இந்திய பத்திரிகைகளின் இந்துத்வா வெறி

பத்திரிகைகள் ஜனநாயகத் தூண்களுள் ஒன்று என்பது அவற்றிற்குக் கொடுக்கப்பட்டுள்ள தலையாயச் சிறப்பு. அத்தகு சிறப்பு கொடுக்கப்பட்டமையாலே அவற்றிற்குள்ள பொறுப்பும், நேர்மையும், வழிகாட்டுதலும் மிக அதிகம் என்பது அதன் உட்பொருள்; எதிர்பார்ப்பு; இலக்கணம் எல்லாம்.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை பத்திரிகைகள் பலவும் பார்ப்பன ஆதிக்க ஆதரவும், பணம் சேர்க்கும் இலக்குங்கொண்டே செயல்படுகின்றன. காரணம் பெரும்பாலும் அவை ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலேவுள்ளன.
தப்பித்தவறி ஓரிரு பத்திரிகைகள் பார்ப்பனர் அல்லாதார் கையில் இருப்பினும் அவர்களும் பார்ப்பன அடி வருடிகளாய் இருந்து, அதே வகையிலே செயல்படுகின்றனர்.
அதிலும், இந்தியா முழுவதிலும் வெளியிடப்படும் முன்னிலைப் பத்திரிகைகள் இந்துத்வா கொள்கையை ஏந்திப் பிடிப்பனவாகவும், வளர்க்க முயல்வனவாகவும், மாற்றுக் கருத்துக்களை மறைக்கின்ற மனநிலைப் பெற்றவையாகவுமே காணப்படுகின்றன.
குறிப்பாக, இந்துத்வா வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் பத்திரிகைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றே வருகின்றன.
பத்திரிகைகள் பொதுவாகவே ஏதாவது ஒரு சார்புடையனவாகவே இயங்குகின்றனவென்றாலும், இந்துத்துவாவை ஆதரிப்பதில் அவை தீவிரங்காட்டுவதோடு, செய்திகளைத் திரித்தும் வெளியிடுகின்றன.
பாபர் மசூதி தாக்கப்பட்ட சம்பவம் பத்திரிகைகளில் பொய்ச் செய்திகளாக திரிபுச் செய்திகளாகவே வெளியிடப்பட்டன.
ஆஜ் என்ற பத்திரிகை (ராஞ்சி பதிப்பு) 1990 அக்டோபர் 26இல் இராமர் ஆலயம் இடிக்கப்பட்டு விட்டதாக தலைப்புச் செய்தி வெளியிட்டது. ஆனால், ஷிலாநியாஸ் குழிக்கு மேலேயிருந்த பந்தல் அகற்றப்பட்டது தான் உண்மை நிகழ்வாகும். ஷிலாநியாஸ் என்பது அயோத்தி விழாக்களில் ஒன்று. ஷிலா பூஜா மற்றொன்று.
ஆஜ் பத்திரிகையின் பாட்னா பதிப்பு ஒரு கவிதை வெளியிட்டிருந்தது. அக்கவிதை வி.பி.சிங் ஜெய்ச்சந்திரன் சந்ததி என்று எழுதியது. அவரை இராவணனுடன் ஒப்பிட்டுக் கூறியிருந்தது.
நவம்பர் 2ஆம் தேதி தைனிக் ஜாகரன் பத்திரிகை வெளியீட்டில், சிறீராமர் புரட்சிப்படை அடுத்த மாதத்திற்குள் முலாயம் சிங்கின் கால்களையும் கைகளையும் வெட்டப்போகிறது என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டது.
ஆஜ் பத்திரிகை (கான்பூர் பதிப்பு) அயோத்தி படுகொலையுடன் ஒப்பிட்டால், ஜாலியன் வாலாபாக் படுகொலை ஒன்றும் பெரிதல்ல என்னும் தலைப்புச் செய்தியை நவம்பர் மாதம் 3ஆம் தேதி வெளியிட்டது.
பந்தல் அகற்றப்பட்ட செய்தியை கோயில் இடிக்கப்பட்டதாக எழுதுகின்ற பத்திரிகைக்கு இந்துத்வா வெறி எவ்வளவு இருக்கவேண்டும் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.
சென்னையில் தியாகராயர் நகரில் பள்ளி வாசல் கட்டுவதற்கான இடத்தை (பேருந்து நிலையம் அருகில்) ஆக்கிரமிக்க ஆரியப் பார்ப்பனக் கூட்டம், செல்வராஜ் என்ற போலீஸ்காரருக்கு லஞ்சம் கொடுத்து அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் அவரது வீட்டிலிருந்து வெடி திரிக்கு நெருப்பு வைக்கச் செய்து, நள்ளிரவில் வெடி சத்தம் கேட்டபோது பிள்ளையார் சிலையை நட்டு, திடீர் பிள்ளையார் தோன்றிவிட்டார் என்று மோசடி செய்ததை மறைத்து, தியாகராயர் நகரில் பிள்ளையார் தோன்றினார் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதியது போல 22.12.1949இல் பாபர் மசூதி வளாகத்திற்குள், ஒரு இராமர் சிலையை நட்டு வைத்துவிட்டு மறுநாள் பூமிக்குள் இருந்து இராமர் தானே வந்து விட்டார். அதுதான் இராமர் பிறந்த இடம் என்று பத்திரிகைகள் செய்திகள் பரப்பின.
மாவட்டக் கலெக்டரும் ஜூடிஷியல் கலெக்டருமான கே.கே.நய்யார், இராமர் சிலை தோன்றியுள்ள இடம் தான், இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே, இந்துக்கள் பாபர் மசூதி வளாகத்தில் உள்ள இராமர் சிலையை வழிபடலாம் என்று அறிவித்தார்.
ஆனால், உத்திரப்பிரதேச முதல்வராய் இருந்த பண்டித கோவிந்த வல்லப பந்த், மத்திய உள்துறை மந்திரியாய் இருந்த வல்லபாய் படேல் இருவரும், வேற்று மதத்தவர் வழிபாட்டு இடத்திற்குள் இந்து மதத்தினர் அத்துமீறிச் செல்வது அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். இராமர் சிலை வைக்கப்பட்ட இடத்தின் கதவுகளை மூடிப் பூட்டினர்.
அதன்பின், 38 ஆண்டுகள் கழித்து 1986ஆம் ஆண்டு, பைசாபாத் மாவட்ட நீதிபதி கே.என்.பாண்டே, இராமர் சிலை இருக்கும் இடம் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட வேண்டும் என்று உத்தரவிட மீண்டும் மதமோதல் தலையெடுத்தது.
ஆரியப் பார்ப்பனர்களின் அடாவடித்தன வரலாறு இப்படியிருக்க, பந்தல் பிய்த்தெறியப்பட்ட நிகழ்வு, கோயில் இடிக்கப்பட்ட செய்தி வெளியிடுவது எவ்வளவு அயோக்கியத்தனம் இதுதான், இந்துத்துவா பத்திரிகை தர்மம் போலும்!
ஆரிய ஆதிக்கத்தையும், இந்து மதவெறியையும் எதிர்க்கின்றவர்களை, அரக்கர் என்று சித்தரித்து, அவர்களின் கை, கால்களை வெட்ட வேண்டும் என்ற கொலைவெறித் தூண்டல் பத்திரிகைகளில் வெளிவருகிறது என்றால் அவற்றின் இந்துவெறி, ஆதிக்கவெறி எப்படிப்பட்டது என்பதை இனங்கண்டு கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஆஜ் பத்திரிகையின் பரேலி பதிப்பு நவம்பர் 1ஆம் தேதி இதழ், அயோத்திக்கு வருகின்ற வாசகர்கள் ஆயுதங்களுடன் வரவேண்டும், வி.பி.சிங்கையும், முலாயம் சிங்கையும் வெட்டி நாய்களுக்குப் போடவேண்டும் என்று எழுதியது.
இந்தி மொழியில் வெளிவரும் பத்திரிகைகள், கலகத்தில் முஸ்லீம்கள் அதிக அளவில் பாதிக்கப்படும்போது, உண்மையான செய்தி வெளியிடுவதில்லை.
பகல்பூரில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் அவை அரைகுறையான செய்திகளையே வெளியிட்டதோடு நில்லாமல், கலகங்கள் பாகிஸ்தான் உளவாளிகளால் தூண்டப்பட்டதாகப் பொய்ச் செய்தியும் வெளியிட்டன.
இந்து மதவெறிக்கு ஆதரவு அளிப்பதில் ஆங்கில ஏடுகளும் முன்னணியில்தான் நிற்கின்றன. ரத யாத்திரை நடந்தபோது, இந்துத்வா வெறியர்களின் செய்திகளை முழுக்க முழுக்க வெளியிட்டன.
இரதயாத்திரையை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் எல்லாம் மத உணர்வோடு வந்ததாக இட்டுக் கட்டி எழுதின. ஆனால், அங்கு சேர்க்கப்பட்ட கூட்டம் உண்மையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.காரர்களால் திட்டமிட்டு திரட்டி வரப்பட்ட வன்முறைக் கூட்டமாகும்.
ஆனால், இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகளின் தலையங்கங்கள், கட்டுரைகள், படித்தவர்கள் மத்தியில் இந்துத்துவாவிற்கு ஆதரவு தேடித் தரும் முயற்சியாய் அமைந்தன. அவ்விதம் ஆதரவும் கிடைத்தது.
இந்து வெறியர்களின் வன்முறைகளை நியாயப்படுத்தி, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கிரிலால் ஜெயின் முஸ்லீம் அடிப்படை வாதத்தின் எதிர்விளைவாகவே இந்து வன்முறைகள் நிகழ்கின்றன என்று வன்முறையாளர்களுக்கு வக்காலத்து வாங்கினார்.
இந்த நபர் வி.எச்.பி. பத்திரிகையான பாஞ்சஜன்யத்தில் இந்துத்வா கொள்கையை ஆதரித்து பல கட்டுரைகள் எழுதியவர். மதச்சார்பின்மைக்கு எதிராக தேசியம்? என்னும் நூலை எழுதியவர்.
பத்திரிகையின் வார்த்தைகளை வைத்தே அதன் உள்ளத்தை எடைபோடும் நமக்கு, கிரிலால் ஜெயினை அவரது பத்திரிகை தர்மத்தை புரிந்து கொள்வதில் இடர் ஏதும் இல்லை.
நாடு சுதந்திரம் அடைந்தபிறகு, இந்துத்வா கொள்கைகளை, அதனைத் தாங்கிப் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகளை பத்திரிகைகள் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்த அளவிற்கு வேறு எந்த இயக்கங்களையும் ஆதரித்ததில்லை.
அதுமட்டுமல்ல, இந்து மதவெறியர்கள் நாடு முழுமையிலும் நடத்திய கலவரங்கள் ஏராளம். அப்படியிருப்பினும் அவற்றையெல்லாம், மறைத்து, ஏதோ ஒப்புக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாய் செய்தி வெளியிட்ட பத்திரிகைகள், மண்டல் அறிக்கை எதிர்ப்புப் பற்றிய செய்திகளை பக்கம் பக்கமாக வெளியிட்டன. காரணம், இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு என்பது இந்துத்வாவின் ஓர் அங்கம்; ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின், பி.ஜே.பி. வெறியர்களின் முக்கிய கொள்கை.
இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, கலவரங்கள் பற்றிய செய்தி வெளியிட்டதைப் போல 1281 மடங்கு அதிக முன்னுரிமை கொடுத்து மண்டல் எதிர்ப்புச் செய்திகளை வெளியிட்டது என்று ஓர் ஆராய்ச்சி நூல் விளக்குகிறது.
இந்த அளவிற்கு மண்டல் அறிக்கையை எதிர்த்த காரணம் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இந்துத்வாவை இதன் வழி செல்வாக்கடையச் செய்யவேண்டும் என்பதுமாகும்.
மேலும், முதலாளித்துவ பிரதிநிதிகளாகவே மாறி வரும் பத்திரிகைகள், அதைக் காக்கின்ற அமைப்பாக பி.ஜே.பி. வகையறாக்களையும், இந்துத்வா கொள்கைகளையும் நினைக்கின்றன.
பெரிய கம்பெனிகள் குறிப்பாக மகாராட்டிராவில் லார்ஸென் அன் டூப்ரோ, பிஸ்லேரி போன்ற பெரிய கம்பெனிகள் பத்திரிகைகளில் பெருமளவில் முதலீடு செய்து, அவற்றைத் தங்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வருகின்றன. இவை கம்யூனிச, தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாகவும், செய்திகளை வெளியிடுகின்றன.
இன்றைய பி.ஜே.பி. அரசின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தால், அது முதலாளித்துவத்தின் பாதுகாவலான அமைப்பு என்பது விளங்கும்.
அமெரிக்க உறவின் நெருக்கம், தாராள இறக்குமதிக் கொள்கை. அவசியப் பண்டங்களின் விலையேற்றம், தனியார் மயமாக்கல் போன்றவை முதலாளித்துவ பிரதிபலிப்புகளேயாகும்.
ஆக இந்துத்துவா, பி.ஜே.பி. ஆதரவு என்பதன் விளைவு எதிர்காலத்தில் பார்ப்பன ஆதிக்கத்தையும், பணக்கார ஆதிக்கத்தையும் கொண்டுவந்து நிறுத்தும் என்பதனாலே பத்திரிகைகள் இந்துத்துவா கொள்கையையும், பி.ஜே.பி.யையும் தீவிரமாக ஆதரிக்கின்றன. காரணம், அவை (பத்திரிகைகள்) பார்ப்பனர்களாலும் பணக்காரர்களாலுமே நடத்தப்படுகின்றன.
பல பத்திரிகை ஆசிரியர்கள், தாங்களே அயோத்தி இயக்கத்தைச் (இந்துத்துவாவை) சேர்ந்தவர்கள் என்பதைப் போல நடந்து கொண்டனர் என்று பத்திரிகை கவுன்சில் ஆய்வு கூறுகிறது.
ஒரு பத்திரிகை ஆசிரியர் தனக்குத் தரப்பட்ட சிறப்பு அனுமதிச்சீட்டைப் பயன்படுத்தி அசோக் சிங்காலை சட்ட விரோதமாக உள்ளே கொண்டு வந்தார். மற்றொரு பத்திரிகையாசிரியர் கரசேவையில் ஈடுபட்டவர்களை இயக்கினார். பல பத்திரிகை ஆசிரியர்கள் வி.எச்.பி. பேரணியில் பங்கெடுத்தார்கள். இன்னும் பல பத்திரிகையாசிரியர்கள் வெறியூட்டும் சொற்பொழிவுகள் ஆற்றினர்.
பத்திரிகை நிருபர்கள் பலரும் இந்துத்துவாக் கொள்கையுடையவர்களாயும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் தொடர்புடையவர்களாயும் இருப்பதால் செய்திகளை இந்துத்துவாவிற்கு ஆதரவாய் திரித்தும், மறைத்தும் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அயோத்தியில் பல சாமியார்கள் பகுதிநேர நிருபர்களாகப் பணியாற்றுகிறார்கள் என்று எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
தமிழ்நாட்டில் வெளிவருகின்ற நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் பலவும் இந்துத்துவா கொள்கையை ஏந்திப் பிடிப்பனவாகவே உள்ளன.
நடுநிலை நாளேடு என்று தன்னைக் கூறிக் கொள்ளும் தினமணி பாரதீய ஜனதாவையும், இந்துத்வா கொள்கைகளையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கின்றது. அதன் ஆசிரியர்கள் மாறினாலும் நிலை மாறுவதில்லை. தற்போது ஆர்.எஸ்.எஸ். உருவாக்கத்தில் வந்த வைத்தியநாதன் ஆசிரியராக வந்த பின், அது ஒரு பி.ஜே.பி. ஏடாகவே ஆகிவிட்டது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அண்மையில் அறிவித்து நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தைக் கூட, இப்பத்திரிகை விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம் என்றே செய்தி வெளியிட்டது.
தினமலர் பத்திரிகையைச் சொல்லத் தேவையில்லை. இந்துத்துவா பிரச்சாரத்தைத் தொழிலாகவே கொண்டது.
பெரும்பாலான மாத, வார மற்றும் நாளேடுகள் மதவாத பி.ஜே.பி.க்கு சார்பு நிலையிலேதான் செயல்படுகின்றன. செய்தி மற்றும் கருத்துகள்  வெளிவருகின்றன. எனவே, மனிதநேயப் பற்றும், மதச்சார்பின்மையும் கொண்டோர், சமூக நீதி காத்திட, தாங்கள் விழிப்போடிருந்து மக்களையும் விழிப்படையச் செய்ய வேண்டும்.
இந்துத்துவா பத்திரிகைகளின் பிரச்சாரங்களை முறியடித்து, விழிப்பூட்ட வேண்டும். முடிந்தால் தரமான பத்திரிகைகளை நாடெங்கும் கூட்டுச் சேர்ந்தேனும் நடத்திடல் வேண்டும். அவர்களைக் குறை சொல்வதை மட்டும் செய்யாது, நாமும் சாதிக்க வேண்டியது கடமை என்பதோடு தன்மானச் சவாலும் ஆகும்; வருங்காலப் பாதுகாப்பும் ஆகும்.
குறிப்பு: இக்கட்டுரைக்கான சில தகவல்கள் சாரு மற்றும் முக்குல் எழுதிய பத்திரிகைகளும் வகுப்புவாதமும் தில்லி 1990 நூலிலிருந்து அறியப்பட்டவை.

நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்
                                           ஆசிரியர் - மஞ்சை வசந்தன்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை