மத்திய அரசு அல்லவா! நீங்கள் என்ன வேறொரு அரசா? வெளிநாட்டு அரசா? எங்கள் மக்கள் வாக்களித்ததினால்தானே மோடி இன்றைக்குப் பிரதமர்.
அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தது அமெரிக்கா;
வழிமொழிந்தது இலங்கை. இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று நம் நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோன்று, இந்திய அரசு, இலங்கை அரசினுடைய நிலைப்பாட்டைத்தான் ஆதரிக்கும் என்று சொல்கிறார்கள்.
மோடி வந்தால் மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொன்னார்களே, எதில் மாற்றம் வந்தது? தமிழர்களுடைய இதயத்தில் ரத்தம் வடிகிறதே! இதனைக் கேட்பதற்கு நாதியில்லை.
தமிழக மீனவர்களுக்கு மீன் பிடித்தொழில் தானே வாழ்வாதாரம். அவர்களை சிறைப் பிடித்துச் செல்கிறார்களே!
தமிழக முதல்வர் கடிதம் எழுதுகிறார், பிரதமர் மோடிக்கு!
இலங்கையிலிருந்து ரணில் இந்தியாவிற்கு வரும்பொழுது, கைது செய்தவர்களை வெளியில் விடுவார்கள்;
அவர் சென்றதும் மீண்டும் மீனவர்களை சிறை பிடிப்பார்கள்.
காவிரி நீர்ப் பிரச்சினையில் என்ன நிலைமை? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று எப்போதோ உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது!
ஆனால்,
அதை செயல்படுத்தவில்லை என்று மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடவேண்டிய அளவிற்கு வந்திருக்கிறதே!
திராவிடர் கழகம் கலங்கரை விளக்கம் போன்றது!
ஆகவே, நண்பர்களே நினைத்துப் பாருங்கள், இந்த இயக்கம் உங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற இயக்கம்; உங்கள் சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்கின்ற இயக்கம்; உங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுக்கின்ற இயக்கம். எங்களுக்கு என்று எதுவும் தேவையில்லை.
எங்களுக்கு மாலை போட்டாலும், கல்லைப் போட்டாலும்
- நீங்கள் எங்களைக் கண்டித்தாலும்,
வரவேற்றாலும்,
நீங்கள் எங்களைத் திட்டினாலும்,
வாழ்த்தினாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்த சமுதாயத்திற்கு நாங்கள் என்றென்றைக்கும் உயிர் மூச்சு இருக்கின்ற வரையில், தொண்டர்களாக இருந்து, வழிகாட்டிகளாக இருக்கக்கூடியவர்களாக இருந்து, காவலர்களாக இருக்கக்கூடியவர்களாக இருந்து இந்தப் பணிகளைச் செய்வோம்.
எனவேதான், தமிழ்நாட்டில் தந்தை பெரியாருடைய பெரும் பணி என்பது இன்னமும் தேவைப்படுகிறது.
எதிரிகள் மறைந்தும், ஒளிந்தும் சில நேரங்களில் வெளியே வந்தும், சில நேரங்களில் உள்ளே சென்றும் இருக்கிறார்கள்.
அதனை அடையாளம் காட்டக்கூடிய ஒரு சரியான இயக்கம் - கலங்கரை விளக்கம்போன்றது இந்த இயக்கம். இதனுடைய வெளிச்சத்தில்தான் கப்பல்கள் செல்ல வேண்டும்; இல்லையென்றால், பாறைகளின்மீது கப்பல்கள் மோதவேண்டியது இருக்கும்.
ஆகவேதான், இந்த இயக்கம் அதனுடைய பணிகளை இடையறாது செய்துகொண்டிருக்கிறது.
கொட்டும் மழையானாலும், கொளுத்தும் வெயிலானாலும்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் - (குறள்
- 1028)
என்ற வள்ளுவர் மொழிக்கேற்ப நடைபெறும் இயக்கம் திராவிடர் கழகம் என்பதை மனதில் கொண்டு இந்த மழையையும் பொருட்படுத்தாமல் நீங்கள் வந்தீர்கள். எதிர்ப்பிலே இயற்கையையும் வெல்லக்கூடிய ஆற்றல் பகுத்தறிவாளர்களாகிய எங்களுக்கு உண்டு என்று காட்டக்கூடிய வண்ணம், எங்களோடு போட்டி போட்டு மழை தோற்றது - நாங்கள் வென்றோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.
இளைஞர்களே, இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்!!
இளைஞர்களே, இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்!
நீங்கள் வந்தால், அதைக் கொடுப்போம்,
இதைக் கொடுப்போம் என்று சொல்லமாட்டோம். லட்சியத்தால் உங்களுக்கு மானத்தைக் கொடுப்போம்,
உங்களுக்கு அறிவை கொடுப்போம்,
உங்களுக்குத் தெளிவைக் கொடுப்போம்
- இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள், வாருங்கள் என்று கேட்டு, குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த நம் முடைய உடுமலை இயக்கத் தோழர்கள், அவர்களுக்கு ஆதரவு காட்டிய நண்பர்கள் எல்லோருக்கும் மனமுவந்த பாராட்டுத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- 30.9.2015 அன்று உடுமலையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை.
தொகுப்பாசிரியர் - கி.வீரமணி
நூல் - பெரியார் எப்போதும் தேவைப்படுகிறார்! முப்பெரும் முழக்கங்கள்
தொகுப்பாசிரியர் - கி.வீரமணி
Comments
Post a Comment