பண்பாட்டின் மிக உயர்ந்த சிகரம்
சுவாமி வேதாசலம் என்ற மறைமலையடிகள் சென்னை குகானந்த நிலையத்தின் ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி சூட்டை ஏற்படுத்தியது. சைவத்தை குற்றம் சொல்பவனை இன்னமும் விட்டு வைத்திருக்கின்றீர்களா? உங்கள் உடலில் சைவக் குருதி ஓடவில்லையா? என்ற தன்மையில் அடிகளார் பேசியதாக ஒரு பொறி பறந்தது. தந்தை பெரியாரின் சீடர்களான ஜே.எஸ்.கண்ணப்பர், தண்டபாணி, இராமநாதன் ஆகியோர் மறைமலை அடிகளாருக்கு எதிராக ஆவேசம் கொண்டனர். திராவிடன் இதழில் தீப்பறக்க எழுதினர். இதனை மேலும் வளரவிடக் கூடாது என்ற முடிவில் கி.ஆ.பெ.விசுவநாதம் ஈடுபட்டார். மறைமலை அடிகள் தந்தை பெரியாருக்கு ஒரு மடல் எழுதி கி.ஆ.பெ. அவர்களிடம் கொடுத்தார். அக்கடிதத்தை திராவிடன் இதழில் மன்னிப்புக் கடிதம் என்ற தலைப்புக் கொடுத்து வெளியிட்டு விட்டார். இதனைக் கண்ட தந்தை பெரியார் மிகவும் மனம் வருந்தி குடிஅரசு (2.9.1928) இதழில் தலையங்கம் தீட்டி விட்டார். அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:
நமக்கு திரு.வேதாசலம் அவர்களது பெயரைக் கேட்க நேரிட்ட சமயம் முதலே அவரிடம் ஒருவித விஸ்வாசம்; நமது உணர்ச்சிகளுக்கும் கொள்கைகளுக்கும் அவர் ஒரு உற்ற துணைவர். பின்பலமானவர். சென்ற வாரம் ஒரு சமாதானக் கடிதம் நண்பர் திரு.விஸ்வநாதம் (பிள்ளை) அவர்கள் மூலமாய் திரு.வேதாசலம் அவர்கள் எழுதி அனுப்பியது கிடைத்தது. அதில் எழுதப்பட்டு இருந்தது என்ன என்பது பற்றிக்கூட நாம் கவனிக்க இஷ்டப்படவில்லை. அக்கடிதமானது நண்பர் திரு.விஸ்வநாத(பிள்ளை) அவர்களால் தப்பாய் விநியோகிக்கப்பட்டதால் அது திராவிடன் பத்திராதிபரிடம் போகவும், அதை அவர் மன்னிப்புக் கடிதம் என்பதாகப் பெயர் கொடுத்துப் பிரசுரிக்கவும் நேர்ந்தது நமக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது என்றாலும் அதன் குற்றத்தையும் நாமே ஏற்றுக் கொள்ளுகின்றோம். ஏனெனில் ஒரு விஷயத்தில் நமது நண்பர்கள் எல்லோருக்கும் ஒரேவிதமான பொறுப்பு இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நண்பர்களிடம் பழகுவது எப்போதும் சரியாகவே இருப்பதில்லை. ஆதலால் அக்குற்றத்திற்கு நாம் பொறுப்பாளி ஆவதுடன் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் இனிமேலாவது நமது நண்பர்களும், துணைவர்களும் இம்மாதிரி நடந்து கொள்ளாமல் இருப்பதற்காக நாம் விலை கொடுப்பதின் பொருட்டு நம்மையே நாம் தண்டித்துக் கொள்ளக் கருதி திராவிடன் பத்திரிகையில் மறைமலை அடிகள் மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளார் என்கின்ற வார்த்தை காணப்பட்டதற்காக நாம் நிபந்தனையில்லாமல் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறோம். அன்றியும் அக்கடிதத்தில் அவ்வளவு கூட இல்லாமல், இன்னமும் எவ்வளவு சாதாரணமாய் எழுதியிருந்தாலும் கூட அதை ஒரு சாக்காகக் கொண்டே அவர் பேசியதைப் பற்றிய விவகாரத்தை நிறுத்தி இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என்று தந்தை பெரியார் அவர்கள் பண்பாட்டின் மிக உயர்ந்த சிகரத்திற்கே சென்று எழுதியுள்ளார்கள். மிக்க பண்பின் குடியிருப்பு என்று புரட்சிக்கவிஞர் தந்தை பெரியார் பற்றி எழுதிய வரிகளுக்கு இலக்கணமும், இலக்கியமும் அல்லவா இது! அதே நேரத்தில் மறைமலை அடிகள் குறிப்பிட்ட கருத்துக்கு எந்தவித சமரசத்துக்கும் ஆளாகாமல், அத்தலையங்கத்தில் தந்தை பெரியார் எழுதி இருக்கும் பகுதி வருமாறு:-
மற்றபடி அபிப்ராய பேதத்தைப் பற்றிய விஷயத்தில் அவர் (மறைமலை அடிகள்) எவ்வளவு இணங்கி வருவதாயினும் நாம் நமது கொள்கையிலோ, அபிப்பிராயத்திலோ ஒரு சிறிதளவு கூட விட்டுக் கொடுக்கவோ, திரு.வேதாசலத்தினுடையவோ அல்லது வேறு யாருடையவோ நட்பைக் கருதியானாலும், கடுகளவு மாற்றிக் கொள்ளவோ நாம் சிறிதும் தயாராயில்லை. ஏனெனில், ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தக்காரர்களின் உழைப்புகள் பலன் தராததற்குக் காரணமே இவ்விட்டுக் கொடுக்கும் தன்மையும், தாக்ஷண்யமும் ராஜ தந்திரச் செய்கையும்தான் என்பது நமது முடிவு என்று தந்தை பெரியார் குறிப்பிடுவது பண்பாட்டுத் தகைமையிலும், கொள்கை உறுதியிலும் அவருக்குள்ள தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது.
திரு.வேதாசலம் (மறைமலை அடிகள்) அவர்களின் கடிதம்
அன்புள்ள அய்யா,
நலம், தங்கள் நலத்தைத் தெரிவித்தல் வேண்டும். என்னைப் பற்றிய ஒரு குறிப்பு குடிஅரசு பத்திரிகையில் வெளிவந்திருப்பதாக திருச்சி திரு.விஸ்வநாத பிள்ளை வாயிலாக இன்று அறிந்தேன். சென்னை குகானந்த நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி முறையைப் பற்றித் திராவிடன், தமிழ்நாடு பத்திரிகைகளிற் போந்துள்ள சிலவுரைகளை நம்பி, அக்குறிப்பு தங்களால் வரையப்பட்டதென அறிகிறேன். தங்களுக்காவது, தங்கள் இயக்கத்தைச் சார்ந்த அன்பர்கட்காவது எவ்வகையான தீங்கும் செய்ய அல்லது செய்விக்க வேண்டுமென்று யான் எண்ணியதுமில்லை; யாண்டும் சொல்லியதுமில்லை. தாங்கள் என்னை வேறாக நினைத்து என்மீது வருந்துதல் வேண்டாம். என்றாலும் கடவுளைப் பற்றியும் அடியாளர்களைப் பற்றியும் தாங்கள் கொண்டுள்ள கோட்பாடுகளில் மட்டும் யான் கருத்து உடன்பாடுடையேனல்லேன். பத்திரிகைகளில் வெளிவந்த சிலவற்றைப் பார்த்து தாங்கள் வருந்தியிருந்தால், அவ்வருத்தத்தை தாங்கள் அன்பு கூர்ந்து நீக்கிவிடல் வேண்டும். தமிழ் மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுத் தாங்கள் செய்துவரும் நன் முயற்சிகள் இனிது நடைபெறுக.
அன்புள்ள
24.8.1928 சு.வேதாசலம்
தந்தை
பெரியார் 115ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment