மாற்றாரை மதித்தல்




நாணயமாகப் பொதுத் தொண்டு ஆற்றுபவர்கள், கருத்தில் தனக்கு எதிர்கோணத்திலிருந்தாலும் அவர்களிடம் பெரியார் நட்பும் பாசமும் கொண்டிருந்தார்.
மூதறிஞர் இராஜகோபாலாச்சாரியார் மறைவதற்கு முந்திய நாள் மாலை நான், தந்தை பெரியாரை சென்னையில் பெரியார் திடலில் கண்டேன். சோகமே உருவாகக் காணப்பட்டார் பெரியார்.
நான் அவரிடம், அய்யா!, உடம்புக்கு என்ன? இவ்வளவு சோகமாக தாங்கள் எப்போதும் இருந்ததில்லையே என்று கேட்டேன். பெரியார் நேராகப் பதில் சொல்லவில்லை. என்னைப் பார்த்து, பத்திரிகை விற்பனை அதிகமாகட்டும் என்று அப்படிப் போடுகிறார்களா? அல்லது உண்மையிலே, ஆச்சாரியாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறதா? என்று ஏக்கத்தோடு கேட்டார்.
நான் செய்தி பொய்யல்ல அய்யா; இராஜாஜி மெய்யாகவே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்றேன்.
அதற்கு அவர், ஏனுங்க அப்படி; ஆச்சாரியாரை உலகத்தில் எங்கே தெரியாது? எங்கிருந்து வேணுமானாலும் மருந்தும் மருத்துவரும் பறந்து வரக்கூடுமே. அப்படிக் கொண்டுவந்து காப்பாற்றக் கூடாதா? என்று கவலை தோயக் கேட்டார்.
முடிந்ததெல்லாம் செய்து பார்க்கிறார்கள், இருந்தாலும்... என்று நான் இழுத்தேன்.
என்னங்க அநியாயம், அவர் என்னைப் போல கண்டதை உண்ண மாட்டார். எல்லாம் அளவோடு இருக்கும். நேரா நேரத்தில் உண்பார்; உறங்குவார். அவ்வளவு ஒழுங்காக இருக்கிறவராயிற்றே: இன்னும் நான்கைந்து ஆண்டு இருக்கலாமே என்று பெரியார் ஆற்றாமைப்பட்டார்.
ஆச்சாரியாரோடு பலமுறை பொதுமக்கள் நலனுக்காகப் போராடியவர் பெரியார். அவருக்குக் கறுப்புக் கொடி காட்ட வைத்தவர் பெரியார். அவர் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நெருக்கடியை உருவாக்கியவர் பெரியார். கடுமையான கருத்து வேறுபாட்டின் காரணமாகவும் காழ்ப்புக் கொள்ளாதவர்; பகையை வளர்க்காதவர்; பண்பாளர் பெரியார்.
ஆச்சாரியாருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் பொருட்டு சென்னை கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்குச் சென்று காத்திருந்தார் தந்தை பெரியார். தனது சக்கர வண்டியில் அமர்ந்திருந்தார். அப்போது, குடியரசுத் தலைவர், திரு.வி.வி.கிரியும், ஆளுநர் ஷாவும் அங்கு வந்து சேர்ந்தார்கள். மயானத்தில் நாற்காலியா போட்டு வைப்பார்கள்? குடியரசுத் தலைவர் ஒரு பக்கமாக நின்றார். இதைப் பெரியார் பார்த்து விட்டார். நொடிப் பொழுதில், அருகிலிருந்த தோழர்கள் உதவியால், சக்கர வண்டியிலிருந்து இறங்கி, கீழே உட்கார்ந்து கொண்டு, வண்டியை திரு. கிரி அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்குத் தள்ளிக் கொண்டு போகச் செய்தார், திரு.கிரி அவர்கள் உட்கார ஏற்பாடு செய்தார், தனிப்பட்ட பற்றால் அல்ல; அவரிடம் எந்தத் தயவையும் எதிர்பார்த்தல்ல; முன் ஏதோ உதவியைப் பெற்றதற்காக நன்றிக் கடனா? இல்லை. குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதையைக் காட்ட வேண்டுமென்பதற்காக, பார்ப்பனராயிருந்ததையும் பொருட்படுத்தாது, திரு. கிரி அவர்களுக்கு தன்னுடைய இருக்கையைக் கொடுத்த பெரியார், பார்ப்பன வெறுப்பாளர் என்று யார் யாரோ திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பெரியாரின் பண்பை எத்தனை பெரியவர்களிடம் காண முடிகிறது!


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை