முதியோர் கல்விக்கு முதலிடம்
நம் சமுதாயத்தில் ஏராளமானவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதிருப்பது வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது என்று பெரியார் முழங்கினார். எழுத்தறிவு பெற ஆயிரக்கணக்கான சொற்கள் தேவையில்லை; பெரும் பெரும் கணக்குப் பயிற்சி வேண்டாம். அன்றாட வழக்கிலுள்ள சில நூறு சொற்களை எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டால் போதும். வீட்டுக் கணக்குப் போடத் தெரிந்து கொண்டால் இப்போதைக்குப் போதும். இவற்றைக் கற்றுக் கொடுக்க, மாதக் கணக்கில் காலத்தை நீடிக்க வேண்டாம். ஒரு சில மாதங்களில் செய்து முடிக்கலாம் என்பதைச் சுட்டிக் காட்டினார். அம்முறையில் உடனடியாகத் தொடங்கி விரைந்து செயல்பட்டு, ஓராண்டு காலத்தில் முதியவர் அனைவருக்கும் கண் திறந்துவிட வேண்டும் என்று பெரியார் துடித்தார்.
முதியோர் எழுத்தறிவுச் சாதனைக்குத் தவணை ஆறாண்டுகளாக இருப்பினும், படிப்புக் காலம் பத்து திங்களாக இருப்பினும் இப்போது இந்திய அரசு அறிவித்துள்ள தேசிய முதியோர் கல்வித் திட்டம் பெரியாரின் கருத்துக்கு வெற்றியாகும்.
எத்தனையோ திட்டங்களில் இதுவும் ஒன்று என்று இந்திய அரசும், முதியோர் எழுத்தறிவு இயக்கத்தை ஒதுக்கிவிடாமல், போதிய ஆர்வத்தையும், ஆற்றலையும் செலுத்தி வெற்றி பெறச் செய்தல், பெரியாருக்குப் பெருமை சேர்ப்பதைப் போலவே, நாட்டு மக்களின் எதிர்காலத்தை மாற்றி, வளர்க்கும் நல்வாய்ப்பாக, பெரும் வாய்ப்பாக விளங்குமென்பது உறுதி.
Comments
Post a Comment