காந்தியாருக்கே உரிமை கிடைத்தது



நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வமும், உமாமகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரையாடல் சுதேசமித்திரன் இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகி இருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும்.

உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.

மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர், பிராமணரல்லா தாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைந்துவிடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஈரோடு ராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும் என்னைப் போன்றவர்களே இதில் அவசியம் தலையிட்டு, மனநிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்து இருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறார்.
(தமிழ்நாட்டில் காந்தி, பக்கம் 520-521)

இந்த நிகழ்வு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் விளக்கிக் கூறியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் சொல்வது 1925ஆம் ஆண்டுக்கு முன்பாகும். அப்பொழுதெல்லாம் சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் காந்தியார் உட்கார வைக்கப்பட்டார். இப்பொழுது (1927) மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனிவாச அய்யங்கார் வீட்டு அடுப்பங்கரை வரை காந்தியாரின் மனைவியால் போக முடிகிறது என்றால் என்ன காரணம்?

சுயமரியாதை இயக்கத்தை 1925ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தோற்றுவித்ததன் விளைவுதான் காந்தியாருக்கே இந்த உரிமை கிடைத்தது என்று பொருள்.
- கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல்: பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!
 


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை