அறிவு வழி
மஞ்சை நகர் திடலில் (மைதானத்தில்)
பிரம்மாண்டமான பொதுக்கூட்டம், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம்!
அய்யா அவர்கள் பேசத் தொடங்கியவுடன் பெருமழை --
அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.
அய்யாவின் கருத்து மழையோடு அது போட்டி போட்டது; இறுதியில் அய்யாவே வென்றார்- வழக்கம் போல! அம்மா புத்தக மூட்டைகளைச் சுமந்து கொண்டு அங்கிருந்து திருப்பாதிரிப்புலியூர் புகைவண்டி நிலையத்தினை நோக்கித் தோழர்களுடன் நடந்து செல்லுகிறார்.
அய்யா அவர்கள் தமது கைப்பெட்டியோடு ஆள் இழுக்கும் ரிக்ஷாவில் அமர்த்தப்படுகிறார். (அப்போது சைக்கிள் ரிக்ஷாவே கிடையாது) தோழர்கள் புடை சூழ புகைவண்டி நிலையம் நோக்கி, அடுத்த நாள் சென்னை மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் செல்கிறார்.
கெடிலம் நதி பழைய பாலம் அருகில் வந்து கொண்டிருக்கும்போது-
நான் அய்யாவின் ரிக்ஷா அருகில் நடந்து வருகிறேன்- தோழர்களோடு!
உடனே பாம்பு பாம்பு என்று கூச்சல் கிளம்பியது. அதனை ஒரு தோழர் விளக்கு (டார்ச்)
மூலம் பார்த்துக் கையால் பிடித்துத் தூக்கிவிட்டார்.
தண்ணீர்ப் பாம்பை வேண்டுமென்றே வீசியுள்ளனர் என்பது ஓரளவு புரிந்தது!
சற்று தூரம் வந்தவுடன்,
அய்யா அவர்கள், ரிக்ஷாவை வந்த திசை நோக்கி திருப்பி ஓட்டச் சொன்னார். யாருக்கும் ஏன் என்பது புரியவில்லை.
அதுபோலவே திரும்பியது ரிக்ஷா. கொஞ்ச நேரம் சென்றவுடன்,
மறுபடியும் செல்ல வேண்டிய இலக்கு உள்ள திசை நோக்கி திருப்பி ஓட்டச் சொன்னார். எதற்காக இந்த மாற்றம்-? யாருக்கும் புரியவில்லை;
பெரியவர்களுக்கே புரியாத புதிர் என்ற போது, சிறு பையனான எனக்கு எப்படி விளங்கும்?
சற்று நேரத்தில் புகைவண்டி நிலையம் வந்துவிட்டோம்;
வண்டி வர நேரம் இருந்தது. எப்போதுமே முந்தியே சென்று காத்திருப்பது அய்யாவின் வழமைகளில் ஒன்றாகும். தோழர்கள் புடை சூழ நின்று கொண்டுள்ளனர் - அய்யாவை வழியனுப்ப,
ஆசிரியர் திராவிடமணி, திருப்பாதிரிப்புலியூரின் கொள்கை வீரரான மா.பீட்டர் பி.ஏ., விருத்தாசலம் தோழர் சி.முனுசாமி, வி.கே.எஸ்.சண்முகசுந்தர நாடார்- இப்படிப் பலர். அவர்களிடம் அய்யா, நான் ஏன் ரிக்ஷாவை இடையில் திருப்பச் சொன்னேன் என்று யாரும் கேட்கவில்லையே?
நான் அங்கு வரும்போது,
பாம்பு விழுந்த சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு செருப்பு என் மீது விழுந்தது!
அதை எடுத்துக் கையில் வைத்துக் கொண்ட பிறகே திருப்பச் சொன்னேன். போட்டவர் மற்றொரு செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? திரும்பிச் சென்றால் அதையும் எறிந்து விடுவார் என் மீது- அதனால் அவருக்கும் நிம்மதி; எனக்கும் இரண்டு செருப்பு ஜோடியாகக் கிடைத்த பயன் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, அதைக் காட்டிவிட்டுக் கைப்பெட்டியில் வைத்துக் கொண்டார்கள்! தோழர்களுக்கு ஒருபுறம் ஆத்திரம்- - மறுபுறம் அய்யாவின் நகைச்சுவை உணர்வு, சமயோஜிதம் பற்றிய வியப்பு, பெருமை எல்லாம்!
எந்த இடத்தில் அய்யா மீது செருப்பு வீசப்பட்டதோ அதே இடத்தில்தான், கடலூரில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டு, அது அந்தச் சரித்திரக் குறிப்புகளோடு கம்பீரமாக நின்று கொண்டுள்ளது (13.8.1972) பெரியார் வாழ்க்கை வரலாறு எழுதிய பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் கருணானந்தம் அவர்கள் செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று சிறப்பான கவிதை ஒன்றைக்கூட எழுதினார்கள்,
விடுதலை மலரில்! ஒருவர் மீது செருப்பு வீசப்பட்டபோதுகூட அதுகண்டு சங்கடப்படாமல் தனது இலட்சியப் பயணத்தில் அதை ஒரு சாதாரண சம்பவமாக எடுத்துக் கொள்ளும் முதிர்ச்சி
- துணிவு வேறு யாருக்கு வரும்? சுயமரியாதைக்கு அல்லவா அது அறைகூவல்? இனமானம்,
எடுத்த பணி முடிப்பு இவைகளுக்கிடையே அய்யா பெரியார், தன்மானத்தையும்கூட இழந்தது மட்டுமல்ல; மகிழ்ச்சியோடு அல்லவா அதனை எடுத்துக் கொண்டார்!
அந்த நிகழ்ச்சி போதித்த பாடம்தான் எங்களுக்கு என்றும் மறக்க முடியாத பாடங்கள்; சோதனைகளைச் சாதனைகளாக்கிட அவர் தந்த அறிவு வழி - இதுவே எமக்கு.
- கி.வீரமணி
நூல்: அய்யாவின் அடிச்சுவட்டில்
Comments
Post a Comment