உடனே பாராட்ட வேண்டும்
1940இல் ஈரோட்டிலிருந்து விடுதலை நாளேடு வெளிவந்த காலகட்டத்தில், அறிஞர் அண்ணா அதன் ஆசிரியராக இருந்தபோது தலையங்கங்கள்,
சிந்தனைக் கட்டுரைகள், தொடர் கதைகள் எல்லாம் எழுதி வந்தார். அவர் ஒருநாள் எழுதிய மிக அற்புதமான தலையங்கத்தைப் படித்த தந்தை பெரியார் அவர்கள், உடனே பாராட்ட வேண்டும் என்று நினைத்து, அவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மூன்றாவது மாடிக்குமேல் ஏறி சென்றார். (ஈரோட்டிலேயே அந்தக் காலத்தில் அவர் கட்டிய பெரிய அழகான முதல் மூன்று மாடி வீடு அது! அண்ணா இரவெல்லாம் கண் விழித்து எழுதுவார்;
படிப்பார்;
அதனால் உதயசூரியனைப் பார்க்காமல்தான் காலை வெகுநேரம் கழித்து எழும் பழக்கமுடையவர்). அய்யா வந்ததை அறிந்து அவசர அவசரமாக அரக்க பறக்க எழுந்தார்.
என்னய்யா,
அவ்வளவு முக்கியமான அவசரச் செய்தியா? என்று அண்ணா, அய்யாவைப் பார்த்துக் கேட்டார். அய்யா அவர்கள் சிரித்துக் கொண்டே, அண்ணாத்துரை நேற்று நீங்கள் எழுதிய விடுதலை தலையங்கத்தைப் படித்தேன். அதற்காகவே உங்களைப் பாராட்ட வந்தேன் என்றார்கள்!
அண்ணா அவர்கள், நன்றி அய்யா! அதற்காக அய்யா அவர்கள் மூன்று மாடி ஏறி வந்து, இப்படி பாராட்டுத் தெரிவிக்க தொல்லை எடுத்துக் கொள்ளலாமா என்று கனிவுடன் கேட்டார்கள்.
அதற்கு தந்தை பெரியார் அவர்கள், இல்லிங்க, ஒருத்தரைப் பாராட்டணும்னா நாம உடனே செய்யணுங்க. அதுதான் என் பழக்கம். ஆகவேதான், உடனே மேலே ஏறி வந்தேன். இப்போது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினார்களாம்!
- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 1
Comments
Post a Comment