துறையூர் பொதுக் கூட்டத்தில் பெரியார் உரை



27.11.1967இல் துறையூரில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு:

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இளைஞர்களே! எனக்கு முன்னே பேசிய நண்பர் சொன்னது போல தேர்தலுக்கு பிறகு இக்கூட்டம் இங்கு நடைபெறுகிறது. தேர்தலில் தோல்வி அடைந்தோம். ஆனால் கொள்கையிலேவெற்றிபெற்றுவிட்டோம். ஆகையால் உங்கள் முன் வந்து தைரியமாக பேசும்படியான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தோழர்களே!
கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை!

கடவுளை உண்டாக்கினவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி

என்று சொன்னார்கள். இங்கே சுருக்கமாக எங்கள் இயக்கக் கொள்கைகள் எல்லாம் உங்களுக்கு தெரியவேண்டுமானால், எங்கள் இயக்க புஸ்தகங்களை வாங்கி படியுங்கள். இது விடுதலை' மலர் 200 பக்கம். அருமையான பல கட்டுரைகளை கொண்டது. இதன் விலை ஒண்ணரை ரூபாய்புராணங்களுடைய புரட்டு.அதிலே இருக்கின்ற காலித்தனம், அசிங்கம் ஆபாசம், இது ராமாயணத்தை பற்றினது. இது முக்கால் ரூபாய் ஜாதியை ஒழிக்க வேண்டிய பல ரகசியங்கள் அம்பேத்கர் எழுதின நூல் இது. ஆறு அணா மற்ற பல புராணங்களிலிருந்து எடுத்து போட்ட ஒரு புஸ்தகம். இது ஆறு அணா, கடவுள் இல்லை, இருக்க நியாயமில்லை என்பதற்காக பெரிய ஆதாரங்களோடு ஒரு பெரிய மேல்நாட்டு பாதிரியார்எழுதியதுஒன்று 37 காசு. இன்னொன்று 32 காசு புஸ்தகத்தை இங்கு விற்பாங்க. வசதிப்பட்டவங்க வாங்கிப்படியுங்க.

தோழர்களே! யாரு பேச ஆரம்பித்தாலும் முதலில் நாங்கள் காங்கிரசை ஆதரித்தோம். இப்போது திராவிட முன்னேற்றகாரர்களை ஆதரிக்கிறோம். அதற்கு இன்ன காரணம் என்று சொல்லிவிட்டுதான் எல்லாரும் பேசறாங்க. நானும் அதைச் சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் சொன்னதிலிருந்தே ஏன் அப்படிச் செய்தோம் என்பதற்கு முக்கியகாரணங்கள் இன்னமும் நாளைக்கும் என்ன பண்ணுவோம் என்கிறதைப் பற்றியும் சொல்லுகிற மாதிரி இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரித்தால் நாளைக்கே நாங்கள் எதிர்க்கவேண்டியதாகி வரும். (கைதட்டல்) மந்திரிகள் என்ன செய்கிறார்களோ அதைசெய்கிறதை பொறுத்ததாகும். நம் இஷ்டத்தை பொறுத்தது ஆகும். ஆனதினாலே நான் ஏன் மாறினேன் என்பதைப் பற்றியும் நான் இங்கு சொல்லியாக வேண்டும். நான் நேற்று மாத்திரம் மாறலே காங்கிரசிலே இருந்து நான் முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கலே. 1920லே காங்கிரசை ஆதரித்தவன். ரொம்ப நான் அதற்குப் பிரச்சாரம் பண்ணினவன். தோற்றுப்போன காங்கிரஸ் பதவிக்கு வருவதற்கு நான் பிரச்சாரம் பண்ணினவன். அவர்கள் யோக்கியதை தெரிந்தும் அதை விட்டு விட்டு, அவர்களுக்கு எதிராக இருந்ததும் நான் தியாகம் பண்ணிவிட்டு வந்ததுமான கட்சியை விட்டு, ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தேன் நான். அதுவும் பத்து பதினைந்து வருஷம் அதிகாரத்தில் இருந்தது. அப்புறம் அது தோற்றுப் போயாச்சி. காங்கிரஸ் பதவிக்கு வந்தது. (15.07.1937ல்) வந்த உடனே எதிர்த்தேன். இரண்டு மூன்று வருஷம் எதிர்த்தேன்

நாங்கள் எல்லாம் ஜெயிலுக்கு போனோம். நானும் 2,3வருஷம் கடினக்காவல் தண்டனை அடைந்தேன். (06.12.1938ல்) காங்கிரசை எதிர்த்ததினாலே. இன்னும் மற்ற நம்ம தோழர்கள் நிறையா பேர் ஜெயிலுக்கு போனாங்க. அப்புறம் காங்கிரசு ஒழிந்தது. வெள்ளைக்காரன் ஆட்சி வந்தது. வெள்ளைக்காரன் ஆட்சியை ஆதரித்தேன். காங்கிரஸ்காரன் அதை எதிர்த்தான். தங்களுடைய கைக்கு அந்த ஆட்சி வரவேணும்னு. அவன் ஆட்சி போனால் நாம திரும்பவும் காங்கிரசுடன் சண்டை பிடிக்க வேண்டுமே என்று, அதற்காக அவர்களை எதிர்த்து, வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்கு ஜெயம் உண்டாக்கிறாப்பிலே பண்ணினோம் வெள்ளைக்காரனும் போனான். (15.08.1947இல்) காங்கிரஸ்காரன் வந்துட்டான். அவனையும் நான் எதிர்த்தேன். இரண்டு வருஷம் அவர்களை எதிர்த்து ரகளை பண்ணி தொல்லை பட்டு, தொல்லை கொடுத்தேன். அப்புறம் அவன் ஒழிஞ்சான். ஆனால் காங்கிரசே ஒழியவில்லை. காமராஜர் அந்த பதவிக்கு வந்தார். (13.04.1954இல்) காங்கிரசை எதிர்த்துக் கொண்டே இருந்தவன் காமராஜர் அந்தப் பதவிக்கு வந்த உடனே அவரை ஆதரிக்க ஆரம்பித்தேன். அவரை கடைசி வரைக்கும் (02.10.1963வரை) ஆதரித்தேன். பதவியிலிருந்து தோற்கிற அன்றைக்கு வரைக்கும் ஆதரித்தேன். தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போச்சு.

இப்போது பதவிக்கு திராவிட முன்னேற்ற கழகம் (06.03.1967இல்) வந்துள்ளது. உடனே அதை ஆதரிக்க ஆரம்பித்து விட்டேன். இந்தக் காரியமெல்லாம் நான் ஏன் செய்கிறேன்? அதைத்தான் நீங்கள் எல்லாம் நினைக்க வேண்டும். என் போல், இத்தனை புரட்டும், இத்தனைக் கரணமும், அடித்தவன் மந்திரியாக ஆகியிருப்பான். என்னைப் பொருத்த வரைக்கும் ஒரு பதவிக்கும் நான் போகலே. என் காலடியில் வந்து மந்திரிகள் கிடந்த காலத்திலேயும், நான் அப்போ ஒதுக்கித் தள்ளி விட்டேன். சும்மா கையெழுத்து போடு பதவி வரும்னு, சொன்ன போதும் நான் அதை ஏற்றுக்கலே. வெள்ளைக்கார கவர்னரும் மந்திரி பதவி ஏற்றுக் கொள்ள என்னை வேண்டின போதும், நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சாகும் வரைக்கும் நான் எலக்சனில் நிற்க மாட்டேன். பதவிக்கும் போகமாட்டேன் என்றும் நினைக்கிறேன். ஏன் இப்படியெல்லாம் பண்ணுகிறேன்? ஆனால் நீங்க நினைக்கணும். அப்பொழுதுதான் உங்களுக்கு தெளிவு ஏற்படும். சும்மா எங்களுடைய உணர்வு அல்ல, தியாகமல்ல, வெங்காயமல்ல (சிரிப்பு) நினைத்தால் ஆதரிக்கிறோம். நினைத்தால் எதிர்க்கின்றோம். யாராவது கேட்டால் இது என் இஷ்டம். கேட்டால் கேளு இல்லாவிட்டால் போ என்கிறோம். ஏன் அப்படிஎல்லாம்சொல்லுகிறோம்? கவனிக்கவேண்டும்.நான் பொது வாழ்வுக்காகப் புரட்டு செய்கிறவன் அல்ல. பொது வாழ்வுக்கு வருவதற்கு முன்பே நான் பெரிய மனிதனாக இருந்தவன். சேர்மனாக இருந்தவன். தாலுக்கா போர்டு பிரசிடன்டாக இருந்தவன் என் ஊரிலே (ஈரோட்டிலே) பெரிய வியாபாரியாகஇருந்தவன்.மற்ற மற்ற பெரிய பெருமையான பதவிகளில் இருந்தவன்தான் நான். ஏன் நான் இந்த சுயமரியாதை திராவிடர் கழக இயக்கத்திலே இருந்துக்கிட்டு அடிக்கடி கரணம் போட்டுக்கிட்டு அடிக்கடி மாறிக்கிட்டு, காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டு, யார் என்னைத் திட்டினாலும், யார்உதைத்தாலும், யார்வந்தாலும் வராவிட்டாலும் என் காரியத்தை நான் பார்க்கிறேன். நான் தனியாக கத்திப் பேசிக்கிட்டு நான் இயக்கத்தை வச்சிக்கிட்டு நான் ஏன் இந்த மாதிரி இருக்கின்றேன்? இந்த விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரியணும்.

தோழர்களே! இந்த நாட்டிலே இரண்டு ஜாதி. ஒண்ணுக்கொண்ணு பூனையும் நாயும் மாதிரி. ஒரு ஜாதி பார்ப்பார ஜாதி, இன்னொரு ஜாதி பார்ப்பரல்லாத ஜாதி. இதை சாஸ்திர சம்பிரதாயப்படி சொல்ல வேண்டுமானால், சூத்திர-ஜாதி இந்த சூத்திர-ஜாதி என்பதற்கு எழுதி வைத்திருக்கின்ற வியாக்கியானத்துக்கெல்லாம் ஆதாரத்தை நான் பின்னாலே சொல்றேன். இரண்டு ஜாதி இந்த நாட்டிலே இருக்கின்றது. இந்த ஜாதிகளில் ஏதாவது ஒன்று ஒழிந்தாலோழிய சமாதானம் ஆகாது. இந்த இரண்டு சாதியிலே ஏதாவது ஒரு சாதி ஒழிந்தாக வேண்டும்.

அந்த நிலை ஏற்படுகிறவரை, இந்த இரண்டு ஜாதிகளுக்கிடையே உள்ள போராட்டம் ஓயாது. இந்த இரண்டு ஜாதியின் போராட்டம்தான் ஜாதி, கடவுள், மதம், சாஸ்திரம், வாழ்வு, அரசாங்கம், சகலத்திலும் நல்ல ஆட்சியா? கெட்ட ஆட்சியா? என்பதல்ல முக்கியம். நாம் ஆள்வதா? அடுத்தவன் ஆள்வதா? நல்ல ஜாதி கெட்ட ஜாதி என்று கிடையாது. பார்ப்பான் மேல் ஜாதியா? நாம கீழ்ஜாதியா? இதே மாதிரிதான் இன்னுமொரு தடவை சொல்லுகிறேன். கடவுள் , மதம், சாஸ்திரம் அரசாங்கம் வாழ்க்கைத் துறையிலே இருக்கிற பழக்க வழக்கங்கள் நம்ம வாழ்க்கையில் இருக்கின்ற சடங்கு,சப்பட்டை, சகலகாரியங்களும் பார்ப்பானின் வாழ்வுக்கும், நம்முடைய இழிவுக்குமாகஅமைக்கப்பட்டது. ஏன் அப்படி அமைக்கப்பட்டது? என்னத்தினாலே அப்படி அமைந்துள்ளது? என்றால் நாமெல்லாம் காட்டு மிராண்டிகளாக மிருகப் பிராயத்திலே இருந்த காலத்திலே இந்த நாட்டிற்கு வந்த பார்ப்பான் எப்படி எப்படியோ மக்களை மயக்கி அரசனையும் மயக்கி யுத்தத்திலே வெற்றி கொண்ட கைதிகள் போல நம்மையும் கைதிகளாக அவன் பார்ப்பான் நம்மை ஜெயித்தவனாக ஆயிட்டான்.

மக்களுக்கு அப்போது மானம் ஈனம் ஒன்றுமில்லை. அசல் காட்டு மிராண்டிகளாக இருந்தார்கள் நம்முடைய ஆட்கள் நம்முடைய அரசர்களும் அப்படித்தான். கண்டதுக்கெல்லாம் ஏமாந்து போவானுங்க. பொம்பளைங்களைக்காட்டி அரசாங்க பதவிகளைக் காட்டி ஆளும்ராஜாவாக்குவதாக ஆசைக் காட்டி இப்படி பல விதமான தந்திரங்களாலே பார்ப்பான் நம்மை கீழ்ஜாதியாக்கி கைதி போல நடந்து மேல்ஜாதின்னா மேல் ஜாதிதான். தானே கடவுள் அப்படீன்னுட்டான். அவனைக் கடவுளாக மேல்ஜாதியாக வணங்கும்படி அதற்கு ஆதாரத்துக்காக கோவில் மதம் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் நித்திய வாழ்க்கையில் அவனைக் கடவுள் மாதிரி கூப்பிடுகிற மாதிரி நம் கல்யாணம், கருமாதி எந்தகாரியமானாலும் அவனில்லாமல் செய்ய முடியாத மாதிரியாக இப்படி நல்வாய்ப்பெல்லாம் அவன் முன் எச்சரிக்கையாக செய்து வைத்துக்கிட்டான்.
தமிழன் காட்டுமிராண்டி மாத்திரம் அல்ல முட்டாளு மனமில்லாதவன் என்று சொல்லவேண்டுமானால் இந்த ஒரு காரணமே போதும். இதைப்பற்றி எவனும் சிந்திக்கிறதில்லை. நம்மில்லே ராஜா இருக்கிறான். ஜமீன்தாரன் இருக்கிறான். கோடிசுவரன் பிரபு இருக்கிறான். நல்லா படிச்ச வித்துவான்கள் இருக்கிறான், மேதாவிகள் இருக்கிறான் அறிவாளிகள் எல்லாம் இருக்கிறான். ஒரு பயலுக்கும் இதைப் பற்றின இன்றைக்கும் மானமில்லை. அதை வைத்தே நான் ஒருத்தன் எங்கள் இயக்கம் ஒன்று நாதியற்று இருக்கிறார்களே என்று நாங்கள் முன் வந்து பாடுபடுகிறோமே தவிர, யாரும் இதை உணர்ந்து எங்களை ஆதரித்து விஷயத்தை புரிஞ்சி தங்களை மாற்றிக் கொள்ளும்படியான மனுசன் ஒருத்தனும் நம்ம ஜாதியிலே இல்லை. அதனாலேயேதான் தமிழன் காட்டு மிராண்டி என்றேன். அவனுக்கிருக்கிற சாஸ்திரம் ஆதாரம். இலக்கியம் வெங்காயம் எல்லாம் காட்டு மிராண்டி என்கிறதற்கு ஆதாரமாக உள்ளவை.

அவைகள் ஒழிய வேண்டுமென்று சொல்லுகின்றேன் ஏன்? எவனாவது சொல்ல முடியுமோ நான் காட்டுமிராண்டி அல்லன்னு?எவனுக்காவது இதைப்பற்றி வெட்கம் மானம் இருக்குதோ? நம்ம நாட்டிலே பார்ப்பான் இருக்கலாமோ? எதற்காக அவன் இருக்கணும். இருந்தாலும் அயோக்கியத்தனமாக இங்கே வெள்ளைக்காரனுங்க ஏன் இருக்கணும்னு கேட்டாங்களே மடப்பசங்க பார்ப்பான் ஒருத்தன் ஏன் இங்கே இருக்கணும்னு எவன் பேசினான். வெள்ளைக்காரன் உங்க பொம்பளைங்களை வைப்பாட்டின்னா பேசினான்? உங்களை தொட்டா குளிக்க வேணும்னா சொன்னான். வெள்ளைக்காரன் உங்களோடு சாப்பிட மாட்டேன்னானா? வெள்ளைக்காரன் போகணும், பார்ப்பான் இங்கே இருக்கணும்னு சொன்னமே இது ஒண்ணு போதாதா? நாமெல்லாம் மடப் பசங்கங்கிறதுக்கு. ஏன் நான் இப்படி இருக்கிறேன்னா நாங்கதான் கவலைப்படறோம்?

எப்படியாவது நம்ம ஜாதி ஈன ஜாதி அப்படிங்கிற நிலை போயி பார்ப்பானுக்கு கைதியாகி அடிமையாக இருக்கின்ற தன்மை மாறி, மானத்தோடு வாழும் படியா அதிலும் உலக மக்கள் எப்படி வாழுகிறார்களோ அது போல மக்களாக வர வேணும்கிறதிலே நாங்கள் தான் கவலைப்படுகிறோம். எங்கள் பேரிலேதானே கோம்பை நாய் போல வருகிறானுங்க. ஒவ்வொருத்தனும் சண்டைக்கு. (கைதட்டல்) ஏன்டா நீ தமிழனை காட்டுமிராண்டி என்கிறியேங்கிறான் ஒருத்தன். தமிழன் சமுதாயத்தை காட்டுமிராண்டி சமுதாயம்- கிறாயேங்கிறான் ஒருத்தன். ஏண்டா சொல்றான்னு கேட்டா? அதற்கு ஒரு பயலும் பதில் சொல்லவே மாட்டேங்கிறான். தினமும் விடுதலை'யிலே எழுதிக்கிட்டு வர்ரேனே. ஏன் தமிழன் காட்டு மிராண்டிதமிழ் மொழி காட்டு மிராண்டி , ஏன் தமிழன் வாழ்வு காட்டுமிராண்டி, ஏன் தமிழன் கடவுள் காட்டு மிராண்டி? ஏன் தமிழன் மதம் காட்டுமிராண்டி? தமிழன் சாஸ்திரம் காட்டுமிராண்டித் தன்மை அப்படீன்னு ஏன் சொல்றேன்? அடே முட்டாளுகளா அதைப்பற்றி பரிசோதனை பண்ண வேண்டாமா?

தமிழன் அல்லாதவனுடைய மதம் என்ன? தமிழன் அல்லாதவனுடைய சமுதாயமென்ன? தமிழன் அல்லாதவனுடைய வேதம் என்னா? தமிழன் அல்லாதவனுடைய வாழ்க்கை நம்பிக்கை, ஒருவனுக்கொருவன் இருக்கின்ற அந்தஸ்து என்னா இருக்குது? நமக்கு புத்தியில்லாவிட்டால் மற்றவனை பார்க்க வேண்டாமா? 100க்கு 20பேர் நம்ம நாட்டிலே துலுக்கன் இருக்கிறானே; எவன் ஒருவனுக்கு ஒருவன் தொட்டால் குளிக்கிறான்? எவன் ஒருத்தனுக்கொருத்தன் சாப்பிடக்கூடாதுங்கிறான்? அடே முட்டாளுங்களே ஒருத்தன் சாப்பிட்ட எச்சிலை இன்னொருவன் சாப்பிடுகிறானே. நான் கூட சாப்பிடப்போனா அவன் எச்சிலைத்தானே சாப்பிட்டாகணும். அவன் தோட்டத்திலே நல்ல கறியாக போடுகிறான். ஒரே தட்டிலே. நான் வேண்டானு சொல்ல முடியுமா? நான் திண்ணு தொலைச்சிட்டு தான் வர்ரேன். (சிரிப்பு) அவன் ஒதுக்கியா வைக்கிறான். அவன் மனுசனை மனுசன் அவ்வளவு மதிக்கிறான். அதனாலே அவனுக்கு (முஸ்லீம்களிடம்) பல ராஜ்யமிருக்குது. அவன் ராஜ்யத்திலே எல்லாம் அவனே ஆளுகிறான்.

நாம் ஒருத்தனுக்கொருத்தன் தொட்டுக்காததினாலே நம்ம ராஜ்யத்தை எவன் ஆள்றான்?ஏதோ வயிற்று சோற்றுக்கு மந்திரிகள் ஆளுகிறான்களே தவிர, நிஜமாகவே ஆள்றவன் எவன்? வெளி நாட்டுக்காரன் ஆள்றான். பார்ப்பான் ஆள்றான். நமக்கு வெட்கமில்லே மானமில்லேங்கிறதுக்கு இதை விட வேற என்ன ஆதாரம் வேணும்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கணும்? எவ்வளவு நாட்களாக இப்படி இருக்கிறான்? ஒரு நாளா? இரண்டு நாளா? இரண்டாயிரம், மூவாயிரம் வருஷம் நாலாயிரம் வருஷம் இப்படியே இருந்து
கொண்டு இருக்கிறான். என்றைக்கு பார்ப்பான் உண்டானானோ அன்றைக்கே நாம் தேவடியா மகனாயிட்டோம். அன்னைக்கே சூத்திரனாயிட்டோம். அன்னைக்கே நாலாவது ஜாதியாயிட்டோம். அன்றைக்கே அவன் சாமியாயிட்டான். இவைகளை மாற்ற வேணும் கிறதுக்கு நான் கிளம்புகிற வரைக்கும், நான் சொல்லுகிற வரைக்கும், நம் இயக்கம் உருப்படியா வளர்ர வரைக்கும் ஒருத்தன் கூட சொல்ல முன்வரவில்லையே?

என்னத்துக்கு இந்த நாட்டிலே பார்ப்பான்? என்னத்திற்கு அந்த பயலை சாமின்னு கூப்பிடற முறை? ஏன் அவன் உன்னைத் தொட்டால் குளிக்க வேணும்கிறான்?அவன் பொண்டாட்டிகள் நம்ம பெண்டு பிள்ளைகளைக் கண்டால் சாணியைக் கண்டால் எட்டிக் குதிக்கிற மாதிரி ஏன் எட்டிக் குதிக்கிறாளுங்க? (சிரிப்பு கைதட்டல்) எவன் நினைக்கிறான் இதைப் பற்றியெல்லாம்?அருமைத் தோழர்களே!இந்த ஒரு காரியத்தை சாதிக்கிறதற்காகத் தான் தினம் ஒரு கட்சிக்கு போகிறேன் நான். (சிரிப்பு கைதட்டல்) எந்தக் கட்சியிலேயும் நான் ஒரு காசு போட்டு சந்தா செலுத்த மாட்டேன். அந்தக் கட்சிக்காரனை நான் சுவாதீனம் பண்ணிக் கொள்வேன். எனக்கு ஆகவேண்டிய வேலையை நீ பண்ணப்பா என்கிறேன். எனக்குதலைப்பட்டு ஆகவேண்டியது என்னா? சகலமும் அவன் ஆதிக்கமா இருக்குது. நாம பண்றதுக்கு ஏதும் மார்க்கமில்லையே? நம்ம காரியம் செய்வதற்கு அங்கே டெல்லியிலே மத்திய ஆட்சியிலே கை வைத்திருக்கிறான். டெல்லியிலே இப்போது இருக்கிற பிரதமர் இந்திராகாந்தி பச்சைப் பாப்பாத்தி அவள்.என்னவேண்டுமானாலும் பண்ணுவாள்? என்ன வேண்டுமானாலும் தின்பாள்?ஆனாலும்அவள் பாப்பாத்தி (சிரிப்பு) அவளை சுற்றி நாளு பசங்க அங்கே ஆளுகிறவனுங்க எல்லாம் பாப்பானுங்க. அவள் சொல்ற படி நடக்கிறவனுங்க என்னடா நம்மை ஒரு பாப்பாத்தி ஆளுறாளே? நம்மை சுத்தி பாப்பாரப் பசங்க ஆதிக்கம் பண்றாங்களே? என்று யாருக்கு வெட்கம் இருக்குது?

நம் நாட்டில் உத்தியோகம் பண்ண வேண்டுமானால் நல்ல உத்தியோகமெல்லாம் பார்ப்பான்கையிலேதான் இருக்கிறது. அவன்தான் கலெக்டர். அவன்தான் ஜட்ஜ். அய்க்கோர்ட் ஜட்ஜ்களில் அவன் யார்ரானா ஆறு பேர் பார்ப்பான். ஆறு பேரும் கொள்ளிக்கட்டையாட்டம், நம்மை அதை எடுத்து சுட்டுக்கிட்டே இருக்கிறான். நம்ம ஆறு பேறும் பிள்ளைப்பூச்சியாட்டம், அவன் சொன்னா போதும் என்று கும்பிடு போட்டுக் கொண்டு இருக்கிறானுங்க நம்ம ஜட்ஜூகள். சென்னை செக்ரட்ரியேட்டுக்குள் போனால் சகலமும் அவன் (பார்ப்பான்). நம்ம மந்திரிகள் அவன் சொன்னபடி ஆடணும் இல்லா விட்டால் மாற்றி வச்சிடுவான். என்னா இந்த 1967 லே உலகத்திலே வெளி நாட்டான் சந்திர மண்டலத்துக்கு போறான். அங்கே போய் கொடி நட்டு, அங்கேயிருந்து மண் கொண்டு வருகிறான். ஒரு மைலா? இரண்டு மைலா? ஒரு லட்சத்து எண்பதாயிரம் மைல் போய் வருகிறான்.

நம் மக்களுக்கு அதைப் பற்றின புத்தியே இல்லையே?நாளைக்கு இதை யார் சொல்லப்போறா? படிக்கலே. படிக்கலேன்னா, காமராசர் காலத்திலே படிப்புவந்துவிட்டது. இன்றைக்கு 100க்கு 45 பேர் படித்திருக்கிறானே. ஆண்கள் படிப்பு அதிகம். பெண்கள் படிப்பு கொஞ்ச பேர்தான். இந்த 45 பேர் படிச்சவன் நாளைக்கு மண்ணு தூக்கப் போறானா? இல்லை நாளைக்கு விறகு வெட்டப் போறானா? நாளைக்கு வண்டி இழுக்க போறானா? இவங்களுக்கெல்லாம் உத்தியோகம் வேண்டாமா? பாப்பான் தமிழன்னு பிரிச்சிப்பேசாதே? அப்படிபேசுகிறபோதெல்லாம் தேசத்துரோகம், சமுதாயத் துரோகம், வெங்காயத் துரோகம் (சிரிப்பு) என்கிறான். அவன் பார்ப்பான் மூன்றே முக்கால் பேரு இருக்கின்றான். நான் தொன்னூறு பேர் இருக்கிறோம். 90இல் 50 பேர் பியூனாக இருக்கின்றான். போலீஸ் கான்ஸ்டபிளாய் இருக்கிறான். கக்கூசு வாறுகிறவனாக இருக்கிறான். பெரும்பாலும் இம்மாதிரி வேலைக்கு போய் விட்டால் மீதி 100க்கு அய்ந்து பேர் அல்லது ஏழு பேர்தான் உத்தியோகத்துக்கு போவான்.

இவர்களுக்கு உத்தியோகம் வேண்டாமா என்றால்? வகுப்பு வாதம் பண்ணுகிறாயா என்கிறான் பார்ப்பான்? சட்டம் இந்தப் பாப்பாரப்பசங்களே எழுதிக்கிட்டானுங்க. பழைய காலப் பார்ப்பான் சொல்லி தர்மசாத்திரம், மனுதர்ம சாத்திரம் எழுதினாப்பிலே. இப்போது நான்கு அய்ந்து பார்ப்பான் பார்த்து ஜாதியைப் பற்றி பேசக்கூடாது, உத்தியோகத்தைப் பற்றி பேசக்கூடாது. எல்லாம் அவனவன் தகுதிக்கு தகுந்தாற்போலத்தான் உத்தியோகம் வகிக்க வேண்டும்னு சட்டம் எழுதி வச்சிக்கிட்டான். அரசாங்க உத்தியோகம் நம்மவருக்கு கொடுத்தால் கோர்ட்டுக்குபோனால் செல்லாதுங்கிறான்.
இது வரையிலும் இப்படியே எத்தனை நாளைக்கு இருப்பீங்க? இதுவரை பாப்பானை சாமி, சாமின்னு கும்பிட்டுகிட்டு. இப்போது நீங்க படிச்சிட்டீங்களே. உத்தியோகமில்லையானால் நீங்கள் சோற்றுக்கு திண்டாட வேண்டியது தானே? மூட்டைத் தூக்கினாலும் சோறு கிடைக்கும். நீ மூட்டைத் தூக்க மாட்டியே.பி. படிச்சிப்போட்டு, எஸ்.எஸ்.எல்.சி படிச்சி போட்டு பி.யூ.சி படிச்சி போட்டு சீமைக்கு போவாயா? மூட்டைத் தூக்குவாயா? பியூனா போவாயா?படிப்பைபடித்து விட்டு கீழ் வேலைக்கு போவாயா? இதைப் பற்றியாருபேசறா? நாங்கதானே பேசறோம். அப்ப வந்த அரசாங்கத்தை சரி பண்ணி எடுத்துச்சொல்லி நல்ல வாய்ப்பை அவர்களுக்கு சுட்டிக்காட்டி இந்த உத்தியோகத்தை எல்லாம் எங்களுக்கு கொடுப்பான்னு நாங்கள் கேட்டதால்தானே?
நாமும், நம் பிள்ளை குட்டியும், நம் இனம் வாழும். நீ காங்கிரஸ் கட்சியை ஆதரிச்சியே. நீ பிளேட்டை திருப்பி போட்டியே, இதுக்கா நீ மாறிகிட்டு இருக்கிறாயே?அப்படீன்னா என்ன அர்த்தம்? நான் யாருக்காக மாறுறேன். எங்கள் கட்சிக்காகவா? நான் பிள்ளைக் குட்டி போட்டிருக்கிறேனா?அதுகள் உத்தியோகத்துக்கு வரணும்னு நான் பாடுபடறேனா? (சிரிப்பு) எதற்காக ஆத்திரப்படுகிறோம்? நான் கத்திகத்தி உங்களை படிக்க வைத்து விட்டோமே. நாளைக்கு உத்தியோகமில்லேனா நீங்கள் மாடு மேய்ச்சிக்கிட்டு தானே இருப்பீங்க. உங்க சோற்றுக்கு வேணுமே? அதற்குத் தகுந்த வாழ்வு வேணுமேன்னுதான் பாடுபடுகிறோம்.
தமிழைப்பற்றி நான் காட்டுமிராண்டி மொழின்னா கோபப் படறான். நீங்கள் இங்கேயே உழலுறீங்க .பாப்பான் எங்கே போய் வாழறான்? பம்பாயிலே, வங்காளத்திலே, டெல்லியிலே, இமயமலையிலே, பஞ்சாபிலே போதாக்குறைக்கி இங்கிலாந்துஅமெரிக்காவிலே போய் உத்தியோகம் பார்க்கிறான். லண்டனுக்குபோய்உத்தியோகம் பார்க்கிறான். ஜெர்மனியில் போய் உத்தியோகம் பார்க்கிறான். ஏண்டா இப்படியெல்லாம் அங்கு போய் வாழ்கிறானென்றால் அவன் அங்குள்ள பாஷையை படிச்சி அங்கு போய் வேலையை பார்க்கிறான். முன்னமேயே அவன் இங்கு பக்குவமடைஞ்சிக்கிறான். இங்கே இருக்கிற வரைக்கும் கறி என்றால் மாட்டுக்கறி என்றால் உடம்பு சிலிர்க்கிறான். பார்ப்பான் அங்கே போனால் எருமை மாடா கொண்டு வாடா என்கிறான். (சிரிப்பு கைதட்டல்)
அங்கே நல்லா பன்னிக்குட்டியாட்டம் நல்லா இருக்கிறான். ஏண்டா இப்படிஎன்றால்? இங்கேயுள்ள இடஅமைப்பு, இங்கேயுள்ள உணவுப் பழக்கம் என்கிறான். நீ தமிழைப் படிடாங்கிறே. தமிழைப் படிச்சால் மாடு மேய்க்கத்தானே உதவும். இல்லை பிச்சை எடுக்க உதவும். அய்யா நான் தமிழ்ப்படிச்சவன் நான் புலவனய்யா ஒருகவிபாடுகிறேன். காசு கொடு அய்யா என்பான். இல்லையானால் கடைவீதிக்கு போய் கடையிலே 30 ரூபாய், 40 ரூபாய், 150 ரூபாய் சம்பளத்துக்கு கூலியாகப் போகணும். அவன் 500 ரூபாய், 1000 ரூபாய், 2000, 3000 ரூபாய் லண்டனில் சம்பாதிக்கிறான். பிச்சை எடுக்கிறபாப்பானை நம் கண்முன்னேபார்த்தோம். உடனே அவன் பெரிய பங்களா கட்டிக்கிறான். எனக்கு தெரிய பிச்சை எடுத்த பொம்பளை நிறையா நகையோடு, பட்டுச் சேலையோடு, சிங்காரமாய் பாதம் கூட்டுகிறாப்பிலே நடக்கிறாள். நாங்கள் உயர்ந்தஜாதி என்கிறாள்.
நாங்கள் கவுண்டர், பறையனைவிட மேல் ஜாதி என்கிறாள். நாங்க தண்ணீர் குடிக்க மாட்டோம். அங்கே போக மாட்டோம் என்கிறாள். எப்படி போய் நாம வாழறது? இன்றைக்கு இந்த 1967லே நாம ஒரு வாழ்க்கைத்திட்டம்வகுத்துநாம் ஏதும் ஏற்பாடு பண்ணிக்காமல் போனால் பின்னால எப்படி முடியும்? காட்டு மிராண்டின்னு நான் சொல்றேன்னு என் மீது நீங்கள் கோபிச்சுக்கிறீங்களே! உங்க சாமிஎன்ன வெங்காய சாமி (சிரிப்பு)
உங்கள் சிவனோ உங்கள் விஷ்ணுவோ அல்லது உங்கள் பிரம்மாவோ அல்லது உங்கள் காளியாத்தாளோ அல்லது மாரியாத்தாளோ, வெங்காய ஆத்தாளோ(சிரிப்பு) இவைகள் எல்லாம் காட்டு மிராண்டியில்லாமல் மனுசரா? சொல்லுங்கள் உங்கள் சிவன் காட்டு மிராண்டியல்ல மனிதன்னு சொல்லு, உங்க பிரம்மா காட்டுமிராண்டியல்ல மனிதன்னு சொல்லு இல்லே. உங்கள் காளி, மாரி ஆத்தாள் எல்லாம் கடவுள்னு பல புருஷன்கிட்ட போகாதவள்னு சொல்லு (சிரிப்பு) அயோக்கிய பசங்கள்ளாம் நமக்கு கடவுள். கொலைகாரப் பசங்கள்ளாம் நமக்கு கடவுள். என்னடா சிவன்? அவனைக் கொன்றான்? இவனைக் கொன்றான் வெங்காயத்தைக் கொன்னான் - என்னா இந்தப் பயல் கசாப்புக்கடைக்காரனா? (பலத்த வெடிச்சிரிப்பு கைதட்டல்) இவனுங்க எல்லாம் கடவுளாச்சே ஏன் மனிதனைக் கொல்லுகிறான்? கொல்லுகிற பண்டிகை கொண்டாடு கிறானுங்கய்யா இந்த முட்டாப் பசங்க? (சிரிப்பு) என்னடா பண்டிகைன்னா சூரசம்காரம், வெங்காய சம்காரம் (சிரிப்பு) கடவுளுக்கு வேலை மனுசனை கொல்றதா? அப்ப இத வச்சு இன்னொருத்தன் காட்டு மிராண்டினு சொல்ல மாட்டானா?
மனிதனை உலகத்தை காப்பாற்றுகிற மனிதனைப் பிறப்பிக்கிற கடவுள், உண்டாக்குகிற கடவுள் வெங்காயக் கடவுள் அவன் பிரம்மா என்கிறான். அவன் யார்ரான்னா கடவுள், மகளோடு போனவன் (கலவி பண்ணினவன்) (சிரிப்பு) இன்றைக்கும் அவள் முலையை பிடித்துகிட்டு, பிள்ளை பெத்துக்கிட்டு இருக்கான் பிரம்மா (சிரிப்பு) அவளே சொல்றாள் (பிரம்மாவின் மகளே) என் அப்பாவே என்னைக் கட்டிப்பிடிக்கிறாரே என்கிறாள். அதற்கு அவனே பிரம்மாவே சொல்லுகிறான், ஆசை வந்தால் அப்பன் வேறு மகள் வேறையா? என்கிறான். (சிரிப்பு) சரி நீ அவளோடு படுத்துக்கன்னு சிவன் சொல்லிட்டான் பிரம்மாவின் மகளிடம். அதை நாம கொண்டாடுகிறோம். இது பண்டிகையாய் நடத்துகிறானய்யா. தசராப்பண்டிகை, சரஸ்வதி பண்டிகை எவனாவது அப்பனோடு போனவளுக்கு பண்டிகை நடத்துவானா? (சிரிப்பு) இவனுக்கு அறிவு இருந்தால்? இல்லேன்னா அந்த ஆதாரத்தை எல்லாம் குப்பைத் தொட்டியிலே போடு. அதை எல்லாம் பொய்யினாவது நீ சொல்லு. அக்கதையையும் படிச்சுக்கிட்டு அதற்கு பண்டிகையையும் நடத்திக்கிட்டு கும்பிடுறான்னா? அப்புறம் யாரை போய் நாம காட்டு மிராண்டிங்கிறது?அதே மாதிரி விஷ்ணு என்ன அவன்? அயோக்கியப் பசங்க. மனுசனோட மட்டும் கலவி பண்றதோட மட்டுமில்லாமல் மிருகங்களோடும் கலவி பண்ணியிருக்கிறான். அவன்ஒருகடவுள் நமக்கு எங்கு பார்த்தாலும் கோவில். அவன் பொண்டாட்டி குதிரையோட போனவள். அவன் குதிரையோடு போனவன். இருக்குதே எல்லா கதையும் இங்கே நான் கொண்டு வந்திருக்கிறேனே. எவ்வளவு காட்டு மிராண்டியாக இருந்தால் நாம் இன்னமும் அதைப் போற்றிக் கொண்டிருப்போம்?
இந்த அயோக்கியப்பசங்களுக்கு அவதாரம் வேறயாம். என்னத்திற்காக அவதாரம்? இவன்தான் கடவுள் ஆச்சே இவனால செய்ய முடியாத காரியம் ஒண்ணும் இல்லியே? செய்யக் கூடிய காரியத்துக்கு ஏன் அவதாரம் எடுக்கணும்? பாருங்க இந்தக் கதையை அவனாலே கடவுளாலே முடியாத காரியம் ஒண்ணுமில்லை. சர்வமும் அவன் சக்தியிலேஅடங்கினது.பின்அவன் ஏன் அவதாரம் எடுக்கிறது? (சிரிப்பு) அவதாரம் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கண்டவனுக்கா பிறக்கிறது?
ஒரு ஆள் அவதாரம் எடுக்க வேணும்னா அவன் ராமன் யாருக்கு பிறந்தான்னா? புரோகிதப் பாப்பானுக்கா பிறக்கிறது. இப்படிச் சொல்றான். ஏண்டா அப்படி? அவன் அப்பன் (தசரதன்) கிழவன் அறுபதினாயிரம் வயது ஆனவன் தசரதன் அவனுக்கு எப்படி பிள்ளை பிறக்கும். அதனாலே பாப்பானுங்க தசரதன் பொண்டாட்டிகளை சினையாக்கிக் கொடுத்து பிள்ளையாகப் பிறந்தானுங்க. இதானய்யா ராமாயணம் (சிரிப்பு) இங்கே விற்கிறார்களே பாருங்களே. ராமாயணம் வாங்கிப் படித்து பாருங்கையா.(சிரிப்பு கைதட்டல்) அதன் விலை முக்கால் ரூபாய், வாங்கிப் பாருங்கள். ராமாயண புத்தகத்தை நான் அசிங்கப்படுத்தி சொல்லவரவில்லை. இவ்வளவு முட்டாள் தனமான மதத்தையும் கடவுளையும் நாம கும்பிடுகிறோம் பாராட்டுறோம். அதன் பெயரை சொல்லிக்கிறோம்.
அந்த மதத்தின் பேரைச் சொல்லி சாம்பல் அடிச்சிக்கிறோம், அந்த மதத்தின் பேரைச்சொல்லி சுண்ணாம்பையும், செம்மண்ணையும் பட்டையாய் அடிச்சிக்கிறோம். நெற்றியிலும் உடம்பு பூராவிலும். இதையெல்லாம் வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்தான்னா சுண்ணாம்பு பட்டை அடிச்சிக்கிட்டு இருக்கிறவனைக் கண்டு இவன் யார்ரான்னா நீ என்னான்னு சொல்லுவே காட்டுமிராண்டினு தானே சொல்லுவாய். மனிதனா சாம்பலை பட்டையா அடிச்சிக்கிறது? எதுக்காக சாம்பலை பூசிக்கிட்டா அவன் அம்மாவோடு செய்த பாவம் போகும் என புத்தகத்திலே எழுதியிருக்கிறான்.பக்தனுக்கு அவுக அம்மா கிட்ட போறது தான் வேலையா? நீங்களும் உங்கள் அம்மாவோடு போயி (கலவி செய்து) சாம்பலைக் பூசிக்கொள்வீங்களா? அசிங்கமா இல்லியா இதுவெல்லாம்? துலுக்கன் அப்படித்தான் பண்ணுறானா? வெள்ளைக்காரன் அப்படித்தான் பண்ணுறானா? இல்லே சைனாக்காரன்
அப்படித்தான் பண்ணுகிறானா? நீதான் உலகத்திலே ஒரு மனுசனா? உலகில் 200 கோடி மக்கள் இருக்கிற போது நீ மாத்திரம் என்னா? இப்படி நடந்து கொள்ளுகிறே. நீ இங்கே மட்டும் கூத்தடிக்கிறாயே முட்டாள் தனமா?
சிவனைப்பற்றி கதை அசிங்கம் அசிங்கம் சொல்ல முடியாத அசிங்கம். அவன் அவ்வளவு கீழ்த்தரமானவன். அவன்பிள்ளை (சுப்ரமணியனை) பெற்றான். ஆயிரம்வருஷம் அவன் பொண்டாட்டியோடு படுத்துக்கிட்டே இருக்கான். (சிரிப்பு) விடாமல் கலவி பண்ணினான் ஆயிரம் வருஷம் (சிரிப்பு) இது கந்த புராணமய்யா. என்னா இந்துக்கள் என்று நீங்கள் பேரு வச்சிக்கிட்டு அந்த பெயர் இந்து எங்களையும் சேர்த்துதானே.ஆயிரம்வருஷம் கலவி பண்ணினானாம் யாரை பார்வதியை பிள்ளை பிறப்பிக்க. யானை,சிங்கம் பத்து வருஷத்திலே சினையாகும். இது என்னா சிவன் 1000 வருஷமா கலவி பண்ணுறது? (சிரிப்பு) அப்பவும் பார்வதி சினையாகலேங்கிறான். (வெடிசிரிப்பு) தேவர்கள் இதைக் கண்டு பதறினார்களாம். 1000 வருஷமாகவே சினையாகாமல் இருந்தால் இன்னும் இவர்கள் இப்படியே இருவரும் படுத்துக் கொண்டிருந்தால் இது என்ன விபரீதமாகுமோ என்று அஞ்சினார்களாம்.
தேவர்கள் கேட்டுக் கொண்டார்களாம் நிறுத்தும்படி .சிவன் நடுவிலே நிறுத்திட்டானாம். சிவன் ஆண் குறியிலிருந்து விந்து வாய்க்காலா போச்சாம். அந்த வாய்க்காலாப்போன விந்துதான் கந்தனாம், முருகனாம், அந்த வாய்க்கால்தான்சுப்ரமணியனாம். (சிரிப்பு) இந்துங்கிறவன் கதை இப்படியா இருக்கணும்? இந்த சாமியைப் போய் புருஷன் பொண்டாட்டி குளிச்சி பட்டை அடிச்சிகிட்டு பட்டு கட்டிக்கிட்டு சிங்காரமாய் தேங்காய் பழத்தோட சாமி கும்பிடக் கோயிலுக்கு போறிங்க அங்கே கோயிலுக்குள் போனதும். அய்யா நீங்கள் வெளியிலே நில்லுங்கள் உள்ளே கர்ப்பக் கிரகத்துக்குள்ளே சாமியிருக்கிற இடத்துக்கு வராதிங்கங்கிறான். பூசை பண்ணுகிறவன் பாப்பான் நான் யார்ரான்னா நீ சூத்திரனாம். உள்ளே வராதேங்கிறான். உள்ளே வந்தால் சாமி தீட்டாயிடும். அதனால் சாமிக்கு கும்பாபிபேஷகம் பண்ண வேண்டும். நான் தான் சாமி பக்கத்திலே இருப்பேங்கிறான்? ஏன்?அவன் பாப்பான்கிறான். நீ என்னா நீ சூத்திரன்? நாம கும்புடற கோயிலு இப்படியா? நாம அடிச்சு வச்ச கல்லுச்சாமி. நாம கட்டி வச்ச கோயிலு. நாம அங்கே போனால் தீட்டுன்னா நியாயமய்யா? இந்தக் கோயில் கட்ட ஒரு பார்ப்பானோ, ஒரு பாப்பாத்தியோ ஒரு கல்லு எடுத்துக் கொடுத்திருக்க மாட்டாங்க. ஒரு குடம் தண்ணி எடுத்துக் கொடுத்திருக்க மாட்டாங்க.


நீங்க கட்டின கோவிலுக்குள் போனால் உன்னை வெளியில் நில்லுடாங்கிறான். இராத்திரி பூரா மாமா வேலை பண்ணிட்டு(பாப்பான்) குளிக்காமல் முழுகாமல் இவன் மட்டும் உள்ளே நுழைஞ்சிக்கிறான். பூஜை பண்ணுகிறேன்கிறான் (சிரிப்பு கைதட்டல்) ஏண்டான்னா நான் பிராமணன் என்கிறான். (சிரிப்பு) நான் இதற்கெல்லாம் ஆதாரமாக புத்தகங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறேனே. உன்னை சூத்திரன் நீ வெளியே நில்லு என்கிறான் பாப்பான். அதைக் கேட்டுக் கொண்டுதானே நீங்கள் முட்டாள் பசங்க கோயிலுக்கு போறீங்க. தினமும் கோயிலுக்குப் போகிற முட்டாளெல்லாம் வெளியே நின்னுக்கிட்டு தானே கும்பிடறான்.என்னா கடவுள்? என்னா மோட்சம்?
என்னா நரகம்? மனிதனுடைய மானத்திற்கு மேலையா இதெல்லாம்?
சாமி சோறு திங்கிதுங்கிறான்? ஆறு வேளை ஏழு வேளை பொங்கல் படைக்கிறான்.அதெல்லாம் பாப்பான் பாப்பாத்தி (சாப்பிட்டு) வயிறு வீங்குது. (சிரிப்பு கைதட்டல்) பன்றிக்குட்டி வயிறு போல தொங்குது. (சிரிப்பு) ஒரு பருக்கையை ஒரு சாமியாவது திங்குதா வச்சிப்பாரேன் எந்த சாமி வாயிலேயாவது ஒரு பருக்கையை நீ வைத்து அழுத்திப் பாரேன் உள்ளே அது போகுதான்னு? (பலத்த சிரிப்பு கைதட்டல்) இப்படியெல்லாம் சாமி சோறு திங்குது அதற்கு பூஜை பண்ணுகிறேன் என்று என்னமா இந்த 1967லே நம்மை ஏய்க்கிறானய்யா? சந்திர மண்டலத்துக்கு மனிதன் போய் வருகிறான். இப்போது மணிக்கு ஆறாயிரம் மைல் ஏழாயிரம் மைல் வேகத்தில் உலகைச் சுற்றுகிறான் மனிதன். பொம்பளை உலகத்தை சுத்துறா விமானத்திலே. இங்கே இருக்கிற தடிப்பயல் குழவிக்கல்லைச் சுற்றுகிறான். (சிரிப்பு) விழுந்து தடியன் கும்பிடுகிறான் பிணமாட்டம். பிள்ளையில்லாத நம் பொம்பளைகள் அரச மரத்தை சுற்றுகிறாள். (சிரிப்பு) வயிற்றைத்தடவி பார்க்கிறாள். பிள்ளையாரு பிள்ளை கொடுத்திருக்கிறானான்னு. இப்படியாக நாம் இம்மாதிரியே நடந்து கொள்வதா? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வாழ்க்கை முறை நீடிக்கிறது? நாளைக்கு உங்களுக்கு யார் இருக்கிறா இதையெல்லாம் சொல்லுவதற்கு?
நான் கேட்கிறேன் எனக்கு தொன்னூறு வயசு ஆயிப்போச்சே. இன்னும் எனக்கு நாளோ, மாதமோ மிஞ்சினால் வருசக்கணக்கோ. யார் நான் சொல்வதைக் கேக்கிறீங்க? மனிதன் திருந்த வேண்டாமா? இனிமேல் நான் கோவிலுக்கு போக மாட்டேன். நான் கோவிலுக்கு போனால் நான் பாப்பானுக்கு பிறந்தவன் தான்
என்று அப்படி உறுதி எடுத்துக் கொள்ள வேண்டாமா? ஒவ்வொருத்தர் பொண்டாட்டியை சேர்த்துக் கொண்டு இரண்டு பேரும் சேர்ந்து நீங்கள் கோவிலுக்கு போகறீங்க. அதுக்கு கோவில் வைக்கிறிங்க. கும்பாபிஷேகம் பண்ணுறீங்க. அந்த சாமிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. அதுக்கும் கருமாதி பண்ணுறீங்க. அந்த சாமியைக் கூட்டிக்கிட்டு தேவடியாள் வீட்டுக்கு போறீங்க. ரெங்கநாதசாமி எங்கடா போவுதுன்னு? ஒரு வெள்ளைக்காரன் கேட்டால் - நீ எங்க ரெங்கநாதசாமி தேவடியாள்வீட்டுக்குபோகுதுன்னா?உன்யோக்கியதை என்னவாகும்? நல்லா நினையுங்கள். நான் உலகமெல்லாம் சுற்றிவந்தவன். அய்யா து.மா.பெரியசாமி சொன்னதுபோல் நான் அமெரிக்காவிற்குத்தான் போகவில்லை. அமெரிக்கா ஒரு சந்தக் கடை எல்லா நாட்டுக்காரர்களும் அங்கு இருக்கிறார்கள். அங்கு ஒரு தனி நாகரிகமோ, ஒரு நாணயமோ, ஒரு பண்பாடோ கிடையாது. பல பேர் போய் வியாபாரம் பண்ணுகிற மாதிரியான ஒரு இடம் அது.
நான் ஆப்பிரிக்காவிற்கு போயிட்டு, அய்ரோப்பா போயிட்டு, இங்கிலாந்து போனேன். அங்குள்ள மக்களோடு பல நாட்கள் பழகி விட்டு வந்தவன். எல்லோரின் வாழ்க்கை நிலைகளை நேரில்கண்டு நான் தெரிந்து வந்திருக்கிறேனே? இம்மாதிரி நிலைகள் அங்கெல்லாம் கிடையாதே. அவுங்க என்னைக் கேலிதானே பண்ணுறாங்க. நான் ரஷ்யா போன போது இந்தியாவிலே நீங்கள் பசுமாட்டை கும்பிடுறீங்களாமல்ல என்று சின்னப் பசங்க கேட்கிறான்க. மடப்பசங்க கும்பிடுறான் அதையெல்லாம் இப்ப நாங்கள் மாற்றிக்கிட்டு தான் இருக்கின்றோம் என்று சொன்னேன் நான். இந்தியாவிலே சூத்திரன் இருக்கிறானாமே நிஜமா? பாப்பான் இருக்கிறானாமே நிஜமா? பாப்பானை நீங்கள் கும்பிட வேண்டுமாமே நிஜமா?அப்படீங்கிறான்.இப்ப அதையெல்லாம சரி பண்ணிக்கிட்டுதான் இருக்கோம்என்று தான் சொல்லிக்க வேண்டியதா இருக்கு. கேட்கிறானே அங்கே என்னை? இங்கே இருக்கிற வெள்ளைக்காரன் மரியாதைக்கு சும்மா இருப்பான்.
இங்கே வருகிற வெள்ளைக்காரன் இங்கே இருக்கிறவங்க காட்டுமிராண்டிப் பசங்க. நீங்கள் நிரந்தரமாய் காட்டு மிராண்டிகளாக இருக்கிறீர்கள் என்று உங்கள் கோயிலுக்கு பணம் தருகிறான். இங்கே இருக்கிற பணக்காரனெல்லாம் நீங்கள் காட்டு மிராண்டிகளாக இருக்க வேண்டுமென்று. நாம எதிர்த்தால் நமக்கு ஆபத்தாகும் என்றும், நமக்கு எதிர்ப்பாகுமென்றும், 50 கோடி மக்கள் உள்ள இடம் நமக்கு எதிர்ப்பாகும் என்று அதனால் இவர்கள் மடப்பசங்களாகத்தான் இருக்க வேண்டுமென்று கோவில்களுக்கும் கட்ட பணம் தருகிறான். நம்ம வாழ்வு இப்படி இருக்குதய்யா? நமக்கு உள்ளதெல்லாம் புராணப்படியான கடவுள்தான். முஸ்லீமுக்கு, வெள்ளைக்காரனுக்கோ உள்ளபடியான கடவுள் நமக்கு இல்லை.
புராணங்களில் உள்ள கடவுள்தான் இராமன் - கிருஷ்ணன், சிவன், கந்தன், காளி, மாரி, பிடாரிகள் எல்லாம். இதுவெல்லாம் காட்டுமிராண்டிக்கு உண்டாக்கினதாக ஒரு பக்கம் எழுதியிருக்கிறான் பாப்பானே.கடவுள்சக்தி இப்படியாச்சே இப்படி இருந்தா ஏன் கடவுளுக்கு கல்லு உண்டாக்கினே? அப்படீங்கிற கேள்விக்கு இந்த சங்கராச்சாரியாரே பதில் சொல்றான்.:- இதெல்லாம் காட்டுமிராண்டிகளுக்காக, ஏழைமக்களுக்காக, கீழ்த்தர மக்களுக்காக. ஏழைமக்களுக்கு கடவுளே கிடையாது இந்த சங்கராச்சாரி பாப்பானை கேளுங்க உங்க சங்கராச்சாரி என்னடா சொல்றாருன்னு? தனக்கு மனிதன் தான் கடவுள், மனிதனுக்கு மேல் ஒண்ணும் கிடையாது. பின்னே ஏண்டா இதெல்லாம் பண்ணிணேன்னா? அதுவெல்லாம் முட்டாப்பசங்களுக்காக. நாளைக்கு நீங்களே எங்கே பாத்திங்கனாலும் கேளுங்களேன் சங்கராச் சாரியை? கடவுள் உண்டுனு சொல்றாருனு. பின்னே ஏண்டா நீ கும்பிட்டே? சாமி சிலையை கடவுள்ங்கிற வெங்காயங்கிற, கும்பிடுங்கிறே, முட்டாளுக்கு சாத்திரங்கிர, கீழ்த்தர மக்களுக்கு, கீழ் மக்களுக்காக இருக்கிறானே! நம்மில் கோடீசுவரன், பெரிய பதவியில் இருக்கின்றவன் நல்லா படிச்சவன் பிரபு எல்லாருமே பார்ப்பானுக்கு கீழ் மக்களாகத்தான் இருக்கிறார்கள். மாரியாத்தாளை கும்பிடாதவன் எவன் இருக்கிறான்? மாரியாத்தாளை பற்றிய கதை என்னடான்னா? அவள் எவனோடோ போய் கலவி பண்ணினதால் அவள் புருஷன் அவளை உதைச்சி நெருப்பிலே போட்டு கொளுத்தினானாம். நீ அந்த பொம்பளையை மாரியாத்தாளுங்கிறே. இதுகதை. அவள் தண்ணீர் எடுக்கப் போனாள் அங்கே அழகாய் இருக்கிறவனோட கலவியில் ஈடுபட்டாள். அவள் புருஷன் கண்டுக்கிட்டான். ஜமதக்கினிங்கிற முனிவன் கண்டுவிட்டான் இதை. உடனே அவளை நெருப்பிலே சுட்டு போட்டான். அவனே பிறகு அரை வாசி வேக்காட்டினால் உடல் பூராவும் கொப்பளம் கொப்பளமாக உண்டாகி அதை வேப்பிலை இலையைச் சொருகிக் கொண்டு மறைச்சி வீட்டுக்கு போய் மாவு வாங்கி தின்று விட்டு ஊத்துத் தண்ணி, ஊத்து தண்ணி எறியுதுன்னு சொல்லி அழுதாள் இப்படி எண்ணை தடவியதாக சாஸ்திரத்திலே புராணத்திலே இருக்குது. ஜமதக்கினி முனிவன் கதை. பரசுராமனுடைய அம்மா மாரியாயி அதை அவதாரமென்று பரசுராமனைப் போட்டு இருக்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் படித்ததில்லை. பார்ப்பான் தனக்கு மூன்று காசு வரும் படியைதான் எதிர்பார்ப்பானே தவிர அவன் இந்த பரசுராமன் கதையெல்லாம் உங்களுக்கு எவன் உண்மையெல்லாம் எடுத்துச் சொன்னான்.
கிருஷ்ணனைப்பற்றி எவனய்யா மதிச்சான்? இந்த கிருஷ்ணனுடைய யோக்கியதைச் சொன்னால் எவனாவது மதிப்பானா? காளிப்பயல்னு தானே சொல்வான் அவனை.ஆளுக்கொருவர்அவன்மூஞ்சியிலே
காறிதுப்பு வாங்க! அவன் பண்ணாத அயோக்கியத்தனம் என்னா
கதையின்படி? கதையின்படியே பார்ப்போமே. அவன் திருடினான், ஏமாற்றினான், மோசடி பண்ணினான், கண்டவன் பொண்டாட்டியை எல்லாம் கையப்பிடிச்சி கலவிக்கு இழுத்தான். ஆயிரக்கணக்கான, இரண்டாயிரக்கணக்கான பெண்களையெல்லாம் கெடுத்தான் (கற்பழித்தான்) குளிக்கிற பொம்பளைங்களுடைய சேலைகளை எல்லாம் எடுத்துக்கிட்டு அம்மணமா காட்டுங்கடின்னு சொன்னான் (சிரிப்பு கைதட்டல்) இதுவெல்லாம் கடவுள் அவதாரமா? இந்தப்படத்தை வச்சிக்கிட்டு கும்பிடுறானுங்கய்யா முட்டாப்பசங்க. இதுவெல்லாம் கடவுளுக்கிருக்கிற குணமா? தமிழன் அவ்வளவு முட்டாளா?
என்னகதை? பஞ்சபாண்டவர்கதை?அதிலே ஒருத்தியாவது பதி விரதையாக வர்றாளா? அஞ்சு பேர் பஞ்ச பாண்டவர்கள் ஆறு பேருக்கல்லவா பிறந்திருக்கிறாங்க? அதுவும் பிறக்கிற ஆளுக்கா பிறந்தாங்க? எமனுக்கு ஒருத்தன் பிறந்தான். (சிரிப்பு) சூரியனுக்கு ஒருத்தன் பிறந்தான். அவனெல்லாம் மனுசனா? இன்று எமன் இருக்கிறானா நிஜமாவே? இன்றைக்கி வாயு இருக்கிறானா நிஜமா? இல்லே இது வேறு நாட்டுக் கதையா? நம்ம ஊருக்கதையல்ல அவன் எழுதியிருக்கிறான்? உங்க ஊருக்கதையாகத்தானே எழுதியிருக்கிறான்? அது இந்தியாவில் தானேய்யா நடந்திருக்கிறது. டெல்லிக்கு அருகில் அஸ்தினாபுரத்தில் தானே நடந்திருக்கிறது. அங்கே இருக்க வேணுமே எமன்? அங்கே இருக்கணுமே வாயு? அங்கே இருக்கணுமே அர்ச்சுனன்? அங்கே இருக்கனுமே சூரியன்? அக்கினிக்கு சூரியனுக்கு சினையானாளாம் குந்தி தேவி (சிரிப்பு) அவள் அக்கினியோடு படுத்து பிள்ளைபெத்தான்னு எழுதியிருக்கிறானய்யா?  
இந்த நாசமா போன சூரியன், 9 கோடியே 50 லட்சம் மைல் தூரத்திலே இருக்கிறான். அங்கேயிருந்து அடிக்கிற அனல் இங்கே பூமியிலே படுகிறது. அதன் 120 டிகிரி வெயிலினால் பூமியெல்லாம் வெந்து போகுது. வீடெல்லாம் நெருப்பு புடிச்சிக்குது. அந்தப் பயல் சூரியன்இவள்கிட்டே (குந்தியிடம்) படுத்தான்னா (சிரிப்பு கைதட்டல்) இந்தியா பூராவும் எரிந்து சாம்பலாகாமலா இருக்கும்? (சிரிப்பு கைதட்டல்), அவன் வேறு சூரியன் என்றா சொல்லுகிறான்? எங்கேயோ இருக்கின்ற சூரியன் வந்து குந்தியிடம் கலவி பண்ணினான் என்கிறாயே, அவன் இங்கே அஸ்தினாபுரத்திலே வந்து அவளோடு படுத்தானாம் அப்படி கலவி செய்திருந்தால் அந்த ஊரு மிஞ்சுமா? நிஜமாயிருக்க முடியுமா? எவன் இந்தக் கதையைப் பொய்யிங்கிறான்? இதை விழுந்தல்ல கும்பிடறான். இப்படியெல்லாம் பிறந்த பிள்ளைங்க ஏதாவது யோக்கியமா இருக்குதோ? அஞ்சு பேருக்கும் ஒரு பொண்டாட்டி ரொட்டேசன் போலத்திட்டம் போட்டு இவன் இத்தனை மணிக்கு இவன் இத்தனை மணிக்குன்னு. உலகத்திலே உண்டாய்யா? (சிரிப்பு கைதட்டல்) இந்த உலகத்திலே இம்மாதிரி உண்டாய்யா? இந்த மகாபாரதத்தை கும்பிடுறவன் அவன் பொண்டாட்டியை அப்படி வச்சிருப்பானா? இப்படி விட்டிருப்பானா? திரௌபதி மாதிரி வைச்சிருப்பானா? கும்பிடுகிற பயல் எவனாவது அவள் மாதிரி அவன் பொண்டாட்டி அப்படி இருந்தால் அவன் ஒப்புக் கொள்வானா? என்னா அக்கிரமய்யா? எவ்வளவு புரட்டு? எவ்வளவு மோசடி? யாருதான் இதை எல்லாம் திருத்துறது? உங்களோடு இது இருந்தால் சரியாப் போச்சா? வெளிநாட்டுக்காரன் உங்களைப் பார்த்து, மதிக்க வேண்டாமா? என்னா கடவுள்? என்னா கோபுரம்? என்னா உற்சவம்? என்னா கோவில்? என்னமா நாசமா நடக்குது இதெல்லாம்.
இந்தா நாளைக்கு மாமாங்கம் வரபோவுது. என்னய்யா மாமாங்கத்தினுடைய கதை, உங்களுக்குத் தெரியுமா? பொம்பளைங்க எல்லாம்நதி. கோதாவரி, கிருஷ்ணா, கங்கை, வெங்காயம் இந்தப் பொம்பளைங்க எல்லாம் போயி சிவனிடம் அழுதார்களாம். எங்கடி வந்தீங்கன்னானாம் அவன்? இவளுங்க சொன்னாளுங்களாம் என்னய்யா நீ ஊரிலே இருக்கிறவன்கள் எல்லாம் அவன் பாவத்தை எங்க மேலே கழுவி விட்டு, எங்க ஜென்மமே பாவ ஜென்மமாய்ப் போயிட்டோமே நாங்கள் எங்கள் பாவத்தை எங்கே போய் கழுவிவிடறதுன்னு கேட்டாளுங்களாம். கதை இதுதான். தினமும் வருகிறதே பத்திரிகையிலே இதை ஆதாரத்தோடதான் எழுதுகிறோம்.
இந்த நதிகள் கூடி சிவனிடம் சென்று உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் பாவம் தீருவதற்காக எங்களிடம் வந்து குளிச்சு குளிச்சு எங்களிட்ட கழுவி விட்டுட்டு போயிட்டாங்களே! எங்கள் பாவம் எப்போது தீர்ரதுன்னாளுங்களாம். அதற்கு சிவன் மகா யோக்கியன் அவன் சொன்னானாம் அது உங்கள் பாவமெல்லாம் போக நான் கும்பகோணத்திலே குளத்திலே தண்ணீர் விடுகிறேன். அந்த தண்ணீரில் நீங்கள் குளிச்சிங்கன்னா உங்கள் பாவம் அதிலே போயிடும். அப்படீன்னானாம். அதுதான் மாமாங்கமாம். அந்த மாமாங்கத்திலே இந்த நதிகளுடைய பாவமெல்லாம் தீருவதற்கு அந்தநதிகள் அவளுங்க வந்து குளிக்கிறாளுங்களாம். குளிச்சால் அவளுக பாவம் கழுவி விட்டுட்டு போயிடுவாளுங்க அந்தக்
குளத்திலே இந்த மடப்பசங்களும் குளிக்கிறானுங்களே இவனுங்க பாவமெல்லாம் எங்கே போவுது? (சிரிப்பு கைதட்டல்) கழுவி விட்ட தண்ணியை குடிக்கிறானுங்களே! இவனுங்க கதி என்னாவாகிறது?   அறிவு வேண்டாமா? என்ன கண்டைக்கால் தண்ணியில் இறங்குகிறானுங்க மள மளன்னு. அது தானா முழங்கால் தண்ணியாகிப் போகிறது. அக்குளத்தில் இறங்கினவன் எல்லாம் எங்கே ஒண்ணுக்கு போவான் (சிரிப்பு, கைதட்டல்). ஆம்பளையும் பொம்பளையும் அங்கே அதிலேயே விட்டுடறாங்க தண்ணீரிலே நுரை கிளம்புது. உடனே தண்ணீர் பொங்குது, பொங்குது என்கிறானுங்க. (சிரிப்பு) அது பொங்காமல் என்ன பண்ணும்? இலட்சம் பேரு ஆளுக்கு 2 அவுன்ஸ் 4 அவுன்ஸ் மூத்திரம் விட்டாலே அந்தக் குளம் என்னாகும்? (பலத்த கைதட்டல் வெடிச்சிரிப்பு) இந்த மாதிரி ஒரு சமுதாயம் இருக்கலாமா? பக்கத்திலே கக்கூசு இருக்கா ஒண்ணுக்கு போக. இந்த குளிர் காலத்திலே கிணற்றிலே இறங்கினதும் சுரீர்னு சிறுநீர் வந்துடுது. (கைதட்டல்) அதிலேயே விட்டுடறாங்க (சிரிப்பு) இந்த மாதிரி ஒரு சமுதாயம் இருக்கலாமா? அழுக்கு தண்ணீரில் குளித்தால் தான் செய்த பாவம் போகும்ன்னு அதிலே குளிக்கிறானே மடப்பசங்க எனக்கு பதறுதய்யா? நாம் எல்லாம் சிரிக்கிறோம் வாஸ்தவம்தான் காரணம் கண்டு நம்ம மனம் பதறுதே!
என்னைக்கு நம்ம வாழ்வு மாறுறது? நாம என்னைக்கு மனுசனாகிறது? நம்ம அப்பன் பாட்டன் முட்டாளாயிருந்தான் அப்போ. அவன் சூத்திரனா இருந்தான். நாமும் காட்டு மிராண்டியாக இருக்கிறோம். இருந்து தொலையட்டும். நம்ம பிள்ளைகளாவது மனுசனாக ஆக வேண்டாமா? இதுகளுக்காகவாவது நாம் நல்லதைச் செய்ய வேண்டாமா? நல்ல வழி காட்ட வேண்டாமா? எத்தனை நாளைக்குக் கூலியாகவே இருக்கிறது? நம்மமொழி காட்டுமிராண்டி மொழி. நம்ம தமிழ் இலக்கியங்கள். எதை எடுத்தாலும் கடவுள் அவதாரம் இந்த பாப்பான் அவனுடைய புராணங்கள் இவைகள் இல்லாத இலக்கியங்களே கிடையாதய்யா? தமிழைக்குற்றம் இல்லாத இலக்கியங்களே கிடையாதய்யா? தமிழைக் குற்றம் சொல்லுகிறேன், இலக்கியத்தைக் குற்றம் சொல்லுகிறேன் என்று என் மீது கோபத்துக்கு வருகிறானே தவிர, இப்ப நான் சொன்ன ஆபாசங்களில்லாத ஒரு இலக்கியத்தைக் காட்டு.
குறளே முட்டாள் தனமான புத்தகம் என்கிறேன் நான். பின்னே எதை நீ மிச்சம் பண்ணப்போறே? அதிலேயும் இந்த ஆபாசம் கடவுளைப் புகுத்தி இருக்கிறானே! முட்டாள்தனமான கருத்துக்கள் எல்லாம் அயலே இருக்கிறதே! அவன் திருவள்ளுவர் முட்டாளாய் இல்லாவிட்டாலும் அவன் எழுதின காலம் முட்டாள்தனமான காலம். அது 2000 வருஷத்துக்கு முன்னே எழுதப்பட்டவை. அன்றைக்கு இருக்கிற மனிதனுக்கு அறிவு எப்படி வரும்? 2000 வருஷமில்லே. 150 வருஷத்துக்கு முன்னே மின்சாரம் இருந்ததுன்னா அவன் நம்புவான்? இந்த நாட்டுக்கே மின்சாரம் வந்து 100, 150 வருஷமாகிறது. மின்சாரத்துக்கு முன்னே நெருப்புக் குச்சி லாந்தர் இருந்தது.அதற்கு முன்னே சிக்கி முக்கிக் கல்லு? சிக்கி முக்கிக் கல் இருந்த காலத்தில் அவன் மின்சாரம் இருந்ததுன்னு எழுதினான் என்றால் அது பொய்யாத்தானே இருக்கணும்.
 குறள் எழுதின காலம் சிக்கி முக்கிக் கல் காலம். அன்னைக்கு அவனுக்கு எவ்வளவு அறிவு இருந்திருக்கும். மிஞ்சி மிஞ்சி புத்தி இருந்தால் ஏதோ ஓரளவுக்குத்தான் இருக்குமே தவிர, இன்றைய உணர்ச்சி எல்லாம் அன்றைக்குப் பட்டு இருக்குமா?அதைவிட மோசம் தொல்காப்பியம் எழுதினவன் ரொம்ப பாராட்டுறாங்க. சிலப்பதிகாரம் சுத்த குப்பை. அது அதில் வருகிற பேய் அதில் வருகிற பூதம் அதில் வருகிற சாமி அதிலே வருகிற ஜால வித்தைகளும் வேறு எதிலேயும் இல்லை. இன்றைக்கு நாம எதை எதை ஒழிக்கணுங்கிறோமோ அதெல்லாம் அதில் இருக்குது? அதைப் பண்டிதர்கள் இலக்கியம்என்கிறார்கள். இப்படியாக அய்யா புத்தியில்லை அந்தக்காலத்திற்கு. எடுத்துசொல்வதற்கு ஆள் இல்லை. பேசத் தெரிந்தவனுக்கு வாய்ப்பு கிடையாது. கொன்னு தீர்த்துடறானுங்க பாப்பானுங்க. நம்ம ஆளுகளும் கொலை காரப் பசங்க. என்னையே கொல்லாமவிட்டிருக்கோமேங்கிறானுங்க. அவன் சைவனைத் திட்டுகிறானே, நீ ஏன்டா அவனை தலைவனாக உயிரோடு விட்டு உலாவ விடுகிறீயே என்கிறான். அந்த முட்டாள் பசங்களை யார் வந்து திருத்து வாங்க? நாங்கள் தான் சொல்லுகிறோம். நாங்கள் தான் சிந்திக்கும்படி கேட்டுக்கிறோம்.
அருமைத் தோழர்களே! நீங்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டும். இன்னும் நம்ம சமுதாயத்திலே அனேகக் கேடான முறையெல்லாம் நடக்குது. 100க்கு 50 பேரா இருக்கிற பெண்கள் சமுதாயத்தை நாம மனிதர்களாகவே கருதுவதில்லை. வேலைக்கு ஓர் ஆள் பிடிக்கிறாப்பில தான் நாம் செய்கிறோம். சந்தையிலே போய் நாம மாடு வாங்கிறோமே அது போல. குடும்பத்திலே வேளைக்கு ஒரு பொம்பளையைத் தேடறோம். நாம வேலைகள் வீட்டிலே அவளுக்கு கற்றுக்கொடுத்து நல்ல வேலைக்காரியாக அனுப்புகின்றோம்

பெண்கள்
வீட்டிலே சோறு ஆக்க வேண்டியது. குட்டி போட வேண்டியது (சிரிப்பு) கணவனுக்கு கை கால் அமுக்கி விட்டு அவனைப் பாதுகாக்க வேண்டியது. இதற்கு கூலி என்னடான்னா அவளுக்கு நகையும் துணியும் வாங்கிக் கொடுக்க வேண்டியது. சீவி சிங்காரிச்சி அலுக்கி குலுக்கி நடக்க சொல்றது. 50 கோடி மக்கள் உள்ள நாட்டிலே 25 கோடி பொம்பளை சிங்காரிச்சி அலுக்கி குலுக்கி காட்டுவதாக இருக்க வேண்டும்.  

அவள் சோறாக்கவும், பிள்ளை பெக்கவும், புருஷனுக்கு கை கால் அமுக்குறதுக்கும் தானே அவள் பயன்படுகிறாள். இதைப் பற்றி ஆம்பளைக்கு வெட்கம் வேண்டாமா? நாம பெத்த பிள்ளையாச்சே நம் வயிற்றில் பிறந்ததாச்சே அதை நாம நம்மை போல் ஆக்க வேண்டாமா? கிடையாதே. வயசுக்கு வந்ததும் எவன் கழுத்திலேயாவது கட்டிவிடுகிறோம் அதுக செயலுங்கிறான். ஆம்பளையை போல படிக்க வைக்கணும். அது இஷ்டம் போல் அவள் தன் புருஷனை தேடிக் கொள்ளணும். வேண்டாம்னா, போடான்னு காறித் துப்பணும். வேறு ஒருத்தனை வேணுங்கிறவனைப் பிடித்தவனை அவர்கள் எடுத்துக்கவேணும்.

  அந்த மாதிரிசுதந்திரம்அவர்களுக்குவேண்டும். நீ அப்படியா நடந்து கொள்கிறாயா? வீட்டுக்கதவு திறந்திருந்தால், ஏண்டி கதவு திறந்திருக்குன்னு கேட்கிறாயே? சந்தேகப்பட்டால் அவளை கொலை பண்ணுகிறாயே? உதைக்கிறாயே? இவள் வேண்டாம் இவள் மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாது என்கிறாயே?

உனக்கும் உன் பொண்டாட்டி அவ்வளவு சுதந்திரமாய் இருக்கிற போது அவள் நடக்க உரிமையிருக்கிறது. அவள் ஏன் அப்படி சுதந்திரமாய் இருக்கக் கூடாது? அவளும் மனுசிதானே? இரண்டுபேரும் மனுசர்களாக இருந்து, இருவரும் இராசியாக இருந்தால், எவ்வளவு லாபம்? பொம்பளைக்குச் சோறு ஆக்குகிற வேலையா? பிள்ளை பெக்கிறதுதான் அவள் வேலையா? மாட்டுப் பண்ணை மாதிரி பெண்கள் ஒரு மனிதப் பண்ணையா? அதை நாம பாதுகாத்துக்கிட்டு இருக்கிறது? நம்ம சமுதாயம் இதனாலேயே நாசமாப் போச்சே? மனித சமதாயத்தில் அரைவாசி வீணாப்போச்சே. அப்பெண்களை எல்லாம் நாம் பக்குவமடைய செய்ய வேண்டும். நாம் இன்னும் முன்னேற வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கு. அது பொம்பளைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு தெரியுமா? கக்கூசு எடுப்பவருக்கு நாற்றம் தெரியாது. வேறு வேலை ஏதாவது பண்ணிக் கொடுத்து நாமதான் மாற்ற வேண்டும். நாமேபரிதாபப்பட்டுஅய்யா அவர்கள் கக்கூசு எடுப்பதா? அவர்களுக்கு வேறு வேலை ஏதாவது பண்ணிக் கொடுத்து நாம் தான் மாற்ற வேண்டும். நான் தான் பரிதாபப்பட்டு கக்கூசு எடுக்க ஒரு ஜாதியா? என்று கேட்டேன். மற்ற நாடுகளில் பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். இங்கே பெண்களுக்கே தெரியாதே அவர்களுக்கே எவ்வளவு சுதந்திரம் வேண்டும்ன்னு? அதையெல்லாம் சரியாக்க வேண்டியது நம் கடமை.

அரசியலிலே நாம அரசாங்கத்துக்கு நல்ல பிள்ளையாக நடக்க வேணும். நமக்குத் தெரியும் எப்போ அரசாங்கத்தை எதிர்க்கிறது? எந்த மாதிரி சந்தர்ப்பத்தில் நாம போராடுகிறது என்பது நமக்குத் தெரியும். இந்த தி.மு. அரசாங்கம் நம்மகிட்ட ரகளைக்கே வராது. இந்த அரசாங்கம் இன்னைக்குக் கூட பத்திரிகையிலே போட்டிருக்கு சுய மரியாதைக் கல்யாணத்தை எல்லாம் நாங்க செல்லுபடியாக்குவோம் அப்படீனு. அவர்கள் பகுத்தறிவுவாதிகள். கூடுமான வரைக்கும் நம்முடைய நன்மைக்கு விரோதமாக நடக்க மாட்டாங்க. காங்கிரசு எத்தனையோ நடந்தது. காமராசர் ஒருத்தருக்காகத்தான் ஆதரிச்சேன். அவரும் வஞ்சனையில்லாம மக்களுக்கு நம்மைகள் செய்தார்.
நான் காங்கிரசை ஆதரிச்தேன். அது போச்சி நல்ல வாய்ப்பாக இவர்கள் ஆட்சிக்கு வந்தாங்க. 06.03.1967இல் என்னையும் கொள்கையையும் ஆதரிப்பதாகவே சொல்லிட்டாங்க இருக்கட்டும் அப்படியே நாங்களெல்லாம் பகுத்தறிவு வாதிகள் என்று கோயிலுக்கு போக மாட்டாங்க அவுங்க. சாமி பேராலே பிரமாணம் பண்ண மாட்டாங்க. அவர்கள் பொண்டாட்டி கோவிலுக்கு போகிறார்களா இல்லையா என்பது வேறுசங்கதி. காங்கிரஸ்காரன் கதர் போட்டிருப்பான் அவன் பொண்டாட்டி சீமைத்துணி சல்லாதானே போட்டிருப்பாள். இன்னும் நமக்கு வேண்டிய சட்டங்களை எல்லாம் இந்த ஆட்சி செய்யக்கூடும். நமக்கு விரோதமான காரியங்களைஅவர்கள் செய்யதுணிய மாட்டார்கள். நம்மிடம் கொஞ்சம் பயம் இருக்கிறது. அவர்கள் சுயமரியாதை இயக்கக்காரங்க, ஜஸ்டிஸ் கட்சின்னு சொல்லிகிறாங்க. திராவிட முன்னேற்ற கழகக்காரர்கள். நம்முடைய கழகக்காரர்களை விட கொஞ்சம் முன்னேற்றக்காரர்கள்னு. பதவிக்காக அரசியலில் வேஷம் போட்டுக் கொண்டாலும், அது பற்றி நமக்கென்ன கவலை? பதவிக்காக நாங்கள் வேஷம் போட்டோம் என்றால் தீர்ந்து போச்சி. நாம ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே, தவிர, அதை ஏன் பண்ணினாய், இதை ஏன் பண்ணினாய் என்று நாம ஏன் கிளற வேண்டும். நமக்கு விரோதமாக ஏதாவது சொல்லியிருந்தால் நாம் கேட்கலாம்.

இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து இத்தனை நாளைக்குள் என்ன தப்பு பண்ணினாங்க? எந்தத்தப்பு பண்ணினாலும் காங்கிரஸ்காரன் பண்ணினதுக்கு மேலே இவர்கள் என்ன பண்ணிட்டாங்க? (சிரிப்பு) காங்கிரஸ்காரனுக்கு வேலை பாப்பானுக்கே உத்தியோகம் குடுத்தானுங்க. பார்ப்பானுக்கு உயர்வு தர நம்மவனை மாத்திப் போட்டுடுவாங்க. பாப்பான் சொன்ன படியே கேட்டாங்க. இங்கு அப்படி ஒன்றும் இல்லை. கூடுமான வரைக்கும் நம்ம ஆளுங்களையே பாதுகாக்கிறாங்க. நம்ம ஆளுங்களுக்கு என்னென்னவசதி வேண்டுமோ அதை எல்லாம் செய் கிறாங்க. பாப்பானுக்கும் செய்கிறாங்க. நாம ஒண்ணும் பாப்பானுக்குச் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லையே அவர்கள் விகிதப்படி கணக்குப்படி அவர்களுக்கு செய்ய வேண்டுமென்று தானே நாம் ரொம்ப நாட்களாகவே அதைத் தானே நாம கேட்கிறோம். இந்த ஆட்சி நமக்கு வாய்ப்பு. நல்ல வாய்ப்பாக வாய்த்திருக்கிறது.

நம்ம மனசில என்ன இருக்கணும் நம் மக்களுக்கு? நாம் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேணும். அதிலே தப்பு இதிலே தப்பு என்று கண்டவன் சொல்றத நாம் கேட்கக் கூடாது. அதெல்லாம் தப்பு. லஞ்சம் வாங்கினால் வாங்கிட்டுப் போ. (சிரிப்பு) நீ வாங்கினதுக்கு மேலயா நான் வாங்கினேன்னு கேட்டுட்டு போ. நம்ம சமுதாயத்துக்கு நீ என்னபண்ணினாய்? அவ்வளவுதான் நமக்கு அரசாங்கம் என்றால் அயோக்கித்தனம் தான். அதைப் பற்றி நீங்கள் ஒன்றும் பேசாதிங்க. அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு சும்மா வாய்ப்பேச்சு பேசாதிங்க. எவனும் யோக்கியமாக இருக்க மாட்டான். இன்றைக்கு நான் சொல்லுவேன் இந்தியாவிலே இருக்கிற அரசாங்கங்களை விட தமிழ்நாட்டிலே இருக்கிற அரசாங்கம் தான் யோக்கியமான அரசாங்கமாகும். (பலத்தகைதட்டல்) நிச்சயமாகவே கொஞ்சமாவதுநம் உணர்ச்சியுடையவர்கள் மந்திரிமார்கள், பக்தவச்சலம் மந்திரிக்கு மேலாகவாஇவர்கள் திருடுவாங்க. இவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். இல்லே ராஜகோபாலாச்சாரி காலத்திலே செய்த அக்ரமங்களை விடவா இவர்களால் செய்யமுடியும்?

அரசாங்கம்னா கொள்ளையடிக்கிற வேலைதானே. அரசாங்கம் என்றால் பொறுக்கித் தின்றே வேலைதானே? நான் நல்லா சொல்லுவனே. அரசியல் என்றால் காலிப் பசங்களுக்கு பிழைக்கிறதற்கு கடைசி வழி. அப்படீனு வெள்ளைக்காரனே சொல்லியிருக்கிறான். அரசியல் என்பது காலிப் பசங்க பிழைக்க கடைசி வழி. அது நம்ம நாட்டிலே ரொம்ப தூரமா இருந்தது. இப்ப இது நம்ம பக்கமாக வந்துட்டது. அது பற்றி நமக்கு கவலை வேண்டாம். மந்திரி லஞ்சம் வாங்கினால் சர்க்கார் பார்த்துக் கொள்ளட்டும். அவன் ஏதாவது தப்பு பண்ணினால் இன்னொருவன் பார்த்துக் கொள்கிறான். எங்களுக்கு உள்ள வேலை எல்லாம் எங்களுடைய சமுதாயத்துக்கு மந்திரி என்ன செய்தான்.

எங்களவங்களுக்கு என்னாவசதி பண்ணினான்? அவ்வளவுதான். இப்போது கல்கத்தாவிலே பார்க்கிறீர்களே தினம் இரண்டு பேர் மாறுகிறான். தினம் இரண்டு பேரை நாலு பேரை சுட்டுத் தள்ளுகிறான். தினம் 20 பஸ்ஸை நெருப்பு வைத்து கொளுத்துகிறான். அது மாத்திரம் அல்ல. ஒரு பயல் எம்.எல். 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு கட்சிக்குபோனான். அவனே ரூபாய் 4000 வாங்கிக் கொண்டு பழையபடியேகட்சிக்கு வந்துட்டான். இது பாப்பான் பத்திரிகையிலே வந்த செய்தி இதெல்லாம் அந்த அளவிற்கு அரசியல் பேராலே அயோக்கியத்தனம் செய்கிறார்கள். நம்ம நாட்டிலே அவ்வளவு மோசமாக இல்ல. ஏதோ ஒரு கட்சி ஆளும் படியான பலத்தை வச்சிருக்குது இங்கே. இவர்கள் பேரிலே எல்லா குற்றத்தையும் சுமத்துறாங்க. எதிரி நம்பவன் தான்பொய்யும்புரட்டும் பேசறான். எனக்கு அது பற்றி கவலை இல்லை. பணத்தை அவன் திருடினால் சர்க்கார் பார்த்துக் கொள்கிறது மாட்டிக்குவான். நீ என்னா அதற்கு வெங்காயம் (சிரிப்பு) நீ பார்த்துக்க வேண்டியதெல்லாம்
எங்களுக்கு சமுதாயத்துக்கு மந்திரி என்ன செய்தான்? எங்கள் சமுதாயத்திலே இருக்கிற கோளாறுக்கு என்ன பரிகாரம் பண்ணினான்? அதுதான் எங்கள் கவலை. பதவி போனவன் கண்டபடி உளறுவான் நிறையா பத்திரிகையிலே பொய்யெல்லாம் எழுதுவான். நம்ம ஜனங்களுக்கு ஒழுங்கா நடந்துகொள்கிறானா இல்லையா? யார்கேட்பா இவனுங்க சொல்றதை. நமக்கு என்ன செய்தாங்க. அவ்வளவுதான்.நாம் எத்தனையோநாளா சூத்திரனா இருந்து வந்திருக்கிறோம். அரசாங்கத்திலோ நமக்கு உண்டான விகிதாச்சார உரிமை இல்லை.அரசாங்கத்திலோ கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இல்லை. அடிமையாகக் கிடந்தோம் ஏதோ காமராஜர் கொஞ்சம் நம்பவங்களுக்குப் படிப்பை கொடுத்தாரேன்னு அவரைத் தலைமேலே தூக்கிக்கிட்டு ஆடினோம். எந்தெந்த துறையிலே என்னென்ன காங்கிரஸ்காரர்கள் செய்தார்களோ அதையெல்லாம் குறைவில்லாமல் இவர்களால் (திமு. ஆட்சியில்) நடக்குது. இதை நீங்க நல்லா கவனத்திலே வச்சிக்கங்க.

ஆகவே அருமைத் தோழர்களே! உங்களுடைய நன்மை அதாவது தமிழர்களுடைய நன்மை என்றால் தமிழன் காட்டு மிராண்டியாக இருக்கிறான். தமிழனுக்கு பகுத்தறிவு இல்லை. தமிழன் மதம், கடவுள், சாஸ்திரம், சம்பிரதாயம் இவையெல்லாம் குட்டிச்சுவராக இருக்கிறது. அவைகள் பாப்பானின் நன்மைக்காகவே உண்டாக்கப்பட்ட சாதனங்கள். ஆனதினாலே ஒரு தடவை இரண்டு தடவை, மூணு தடவை நல்லா சிந்திச்சி மதமோ,கடவுளோ, சாஸ்திரமோ, சாமியோ, மண்ணாங்கட்டியோ, சுண்ணாம்போ, ஒண்ணுமே இல்லாமல் ஒழுக்கமாக நடந்துக்கணும். அன்பாக நடந்துக்கணும். நம் ஜனங்களுக்கு நாம நன்மைகள் செய்து இருக்கிற குறைபாடுகளை நீக்கவும் வேண்டும். இதுதான் நம்முடைய கடமை என்கிற மாதிரி ஒவ்வொருவரும் எண்ண வேண்டும். நாம் எல்லாம் தமிழர், தமிழர் என்றால் ஒத்துக்கணும்.

அந்த நிலமைக்கு தமிழர் எல்லாம் முன் வர வேண்டும். யார் பதவிக்கு வந்தாலும் அவன் தமிழனா?அந்தத் தமிழனுக்குத்தான் நாம்மரியாதையும் ஆதரவும் தரவேண்டும்

அந்தஉணர்ச்சிஉங்களுக்குஎன்றுவருகிறதோஅப்பொழுது தான் நம் குறை நீங்கும். நம்முடைய எதிரி பாப்பானுடைய ஆதிக்கமும் அப்பொழுதுதான் ஒழியும். நாம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிற வரைக்கும் அவன் ஆதிக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும். தமிழர்கள் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கணும். தமிழன் அரசாங்கம்இப்போது. எவன் என்ன சொன்னாலும் நாம் தமிழனை ஆதரிக்கணும். காங்கிரஸ் காரனுக்கு அந்த தமிழன் என்ற உணர்ச்சியே கிடையாது. நான் நல்லாவே சொல்லுவன் என்னமோ பதவி அதிகாரமென்றோமே, தவிர தமிழன் தமிழ் இனம் தமிழின வளர்ச்சி அது காங்கிரஸ்காரனிடம்கிடையாது. என்னமோ தேசம் வெங்காயம் என்பாங்க. நீங்க அப்படியில்லாமல் நம் இளைஞர்கள் முதற்கொண்டு தமிழ் இன உணர்ச்சியுடன் தமிழன் என்றால் அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.

நான் வெளிநாட்டுக்கு போயிருந்த போது ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு பத்துப்பேரு என்னை வந்து கேட்டான் என்ன வேண்டும் உனக்கு? ஏன் உட்கார்ந்திருக்கிறாய் என்றுகேட்கிறான்? நான் போகவேண்டிய இடத்தை சரியாக அறிந்து அழைத்துப் போவார்கள். காசு கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அங்கு ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவு அன்பு காட்டுவார்கள். உதவி செய்யும் தத்துவம் அங்கு. வெளிநாட்டான் இந்தியாவுக்கு வந்தால் அவனுக்கு என்ன வண்டும்? என்ன செய்ய வேண்டும் என்று வலிந்துகேட்டுஉதவிசெய்யும்தத்துவம்உங்களுக்கெல்லாம் உண்டாக வேண்டும். அந்த மாதிரி நாகரிக மக்களாக வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு என் பேச்சை முடிச்சிக்கிறேன். ரொம்ப நேரமாச்சு வணக்கம் (கைதட்டல்) பெரியார் வாழ்க என்ற முழக்கத்துடன் கூட்டம் முடிவுற்றது.


நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை