17.01.1968 ம் நாள் கரூர் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் உரை! - தொடர்ச்சி
நேற்று இங்கே (சென்னையிலே) உலகத்தமிழ் மாநாடு நடத்தினாங்க. என்னா? அவுங்களை எவ்வளவு முட்டாள்னு சொல்றதுன்னு தெரியலே?
போதுமான வார்த்தையே இல்லை அவர்களைக் கண்டிக்கிறதுக்கு அவ்வளவு முட்டாள்தனமா? எவன் பெரிய அயோக்கியனோ நம்ம சமுதாயத்துக்குப் பெரும்கேடு பண்ணினவனோ அவனுக்கு நேற்று சிலை வைச்சிருக்காங்களே? எதுக்காகக் கம்பனுக்குச் சிலை வைக்கிறது? ஒத்துக்கிறாங்களா அந்த ராமாயணத்தை? இல்லை, ராமாயணத்திலே சூத்திரன்சாமி கும்பிட்டான்னு அவனைக் கொன்னிருக்கிறான் ராமன். எவனாவது அதை ஒத்துக்கிறானுங்களா? அந்த ராமாயணத்திலே சூத்திரனுக்குள்ள யோக்கியதையை ஏற்றுக்கிறானுங்களா? ஏண்டா சூத்திரனை ராமன் கொன்னான்னா? சூத்திரன் பிராமணனைத்தான் கடவுளாய்க் கும்பிடனுமே தவிர, நேரிலே கடவுள்கிட்டே போகலாமா? அதனாலே தானே பாப்பான் செத்தான். இவன் அயோக்கியப்பயல் அப்படீன்னு கடவுளைக் கும்பிட்ட சூத்திரனைத் துண்டுதுண்டாய் வெட்டியிருக்கிறான். நமக்கு இரத்தம் கொதிக்க வேண்டாமா? பாப்பானைக் கும்பிடாததற்காக நம்பாளைக் கொன்று துண்டாக்கினானால்லவா? நமக்கு ரோஷமோ, மானமோ, நம்ம உடம்பிலே நல்ல சுத்தமான இரத்தமோ, இருந்தால் நமக்கு உடம்பு கொதிக்கவேண்டாமோ? அந்த ராமாயணத்துக்கு, அதை அதுக்குமேலே நம்பளை முட்டாள்களாய் அயோக்கியனாகிறாப்பிலே எழுதின அவனுடைய பாப்பாரக் கூலி வேலைக்கு அவனுக்கு ஒரு சிலையா?
கண்ணகி-க்கு ஒரு சிலை. நமது பெண்கள் சமுதாயத்தை அவமானப்படுத்துகிறதுக்கு. இதற்கு மேலே வேறு என்ன வேண்டும்? அவள் கண்ணகி ஒரு மடச்சிறுக்கி. அவள் கல்யாணத்தின் போதே அவள் புருஷன் தேவடியாள்கிட்டே போயிட்டானாம். போனால் என்னா? போடா அயோக்கியப் பயலேன்னு இவள் இன்னொரு யோக்கியனைப் பார்த்துக்கிட்டால் தீர்ந்தது. (சிரிப்பு கைதட்டல்)ஏன்? அவள் போயிட்டா இவன் (கோவலன்) பட்டினி கிடப்பானா? புருஷன் ஆம்பளை. பொண்டாட்டி பொம்பளை. இரண்டு பேருக்கும் ஒரே யோக்கியதை தானே. அவன் தேவடியாள் வீட்டுக்குப் போனான்னா இவள்(கண்ணகி) சோறுதிங்கலே, தலைமுடியலே, சீவலே, பூவைக்கலே, பாயிலே படுக்கலே. கீழேயே (தரையிலே) படுத்துகிட்டு இருந்தாள். புருஷனுக்கு அவள் (மாதவி) சரியாய் மரியாதை பண்றாளோ இல்லையோனிட்டு இவள் (கண்ணகி )நகைகளை எல்லாம் கழட்டிக்கொடுத்துகிட்டே இருந்தாள். அப்படி உங்கள் மகள் அப்படி ஒருத்தி இருந்தால் நீங்க என்ன பண்ணுவீங்க? போடி போடி முட்டாள் சிறுக்கி, வந்து வீட்டிலே வேலையைப் பாரு. அப்படீன்னு நீங்கள் சொல்லுவீர்களா? இல்லே இன்னும் இரண்டு நகை கொடுக்கிறேன். நீ கொடு உன் புருஷனுக்கு. அவன் அதைக் கொண்டு, அவன் தேவடியாள் வீட்டிலே இருக்கிறதுக்குன்னு சொல்லுவீங்களா? அந்த கதைதானே அவளோட (கண்ணகி) கதை. அவளுக்கு இவ்வளவு மரியாதை
பண்ணினால் பொம்பளைங்க கதி என்ன ஆகும்? ஒவ்வொரு பயலும் தேவடியாள் வீட்டுக்குப் போயிட்டு இருப்பான். இவள் பட்டினி கிடந்துகிட்டே இருக்க வேண்டியது. இவள் இன்னொருத்தன் வீட்டுக்குப்போயிட்டா அவன் பட்டினி கிடப்பானா? கத்தியல்ல எடுத்துகிட்டு வருகிறான்(சிரிப்பு கைதட்டல்) அது (சிலப்பதிகாரம்) என்ன இலக்கியம்? அது என்ன மனுஷனுடைய ஒழுக்கம் மக்களுக்குப் பயன்படும்படி நடந்துகிறது. போகட்டும் முட்டாள் சிறுக்கி அவ்வளவோடாவது. கடைசிலே அவள் என்னப் பண்ணிகிட்டு செத்தாள்? என்ன பண்ணினாள்? ராஜா என்னமோ, இவள் புருஷனுக்குத் தண்டனைக் கொடுத்திட்டானாம். அதுக்காக வேண்டி நீ ஏன் மதுரையை எரிக்கிறே? மதுரையை எரிச்சல்லவா அவள் பெரிய மனுஷியானாள்? எப்படி மதுரையை எரிக்கிறாள்?
தன் முலையைப் பிடிச்சி திருகினாளாம்? (சிரிப்பு) கையோடு முலை வந்திட்டுதாம்.
(கைதட்டிச் சிரிப்பு மீண்டும்) இது எந்த வைத்திய சாஸ்த்திரத்திலே இருக்குது அய்யா?
கையிலே திருகினாமுலைவந்திடும்னு(பலத்த சிரிப்பு கைதட்டல்) சொல்லுங்க நீங்க திருகினாளாம், வந்திட்டுதாம், அதைவீசி எறிஞ்சாளாம். மதுரையே நெருப்பு பிடிச்சிகிட்டுதாம். என்ன சங்கதி இது? நெருப்புப் பிடிச்சி மதுரை எரியுதாம். இவள் உடனே, நெருப்பே பிராமணாளை எரிக்க வேண்டாம், மற்றவனை எல்லாம் தீர்த்துக்கட்டுன்னாளாம் (சிரிப்பு) என்ன நியாயம்? இவள் நம்மளவளா இவள்? இல்லை நாம் மரியாதை பண்ணவேண்டியவளா இவள்? பாப்பானை மாத்திரம் எரிக்காதே, மற்றவங்களை எல்லாம் எரிச்சி சாம்பலாக்குன்னாளே? அவன் (மன்னன்) பண்ணின அக்ரமத்துக்கு, மதுரைக்கு ஏன் நெருப்பு வைக்கிறே. மதுரைக்கு நெருப்பு வைச்சிகிட்டு, பாப்பானை தவிர மற்றவனை எல்லாம் எரிய வேணும்ன்னு ஏன் சொல்றே? இவள் பதிவிரதையோ வெங்காயமோ (சிரிப்பு) இது எல்லாம் நமக்கு நம்முடைய மானத்திற்கு ஏற்றதா? இவ்வளவு பண்ணின அவளுக்கு நீ சிலை வைக்கிறியே?
இப்படியாகத் தோழர்களே. இன்னமும் தமிழ் மாத்திரம் காட்டுமிராண்டியல்ல. தமிழ் இலக்கியமெல்லாம் காட்டுமிராண்டி. தமிழ்ப் புலவன் எல்லாம் காட்டுமிராண்டிப் பசங்க. இன்னமும் அதைப் பாராட்டிகிட்டு இருக்கிற தமிழன் என்கிற சமுதாயம் பூராவும் காட்டு மிராண்டிப் பசங்க. (பலத்த கைதட்டல் சிரிப்பு) இல்லேன்னு சொல்லட்டுமே நான் அப்படியில்லைன்னு எவனாவது. நான் சொல்லுகிறேன். இந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து எட்டாம் (1968) வருஷத்திலேஇதற்குப் பரிகாரம் பண்ண ஒரு ஆளில்லையே?. இதைஅதிகப்படுத்துகிறதுக்குத்தான்நேற்று (உலகத் தமிழ் மாநாட்டில்)40 லட்சம் ரூபாய் வசூல் பண்ணி நாசம் ஆக்கினானுங்க .எங்கேயோ இருந்துவந்தானாம் தமிழ் பற்றுள்ளவனுங்க. அங்கே 50 பேர் பேசியிருந்ததால், அதிலே 47 பேர் இங்கிலிசிலேதான் பேசினாங்க. தமிழிலே என்ன இருக்குதுன்னு எவனும் பேசலே. தமிழைப் பற்றி பேசுகிற போது ஏண்டா ஒருத்தன் தமிழைக் காட்டுமிராண்டின்னு சொல்லி அதற்கு என்னடா பதில் சொல்றேன்னு கேட்டா காட்டுமிராண்டி இல்லே, ஆனால் தமிழுக்கு இன்னும் கொஞ்சம் யோக்கியதை வரணும் அப்படீன்னு பேசினானாம்.
நான் என்ன சொல்றேன், தமிழர் சமுதாயத்துக்கே, அவர்களுடைய இழிவும், மடமையும் நீக்கும்படியான காரியத்திற்கு இந்த நாட்டிலே ஒருத்தன் கூட இல்லையேஅய்யா? செத்தாலும் பிழைச்சாலும் நாங்கள் தான். எங்க பேருக்கு எவ்வளவு மரியாதை இருக்கப் போவுது?நாங்கள் எத்தனை பேரைத்திருத்தப்போறோம்? எங்களுக்கு பத்திரிகைக்காரன் எவனும் இல்லே. எல்லாப் பத்திரிகையும் எங்களுக்கு விரோதம். பாப்பான் எல்லாம் எங்களுக்கு விரோதி. சாம்பல் அடிச்சிக்கிற முட்டாள் பசங்கள் எல்லாம் எங்களுக்கு விரோதி. பட்டை செம்மண்ணு சுண்ணாம்பு பட்டைநாமம்போடறவனுங்க எல்லாம் எங்களுக்கு விரோதி. அவனுங்க எப்படியோ பிழைச்சிப் போறாங்க. பொது ஜனங்கள் கதி இப்ப எப்படி இருக்கு? கக்கூசு எடுக்கிறவன் நாம. மூட்டை தூக்கிறவன் நாம. தேவடியாள்தனம் பண்ணவேணும்ன்னா நம்ம பொம்பளைங்கதான். உழுகிறவன் நாம, விதைக்கிறவன் நாம. நெய்கிறவங்க நாம. வீடு கட்டுகிறவங்க நாம. உலகில் வேலை பூரா நாமதான் செய்கிறோம். நம்மாலேதான் உலகம்னு ஆகுது. ஆனால் நாமதான் ஈனஜாதி. நம்ம பொம்பளைங்கதான் சூத்திரச்சிங்க. சாஸ்திரப்படி அவுங்க எல்லாம் பாப்பானுக்கு வைப்பாட்டிங்க. நாம் எல்லாம் பாப்பானுக்குப் பிறந்தவனுங்க. சாஸ்திரம் மாத்திரம் அல்ல சட்டமும் அதே மாதிரி. இதுக்கெல்லாம் என்ன பரிகாரம் நாம பண்ணுகிறோம்?
என்னமோ ஓட்டு வாங்கணும். பொறுக்கித்திங்கணும். அதிலும் பாழும் சுதந்திரம் ஒண்ணு வந்தது. ஜனநாயகம், முட்டாள் பசங்களுக்கெல்லாம் ஓட்டு வந்திட்டுது. அயோக்கியப் பசங்களுக்கு எல்லாம் ஓட்டு வந்திட்டுது. இதனாலே காலிப் பயலெல்லாம் வந்து விடுகிறான் மந்திரியாக. நாட்டை ஆள்கிறதுன்னா பொறுப்பு எவ்வளவு இருக்கணும்? எவ்வளவு யோக்கியதை இருக்கணும்? தேர்ந்தெடுத்து பதவியிலே வந்து உட்காருகிறவனுக்கு
எவ்வளவு அந்தஸ்து இருக்கணும்? யோக்கியத்துக்கும், அந்தஸ்துக்கும் இந்த ஓட்டர்களையோ, நிற்கிறவங்களையோ யாருக்காவது பொறுத்தம் இருக்குதோ? பணம் செலவு பண்ணினால் வந்திடுகிறான். பொய்யும் புரட்டையும் புழுகினால் வந்திடுகிறான். வேறு தந்திரம் பண்ணி ஏமாற்றி முயற்சி பண்ணினால் வந்திடுகிறான். அதுக்குப் பேரு என்னடான்னா ஜனநாயகம்கிறான். ஜனங்கள் பார்த்துத் தேர்ந்தெடுத்தாங்கங்கிறான். ஜனங்கள் யார்ரா? அவுங்க யோக்கியதை என்னடா? அவுக அறிவு எவ்வளவு? அவுக ஒழுக்கம் எவ்வளவு? அப்படீன்னு கேட்டா இவனே அதைவிடமோசமாய் இருப்பானே.
நிற்கிறவனே இதையெல்லாம் திருத்த வேண்டாமா? காலிப்பசங்ககளுக் கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதினாலே அதைப் பற்றி எவனும் பேச மாட்டேன்கிறான்.
ஒரு நாட்டை ஆளுகிற யோக்கியதை ஒரு மனிதனுக்கு வேணும். அதுக்கு அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்க வேணும்ன்னா அதுக்கு அந்த மக்களுக்கு எவ்வளவுயோக்கியதை இருக்கணும்? நல்லாயோசனை பண்ணுங்க. நான்பதவிக்கு வரணும்னு சொல்லலே. எனக்கு அது இல்லே நான் நினைக்கலே. நான் உயிர் இருக்கிற வரைக்கும் நிற்கப் போவதில்லை. நம்ம ஆளும் நான் இருக்கிற வரைக்கும் (தேர்தலுக்கு) நிற்கமாட்டாங்க. அப்புறம் என்ன பண்ணுவானுங்களோ? எங்களுக்காக நான் இதைச் சொல்லலே. 3ஙூ கோடி மக்களுக்கு, இந்தியா பூராவும் எடுத்தாலும் 50 கோடி மக்களுக்கு, ஆட்சிக்கு வருகிறவனுக்கு எவ்வளவு யோக்கியதை இருக்கணும்? என்ன யோக்கியதை இருக்கு இப்ப? யார் வேண்டுமானாலும் (பதவிக்கு) வந்திடுகிறானே? என்ன வேணுமானாலும் செய்கிறான். நாடே இந்த கதியாச்சீன்னா. மதம் அப்படி. இலக்கியங்கள் இப்படி கடவுள்ங்கிற யோக்கியதை அப்படி. ஆட்சியினுடைய யோக்கியதை அப்படி (சிரிப்பு) எந்த முறையிலே இன்னைக்கு நாம ஒழுங்காய் - யோக்கியதையாய் - இருக்கிறோம். மனிதத்தன்மையோடு இருக்கிறோம்.ஆகவே தோழர்களே! இன்னொருத்தராலே நாம திருத்தப்படுவோம்னு நினைக்க முடியாது. நமக்கே அறிவு வேணும். நாமே சிந்திக்கவேணும். அதனாலே கொஞ்சம் நட்டம்வந்தாலும் அக்கறையில்லேங்கணும்? என்னநியாயம்? எத்தனைக் கடவுளய்யாநமக்கு உலகத்திலே எங்கேயாவது காட்டுமிராண்டிகள் இருக்கிற நீக்கிரோக்கள் இருக்கிற இடத்திலேயாவது இத்தனை கடவுள் இருக்கிறானா? என்னத்துக்காக இவ்வளவு கடவுள்? ஒவ்வொரு கடவுளாலே ஒவ்வொரு அயோக்கியப் பயல் முளைச்சிக்கிறான். எந்தக் கடவுளை வைச்சாலும் நாமதான் தொலைக்கிறோம். நம்ம காசைக் கொட்டி, நம்ம அறிவைக் கொண்டு, போய் வீணாக்குகிறோம்.
உதாரணமாக மாமாங்கம் என்கிறான். குளம் பொங்கிச்சிங்கிறான் கும்பகோணத்திலே ஆயிரக்கணக்கிலே இலட்சக் கணக்கிலே குளிக்க திடுதிடுன்னு இறங்குகிறான். ஆம்பளையோ பொம்பளையோ, நினைச்சால் அவர்களுக்கு ஒண்ணுக்கு(சிறுநீர் கழிக்க) வந்தால் எங்கே போவாங்க. இல்லே அந்தநெருக்கடியிலே எங்கேபோவாங்க.சிறுநீர்கழிக்க நீங்க நினைக்கணும். உங்களுக்கு ஒண்ணுக்கு வருகிறதய்யாஎங்கேபோவீங்க?
(சிரிப்பு) மேலே ஏற வேணும். குளத்திலிருந்து மேலே ஏறினால் லட்சக்கணக்கான மக்கள் அவதி. ஒண்ணுக்குஇருக்க வேணும்னா ஒரு பர்லாங்கு போனால் கூட ஜனங்கள் மாறமாட்டாங்க. பொம்பளைங்க இருப்பாங்க. மறைவான இடம் இல்லை. வெகு தூரத்திலே இருக்கு இடம். என்ன நட்டம்? விட்டறது அப்படியே சர்ருன்னு குளத்திலேயே (கைதட்டல் சிரிப்பு) ஆளுக்குக் கொஞ்சம் விட்டானா அது தான் தண்ணீரிலே மூத்திரம் விட்டால் அந்த மூத்திரம் கொப்பளிக்கும்.
இந்த முட்டாளுங்க பொங்குது, பொங்குதுன்னுடறானுங்க (சிரிப்பு) அவுக பாட்டுக்கு குளிச்சிட்டு போறாங்க.என்னா? அவுக பாவத்தைக் கழுவுவதற்கு இதிலே வந்து குளிச்சானுங்க. இதிலே வந்த பாவத்தைக் கழுவதற்கு எதிலே போயி குளிக்கிறது?
என்ன,இந்தக்கதைப்பொருத்தம்? நதிகள் எல்லாம் இங்கே வருமா? அதிலே குளித்தால் அவள் எல்லாம் பொம்பளை ஆகி விடுவாளோ? இவ்வளவு புளுகு நடக்குது. ஒரு நாளைக்கு 10, 20 லட்ச ரூபாய்க்கு மேலே செலவு. ஜனங்களுக்கு அரசாங்கத்துக்கு முனிசிபாலிட்டிக்கு. போகிற ஜனங்கள் லட்சம் பேருக்கு குறையாமல் போவாங்க. ஒவ்வொருத்தனுக்கும் எவ்வளவு ரூபாய் செலவாகும். மற்ற ஜில்லாவிலே இருந்து போகிறவனுக்கு 20 ரூபாய், 50 ரூபாய் 100 ரூபாய் கூட செலவாகுமே. இவ்வளவும் அங்கே (கும்பகோணத்திலே) இருக்கிற பாப்பாரப் பசங்க பொறுக்கித் திங்கபோறாங்க. அவனுங்களுக்கு ஒரு பெரிய வெள்ளாமை மாதிரி. ஆளுக்கு 10 ஆயிரம், 15 ஆயிரம், 20 ஆயிரம் சம்பாதிச்சிக்கப் போறான். முட்டாள் பசங்க பழனிக்குப் போயி மொட்டையை அடிச்சிகிட்டு தலையைத் தடவிகிட்டு வருகிறாப்பிலே. காசைஎல்லாம் கொடுத்திட்டு சிவனேன்னு பெண்டு பிள்ளையைக் கூட்டிகிட்டு வருகிறவன்தானே. இவன் பாவம் எங்கே போயிடும்? அதிலே போயி குளித்தால் பாவமெல்லாம் போயிடும்னா அப்புறம் என்ன வேண்டுமானாலும் பண்ணுவானே ஒரு மனுஷன். இதுகளை எல்லாம் நீங்கள் சிந்திக்க வேணும்.
எவனும் உங்களுக்குப் புத்தி சொல்லி மாற்ற முடியாது. எதை எடுத்தாலும் இதைப் பாதுகாக்கிறாப்பிலே இதுக்கு ஆதரவு சொல்றாப்பிலேதான் வருமே தவிர, இதை மாற்றும்படியாக ஒண்ணும்வராது. மக்கள் அவர்கள் அவர்களாகவே முயற்சி பண்ணி செய்யவேண்டிய காரியம்.நம்ம இளைஞர்கள் செய்ய வேண்டும் கடவுள் என்கிற எண்ணத்தையே விட்டுவிட வேண்டும். இந்த சாம்பல் அடிச்சிக்கிறதோ, நாமம் அடிச்சிக்கிறதோ, இந்தக் குழவிக்கல்லுகளை (கடவுளை) போயி கும்பிடுகிறதோ, இதுவெல்லாம் முட்டாள்தனம்னு ஒவ்வொருத்தனும் உணரணும்.
உங்களுக்குக் கடவுள் கிட்டே பயம் இருக்கணும்னா நான் வேணாங்கிலியே. கடவுள்கிட்டே பயம் இருக்கணும்கிறதுக்கு என்னா அர்த்தம்? மனுஷன் ஒழுக்கமாய் இருக்க வேணும்கிறதுக்கு அர்த்தம் உண்டு. கடவுள்கிட்டே பயப்படுகிறவன்னு சொன்னா ஒழுக்கமாய் இருக்கிறவன் யாரையும் ஏமாற்றாமல், எவனுக்கும் தொல்லை இல்லாமல் இருக்கணும். எவனையும் வஞ்சிக்காமல் தன்னால் ஆன உதவியை மற்றவனுக்குச் செய்துகிட்டு கூடுமானவரைக்கும் நாணயமாய் இருக்கிறவன் அவன் தானே. கடவுளுக்குப்பக்தி, பயப்படுகிறவன், திருடுகிறவன் மோசம் பண்ணுகிறான். பொய் பேசுகிறான். கடவுளுடைய தாலியை அறுத்துகிட்டு வந்திடுகிறான். (சாமி) சேலையை அவிழ்த்துகிட்டு அவளை (கடவுளை)அம்மனமாய் விட்டுவிட்டு வந்து விடுகிறான். (சிரிப்பு) இதெல்லாம் நடக்குது. கடவுளால் நடக்குதுன்னு சொன்னா முட்டாள் தனத்துக்கு மேலே முட்டாள்தனம் என்கிறாப்பிலே இதிலே எது பொறுத்த மானது, மரியாதை பண்ணக்கூடியது, இதையெல்லாம் விட இப்ப நமக்கு, இப்ப வந்திருக்கிற அபாயம் அரசியல் விஷயமாய் பெரிய தொல்லை.
எல்லோரையும் இந்தி படிக்க வேணும்கிறான். நம்ம பிள்ளைகளுக்கு அது நுழையவே நுழையாது. இந்தி படிச்சாக்க இங்கிலீஸ் படிக்காவிட்டாலும் உத்தியோகம் பார்க்கலாம் என்கிறான். நாம உத்தியோகத்துக்குப் போகனும்னா இங்கீலீஸ் படிக்க வேணும். இங்கிலீஸ் ஒண்ணு மாத்திரம் மட்டும் படித்தால் போதாது. நம்ம தமிழ் படிப்பும் படிக்கணும். அப்புறம் உத்தியோகத்துக்குப் போனால் இந்தியும் நமக்குத்தெரிஞ்சு இருக்கவேணும். ஆகவே நமக்கு உத்தியோகம் வேணும்னா மூணுபாஷை படிக்க வேணும். வட நாட்டானுக்கு உத்தியோகம் வேணும்ன்னா இந்திமாத்திரம் படிச்சால் போதும்.
காரணம் என்னான்னா? கூடுமானவரைக்கும் நம்மை அரசியல் சம்பந்தத்திலே இருந்து ஒழிக்க வேணும்னுதான் போட்டிட்டான். என்னடான்னு சொன்னா? அரசியல் பாஷை, தேசிய பாஷை எப்படிடான்னா அரசில் சட்டப்படிங்கிறான். அரசியல் சட்டம்னா என்னா? யாருக்கு அது சம்பந்தப்பட்டது? ஏறக்குறைய ஓட்டுப் பார்த்தால் 20, 30 கோடி மக்கள் ஓட்டர்கள் இருப்பார்கள் இந்திய பூராவுக்கும். நம்ம நாட்டிலே பார்த்தாலும் ஏறக்குறைய ஒரு கோடிக்குக்மேலே 2 கோடி ஓட்டர்கள் இருப்பார்கள். நான் கேட்கிறேன்? இந்த 2 கோடி ஓட்டரிலே எவனுக்காவது சம்மந்தமுண்டா? இந்த அரசியல் சட்டம்? இல்லை.
இந்தியாவிலே இருக்கிற 20,30 கோடிக்கு மேற்பட்ட ஓட்டர்களிலே இவர்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிலே எவனுக்காவது சம்பந்தமுண்டோ இந்த அரசியல் சட்டம்? ஓட்டுரிமை வருவதற்கு முன்னேயே ஓட்டர் பிரதிநிதிகள் வருவதற்கு முன்னேயே செய்யப்பட்ட சட்டம் அரசியல் சட்டம். ஓட்டுரிமை வந்தது 1951லே.அரசியல் சட்டம் செய்யப்பட்டது 1948-1949 லே. 1949 லே செய்யப்பட்டஅரசியல்சட்டத்தை1952லே (தேர்தலில்) வந்தவனுக்குக் கட்டுப் பட்டதுன்னா என்ன நியாயம்? அந்த அரசியல் சட்டம் செய்கிறபோது யார், யார், இருந்தாங்கன்னா? அஞ்சுபேரு இருந்தானுங்க. அவர்கள் தான் கமிட்டி. ஒருத்தர் என்.கோபால்சாமி அய்யங்கார். ஒருத்தர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இன்னொருத்தர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி இன்னொருவர் கே.எம்.முன்சி. அப்புறம் எவரோ அனாமதேய துலுக்கர் (மும்மதுசாதுல்லா). அப்புறம் டாக்டர் (B.R.) அம்பேத்கர். அம்பேத்கர் கொஞ்சம் குதித்தார். அவருக்கு லஞ்சம் கொடுத்திட்டாங்க. என்னடான்னா? உங்கள் ஜாதிக்கு எவ்வளவு வேண்டு மானாலும் எடுத்துக்க (இடஒதுக்கீடு) மற்றவங்களைப் பற்றிப் பேசாதேன்னுட்டாங்க. அவரு இதுதான் சமயம்ன்னு உடனே, அந்த ஆதி திராவிட ஜாதிக்கு விகிதாச்சாரம் கொடுத்திடுன்னுட்டார். அந்த ஆதித்திராவிட ஜாதிக்கு 100க்கு 16 இடம்.
அவர்கள் ஜனத்தொகை 100க்கு 16 ஆக இருந்தது அப்போ. எடுத்துக்கொள்ளுன்னுட்டாங்க. மற்றவங்க பேசினான். பேசக் கூடாதுன்னுட்டாங்க. பேசாமல் அவர்கள் நாலுபேரும் பண்ணினதற்குக் கையெழுத்துப் போட்டிட்டாரு அம்பேத்கர். அவனவன் வேண்டியபடி (சட்டம்) எழுதிகிட்டான். நாடு பூராவும் இந்திய அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்டது. இந்திய அரசாங்கம் பிரியவே கூடாது. இந்திய அரசாங்க மொழி இந்திதான். மற்றும் அவனுக்கு வசதியான மாதிரிஎல்லாம் பண்ணிகிட்டான். இந்த சட்டத்தை எவனாலும் மாற்றக்கூடாது. சட்டம் பண்ணினது மாத்திரம் பெரிதல்லவே. அந்தச் சட்டம் உலகம் உள்ள வரைக்கும் மாற்ற முடியாமல் அல்லவா பண்ணிட்டான். என்ன அப்படீன்னா? ஒரு சட்டம் பண்ணவேணும். சிந்திக்க வேணும்ன்னா ஒரு 100 பேரு இருந்தால் 51 பேர் இருந்தால் போதும். அவர்கள் சொன்னபடி நடக்கணும். அதற்குப் பேருதான் ஜனநாயகம்.
ஆனால் இந்தப் பயல் எழுதியிருக்கிற ஜனநாயகம் என்ன தெரியுமோ? 100 பேர் இருந்தால் 75 பேர் இருந்தால் தான் செல்லும். அப்படி செய்துவிட்டால் 75 பேரு எங்கே சென்று கேட்கப் போகிறது? இந்த நாடு ஒரு அனாதை நாடு. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு ஜாதி ஒவ்வொருமுறை ஒவ்வொரு பழக்கம். ஒருத்தனுக்கு ஒருத்தன் விரோதம். 75 பேர் சேர்ந்து ஓட்டுக் கொடுத்து என்னைக்கு மாற்றப் போகிறாங்க. அவனுங்களுக்கு வேண்டியதுன்னா ஒரு நிமிஷத்திலே சேர்ந்துகிறானுங்க. அய்நூற்று சில்லரை பேர் இருக்கிற பார்லிமெண்ட் மெம்பர்களிலே, தமிழன் எல்லாம் சேர்ந்தால் 40 பேர்தான். தமிழனுக்கு வேண்டியதைச் சட்டம் பண்ணவேண்டுமானால் 375 பேர் இருந்து ஓட்டு பண்ணினால் தான் முடியும். இந்த 40 பேர் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஓட்டு பண்ணினாலும் ஒண்ணுக்கும் முடியாமல் குப்பைத்தொட்டிக்குத் தானே போகும். உலகம் உள்ளவரைக்கும் நமக்கு ஒரு காரியமும் நடக்காது. அரசாங்கத்து மூலமாய்.
ஏனென்றால் மெஜாரிட்டிங்கிறான். ஏண்டான்னா? அரசியல் சட்டம்ங்கிறான். அரசியல் சட்டத்திலே எழுதிக்கிட்டான். முதல் வாசகம் உலகம் உள்ள வரைக்கும் இந்தி பூராவும் ஒரே நாடு எவனாவது பிரியவேணும்னாசொன்னா இப்போது சட்டம் செய்து விட்டான். ஏழுவருஷம் அவனைத் தண்டிக்கலாம்ன்னு எழுதிவிட்டான். அதை மூலாதாரக் கொள்கையிலே கொண்டுப்போய் சேர்த்து விட்டான். உலகம் உள்ள வரைக்கும் நாம் தலைதூக்க முடியாது. பிரிஞ்சிபோனால் ஒழிய. கொஞ்ச நேரத்துக்கு முன்னே நண்பர் பாண்டியன் சொன்னாற்போல நாம வடநாட்டுக்காட்டிலே இருந்து பிரிஞ்சாதான் நமக்கு இருந்து வருகிற இந்த மூடநம்பிக்கைகள் இழிவுகள் முன்னேற ஒட்டாமல் இருக்கிற தடைகள் நம்ம நாட்டை ஆள்வதில் நமக்கு உரிமைகள் எல்லாம் கிடைக்கும். எவன் பிரிவதற்குச் சம்மந்தப் படுவான்.
காங்கிரஸ்காரன் ஒரு நாளும் சம்மந்தப்படவே மாட்டான். சம்மதிக்கவே மாட்டான்பிரிவதற்கு.ஏறக்குறைய காங்கிரசிலே இருக்கிற அத்தனை பேரும். அந்த மத்திய சர்க்கார் இருக்கிறதினாலே தான் இவர்கள் எல்லாம் பதவிக்கு வர யோக்கியதை இருக்குது. இவனுங்களுக்கு ஜனங்கள்கிட்டே ஒண்ணும் செல்வாக்குக்கிடையாது. எது வேண்டு மானாலும் இவன்களுக்கு ஏற்ற மாதிரியாக மத்திய அரசாங்கத்திலே இருந்து செய்துகிறானுங்க. ஆகையினாலே நமக்கு (டில்லியோடு) ஒண்ணாயிருக்கிறவரையிலும் அடிமையாய் அவர்கள் செய்வதற்குக் கீழ்ப்பட்டு சொன்னபடி கேட்கிறேன் தோப்புக்கரணம் என்றால் எண்ணிக்கோங்கிற மாதிரி இருந்தால் தான் நாம இங்கே மனிதனாக வாழமுடியும்.
எது வேண்டுமானாலும் அவன் சொன்ன மாதிரி தான் கண்டிப்பாய் நடக்கணும். இந்த ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறபோது இரட்டை ஆட்சி-ன்னுசொல்வாங்க. ஆட்சியிலே இருக்கிற அனேக இலாக்காக்களிலே ஜஸ்டிஸ் மந்திரிகளுக்குச்சில இலாகா மந்திரிகள் கை வைக்கவே முடியாது. நினைக்கவே முடியாது. அப்படி சில இலாகா. அந்த இலாக்கா எல்லாம் வெள்ளைக்காரனுக்கு. அதே மாதிரி இப்போ இந்தஅரசியல் சட்டத்தையும் இரண்டாய் பிரிச்சிட்டான்.அந்தந்த மாகாண அரசாங்கத்துக்கு சில இலாக்காக்கள்தான். சிலதெல்லாம் மத்திய அரசாங்கத்துக்கு இரண்டையும் சேர்ந்து பண்ணுகிறாப்பிலே இருந்தாலும் 100க்கு 75 பேருக்கு மேலே ஓட்டு பண்ணினால்தான் உண்டு. டயார்க்கி (DYARCHY) அவனுக்கு முக்கால்வாசிப் பங்கு. நமக்குக்கால்வாசிப் பங்கு. அந்த முக்கால் வாசிக்கு அவன்தான் எஜமானன். அதைப் பற்றி பேசவே நமக்கு யோக்கியதை இல்லை.
வடவர் ஆதிக்கம்:-
அப்புறம் இன்னைக்கு நடக்குது - நம்ம ஆளுக. அங்கே பியூனாக, வேலைக்காரனாக, கூலிக்காரனாகப் போய்ச் சேர்ந்திருக்கிறான். பம்பாயிலேயோ, கல்கத்தாவிலேயோ இன்னும் எந்த நாட்டிலேயோ அங்கே இருந்து இங்கே வந்தவன் எல்லாம் இங்கே சௌகாராக இருக்கிறான். கோயங்கா, பிர்லா -டாடா - பாடா அவன் இவன் ஒவ்வொரு சேட்டும் ஒவ்வொரு வடநாட்டுக்காரனும் மில்லுகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரங்கள். பல கோடிக்கணக்கான ரூபாய்க்குப் பங்குகள் எல்லாம் அவனுங்ககிட்டே இருக்குது. நம்ம மாகாண பாங்கிகளை எல்லாத்தையும் ஒண்ணாய்ச் சேர்த்து வடநாட்டிலே இருக்கிற ஒருத்தன் பாங்கியை ஒண்ணா வைச்சோமானால் அதுக்குச் சமானமான பணமில்லே நம்ம தென்னாட்டிலே இருக்கிற பாங்கிகள் அவ்வளவும் சேர்ந்தாலும், இங்கே வியாபாரிகள் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் சேர்த்து அங்கே ஒருத்தன் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் பார்த்தோமானால், அவ்வளவு இல்லை.
ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வருஷத்திலே 30 கோடி ரூபாய், 25 கோடி ரூபாய் லாபம் வருது. இந்தியா பூராவிலும் வியாபாரம் பண்ணி சம்பாதிக்கிறான். நம்மில்லே எல்லா வியாபாரி லாபத்தைப் போட்டாலும் கூட 30 கோடியாகாதே. அந்த மாதிரி அமைச்சிகிட்டு, ஒண்ணாதான் இருக்கணும். சட்டப்படி யார் எங்கே வேணுமானாலும் போயி, எவ்வளவு வேணுமானாலும் சம்பாரிச்சி எங்கே வேண்டுமானாலும் கொண்டு போகலாம்ன்னு எழுதியிருக்கிறான். நாம எங்கே போகிறோம்? மூட்டைத் தூக்குகிற வேலைக்குப் போகிறோம். பியூன் வேலைக்குப் போகிறோம் பம்பாயிக்கு. அவன் எங்கேவருகிறான்? பெரிய வியாபாரம் செய்ய இங்கே வருகிறான். திருப்பி முடியுமான்னா நம்மாலே எப்படி முடியும்? ஒருத்தனுக்கு 700 கோடி ரூயாய் சொத்து இருக்குது. 1000 கோடி ரூபாய் சொத்து இருக்குது. ஒருத்தனுக்கு இங்கே எவனுக்கு அந்த மாதிரி பணம் இருக்குது? அவனோடு நாம போட்டி போட வேணும்னா உழைச்சி கொடுத்திட்டு, கூலிக்காரனாய் இருக்க வேண்டுமே தவிர வேறெ என்னா? ஆனதினாலே நல்ல வாய்ப்பு என்னமாவது கஷ்டப்பட்டு நம்ம நாட்டை இப்ப நாம பிரிச்சிக்க வேணும். பிரிஞ்சா நாம மளமளன்னு முன்னேற்றமடைஞ்சிக்கலாம். ஒரு துறையிலே மாத்திரமல்ல, அறிவுத்துறையிலே, சமுதாயத்துறையிலே, வியாபாரத்துறையிலே, விவசாயத் துறையிலே, இப்ப எல்லாம் அவன் வடிகட்டிகிட்டு அவன் பார்த்து அந்த கசமாலத்தைத் தள்ளுகிற அளவுக்குத்தான். தெளிவெல்லாம் அவனுக்குத்தான். ஆகவே தோழர்களே! நம்முடைய நிலைமை பலவிதத்தியும் ரொம்பபரிதாபமாக இருக்குது. நமக்குஅறிவுமில்லே, மானமும் இல்லே, உணர்ச்சியுமில்லே. இவைகளை எல்லாம் நீங்கள் நல்ல வண்ணம் சிந்திக்கவேணும்.
நான் நினைக்கிறேன். சீக்கிரத்திலே நாம் பிரிவினை உணர்ச்சிக்கு ஒரு கிளர்ச்சி துவக்கமுடியுமான்னு. துவக்கி ஆகணும். இப்ப ஏதோ கொஞ்சம் நல்ல வாய்ப்பு இருக்குது. சில பேருக்காவது உணர்ச்சி. இந்த சமயத்திலே ஆரம்பிப்பான் டில்லிக்காரன்.
ஜெயிலிலே போடுவேன் என்பான். ஸ்தாபனத்தை எல்லாம் கலைப்பான் .சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கிட்டேன் என்பான். எல்லாத்துக்கும் சம்மதிக்கணும். சம்மதிக்கவேணும். அப்புறம் நமக்குச் சுதந்திரம் வந்திட்டா நம்ம வசதி போல பண்ணிக்கலாம். இப்ப சுதந்திரம் சுதந்திரம் என்று சொல்லுகிறதெல்லாம் சும்மா. நந்தவனத்துக்கு வந்த சுதந்திரம் என்னான்னா? கழுதை மேயிராப்பிலே ஆச்சீங்கிற மாதிரி. (கைதட்டல்) அவ்வளவு தான் சுதந்திரம்.
சுதந்திரத்தினாலே இப்ப நாம் என்ன வாழ்கிறோம். யாரோ, நாலுபசங்களுக்குப் பணம் வருகிறது, மந்திரியாகிறான். பார்லிமெண்டுக்கு மெம்பராகிறான். மாசம் 1000, 500 சம்பாதிக்கிறான். சாப்பிடுகிறான். பிழைக்கிறான். உங்களுக்கும் நமக்கும் என்னா? நம்ம உரிமைக்குன்னு கேட்கிறதுக்கு எந்த ஸ்தாபனம் இருக்குது? செய்யனும்னாலும் அவனாலே என்ன முடியும்? ஆகவேதான் பகுத்தறிவு ஸ்தாபனக்காரர்கள் என்று நாங்கள் சொல்லுகிற தினுடையபலன், எல்லா விஷயங்களையும் நல்லபடி சிந்திக்க வேணும். மனசிற்குச்சரியெனப்பட்டதைத் துணிஞ்சி செய்யணும். சில பேராவது கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கிறதுக்கு முன்னாலே வரணும். எவனோ பாடுபட்டு என்னமோ பண்ணிட்டுப் போகட்டும் அப்படீன்னு நினைச்சி, நாம இன்னொருத்தன் பண்ணினால், அதில் நாம் குளிர்காயலாம்ன்னு இருந்தால் நாமும் கெட்டுப் போவோம். நாடும் கெட்டுப் போகும். எல்லோருக்கும் ஆபத்து தான். துணிஞ்சு நாம முன்னுக்கு வரவேணும். நான் சொல்லுகிறதை அப்படியே ஒத்துக்க வேணும்ன்னு நான் கட்டாயம் இல்லே. இதையெல்லாம் நீங்கள் கேட்க வேணும்னு நான் கட்டாயப்படுத்தலே. நீங்கள் இதுகளை எல்லாம் கவனிச்சிங்க. நல்லாகாதிலே வாங்கினீங்க. இனி சரியா? தப்பான்னு சுதந்திரமாய் ஒரு பற்றுதலும் இல்லாமல் சிந்திக்க வேணும். அதிலே மதத்தையோ, கடவுளையோ, அல்லது நாட்டையோ, சாஸ்திர சம்பிரதாயங் களையோ, போடாமல் அசல் உங்கள் அறிவு உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னு கேட்க வேணும்.
அதிலே உங்களுக்கு என்ன தென்படுகிறதோ அதற்கு நீங்கள் உறப்பாய் இருக்கணும். நான் சொல்லுவது தப்பாய் இருக்கலாம். நாம் மாத்திரம், எனக்கு மாத்திரம், திருப்தியாக இருந்தாலும் இருக்கலாம். அது பொதுவாய் நியாயம் தானா? என்கிறது உங்கள் அறிவினாலேதான் அது முடிவு பண்ணவேணும். எந்த காரியமும் அப்படி செய்தால்தான் நமக்கு நம்ம கொள்கைக்கோ அறிவுக்கோ, லட்சியத்துக்கோ, மரியாதை ஏற்படும். இன்னொருத்தன் சொன்னான், சுதந்திரம் கொடுத்தான்னார். சொன்னதுக்கெல்லாம் கையெடுத்தோம். ஜெயிலுக்குப் போனோம். பண்ணாத அக்ரமம் எல்லாம் பண்ணினோம். சுதந்திரம் வந்ததுன்னாங்க. கேடுதான் வந்திட்டுது. இப்ப அக்ரமம் நடக்குது. பசங்க இப்படி பண்ணினாங்க. ஜனங்கள் இப்படி பண்ணினாங்கன்னு பேசுகிறான். எப்படி நடக்காமல் இருந்தது?
காந்தி இருக்கிறபோதும் இந்த அக்ரமம் எல்லாம் அப்பதானே உண்டானது. அதுக்கு முன்னே எவனும் இந்த வேலை பண்ணவே இல்லையோ. நம்ம நாட்டிலே கொலை பாதகம் எல்லாம் இந்தக் காங்கிரசு, இந்திராகாந்தி, இவர்கள் கற்றுக் கொடுத்ததுதான். காங்கிரசுதான் வெள்ளைக்காரனை எல்லாம் சுட்டான். வெள்ளைக்காரன் பேரிலே வெடிகுண்டு போட்டான். ரயிலைக் கவிழ்த்தினான். தண்டவாளத்தைப் பெயர்த்தான். ரயில்வே ஸ்டேஷனுக்கு நெருப்பு வைச்சான். போஸ்டாபீஸ்க்குநெருப்பு வைச்சான். கோர்ட்டுக்கு நெருப்பு வைச்சான். யாரு வைச்சா? இதுவெல்லாம் காங்கிரசு தானே? காங்கிரஸ்காரன்தானே, காந்தி காலத்திலே தானே இது வெல்லாம் நடந்தது. சுதந்திரத்துக்கு அதுதான் வழின்னு சொல்லிட்டுப் போயிட்டார்.
இப்போது எவனெவன் சுதந்திரம் வேணும்கிறானோ அவன்
எல்லாம் இந்த வேலையிலே தான் இறங்குகிறான். அதை எப்படி நீ மாற்றுகிறேன்னு சொல்ல முடியும். எப்படி தப்புன்னு
சொல்ல முடியும்? 540 ரயில்வே ஸ்டேஷன்களை எரிச்சிருக்கிறாங்க. 960 போஸ்டாபீஸ்களை கொளுத்தினாங்க. 54 மைல் சராசரி ஒட்டுமொத்தமாய் ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தி ரயிலைக் கவிழ்த்திருக்கிறாங்க. அப்புறம் என்னா? அதுக்கு மேலே கொலைகளையும் பண்ணியிருக்கிறாங்க வெடிகுண்டையும் தூக்கிக்கிட்டே திரிஞ்சியிருக்கிறானுங்க. இதையெல்லாம் காங்கிரசு
பண்ணலேன்னு சொல்ல முடியுமா? அதுவும் சும்மா பண்ணலேயே. காந்தியார் காலத்திலே தானே. இதுவெல்லாம் நடந்தது. இவுக பண்ணினால் அதுதேசாபிமானம். மற்றவன்கள் பண்ணினால் அது காலித்தனமா? ஆகவே என்னமாவது பண்ணி நாம் நம்முடைய நாட்டை சுதந்திர நாடாக ஆக்கிக்கிட்டு நாம சுதந்திரநாட்டு மக்களாக ஆகவேணும். அதற்காக எல்லாரும் மனப்பூர்த்தியாக பாடுபடணும். உங்கசக்தி எவ்வளவு உபயோகப் படுத்த வேணுமோ அவ்வளவு உபயோகப்படுத்த வேணும். இதுவெல்லாம் நிமிஷத்திலே கசாமுசான்னு ஆகிடும். அது ஒருநாட்டினுடைய விடுதலைக்குச் சுதந்திரத்துக்குப் பண்ணினால் கட்டாயம் நம்முடைய பின் சந்ததிகள் எல்லாம் அனுபவிக்குது. ஆரம்பிச்சிடுவோம், சீக்கிரம் ஒரு வருஷத்துக்குள்ளாகவே. நடக்கும்ன்னு நினைக்கிறேன். இப்ப
இந்த மாணவர்கள் செய்கிற சங்கதி நிஜமாய் இருக்குமானால் அவர்கள் பேசுகிறதெல்லாம் உண்மையாகவே இருக்குமானால் ஒரு வருஷத்துக்குள்ளே வந்துவிடும் சுதந்திரப் போராட்டம். (கைதட்டல்) நாங்கள் எங்கள் பாட்டுக்குத் தயாராய்த்தான் இருக்கிறோம். (கைதட்டல்) இவர்கள் நினைக்கிறதுக்கு முன்னமேயேநான் சொன்னவன். 1938லேயே நான் நம்நாட்டுக்குச் சுதந்திரம் வேணும்ன்னு சொல்லியிருக்கிறேன். இந்தியாவிலிருந்து தணிச்சிக்க வேணும்ன்னு. இன்றைய வரையிலும் சொல்லிகிட்டே வருகிறேன். இப்போதும் எழுதிகிட்டே வருகிறேன். நான் ஆரம்பிக்கப் போகிறேன். நான் ஆரம்பிக்கப் போகிறேன்னு.
ஆகவே பொதுவான உணர்ச்சி உள்ளவங்க சமுதாயத்துக்கோ நம்முடைய நாட்டு நன்மைக்காகவோ, ஏதாவது காரியம் செய்யவேணும்ன்னு கருதினால் அவர்கள் உறுதி பண்ணிக்க வேண்டியது. சுதந்திரத்துக்காக நான் என்னமும் செய்யத் தயாராய் இருக்கிறேன். என்னுடைய வாழ்வை அதுக்கு ஒப்புவிக்கிறேன் என்கிறதாக ஒவ்வொருத்தரும் தீர்மானம் பண்ணிக்கவேணும். நடக்கட்டும் எதுகெட்டுப் போகும்? ஜெயிலே போடுவான். எவ்வளவு நாளைக்குப் போடுவான். கொல்லுவான். எத்தனை பேரு சாவாங்க? 5 பேர் 10 பேர் செத்தாலும் பெரியதாய் விடும். நாம அவ்வளவு வறுத்திக்கிறதில்லே. நம்மக் காரியத்தைச் செய்கிறபோது அந்த மாதிரி வந்தால் விட்டு விட்டு ஓடுகிறதா? ஆகையினாலே அருமைத் தோழர்களே! நீங்கள் நல்லபடி சிந்தியுங்கள். முடிவு கட்டுங்கள். ஒவ்வொருத்தரும் பங்கு எடுத்துங்க. நம்ம தாய்மார்களும் கூடுமான அளவுக்கு துணிஞ்சிக்க வேணும். பிள்ளைகளையோ, பிறந்தவர்களையோ, மக்களையோ, கணவன் மாரையோ அனுப்புகிறதுக்குத்
தயாராய் இருக்கவேணும். அவர்களும் செய்யக்கூடிய அளவுக்குச் செய்யணும். நாட்டுக்கு இனிமேல் நன்மை. அதுவும் நமக்கும் ஒரு விடுதலை என்று இருந்தால் இதுதான். சும்மா குலவிக்கல்லைக் கும்பிடுகிறது. சாம்பல் அடிச்சிக்கிறது. விழுந்து கும்பிடுகிறது. சாமிக்குக் கல்யாணம் பண்ணுகிறது. அதைத் தூக்கிக்கிட்டு தேவடியாள் வீட்டுக்குப் போகிறது. அதிலே ஒண்ணும் சாதனையாகிவிடாது.
எனவே இவ்வளவு நேரம் நீங்கள் பொறுமையோடு இருந்து இந்தக் காரியங்களை கவனிச்சி கேட்டதற்கு நான் நன்றி செலுத்துவதோடு,. மறுபடியும் நான் சொல்லுகிறேன் கண்னை மூடிகிட்டு நம்பாமல் விஷயங்களை நல்ல அளவில் சிந்தித்து உங்களுக்குத் தோனினதைச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன். வணக்கம்.
நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி
Comments
Post a Comment