பெரியார் ஒரு தலைவர் மட்டுமல்ல; மனிதத் தன்மைக்கே எடுத்துக்காட்டு




1955 முதல் 1957 வரை மூன்றரை ஆண்டு காலம், திருச்சியில் தினத்தந்தி செய்தியாளராகப் பணியாற்றினேன்.

தினத்தந்தியின் செய்தியாளராக என்று சொல்வதைவிடத் தந்தை பெரியாரின் தனிச் செய்தியாளராகத் தொண்டாற்றினேன் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்!
அந்நாளில் திருச்சி மாவட்டம் முழுவதும், தஞ்சை மாவட்டத்திலும்கூட பெரியாருடன் அவர்களின் வண்டியிலேயே பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பெரியாருடன் நெருங்கிப் பழகும் பேறும் பெற்றேன். எந்த அளவுக்கு என்றால் -

ஒரு நாள் அய்யா அவர்களைப் பார்க்கப் பெரியார் மாளிகைக்குப் போனேன். அங்கு வரவேற்பு அறையில் அய்யா அவர்கள் இல்லை. ஊஞ்சல் அறைக்குச் சென்றேன். அங்கும் இல்லை. உள் அறையில் இருந்தார்கள். வரட்டும் என்று காத்திருந்த நான், அமர்வதற்கு அங்கு இருக்கை எதுவும் இல்லாததால் ஊஞ்சலில் அமர்ந்தேன். திருச்சி மாவட்டச் செயலாளர் பிரான்சிஸ் வந்தார். அய்யா அவர்களின் ஊஞ்சலில் நான் அமர்ந்து இருப்பதைப் பார்த்ததும், அவர் தன்னையும் அறியாமல் எழுந்திருடா என்று இரைந்துவிட்டார். இடியோசை போன்ற அந்த குரல் கேட்டு, உள்ளேயிருந்த அம்மா ஓடிவந்தார்கள். என்ன.. என்ன... என்று பதட்டத்துடன் பிரான்சிஸ்ஸிடம் கேட்டார்கள். அய்யா ஊஞ்சலில் இந்த ஆள் உட்கார்ந்துவிட்டார் என்ற பிரான்சிஸ் சொன்னார். அதைக் கேட்டு அம்மா சிரித்து விட்டார்கள். அவர் உட்கார்ந்தால் என்ன? அய்யாவுக்கு அவர் செல்லப்பிள்ளை என்று அம்மா அவர்கள் சொன்னது, இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அவ்வளவு நெருக்கமாக உள்ளன்புடன் அய்யா அவர்களுடன் பழகும் பேறு எனக்கு கிடைத்ததை மறக்கவே முடியாது.

அய்யா அளிக்கும் மரியாதையே அலாதி

அய்யா அவர்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் மரியாதை இலக்கியமான ஒன்று. அதில் யாரும் அணு அளவுகூடக் குறை கூறமுடியாது. ஆனால், அய்யா அவர்களின் வேறு சில குணங்களை சிலர் குறை கூறுவது உண்டு. அவர்களின் கருத்துகள் தவறானவை என்பதை இந்தப் பழக்கத்தில் நான் உணர்ந்தேன். மற்றவர்களும் உணர்ந்து, தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள முடியும் என்பதால், ஒரு சில நிகழ்ச்சிகளை நினைவுகூர விரும்புகிறேன்.

என் தந்தை ஒரு காங்கிரசுக்காரர், மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தபொழுது, பிள்ளைகளான எங்களுக்குக் கதர் உடை அணிவித்து, கதர் குல்லா மாட்டி, கையில் மூவண்ணக் கொடி கொடுத்து, காந்தியைப் பார்க்க அழைத்துச் சென்றது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. காங்கிரசு குடும்பத்தில் பிறந்துவிட்டதால், கறுப்புச் சட்டைக்காரர்கள் மீது இயற்கையாகவே எனக்கு ஒரு வெறுப்பு இருந்தது.

ஆனால், செய்தியாளர் ஆனதும் நான் சந்தித்த முதல் தலைவர் அய்யா அவர்கள் தான். அதுவும் பணியேற்ற ஒரு சில நாளில் அய்யா அவர்களை நேர் காண அனுப்பப்பட்டேன். செய்தியாளராக நான் ஒருவரை நேர் காணச் சென்றதும் அதுவே முதல் முறை.
கவனமாகப் போங்கள். சைக்கிளுடன் சேர்த்து உங்களைத் தூக்கி வெளியில் போட்டு விடுவார்கள் என்று அலுவலக நண்பர்கள் என்னை எச்சரித்து அனுப்பினார்கள் (ஏற்கெனவே செய்தியாளராகப் பணியாற்றி கொண்டு இருந்தவர், ஒரு பிராமண நண்பர்).

அப்பொழுது நடிகவேள் எம்.ஆர்.இராதாஅவர்களின் இராமாயண நாடகத்துக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அய்யா அவர்கள் வெளிநாட்டுப் பயணம் முடிந்து திரும்பி இருந்தார்கள். பெரியார் மாளிகையில் அய்யா அவர்களும் வேதாசலம் அவர்களும் ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தார்கள். தடையை மீறி நாடகம் நடத்தப்படுமா? என்று அய்யா அவர்களிடம் நான் கேட்டேன். பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்று அய்யா சொன்னார்கள்.
நான் நின்றுகொண்டு இருந்தேன். அதைக் கவனித்த அய்யா அவர்கள் என்ன? என்றார்கள். தடையை மீறி நாடகம் நடத்தப்படுமா? என்று நான் மீண்டும் வினவினேன். அதுதான் சொன்னேனே, பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்று என அய்யா அவர்கள் கூறினார்கள். தொண்டன் ஆகிவிட்டேன்.

அவர்களிடம் நான் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. எனக்கு அனுபவக் குறைவு வேறு. எனவே, நின்று கொண்டு இருந்தேன்.
சற்று கழித்து, இன்னும் என்ன? என்று அய்யா அவர்கள் மீண்டும் என்னைப் பார்த்துக் கேட்டார்கள்... இல்லை... தடையை மீறி நாடகம் நடத்தப்படுமா? என்று மூன்றாம் முறையாக நான் கேட்டேன்.
அய்யா அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. சுத்த முட்டாளாக இருக்கிறீர்களே! பொதுக் குழு கூடித்தான் முடிவு எடுக்கும் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன் என்றார் அய்யா அவர்கள்.

எனக்கு கோபம் வந்துவிட்டது. வாறேன் என்று முறைத்துக் கொண்டு கிளம்பினேன். வாங்க அய்யா என்று அய்யா அவர்கள் கனிவுடன் கைகூப்பினார்கள்.

நான் மெய் சிலிர்த்துப் போனனேன்! பெரியார் என்றால் பெரியார் தான் என்று வழி நெடுக ஆயிரம் முறை சொல்லிக் கொண்டேன். அன்றுமுதல் பெரியார் தொண்டன் ஆகிவிட்டேன்.

- .மா.சாமி, தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள்
 விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை