இரண்டு வகையான வழக்குகளில் ஏற்பட்ட தீர்ப்புகள்!


காலம் சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராமபிரசாத் ராவ் திருச்சியில் வழக்கறிஞர் சங்கக் கட்டடத்தில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து விடுதலை பத்திரிகை சமத்துவத்தின் அடிப்படையில் உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டி வருகின்றது என்று பேசியது, விடுதலை நீதிக்கட்சி காலத்தில் இருந்து தந்தை பெரியார் பொறுப்புக்கு வந்த பின்னும் இன்றுவரை கடந்த அய்ம்பது ஆண்டுகளாக ஒரே பாதையில் நடைபோட்டு வருகிறது என்ற உண்மையைப் படம் பிடித்துக் காட்டுவதாகும்.

பார்ப்பனர்கள் நீதிபதிகளாக இருந்து தமிழருக்கு விரோதமாக எல்லைமீறித் தீர்ப்பு எழுதியபோதும் தமிழர் நீதிபதியாக இருந்து பார்ப்பனருக்கு எதிராகத் தீர்ப்பு எழுதிய போதும் பார்ப்பனர்கள், பார்ப்பனப் பத்திரிகைகளின் தன்மையை விடுதலை படம் பிடித்துக் காட்டி உண்மை நிலைமைகளை விளக்கியது மேலே சொன்னபடி நீதிபதி ராமபிரசாத்தின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை விளக்கும்.


1956 இல் வழக்கு!

1956ஆம் ஆண்டில் ஒரு வழக்கு. பார்ப்பனர்களின் தன்மையை அக்குவேர், ஆணிவேராகப் பிரித்து நீதிமன்றத்திலேயே நிரூபிக்க வாய்ப்பைக் கொடுத்த வழக்கு. இரண்டு அய்யங்கார் நீதிபதிகள் ஒரு தமிழர் ஆட்சித் தலைவரைப் பற்றி எல்லைமீறிய கடுஞ்சொற்கள் அடங்கிய தீர்ப்பை வெளியிட்டதைக் கண்டித்து, தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் சுமார் அய்ம்பதாயிரம் மக்களைக் கூட்டிக் கண்டித்ததோடு, அந்தத் தீர்ப்பை ஒட்டி, இந்து அய்யங்கார் பத்திரிகை தலையங்கம் எழுதியதையும் சுட்டிக்காட்டிக் கண்டித்துப் பேசினார்கள்.

விடுதலை சும்மா இருக்குமா?  6.11.1956ஆம் தேதிய தலையங்கத்தில் இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எதற்கும் தயாராக இருக்கிறார்கள் லட்சக்கணக்கான தமிழர்கள். இராமன் படத்தை வெறும் குப்பைத் தொட்டிக் கடுதாசி என்றும், பிள்ளையார் உருவத்தை வெறும் களிமண் என்றும் கருதித் தீ வைத்தும், உடைத்தும் காட்டிய தமிழ்ப் பெருமக்கள் கோர்ட் அவமதிப்பு என்ற பூச்சாண்டிக்கு அஞ்சி உண்மையைக் கூறத் தயங்குவார்களா? என்று அதிகார வர்க்கம் சிந்தித்துப் பார்க்கட்டும் என்று எழுதியது. இந்தத் தலையங்கம் பார்ப்பன அதிகார வர்க்கத்தை ஒரு கலக்குக் கலக்கியது. அதன் விளைவே தந்தை பெரியார்மீதும் விடுதலைப் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் அன்னை மணியம்மையார் மீதும் கோர்ட் அவமதிப்பு வழக்கு.

வழக்கை ஏன் தொடர்ந்தோம்? என்று பார்ப்பனர்கள் வெட்கப்படும்படி தந்தை பெரியார் செய்து விட்டார்கள். பார்ப்பன நீதிபதிகளைப் பார்ப்பனர்கள் என்பதற்காகக் கண்டித்தார் என்பதாய் வழக்கு. ஆனால் வழக்கில் ஆஜரான தந்தை பெரியார் பார்ப்பனர்கள் - அவர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் - அயோக்கியர்கள், மகா அயோக்கியர்கள் என்று உறுதி செய்யும் வகையில் பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும் என்றும் வாயில் - நாக்கில் - குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது, தேன் கசக்காது. பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய, புலி புல்லைத் தின்னாது, ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோல வாக்கும் பார்ப்பனர் தன்மை என்று முகத்தில் அறைந்தாற்போல நீதிமன்றத்தில் ஒரு பெரிய உரையை நிகழ்த்தி விடுதலை தலையங்கமே தேவலாம் என்று நீதிபதிகள் எண்ணும்படி ஒரு சாசனம் ஏற்படுத்தினார்.


பெரியாருக்குத் தண்டனை!


இப்படிச் சொன்னால் எந்த நீதிபதி விடுதலை செய்வார்? தந்தை பெரியாருக்கு ரூ.100 அபராதமும் அன்னையார் விடுதலையாகவும் தீர்ப்புச் செய்யப்பட்டது.
அதன்பின் தந்தை பெரியார்மீது கொலை செய்யத் தூண்டியதாக ஒரு வழக்கு. அதை நடத்திய சர்க்கார் வக்கீல் சீனுவாசாச்சாரி என்பவர் மீது யாரோ திரஒவகத்தை ஊற்றியதாக இரு நபர்கள் மீது தொடர்ந்த வழக்கில் திருச்சி செஷன்ஸ் நீதிபதி ராமையா (தமிழர்) என்பவர் விசாரணை செய்து வழக்கைத் தள்ளுபடி செய்தார். தள்ளுபடி செய்தது தவறு என்று மேலும் அய்க்கோர்ட்டில் அப்பீல் செய்ய அனுமதி கோரிப் போட்ட மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி சோமசுந்தரம் (தமிழர்) அவர்கள் எழுதிய தீர்ப்பில் கீழ்க்கோர்ட் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்ததோடல்லாமல் வழக்குத் தெடர்ந்த சர்க்கார் வக்கீல் பற்றி அவர் அந்தப் பதவிக்கே அவமரியாதை உண்டு பண்ணுகிறார். இந்த (சர்க்கார்) வக்கீல் தொடர்ந்து பதவியில் இருந்தால், சர்க்காரின் பெயருக்கு இழுக்கு நேரக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

  

விடுதலை எழுதியது


அந்த வழக்குப் பற்றி விடுதலையில் தலையங்கம் எழுதப்பட்டது. ஆம். தந்தை பெரியாரே தலையங்கம் எழுதினார். தலையங்கத்தில் நீதிபதி கூற்றுப்படி அரசாங்க ஊழியர் என்றால் அதற்கு மூன்று முக்கிய குணங்கள் தேவை. அவை: (1) ஒழுக்கம், (2) நேர்மை, (3) திறமை. இந்த மூன்றில் சிலருக்கு ஒன்று இல்லாவிட்டாலும் இன்னொன்றாவது இருக்கும். ஆனால் திருச்சி பப்ளிக் பிராசிகியூட்டருக்கு இந்த மூன்றும் இல்லை. இதுபற்றி எந்தப் பத்திரிகையாவது (அக்கிரகார ஏடுகள்) மூச்சுவிட்டிருக்கின்றனவா? திருச்சி மாவட்ட கலெக்டருடைய ஒரு உத்தரவின் பேரில் ஏற்பட்ட ஒரு தீர்ப்பை வைத்துக்கொண்டு, ஆத்திரம் கொப்புளிக்கத் தலையங்கம் தீட்டி, உடனே அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எழுதிய இந்துவின் ஆசிரியர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று எழுதினார்.
இந்த இரு வழக்குகளிலும் பார்ப்பான் நீதிபதியாக இருந்தால் அணுகுமுறை எப்படி என்பதையும் தமிழன் நீதிபதியாக இருந்தால் அணுகுமுறை எப்படி என்பதையும் பார்ப்பனப் பத்திரிகைகளின் நடவடிக்கை எப்படி என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள முடிந்தது.
தந்தை பெரியாரும், விடுதலையும் நிமிர்ந்து நின்று பார்ப்பனர்களின் - பார்ப்பனப் பத்திரிகைகளின் ஒரு குலத்துக்கு ஒரு நீதியை அடையாளம் காட்டினார்கள்.
இந்த இருவகையான தீர்ப்புகளுமே நமது இயக்க - விடுதலைப் பத்திரிகையின் - வரலாற்றில் மறக்கமுடியாதவை.
இந்த வழக்குகளினால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டத்தைத் தெரிந்தே விடுதலையும் தந்தை பெரியாரும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் விளைவுதான் இன்று நாம் கொஞ்சமாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம்.
அந்த விடுதலைக்குப் பொன்விழா! விடுதலையை ஒவ்வொரு தமிழ் மகனும் தன் உயிர் போல் காப்போம், இதுவே அறிவு ஆசான் பிறந்த நாளில் நாம் எடுக்கவேண்டிய சூளுரை.

- வழக்கறிஞர் கோ.சாமிதுரை, பொருளாளர், திராவிடர் கழகம்
தந்தை பெரியார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை