திராவிடர்


திராவிட சமுதாயம் என்பது பற்றி பெரியார் கண்ணோட்டத்தில் ஒரு விளக்கம். தென்னகத்தில் உள்ள பார்ப்பனர்கள் தங்களை, ஆரியர்கள் என்று உண்மை பற்றியோ, உரிமை பற்றியோ இரண்டும் இல்லாமலோ நெடுங்காலமாக அழைத்து வருகிறார்கள்; மற்ற இந்துக்களை அவர்கள் சூத்திரர் என்றே அழைத்து வந்தார்கள். ஏதோ கிராமப் புரோகிதனோ அர்ச்சகனோ இப்படிச் சொன்னார்கள் என்று அலட்சியப்படுத்த முடியாத நிலையே நீடித்து வந்தது. பார்ப்பனர்கள் எவ்வித முற்போக்கு வாதிகளானாலும் தனி வாழ்க்கையில் பூணூலை நீக்கிவிட்டு, கலப்புத் திருமணத்தைச் செய்து பார்த்து மகிழ்ந்த பெரியவர்கள் ஆனாலும், பார்ப்பனரல்லாதாரை சூத்திரர் என்று கருதுவதும் சொல்லுவதும் தங்களுடைய இரண்டாவது இயற்கையாக இருந்த நிலை, நேற்று வரை தொடர்ந்தது.

பார்ப்பனர்கள், சூத்திரர்கள் என்று எவருக்குப் பட்டம் சூட்டி வந்தார்களோ அவர்களைப் பெரியார் திராவிடர் என்று அழைத்தார்! இப்பட்டியலில் சேர மறுத்தால் தாங்கள் சூத்திரப் பட்டியலில்தான் இருக்க வேண்டும். எனவேதான், மனித இனப் பற்று மட்டுமே பகுத்தறிவு வாதிகளுக்கு இருக்கலாம் என்று சொன்ன பெரியார். நம்மை நடைமுறை விவகாரங்களுக்கு திராவிடர் என்று அழைத்தார். எனவே நாம் தமிழர்களா? திராவிடர்களா? என்னும் குழப்பம் தேவையில்லை.
பெரியாரின் சமூக இழிவு நீக்கப் பணியை காமராசரும் வெளிப்படையாகப் பாராட்டினார்.

தன்னாட்சி இந்தியாவில், சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்து திரு.சி.இராஜகோபாலாச்சாரியார் ஈராண்டு ஆட்சி செய்தார். அப்போது, மதுரையில் டி.வி.எஸ். நிறுவனத்தின் பெருவிழாவொன்று நடந்தது. அதில் கலந்து கொண்டவர்களில், முதல் அமைச்சர் இராஜகோபாலாச்சாரியார் மற்றும் தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவர் கு.காமராசரும் இருந்தார்கள்.
முதலமைச்சர் பேசும்போது, காலம் மாறிவிட்டது. நிறைய சூத்திரர்கள் படித்து பட்டம் பெற வந்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டார்.
அடுத்து பேசிய காமராசர், இராஜாஜி போன்ற பெரியவர்களே சூத்திரர் என்னும் சொல்லை இன்னும் பயன்படுத்தும்போது, பெரியார் கட்சி வளராமல் என்ன செய்யும்? என்று இடித்துரைத்தார்.

தந்தை பெரியார் .வெ.ராமசாமி, அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக, பொதுச் செல்வமாக விளங்கினார். சமத்துவச் சுனையாக, பொங்கும் பெருஞ் சுனையாக, இருந்து வாழ்வித்தார். புத்தருக்குப் பிறகு, புத்தியைப் பயன்படுத்து என்று அறிவுறுத்திய பகுத்தறிவு இயக்கத்தின் பகலவனாக ஒளிவிட்டார். இருப்பினும் .வெ.ராமசாமி என்பவர் தனி மனிதராயிற்றே! தன்னேரில்லாத, .வெ.ராமசாமி என்னும் தனி மனிதரின் தனித் தன்மைகள், அவற்றின் சிறப்புகள் சிலவற்றை இங்கே குறிப்பிடுதல் நலம். ஏன்? அவற்றைக் கருதக் கருதக் கல்லும் கரையும்; உள்ள உள்ள ஊனும் உருகும். நினைக்க நினைக்க நியாய உணர்வு நிலைக்கும்.


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை