நான் செத்தால் அழுபவர்
தோழர்களே, பெரியார் அவர்களுக்கு எனது அன்பும், அருளும் நிறைந்த பூமாலையைச் சூட்டினேன். பெரியார் ராமசாமியைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அவர் பெருமைப்பற்றி நான் சொல்லியா நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்? தென்னிந்தியா பூராவுக்கும் காங்கிரஸ் பெருமை அடைந்தது என்றால், அது பெரியார் ராமசாமி அவர்களால்தான். காங்கிரஸ் மந்திரி சபைக்கு நன்றி இருக்குமேயானால், காங்கிரசை வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டு வந்த பெரியார் ராமசாமி, டாக்டர் நாயுடு, இந்தச் சிறியேன் (திரு.வி.க.) ஆகிய மூவரிடத்தும் ஒரு சிறு விசுவாசமாவது காட்ட வேண்டாமா?
பெரியாருக்கும் எனக்கும் உள்ள நட்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல; அது 35 வருடங்களுக்கு மேற்பட்டது. வைக்கம் வீரர் என்பதை இந்த அடியேன் கைப்பேனாதான் சூட்டியது.
திருவாங்கூரிலே தீண்டாமையை ஒழிக்க மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்ற பெரியாருக்கே அந்தப் பெருமை. ஆனால், அந்தப் புகழ் யாருக்கோ போயிற்று! பெரியாரது அந்த வீரத் தியாகம் எனது வாழ்க்கைக் குறிப்பிலுள்ளது. எனக்கு பெண் பிள்ளைகள் இல்லை. நான் செத்துப் போனால் எனக்காக அழுகின்ற ஒரு நண்பரிருந்தால் அவர் பெரியார் ராமசாமியாகத் தான் இருக்கமுடியும்.
இந்த நாட்டில் பெரிய காரியம் செய்தவர் பெரியார் ஒருவர்தான்.
(29.5.1947இல் சென்னை பெரம்பூரில்
தந்தை
பெரியாரை பக்கத்தில் வைத்துக் கொண்டே திரு.வி.க. பேசியது).
Comments
Post a Comment