ரயில் டிக்கெட்டுக்கு வைத்துக் கொள்ளுங்கள்
அய்யா அவர்களை கஞ்சன் என்றும் சிலர் கூறுவது உண்டு. அய்யா அவர்களே நான் கஞ்சன்தான் என்று கூறுவார்கள். பணத்தைப் பார்க்கும்பொழுது எனக்கு ஓர் ஆசை! ஆனால், அடுத்த நிமிடமே அந்தப் பணம் என்ன ஆயிற்று, எங்கே போயிற்று என்று எனக்குத் தெரியாது என்று அய்யா சொல்லுவார்கள். அய்யா அவர்கள் அவ்வளவு சிக்கனமாகப் பணத்தைச் சேர்த்து வைத்ததால்தான் அவர்களின் காலத்துக்குப் பிறகும் அவர்களின் கொள்கைகளைப் பரப்ப முடிகிறது. பெரியார் எச்சில் கையால்கூடக் காக்கா ஓட்டுவது இல்லை என்று சொல்லப்படுவதையும் நான் ஏற்றுக் கொள்வது இல்லை என்பதுடன், மறுப்பதும் உண்டு.
ஒருமுறை அய்யா அவர்கள் தஞ்சைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, ஜெயங்கொண்டபுரம் போனார்கள். கும்பகோணம் ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட்டு விட்டால், திருச்சிக்குப் போய்விடுவேன் என்று நான் சொன்னேன். கும்பகோணம் ரயில் நிலையத்தில் அய்யாவின் வண்டி நின்றது. நின்றதும், ரயில் டிக்கெட்டுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று அய்யா அவர்கள் பர்சில் இருந்து பணம் எடுத்து நீட்டினார்கள்! அதற்கு நன்றி சொன்ன நான், என்னிடம் பணம் இருக்கிறது, அய்யா என்று சொல்லி விட்டு இறங்கிக் கொண்டேன். அய்யா அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவர்களின் அருங்குணங்கள் தெரியும். அவர் ஒரு தலைவர் மட்டும் அல்ல; மனிதத் தன்மைக்கே எடுத்துக்காட்டு!
- அ.மா.சாமி (ஆசிரியர், ராணி வார இதழ்)
தந்தை
பெரியார் 109ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment