ஆசிரியர் சமுதாயம் எப்படி நன்றி செலுத்தப் போகிறதோ?
எல்லோரையும் வெளியே போகச் சொன்னார். பெரியார், கோவிந்தராசன், நான் மூவர் மட்டுமே இருந்தோம். பெரியார் கண்சாடை காட்டினார். கோவிந்தராசன் கதவை மூடிவிட்டு வந்தார்.
வேலை நீக்க அறிவிப்பு எப்படி வந்தது என்று அய்யாவுக்கு விளக்கு என்று பெரியார் கோவிந்தராசனுக்கு ஆணையிட்டார்.
கோவிந்தராசன் பதவிகள் காலியாகும்போது, அவ்விடங்களுக்கு, முதலில் ஓராண்டிற்கு, ஆள்களை நியமிப்போம். ஆண்டு முடிவதற்குமுன், கல்லூரி முதல்வரின் கருத்தைக் கேட்போம். அவர் கருத்தில் எவர் எவருடைய பணி சரியாக இருக்கிறதோ, அவர்களைத் தொடர்ந்து ஒழுங்காக வேலையில் அமர்த்திக் கொள்வோம். அவருக்கு திருப்தியில்லாதவர்களை அறிவிப்புக் கொடுத்து நிறுத்திவிடுவோம். இதோ பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே ஒரு காகிதத்தை நீட்டினார். அது என்ன? ஒரு பட்டியல். என்ன பட்டியல்? முந்தைய ஆண்டுகளில், இப்படி நீக்கப்பட்டவர்கள் பட்டியல். முந்தைய ஆண்டுகளில், எந்த ஆண்டும் இருவருக்குமேல் நீக்கப்படவில்லை. அதைப் பார்த்ததும் முன்பு நீக்கப்பட்டவர்கள் இடங்களில் யாருடைய பரிந்துரையின் பேரில் ஆசிரியர்களை நியமித்தீர்கள் என்று கேட்டேன். கல்லூரி முதல்வர் பரிந்துரையின்பேரில் நியமித்தோம் என்று கூறி, பட்டியலைத் தந்தார். முகவரிகளும் இருந்தன.
நான், இப்போது வேலை நீக்கம் செய்யப் போகிறீர்களே! அவர்களுக்குப் பதில் யாரையாவது நியமித்து விட்டீர்களா? என்று கேட்டேன்.
சில இடங்களுக்கு நியமித்து விட்டோம். மூன்று இடங்களுக்கு இனியே நியமிக்க வேண்டும் என்றார். கோவிந்தராசன் அத்தகவல்களையும் காட்டினார். என் மனதில் கருத்தொன்று பளிச்சென்று மின்னிற்று.
சம்பந்தப்பட்ட துணைப் பேராசிரியர்களைப்பற்றி முதல்வர் எழுத்தில் புகார் செய்தாரா? என்று வினவினேன். குழுக் கூட்டத்தில் வாயால் கூறுவார் என்பது பதில். நீங்களாவது அவர்களிடம் விளக்கம் கேட்டதுண்டா? இல்லை என்ற பதில் வந்தது.
அய்யா! நான் மட்டும் தங்களோடு தனியாகப் பேசலாமா? என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.
உடனே கோவிந்தராசன் எழுந்து போய்விட்டார்.
அய்யா, நான் தாளாளர் கோவிந்தராசனையும் முதல்வரையும் நம்புகிறேன். கல்லூரியின் நலத்திற்காகவே இதுவரை இப்படி நடந்திருக்கலாம். வழக்கு வந்தபிறகு, வழிமுறைகளைக் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. முதல்வரிடம் எழுத்து மூலம் புகார்களை வாங்கியிருக்க வேண்டும். அதன்பேரில் அவர்களுடைய விளக்கங்களைப் பெற்று குழுவின்முன் வைத்திருக்க வேண்டும். விளக்கங்களை ஒப்புக் கொள்வதற்கு இல்லை என்று குழு கருதுமானால், அம்முடிவைக் கூறி அறிவிப்புக் கொடுத்திருந்தால் சரி. அப்படிச் செய்யாததால், நடவடிக்கை சரியல்ல என்று நான் கூறி முடிப்பதற்குள், பெரியார் அப்படித்தான் நினைத்தேன். திருச்சியிலிருந்து வரும்போதே, அவரிடம் சொல்லிவிட்டேன்; எல்லோரையும் வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று, இன்னும் ஏதாவது செய்யணுங்களா? என்று பெரியார் கேட்டார்.
அவர்கள் எடுத்த நடவடிக்கையின் நியாயத்தைக் குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். வழிமுறை சரியில்லை என்பதற் காகவே, தாங்கள் முடிவுப்படி நடக்க வேண்டியதாகிறது என்றேன்.
அது சரி என்று சொல்லிவிட்டு, கோவிந்தராசனை அழைத்தார்.
அய்யாவும் நான் சொன்னபடியே நினைக்கிறார்கள். ஊருக்குப் போனதும் வேலை நீக்க அறிவிப்பை இரத்து செய்துவிடு என்றார்.
கோவிந்தராசன் புன்முறுவலோடு, அப்படியே ஆகட்டுங்கள் என்று சொல்லி ஓரடி எடுத்து வைத்தார்.
அப்போது பெரியார், ஏன்? நான் சொன்னபடி சந்தானத்தைக் காரியங்களை கவனிக்கச் சொல் என்று கூறி விடை கொடுத்தார்.
கோவிந்தராசன் சென்றபிறகு, அவர் தாளாளர் பதவியை விட்டுக் கொடுத்து விட்டார்; சந்தானத்தை தாளாளராகப் போட்டு விட்டேன் என்று பெரியார் விளக்கம் சொன்னார் பதறிப் போனேன்.
அது எதற்கு அய்யா? கோவிந்தராசனே தொடர்ந்து இருக்கலாமே? என்று நான் சொன்னபோது,
என்ன இருந்தாலும் இருதரப்பாரும் மனிதர்களே; அவநம்பிக்கை யோடே எதையும் பார்ப்பார்கள். புதியவர் வந்தால் புதிய கண்ணோட்டம் வரலாம். பாருங்கள் - சம்பந்தம் பண்ணிய தப்பு அய்யா வரும்படி ஆயிற்று. மன்னிக்கணும் என்றார், உலகப் பெரியார் ராமசாமி.
இந்த மன்னிப்புக் கேட்க, முந்நூற்று இருபது கிலோ மீட்டர் தூரம் வேன் இல்லாததால், காரில் கடும் வெய்யிலில் வந்த முதியவருக்கு ஆசிரியர் சமுதாயம் எப்படி நன்றி செலுத்தப்போகிறதோ?
Comments
Post a Comment