எத்தனை இன்பம்!



அய்யா அவர்கள் தனது வாழ்வின் சம்பவங்களையே சுட்டிக் காட்டியுள்ளார்:
என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது 1916 அல்லது 1917இல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய வண்டி வைத்திருந்தேன். ஊத்துக்குழி ஜமீன்தார், ஆனரபிள் சம்பந்த முதலியார் மற்றும் 3, 4 பிரபலஸ்தர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தனர். எல்லோருமாகச் சேர்ந்து ஒரு இழவு வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கப் போக வேண்டியிருந்தது. ஜமீன்தார் முதலிய எல்லோரையும் வண்டியில் அமர்த்தினேன். வண்டியில் மேற்கொண்டு இடமில்லை. நான் ஒருவன்தான் பாக்கி. வண்டி அவர்களைக் கொண்டு போய் விட்டுவிட்டு திரும்பி வரவேண்டுமென்றால் நேரமாகிவிடும். ஆதலால் என்னையும் உடன் வரவில்லையா என்று ஜமீன்தார் கேட்டதற்கு, இதோ பின்னால் வருகிறேன் என்று பதில் கூறி வண்டியை விடு என்று சொல்லிவிட்டு அவர்கள் அறியாமலே நான் வண்டி மீதேறி கோச்மேன் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். குறிப்பிட்ட இடத்தை வண்டி அடைந்ததும் அவர்கள் இறங்கவும், கோச்மேன் பக்கத்திலிருந்து நான் இறங்குவதைப் பார்த்து அவர்கள் திடுக்கிட்டார்கள். அன்றையிலிருந்து என்னை அவர்கள் ஒருபடி உயர்வாக மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜமீன்தார் என்னைக் கண்டால் பெரிய ஞானி என்று குனிந்து கும்பிடுவார்
கோச்மேன் பக்கத்தில் உட்காருவதை நான் கேவலமாக மதிக்கவில்லை என்பதையும், விருந்தினர்களுக்காக எனது சவுகரியத்தை எந்த அளவுக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்து வருகிறவன் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டதனால்தான் என்னை மிக மேலானவனாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள்.

இப்படி நம் சவுகரிகத்தைப் பிறருக்காக விட்டுக் கொடுப்பது இழிவல்ல. தப்பிதமுமல்ல. நான் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியபோதுகூட நான் மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வேன். ராஜகோபாலாச்சாரியாரும், திரு.வி..வும் இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்கள். திரு.வி.. அவர்கள் அதற்காக வெட்கப்படுவார். கூச்சப்படுவார். உடம்புக்கு சவுகரியமில்லாதபோது நீங்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வது தவறாகாது என்று நான் கூறி அவர்களைச் சமாதானப்படுத்துவேன். மாணவர்கள் இம்மாதிரி இளமை முதற்கொண்டே தம் வாழ்க்கைச் சவுகரியத்தை மிக எளிதாக்கிக் கொள்ள வேண்டும். சாதாரண உணவில் திருப்தி அடைய வேண்டும்.

- 21.2.1948 அன்று திருச்சியில் நடைபெற்ற வட மண்டல திராவிட மாணவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் மாணவர்களுக்கு ஆற்றிய அறிவுரை. (விடுதலை, 29.3.1948)


- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 1

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை