திருச்சியில் திருமண விழாவில் பெரியார் உரை
04.06.1968
இம் நாள் திருச்சி குஜிலித்தெரு மோதி சம்பூரணத்தம்மாள் திருமண மாளிகையில்பெரியார் பெருந்தொண்டர்கள் செல்லைய்யா - நாகம்மையாரின் வளர்ப்பு மகள் - மணியம்மாள் பட்டுக்கோட்டை ஆவணம் கி.கருப்பய்யன் குமாரர் - சுந்தரராஜன் - ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பெரியார் அவர்களின் உரை:-
தாய்மார்களே!தோழர்களே!இனி எதிர்க்காலத்தில் திருமணம் செய்வதையே கிரிமினல் ஆக்கிவிடவேண்டும். இம்மாதிரியான சுயமரியாதைத் திருமணங்கள் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சிகள் பழமையான வைதீக முறைகளுக்கு மாறானதாய் இப்போது நாட்டிலே ஏராளமாக நடக்கிறது.
அருமைத்தோழர்களே!
எனக்குப் பின்னாலே பேசுகிற தோழர்களுக்கும் நான் முன்னுரையில் சொல்வதற்கும் இடம் வைத்து இப்பொழுது முதலாவதாக வாழ்க்கை ஒப்பந்தத்தை மணமக்கள் நிறைவேற்றிக் கொள்ள தொடங்கி வைக்கிறேன்.
மணமகன் உறுதி மொழி:-
தாய்மார்களே!
பெரியோர்களே!
பட்டுக்கோட்டை ஆவணம் உயர்திரு. கி.கருப்பய்யன்
- குமாரர் சுந்தரராஜன் ஆகிய நான் திருச்சி உயர்திரு செல்லைய்யா
- நாகம்மை ஆகியோரின் வளர்ப்பு மகள் செல்வி மணியம்மாளை நான் எனது வாழ்க்கைத்துணைவியாக ஏற்றுக் கொண்டேன். இன்று முதல் எங்கள் வாழ்வில் நிகழும் இன்பம் துன்பம்; நன்மை,
தீமை ஆகிய நிகழ்ச்சிகள் யாவும் எங்கள் இருவருக்கும் சம உரிமையுடைய பொது நிகழ்ச்சியேயாகும். வாழ்க்கையில் செல்வன் சுந்தரராஜனாகிய நான் என்னென்ன உரிமைகள் எதிர் பார்க்கிறேனோ அவ்வளவும் என்னிடமிருந்து எதிர்பார்க்க செல்வி மணியம்மாளுக்கும் உரிமையுண்டு என்கிற இந்த ஒப்பந்தத்தின் மீது அதன் அறிகுறியாக இந்த மலர்மாலையும் பொன் அணியையும் அணிவிக்கிறேன். (கைதட்டல்)
மணமகள் உறுதிமொழி
தாய்மார்களே!
பெரியோர்களே!
திருச்சி உயர்திரு செல்லைய்யா
- நாகம்மை ஆகியோரின் வளர்ப்பு மகள் மணியம்மாளாகிய நான் பட்டுக்கோட்டை ஆவணம் உயர்திரு. கருப்பையன் குமாரர் செல்வர் சுந்தர்ராஜன் அவர்களை என் வாழ்க்கைத்துணைவராக ஏற்றுக்கொண்டேன். இன்று முதல் எங்கள் வாழ்வில் நிகழும் இன்பம் - துன்பம்,
நன்மை
- தீமை ஆகிய நிகழ்ச்சிகள் யாவும் எங்கள்இருவருக்கும்சமஉரிமையுடைய பொது நிகழ்ச்சியேயாகும்.
வாழ்க்கையில் செல்வி மணியம்மாளாகிய நான் என்னென்ன உரிமைகள் எதிர்பார்க்கிறேனோ,
அவ்வளவும் என்னிடமிருந்து எதிர்பார்க்க செல்வன் சுந்தரராஜன் அவர்களுக்கு உரிமையுண்டு என்கிற இந்த ஒப்பந்தத்தின் மீது அதன் அறிகுறியாக இந்த மலர் மாலையை அணிவிக்கிறேன்.
(கைதட்டல்)
தோழர்களே!
மணியம்மாள்
- சுந்தர்ராஜன் ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி இனிது நிறைவேறியது.
மணமக்களைப் பாராட்டிநண்பர் திருவாரூர் தங்கராசு, நண்பர் து.மா.பெரியசாமி மற்றும் பலர் அருமையாகப் பேசினார்கள்.
நானும் என்னுடைய முடிவுரை என்னும் பேரால் சில வார்த்தைகள் சொல்லி இந்தநிகழ்ச்சியை நான் முடிவுக்குக்கொண்டுவருகிறேன்.
தோழர்களே!
நாம புரட்சிகரமான காலத்திலே இருக்கிறோம். இம்மாதிரி சுயமரியாதைத் திருமணம் செய்வதென்றால் ரொம்ப கஷ்டம்தான்.
நமக்கு எவ்வளவு கவலை இருக்குதோ அவ்வளவு கவலை மற்றவங்களுக்கும் உண்டு.
இம்முறை துவக்கப்படுவதற்கு முன்பு முதலாவது நம்ம அரசாங்கத்துக்கு நமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால்,
இம்முயற்சி சுமார் 40 வருஷமாக நடந்துவந்தும் கூட, இதற்கு முன் செய்யும் இம்மாதிரி திருமணங்கள் சட்டபடி செல்லுபடியற்றதாகவே இருந்தது.
திருமணம் என்று பேரளவில் சொல்லிக்கொண்டாலும், சட்டப்படி,
செல்லாது.
ஏன் சட்டப்படி செல்லாது என்றால்? நாம் இம்மாதிரி ஆரம்பிச்சபோது நமது நாட்டில் பரம்பரை விரோதிகளான பார்ப்பனர்களுக்கும் இது எதிர்ப்பான காரியமாகவே இருந்தது. ஏன்?
அவர்கள் மக்களை ஏய்ப்பதற்கு மந்திரமென்றும், தந்திரம் என்றும்,
கடவுள் பேரில் என்றும், அந்தச் சடங்கு, இந்தச் சடங்கு, என்றும் மனிதனுக்கே புரியாத பித்தலாட்ட, காரியங்களைச் சொல்லி மக்களை அடக்கித் தங்களை மேலானவர்களாக ஆக்கிக் கொண்டு வந்தார்கள்.
அவைகளை மாற்றி அமைக்க வேண்டுமென்ற நாம் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நாம் இம்முறையைத் துவக்கினோம்.
சுயமரியாதைத் திருமணம், வாழ்க்கை ஒப்பந்தம் என்ற பேரால் எந்தெந்த துறைகளில் அவை நடைபெறுகின்றதோ,
அவைகளை எல்லாம் மாற்றவேணும் என்கிறஎண்ணத்தின் மீது,
தீவிரமான சில கருத்துக்களைக் கொண்டு செய்த இந்த மாதிரி காரியம் செல்லாது. இது சட்டப்படியான காரியமாகாது என்று இதற்கானவையைத்தான் அவர்களாலே செய்ய முடிஞ்சிது.நமது நாட்டிலே இதற்கு முன்னாலே காங்கிரஸ் ஆட்சி - பொது மக்கள் ஆட்சி என்பதாக ஒன்று இருந்தாலும், அதன் பேருதான் காங்கிரசாக இருந்ததே தவிர மற்ற காரியம் எல்லாம் அது ஒரு பாப்பானுடைய அடிமை ஸ்தாபனமாகவே அது இருந்ததினாலே, பாப்பானுக்கு எவ்வித குறைபாடு இல்லாமல், அவனுக்கு எதிராக ஏதும் செலவாணி ஆவதற்கு இல்லாமல், நமக்கு நல்லதான காரியங்கள் செய்ய முடியாமல் பார்ப்பனர்களே தடையாகவே இருந்து வந்துள்ளனர்.ஏதோ நல்ல வாய்ப்பாக (திராவிட) முன்னேற்றகழகத்தவருடைய ஆட்சி,
தமிழ்நாட்டில் வந்ததினாலே, அவர்கள் தமிழ்மக்களுக்கு அவசியமான முக்கியமான மாறுதல்களை, தங்களால் கூடுமானவரையிலும் செய்யலாமெனக் கருதி, அவர்கள் பதவிக்கு வந்த உடனே முதல் காரியமான தமிழர்களிடையிலே தொடர்ந்து நடந்து வரும் இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்கிற நிகழ்ச்சி சட்டப்படி செல்லும் என்று சட்டம் செய்துவிட்டார்கள்.
(28.11.1967)இல் அது ஜனாதிபதியால் அங்கீகாரம் அளித்து
17.01.1968 முதல் சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டது.
இந்த சட்டத்தினாலே, இந்த நிகழ்ச்சிகள் ரொம்ப சுருக்கமாகப் போய்விட்டது., முன்பு இதிலே ரொம்ப தொல்லைகள் எல்லாம் இருந்தது -
என்பது உங்களுக்குத் தெரியும். கல்யாணம்ன்னா இரண்டு மூன்று நாளைக்கு முன்பே சடங்கு, சம்பிரதாயம், மற்றும் முட்டாள் தனமான காரியங்கள் எல்லாம் அதில் இருந்தது. இப்ப அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை.
இப்பொழுது இங்கு நடந்தது இந்த நிகழ்ச்சி.
அதில் நீ துணைவி, நான் துணைவன் என்று சொன்னாங்க தீர்ந்து போச்சி.
சட்ட சபையிலே இதற்காக சட்டம் பண்ணுகிற போது சுயமரியாதைக் கலியாணம் அப்படீன்னா எண்னான்னு காங்கிரசுகாரர்கள் கேட்டார்கள். அதற்கு (தமிழக முதல்வர்) அண்ணா அவர்கள் சட்ட மன்றத்தில் ஒரே வார்த்தை சொன்னார்.ஒருபொண்ணும்,ஆணும் சேர்ந்து,நீயும் நானும் துணைவி ,துணைவர்என்றுசொன்னால்போதும்.அதுதான்சுயமரியாதைக்கலியாணம் என்றார். அதுக்கு மேலே காங்கிரஸ்காரர்களே ஒண்ணும் பேச முடியலே. எனவே இன்று நடந்த இந்த நிகழ்ச்சியும் சட்டப்படி செல்லும்ன்னுட்டாங்க.
அதற்காக ஒரு சட்டமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
(17.01.1968 முதல்) அதனால் முதலாவது இந்த அரசாங்கத்துக்கு நாம் நன்றி செலுத்தணும். சிறப்பாக பெண்கள் சார்பாகவும் நன்றி செலுத்தணும்.
பார்ப்பான் முயற்சியே
தோழர்களே!
கொஞ்சம் சிந்தித்துக்கேளுங்க. மனசுக்குச் சரின்னு பட்டதை ஏற்றுக்கங்க. மற்றதைத்தள்ளுங்க. முதலாவது இந்த நிகழ்ச்சியே,
மனித சமுதாயத்துக்குத் தேவையில்லாத நிகழ்ச்சி. கலியாணம் என்கிறதோ வாழ்க்கைத்துணை ஒப்பந்தம் என்கிறதோ ஒருஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்து ஒரு குடித்தனம் நடத்துகிறது என்பதோ இந்த மனித சமுதாய இன்பத்துக்கு இது தேவையில்லாத ஒரு நிகழ்ச்சி.
இது இன்றல்ல. பார்ப்பான் நம்ம நாட்டுக்கு வர்ரதுக்கு முன்னே இந்த முறை இருந்ததா என்றால், அதற்குப் போதுமானஆதாரமில்லே.
நமக்கும் சரித்திரமே இல்லை. பார்ப்பான் இந்த நாட்டுக்குவந்ததுக்குஅப்புறம்தான் ஆதாரமாச்சே தவிர, நமக்குத் தேடிப் பார்த்தாலும் ஏதுமில்லை.நமக்குத் தெரிந்த வரையிலும் நாம ஒரு புரட்சிகரமான காரியத்திலே ஈடுபட்டிருப்பதினாலே,
நல்ல அளவுக்குத் துருவிப் பார்க்கிறபோது, இது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பது நமக்கு ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்தது. உலகிலே இம்மாதிரிமுறை வேறு எங்கேயுமில்லை.
இங்குதான்,
ஆட்டுக்கு ஒரு பொண்டாட்டியைக்கட்றது,
மாட்டுக்கு ஒரு பொண்டாட்டியை கட்டுறது, ஒரு எருமைக்கு ஒரு பொண்டாட்டியைக் கட்றது.அந்த பொண்டாட்டி அதுக்குச் சமைத்துப் போடறது. அதுக்கு காலு கை அமுத்தறது.
அவன்கிட்டே அடி உதை வாங்குகிறது. இந்த மாதிரியான நிகழ்ச்சி, உலகத்திலே வேறெங்கேயும் எந்த ஜீவ ராசிகளிடத்திலேயுமில்லை.
ஜீவராசி அமைப்பு:
ஜீவராசி அமைப்பு, இயற்கைத்தத்துவத்தின் படி,
ஜீவன் பெருக்க வேணும். இப்பெருக்கத்துக்கு மட்டும்தான் அதன் வேலை. அதுக்கு முயற்சி செய்யணும். அது ஏன் அப்படி? இயற்கையா? அது இருந்ததால் என்ன லாபம்? என்று எல்லாவற்றையும் சிந்தித்தோமானால்,
நமக்குச் சரியான விடை தெரியாது. ஆனால் பொதுவாக நாட்டிலே ஜீவன்கள் பெருக வேண்டும். அது இயற்கை தத்துவமாகும்.
மரமானாலும் அந்த இனத்தைப் பெருக்க வேண்டும். மாடாயிருந்தாலும் பெருக்கணும். ஆடாயிருந்தாலும்
பெருக்கணும். ஜீவராசிகளில் கண்ணுக்குத் தெரியாத அணுக்கள், அதன் இனப்பெருக்க வேலைதான்.
அது மாதிரி ஈடுபட்டவன்தான் மனித ஜீவனும். ஆனால் அவன் இனத்தைப் பெருக்குகிறது என்று சொன்னால், மனிதன் மாத்திரம் பத்தாது. இனத்தைப் பெருக்குவதற்கு ஆணும், பெண்ணும், இரண்டும் தனித்தனி ஜீவனாக இருந்தாலும்,
கூடணும்,
கலக்கணும்,
அதற்கு இரண்டு பேருக்கும் ஓர் உணர்ச்சியை உண்டாக்க வேணும். அதற்கு நாம உதவி செய்ய வேணும். இருவரையும் கூட்டி வைக்கணும்.
அவ்வளவுதான் மனிதஜீவன் இயற்கையிலே இனத்தைப் பெருக்குவதற்கு ஏற்பட்டகாரியம். அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. சாதாரணமாகவே மனிதன் அப்படித்தான் இருந்தான்.
அந்த உணர்ச்சி வந்த போதுதான் கூடுவான். அதற்கப்புறம் அவுக அவுக தனித்தனியே இருப்பார்கள்.
எப்படி வாழணுமோ அப்படி வாழ்வது. இந்தக் காரியத்திலே இனப் பெருக்கத்திற்கு ஆணுக்கும் சுதிந்தரம் பெண்ணுக்கும் சுதிந்தரம் உண்டு. ஆணுக்கும் இஷ்டப்பட்டால்தான் உண்டு. பெண்ணுக்கும் இஷ்டப்பட்டால்தான் உண்டு. ஆண் விரும்பினாலும்,
பெண் விரும்பினாலும் அந்த ஜீவனுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். நெடுநாளாய் அப்படிதான் இருந்துவந்திருக்கிறது.
அதற்குஉதாரணமாக எடுத்துக்காட்ட வேணுமானால் இந்த உணர்ச்சிக்குப் பேரே இல்லை. எந்த உணர்ச்சிக்கு? ஆணும் பெண்ணும் ஒண்ணாகச் சேர்ந்து வாழ்வதற்காகச் செய்யப்படும்.
ஒரு முயற்சிக்கு என்னா பேருன்னு இல்லவே இல்லை. நம்ம தமிழ் மொழியிலேயும் கிடையாது. அவன்
(பார்ப்பான்)
சொல்றானே
- இதெல்லாம்,
சாஸ்திரம்,
சம்பிரதாயம்ன்னு,
வெங்காயம்ன்னு அந்த வட மொழியிலேயும் பேரு இல்லே. ஏன் இல்லே? குடும்பத்தோடு அது இருந்திருந்தால் அது ஒரு பேரோடு ஆரம்பிச்சிருக்கும்?
மத்தியிலே ஆரம்பிச்சதினாலே உணர்ச்சியால் அதுக்கு முன்னே ஏற்பட்டதினாலே முதலிலே அதுக்கு ஒரு பேரு இல்லை. சாதாரணமாக இன்றையதினம், ஆரியர் வருவதற்கு முன்னே அதுக்கு ஒரு பேரு இருந்ததுன்னா அதுக்கு என்னா பேரு? ஒண்ணு கலியாணம்ன்னான். கல்யாணம்ன்னா அதுக்கு இந்தக் கருத்தில் இல்லே. சுகம், சௌக்கியம், நலம், அதுக்கு அர்த்தமாகக் கொள்ளப்பட்டது.
புருஷனும்,
பொண்டாட்டியும் சேர்ந்த வாழ்கிறதுக்காக ஏற்படுத்தின ஒரு நடவடிக்கைக்குதான் அந்த பேரு. கல்யாணம்மென்கிற கருத்தே கிடையாது அதுக்கு. அதே மாதிரிதான் விவாகமானாலும் அது அல்ல. அதை எல்லாம் ரொம்ப நுட்பமாகப் பார்த்தால் அடிமைத்தன்மை என்று தான் நாம கருத வேணுமே தவிர, ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழறதுக்கு அல்லது ஒரு வாழ்க்கைக்கு அந்த பேருன்னு கிடையாது.
பார்ப்பான் ஆதிக்கம்
அப்புறம் நண்பர் திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் சொன்னது போல, அதுக்கு நிபந்தனைகளை அனுமதிச்சி,
சில கொள்கைகளைப் புகுத்தி, அதுக்குப் பேருன்னு வைச்சி உண்டாக்கினான். அதுக்குப்பேருதான் கன்னிகா தானம்ன்னு வைச்சான். கன்னிகாதானம்ன்னா பெண்களை ஒருவனுக்குத் தானமாக் கொடுக்கிறதே தவிர, ஒருத்தனுக்கு பொண்டாட்டியாக ஆக்குகிறது என்கிற அர்த்தம் அதிலே கிடையாது. கன்னிகாதானம் என்கிறசொல்லிலே இன்னும் அவர்களாலே என்னென்ன பேரு இருக்கிறதோ அதுக்கு எதுக்கும் இந்தக்குறிப்பிட்ட பேரு இல்லே. ஏன் அப்படி இல்லே? எப்படி அப்பேரு வந்தது?என்று நீங்கள்சிந்தித் தீர்களேயானால், நீங்கள் சிந்திப்பீர்களேயானால் தெரியும். இதைத்தான் நீங்கள் கொஞ்சம் கவனமாகக் கேட்கணும்.
இந்த நாட்டுக்குப் புதியதாய் வந்த அன்னியனாகிய பாப்பான், அவன் இங்கே பொண்டாட்டியோடு வரல்லே. ஏராளமான பொம்பளைங்களையும் பங்கு போட்டுக் கூட்டிவரலே.சும்மா லம்பாடிகள் வர்ரமாதிரிவந்தான்.
அவனைப் பொறுத்தவரையிலும் அவன் இங்கே புகுந்தவரைக்கும்,
வசதி கிடைத்த வரைக்கும்,
வாழ இங்கே இருந்த அறியாமையினாலேயோ, அல்லது மறதியினாலேயோ,
அதைப் பற்றி ஒண்ணும் லட்சியம் பண்ணாமல் இருக்கவே, நிறையா இங்கே பாப்பான் வந்தான்.அவன் மற்றவர்களை அடக்கி ஆளுகிற வாய்ப்பைப் பெற்றான். இதுதான் அவன் சரித்திரம். நிலைமையும் அப்படித்தான்.
இன்னைக்கும் அவன் (பாப்பான்) தான் ஆள்றான் மக்ககளை அடக்கி அந்தப் பொறுப்பிலே அவன் வந்திட்டான்.
வந்த அவனுக்குப் பொண்டாட்டி வேணுமே. நம்ம ஜனங்களும் அவனுக்கு எதிர்ப்போடுதான் இருந்தாங்க. போதுமான வசதியில்லை அவனுக்கு. தட்டுத்தடுமாறி ஏதாவது சரி பண்ணினாலும் அவன் பக்குவம் பண்ணியிருக்கிறான். பண்ணினாலும், நம்ம பொம்பளைங்க அவனுக்கு அடங்கி அவனிட்டே இருக்குலே. ஏதோ வசதி வாய்ப்பு கிடைத்ததால் அவனோடு வாழ்வது, இல்லாட்டா அவனை விட்டு வந்துவிடுவது, அந்த மாதிரி நிலைமை ஆயிட்டுது.
பிறகுதான் இந்த நிகழ்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்தறது என்று அப்புறம் தான் அவன் முயற்சி பண்ணினான்.
நினைச்சா வருவது, நினைச்சாபோவது, நினைச்சா இன்னொருத்தன் கையைப் பிடிச்சிக்கிறது.
அதுக்கும் அவனுக்கு அந்த பெண்களைப் பற்றிக் கவலை இல்லை. இதை எப்படி கட்டுப்படுத்தறதுன்னு.
அந்தக் கட்டுப்பாட்டுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இன்று வரை ஒண்ணா இருந்துவருகிறது .எப்படிஅவன் கட்டுப்படுத்தினான்?
தொட்டால் தீர்ந்தது. அவனுடைய தயவுதான். அது ஏதாவது தப்பா நடந்தால், உதைக்கலாம், அடிக்கலாம், கொல்லலாம். இன்னைக்கும் பொம்பளை இவனைப் பார்த்தாள் அங்கே போனாள் கொல்லலாம்ன்னு என்று. அவளை அந்த நிபந்தனையோடத்தான் அந்தக் காலத்திலே துவக்கினாங்க.
நான் இதை என் சொந்த கருத்தாய் சொல்லல்லே. நான் சொல்றதுக்கு எதுக்கும் ஆதாரத்தை எடுத்துக் சொல்லி, ஒப்பிட்டுதான் அதைப் பார்க்க வேணுமே தவிர அவன் செய்தான், அதனாலே நான் செய்தேன். அவன் சொன்னான் அதனாலே நான் சொல்றேன்னு ஒரு நாளும் நான் சொல்றதே இல்லை. ஒன்னைக்கூட சொல்றதில்லே.
அதையும் நான் மேற்கோள் காட்டுகிறதில்லே. தவிர புத்தியைக் கலக்கிகிட்டு ஆதாரம் தேடினோம்ன்னா அப்பதான் மேற்கோள் காட்டணும்.
இந்தக் கருத்துக்கு என்னா ஆதாரம்ன்னா?
தொல்காப்பியம் யாருக்கு?
தமிழனுக்குத் தன்னுடைய இலக்கியம்னு பாராட்டுகிறானே, பாராட்டிக்கிறானே தொல்காப்பியம், அதிலே இருக்குது.
அது தமிழன் இலக்கியமல்ல,
அது பாப்பான் இலக்கியம்தான்.
தமிழனுக்கு வேறு நாதி இல்லாததினாலே, அதை வைச்சி ஆதாரமாகக் கொள்றான். எப்படியோ போகட்டும் அதைப் பற்றி - அதிலே இருக்குது இதற்கு அஸ்திவார ஆதாரம். என்னா ஆதாரம் அதிலே இருக்குதுன்னு சொன்னா? அந்த தொல் காப்பியத்திலே மக்களிடையிலே,
ஆண்
- பெண் தன்மையிலே, காலத்தாலே, பொய்யும் வழுவும் புணர்ந்ததினாலே, அது ஏற்படாமல் இருப்பதற்காக, அய்யர் வகுத்தனர் கரணங்கள்.பச்சையாய் இருக்குது.
இதிலே ஒண்ணும் ரகசியமாயில்லே.
இதற்குத் தத்துவார்த்தம் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லே.
வாழ்க்கையிலே ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதிலே,
பெண்களை அடக்கி வளர்க்காததினாலே,
கட்டுப்பட்டு இருக்காததினாலே, அவர்களை ஒரு பொருள்போலவேநடத்துவதினாலே, அது பொய்யாகவும், குற்றமாகவும் கருதினார்கள்.
முதலிலே அவள் என்னை வைச்சிக்கிறியான்னு கேட்டிருப்பாள்.
அவுக ஆகட்டும்ன்னு இருப்பான்.
பிறகு போயிடுவாள். அது மாதிரி வந்தாலும் சொன்ன பேச்சுப்படி நடக்கிறதில்லே,
நாணயமா நடக்கிறதில்லே, ஒழுக்கமா நடக்கறதில்லே,
என்கிற நிலையேற்பட்டு, சமுதாயத்திலே ஆண் பெண் வாழ்விலே, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதினாலே, அதுக்கு ஒரு கட்டுப்பாடு ஏற்படுத்த வேணும். அந்த தன்மையில் தான், பொய்யும் வழுவும் புகுந்தபின்னர் அய்யர் யாத்தனர் கரணங்கள். வாழ்க்கையில் இந்த மாதிரியான ஒழுக்கக்கேடு இருக்கிறது என்று கருதியதினாலே அது ஏற்படாமலிருக்க சில கரணங்கள், சில முறைகளை ஏற்பாடு பண்ணினான் என்று இருக்குது.
ஆகவே இந்த புருஷன், பெண்டாட்டி வாழ்வுக்கு அவன் ஏற்பாடு செய்த அந்தக் கருத்துதான்.
இது கூட நமக்கு இல்லே? யாருக்கு? பார்ப்பனரல்லாத மக்களாகிய அல்லது சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நமக்கு ஒரு பெண்ணோடு வாழுகிற உரிமை இல்லவே இல்லை. அந்த ஆதாரங்களின் படி. இதுக்கும் மனுதர்ம சாஸ்திரம்தான். பழசை எடுத்துப் பாருங்க தெரியும். புதிய மனுதர்ம சாஸ்திரத்தில் பழசை எல்லாம் மாத்திட்டான். சூத்திரனுக்குப்
பொண்டாட்டி இல்லே சதிபதி சம்பந்தம் கிடையாது அப்படீன்னு அதிலே எழுதியிருக்குது. அதனாலே அது
(தொல்காப்பியம்)
நமக்காக ஏற்படுத்தினதல்ல. அவுங்க (பாப்பான்) சவுகரியத்துக்காக,
ஏற்படுத்தி அது அவுகளுக்குத் தான்உரிமைன்னு எழுதி வைச்சிகிட்டு இருந்தான்.
நம்மவர் அதில் பிரவேசிக்க உரிமையில்லை. இஷ்டப்பட்டால் அவளுக்கு ஆசைப் பட்டவனோடு இருக்கிறது முறை இல்லை. கலியாணமானா அது (பொம்பளை)
நமதுசொத்துதான்.
நம்ம இஷ்டம் போல பண்ணிக்கலாம். எவனுக்கு வேணும்னாலும் விட்டுக் கொடுக்கலாம்.
எவனுக்கு வேணுமானாலும்அவளை வாடகைக்கு அனுப்பலாம். எந்த முறையிலும் அவளைப் பயன்படுத்திக்கலாம்,
என்கிற முறையெல்லாம் நமக்குக் கிடையாது. அவனுங்க (பாப்பானின்) கலியாணமுறையிலே உண்டு. நமக்கு இல்லே என்பதற்கு அந்தத்தொல்காப்பியத்திலே இருக்குது ஆதாரம். என்ன ஆதாரம்? மேல்ஜாதிக்காரனுக்காக ஏற்பட்ட இந்த முறை, கீழ்ஜாதிக்காரனை புகுத்தின காலமும் உண்டு. அதிலேயே இருக்குது. மேலோர் மூவர்க்கும்,
புணர்த்த கரணங்கள், கீழோர்க்கு ஆக்கிய கரணங்கள் உண்டே. மேலோர்ன்னா அவன் (பாப்பான்). கீழோர்ன்னா நாம (சூத்திரன்).
இந்த மேலோருக்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முறைகளை கீழோர்க்கு புகுத்தின காலமும் உண்டுன்னான். அப்ப புடுச்சிதான் நமக்குச் சனியன் வந்தது. நாமும் அதை நாகரிகம் என நினைச்சோம்.நம்ம பெண்கள் இருந்த நிலைமையும் இப்படி. ஏதாவது நமக்கு ஒரு பாதுகாப்பு வந்தால் தேவலைன்னு,
அவுகளும் இது பற்றிச் சிந்திக்க ஆரம்பிச்சாங்க.
வாய்ப்பு வந்திச்சி. நிறையா நிபந்தனைகளைப்போட்டு,
இதுதான் கல்யாணம்ன்னான். அதுக்கு புரியாத சடங்குகளையும் முட்டாள்தனமான மூட நம்பிக்கைக்கு கருத்துக்களையும் புகவைச்சி
, திருமணம்
- கல்யாணம் என என்னமோ பேரு வைச்சான்.
அது என்னா? மனுதர்மமாகிய ஜாதி முறையை பழக்கத்திற்குக் கொண்டு வந்தது. எப்படி மனுதர்மத்திலே பாப்பான்னு ஒரு ஜாதி, பறையன்னு ஒரு ஜாதி, அவனை இவன் தொடக்கூடாது
- இவனை அவன் பார்க்கக்கூடாது என்றெல்லாம் நிபந்தனை எப்படியோ அப்படி வாழ்க்கையிலே ஆம்பளையையும்,
பொம்பளையையும் ஆம்பளை எல்லாம் மேல்ஜாதி. பொம்பளையெல்லாம் கீழ்ஜாதி.
அவனுக்கு
(அவள்)
சொந்தப்பொருளு.
அவன் என்ன வேணுமானாலும் செய்துக்கலாம். அவனைத் தவிர வேறு எவனையும் பார்க்கக்கூடாது. கடவுளைக் கூட நினைக்கக்கூடாது . இப்படி ஏற்படுத்திக்கிட்டான்.
வள்ளுவனை நீங்கள் யோக்கியன்னு நினைக்காதீங்க (சிரிப்பு) அவன் ஒரு காட்டுமிராண்டி காலத்துக்காரன். அவன் என்ன பண்ணினான்? ஆம்பளைக்கு அடிமையாய் இருக்க வேண்டியது தான் பொம்பளையினுடைய கற்புன்னுட்டான். இதையெல்லாம் சாஸ்திரங்களிலும் பார்க்கலாம், புராணங்களிலும் பார்க்கலாம்.
கடவுளும் அப்படிதான் நடக்குதுன்னு ஆரம்பிச்சான். கடவுள் பொண்டாட்டியும் அப்படிதான் இருந்ததுன்னான்.
என்னென்னமோ பேசினான் பாப்பான்.
பெண்களுக்கு இப்படி ஒரு நிபந்தனைகளை ஒட்டவைச்சி ஆணுக்குப் பெண் அடிமை. அந்த அடிமையின் அறிகுறி தான் இந்த கல்யாண முறை என்பது. இது மாதிரி, உலகப் பெண்களையே ஆண்கள் அடிமையாக்கிட்டான்.
என்னைக்கோ கொஞ்ச நஞ்சம் வாழ்வு இருந்தாலும் நம்முடைய நாட்டைப் பொறுத்த வரையிலும் ஆண் பெண் என்பதில், ஆண் எஜமான், அந்த பெண்களை எப்படி வேணுமானாலும் பண்ணிக்கலாம்?என்ன வேணும்னாலும் பண்ணலாம்? எப்படி வேணுமானாலும் நீக்கலாம்.
இந்த அடிமை எஜமான் முறையை நீக்க முடியாது. சோறு போட்டாலும்,
சரி,
கஞ்சி ஊத்தினாலும் சரி அவன் கூடவே சேர்ந்துகிட்டு ஆடணும்.
அவ்வளவு நிர்ப்பந்தங்களைப் போட்டு,
அந்த வாழ்க்கையை அப்பெண்களை அடிமைப்படுத்திட்டான். அது பழக்கத்திலே வந்தது. பெண்களுக்கு அது ரொம்ப பெருமையாய்ப் போச்சி. நாம கட்டுப்பட்டுகிட்டு அவன்கிட்டே உதை தின்னுகிட்டு,
அவன் சொன்னாப்பிலே கேட்டுகிட்டு,
அவனுக்கு கால் கையை அமுத்திகிட்டு, ஊரெல்லாம் பார்த்து நம்மை பதிவிரதை என சொல்லும் படியாக நடந்துகிட்டு இருக்கணும்ன்னு அவுங்களுக்கும் வந்திட்டுது. அது நாளுக்கு நாள் - நாளுக்கு நாள் - பெரிய ஒரு சீர்திருத்தம் மாதிரி - அது ஓர் அடிமைத்தன்மையாகவே ஆயிட்டுது.
அதுக்காக ஆதாரங்களை எல்லாம் எடுத்துக் காட்டினான்.
அப்படித்தான் இருக்கணும் இப்படித்தான் இருக்கணும்ன்னான்.
இப்ப என்னடா உலகத்திலேன்னா,
ஒருபொம்பளைன்னா ஒரு ஆம்பளைக்கு அடிமையாய்த் தான் இருக்கணும்? பொம்பளையினுடைய உயர்ந்த குணம் என்னான்னா,
எந்த அளவுக்கு அந்த ஆம்பளைகிட்டே - அவனுக்கு எந்த அளவுக்கு,அவள் திருப்தி பண்றாளோ,அந்த அளவுக்கு அவன் பெருமையாய் அவளைப் பதிவிரதை என்கிறது. இதையெல்லாம் போட்டு பெண்களைத் தலையெடுக்காமலே பண்ணிட்டாங்க. இப்ப சாதாரணமா,
எல்லா ஜீவன்களைப் போல ஆடு. அந்த ஆட்டுக்கு வேலை என்னா? ஆடு குட்டி போட வேண்டியது. அந்த குட்டி ஆடு பெரியதாகி,
அது குட்டி போட வேண்டியது. அதுக்கு அப்புறம் ஒவ்வொருத்தனும் அந்த ஆட்டை திங்கிறது.
ஆடுன்னா அதுக்கு அது தானே முடிவு. வேறு என்னா? ஆட்டைக் கொண்டு வேற என்னா பண்றாங்க? அதுபோல பெண்ணுன்னா என்னா? ஒருத்தனுக்கு அடிமையாய் இருக்க வேண்டியது.
அது மாதிரி சுதந்தரம் ஆணுக்கு எப்போதுமே இருந்து வருகின்றது.
உலகத்திலே எத்தனையோ மகான்கள் தோன்றினான். மகாத்மாக்கள் தோன்றினானுங்க.தெய்வீக புருஷன்எல்லாம் தோன்றினான்.
எந்தப் பயலும் இந்த பொம்பளையோட கஷ்டத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லை. எடுத்தவனெல்லாம் அவளை மேலும் நீ அடிமையாய் இரு, அவன் காலைக் கும்பிடு, அவன் காலை பூ போட்டுக் கழுவு. கடவுளைக் கும்பிடாதே. புருஷனையே கடவுளாக நினைச்சிகிட்டுக் கும்பிடு.
அவனுக்குப்பின் தூங்கு. அவன் எழுந்திருக்குமுன் நீ எழுந்திருச்சிக்கோ.
அப்ப தர்ம பத்தினி. இந்த மாதிரி எவ்வளவு அடிமை வளர்ச்சி பெறணுமோ அந்தப் பெண்னை அடிமைப்படுத்துகிறதிலே.
அந்த மாதிரியெல்லாம் பெண்களை அடிமைப்படுத்திட்டான். அதனுடைய பலன்என்னாச்சி? பொம்பளை அநாமதேயமாய்ப் போச்சி யாராய் இருந்தாலும். எந்தவிதமான மரியாதையுமில்லே அவர்களுக்கு உலகத்திலே.
அப்பெண்களுடையஆசாபாசமெல்லாம்சிங்காரிச்சிக்கணும்.
எப்பவும் கையிலே ஒரு கண்ணாடியும், சீப்பும் இருக்க வேணும். பவுடர் இருக்க வேணும். நகையிருக்கணும். புது புது வகை சீலை துணியெல்லாம் கட்டவேணும்.
புருஷன் எத்தனைக்கு எத்தனையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறானோ அத்தனைக்கு அத்தனை புருஷனுக்கு அன்பைக் காட்டி அடிமையாக இருக்கணும். அந்த அளவிலேதான் பொண்டுகளை திருப்பிட்டானே தவிர ஆம்பளையைப் போல நமக்கும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமே இவுங்களுக்குத் தோனாமல் பண்ணிட்டான்.
தோன்றினால் அது பாவம்ன்னுட்டான்.
அவுகளைத் திருத்தறதுக்கு ஒருகூட்டமோ,
ஒரு இயக்கமோ, ஒருமனிதனோ தோன்றினான் என்றால் இந்தப் பெண்களுடைய கஷ்டத்தைத் தீர்க்க நம்ம இயக்கம் ஒண்ணுதான்.
இந்தியாவிலே தோன்றினது நாம்தான். இந்தியாவிலேயே முன்னே யாராவது இருக்கிறாங்கன்னு சொன்னா ரொம்ப நன்றியறிதலோடு திருத்திக்குவேன். இந்தியாவிலே தோனுச்சீன்னா பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கிறது நாட்டைக் கெடுக்கிறதுன்னு அர்த்தம் பண்ணிக்கிட்டான். அவுகளை அடக்கி ஆளாது போனால் நாட்டுக்குக் கேடுன்னு பண்ணிட்டான்.
அப்புறம் எப்படி அவுக நம்மைப் பற்றி சிந்திப்பான். எதுத்துகிட்டான்
அவுகளை.நிறையாகதைஎழுதிட்டான். பொண்டாட்டியை வித்தான். பொண்டாட்டியை வைத்து சூதாடினான். பொண்டாட்டியை விட்டுட்டு அவன்கிட்டே, இவன் மோட்சத்துக்குப் போனான் - பொண்டாட்டிகிட்டே அரிசி பருப்பு கொடுத்து சோறு போட்டு மோட்சத்துக்கு போனான் - இந்த மாதிரி அயோக்கித்தனமான கருத்துக்கள் எல்லாம் மதத்தோட கடவுள் தத்துவத்தையும் அதிலே புகுத்தி அதை ரொம்ப நிலைநிறுத்திட்டான்.
பொம்பளைங்களே பார்த்து ஆசைப்படும்படியாக செய்திட்டான். நமக்கு மிக உயர்ந்த அனுபவத்தோடு இக்காரியங்களை நாம செய்கிறோம் என்பது இல்லாவிட்டாலும், கூட பொது உணர்ச்சியாய் இருக்கிற ஒருத்தனுக்கு என்னடா இந்த உலகத்திலே,
இந்தியாவிலே
50 கோடி ஜனங்கள் (1968இல்) இருக்கிறாங்கன்னா
25 கோடி பேர் பெண்களாச்சே?
இந்த
25 கோடி பேரும் பிள்ளை பெக்கறதுக்கும், புருஷனுக்குச் சோறாக்கிப் போடறதுக்கும், கால் - கை - புடிச்சிகிறதுக்குமாகவா இருக்கிறது?
அதனாலே நாட்டுக்கு எவ்வளவு கேடு? நம்மைப் போல அது ஒரு ஜீவன் . நமக்கு இருக்கிற உரிமையெல்லாம் எவ்வளவு? நாம செய்கிற காரியம் எவ்வளவு? நமக்கு இருக்கிற விளம்பரம் பெருமை பிரக்யாதியெல்லாம் எவ்வளவு?
இவ்வளவுக்கும் நாம அருகதையாயிருக்க.
பொம்பளைஎன்னடான்னா?
வீட்டுக்குள்ளேயே இருன்னுட்டான்.அயோக்கியப்பசங்க, கொலைகாரப்பசங்க பெண்களுக்கு குணம் வகுத்தவன். உலகத்திலேயே அம்மாதிரி கொலைகாரப்பசங்க கிடையாது. என்னடா பெண்களுக்கு யோக்கியதைன்னா?
பெண்களுக்கு அச்சம்,
மடம்,
நாணம்,
பயிர்ப்பு,
இவைகளுக்கு என்னா அர்த்தம்? பெண்கள் ஆம்பளைங்களைக் கண்டால் ஒளிஞ்சிக்கணும். முன்னாலே வரக்கூடாது.
பெண்கள் என்றால் மடச்சிறுக்கியாக இருக்கணும். புத்தியே இல்லாதவளாக இருக்கணும்? கொஞ்சம்புத்தி இருந்தால்அவள் அடங்காப்பிடாரியாக இருப்பாள்,
அவளை ஒழிச்சிக் கட்டவேணும்.
ஆகவே ஒரு பெண்ணு மனுஷனை கண்டால் நடுங்கணும் ஒளியணும். புத்தியே இல்லாத மடச்சிறுக்கியாக இருக்கணும். அப்புறம் ஒரு சிறந்த குணம் - நாணம்வெட்கப்படணும்.
மூஞ்சியை மூடிக்கணும். சந்திலே பார்க்கணும்.
நேரிலே நின்னு பார்க்கக் கூடாது. கதவு சந்திலே. ஜன்னல் பொந்திலே பார்க்கணும்.
தலை குனிந்து பார்க்கணும்.
வெட்கப் படணும்; பொம்பளைன்னா இதையெல்லாம் விட கொடுமையாய்ச் சொன்னான். பயிர்ப்பு பயிர்ப்புன்னா பார்க்கிறதுக்கு விகாரமாய் இருக்கணும் பொம்பளை. அவுக சிங்காரம் பண்ணிக்குவாங்க.
ஆனால் அவுகளை வைச்ச முறையிலே பெண்கள் பார்க்க விகாரமாய் இருக்கணும். பார்க்க அசிங்கமாயிருக்கணும்.
பெண்கள் கவர்ச்சியாய் இருக்கக்கூடாது.
எதுக்காக இந்த முறையெல்லாம் பெண்களுக்காகப் போட வேணும்? அவுகளுக்கு ஓர் அடிமைக்கு என்ன நிபந்தனையோ, அதைதான் வைச்சான். நிறையா பெண்களுக்குன்னு.
நேற்று கூட திருச்சியிலே சில பேர் தகராறுக்குக் கூட வந்தாங்க. தொல்காப்பியத்தை வள்ளுவனை அப்படிச்சொன்னே இப்படிச் சொன்னேன்னு என்னிடம் கேட்டாங்க. வள்ளுவன் சொன்னான் பதிவிரதா தன்மையெல்லாம் பொம்பளைக்குத்தான் சொன்னானே தவிர, ஆம்பளையையும் பதிவிரதையாக இருக்கணும்னு ஒரு வார்த்தை கூடசொல்லலே பொண்டாட்டி போல என்று. பொண்டாட்டி சொன்னபடி கேட்கணும்னோ? அவள் சொன்னபடி ஆண்கள் நடக்கவேணும்னோ?
ஒரு வார்த்தை கூட அவன் சொல்லலே? நான் இப்படி பேசிகிட்டு இருக்கிற போது ஒரு நண்பர் மன்னிக்க வேணும் அப்படீன்னு,
சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர் ஆம்பளைக்கும் கூட அப்படீன்னார்.
எங்கே இருக்கிறது சொல்லுங்கன்னேன் நான்? அவரு சொன்னாரு பிறன் மனை புகாதே இன்னொருத்தன் பெண்டாட்டியை ஆசைப்படாதே.
அவளைக் கெடுக்காதே-ஆம்பளை இருக்கவேணும் என அவர் சொன்னார். இன்னொருத்தன் பொண்டாட்டியைத்தான் சொன்னானே தவிர மற்றும் பொம்பளைங்களைப் பற்றிச் சொல்லவே இல்லை வள்ளுவன். பொம்பளைன்னா அந்நியன்பொம்பளையைத்தொடக்கூடாது.நெருங்க கூடாதுன்னு அவன் (வள்ளுவன்)
சொல்லலே.
பிறன் மனை புகா இன்னொருத்தன் பொண்டாட்டியைன்னா அதுக்கு என்னா அர்த்தம்?
இன்னொருத்தன் பொண்டாட்டின்னா அது அவன் சொத்துன்னு பேரு. நீ அவளை நினைச்சியானால், திருட்டுன்னு ஆவே.
அந்த மாதிரிதான் சொன்னானே தவிர, ஒரு ஆண், பெண்ணுக்கு எவ்வளவு நிர்ப்பந்தம் நிபந்தனை சொல்றானோ அது மாதிரி ஒரு ஆணுக்கு அவன் சொல்லவே இல்லை. அவனாலே சொல்லமுடியலே.
பொம்பளைபேச்சைக் கேட்காதே. எவன் ஒருத்தன் ஒரு பொம்பளைக்கு அடிமையாய் இருக்கிறானோ,
அவன் மனுஷனே அல்ல. உலகத்திற்கு அவன் பயன்படமாட்டான்.அவள் பொம்பளைதான் அவள்பேச்சைக் கேட்காதேன்னுட்டான்.கேட்பவன் முட்டாள் பயல்ன்னுட்டான்.
ஏன்னா அவ்வளவு பூத வைச்சிட்டான். பறையன் நம்மைக்கண்டால் சாமின்னு கூப்பிட்டானல்ல முன்பு? நான் பறப்பிள்ளை சாமி கொஞ்சம் ஒத்திக்கோன்னு சொன்னானல்லவா?
அந்த அளவுக்குப் பெண்களைக் கீழ்ப்படியும்படியான தன்மையிலே,
ஏற்படுத்தி அவுகளுக்குள்ளே பூதவைச்சிட்டான்.
அதை ஒழிக்கவேணும். அதுக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் சரி. அதனாலே யார் என்ன செஞ்சாலும் சரி. அவுக (பெண்கள்) சுதந்தரம் பெறவேணும் என்கிற ஒரு முனைப்பு முயற்சியோட நம்ம இயக்கம்தான் பாடுபட்டது. நான் இதைப் பல இடங்களிலே சொன்னேன். ஏதோ நல்ல வாய்ப்பா ஏதோ ஒரு நல்ல மனித தர்மம் உடையவன் ஆட்சி வந்தால் - இந்தக் கல்யாணம் என்கிறது கிரிமினல்
(தண்டனைக்குரியது)
என்று சொல்லவேணும். அதுக்குத் தடைவிதித்து சட்டம் போடவேணும்.
எங்காவது கல்யாணம் நடந்தால் ஒரு பக்கம் திருட்டைப் பிடிக்கிறது எப்படியோ அது போலதான் பிடிக்கவேணும்.
இந்த காரியத்தினாலே யாருக்கும் லாபமில்லே. உலகம் இதனாலே வளரலே. ஆம்பளைக்கும் தொல்லை. பொம்பளைக்கும் தொல்லை. ஆம்பளைக்கு என்ன வேலை? அவன் பொண்டாட்டியை அடக்கிறது. அது அப்படியாகாமே?
இப்படி ஆகாமே எங்கேயும் போயிடாமே பார்த்துக்கிறது.
நினைச்சிகிட்டா குட்டி போடறது. அப்புறம் அதுக்கு சோறு வேணும். கஞ்சி வேணும், அதுக்கு படிப்பு வேணும். அதுக்கு உடை வேணும். வெங்காயம் வேணும்கிற அதே வேலையாய் இருக்கிறது.
இந்த மேரேஜ் சிஸ்டம் (Marriage System) இந்தக் கல்யாண வாழ்க்கை புருஷன் பொண்டாட்டியாக ஒரு குடும்பமாக வாழ்வது என்கிற ஒரு வாழ்வு இல்லாட்டா மனுஷன் எல்லாம்
100 வருஷத்துக்கு மேலேயே இருப்பான்.
அந்த குடும்ப வாழ்க்கை என்பது அவனுக்கு அவனுடைய வாழ்க்கையில் இருக்கிற முக்கியமான பாகத்திலே எல்லாம் அது போய் புகுந்துக்குது. அதைக் காப்பாத்துகிறதுதானே அவனுடைய முக்கியமான வேலை. மனுஷனுக்கு என்னடா வேலை? பொண்டாட்டிகட்றவரைக்கும் அவன் தனியாளு. கட்டியாச்சின்னா அப்புறம் அதைக் காப்பாத்தறது.
பிள்ளை பிறந்தால் அப்புறம் அதைக் காப்பாத்தறது.
இது அரை டஜன் (6) ஒரு டஜன் (12) ஆச்சின்னா என்னமாவது பண்ணியாவது அதுகளைக் காப்பாத்த வேணும். அது தான் வேலை அவனுக்கு.
பெரும்பாலும் மனித சமுதாயத்திலே ஒழுக்கக் கேடு ஏண்டா வந்ததுட்டுன்னா எல்லாத்துக்கும் ஏண்டாவருதுன்னா அவன் அரைடஜன்
(6) முக்காடஜன் (9) குழந்தைகளைப்பெத்துகிட்டாஒழுக்கமா இருந்தால் என்னா முடியும் அவனுக்கு? என்னா நாட்டிலே பிள்ளைகளை கணக்குப் பார்த்துக் கொடுக்கிறானா எவனாவது? இத்தனை பிள்ளை பெத்தவனுக்கு மாசம் இவ்வளவு பணம் கொடுக்கிறேன்கிறானா? 50 ரூபாய் சம்பளம்கிறான். ஒண்ணுமில்லாதவனுக்கு 50ரூபாய்.
முக்கா டஜன் பிள்ளை பெற்றவனுக்கும் 50ரூபாய். ஒண்ணுமில்லாதவன் எப்படி இருப்பான்?
முக்கால் டஜன் பெத்தவன் எப்படி இருப்பான்?
(சிரிப்பு)
அவனுக்கு மற்றதைப் பற்றிக் கவலை இல்லை. குழந்தைகள் எப்படி காப்பாத்துகிறதுங்கிறது தானே வரும்?
இந்த தொல்லை ஏன் மனுஷனுக்கு வரவேணும்? மனுஷனைப் போல உலகத்திலே ஆன முதல் புழுவு வரைக்கும் இருக்குது எந்த அளவுக்கு அவைகள் வாழுது? அதுகளே ரொம்பகஷ்டப்படுது.
மனுஷன் எப்படி வாழ்வான்? அனாவசியமான ஒரு (குடும்ப) தொல்லை மனுஷனுக்கு இருப்பதினாலே என்னா லாபம்? இப்பவே ஜனங்கள் பிள்ளையைப் பெற்றகேட்டை உணர்ந்து, பெக்கக்கூடாதுன்னு பிரச்சாரம் பண்றாங்க அரசாங்கத்திலே.
பெக்கறது இல்லைன்னு ஏற்பாடு செய்து கிறாங்க. என்னா அர்த்தம்? நிறையா பிள்ளை குட்டிகள் ஏற்படுகிறது நாட்டுக்குக் கேடுங்கிறாங்க.
நாட்டுக்கே கேடாக இருக்கிறபோது,
அது குடும்பத்திற்கு எவ்வளவு கேடாக இருக்கும்?
எதுக்குச் சொல்றேன்? அதனுடைய கஷ்டத்தை தொல்லையை அதிகப்படுத்துகிறதினாலே,
வாழ்க்கையில் இன்பம் குறைந்து தொல்லை கவலை அதிகமாகிறது. மனிதனுடைய லட்சியம் என்னான்னா? தன் உயிரைக் காப்பாத்திக்கிறதுதான். அதுக்காக அவன் தேசபக்தனாகிறது.
அவன் ஜெயிலுக்குப் போகிறது. பிரபலமாகிறது மற்றும் என்னென்னமோ பண்றது? அப்புறம் எதுக்குன்னா?
அவன் பொண்டாட்டி பிள்ளையைக் காப்பாத்துகிறது. அந்த மாதிரியாக அவர்கள் வாழ்வு நிகழாதபடி நாம் தவிர்க்க வேணும்.
நாம மக்களை அதற்கு ஏற்ப பக்குவப்படுத்த வேண்டும். முதலிலே பொம்பளைங்க பக்குவமாகணும். அதில்லாமல் ஆம்பளையா பார்த்து பொம்பளைக்கு சுதந்திரம் கொடுக்கிறான்.
ஒரு வகை பண்றான், என்றால் அது ஏமாத்து வேலை அது அந்த ஆட்டுக்காக ஒரு ஓணாய் பாடுபடுகிறாப்பிலே. ஆனால் அம்மாதிரி பாடுபட ஆரம்பிச்சா,
நிபந்தனையேவைச்சிக்க கூடாது, என்ன ஆனாலும் சரி. மனிதசமுதாயம் சுதந்திரமாக இருக்க வேணும். அதுதான்
அவன் அப்படிச்சொன்னாலும் சரி.
இவன் இப்படிச் சொன்னாலும் சரி. இன்னொருத்தன் சொன்னாலும் சரி. நமக்குக் கவலை இல்லை. அந்த மாதிரி துணிச்சலான உணர்ச்சி அப்படி வரணும். இப்ப சாதாரண சில பொம்பளைங்களுக்கு என்னா கஷ்டமிருக்குதுன்னா? சாதாரணமாக யாராவது என்னைக் காப்பாத்த ஒரு ஆளு இல்லாட்டா என் கதி என்னாவதுன்னு கேக்கிறாள்?
தெருவிலே தனியே போக முடியாதுங்கிறாள். இன்றும் கஷ்டப்படறாள்.
கஞ்சி ஊத்த ஒரு ஆளு வேண்டாமாங்கிறாள்.
இ
வள் தான் அவனுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்தறாள். என்னைக் காப்பாத்திட ஓர் ஆள் எனக்குன்னு வேண்டாமாங்கிறாள்? இந்த மாதிரி வந்திட்டுது பெண்களுடைய மனப்பான்மை. கணவனைப் போலத்தான் இருக்கிறாள். ஒரு விதமான குறையுமில்லே. காரணம் என்னா?
அவுங்களை வெளியே விடாமே, அவுங்களுக்கு உலக அறிவை ஊட்டாமே, மற்ற மக்களோடு பழகும்படியான வாய்ப்பே இல்லாமே, அவுங்க வீட்டிலேயே அடங்கிக்கிடந்ததினாலே, தன் புருஷனைத் தவிர வேறுயாருகிட்டே அந்தம்மா பாதுகாப்பு எதிர்பார்க்க முடியும்? ஆனதினாலே, அவுக திருந்தணும்.
அவுங்க கல்யாணம் வேண்டாம்ன்னு இப்ப சொல்ல வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் போனால் அவுங்களே தாராளமாய்ச் சொல்லிவிடுவாங்க.
பொம்பளைன்னா ஒரு ஆம்பளைதான் கஞ்சி ஊத்தணும், அவன் தான் காப்பாத்தணும் அப்படீன்னு தேர்ந்தெடுத்துக்க கூடாது. குறைஞ்ச அளவு பெண்கள் படிக்கணும்.
எல்லா பொம்பளைகளும் கட்டாயம் படிக்கணும். ஆம்பளைங்க படிச்சாலும் சரி. படிக்காவிட்டாலும் சரி.
அவன் கொழுக்கட்டை ஆனாலும் சரி. பெண்ணுன்னா படிச்சாகணும்.
பெண்கள் எந்த அளவுக்குப் படிக்கணும்? இன்னொருத்தன் கஞ்சி ஊத்தவேணுமே என்கிற அவசியமில்லாத அளவுக்குத் தன் காலிலேயே தான்நிற்கும்படியாய்பெண்கள் சம்பாதிச்சுத் தன் வயிற்றைக் கழுவும் படியான அளவுக்கு அதுகிட்டே படிப்பு, தொழிலு இது இரண்டும் வேணும்.
அதில்லாது போனால் பொண்ணு அடிமையாய்த்தான் இருந்தாகணும்.
அவுங்களை அடிமையாய் வைக்கத்தான் பொம்பளையைப் படிக்கக்கூடாதுன்னான்.
இப்ப அப்படியில்லே? பெண்கள் நம்ம ஜனங்கள் எவ்வளவு சீர்திருத்தவாதியாக இருந்தாலும்,
என்ன படிச்சிருக்குது உன் பிள்ளைன்னா 8ஆவது படிக்குதுன்னான்.
ஏண்டா அப்படீன்னா அது சமஞ்சிடுச்சிங்கிறான்.ஆனதினாலே அதுக்கு மேலேபடிக்க அனுப்ப முடியலே. அதுக்குஅந்த ஜாதியிலே மாப்பிள்ளை கொண்டு வாங்கிறான்.
என்ன நியாயம்? சமைஞ்ச பொண்ணு வெளியிலே போனால் தூக்கிட்டுப் போயிடுவானா?
சமைஞ்ச பொண்ணை ஒருத்தன் பார்த்தால் அவனோடு போயிடுவாளா? எதற்கும் முட்டாள்தனம்.
அது பெரிய மனுஷியாயிடுச்சி அதை எப்படி வெளியிலே அனுப்புகிறதுங்கிறான்.
படிக்க வைக்கணும் பெண்களை. அதுக்குத் துணிச்சலான எண்ணம் வர்றவரைக்கும் அதைக் கட்டிக் கொடுக்கக்கூடாது.
அதை சமைஞ்சதும் கட்டிக் கொடுத்தால் வெளியே போகப்பயப்படுது.
பெண்களை
25 வயசு வரைக்கும் படிப்பும் தொழிலும் பெற ஏற்பாடு செய்யணும்.
சுதந்திரமா அதை வளர்த்து உலக ஞானமெல்லாம் பெறும்படி அவங்களை செய்துவிட்டால், அவன் எவனாயிருந்தாலும் அந்தப் பொண்ணு யாருன்னு கேட்பானல்ல?
ஒரு அளவுக்குமேலே போனான்னா இப்பபெண்கள் அப்படி கேட்க முடியலியே.
சின்ன பிள்ளையாக இருக்கிறபோதே,
கட்டிக் கொடுத்திட்டா அவன் புருஷன் சொல்றதைக் கேட்டுகிட்டுதான் இருக்கணும்.
அதனாலே பெண்கள் படிச்சிட்டு
20 வயசு, 22 வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க வேணும்கிற எண்ணம் கூடாது. படிப்போடு ஒரு தொழிலும் வேணும்னு நினைச்சா ஏதோ 100,
150 ரூபாய் பெண்கள் சம்பாதிக்கலாம்.
பெண்கள் உத்தியோகத்துக்கும் போகலாம்.
அதுக்கு அந்தஎண்ணமெல்லாம் இருக்கணும்.
அவ்வளவு மாறுதல் அடைஞ்சாதான் ஆணும் பெண்ணும் நம்ம நாட்டிலே சரி சமம்ன்னு சொல்ல முடியும்?
(கைதட்டல்)
இல்லாட்டா இதையே பழய வேலையைப் பண்ணிடுவான்.
ஆகையினால்அருமைத் தோழர்களே! இந்த முயற்சியானது
(வாழ்க்கை ஒப்பந்தம்) முதலாவது இது பெண்களுடைய சுதந்திரத்துக்காக.
அவர்களின் அடிமைத் தன்மையும் ஒழிக்கவேணும் என்பதற்காக.
இரண்டாவது இந்தக் காரியத்தை
(சுயமரியாதைத் திருமணம்) ஏன் ஆரம்பிச்சோம்னா இந்தக் காரியங்களை அடிப்படையாக வைச்சிதான்,
மனுஷனை முட்டாளாக்குகிறோம். இந்த சடங்குகள் பழக்கம் என்கிற பேரு வைச்சி நடத்துகின்ற காரியங்களில் புகுத்தப்பட்டக் கருத்துதான் மனுஷன் மூடனாவதற்கு அது பயன்படுகிறது.
எப்படி பயன்படுகிறது? ஒரு பொண்னை இழுத்துகிட்டு போயி கடவுள் கிட்டே நிறுத்துறது. பகவானே இப்படி வைச்சிகிட்டு இருக்கிறானே என்பான். பிள்ளையை இவனுக்கு பகவான் பெத்து கொடுக்கிறதில்லே. காரியம்னா பகவான் பேரைச் சொல்லி கிட்டு இருக்க வேணும், பொருத்தம் பார்க்கிறது.
ஜாதகத்தை தான் பாப்பான். எங்க வீட்டிலே ஒரு பொண்ணு இருக்குதுங்க உங்க பையனுக்குக் கட்டிக்கிறீயான்னு கேட்டா அந்த வீட்டுகாரனை பொண்ணு எப்படியிருக்குதுன்னு கேட்க மாட்டேன். கேட்டா அது அநாகரிகம்.
இவன் என்னா கேட்பான் ஜாதகம் இருக்கான்னு கேட்பான்? (சிரிப்பு) எவ்வளவு முட்டாளாய் இருக்கணும் இந்தப் பசங்க. மனுஷனைப் பார்க்காமே,
என்னமோ பிறந்த நாளை அது எல்லாம் ஜாதகத்திலுள்ள சடங்கே தவிர பிறந்த நாள் நேரத்தை சரியானது என்பான். வசதியிருக்குதான்னு கேட்கலாம்.
அவன் அதை விட்டு விட்டு ஜாதகத்தைப் பார்க்கிறான் அவன் எவ்வளவு பெரிய முட்டாளுன்னு பாருங்க. அத்தோடில்லேபொருத்தம்கிறான்.
என்னா பொருத்தம்? மாப்பிள்ளைக்காரனும் பொண்ணைப் பார்க்கலே. பொண் வீட்டுக்காரனும் மாப்பிள்ளையைப் பார்க்கலே.
பொண்ணும் மாப்பிள்ளையை பார்க்கலே.
மாப்பிள்ளையும் பொண்ணைப் பார்க்கலே,
எந்தப் பயல் பொருத்தம் பார்க்கிறானோ, மொன்னையன் அந்தப் பயலும் பொண்னைப்பார்க்கலே.
ஆனால் அவன் பொருத்தம் சொல்றான். என்னா அர்த்தம்? இந்த சாக்கினாலே ஒரு முட்டாள்தனத்தை புகுத்தப்பட்டது.
அவ்வளவு தான் அதற்குப் பயன். அதோடு விடறானா. பொருத்தம்,
ஜாதகம்,
அப்புறம் நல்லநேரம், முகூர்த்தம், சகுனம், எவ்வளவு பார்க்கிறான். அதுக்கு மேலே அவுக என்ன ஜாதி,நம்ம ஜாதின்னாலும் அது எத்தனையாவது நம்பர் ஜாதியிலே. முதலாவது ஜாதியா மூணாவது ஜாதியா? தெலுங்கு ஜாதியா நாயுடு ஜாதியா? அதுபடிச்சிருக்குதா?
அது அழகாய் இருக்குதா?
என்று அந்தப் பேச்சே கிடையாது. எனக்குத் தெரியும். ஜாதகம் பொருத்தம்தான் முதலாவது பார்ப்பது அந்த மாதிரியாக பயன் படுத்துகிறாங்க.
மற்றும் நடக்கிறபோது ஒரு காரணமும் இல்லை. அரசானி பானைகளை அடுக்கிறது.
குத்துவிளக்கு,
ஓம குண்டம், அரசமரம், குடம், நெருப்பு, நிலா - பார், எல்லாம் எதுக்குடான்னா?
சடங்கு
- சாங்கியம்,
பெரியவங்க பண்ணினது. இது தான் எங்கஜாதி வழக்கம்.அவன் எவ்வளவு கொண்டுவந்துபுகுத்தி பழய முறையை காப்பாத்தறான். இப்படி எல்லாம் அந்த காரியத்துக்கு பயன்படுகிறது. நாம ஜாதிஇருக்கக்கூடாது ஆண்பெண் சமத்துவமாயிருக்கவேணும்.
ஆணுக்கு பெண்தகுதியாயும் பெண்ணுக்கு ஆண் தகுதியாய் இருக்க வேணும். நாள்,
நேரம்,
கிழமை பார்க்கக்கூடாதுன்னு நாம பேசுகிறோம். அவன் என்னான்னா அம்மிவைச்சிக்கணும், சட்டிப்பானைகள் வைச்சிக்கவேணும், விளக்கு வைக்கணும்.
இது எவ்வளவு முட்டாள் தனத்தைக் காட்டுது பாருங்க.
இது மனுஷனுக்குத் தேவையா? அது பயன்படுதா? எவன் பார்க்கிறான்.
இப்படி எல்லாம் பார்த்து செய்கிறாங்களே இந்த நிகழ்ச்சி பயன்படுதா?
அப்படீன்னு யாரு பார்க்கறான்?
சீதை ராமனுக்கு பொருத்தம்,
நேரம்,
காலம் பார்த்துதான் கல்யாணம் பண்ணினாங்க என்னா ஆச்சி? ராமனும் சீதையும் காட்டுக்கு போனாங்க. சீதையை எவனோ அடிச்சிகிட்டு போனான். அவன்அவளைசினைபண்ணி அனுப்பினான்.ராமன் அவளை கூட்டிகிட்டு வந்தான் ராவணனை கொன்னு. சீதை சினையைப் பார்த்து அவமானப்பட்டு அவளைக் காட்டிலே கொண்டு போய் கொன்னு போடுன்னான்.
இதுதான் பொருத்தம் நல்ல நேரம்பார்த்ததற்குப் பலனா?
இப்படி நாம புராணங்களை எடுத்துகிட்டா எவ்வளவோ சொல்லலாமே. ஆகவே தோழர்களே! அறிவுக்கேற்ற பொறுத்தமானதைப் பார்த்து நாம எப்படி இருக்கணும்? உலகம் எப்படி வாழுது? மற்றநாட்டுப் பெண்கள் எப்படி இருக்கிறாங்க?
நாம பொருத்தம் ஜாதகம் நம்ம ஜாதி என்பதை எல்லாம் பார்க்காமே முன்னேறிய நாட்டில் உள்ள சமுதாயம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து அது போல நாம ஆண்களும் பெண்களும் பழகணும். அப்பதான் நாம் மாறமுடியும்.நாம இப்ப சொல்லுகிற மாறுதலான கருத்துக்கு நடத்துகிறதுக்குக் காரணம், பழமை என்கிற பேராலே நாம காட்டு மிராண்டியாக ஆகியிருக்கிறோம். இனிமேல் நாம் அப்படி இனி இல்லாமல் அறிவினாலே சிந்திச்சி நல்லவைகளைக் தேடிப் பிடித்து, அதைப் பின் பற்றும் உணர்ச்சி வந்து அந்தமாதிரி காரியங்களைப் பின்பற்றவேணும்.
ஆகவே அருமைத் தோழர்களே! நேரமாச்சி,
ஏன் இந்த மாதிரி மாறுதல்களைச் செய்கிறோம் என்பதற்கு இது தான் காரணம். இன்னும் நாம் நிறைய செய்ய வேண்டியது இருக்குது. ரொம்ப செய்ய வேண்டியது இருக்குது.
நான் நினைக்கிறேன். இப்ப 1968. 2000 வருஷம் வர்ரபோதே கல்யாணம் ரொம்ப நின்னு போகும். கல்யாணமாச்சா என்று கேட்கிறதே மரியாதைக் குறைவாக கருதுவார்கள்.
அவுக பாட்டுக்கு அவுக தனியா பிழைப்பாங்க.
இவுக பாட்டுக்கு இவுக இருப்பாங்க. அவுக தனியா சம்பாதிப்பாங்க. இவுக தனியா சம்பாதிப்பாங்க. மலையாளத்திலே நாயர் பொம்பளை, ஜெமீந்தார் பொம்பளை, மிராஸ்தார் பொம்பளைங்களுக்கு கல்யாணமே கிடையாதே.
இன்னைக்கும் அவுங்களுக்குப் புருஷனைப் பற்றி கவலையே இல்லையே. எவனோ தகுதிகேற்ப தகுதியானவனோடு போகவரவைச்சிகிட்டா தீர்ந்தது. அதுக்கு பேரு என்னாடான்னா சம்பந்தம் எனக்கும் அவளுக்கும் போக்குவரத்துண்டு சம்பந்தமுண்டு.
அந்தம்மாளுக்கே அவன் வேண்டாம்ன்னா அவன் நின்னுக்க வேண்டியதுதான். அவனுக்கே இவளை வேண்டாம்னா அவன் இன்னொருத்தி வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.
இவுகமாட்டிக்க வேண்டியது தான். தப்பு என்னா இதிலே. நம்ம ஊர்லே அது முறையாம், அது ஜாதி வழக்கம் அதைக் காக்கிறது என்ற கணக்கெல்லாம் போட்டுப் பார்க்கிறதினாலே தவறாய்த் தோணுது. அந்த ஊரிலே அப்படி இருக்கிறாங்களே அது எப்படி தப்பாகும்?
எதுக்காக அந்த அடிமையிலே போய் மாட்டிக்கிறது இப்ப (1968இல்) ஜப்பானிலே 100க்கு 45 குழந்தைகளுக்கு தகப்பன் பேருக்கு காலமே இல்லை கணக்கெடுப்பிலே. லண்டணிலே 40 ஆயிரம் குழந்தைகளுக்கு தகப்பன் பேரு இல்லேன்னுதான் சொல்றாங்க (சிரிப்பு) யாரும் தகப்பன் இல்லாது இருப்பானா?
கவலை இல்லை அதைப் பற்றியாரோ ஆசைப்பட்டவனோடு கூடுவது. இல்லாட்டா போகுது. தகப்பன் பெயரைச் சொல்லிகிட்டு அவனோடுகட்டிக்கிட்டு அழுவானேன்.
அவனுக்கு இவள் பொண்டாட்டியாகிறது.
அவனுக்கு இவள் வேலைக்காரியாகிறது.
படிக்கிறோம்,
பாஸ்பண்றோம்,
உத்தியோகம் பார்க்கிறோம், தனியா சௌக்கியமாய் வாழறோம். அந்த மாதிரி சுதந்திர மானவாழ்வு வளரணும் இங்கு. எல்லாத்திலேயும் மனிதன் சுதந்திரத்தை எதிர் பார்க்கிறான்.
இந்த பொண்டாட்டி புருஷன் சங்கதியிலே மாத்திரம் அடிமை நிலையை மாற்றாமல் பலப்படுத்துகிறான்.
பெண்களுக்கு அந்த சுதந்திரமாக வாழக்கூடிய உணர்ச்சி இன்னும் வரலே. அதற்கேற்ற பக்குவத்திற்கு அவர்களை வசதி செய்யலே. நான் ஜெர்மனியிலேபோயி (1932 அக்டோபர் முதல்வாரம்) ஒரு குடும்பத்திலே,
ஒரு மாசமிருந்தேன் அவுக ஒரு ஆண், ஒரு பெண் இரண்டு பேருதான். புருஷன் பொண்டாட்டி மாதிரியாகவே இருந்தாங்க.
நானா கேட்டேன். அந்த ஆம்பளையை யாரு இந்தம்மான்னு?அவன் சொன்னான். நான் ஏற்பாடு செய்திருக்கிற பொண்டாட்டினான்.
My Proposed Wife கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக ஏற்பாடு பண்ணியிருக்கிற பொண்ணுன்னான். எத்தனை வருஷமாடா இருக்கிறீங்கன்னு கேட்டேன் நான். இரண்டு வருஷமாக நாங்கள் ஆகத்தான் வாழ்கிறோம்னான்.
எனக்கு சீக்கிரத்திலே குடும்பத் தொல்லையை ஏற்படுத்திக்க இஷ்டமில்லை. அந்தம்மாளுக்கும் அதே மாதிரி இஷ்டமில்லே.
ஆனாலும் நாங்கள் இப்படியே இருக்கிறோம். இனிமேல் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக ஏற்பாடு செய்திருக்கிற ஒரு ஏற்பாடு. My Proposed Wife என்றே சொன்னான். அந்த Proposed Wife போயிட்டா வேறு ஒண்ணை அதே மாதிரியே பண்ணிக்கிட்டாலும் பண்ணிக்குவான். அது என்னா பாவம்? அதிலே என்னா தப்பு? தாராள மனசோட, பூர்ணமான சிந்தனையோட நம்ம பார்க்காததினாலே அதை நினைக்கிறதே இல்லே.
எங்கள் வீட்டிலே நான் தான் குழாய் (குடிநீர்)
கொண்டு வந்தேன். ஈரோட்டுக்கு (சேர்மனாக இருந்தபோது)
எங்கம்மா சாகறவரைக்கும் குழாய்த் தண்ணி குடிக்கவே இல்லியே (சிரிப்பு). உப்பு தண்ணியானாலும் கிணற்றுத் தண்ணிதான் குடிப்பாள் அவள். என்னாடான்னா அந்த தண்ணீன்னா?
யார் தொட்டானோ, எங்கிருந்து வருதோ, எவன் கை தொட்டானோ? அப்படி இருந்த அவுங்களை என்ன பண்றது. அது மாதிரி பழகிட்டாங்க.
சீக்கிரம் செத்தாதான் அது தெரியுமான்னுதான் நான் சொன்னேன்னே தவிர நீ அதை மாற்றிக் கண்ணு சொல்லலே. அப்படி இருக்கிறாங்க வைதீகமா பழமையோடு பேதமாய் சொல்லுவாங்க.
எங்கேயோ போய் எவளையோ கட்டிகிட்டு வந்திட்டாங்கம்பாங்க.
இவன் கள்ளனா இருப்பான்.
அவன் மறவனா இருப்பான்.
கள்ளன் வீட்டிலே பொண்ணுகட்டினானய்யா அவன் என்பான். மறவன்வீட்டிலே போய்கட்டிகிட்டு வந்திட்டானய்யா,
அவன் ஆகாதவன் வீட்டிலே கட்டி வந்திட்டானய்யா,
இப்படியே சொல்லிடுவாங்க. அது தகுதிஎன்னா?
நம்ம தகுதி என்னா என்பது பற்றி சிந்திக்கிறதே இல்லை. இப்படிப்பட்ட கீழ்த்தரமான அறிவுதான் நம்மைவிட்டுப் போகணும். மனது துணியணும்.
என்னா துணியணும்? ஒழுக்கம்தேவை. ஒழுக்கம்னா என்னா?
பொய் பேசக்கூடாது, ஏமாத்தக்கூடாது. இன்னொருத்தனுக்கு தொல்லை ஏற்படுத்தக்கூடாது.
இன்னொருத்தனுக்கு மனநோவுவரும்படியா நடந்துக்ககூடாது.
இது தானே ஒழுக்கம் அதுக்குமேலே சொல்றதுன்னா எதைச்சொல்றது? பொம்பளைன்னு சொன்னாபாரதத்திலே எழுதறான். எல்லாமனுஷனும் பாரதத்தைநம்மமத நூல்னு நினைக்கிறான்.
அது ஒரு கடவுள் கதைன்னு நினைக்கிறான்.
அந்த பாரதம் என்னடான்னா?
அதிலே வர்றவன் ஒருத்தன் கூட அவன் அப்பனுக்குப் பிறக்கலே? ஒருத்தி கூட ஒழுக்கத்தோட இருந்ததாகக் காணோம்.
அதைக் கொண்டாந்து நம்ம கிட்டே கடவுள் கதைன்னுட்டான். அதைப் பார்த்து நடக்க வேண்டியதுன்னுட்டான்.
எல்லா பயலு நடக்கிறானே.
அதிலே ஒழுக்கம்கிறது, திருட்டுப் பசங்க ஏற்பாடு பண்ற திட்டங்களாய்த்தான் இருக்குதே தவிர அறிவுக்கேற்ப இல்லை பாருங்க. பாரத கதை பெண்களை பதிவிரதைகள் என்று சொல்லி வைச்சிட்டான்.
அந்த அயோக்கியப் பசங்க. திரௌபதி ஒரு பதிவிரதை. இவளுக்கு ஆசைநாயகர்கள் அய்ந்து பேரு. ஒருத்தன் கூட அவளுக்குப் புருஷன் அல்ல. நீங்கள் இதை மனசிலே வைச்சிக்கங்க.
பாரதத்திலே,
வருகிற திரௌபதிக்கு அஞ்சி பேரும் ஆசை நாயகர்களே தவிர புருஷனல்ல. ஏன் புருஷன் அல்லன்னு சொல்றேன். அஞ்சி பேருக்கும் தனித்தனியா பொண்டாட்டி, பிள்ளைகள் எல்லாம் வேறையாய் இருக்குது.
அப்புறம் இதுக்கு பேரு என்னா? சொல்லுங்க. நாம அஞ்சிபேரும் சேர்ந்து ஒரு பொம்பளையை வைச்சிகிட்டு,
நாமலும் குடும்பம் பொண்டாட்டி பிள்ளை வேறைவேறையா இருந்துட்டா இந்த பொம்பளைக்குப்பேரு என்னா?
வைப்பாட்டின்னு தானே பேரு. இல்லாதிருந்தால் அந்தமாதிரி கதையிலே (பாரதத்திலே)
எழுதியிருக்கிறான்.
அதுக்கு கடவுள் தத்துவம் கட்டளை என்கிறான்.
நம்ம புத்தி நாதியற்றுப் போனா ஒழுக்கம் கெட்டுப் போவுது. கதையிலே அவன் என்னா காட்றான். அவளை (திரௌபதியை) வைச்சி சூதாடினாங்க.
இந்த மாதிரி எல்லாம் கதை எழுதறான்.
பெரியபுராணத்தை சைவர்கள் எல்லாம் கண்ணிலே ஒத்திக்கிறான் மடப்பசங்க. அதிலே சொல்றானே. தன் பொண்டாட்டியை ஒரு தடிப்பயல் பாப்பானுக்கு விட்டுக் கொடுத்து உடனே பரமசிவன் வந்து இவனுக்கு மோட்சம் கொடுத்தான்.
அப்படீன்னா என்ன அர்த்தம்? புருஷன் இல்லாவிட்டாலும் எவனாயிருந்தாலும் அதுக்குப் பேரு கோளாறுதானே. பத்தினியா இருக்க வேணும்னு சொல்லிட்டு இப்படியும்பண்ணிகிட்டு புருஷன் சொன்னதுக்கு கட்டுப்பட வேணும்ன்னு சொன்னா அப்புறம் என்னா ஒழுக்கம் பதிவிரதைங்கிறதெல்லாம்.
அதுக்கு
என்னா அர்த்தம்? மதம் மடப்பசங்களுக்கு ஒரு பற்றுதல். எதுமேலே,
சிலப்பதிகாரத்தின் பேரிலே. பொம்பளை விஷயத்திலே கருணை இருக்கிறவன் சிலப்பதிகாரத்தைக் காரி துப்ப வேணாமோ? என்னடா அதிலே இருக்குதுன்னா?
கண்ணகி மகா பதிவிரதை. எப்படிடா அவள் பதிவிரதை? மாதவி தேவடியாள் பின்னாடி கோவலன் போயிட்டான்.
அதுலேயிருந்து சாகறவரைக்கும் சோறு திங்காமே, பாயிலே படுக்காமே,
நல்ல தூக்கம் தூங்காமே, அப்பன் போட்ட நகைகளை எல்லாம் பொண்டாட்டி புருஷன்கிட்டே கொடுத்து தேவடியாள்கிட்டே கொடுக்கச் சொல்லிகிட்டு வாழ்ந்தாள் அவள், என்பது கதை. அவள்
(கண்ணகி)
பதிவிரதை
(சிரிப்பு)
உன் மகள் அப்படி இருந்தால் நீ ஒத்துக்குவியா? ரொம்ப தூரம் நாம போக வேண்டாம். உன் மகளை ஒருத்தனுக்குக் கட்டிக் கொடுத்தே. அவன் காலிப்பயல்.
குச்சி நுழைகிறான். உன் மகளுக்கு நீ போட்ட நகையை அந்தப் பயலுக்கு கொடுத்துகிட்டு இருந்தா நீ சம்மதிப்பியா அதை? அதுதானே நியாயம்? உனக்கு எதுவோ அதுதானே மற்றது. இப்படியாக கண்ணகி கதை எவ்வளவு இழிவு கேவலம் அசிங்கம். பார்க்கிறபோது அந்த மாதிரி ஆச்சி. அள்ளிவிட்டுட்டான் மக்களுக்குள்ளே.
அதை எல்லாம் இப்ப மாத்தி ஆகணும். அறிவினாலே ஆகக்கூடியதை அறிவினாலே சொல்லி மாற்றவேணும்.
முடியாததை சட்டம் போட்டு மாத்தணும். சட்டம் போடணும்னா அதுக்குத் துணிஞ்ச அரசாங்கம் வரணும். இப்பநேற்றுவரைக்கும் எப்படி இந்த கல்யாணம் சட்டப்படி செல்லுலியோ சரியான அரசாங்கம் வந்து எப்படி சட்டமாச்சுதோ, செல்லுபடியாச்சிதோ, அதுபோல இனிவரக்கூடிய அரசாங்கம் இது மாதிரி எல்லாம் பண்ணனும். மத சம்பிரதாயங்களை சமுதாயத்தில் இப்படி வளர்த்திடத்தான் அரசாங்கம் இருக்குதே ஒழிய, அரசாங்கம் கடமைப் பட்டிருக்கிறதே ஒழிய மக்கள் எப்படி பகுத்தறிவோடு இருக்கணும்?
எப்படி பிழைக்கணும்? என்பதற்கல்ல அரசாங்கம்.
மனித சமுதாயத்தை வளர்ச்சி பண்ணனும். அதுதான் ஒவ்வொருத்தருக்கும் முயற்சியாக இருக்கணும்.
ஆகவே அருமைத் தோழர்களே! இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை இந்த விஷயங்களை இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் சொல்ல ஒரு வாய்ப்பை உண்டாக்கி தந்ததுக்கு நான் பெருமைப்படுகிறேன்.
கடைசியாக நானு ஆசைப்படுகிற சில தன்மைகளைத் தான் நான் எடுத்துச் சொன்னேனே தவிர இதுதான் சரியானது இதை எடுத்து நெய்யிலே போட்டால் வேகாது, அப்படீன்னு கருதி இவைகளைச் சொல்லலே. எனக்குத் தோணுகிறமாதிரி உங்களுக்குத் தோணினா பின்பற்றுங்கள். சிந்தியுங்கள். இது சரியான மார்க்கமா தப்பான்னு பாருங்கள்.
இருக்கிறதிலே நமக்குப் பலன் உண்டான்னு சிந்தியுங்கள்.
என்றெல்லாம் நான் கேட்டுக்கொண்டு முடிவாக மணமக்களுக்கு எல்லாரும் சொன்னாங்க.
நானும் சொல்றேன். செலவுக்கு மேலே செலவு பண்ணாதீங்க.
தகுதிக்குமேலே நீங்கள் பிள்ளை பெக்கறதினாலேதான், ஒழுக்கக் கேடு,
நாணயக்கேடு ஆகுது.
அது மாதிரி வரவுக்கு மேலே செலவு பண்றதினாலேதான் மனுஷன் நாணயக்கேடு ,ஒழுக்கக்கேடுக்கு ஆளாகிறான்.
பெண்கள் அலங்காரம் பண்ணிகிட்டு ஆடம்பரமாய் இருக்க ஆசைப்படாதீங்க. கோவிலுக்கு சினிமாவுக்கு போறது குழவிக்கல்லைக் கும்பிடறது ஆகிய இந்த மாதிரியான மூடநம்பிக்கை காரியங்களில் இந்த முறையில் செய்து கொண்டவர்கள் ஈடுபடக்கூடாது. சுருக்கமா எல்லாருமே சொன்னாங்க கண்டிப்பாய் குழந்தை பெக்காதீங்க
(சிரிப்பு)
கூடுமானவரைக்கும் தாட்டிக்கங்க. இந்த பிள்ளைக்கும் சொல்றேன், ஒரு அஞ்சாறு, வருஷத்துக்காவது உங்க அம்மாவைப் பாட்டி ஆக்காமல் பார்த்துக்கோ, அவ்வளவுதான் நான்சொல்றது.
இந்தவருஷம் திருமணமாகி நாளையவருஷம் வைகாசி வர்ரபோது தாலாட்ட ஆரம்பிச்சீட்டிங்கன்னா அந்த அம்மாளுக்கு என்ன பேரு. பாட்டியாகிடராளே!
(சிரிப்பு)
அப்படி ஆக்காதீங்க. தாட்டுங்க ஒரு நாலு வருஷம். அஞ்சு வருஷம்.
அப்புறம் ஏதோ ஒண்ணோ அரையோ, நிறுத்திக்கங்க. கடைசியா ஜனங்களிடத்திலே அன்பாயிருங்க. அன்புதான் நமக்கு.
அந்த மாதிரி எண்ணம்வேணும்உங்களுக்கு.
மக்கள் எல்லாம் நமக்கு வேண்டியவங்க. எல்லாருக்கும் நம்மாலான ஆறுதல் செய்வோம். நம்மால் ஆதரவு செய்யா விட்டாலும், ஒரு பயல்கிட்டே நாம கையேந்துகிற நிலைமை நமக்கு வரக் கூடாது. அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக பிழைக்கணும். இது தான் நம்ம இனம் வளர்வதற்கு, நம்முடைய பெண்கள் முன்னேற்றமடைவதற்கு ஆனதைச் செய்யுங்கள். ஆகவே, அருமைத் தோழர்களே! திருவாளர்கள் நாகம்மையார் அவர்களும், செல்லைய்யா அவர்களும்,
இக்காரியத்திலே இவ்வளவு முயற்சி எடுத்து செல்வாக்குடன் நடத்தியதில் ஏதோ மக்களுக்குப் பயன்படும்படியாக சில வார்த்தைகள் சொல்ல, பல அறிஞர்களைக் கொண்டும் பல கருத்துக்கள் கூறவும், ஒரு வாய்ப்பை உண்டாக்கி மற்ற மக்களுக்கும் வழிகாட்டியதற்காக அந்த அம்மையாருக்கும் அய்யா செல்லைய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியறிதலையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
கொஞ்சம் நேரம் அதிகமானதினாலே,அருள்கூர்ந்து நீங்கள் எல்லாம் மன்னிக்க வேண்டுமெனநான்கேட்டுக்கொண்டு என் பேச்சை இத்தோடு முடிச்சிக்கிறேன்.
வணக்கம்.
(பலத்த கைதட்டல்)
நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி
Comments
Post a Comment