தனிமையில் எதையும் பொறுத்துக் கொள்வார்



பெரியார் அவர்களை நான் ஏறக்குறைய 30 வருடங்களாக அறிந்திருக்கிறேன். நெருங்கிப் பழகி இருக்கிறேன். என்றாலும், அவரது நம்பிக்கைக்கு இன்றுவரை நான் பாத்திரம் ஆனேனில்லை. கொள்கையைப் பொறுத்தா? இல்லை. இயக்கத்தைப் பொறுத்தா? இல்லை. பின் எதைப் பொறுத்து என்னிடம் அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை? என்னுடைய சொந்த நிலையைப் பொறுத்துத் தான். அவர் போடும் காகிதத்துக்குக் கூடச் சரியாகப் பதில் அனுப்பியிருக்க மாட்டேன். அப்படியிருந்தும் அவர் என்னை வெறுத்துவிட்டாரா? இல்லை. அதுதான் அவரிடமுள்ள சிறப்பான பண்பு. தனிமையில் எதையும் பொறுத்துக் கொள்வார்.

ஆயிரம் கரிபால்டியாயினும் அழித்திருக்குமே ஆரியம்!

இத்தாலி ஒரு மாஜினியையும் ஒரு கரிபால்டியையும் பெற்றதுண்டு. ஜெர்மனி ஒரு மார்க்ஸையும், பிரான்ஸ் ஒரு ரூஸோவையும், ரஷியா ஒரு லெனினையும், அமெரிக்கா லிங்கனையும் பெற்றதுண்டு. ஆனால் அவர்களது சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் வேறு. அவர்களைப்போல் நம் திராவிட நாட்டில் ஆயிரம் கரிபால்டிகள் தோன்றியிருந்தாலும்கூட, இந்த ஆரியம் அவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கும். காந்தியாரின் வர்ணாஸ்ரமப் பிரசாரத்தை எதிர்த்தோ, ஆரிய நயவஞ்சக சூழ்ச்சிகளை எதிர்த்தோ, அல்லது நம்மவரின் உடைமையிலுள்ள விருப்பத்தையும் மடமையிலுள்ள பிரீதியையும் எதிர்த்தோ, அவர்களால் ஒருநாள் கூட ஜீவித்திருக்க முடியாது. பகுத்தறிதல் பாவம் என்று நினைத்திருந்த மக்களிடையே, அவர்கள் பிறந்தார்களில்லை. மோட்ச நரகத்தைக் காட்டி மோசடி செய்யும் மக்களிடையே அவர்கள் பிறந்தார்களில்லை.

ஆகவேதான் அவர்கள் விரைவில் வெற்றி கண்டார்கள். ஆனால், நம் பெரியார் பிறந்த இடமோ அப்படிப்பட்டதல்ல அவனன்றி ஓரணுவும் அசையாது காண் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்த மக்களிடையே பிறந்தார் இவர். கடவுளை வணங்காமலிருந்தால் கயமை; சாஸ்திரங்களைத் தகர்த்தால் நாத்திகம்; புராணங்களை நம்பாமல் இருத்தல் நரகத்திற்கு வழிசெய்து கொள்ளல். அயோக்கிய அன்னக்காவடிப் பார்ப்பனர்கள்தான் இந்நாட்டில் பூதேவர்கள் என்று நம்பியிருந்த மக்களிடையே பிறந்தார் நம் பெரியார். அப்படி வாழ்ந்த நம்மைப் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்படிச் செய்து, ஆதாரங்கள் பல காட்டி நம்மை தலைநிமிர்ந்து நடக்கும்படி செய்தார் நம் பெரியார். இத்தகைய பெரிய வேலையை இதே சூழ்நிலையில் இந்நாட்டிலோ அன்றி வேறு நாட்டிலோ யாரேனும் சாதித்திருக்கிறார்களா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நம்மவர் தலைநிமிர்ந்து வாழ வழிவகுத்துக் கொடுத்த பெரியார் வாழுங்காலத்தில். வாழ்கின்றோம் என்பதற்காகத்தான் நம்மைப் பாக்கியசாலிகளாகக் கருதிக் கொள்ள வேண்டும் என்று முன்னரே குறிப்பிட்டேன்.

- அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி

நூல்: இதோ பெரியாரில் பெரியார்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை