வாஜ்பேயி வண்டவாளம்!
ஜென்டில்மேன், உத்தமர், கள்ளமில்லா வெள்ளையுள்ளங் கொண்டவர், வன்முறையில் நாட்டம் இல்லாதவர் என்பன போன்ற கருத்துக்கள் வாஜ்பேயி பற்றி பரப்பப்படுகின்றன; நம்பப்படுகின்றன.
இத்தகு பெருமைகளுக்குரியவராக மக்களால் நம்பப்பட்டு, உயர்நிலைப் பதவிக்கு உயர்த்தப்பட்டவரின் உள்ளார்ந்த எண்ணங்களும் நோக்கங்களும், இந்த இலக்கணங்களுக்கு ஏற்புடையவையா? எல்லாம் ஏமாற்றா? வேடமா? என்பதை அறிய அவரின் செயல்பாடுகள் சிலவற்றை அடியில் குறிப்பிடுகிறேன். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஒரு மனிதனின் தோற்றமும், பேச்சும் உண்மை உருவத்தை வெளிக்காட்ட உதவா. அவரின் உள்ளார்ந்த செயல்பாடுகள் மட்டுமே வெளிக்காட்ட உதவும். அதற்கு அடிப்படைச் செயல்பாடுகளில் அவர்களின் போக்கும், நோக்கும் எப்படியுள்ளன என்ற யதார்த்த நிலை அறியப்படவேண்டும்.
இந்தியாவில் எப்படி ஆர்.எஸ்.எஸ்.
மற்றும் அதன் குடும்ப அமைப்புகளின் அடித்தளம் இந்துத்துவாவாக இருக்கிறதோ, அதேபோல் இஸ்ரேலிய யூதர்களின் ஜிபோனிசம் (Zionism) என்ற மதக் கோட்பாடு அவர்களின் ஜீவாதாரம். ஆர்.எஸ்.எஸ்.
போன்ற ஆதிக்கவெறி கொண்டதாகும். ஆரியர்களின் பூர்வீகம் ஆசியா என்பதால் யூதர்களுக்கும் இவர்களுக்கு இயற்கையாகவே ஒற்றுமைகளும், பந்தபாசப் பிடிப்புகளும் இருக்கவே செய்கின்றன. இவர்களின் கோட்பாடுகள் கூட ஒன்று போலவே அமைந்துள்ளன.
இதை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.
இஸ்ரேலிய யூதப் படைகள் எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருப்பது போலவே நமது கலாச்சாரமும் வெற்றிபெற்று நம்மை உரிய இடத்தில் வைக்கும். யூதர்கள் மதத்தின் ஆதாரம், நமது வேதங்களையும், இந்து தர்ம சாஸ்திரங்களையும் சமூக பழக்கங்களையுமே அடிப்படையாகக் கொண்டது.
(18.6.1967 ஆர்கனைஸர் ஏட்டில் ஓர் ஆரியப் பார்ப்பனர் எழுதியது.)
இப்படிப்பட்ட பிணைப்பில் உள்ள இஸ்ரேலிய யூதர்களோடு என்றைக்கும் இவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்) தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
அப்படிப்பட்ட முயற்சிகளின் முகடாக (உச்சமாக) ஜனதா ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த வாஜ்பேயி செய்த நடவடிக்கைகள் அமைந்தன.
அந்த நடவடிக்கைகள் வாஜ்பேயி வண்டவாளத்தை வானுயர உயர்த்திக் காட்டுகின்றன.
இந்தியாவில் ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, இஸ்ரேல் நாட்டின் வெளி விவகார அமைச்சராய் இருந்தவர் மோஷி தயான் என்பவர்.
இவரை இரகசியமாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளச் செய்த உத்தமர்தான் வாஜ்பேயி. ஆம்.
ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கே தெரியாமல், வேற்று நாட்டு வெளி விவகாரத்துறை அமைச்சரை இந்தியாவிற்கு இரகசியமாக அழைத்து வந்து இரகசியமாகவே திருப்பியனுப்பியவர்தான் இந்த வாஜ்பேயி.
அப்போது, அணி சேரா நாடுகள் அமைப்பிலும், அய்க்கிய நாடுகள் சபையிலும் இந்தியாவிற்கு நல்ல மதிப்பு இருந்தது. அச்சூழலில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன விடுதலை இயக்கம் நடத்திய போராட்டத்தை ஆதரித்தது; இஸ்ரேலியரின் வெறித்தனமான வன்முறை நடவடிக்கைகளையும் இந்தியா கண்டித்தது. கூட்டுச் சேரா நாடுகளும் கண்டித்தன.
இப்படி இஸ்ரேலுடன் இந்தியா வெறுப்புக் கொண்டிருந்த சூழலில் இஸ்ரேல் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரை இரகசியமாக இந்தியாவுக்கு அழைத்து வந்தார் வாஜ்பேயி என்றால் இது எவ்வளவு பெரிய அரசுத் துரோகம்; நம்பிக்கை மோசடி! அதுவும் ஒரு நாட்டின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வெளியுறவுத்துறை அமைச்சர் வாஜ்பேயி இம்மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
ஆர்.எஸ்.எஸ்.
காரரான வாஜ்பேயி, இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சராக வந்தவுடன், தங்கள் உறவை இந்தியாவோடு வலுப்படுத்திக் கொள்ளலாம் என்று இஸ்ரேல் திட்டமிட்டது. அதற்கு இந்தியாவுடன் பேச்சு நடத்த வேண்டியது அவசியமாயிற்று.
அப்படிப்பட்ட பேச்சை வெளிப்படையாக பேச இயலவில்லை. காரணம் இந்தியா இஸ்ரேலை கண்டிக்கிறது; வெறுக்கிறது.
ஆனால், ஆரியப் பார்ப்பனர்களின் அந்தரங்கப் பாசம் இஸ்ரேலுடன் நேசக்கரம் நீட்டத் துடியாய்த் துடித்தது. அதன் விளைவுதான் இரகசிய சந்திப்பிற்கான ஏற்பாடாய் அமைந்தது. இஸ்ரேல் நாட்டு பிரதமரும் தனது நாட்டின் வெளியுறவு அமைச்சரை இந்தியாவுக்கு அனுப்பி உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்பினார். ஆனால் இந்திய அரசுக்குத் தெரியாமல் இச்சந்திப்பு நிகழவேண்டும் என்று இரகசியத் திட்டம் தீட்டப்பட்டது.
இஸ்ரேல் நாட்டு வெளியுறவு அமைச்சர், அமைச்சர் என்ற நிலையில் இல்லாமல், இஸ்ரேல் நாட்டு குடிமகன் என்ற முறையில், பெயரை மாற்றம் செய்து கொண்டு, இந்தியாவிற்கு வர இரகசிய முடிவு வாஜ்பேயியால் செய்யப்பட்டது. மொரார்ஜியும் இதற்கு உடந்தை.
ஒரு நாட்டு அமைச்சர் தனது பெயரை மாற்றிக்கொண்டு, இந்தியாவிற்கு வர இந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் வாஜ்பேயி அனுமதித்தார் என்றால் அவர்தான் ஜென்டில்மேனா? இது எவ்வளவு பெரிய துரோகம்; மோசடி!
பம்பாயில் அமைந்துள்ள இஸ்ரேலிய அலுவலகத் தூதரகத்திற்கும், இரண்டு உயர் அதிகாரிகளுக்கும் (பம்பாயைச் சேர்ந்தவர்கள்) மட்டுமே இந்த இரகசியத் திட்டம் தெரியும்.
இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர், சாதாரண பயணியாய், பயணிகள் விமானத்திலே இந்தியாவிற்கு வந்தார். அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் மோசடி பாஸ்போட்!
அதுமட்டுமல்ல, மாறுவேடமும் போட்டுக் கொண்டார். அவர் வழக்கமாக அணியும் ஒற்றை லென்ஸ் கண்ணாடியை கழற்றிவிட்டு பம்பாய் வந்து இறங்கினார். அவரை ஏற்றிச் செல்ல இந்திய விமானப்படை விமானம் வந்தது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், விமானப்படை அதிகாரிகளுக்கே இம்மோசடிப் பற்றி எதுவும் தெரியாது!
டில்லியில் தனியார் வீடு ஒன்றில் மோஷி தங்கவைக்கப்பட்டார். வாஜ்பேயி தனியே சென்று அவரைச் சந்தித்தார். மொரார்ஜியும் தனிமையில் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மோஷியுடன் பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இரண்டாவது முறையாகவும் இருவரும் சென்று மோஷியைச் சந்தித்தனர்.
நான்கு நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்த மோஷி பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார். இந்தியாவின் வெளி விவகாரத் துறை துணையமைச்சருக்கோ, இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலருக்கோகூட இது தெரியாது என்றால், எவ்வளவு இரகசியமாக இக்காரியத்தை வாஜ்பேயி செய்துள்ளார் பாருங்கள்!
(ஆதாரம்: 24.4.1980 சண்டே இதழ்)
இச்செய்தி வெளியில் தெரிய வர, வாஜ்பேயி அப்படியொரு சந்திப்பு நடக்கவேயில்லை, மோஷி வரவேயில்லையென்று சொல்லி முழுப் பூசணிக்காயையும் ஒரு சோற்றில் மறைக்க முயற்சித்தார்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போல. இந்த மோசடிச் சந்திப்பை இஸ்ரேல் நாட்டுப் பத்திரிகையும் வெளியிட உண்மை உறுதியானது. இறுதியில் மொரார்ஜிதேசாய் - தான் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின் - இது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்.
ஆரிய ஆர்.எஸ்.எஸ்.
பார்ப்பனர்கள் தங்கள் இன நலத்துக்காக இந்த நாட்டையே காட்டிக் கொடுக்கக் கூடியவர்கள்; விலை பேசக் கூடியவர்கள் என்பதை, இம்மோசடி இரண்டு கருத்துக்கு இடம் இன்றி விளக்குவதோடு, வாஜ்பேயி எப்படிப்பட்ட மோசடிப் பேர்வழியென்பதையும் தெளிவாக்குகிறது.
அமைச்சர் நிலைக்கு உயர்ந்தபோது மோசடி செய்த வாஜ்பேயி வாலிப வயதில் தனது ஊர் மக்களையே காட்டிக் கொடுத்தவராவார்.
ஆம்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் தம் சொந்த கிராமத்து மக்களையே காட்டிக் கொடுத்தவர் வாஜ்பேயி.
1942 ஆகஸ்ட் 27ம் நாள் பகல் 2 மணி பட்டேஸ்வர் பஜாரில் உள்ள சாவடி அருகே ஒரே கூச்சல். அப்போது அங்கு விலாதார் என்றழைக்கப்பட்ட காகுவும் மகுனும் வந்தனர்.
சாவடியில் நின்று கொண்டு, வனத்துறைக் கட்டிடத்தை மக்கள் உடைத்தெறிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்; மக்களையும் அதற்குத் தூண்டினர்.
200 பொதுமக்கள் வன அலுவலகம் நோக்கிச் சென்றனர். பட்டேஸ்வர் வன அலுவலகம் நோக்கிச் சென்ற மக்கள் கூட்டத்தை நானும் எனது சகோதரனும் பின்தொடர்ந்தோம். பின்னர், நானும் என் சகோதரனும் கீழே இருந்துவிட்டோம். மற்றவர்கள் மேலே சென்றனர்.
காகு, மகுன் இரண்டு பேரைத் தவிர அங்கிருந்த யாரையும் எனக்குத் தெரியாது. நான் பார்த்துக் கொண்டிருந்தபோது பெயர்க்கப்பட்ட செங்கற்கள் விழுந்து கொண்டிருந்தன. யார் அவற்றை இடித்துத் தள்ளிக் கொண்டிருந்தனர் என்பதை நானறியேன். ஆனால், நிச்சயம் சுவர் செங்கற்கள் பெயர்த்து எறியப்பட்டுக் கொண்டிருந்தன.
பின் நானும் என் சகோதரனும் அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். கூட்டம் எங்களுக்கு வெகு தூரத்தில் இருந்தது.
அக்கூட்டம், அங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை அங்கிருந்து விரட்டியது. மரத்தடுப்புகளைத் தகர்த்துக்கொண்டு, கூட்டம் அலுவலகத்திற்குள் நுழைந்தது! வன அலுவலகத்திற்குள் பத்து அல்லது பன்னிரண்டு பேர் நுழைந்திருப்பர். நான் நூறு கெஜ தூரத்தில் இருந்தேன். நான் அங்கு நடந்த இடிப்பிற்கு எவ்வகையிலும் உதவி செய்யவில்லை. அதன்பின் நாங்கள் எங்கள் வீடு திரும்பினோம்.
1942ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், மாஜிஸ்ட்ரேட் முன் அடல்பிகாரி வாஜ்பேயி கொடுத்த வாக்குமூலம் இது.
அப்போது அவருக்கு வயது 20.
தான் பிராமணச் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும், குவாலியர் கல்லூரியில் பயின்றவர் என்றும், தந்தை பெயர் கவுரிசங்கர் என்றும், ஆக்ரா மாவட்டம் பட்டேஸ்வரில் வசிப்பவர் என்றும் மாஜிஸ்ட்ரேட்டிடம் தன்னைப் பற்றிய விவரமும் அளித்துள்ளார் வாஜ்பேயி. இந்த வாக்கு மூலத்தை இரண்டாம் வகுப்பு மாஜிஸ்ரேட் ஹுசேன் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார். அந்த வாக்குமூலத்தைப் படித்தபின், சரிதான் என்று ஏற்று வாஜ்பேயி கையொப்பமும் இட்டுள்ளார்.
வாஜ்பேயின் இந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கில அரசு பட்டேஸ்வர் கிராமத்தைக் கடுமையாகத் தாக்கியது.
ஊரையே கொளுத்திவிடுவோம் என்று ஆங்கில அரசு அச்சுறுத்தியது.
இப்புரட்சிக்குத் தலைமை வகித்தவரை ஊர் மக்கள் காட்டிக் கொடுக்கவில்லை. துன்புறுத்தியபோதுகூட மறுத்துவிட்டனர்.
ஆனால், அந்த ஊரைச் சேர்ந்த வாஜ்பேயி காட்டிக் கொடுத்தார். அவரது மேற்கண்ட வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு, காகு, மகுன் ஆகிய இருவருக்கும் ஆங்கில அரசு அய்ந்தாண்டுகள் கடுந்தண்டனை விதித்தது. கிராமத்தின் மீது விதிக்கப்பட்ட ரூ.10,000
அபராதத்தை அக்கிராமத்தால் கட்ட முடியவில்லை. எனவே, ஆங்கில அரசு அக்கிராமத்தைச் சூறையாடியது.
(ஆதாரம் Frontline - Feb 7 - 20, 1998)
ஆக,
வாஜ்பேயின் இயற்கைக் குணம் என்ன என்பதை அவர் இளமைப் பருவ செயல்பாடு காட்டிவிட்டது. இன்றும் உள்ளுக்குள் அவர் குணம் அப்படித்தான். என்றாலும் பசுத்தோல் போர்த்தியுள்ளார். ஆனால், பாய்ச்சல் மட்டும் புலிப்பாய்ச்சல்தான்.
ஆம்,
அண்மையில் அவர் பேசிய பேச்சு அதை அழுத்தமாகத் தெளிவுபடுத்திவிட்டது.
அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட வாஜ்பேயி, ஹிந்து தீவிரவாத அமைப்புகள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது,
கட்சியைக் காட்டிலும், ஆட்சியைக் காட்டிலும் பிரதமர் பொறுப்பைக் காட்டிலும் முக்கியமானது நான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.தொண்டன் என்ற தகுதிதான்.
நான் நிரந்தர பிரதமராக இருக்க முடியாது. ஆனால், நிரந்தர ஆர்.எஸ்.எஸ்.
தொண்டனாக இருக்கலாம்; இருப்பேன்! என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒருவரிடம்தான் நாடு நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மதச் சார்பற்ற நாட்டின் பிரதமர், அதுவும் ஓர் அந்நிய நாட்டில் சென்று இப்படிப் பேசுகிறார் என்றால் அவரது அந்தரங்கச் சுத்தி எப்படிப்பட்டது பாருங்கள்!
வாஜ்பேயியின் இந்த யோக்கியதை குறித்து கல்கி ஏடே என்ன எழுதியுள்ளது பாருங்களேன்!
இப்படி அவர் பேசியது அமெரிக்க வாழ் இந்தியர்களின், அமைப்புகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் அவை தயாராகிக் கொண்டிருக்கின்றன.
பிரதமர் என்கின்ற முறையில், பணித் தகுதி அடிப்படையில் அமெரிக்கா சென்ற வாஜ்பேயி, அமெரிக்க (வி.எச்.பி.)
ஹிந்து தலைவர்கள் வழங்கிய வரவேற்பு விருந்தில் எதற்காகப் பங்கேற்க வேண்டும்? அங்கு சென்று, அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் அயோத்தியில் இராமர் கோயில் உருவாகும் என்பதுபோல் ஏன் பேசவேண்டும்.
மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் ஒருவர் மத அமைப்புகளுடனான நெருக்கத்தைப் பிரகடனப்படுத்துவதே ஆட்சேபணைக்கு (கண்டனத்திற்கு) உரியது. அதையும் அயல் நாடுகளில் போய்ச் செய்யும்போது உலக அளவில் கவனம் கவர்கிறார் பிரதமர்.
மதச்சார்பற்ற இந்திய மக்கள் சார்பாக, அவர்கள் வரிப்பணத்தில் அயல்நாடு செல்பவர், பிரதமருக்குரிய நிலையில் இருந்துதான் பேச வேண்டுமேமொழிய, தனது தனி ஆசைகளையும், கட்சி அபிலாஷைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கான தருணம் அதுவல்ல.
(அயல்நாட்டுப் பயணத்தில்) திட்டமிடப்படாத ஸ்டேட்டன் தீவு விஜயமும், அங்கே பிரதமர் ஆற்றிய அதிரடி உரையும் நியாயமான சந்தேகங்களைக் கிளப்பியிருக்கின்றன.
உள்நாட்டு வி.எச்.பி.,
ஆர்.எஸ்.எஸ்.
அமைப்புகள், பி.ஜே.பி.யின் நாக்பூர் பிரகடனங்களால் அடைந்த அதிருப்தியைத் தணிப்பதற்காகப் பிரதமர் ஸ்டேட்டன் தீவுக்குப் போனாரா?
அமெரிக்காவில் வாழும் பி.ஜே.பி.யின் நண்பர்கள் மகிழாவிட்டால் அவர்களிடமிருந்து கிடைக்கக் கூடிய டாலர் ஆதரவு தேர்தல் சமயத்தில் உதவும் என்பதால் அப்படிப் பேசினாரா?
இரண்டுமே அல்ல என்றும், தமது பேச்சு பத்திரிகைகளால் திரித்து வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் அரசியல்வாதிகளின் வழக்கமான பல்லவி பாட ஆரம்பித்திருக்கிறார் பிரதமர். ஆனால், இந்த விளக்கங்களில் சாரமில்லை. அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலவே தொனிக்கின்றன.
வி.எச்.பி.யின் அமெரிக்கப் பிரிவுக்கு இவர் போனது முதல் கோணல்; பின்னர் நடந்தவை முற்றுங் கோணலாகிப் போனதில் வியப்பில்லை.
(வாஜ்பேயி) பிரதமர் செய்திருக்கும் காரியம் கட்சிக்கு மட்டுமல்ல தேசம் முழுமைக்குமே மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
(ஆதாரம்: கல்கி இதழ் 24.9.2000)
கல்கி ஏடே கண்டிக்கிறது, காழ்ப்பை உமிழ்கிறது. அப்படியிருக்க திராவிட இயக்க வழிவந்தவர்கள், மதச்சார்பற்ற மக்கள், மத இணக்கம் வேண்டுவோர் எவ்வளவு எச்சரிக்கையாக, விழிப்பாக இருக்கவேண்டும்! அதுமட்டுமல்ல உத்தமர் எனப்படும் வாஜ்பாயி செயல்பாடே இப்படியெனில், இன்றைய மோடிகளின் மோசடிகள், திரைமறைவு செயல்திட்டங்கள், உள்ளொன்று வைத்து புறத்தே நடிக்கின்ற செயல்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, வருவாய்ப் பெருக்கம் என்ற கவர்ச்சிகளின் மூலம் மக்களை ஏமாற்றி தங்கள் உள்ளார்ந்த செயல்திட்டங்களை நிறைவேற்றி, இந்து மத பாசிச ஆட்சியை அமைக்க முனையும் அவர்களின் சதியை ஓரணியில் நின்று முறியடிக்க வேண்டும்!
தங்களுக்குள் இருக்கின்ற தற்செருக்கு சுயநலம், வரட்டுப்பிடிவாதம், வரட்டுக் கவுரம் இவற்றைப் புறந்தள்ளி, மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும். மத இணக்கம் காத்து, ஜாதி பேதம் ஒழித்து சமூக நீதி நிலைக்கும் வகையில் ஆட்சி நடக்க வழிசெய்ய வேண்டும். மதவெறியைத் தகர்த்து மனிதம் காக்க வேண்டும்.
நூல்- பி.ஜே.பி ஒரு பேரபாயம்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment