திருச்சி புத்தூர் அரசுப் பொது மருத்துவமனை வளாகத்தில் பெரியார் உரை!




31.12.1967இல் திருச்சி புத்தூர் அரசுப்பொது மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் பகுதி பெரியார் .வெ.ரா.மணியம்மை கட்டிடத் திறப்புவிழாவில் தந்தை பெரியார் .வெ. ராமசாமி அவர்கள் முதல்வர் பேரறிஞர் சி.என். அண்ணாதுரை, பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்கள் முன்னிலையில் ஆற்றிய உரை:-

மாண்புமிகு பொதுத்துறை அமைச்சர் அவர்களே! மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே! உயர்திரு டாக்டர் மதுரம் அவர்களே,....மற்றும் தாய்மார்கள் அவர்களே! தோழர்களே, மணியம்மையார் அவர்களே (சிரிப்பு)

மணியம்மை குழந்தைகள் மருத்துவமனை

இன்றைய தினம் நம் பொதுத்துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டபடி இந்த விழா திருமதி மணியம்மையார் பேரால் நிறுவப்பட்ட குழந்தைகள் பகுதி கட்டிடத்தை திறந்து வைத்ததற்காக ஆகும். இச்சிறு பகுதி மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டு மென்பது
மணியம்மையாருக்கு ஆசை ஏற்பட்டதன் பலனாக, முன்னது அமைச்சரவையில் இதைப்பற்றிப் பேசப்பட்டது. நமது டாக்டர் உயர்திரு மதுரம் அவர்கள் இதிலேயும் பங்கு எடுத்துக் கொண்டு அதை அமைக்க முயற்சித்தார்கள்.ஆனால், அப்பொழுது இது முடிவு பெறவில்லை. இப்பொழுது அருமை அமைச்சர் அவர்கள் (அண்ணா முதல்வராக) வந்த பிறகு சீக்கிரத்திலேயே முடிவு ஏற்பட்டு நான் நினைக்கிறேன் பட்ஜட்டிலே கூட செய்யப்படாதகாலம் என்றாலும் நமது முதலமைச்சர் (அண்ணா) அவர்கள் இந்த விஷயம் தெரிந்த உடனே எப்படியாவது சீக்கிரம் முடித்து விடுகிறேன் ஏதோ நீ கொடுக்கிறதைக் கொடு என்று கேட்டார்கள். (சிரிப்பு) உடனே அவருக்கு நான் ஒரு லட்ச ரூபாய்க்குச் செக் எழுதி கொடுத்துவிட்டேன். அவர் எடுத்துக் கொண்ட அவசர நிகழ்ச்சியானது உடனேயே துவக்கும்படியாக ஏற்பட்டுவிட்டது. ஏற்பட்டு கொஞ்ச நாளைக்கு முன்னேதான் இங்கு வந்து இதற்காகவே அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அடிக்கல் நாட்டு விழா நடந்து சுமார் 3,4 மாதத்துக்குள்ளாக இரண்டரைலட்சத்துக்கு மேல் செலவுள்ள இந்தக் கட்டிடம் இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு நல்ல வண்ணமாக நம் இன்ஜினியர் அவர்கள், டாக்டர் அவர்கள் முயற்சி எடுத்து, முடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

பிறப்பைத் தவிர்ப்பீர்  பிறந்ததைக் காப்பீர்

இந்த நாட்டுக்கு இப்படிப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் வேண்டுமென்று நீண்ட நாளாகவே மக்களுக்குள் விருப்பம் இருந்தது. அந்தப்படிக்கே நான் இந்த முயற்சி எடுத்துக் கொண்டேன். ஒரு பக்கம் நான் மக்கள் குழந்தை பெக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்பவன் (சிரிப்பு) இன்னொரு பக்கம் குழந்தைகள் எல்லாம் வளர்க்க வேண்டும் உயிரோடு இருக்கவேண்டும் என்று பிரச்சாரம் பண்ணுகிறவன். சாதாரண ஜனங்களுக்கு இது கொஞ்சம் ஒரு விடுகதையாகத் தோணலாம். ஏன்னா அங்கே பிள்ளை பெக்க வேணாம்கிறான், இங்கே பிள்ளையெல்லாம் வளர்க்க வேணும்கிறான். (சிரிப்பு) (கைதட்டல்) பிள்ளை பெக்கிறது குறைந்து போகும். ஆனதினாலே சுருக்கமான அளவில் பிள்ளைகள் பிறந்தாகணும். அதை நல்ல வண்ணம் பாதுகாக்கவேணும். பிள்ளையே இல்லை என்கிற குறை நீங்கும் என்கிற எண்ணத்தினால் தான் இம்மாதிரி சொல்ல வேண்டியிருக்கு.

ஆகவே இந்த ஊருக்கு (திருச்சிக்கு) நமது பொதுத்துறை அமைச்சர் திரு.மு.கருணாநிதிஅவர்கள் வேடிக்கையாகவே சொன்னார்கள். இன்னும் பலவற்றிற்குப் பணம் கொடுக்க வேண்டுமென்று. (சிரிப்பு) ஏதோ கொடுக்க வேண்டியவர்களுக்கு சக்தி அனுஷாரம் வசதிக்கு ஏற்ப செய்வதிலே நான் ஒண்ணும் ஆட்சேபிக்கலே. ஏதோ என்னாலானதைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன்

ஆகவே இந்தக் கட்டிடத்தை இவ்வளவு சீக்கிரத்திலே முடித்து நல்ல முறையில் நடக்கவேண்டியதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். டாக்டர்அவர்களுக்கும்மற்றும்அரசாங்கத்தவர்களுக்கும் நன்றி செலுத்திவிட்டு என் பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன். வணக்கம்.

நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை