பிறரது உதவியை எதிர்நோக்கார்




தந்தை பெரியார் அவர்கள் தமது 93-ஆம் வயதில் - மறைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு - 1971-ஆம் ஆண்டில், சென்னை - பெரிய அரசு மருத்துவமனை - ஜெனரல் (பொது) மருத்துவமனையிலிருந்து வெளியேறும் முன், சென்னை - அரசு கண் மருத்துவமனையின் கண்காணிப்பாளராக இருந்த பெயர்பெற்ற மருத்துவரான டாக்டர் டி.டி. இராமலிங்கம் அவர்களிடம் தன் கண்ணைக் காட்டிப் பரிசோதித்துக் கொள்ள விரும்பினார்; அங்கே அழைத்துச் செல்லப்பட்டார்; நானும் உடன் சென்றேன்.

``தங்களுக்கு என்ன தொந்தரவு கண்ணில் என்று விளக்கமாகக் கூறுங்கள்; பிறகு அதற்கேற்ப பல பரிசோதனைகளைச் செய்வோம் என்றார்.

அதற்கு தந்தை பெரியார் அவர்கள் சிரித்துக்கொண்டே, ``அப்படி ஒன்றும் பெரிய தொந்தரவு எனக்கு ஒன்றுமில்லை; பல சிறிய எழுத்துகள் உள்ள பத்திரிகைகளை - `இந்து நாளேடு போன்றவைகளைப் - படிக்க முடியவில்லை; அவ்வளவுதான்! என்றார்.

டாக்டர் டி.டி. இராமலிங்கம் அவர்கள் மிகவும் அமைதியும், ஆழமும் கொண்ட பண்பாளர். அவர் சிரித்துவிட்டு அமைதியாக சில வினாடிகள் இருந்து விட்டுச் சொன்னார்: ``தங்களுக்கு வயது 93 அல்லவா? இன்னமும் ஏன் இதுபோன்ற பத்திரிகைகளை - சிறிய எழுத்துகள் உள்ள புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? இவற்றையெல்லாம் நிறுத்திவிடுங்கள். வேறு இவர் மாதிரி (என்னைக்காட்டி) யாரையாவது விட்டுப் படித்துச் சொல்லச் சொல்லிக் கேட்கலாமே என்றார்.

அதற்கு அய்யா அவர்கள், ``அந்தப் பழக்கம் எதற்கு? நான் இன்னொருவரையல்லவா அதற்காகத் தேடவேண்டும்? இது முடிகிற காரியமா? நம்ம வேலையை நாம்தானே பார்த்துக் கொள்ளவேண்டும்? வேலூர் டாக்டர் ஜான்சன், டாக்டர் பட் போன்றவர்கள் முன்பு சொன்னதுபோல கையில் லென்ஸ் வைத்தே படித்துக் கொள்கிறேன்; எனது வேலைக்கு அன்றாடம் பத்திரிகைகள் - மற்ற செய்திகளைப் படிக்காமல் இருக்க முடியுங்களா டாக்டர்? ரொம்ப நன்றி என்று கூறி விடைபெற்றுத் திரும்பினார்கள்.

கடைசிவரை தந்தை பெரியார் அவர்கள் தம் கையால்தான் பக்கம் பக்கமாக எழுதுவார். வாயால் சொல்லிப் பிறரை எழுதச் செய்யும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் `விடுதலைக்கு அறிக்கை எழுதி (சென்னையில் தங்கியுள்ளபோது)க் கொடுத்து, அவர்களது அறிக்கையில் அச்சுக்கோர்க்கப்பட்டு பிழைத் திருத்தத்திற்கான ஒரு படியை (ழுயடநந ஞசடிடிக) காலி அவர்களே வாங்கி அலுப்பு, சலிப்பின்றி தன் கைப்பட தானே திருத்திக் கொடுப்பார்கள்.

இயக்கத்தைப்பற்றிச் சொல்லும்போது கூட, `என்னை நம்பி இப்பெரும் பணி ஏற்றேன்! என்று கூறிடுபவர் அவர்கள்; எதற்கும் எளிதில் பிறரது உதவியை நாடமாட்டார்கள்!


- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 2

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை