தந்தை பெரியாரின் பண்பாடு




தந்தை பெரியார் சமுதாய மேடு பள்ளங்களைச் சமன் செய்த மாபெரும் ஞானி. மேட்டுக்குடிகளின் வெளிச்சத்தின் முன்னே விட்டில் பூச்சிகளாய் விழுந்து மடிந்த மனிதனை எழுந்து நிமிரச் செய்த எழு ஞாயிறு. தசைகளை நிமிர்த்தக்கூட முதுகெலும்பைப் பயன்படுத்தாத தன்னம்பிக்கையற்ற தமிழினத்தின் தன்மானத்தை நிமிரச்செய்த முதுகெலும்புதான் தந்தை பெரியார். வருணாசிரமத்தின் விலா எலும்புகளை முறித்துப் போட்ட விடிவெள்ளி.

இருவேறு துருவங்களாகப் பயணம் செய்த நமது குருமகா சந்நிதானத்திற்கும், தந்தை பெரியாருக்கும் ஏற்பட்ட உறவு, தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்துவதற்காக ஏற்பட்ட உறவு. இருவருக்குமிடையே பல மேடைகளில் சொற்போர் நிகழ்ந்தது உண்டு. ஒருமுறை தந்தை பெரியாரும் மகாசந்நிதானமும் ஈரோட்டில் சென்னியப்ப முதலியார் இல்லத்தில் சந்தித்துக் கொள்கின்றார்கள். ஈரோட்டில் முதலில் யாரை யார் சந்திப்பது என்பது கேள்வி. அய்யத்திற்கு அல்லது யோசனை செய்ய வேண்டியதற்கு அவசியம் இராமல் மகா சந்நிதானம் இருக்கும் இடத்திற்கு நான் போய்ச் சந்திக்கிறேன் என்றாராம் பெரியார். அடுத்த வினா! மகா சந்நிதானம் தங்கியிருப்பது சென்னியப்ப முதலியார் இல்லத்தின் மேல்மாடி. பெரியார் மாடி ஏறி வருவதில் சிரமம் இருந்தால் கீழேயே சந்திக்கலாம் என்று குருமகா சந்நிதானம் தெரிவிக்கின்றார்கள். மகா சந்நிதானம் இருக்கும் இடத்திலேயே சென்று பார்ப்பதுதான் முறை என்கிறார் தந்தை பெரியார். மாடியில் ஓர் அறையில் இரண்டு நாற்காலிகள். இருவர் உட்காரக் கூடிய நாற்காலி ஒன்று. இருவர் உட்காரும் நாற்காலியில் மகா சந்நிதானம் ஒரு முனையில் அமர்ந்திருக்கின்றார். பெரியார் வந்துவிட்டார். அறைக்குள் பெரியார் நுழையும்பொழுதே மகா சந்நிதானம் எழுந்து வரவேற்கின்றார். மகா சந்நிதானம் எழுந்திருக்கக் கூடாது என்று கூறிக் கொண்டே, வணங்கக் கையிரண்டையும் அவசரத்தில் சேர்க்கும் பொழுது, பெரியாரின் கைத்தடி கீழே விழுகின்றது. மகா சந்நிதானம் தம் இருக்கையில் அருகே அமரச் சொல்கிறார். பெரியார் மறுத்துவிட்டு மகா சந்நிதானத்துடன் ஒரே இருக்கையில் அமருவது முறையன்று என்று கூறி, அருகில் இருந்த வேறு நாற்காலியில் அமருகின்றார்.

தந்தை பெரியாரும் மகா சந்நிதானமும் உரையாடத் தொடங்குகின்றார்கள். ஆன்மீகம், பகுத்தறிவு தொடர்பான விஷயங்கள் அலசப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சு தொடர்கின்றது. நமது சமயம், அவ்வப்போது காலதேசவர்த்தமான நிலைமைகளுக்கு ஏற்றவாறு புதுமைப்படுத்திக் கொள்ளத் தவறியதன் விளைவே தந்தை பெரியார்! சமயம், கடவுள் எல்லாம் தீண்டாமையை ஒழிக்கவில்லையே! மனிதனை மனிதனாக்கவில்லையே! ஜாதிகளை அகற்றவில்லையே! கடவுள், சாமி என்றெல்லாம் வாழும் மக்கள் இழிவிலும் வறுமையிலும் கிடந்து உழல்கிறார்களே! இதற்குப் பரிகாரம் இதுவரையில் மதங்கள் தேடவில்லையே! கடவுளும் தேடவில்லையே! அதுமட்டுமல்ல, கடவுள் பெயரால்தானே இந்த அவலமான காரியங்கள் செய்யப்படுகின்றன என்றார் பெரியார். இதற்கு மகா சந்நிதானம் சொன்ன பதில் இவற்றைக் கடவுள் செய்யவில்லை! என்பது. அப்படியானால் இந்த அநியாயத்தை, கடவுள் ஏன் தட்டிக் கேட்கவில்லை? என்றார் பெரியார். என்ன பதில் சொல்வது? நம்முடைய தத்துவங்களுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். கணியன் பூங்குன்றன் காலத்திலிருந்து கண்ணதாசன் காலம் வரை தோன்றி எந்தச் சிந்தனையும் செயலுருவம் பெற்றதில்லை. ஆண்டவன், மண்ணில் மக்கள் பின்பற்றப் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியும், அதையும் நம்மில் பலர் பின்பற்றத் தயாராக இல்லை. இன்று சடங்குகளை, ஆசாரங்களைப் பின்பற்றுகின்றனர். சமயநெறி அடையாளம் காட்டிய மனிதநேயத்தை மறந்து போனோம். தந்தை பெரியார் - மகா சந்நிதானம் பேச்சின் முடிவில் பெரியார் குறிப்பிடுகின்றார்: எனக்கும் கடவுளுக்கும் என்ன விரோதம்? அவரை நான் பார்த்ததுகூட இல்லை! எனக்குத் தேவை மனிதன் மீதுள்ள இழிவு அகற்றப்பட வேண்டும் என்பதே. நம்முடைய நாட்டில் இந்த இழிவை மாற்ற மத உலகத்தில் சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கண்ட பலன் தோல்வியே! மகாசந்நிதானம் முயற்சி செய்திருக்கலாம்! பலன் தருமா? சந்தேகம்தான்! என்றார் பெரியார். இருவரும் சேர்ந்து உழைப்போம் என்றார்கள் நம் மகா சந்நிதானம்! சம்பிரதாயங்கள் இடம் தருமா? என்பது பெரியார் வினா! முயற்சி செய்வோம்; சம்பிரதாயங்கள் காலந்தோறும் மாறுபவையே! என்று மகா சந்நிதானம் கூறினார்கள். சரி பார்ப்போம்; முயற்சி செய்வோம்! என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறப் பேச்சு முடிந்தது.

நட்பு விரிந்து - பாலமாக மலர்ந்தது!

பெரியார் விடைபெற்றுக் கொண்டு எழும்பொழுது மகா சந்நிதானம் எழுந்தார்கள். உடனே பெரியார் இல்லை! இல்லை! மகா சந்நிதானம் அமருங்கள்! எனக்கு எல்லா மரபுகளும் தெரியும். மரபுகளைப் போற்றும் ஆர்வமும் உண்டு. ஒரு காலத்தில் ஞானியார் சுவாமிகளை என் தோளில் தூக்கிச் சுமந்துள்ளேன்! மகா சந்நிதானம் எழுந்திருக்கக் கூடாது என்றார். இந்தச் சந்திப்புக்குப் பின் மகா சந்நிதானம் - தந்தை பெரியார் நட்பு விரிந்து - வளர்ந்து தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு மிகப் பெரிய உறவுப் பாலமாகத் திகழ்ந்தது.
- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
தந்தை பெரியார் 123ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை