பதவிக்கு உரிய மதிப்பு
பெரியாரின் போற்றுதற்குரிய மற்றொரு தனித்தன்மை பதவிக்கு உரிய மதிப்பையும் சிறப்பையும் யார் வகிக்கின்றார்கள் என்பதை முன்னிறுத்தாமல் அளிக்க முதுமைப் பருவத்திலும் தவறாமையாகும்.
1965 இல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே போர் மூண்டது. இந்திய மக்கள், பல்வேறு வேற்றுமைகளை மறந்தார்கள்; ஒன்றுபட்டார்கள்; ஆதரவைத் திரட்டினார்கள். பாதுகாப்பு நிதிக்கு பொன்னையும் பணத்தையும் அள்ளி அள்ளி வழங்கினார்கள். பேரூர்களிலும் சிற்றூர்களிலும் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவுக் கூட்டங்கள் நடந்தன. அனைத்துக் கட்சியினரும் அவற்றில் கலந்து கொண்டார்கள்.
திருச்சி நகரில் அத்தகைய கூட்டமொன்று நடந்தது; புனித ஜோசப் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடந்தது. தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியும் அதில் உரையாற்றினார். பெரியார், வழக்கம்போல், கூட்டம் தொடங்குவதற்கு சில மணித் துளிகள் முன்னதாகவே மேடைக்கு வந்து, முன் வரிசையில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்துவிட்டார்.
குறித்த நேரத்தில், அந்நாள் முதல் அமைச்சர் மாண்புமிகு மீ.பகத்வத்சலம் காரில் வந்து இறங்கினார். பொத்தானை அழுத்தியதுபோல், தந்தை பெரியார், கைத்தடியை ஊன்றிக் கொண்டு எழுந்து நின்றார். பக்கத்தில் இருந்தவர்கள் குறுக்கிட்டார்கள். தள்ளாத வயதில், தாங்கள் உட்கார்ந்திருப்பதை எவரும் தவறாகக் கருதமாட்டார்கள்; தயவுசெய்து உட்காருங்கள் என்று வேண்டினார்கள். பலிக்கவில்லை.
மன்னிக்க வேண்டும்; மன்னிக்க வேண்டும் என்று பெரியாரின் திருவாய் மலர்ந்தது. முதல் அமைச்சர் பக்தவத்சலம் பல படியேறி, மேடைக்கு வரும் வரை, பெரியார் தடியூன்றி நின்ற காட்சி, எவர் நெஞ்சை நெகிழ வைக்காது? பக்தவத்சலம் பெரியாரை அணுகியதும் உருகிப் போனார். தாங்கள் நிற்கலாமா? தயவு செய்து உட்காருங்கள் என்று பக்தவத்சலம் வேண்டினார். பெரியார் அப்போதும் மசியவில்லை.
முதல் அமைச்சருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் குறைக்கலாங்களா? என்று கூறிக் கொண்டே நின்றார். முதல் அமைச்சர் தன் இருக்கையில் அமர்ந்த பிறகே, பெரியார் உட்கார்ந்தார். அப்போது, தொண்டு செய்து பழுத்த பழமாக விளங்கிய பெரியாருக்கு வயது என்ன? எண்பத்தேழு.
அடுத்த நாள். முதல் அமைச்சர் பக்தவத்சலம் என்னை தொலைபேசியில் கூப்பிட்டார். தன் பங்களாவிற்கு வரும்படி சொன்னார். ஏதோ, என்னவோ என்ற பதைபதைப்போடு சென்றேன்; முதல் அமைச்சரைக் கண்டேன்.
பக்தவத்சலம் முகத்திலும் பாசத்தின் பரிவின் ஒளியைக் கண்டேன். மேற்படி நிகழ்ச்சியை விவரித்துவிட்டு, தழுதழுத்த குரலில், பெரியார் என்றால் பெரியார் தான், அவருடைய பெருந்தன்மை யாருக்கு வரும், பொதுக் கல்வித்துறையை இரண்டாகப் பிளந்து, உங்களை உயர் கல்வி இயக்குநராக மாற்றிவிட்டதைப் பற்றி எவ்வளவு கோபப்பட்டார்! நாள் தவறாமல், என் செயலைக் கண்டித்து, மணிக்கணக்கில் பேசி வருகிறார். இதை எதிர்த்து, மாநிலம் தழுவிய கிளர்ச்சி செய்யப் போவதாகவும் அதற்கு விரைவில் நாள் குறிக்கப் போவதாகவும் எல்லோரும் ஆயத்தமாகும்படியும் அவர் கைப்படவே அறிக்கைவிட்டு, அதிக நாள்கள் ஆகவில்லை. அந்தப் பெரியார், இவ்வளவு மரியாதை காட்டியதை நினைத்தால் பரவசமாகிறது என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
திரு. பக்தவத்சலத்தை அதுவரை - முப்பத்தைந்து ஆண்டு தொடர்பில் - அவ்வளவு நெகிழ்ச்சியில் நான் கண்டதில்லை. திரு. பக்தவத்சலமே, தந்தை பெரியாரைப் புகழ்ந்தபோது என் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சிக்கோர் எல்லையேது! தந்தை பெரியார், உலகப் பெரியாரே என்னும் உணர்வோடு, பெருநடையோடு, வீடு திரும்பினேன்.
Comments
Post a Comment