மான அவமானம்



தந்தை பெரியார் அவர்கள் எதிர்ப்பிலே வளர்ந்த தலைவர் ஆவார். காங்கிரசைவிட்டு விலகி சுயமரியாதை இயக்கத்தினை தோற்றுவித்து நாட்டில் பிரசாரம் செய்ய முற்பட்டபோது அவர்கள் அடைந்த அவமதிப்பு, கல்லடி, சொல்லடி, பலவித இன்னல்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றிற்கு அளவே இல்லை.

தந்தை பெரியார் அவர்கள் பொதுவாழ்விற்கே ஏற்ற இலக்கணமாய் அமைந்த ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர் ஆவார்.
வள்ளுவர் பொதுவாழ்வுக்கு இலக்கணம் கூறப் புகுந்தவர்.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்
என்றார். பொதுத் தொண்டில் ஈடுபட்டு காரியம் ஆற்ற முற்படுபவர்கள் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். பொதுத் தொண்டு காரணமாக தமக்கு நேரும் மான அவமானத்தைப் பற்றிக்கூட கவலைப்படக் கூடாது.
தனிமனித வாழ்வுக்குத்தான் மான அவமானம் பார்க்கவேண்டுமே ஒழிய, பொதுவாழ்வில் ஈடுபட்டவன் மான அவமானம் பற்றிக் கவலைப்படுவானேயானால் அவன் செய்யும் தொண்டு பயன் அற்றதாகி விடுகின்றது. இந்த பொதுத் தொண்டு இலக்கணத்துக்கு இலக்கியமாக அமைந்தவர் தந்தை பெரியார் ஆவார். எடுத்துக்காட்டாக தந்தை பெரியார் அவர்களின் பொதுவாழ்வு நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை நகரமானது, ஆரம்பகாலம் தொட்டே நமது இயக்கத்துக்கு மிக்க செல்வாக்கு உடைய நகரமாகும். இந்த நகரில் காலம் சென்ற இராமச்சந்திரன் சேர்வை, வெங்கிடாசலம் சேர்வை போன்ற முக்கிய பிரமுகர்கள் எல்லாம் நமது இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்த காலம் அது.

இராமச்சந்திரன் சேர்வை அவர்கள் ஜில்லா போர்டு தலைவராக இருந்தவர். அவர் பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சியில் மிகத் தீவிரமானவர். அவர் ஒரு தடவை பொதுக் கூட்டத்தில் தமது வலக் கையை நீட்டி இந்தக் கை பார்ப்பனர் அல்லாதாருக்கே வேலைக்கு உத்தரவு போட்டுப் பழகிய கை, இது ஒருக்காலும் பார்ப்பனர்களுக்கு வேலை கொடுக்காது என்று பகிரங்கமாகவே முழக்கம் செய்தவர் ஆவார்.

இத்தகைய ஊரில் ஒரு சமயம் தந்தை பெரியார் அவர்களுக்குச் சிறப்புமிக்க ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் செய்து நகரமெங்கும் வரவேற்பு வளைவுகளாலும், தோரணங்களாலும் அலங்கரித்து விழாக்கோலம் செய்து இருந்தார்கள். தந்தை பெரியார் அவர்களின் ஊர்வலக் காட்சியைக் காணவும். அறிவுரையினைக் கேட்கவும் மதியம் முதலே சுற்று வட்டாரங்களில் இருந்தெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குவியத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியானது காங்கிரசில் சில முக்கியமாக இருந்த பார்ப்பனர்களுக்கு அதிர்ச்சியும், பொறாமையும் அடையும்படி செய்துவிட்டது. பார்ப்பனர் காலிகளையும் கூலிகளையும் பணத்தைக் கொடுத்து தூண்டிவிட்டு ஊர்வலத்தில் கலகம் விளைவிக்க ஏற்பாடுகள் செய்தார்கள்.

பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில் காலிகளும், கூலிகளும், சில அப்பாவி பார்ப்பனர் அல்லாத காங்கிரஸ்காரர்களும் சேர்ந்துகொண்டு ஊர்வலம் வரக்கூடிய பிரதான வீதியில், பிரதானமான இடத்தில் பழைய செருப்புக்களை எல்லாம் கொண்டு தோரணமாகப் பிணைத்து வீதியில் கட்டி இருந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்களை இரட்டைக் குதிரை பூட்டிய பீட்டனில் அமரச் செய்து பல்லாயிரக்கணக்கான மக்கள் விண்ணதிரும் வாழ்த்தொலிகளுடன் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
ஊர்வலமானது செருப்புத் தோரணம் கட்டப்பட்ட இடம் வந்து சேர்ந்தது. பீட்டனில் அமர்ந்துவரும் தந்தை பெரியார் அவர்களின் தலையில் தட்டுப்படும்படி அந்த செருப்புத் தோரணமானது தாழ்வில் கட்டப்பட்டு இருந்தது.
வெங்கிடாசலம் சேர்வையும் மற்றவர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தோரணத்தை அப்புறப்படுத்த எதிரிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

தந்தை பெரியார் அவர்கள் வெங்கிடாசலம் சேர்வை அவர்களை அழைத்து அவர்கள் செருப்புத் தோரணம் கட்டி இருந்தால் நமக்கு என்ன? போனால் போகின்றது. நீங்கள் ஊர்வலத்தை நகர்த்துங்கள் என்றார்கள்.

வெங்கிடாசலம் சேர்வை அவர்கள், அய்யா மன்னிக்கவும். இந்த செருப்புத் தோரணத்தை அப்புறப்படுத்தாமல் ஒருக்காலும் ஊர்வலத்தை நகர்த்த ஒப்பமாட்டேன். எத்தனை கொலை விழுந்தாலும் அஞ்சப் போவதில்லை. இரண்டில் ஒன்று பார்த்தே தீருவேன். உங்களுக்கு ஏற்படும் அவமானத்தைச் சகிக்கமாட்டோம் என்று ஆவேசத்துடன் கூறினார். கூட்டத்தின் இடையேயும் ஆத்திரம் மேலோங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியினைக் காண மேற்கொண்டும் கூட்டம் கூடிவிட்டது.

இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தின் ஆத்திர உணர்ச்சியினைக் கண்ட எதிரிகள் மெள்ள நழுவிவிட்டார்கள். பிறகு கூட்டத்தினர் செருப்புத் தொரணத்தைப் பிய்த்து எறிந்தார்கள். பிறகு ஊர்வலமானது மேற்கொண்டு போக வேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர்ந்தது. எதிரிகளின் இழிசெயல் வெற்றி பெறாததோடு பொதுமக்கள் வெறுப்பையும் தேடிக்கொண்டமைக்கு வெட்கித் தலைகுனிந்தார்கள்.
இத்தகைய சிவகங்கை நகரில் இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு காங்கிரஸ்காரர்களே தந்தை பெரியார் அவர்களை காமராஜர் மன்ற விழாவிற்கு வரவேண்டும் என்றும், அதில் காமராஜர் அவர்கள் படத்தை தந்தை பெரியார் அவர்களே திறக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தார்கள். தந்தை பெரியார் அவர்களும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.
அந்த குறிப்பிட்ட நாளில் தந்தை பெரியார் அவர்கள் சிவகங்கை நகருக்குவந்து பிரயாணிகள் விடுதியில் தங்கி இருந்தார்கள். சிவகங்கை நகர காங்கிரஸ் பிரமுகர்களும், தொண்டர்களும் கூட்டமாக வந்து தந்தை பெரியார் அவர்களுக்கு மாலை அணிவித்து, அய்யா! உங்களுக்கு இந்த நகரில், முன்பு ஊர்வலத்தில் செருப்புத் தோரணம் கட்டி அவமரியாதை செய்தோம்; இன்றைக்கு அந்த அவமரியாதை விளைவித்தமைக்கு பிராயச்சித்தம் செய்துகொள்ளவே உங்களை அழைத்து ஆடம்பரமான வரவேற்புடன் பவனிவரவும் ஏற்பாடுகள் செய்து உள்ளோம் என்று கூறினார்கள்.
தந்தை பெரியார் அவர்களும் சிரித்துக் கொண்டே என்னுடைய பொதுவாழ்வில் இதுபோல இன்னும் எத்தனையோ எதிர்ப்புக்கள், அவமதிப்புக்கள் எல்லாம் ஏற்பட்டு உள்ளது. அதுகள் கண்டு நான் என்றைக்குமே கவலைப்பட்டது கிடையாது என்று கூறினார்கள்.
மாலை ஆடம்பரமான ஊர்வலம் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்களைத் திறந்த ஜீப்காரில் அமரச் செய்து பலவித கேளிக்கைகளுடனும் பாண்டு வாத்தியங்களுடனும் சிவகங்கை நகர வரலாற்றிலேயே கண்டிராத வண்ணம் அழைத்துச் சென்றனர்.
தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பு, எந்த பிரதான வீதியில், எந்த பிரதான இடத்தில் செருப்புத் தோரணம் கட்டி அவமதிப்பு விளைவிக்கப்பட்டதோ அதே இடத்தில் தமிழர்களை வாழ்விக்க வந்த தந்தையே வருக! வருக!! என்று பெரிய வரவேற்பு வளைவுகள் போட்டிருந்தார்கள்.
- புலவர். கோ. இமயவரம்பன்
தந்தை பெரியார் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை