கடைசி நேரத்திலும் நிதானம் இழக்கவில்லை



தந்தை பெரியார் அவர்களின் சொந்த மருத்துவராகப் பல்லாண்டு காலம் சேவை செய்தவர் பேராசிரியர் டாக்டர் கே.இராமச்சந்திரா. தந்தை பெரியார் அவர்களை டாக்டர் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் நன்கு அறிந்தவர், புரிந்தவர். விடுதலை மலருக்கென்றே அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த விடைகளும். இதோ படியுங்கள்:-

கேள்வி: டாக்டர் அவர்களே, தாங்கள் தந்தை பெரியார் அவர்களின் சொந்த மருத்துவராகப் பல ஆண்டுகள் இருந்திருக்கிறீர்கள். அவரை ஒரு நோயாளி என்ற முறையிலும் பார்த்து வைத்தியம் செய்திருக்கிறீர்கள். மற்ற நேரங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறீர்கள். அவர் நோயாளியாக இருந்தபோது எப்படி நடந்து கொண்டார் - மற்ற நேரங்களில் எப்படி நடந்து கொண்டார்?
டாக்டர்: நான் தந்தை பெரியார் அவர்களின் சொந்த மருத்துவராகப் பல ஆண்டுகள் இருந்திருக்கிறேன். இது தவிர, தனிப்பட்ட முறையிலும் நான் அவரைப் பலமுறை சென்று பார்த்திருக்கிறேன். அவரிடம் ஏதேனும் அறிவுரை பெறவோ அல்லது வேறு ஏதாவது காரணமாகவே, நான் என் சொந்த முறையில் அவரை அணுகியிருக்கிறேன்.

டாக்டர் என்ற முறையில் நான் போனாலும் சரி, தனிப்பட்ட முறையில் நான் அவரை அணுகினாலும் சரி, அவர் என்னை நடத்திய முறையில் எந்த வேறுபாடும் இருந்ததில்லை. எனக்கு எவ்வளவு மரியாதை காட்டவேண்டுமோ அதைவிட அதிக மரியாதையே அவர் எப்போதும் காட்டினார். என்மீது எவ்வளவு ஆசையும் அக்கறையும் காட்டவேண்டுமோ அதைவிட அதிக ஆசையும் அக்கறையும் எப்போதும் காட்டினார். தனக்குச் சமமான ஒருவனாகவே என்னை அவர் எப்போதும் கருதி என்னிடம் நடந்துகொண்டார். எந்த முறையில் நான் அவரிடம் போனாலும் என்னிடம் அவர் ஒரே நிலையில் எப்போதுமே நடந்துகொள்வார்.

கேள்வி: நீங்கள் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு வைத்தியம் செய்திருக்-கிறீர்கள். மற்ற நோயாளிகளிடம் காணாத தனித்தன்மை என்று தந்தை பெரியார் அவர்களிடம் தாங்கள் கண்டது என்ன என்று கூறலாமா?
டாக்டர்: ஒரு டாக்டர் என்ற முறையில் நான் பல நோயாளிகளுக்கு வைத்தியம் செய்திருக்கிறேன். அந்த நோயாளிகள், வாழ்வில் எத்தனையோ மட்டத்தைச் சேர்ந்தவர்கள் - ஏழைகள், பணக்காரர்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள், இப்படி என்ற போதிலும் டாக்டரின் ஆலோசனைகள், உத்தரவுகளை அப்படியே கடைப்பிடிக்கும் விஷயத்தில் தந்தை பெரியார் அளவுக்கு இணையான சமதையான பொறுப்புள்ள ஒருவரை நான் எங்கும் கண்டதே இல்லை. டாக்டர் சொல்லிவிட்டாரா; அதைக் கண்ணை மூடிக்கொண்டு அவர் பின்பற்றி விடுவார். நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் கொண்டு அதற்கிசைய நடப்பார். இத்தனை பெரிய மனிதர் ஒருவர் இப்படி நடப்பது பெரிய விஷயமல்லவா? இப்படிப்பட்ட பெருந்தன்மை அவரிடம் குடிகொண்டிருந்த காரணத்தால்தான் அவர் தேச தேசங்களுக்கெல்லாம் தலைவராக ஆக முடிந்தது. அது மட்டுமா? தமது நோயிலிருந்தும் விரைவாகக் குணம் பெறமுடிந்தது.
கேள்வி: தந்தை பெரியார் அவர்களுக்கு 95 வயது ஆகியிருந்தும் - அந்த வயதுக்கேற்ப சில கோளாறுகள் அவர் உடலில் இருந்தும், அவர் வெகு வேகமாகப் பொதுப்பணியாற்றி வந்ததற்குக் காரணம் என்னவாக இருக்கலாம் என்று தாங்கள் ஊகிக்கும் காரணம் என்ன?
டாக்டர்: தந்தை பெரியாரிடம் ஏற்பட்ட பல்வேறு நோய்களுக்கும் நான் வைத்தியம் செய்திருக்கிறேன். இந்த நோய்களில் பல சிறு நோய்கள்தாம்; இப்படிப்பட்ட நோய்கள் அவ்வப்போது அவருக்கு ஏற்பட்ட போதிலும் அவற்றையெல்லாம் சமாளித்து அவர் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார். அதன் மூலம் இந்த நாட்டுக்கும் ஏன், மனித சமுதாயத்துக்கே மிகுந்த பயனுள்ள வாழ்க்கையாகத் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார். அவரது தொண்டு இந்திய நாட்டுக்குப் பொதுவாகவும், தமிழ்நாட்டுக்குக் குறிப்பாகவும் மிகவும் பயன் தந்தது.
மக்கள், காலத்துக்கு இசைந்த வண்ணம் பொருத்தமான வாழ்க்கை வாழவேண்டும்; தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் - பிற்படுத்தப்பட்டுக் கிடக்கும் மக்களின் வாழ்க்கை ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக அவர் கங்கணம் கட்டிக் கொண்டு பாடுபட்டார். இந்த உணர்ச்சிதான் அவரை இவ்வாறு பம்பரமாகச் சுழன்று பொதுப்பணியாற்ற வைத்தது. எல்லா மக்களும் ஏற்றம் பெற்று வாழும் நல்லதொரு சமுதாயம் அமையவேண்டும் - சமத்துவ சமுதாயம் இங்கே அமைக்கப்படவேண்டும் என்ற உள்ளத்து உத்வேகம்தான் தந்தை பெரியாரை அவரது உடல் நோய்களை எல்லாம் சட்டை செய்யாமல் பாடுபட வைத்திருக்கும் என்று நான் ஊகிக்கிறேன்.
கேள்வி: தந்தை பெரியார் அவர்களுக்குக் கடைசியாக வந்த நோயின்போது தாங்கள் முதலிலிருந்தே உடன் இருந்தீர்கள் அல்லவா? அவருடைய கடைசி நாட்களைப் பற்றிக் கூறுங்களேன்.
டாக்டர்: தந்தை பெரியார் அவர்களுக்குக் கடைசியாக ஏற்பட்ட நோயின்போது நான் அவரது படுக்கை அருகிலேயே உடன் இருந்தேன். அதனால் அவரது கடைசி நாட்களைப்பற்றி நான் நன்கு அறிவேன். சென்னை, பொது மருத்துவமனையிலிருந்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றோம். இவ்வாறு இடம் மாற்றியது அவரே விரும்பியதற்கிணங்கவே நடந்தது. தனது சொந்த சர்ஜனான டாக்டர் பட் தனக்குச் சிகிச்சை அளித்தால் நலமாக இருக்கும் என்று அவர் தம் விருப்பத்தைச் சொன்னார். உடனே அவ்வாறே இடமாற்றம் செய்யப்பட்டது.
கடைசி நேரத்திலும் நிதானம் இழக்கவில்லை!
தமது கடைசி நோயின்போது - தமது கடைசி நாட்களின்போது அவர் தமது நிதானத்தைக் கொஞ்சம் கூட இழக்கவில்லை. நோயில்லாத பிற நேரங்களில் அவர் எப்படி நிதானத்துடன் இருந்தாரோ அப்படியே இந்தக் கடைசி நாட்களிலும் அவர் இருந்தார். தம்மைப் பீடித்திருந்த நோயினைத் தாக்குப்பிடிப்பதில் அவர் கிஞ்சித்தும் தளர்ச்சி அடையவே இல்லை.
கேள்வி: தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பொதுவாகத் தங்கள் கருத்து என்ன?
டாக்டர்: தந்தை பெரியார் அவர்களை நான் பல்வேறு நேரங்களில் அணுகியிருக்கிறேன். ஒரு நோயாளி என்ற முறையிலும் நான் பலமுறை அவரிடம் போயிருக்கிறேன். உண்மையிலேயே நோய் ஏற்பட்டு அதற்குச் சிகிச்சை செய்வதற்கு என்று நான் அவரிடம் போனது மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கும். ஏனென்றால், தமது வாழ்வின் கடைசி நாட்களிலன்றி அவர் கடுமையான நோய் எதனாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கவில்லை.
நான் எப்போது அவரைப் பார்க்கப் போனாலும் அன்பு தவழும் சிரிப்பு ஒன்றுடன் என்னை அவர் வரவேற்பார். பல வேளைகளில் நான் ஏதோ பெரிய பிரமுகர் என்பதுபோல அவரது வரவேற்பு அமைந்திருக்கும். நான் அந்த அளவு பிரமுகர் அல்ல என்பதால் எனக்கு அது கூச்சமாக இருக்கும். தமது படுக்கையிலிருந்து அவர் எழுந்து என்னை வரவேற்பார். நிற்பதற்கு அவரால் இயலாது என்றபோதிலும் எழுந்து நிற்பதற்கு அவர் முயற்சி மேற்கொள்வார். என் கரங்களைத் தம் கைகளில் எடுத்துக் கொள்வார்; சில வேளை என் கைகளைத் தமது முகத்திலே ஒத்திக் கொள்வார். மற்றவர்களைப் போலவே டாக்டரிடமும் அவர் பெரிய அளவில் மரியாதை காட்டுவார்.
எந்தவொரு முடிவை அவர் எடுப்பதற்கு முன்னும் அவர் அந்தப் பிரச்சினை பற்றிப் பலரிடமும் ஆலோசனை கேட்பார். அவர் என்னிடமும் கேட்பார் என்றாலும், இறுதியான முடிவு மற்றவர்களின் முடிவாக இருக்காது. தமது சொந்த அபிப்ராயப்படியே அவர்தம் இறுதி முடிவு அமைந்திருக்கும். மற்றவர்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை அறிய அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவார். அவ்வளவுதான். அவர்களது முடிவுகளைத் தமது முடிவுடன் ஒப்பிட்டுப் பார்க்க அவர் ஒருபோதும் தவறமாட்டார்.
அவரது அந்தஸ்து மிகவும் உயர்ந்ததாக இருந்தபோதிலும் அவரது வாழ்க்கை மிகவும் எளிமையாக அமைந்திருந்தது. பளபளப்பாக வெளுத்துச் சலவை மடிப்புக் கலையாத துணிகளை அணிந்த நிலையிலோ, சீவிச்சிங்காரித்து அலங்காரம் செய்துகொண்ட நிலையிலோ நான் அவரை என்றுமே கண்டதில்லை. அரசியல்வாதிகள் ராஜவாழ்க்கை வாழ்கிறார்கள். உண்மையிலேயே ராஜ வாழ்க்கை வாழும் நிலையிலிருந்த தந்தை பெரியார் அவர்கள் மிகச் சாதாரண வாழ்க்கையே வாழ்ந்தார்.
அவரைச் சுற்றிலும் எப்போதுமே பலதரப்பட்டவர்களும் குழுமி இருந்தார்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற பேதமில்லாமல் இவர்கள் அவரிடம் நெருங்கியிருந்தார்கள். தம் அருகே எப்போதும் அவர் ஏதேனும் திண்பண்டம் வைத்து, அதைத் தம் வாயில்போட்டு மென்று கொண்டிருப்பார். எனக்கு இது பிடிக்காது - இத்தனை வயதான ஒருவர் இப்படிப்பட்ட பழக்கத்தில் ஈடுபடுவது மருத்துவ முறைப்படி சரியல்லவே! ஏதாவது வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு விடலாமே என்பது என் பயம்!
மற்றவர்களை அவர் எப்படி வரவேற்பார் என்பதையும் நான் அருகில் இருந்தே கவனித்திருக்கிறேன் தம்மைப் பிடிக்காதவர்கள் தம்மைப் பார்க்கவரும்போதுகூட அதே அன்பும் பணிவும் நிறைந்த மனப்பான்மையுடன் அவர் வரவேற்பார்.
அம்மா மணியம்மையார் மீது அவர் கொண்டிருந்த அன்பும் பாசமும் மிகச் சிறப்பானது!
தந்தை பெரியார் சமுக பணிபுரிய முன்வந்தது எந்த இலட்சியத்துக்காக? சமூகத்தின் சாமானிய மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காகவே. சுற்றுப்பயணத்துக்குத் தேதி கொடுத்து விட்டார் என்றால் அதனை மாற்றிக்கொள்வது என்பதோ, தந்தை பெரியார் அறியாத சங்கதிதான். உடம்பில் சிறு நோய் ஏற்பட்டு உபாதை உண்டாகியிருக்கும். என்றாலும் சுற்றுப்பயணம் திட்டமிட்டப்படி நடந்தே தீரும். நான் உடம்பைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, சுற்றுப்பயணம் மேற்கொள்வது நல்லதல்ல என்பேன். உடனிருப்பவர்களும் சுற்றுப் பயணத்தை ரத்துச் செய்துவிட்டு ஓய்வு எடுக்கும்படி கூறுவார்கள். ஆனால் அவர் உள்ளத்திலுள்ள இலட்சிய வேகம் பிற எதையும்விடச் சக்தி வாய்ந்ததாக இருக்கும். தாம் ஏற்கெனவே கொடுத்த தேதிப்படி சுற்றுப்பயணம் செய்தே தீரவேண்டும் - அதுவே நியாயம் என்று அவர் கருதுவார். அந்தக் கருத்துப்படியே சுற்றுப்பயணம் ஓய்வில்லாமல் தொடரும்; நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவு பெறும்.
பல்வேறு ஜாதிகளையும் வகுப்புகளையும் சேர்ந்த மக்களையெல்லாம் ஒரே சமூகமாக ஒருங்கிணைக்கக் கலப்புத் திருமணங்கள் பெருமளவில் நிகழ வேண்டும் என்று அவர் விரும்பினார். இதுவே அவரது இதயத்தின் பேரார்வம் என்றுகூடக் கூறலாம். இத்தகைய கலப்புத் திருமணங்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவரைப் பார்க்க வேண்டுமே! நடு நாயகமாக ஆர்வமாக முன்னின்று அனைத்தையும் ஆர்வமாகச் செய்து முடிப்பார்.
தந்தை பெரியாரை பொறுத்தமட்டிலும் எல்லா மக்களும் சமமானவர்கள் தாம் - அவர் எந்த ஜாதியை, எந்த வகுப்பைச் சேர்ந்தவரானாலும் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இந்தச் சமுதாயத்தையே பிளவு வேற்றுமையேதும் இல்லாத ஒன்றுபட்ட சமுதாயமாக மாற்ற வேண்டும் என்று அவர் துடித்தார். இங்கே மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒரே சமுதாயமாக ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதே அவரது இலட்சியம். உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவேண்டும் என்றும் அவர் விரும்பினார். தமிழ்நாட்டில் அவர் வரித்துக்கொண்ட இலட்சியப் பணிகள் காரணமாக அவர் தனது உலகப் பயணத்திட்டத்தை விட்டுக்கொடுக்கும் நிலைக்கு ஆளானார்.
தந்தை பெரியார் அவர்கள் ரஷ்யா, ஜெர்மனி மற்ற சில அய்ரோப்பிய நாடுகளுக்குச் சென்றதுபற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போதும்கூட, அவர் ஆங்காங்குள்ள சாதாரண மனிதர்களிடம் தங்கி வாழ்ந்தார். சாமானிய மக்களிடமே உண்டு உறங்கித் தங்கினார் என்பது அவர் சாதாரண மக்கள்மீது கொண்டிருந்த அக்றையைக் காட்டுகிறது அல்லவா?
கேள்வி: தமது வாழ்க்கையின் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை மரணப் படுக்கையில் இருக்கும் மனிதன் உணர்ந்தவுடன் தனது வாழ்க்கையின் சீரிய இலட்சியங்களைக்கூடக் கைவிடுகிற மாதிரி நடந்துகொள்வான் என்று பொதுவாக ஒரு கருத்துக் கூறப்படுகிறதே. தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தமட்டிலும் இந்தக் கருத்து அடிப்படையில் தாங்கள் கண்டது என்ன? தந்தை பெரியாரின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன?
டாக்டர்: தந்தை பெரியார் அவர்கள் கடைசியாக நோய் ஏற்பட்டு, படுக்கையில் இருந்தபோது அவர் பிற மனிதர்களைப் போல நடந்துகொள்ளவில்லை. அவரைப் போன்ற உயர் அந்தஸ்தில் உள்ள பிறர், இதே நிலையில் தமது இலட்சியப் பிடிப்பையெல்லாம் விட்டுவிட்டு இதயம் சோர நின்றுவிடுவது இயல்புதான். ஆனால் தந்தை பெரியார் அவர்களிடம் அப்படிப்பட்ட மாறுதல் எதனையும் நான் துளிகூடக் காணவே இல்லை. அவர் இதற்கு முன்பெல்லாம் எப்படி நடந்துகொண்டாரோ அதேபோன்று தான் இந்தக் கடைசித் தடவையும் அவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. தமது கொள்கைகள், இலட்சியங்களுக்கு முரணான எந்தச் சிந்தனையும் அவர் மனதில் அப்போது தோன்றவே இல்லை. இப்படிப்பட்ட சிந்தனை காரணமாக தாம் உயிர் பிழைத்தெழும் வாய்ப்பு அதிகமாகும் - தம் நோய் குணமாகும் வாய்ப்புப் பெருகும் என்று அவர் கருதியதாக நான் உணரவே இல்லை. தம் நடு நிலையில் நின்று அவர் எப்பக்கமும் சாயவில்லை. தமது நோய் ஏற்பட்ட பிற வேளைகளிலும் அவர் இதே மனநிலையைத்தான் கொண்டிருந்தார்.
நோய் ஒருபுறம் இருக்கும்; மற்றொரு புறம் தாம் கொண்ட இலட்சியக் கடமைகளைப் பற்றியே அவரது சிந்தனை அமைந்திருக்கும். இந்தச் சிந்தனையைப் பற்றியே அவரது பேச்சும் அமையும்.
அந்த இறுதி நாட்களிலும் மருத்துவமனைக்கு வந்து தம்மைப் பாக்கவந்த பிரமுகர்களையும் பிற பொதுமக்களையும் கண்டு அன்பொழுகச் சிரித்துச் சிரித்துத் தம் நோயின் கொடுமையை மறந்தார் - மறைத்தார். இப்படிப்பட்ட உத்தமத் தலைவர் ஒருவர் தம் உயிர் வாழ்க்கை நீடிக்க வேண்டும் என்ற நினைப்பில் சிலர் செய்வதுபோல, தம் வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்தொழுகிய கொள்கைகளிலிருந்து அவர் சிறிதும் பிறழவே இல்லை. அப்படிப்பட்ட ஒரு தலைவரை பல நூற்றாண்டுகள் கழித்தும் இந்த உலகம் காணுமா என்பது என்னைப் பொறுத்தவரையில் சந்தேகமே!
- டாக்டர் கே.இராமச்சந்திரா
            தந்தை பெரியார் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை