ஆர்.எஸ்.எஸ். அடியுரம் கலவரம்


உலகில் பொதுவாக ஒரு அமைப்பு அல்லது இயக்கம் வளருகிறது என்றால் மக்களுக்கு ஏதாவது நன்மையைச் செய்து, மக்களுக்காக பணிகள் மேற்கொண்டு, போராட்டம் நடத்தி அதன்மூலம் மக்களின் மனதில் இடம் பெற்று வளரும். இதுதான் நடப்பு.
ஆனால், ஆரியர்கள் எல்லாவற்றிலும் வித்தியாசமானவர்கள் அல்லவா?
இல்லாததை இருப்பதாகக் காட்டுவார்கள்;
சிறுபான்மையை பெரும்பான்மை ஆக்குவார்கள்;
உலகில் பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்துவர். ஆனால், ஆரியர்கள் விஷயத்தில் சிறுபான்மை ஆதிக்கம் செலுத்தும் அதிசயம்!
மற்றவன் செய்தால் துரோகம் என்பார்கள்; இவர்கள் செய்தால் தியாகம் என்பார்கள்!
பொருளை மற்றவர்கள் பொசுக்கினால் நாசம் என்பர்; இவர்கள் கொளுத்தினால் யாகம் என்பர்! இப்படி எத்தனையோ சொல்லலாம். இந்த அறிவியல் உலகிலும் இப்படியெல்லாம் அவர்களால் செய்ய முடிகிறது என்றால், அது அவர்களின் சாதுர்யம் என்பது மட்டுமல்ல, நம் மக்களின் ஏமாளித்தனமும் ஆகும்.
இந்த ஏமாளித்தனத்தை நன்றாக ஆரியர்கள் எடைபோட்டு வைத்திருப்பதால்தான், இயக்கம் வளர்ப்பதிலும் எங்கும் இல்லா அதிசயம் நிகழ்த்துகின்றனர்.
எனவேதான், தொண்டு செய்து இயக்கம் வளர்ப்பதற்கு மாறாக, குண்டு வெடித்தே இயக்கம் வளர்த்து வருகின்றனர்.
கலவரம் என்றால் இவர்களுக்கு லாட்டரி சீட்டில் பரிசு விழுந்தது போன்ற ஓர் ஆனந்தம் ஏற்படும்.
நமது நாட்டு தனியார் தொலைக்காட்சிகளும், சில பத்திரிகைகளும் பரபரப்பு செய்திக்காக கொலை விழாதா! வெட்டு நடக்காதா! என்று கொக்கொக்க கூர்ந்து நோக்கிக் கிடப்பதுபோல, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், எங்காவது மதக் கலவரம், ஜாதிக் கலவரம் வராதா! எங்காவது ஓர் இந்து வெட்டுப்படமாட்டானா! என்று ஏங்கியே இயக்கம் வளர்ப்பவர்கள்.
இயல்பாய் நடப்பது எங்கோ ஒன்று நடக்கும். அப்படி நடந்தால் எப்படி இயக்கம் வளரும்? எனவே, வன்முறைகளை இவர்களே தூண்டுவது இவர்களின் வாடிக்கை.
பெரும்பாலும் இவர்கள் வன்முறையைத் தூண்ட வதந்திகளைப் பரப்புவதே வழக்கம்.
எங்காவது ஒரு இந்து வெட்டப்பட்டால், உடனே வெட்டியவன் ஒரு முஸ்லீம் என்று வதந்தியைப் பரப்புவர். உடனே வெறியேறிய இந்துக்கள் ஆங்காங்கே முஸ்லீம்களோடு மோதுவர். விளைவு முஸ்லீம்களுக்கு எதிராய் இந்துக்கள் திரள்வர். முஸ்லீம் என்றாலே ஒரு வெறுப்பு ஏற்படும். இதன்மூலம் இந்துக்களுக்காக குரல் கொடுப்பதாய்க் காட்டும் ஆர்.எஸ்.எஸ். மீது அவர்களுக்கு ஒரு பற்று வரும். அதை அப்படியே ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்குப் பயன்படுத்துவர்.
காந்தியைச் சுட்டுக் கொன்றவன் கோட்சே என்ற ஆரிய பார்ப்பனன், ஆர்.எஸ்.எஸ். தீவிரத் தொண்டன் - இந்து மகா சபையைச் சேர்ந்தவன் என்று கூறினாலும், ஆனால், காந்தி சுடப்பட்டவுடன் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பரப்பிய செய்தி - வதந்தி, காந்தியை ஒரு முஸ்லீம் சுட்டுக் கொன்றுவிட்டான் என்பது.
விளைவு என்னாயிற்று, அப்பாவி முஸ்லீம்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர்.
காந்தியைச் சுடுவதற்கு முன்னமே கோட்சே தன்னை ஒரு முஸ்லீம் போல தயாரித்துக் கொண்டான். தனது கையில் முஸ்லீம் பெயரை பச்சைக் குத்திக் கொண்டான். முஸ்லீமைப் போல சுன்னத் செய்து கொண்டான்.
சுட்டவுடன் தான் பிடிபட்டால், தன்னைப் பார்த்ததும் ஒரு முஸ்லிம் என்று நினைத்து, சுட்டவன் முஸ்லீம் என்ற செய்தி பரவி, அதன்மூலம் நாடு முழுவதும் முஸ்லீம்கள் கொல்லப்படவேண்டும்; பழி முஸ்லீம்மீது விழுந்தால், இந்துக்களை எதிரணியில் திரட்டிவிடலாம் என்பது அவனது திட்டம்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, காந்தியையும் கொல்ல வேண்டும்; அதன்மூலம் முஸ்லீம்களையும் பழி வாங்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினான்.
நாட்டில் நடைபெறுகின்ற பல கலவரங்களுக்கு, முஸ்லீம் - இந்து மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கிளப்பிவிட்ட வதந்திகளே பெரும்பாலும் காரணம்.
இன்று நேற்றல்ல, ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே வதந்திகளைப் பரப்புவதும், வன்முறைக் கலவரங்களைத் தூண்டுவதுமே அவர்களுக்கு அடிப்படைப் பணிகளாகும்.
1. இந்துக் கோயில்களுக்கு அருகில் சர்ச் ஒலிபெருக்கி முழங்குகிறார்கள்; பள்ளி வாசல் ஒலிபெருக்கி முழங்குகிறார்கள் என்று கலவரத்தைத் தூண்டுவார்கள்.
2. இந்துக்கள் கோயிலில் இருக்கும் இடத்தில் உருவ வழிபாட்டைக் கண்டிக்கும் பள்ளி வாசல் முழக்கங்கள்; ஓதுதல் கூடாது என்று பிரச்சினையை எழுப்புவார்கள்.
3. இந்துக் கோயில்கள் இருக்கும் இடத்தில் முஸ்லீம்கள் ஊர்வலம் நடத்தக் கூடாது என்பர். அல்லது முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் இடத்தின் வழியேதான் பிள்ளையார் ஊர்வலம் நடத்திக் கலவரம் உண்டாக்குவர்.
4. பள்ளி வாசலும் மசூதியும் இருக்கும் இடத்தில் தான் ஏற்கெனவே இந்துக் கோயில் இருந்தது. எனவே, பள்ளி வாசலையும், மசூதியையும் இடித்துவிட்டு இந்துக் கோயிலை மீண்டும் கட்டவேண்டும் என்று இரத்தக் களறியை ஏற்படுத்துவர்.
5. சாதாரணமாக ஏற்படக்கூடிய வரப்புத் தகராறு, இடத் தகராறு இவற்றைக் கூட இந்து - முஸ்லீம், இந்து - கிறித்தவ பிரச்சினையாக திசை திருப்பி மோதவிட்டு கலவரத்தை பிற இடங்களுக்கும் வளர்ப்பர்.
6. இந்துக்களிலே பல்வேறு ஜாதிகளுக்கு இடையே கலவரத்தைத் தூண்டிவிட்டு, அவர்களுக்கு இடையே எப்போதும் ஜாதி வெறி அல்லது ஜாதிப் பற்றுதல் தணிந்து மறைந்து போகாமல் பார்த்துக் கொள்வர்.
இப்படிப்பட்ட கலவரங்களின் மூலமே ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் குடும்ப அமைப்புகளும் வளர்க்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டவுடன் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புக் கலவரம்தான் நாக்பூரைச் சுற்றிலும் ஆர்.எஸ்.எஸ். விரைவாக வளரக் காரணமாக அமைந்தது. அப்போது கண்ட ருசி, அதையே (கலவரத்தை) அவர்கள் தத்துவமாகக் கொள்ள காரணமாயிற்று.
அன்றிலிருந்து அவர்கள் கலவரங்களைத் தூண்டியே இயக்கத்தை வளர்க்கின்றனர். நாக்பூர் கலவரத்திற்குப் பிறகு நாட்டில் நடைபெற்ற அனைத்து மதக் கலவரங்களிலும், ஆர்.எஸ்.எஸ்.சின் தொடர்பு கட்டாயம் இருக்கிறது.
இந்தியா விடுதலை பெற்ற இரண்டு மாதங்களிலே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 700க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக பம்பாய் புலனாய்வுத் துறை மூத்த அதிகாரி, கபூர் கமிஷன் முன் சாட்சி அளித்துள்ளார்.
பூனா மாவட்ட போலீஸ்அதிகாரி இக்கமிஷன் முன் அளித்த சாட்சியத்தில், பூனா மாவட்டத்தில் நடந்த இந்து முஸ்லீம் கலவரங்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே காரணம் என்று கூறியுள்ளார்.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி கல்கத்தா நகரில் பயங்கரக் கலவரம் காரணம். பஞ்சாபில் இந்து சிறுவன் ஒருவன்மீது ஒரு முஸ்லீம் காரை ஏற்றிக் கொன்று விட்டான் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பரப்பிய வதந்தியாகும்.
அதேபோல, 1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலே பெரும் புயலைக் கிளப்பியதும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியதுமான பிவாண்டி மற்றும் அய்ஸ்கோவான் கலவரங்கள் நடந்ததற்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே காரணம்.
ராஞ்சியில் நடந்த வகுப்புக் கலவரத்திற்கு இதே ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம். ஆனால் இக்கலவரம் சற்று மாறுபாடான காரணத்தால் உருவாக்கப்பட்டது. உருது மொழி முழக்கத்தோடு முஸ்லீம்கள் ஒன்று திரளத் தொடங்கியுள்ளனர். உருது மொழிக்கு அரசாங்கம் உரிய உயர்வு கொடுத்தால், இன்னொரு நாட்டுப் பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று கூறி கோல்வால்கர் கலவரத்தைத் தூண்டினார்.
1971இல் கேரளாவில் தெள்ளச்சேரியில் நடந்த வகுப்புக் கலவரத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் இன்னொரு வடிவமான ஜனசங்கம் காரணமாய் அமைந்தது. இதை நீதிபதியே உறுதி செய்துள்ளார். (ஆதாரம் 1.1.1974ஆம் தேதி செக்யூலர் டெமாக்ரசி பத்திரிகை).
அமேரலி, பனாஸகாந்த், மேஷனா, பரோடா போன்ற இடங்களில் நடந்த கலவரங்களில் ஜனசங்கம் மற்றும் இந்து மகா சபையைச் சார்ந்தவர்கள் வன்முறையைத் தூண்டியுள்ளனர் என்று இக்கலவரம் பற்றி விசாரித்த ஜெகன் மோகன் ரெட்டி கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
(செக்யூலர் டெமாக்ரசி ஜனவரி 1974)
1978ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் .பி. மாநிலம் அலிகாரில் மிகப் பெரிய இந்து - முஸ்லீம் கலவரம் உருவாக, 25 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான்.
அக்கலவரத்தில் முஸ்லீம்கள் எவ்வளவு கொடுமையாகக் கொலை செய்யப்பட்டார்கள் என்று 5.11.1978 தேதியிட்ட சண்டே வார ஏடு தெளிவாக செய்தி வெளியிட்டது. 13.8.1980 அன்று .பி. மாநிலம் மொரதாபாத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தபோது ஒரு பன்றியை நுழைய விட்டு கலவரத்தைத் தூண்டினர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.
30.4.1981ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பீகார் ஷெரீப் என்ற இடத்தில் முஸ்லீம் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உருவாக்கினர். 52 பேர் இக்கலவரத்தில் உயிரிழந்தனர். இதில் 50 பேர் முஸ்லீம்கள்! மசூதி அருகில் இருந்த ஓர் இடத்தைக் காரணங்காட்டி இக்கலவரத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உருவாக்கினர். அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம் என்று கூறி, அவ்விடத்தில் இந்துக் கோயில் எழுப்ப முயன்றால் வந்த கலவரம் இது. உண்மையில் இது முஸ்லீம்களின் சுடுகாட்டின் ஒரு பகுதியாகும்.
இக்கலவரத்தில் முஸ்லீம்கள் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன. பதினேழு வயது முஸ்லீம் இளம்பெண்ணின் கண்ணெதிரிலேயே அவளது கணவன் கண்டந் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.
இப்படித் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். வெறியாட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மதக்கலவரத்தில் சிந்தும் இரத்தத்தின் சத்துதான் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சியின் அடியுரமாக அமைகிறது.
அந்த உரம் போட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸை நாடு முழுக்க, வளர்க்க, பரப்ப அவர்கள் முயன்று வருகின்றனர்.
தமிழகத்தில், பெரியார் மண்ணில், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அடி வைக்க முடியாமல் முறியடிக்கப்பட்டாலும், அங்கும் அவர்கள் அடி வைத்தது இந்த அணுகுமுறையில்தான்.
1982இல் மண்டைக்காடு கலவரத்தைத் தூண்டி, பின்னணியில் நின்று கலவரத்தை பெரும் அளவில் நடத்தி, குமரி மாவட்டத்தில் காலூன்றினர். 1.3.1982 மற்றும் 15.3.1983 ஆகிய நாட்களில் அங்கு துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவிற்குச் செய்தனர்.
காலூன்ற இடங்கிடைத்தால் போதாதா? அதைப் பயன்படுத்தி, இரு சமூகங்களுக்கிடையே பகைமையை வளர்த்து, அதனைக் கொண்டு தங்கள் அமைப்புகளை விரிவடையச் செய்தனர்.
குமரி மாவட்ட மக்கள் சகோதர உணர்வோடு நெடுங்காலமாய் வாழ்ந்தவர்கள் அங்கு மதக் கலவரத்தைத் தூண்டி இந்துக்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மணலிக்குழிவிளை, வழுதலப்பள்ளம் என்ற இடங்களிலும் கலவரத்தைத் தூண்டினர். 12.9.1993இல் அதிதூதர் கிறித்துவ ஆலயம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பினரால் இடித்துத் தர மட்டம் ஆக்கப்பட்டது.
வலுதலப்பள்ளம் இந்துக்கள் குறைவாக வாழும் ஊர். சுற்றிலும் உள்ள ஊர்களில் கிறித்துவர்கள் அதிகம் வாழ்கின்றனர். இந்த வாய்ப்பை கலவரத்தைத் தூண்ட கையிலெடுத்தனர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.
வழுதலப்பள்ளம் இந்துக்களைக் காப்போம் என்ற முழக்கத்தோடு குமரி மாவட்ட இந்துக்களை உணர்வேற்றி ஓரணியில் திரட்ட கலவரங்களை உருவாக்கினர். இம்முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள். குமரி மாவட்டத்தில் பா... வெற்றி பெறும் அளவிற்கு அங்கு தங்கள் அமைப்புகளை வளர்த்துக் கொண்டனர். இதற்கு அவர்கள் போட்ட உரம் கலவரங்கள்தான்!
4.10.1983இல் வெங்கைய நாயுடு அளித்த பேட்டியில் (இந்து நாளேட்டிற்கு) அடுத்த சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் பெருவாரியான இடங்களை (தொகுதிகளை) பா... கைப்பற்றும் என்றார். இது எந்த நம்பிக்கையில்? கலவரம் நடக்கும் இடமெல்லாம் அவர்கள் வளர முடியும் என்ற அடிப்படையில் அல்லவா?
குமரியில் கண்ட ருசியை அடுத்து, கோவையில் குறி வைத்தனர். கோவையில் நடந்த சாதாரண தனி நபர் மோதல்களை இந்து முஸ்லீம் மோதல்களாக மாற்றி, கோவையில் குண்டு வெடிப்புகளும், கொலைகளும், கொடூரக் காட்சிகளும் நடைபெறக் காரணமாயினர். அதிலும் அவர்கள் நோக்கு நிறைவேறவே செய்தது.
பி.ஜே.பி.க்கு பிடிமானம் இல்லாத கோவை, கலவரத்தின் விளைவாய் அவர்கள் கோட்டையாய் மாறியது. இப்படிப்பட்ட வாய்ப்பை அவர்களுக்கு அளிக்கலாமா? என்பதை அனைத்து மக்களும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக முஸ்லீம் தீவிரவாதிகள் சிந்திக்க வேண்டும்.

அடுத்து, திருச்சியை குறி வைத்து காய் நகர்த்துகின்றனர். இப்படி தமிழ் நாட்டிலே, பெரியார் மண்ணிலே அவர்கள் கலவர உரம் போட்டு கட்சி வளர்க்கின்றனர் என்றால், இந்தியாவின் பிற இடங்களில் அவர்களுக்கு இவ்வேலை எளிதன்றோ? எனவே, அவர்களின் கலவரச் சதித் திட்டத்தை, அவர்கள் எப்படியெல்லாம் கலவரத்தைத் தூண்டுவார்கள் என்பதை நம் மக்கள் நன்றாகப் புரிந்து, அவர்களின் முயற்சிக்கு பலியாகாமலும், மோதலுக்கு முன்னிற்காமலும் அறிவுடன் நடக்கவேண்டும்!

நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்
 ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை