எடப்பாடி மத்தியஸ்தம்




ஒரு சமயம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் முஸ்லீம்களுக்கு இடையே சண்டை வந்து இரு கட்சியினராகப் பிரிந்தார்கள். அந்த சண்டையானது தொழுகை நடத்தும் மசூதியையே மூடும்படியாகச் செய்து விட்டது. இந்த நிலையினைக் கண்ட முஸ்லீம் பிரமுகர் ஒருவர் சமரசம் செய்து வைக்க தந்தை பெரியார் அவர்களையும் அவருடைய நண்பர்களான திருச்சி சையத் முத்துஷா சாயபு அவர்களையும் ராஜகிரி அப்துல் வகாப் சாயபு அவர்களையும் அழைத்து இருந்தார்.
மூவரும் ஒரு தேதி குறிப்பிட்டு ஈரோட்டில் இருந்து எடப்பாடிக்குப் புறப்பட்டார்கள். சங்ககிரி ஸ்டேஷனில் இறங்கி எடப்பாடிக்கு 9 மைல் போகவேண்டும். அன்று, இன்று போல பஸ் வசதி இல்லை. குதிரை வண்டியில் தான் போகவேண்டும். இவர்கள் குதிரை வண்டியில் 2, 3 மைல் போன உடனே திடீர் மழை வந்து விட்டது. அதிகமான மழையும் இருட்டும் ஏற்படவே வழியில் ஒரு கிராமத்தின் கோடியில் வண்டியை அவிழ்த்துவிட்டு விட்டு பக்கத்தில் இருந்த ஓர் ஓலைக்குடிசையின் திண்ணையில் தங்கினார்கள். அந்த வீட்டுக்கார அம்மாள் இவர்கள் மூவரையுமே முஸ்லீம்கள் என்று கருதி திண்ணையில் உட்காராதீர்கள், போய்விடுங்கள் என்று கூறிவிட்டார்கள்.
சரி என்று மூவரும் சட்கா வண்டியிலேயே மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டனர். அந்த வீட்டுக்காரிக்கு சமைத்து சாப்பிடுவதற்கு மட்டும் ஒரு குடிசையும் இரவில் தூங்குவதற்கு எதிரே வேறு குடிசையும்இருந்தது. சாப்பிட்டவுடன் வீட்டை சாத்தி பூட்டிக்கொண்டு எதிரே உள்ள குடிசைக்குச் சென்று தூங்கி விட்டாள்.
இருட்டும் மழையும் பலமாக இருந்ததினால் அவர்கள் திரும்பவும் வண்டியைவிட்டு இறங்கி குடிசையின் திண்ணைக்கே சென்றார்கள். துணி எல்லாம் நனைந்துவிட்டது. உட்காரவும் இடம் இல்லாதபடி சாரலில் நனைந்து விட்டது. வீட்டுக்குள் சென்று உட்காரலாம் என்றாலோ வீடு பூட்டி இருந்தது. பெரியார் அவர்கள் தம்மிடம் இருந்த சாவிகளை எல்லாம் கொண்டு போட்டு திறக்க முயன்றார்கள். ஒரு சாவி பூட்டை திறந்தது. மூவரும் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள். தீக்குச்சியை கிழித்துப் பார்த்ததில் அருகில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு இருந்தது. அதை கொளுத்தி வைத்துக் கொண்டு படுக்கப்பார்த்தார்கள்.
அன்றைய தினம் முஸ்லீம்களுக்கு நோன்பு, பெரியார் அவர்களுடன் வந்திருந்த முஸ்லீம்கள் இருவரும் கடினமான நோன்பை அனுசரிப்பவர்கள். பசியோ அதிகம். நோன்பும் இருக்கவேண்டி இருந்தது. இந்த நிலையில் அந்த வீட்டில் ஏதாவது இருக்குமா என்று பார்த்தார்கள். ஒரு சட்டியில் கொஞ்சம் சோறு தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டு இருந்தது. அதில் சிறிது உப்பைப் போட்டு கரைத்து மூவரும் ஆளுக்கு இரண்டு டம்ளர் குடித்தார்கள். இதற்குள் மழையும் விட்டுவிட்டது. மெள்ள வெளியில் வந்து கதவையும் முன்போல சாத்தி பூட்டி விட்டு பழையபடி ஜட்காவில் எடப்பாடிக்கு புறப்பட்டு விட்டார்கள். மறுநாள் காலை எடப்பாடியில் முஸ்லீம்கள் கூட்டம் நடைபெற்றது. இருகட்சிக்காரர்களும் சமாதானமாக மீண்டும் மசூதியைத் திறந்து வாழவேண்டிய அவசியங்களை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். இருகட்சிக்காரர்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. உடனே பெரியார் அவர்களுடன் வந்த முஸ்லீம் பிரமுகரில் ஒருவர் குரானில் இருந்து சில வாக்கியங்களை எடுத்துச் சொல்லி விளக்க முற்பட்டார்.
ஆண்டவன் யாருக்கு சன்மானம் முதலில் அளிக்க முற்படுவார் என்றால் எவன் ஒருவன் தமது தவறை உணர்ந்து எதிரியிடம் முதலில் சென்று மன்னிப்புக் கேட்கின்றானோ அவனுக்குத்தான் அளிப்பார் என்று எடுத்துச் சொன்னார். இதனைக் கேட்டதும் இருகட்சி தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு எழுந்து ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து வணங்கி சமாதானமாகப் போனார்கள். வந்த காரியம் சுமுகமாக வெற்றி ஆன பிறகு இவர்கள் தாங்கள் சங்ககிரியில் இருந்து எடப்பாடி வந்து சேர்ந்த கதையை எல்லாம் கூறி சிரித்தார்கள். கூடியிருந்த அனைவரும் வயிறு குலுங்க சிரித்துக்கொண்டு கலைந்தார்கள்.
- புலவர். கோ. இமயவரம்பன் தந்தை பெரியார்

115ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை