அய்யா கொடுத்த கார்


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் தேர்வு முடிந்து பொருளாதாரத்தில் முதல் மதிப்பெண் வாங்கிய பிறகு, பொருளாதாரச் சிறப்பு வகுப்பு மேல் படிப்புக்கு (பி.. ஹானர்ஸ்) மனு போட்டேன். எவ்வித பரிந்துரையுமின்றி முன்னுரிமையோடு அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து எனக்கு உடனே 90 ரூபாய் சம்பளம் கட்டி சேருமாறு தாக்கீது (1952-53) வந்தது. கையில் பணம் இல்லை; மிகுந்த தயக்கத்துடன் தந்தை பெரியாருக்கே நிலைமையை விளக்கி எழுதினேன். அடுத்து தந்தி மணியார்டராக அந்தத் தொகையை அனுப்பி என்னை ஊக்கப்படுத்தினார்.

விடுதலை ஏட்டினை எனது ஏகபோக நிர்வாகத்தின் கீழ் விடுவதாக அறிக்கை எழுதி என்னை அந்தப் பொறுப்பில் அமர்த்திய பிறகு எனது மாமனார் மாமியார் வாங்கிக் கொடுத்திருந்த பியட் காரை நான் அதனை பராமரிக்க குடும்ப பட்ஜெட்டில் சிரமமாக இருக்கிறது என்று திருப்பி அவர்களுக்கே அனுப்பிவிட்டு அடையாறு வீட்டிலிருந்து பேருந்து, மின்சார ரயில் மூலமே விடுதலை அலுவலகத்திற்கு (2, பாலகிருஷ்ணன் பிள்ளை தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை) காலை சென்று மாலை அடையாறு திரும்புவேன்.

சில ஆண்டுகளுக்குப் பின் தான் தந்தை பெரியார் அவர்களுக்கு, எனக்கு மாமனார் - மாமியார் வாங்கித் தந்த பியட் காரை திருப்பி அனுப்பி விட்டு, பஸ்ஸில், மின்சார ரயிலில் அடையாறிலிருந்து அன்றாடம் அலுவலகம் வந்து திரும்பும் சேதி தெரிய வந்தது!

ஏற்காட்டிலிருந்து அய்யாவின் தங்கை மகன் எஸ்.ஆர்.சாமி அவர்கள் வாங்கிய சிறிய கார் (ஆஸ்டீன் ஆஃப் இங்கிலாந்து) ஒன்றை அய்யா, அம்மாவுக்கென இருக்கட்டும் அவசரத்திற்கு சிறிய கார் சிக்கனமாகும் என்று கருதி வாங்கி பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பிறகு புதிய வேன் வந்த பிறகு அதற்கு அதிக பயன்பாடு இல்லை; அதனால் விற்றுவிட முடிவு செய்து எவ்வளவு போகும் என்று விசாரித்தார்
ரூ.15,000த்துக்கு மதிப்பு என்று கேள்விப்பட்டு யோசித்துக் கொண்டிருந்தபோது நிருவாகி, நண்பர் சம்பந்தம் மூலமும் அன்னை மணியம்மையாரிடமும் கேட்டு ஆசிரியர் வீரமணிக்கு கார் இல்லையா? என்று கேட்டு, அவரிடமே இதைக் கொடுத்து விடலாம் என்று சொல்லி, வந்து எடுத்துப் போகச் சொன்னார்கள்.

தந்தை பெரியார் அந்தக் காரை எடுத்துச் சென்று நீங்கள் ஓட்டிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

மறுமொழி ஏதும் கூறாமல், அந்த வண்டியை எடுத்து வந்து, சுமார் 6 மாதத்திற்கு நன்கு பயன்படுத்தினோம்.

நான் வேறு ஒரு புது அம்பாசிடர் காருக்கு முன்பே பதிவு செய்து வைத்திருந்தேன் (அப்போது ஓர் ஆண்டு; இரு ஆண்டு ஆகும்). வங்கிக் கடன் தவணை மூலம் அதனை வாங்கிவிட்டேன்.

இந்த ஆஸ்டீன் காரை நான் விற்றேன் ரூ.14,500க்கு சென்றது; அந்தத் தொகைக்கு டி.டி. ஆக எடுத்துக் கொண்டு அந்தத் தொகையை உரத்தநாட்டில் தோட்ட பங்களாவில் சேக்கண்டி என்றழைக்கப்படும் நடு மண்டபத்தில் அமர்ந்திருந்த அய்யாவிடம் சென்று நேரில் கொடுத்தேன். அம்மா பெயரில்தான் அந்த டி.டி.; காரணம் கார் ரிஜிஸ்டிரேஷன் அம்மா பெயரில்தான். நான் அதை மாற்றிடாமல்தான் ஓட்டிக்கொண்டே இருந்தேன், விற்ற பிறகு அந்தக் காரை நான் உங்களிடம் விற்கவில்லை. அதை உங்களுக்காகக் கொடுத்தேன், என் பணம் அல்ல போ, போ பைத்தியக்காரா? அது உன் பணம் என்று செல்லமான கண்டிப்புடன் அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்!

அய்யாவின் தாராள குணம் பிறருக்கு நாம் கடன்பட்டுள்ளோம் அவர்களது விருந்தோம்பல் மூலம் என்று நினைத்து அய்யா - அம்மா அடிக்கடி தங்கும் கழக முக்கியஸ்தரின் வீடுகளுக்குச் செல்லும்போது, பட்டுப் புடவைகள், அவர்கள் விரும்பும் பொருள்களை அவர்களுக்கு அளிப்பதன்மூலம் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைவார்கள்.

உணவு நேரம், கழகத் தோழர்கள் யார் அய்யா வீட்டிற்கு வந்தாலும், அம்மா என்று ஒரு குரல் அய்யா கொடுப்பார்; அம்மா புரிந்துகொண்டு, உணவு எல்லாம் தயாராக இருக்கிறது என்று கூறி, நொடிப்பொழுதில் பரிமாறித்தான் அனுப்புவார்கள். இதைவிட தலைசிறந்த மனிதநேயம் வேறு ஏது?

- கி.வீரமணி

(தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்)

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை