உயிர்பலி தடை செய்யப்பட்டது
பெரியார் (ஈ.வெ.ரா.) அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் ஒப்பற்ற ஒரு புரட்சி. அப்புரட்சி இயக்கம் சமய சமூகங்களில் ஊடுருவியுள்ள மூடப்பழக்க வழக்கங்கள் முறியடிக்கப்பட்டன. ஏன்! புராண ஆபாசங்களில் காணும் கற்பனைகள் கரைந்தொழிந்தன. 1928ஆம் ஆண்டில் அய்யா அவர்கள் நடத்தி வந்த குடிஅரசுப் பத்திரிகையில் பண்டைய ஓலைச் சுவடியாகிய தர்ம பரிக்ஷை என்னும் நூலிலிருந்து புராணங்கள். புளுகிவைத்த ஆபாசச் செய்திகளை யான் எழுதி வந்தேன். அக்கட்டுரை தமிழக மக்களின் கண்களைத் திறந்தன. பழைய பொய் மூட்டைகளை அடியோடு மறந்தனர். இதனை அறிந்த பெரியார் புராண ஆபாசங்கள் என்னும் பெயரால் அக்கட்டுரைகளை நூல் வடிவாக வெளியிட்டுத் தமிழ் நாடெங்கும் பரப்பினார். இவ்வாறு இந்து மத புராணங்களின் கற்பனைகளைக் களைந்தெறிந்தது போலவே மதத்தின் பெயராலும் மந்திரத்தின் பெயராலும் தெய்வத்தின் பெயராலும் நடைபெற்று வந்த உலக மூடம், தேவ மூடம், பாசண்டி மூடம் ஆகிய மும் மூடங்களும் மக்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டன. அது மட்டுமல்ல! பெரியார் தோற்றுவித்த அறிவியக்கக் கொள்கைகளின் சொற்பொழிவுகளைக் கொண்டே தெய்வத்தின் பெயரால் உயிர்ப் பலியிடும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க யான் பலி விலக்குப் பிரசாரம் செய்து வந்தேன். அய்யா அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டதிலிருந்து என்னுடைய சேவைக்கு ஆங்காங்கு பெரியார் இயக்கத் தோழர்களின் ஆதரவு கிடைத்து வந்தது. தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களுக்கும் பெரியார் அவர்களுக்கும் சமயக் கொள்கை சம்பந்தமாகப் பிரிவு ஏற்பட்டுத் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் ஒருவர் கொள்கையை ஒருவர் மறுத்து எழுதும் அளவுக்குச் சென்று விட்டது. அதே சமயத்தில் ஆரணிக்கடுத்த கடலாடி என்ற கிராமத்தில் சங்கராச்சாரியாரின் ஆதரவில் சில பிராமணர்கள் அஸ்வமேத யாகம் செய்ய முற்பட்டார்கள். இதனை அறிந்த யான் இந்த வேத வேள்வியாகிய கொலை வேள்வியைக் கண்டிக்கும் தகுதி வாய்ந்தவர்களாகப் பெரியாரும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களுமே என் உள்ளத்தில் காட்சி அளித்தனர். ஆனால் இருவரும் பிணக்குண்டு பிரிந்துள்ளார்களே என்ற அச்சமும் ஏற்பட்டது. எனினும் யான் அப்பெரியார் இருவரையும் தனித்தனியாகக் கலந்து, கடலாடி யாகக் கண்டனக் கூட்டத்திற்கு ஆரணிக்கு வருமாறு வேண்டிக் கொண்டேன். இருவரும் புன்னகையோடும் ஆர்வமோடும், ஒப்புக் கொண்டார்கள். அவ்வாறே அம் மாபெருந் தமிழ்ப் பெரியார்களை ஆரணிக்கு அழைத்துச் சென்றேன். இருவரும் சென்னையிலிருந்தே ஒன்றாகப் புறப்பட்டார்கள். பிரிந்து பிணக்குண்டு கடுமையான மறுப்புரைகள் எழுதிவரும் இருவரும் சென்னையில் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிய காட்சியை எழுத்துக்களால் வருணிக்க இயலாது. ஏதோ பல காலம் ஒருவரை ஒருவர் பாராத இரு நண்பர்கள் ஒன்றாய்க் காணும் போது அவர்களுக்கு உண்டாகும் அன்பும் உணர்ச்சியும் நட்பும் எவ்வாறு ஒளிவிட்டு வீசுமோ அந்நிலையே அவர்களிருவரிடமும் கண்டேன். அவ்வளவு நெருங்கிய நட்புணர்ச்சியுடன் ஆரணி வந்து கடலாடி வேத வேள்விக் கொலைச் செயலைக் கண்டித்துப் பேசினார்கள். இக்காட்சியைக் கண்ட பொது மக்கள் நவசக்தியையும் குடியரசுப் பத்திரிகையையும் நம்பவில்லை. அவைகள் எழுத்துக்கள்! இதோ உண்மைக் காட்சி என்று பரவசமானார்கள். பெரியாரும், திரு.வி.க.வும் ஒரு மேடையில் பேசுவதைக் கண்டு கைக்கொட்டி ஆரவாரம் செய்து இரு பெரியார்களையும் வாழ்க! வாழ்க! என வாழ்த்தொலி பரப்பினார்கள். இத்தகு சிறப்புக்கள் அமைந்த புகழ் பொதிந்த பெரியாரின் இயக்கமே எனக்குத் துணையாக நின்று தெய்வத்தின் பெயரால் உயிர்ப் பலியிடும் மூடநம்பிக்கை சட்டமூலம் தடை செய்யப்பட்டதென்றால் அது மிகையாகாது, பெரியார் மேலும் பல்லாண்டு வாழ்க!
- ஜீவபந்து டி.எஸ்.சிறீபால்
தந்தை
பெரியார் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment