பங்காரு லட்சுமணனே பாரும்! கிருபாநிதியே கேளும்!



கத்தியைக் கழுத்தில் வைக்க காத்திருக்கிறவன் பின்னால், காட்டுகின்ற இரைக்காகச் செல்லுகின்ற ஆட்டினைப் போல, கொடுக்கிறான் உணவென்றெண்ணி கொக்கியில் மாட்டிக் கொள்கின்ற மீனைப்போல,
தேன் தடவிக் காட்டுகின்ற - பேசுகின்ற ஜாலங்களின் உள்நோக்குப் புரியாமல் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் சிலர் பி.ஜே.பி. பின்னால் பெருமையாகச் செல்லுகின்றனர்.
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வள்ளலார் கூற்று, பி.ஜே.பி..க்கான எச்சரிக்கையாக இன்றைக்குக் கொள்ள வேண்டும். காரணம், அந்த வாக்கு பி.ஜே.பி.யை பொறுத்தவரை 100 சதவீதம் பொருந்தும்.
அவர்கள் எதை செய்யமாட்டோம் என்பார்களோ அதை அடுத்துச் செய்யப் போகிறார்கள் என்பதே அகராதி.
மைபொதி விளக்கே யன்ன மனத்தினுள் கருப்பு வைத்து பொய்த் தவவேடம் பூண்ட மனித விரோதிகளை அடையாளங் காண்பதில் அதிகம் படித்தவர்களே மயங்கும் போதுதான் மனம் கொதிக்கிறது!
ஒரு பெரும் சமுதாயத்தை வழி நடத்த வேண்டிய தலைவர்கள், விவரந் தெரியாது வீழ்வார்களானால், அது அச்சமுதாய வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்களான தாழ்த்தப்பட்டோரின் தலைவர்களில் ஒருவர் பி.ஜே.பி.யின் தலைவராகவே ஆகிவிட்டார். இன்னொருவர் பி.ஜே.பி. பின்னால் போவது பற்றி காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்.
பி.ஜே.பி. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமுறை விரோதி என்பதை அவர்கள் முதலில் அறியவேண்டும் என்பதற்காகச் சில தகவல்களைத் தர வேண்டியது நம் கடமையாகும். இவை மற்றவர்களும் அறிந்துகொள்ள உதவும்.
இன்றைய பி.ஜே.பி. என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வேறு வடிவம்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டது போல போண்டா என்றாலும், வடை என்றாலும் மாவு ஒன்றுதான் - உளுந்து மாவுதான் என்றார். அதேபோல ஜனசங், இந்து மகாசபை, வி.எச்.பி., பா... என்று பல வடிவங்களில் வந்தாலும் அவையணைத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளே.
ஆர்.எஸ்.எஸ். என்ன கொள்கையுடையதோ அதுவே இவற்றிற்கும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பான இந்துமகா சபை கும்பகோணத்தில் ஒரு தீர்மானம் போட்டது.
தீண்டாமை சாஸ்திர சம்பந்தமானது. அதை ஒழிக்கக்கூடாது.
(ஆதாரம்: 13.12.1925 குடிஅரசு)
சாஸ்திரப்படியான இந்துத்துவா ஆட்சியை அமைக்கத் துடிக்கும் பி.ஜே.பி. பரிவாரங்களின் அடிநாதமான உணர்வு. நோக்கு இதுதான் என்பதைத் தாழ்த்தப்பட்டவர்கள் - குறிப்பாக மனதில் கொள்ளவேண்டும்.
இந்து மதத்தின் கொடுமையை, இழிவை எதிர்த்து, கொதித்துதான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்தைவிட்டே வெளியேற வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.
அப்படிப்பட்ட இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்துராஷ்டிரா அமைப்போம் என்பவர்களுடன், அம்பேத்கர் அடிச்சுவட்டில் அடிபோட வேண்டியவர்கள் கூடிக் குலாவுவதும், அவர்கள் அமைப்பிலே பொறுப்பு வகிப்பதும் எப்படிப்பட்ட அறியாமை, அறியாமை இல்லையென்றால் எப்படிப்பட்ட இன மோசடி!
தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவாள் தரும் மரியாதையும், பதவியும், அனுசரணையான பேச்சும் அவர்களைக் கவர்ந்தழிக்கும் கலையென்பதைக் கனக்கப் படித்தவர்கள் உணர வேண்டாமா?
தாழ்த்தப்பட்டவர்களை அழித்தொழிப்பதில் ஆர்.எஸ்.எஸ். (பி.ஜே.பி.) திட்டம் எவ்வளவு தீவிரமானது தெரியுமா?
அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும், இந்தியக் குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெல்காமைச் சேர்ந்த டி..காட்டி ஒரு திடுக்கிடும் தகவலைச் சொன்னார்.
2.2.1980இல் பெங்களூரில் அம்பேத்கர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசும்போது,
வீர சவர்க்கார் தம்பி பாபா சவர்க்கார் நாசிக் பீட ஜகத் குருவிடம், தமக்கு ரூ.500 பணம் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் பணம் அம்பேத்கரின் சமையல்காரருக்கு லஞ்சமாகத் தருவதற்குக் கேட்கப்பட்டது! அதாவது அம்பேத்கர் சாப்பிடும் உணவில் விஷம் கலந்து கொடுத்துச் சாகடிக்க - அவரது சமையல்காரரிடம் ரூ.500 கொடுக்க பாபா சவர்க்கார் ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஆனால், நாசிக் சங்கராச்சாரி இதற்குப் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இச்செய்தி பிரபல மராட்டிய எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான பி.கே.அட்ரி அவரின் மராத்தா என்ற மராட்டிய நாளிதழில் வெளியிட்டார்.
யார் இந்த சவர்க்கார்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்த அய்வரில் ஒருவர். அவ்வளவு முக்கியமானவரின் தம்பி.
இந்தியா முழுமையிலும் வாழும் ஒரு பெரும்பான்மை இனத்தின் தலைவரை, சட்டமேதை இந்திய அரசியலமைப்பின் தந்தை என்றழைக்கப்படும் ஒப்பற்றத் தலைவரை விஷம் வைத்துக் கொல்ல சதித் திட்டம் தீட்டி, முயன்ற ஒரு கூட்டமே ஆர்.எஸ்.எஸ். (பி.ஜே.பி.) கூட்டம்.
தாழ்த்தப்பட்டவர்களின் ஜென்ம அல்ல தலைமுறை விரோதியாக எண்ண வேண்டிய இந்த வன்முறை மதவாத அமைப்பில், தாழ்த்தப்பட்டவர்கள் பங்கு கொண்டு தலைமை ஏற்பது இனத் துரோகம் அல்லவா?
இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களை தலைமையில் அமர்த்தும் பி.ஜே.பி. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கத் தயாரா? கோரிக்கை வைத்துப் பாருங்கள்! அப்போது அவர்களின் சுய ரூபம் வெளிப்படும்.
பீகார் மாநிலத்தில் முடிதிருத்தும் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (கர்பூரிதாகூர்) முதல்வரானதை சகிக்க முடியாத இந்த பி.ஜே.பி. (ஆர்.எஸ்.எஸ்.) கூட்டம் அவரது காரை வழி மறித்து தாக்கி கொலை செய்ய முயன்றதை நீங்கள் அறிவீர்களா?
பாரதீய ஜனசங்கம் என்ற அமைப்பே பி.ஜே.பி. என்று மாற்றுப் பெயர் பெற்றது. அந்த அமைப்பு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுச் சலுகைப் பெறுவதை எவ்வளவு கடுமையாக எதிர்த்தது தெரியுமா?
“The Indian Govt, has given equal rights to all citizens in their constitution.
Yet there are special demand at some places on their basis of Castes provincialism and language We shall not allow these self policies to develop under cover of bafckwardness. The Jana sangh will put an end to it.”
அரசியல் சட்டத்தில் எல்லா குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், சில இடங்களில் ஜாதி, மாநிலம், மொழி அடிப்படையில் சிறப்புச் சலுகைகள் கேட்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் என்ற போர்வையில் கோரப்படும் இச்சுய நலக் கொள்கைகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனசங்கம் அதற்கு ஒரு முடிவு கட்டும் என்று தங்களது கொள்கையை உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இன்றைக்கு அவர்கள் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நீட்டிக்க காரணம் கூட்டணி ஆட்சி என்பதால் மட்டுமே! அறுதிப் பெரும்பான்மைப் பெற்று விட்டால், இட ஒதுக்கீட்டை இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறிவர்!
மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்படக் கூடாது என்பதற்காக, வடமாநிலங்களில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி, வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தவர்கள் குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை எதிர்த்து, இரத்த ஆறு ஓடும்படிச் செய்தவர்கள் இந்த பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர்.
தற்போது, தாழ்த்தப்பட்டவர்கள் மீது அவர்கள் காட்டும் அனுதாபங்கள் அவர்களின் வாக்குகளை பெற்று முழு அதிகார ஆட்சியை அமைக்க நடத்தும் நாடகம் என்பதை அறிவுள்ளவர்கள் எவரும் அறிந்து கொள்வர்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சம்பூர்ணானந் சிலையை திறந்தவர் (பாபு ஜெகஜீவன்ராம்) என்பதால், அது தீட்டாகிவிட்டது என்று அதனைத் தூய்மை (புனிதம்) செய்ய கங்கை நீரைக் கொண்டு வந்து ஊற்றிய கூட்டம் தான் இந்த பி.ஜே.பி. கூட்டம் என்பது இவர்களுக்குத் தெரியுமா?
நீயெல்லாம் மந்திரியானால், செருப்பு தைப்பது யார்? என்று முழக்கம் போட்ட கூட்டந்தான் பி.ஜே.பி. என்பது இவருக்குப் புரியுமா?
நாம் (தாழ்த்தப்பட்டோர்) நம் இழிவிலிருந்து, மானங்கெட்ட நிலையிலிருந்து விடுபட்டு, அசுத்தங்களில்லா பயனுள்ள பெறற்கரிய வாழ்நிலையை அடைய வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. உங்களைப் பின்னிப் பிணைந்துள்ள இந்து மத சங்கிலியை அறுத்தெறிந்து விட்டு வெளியேறுவது ஒன்றே அச்சிறந்த வழி என்று என்னால் உறுதியாக கூறமுடியும் - என்றார் டாக்டர் அம்பேத்கர். அது மட்டுமா?
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறவன் என்பார்கள். ஆனால், விலங்கினும் கேவலமாக மனிதனை நடத்துவார்கள். இப்படிக் கருதுகின்றவர்களோடு சேர்ந்திருக்காதீர்கள். இவர்கள் மிகக் கொடிய வஞ்சனையாளர். எறும்பிற்கு சர்க்கரை உணவு இடுவார்கள். ஆனால், இங்குள்ள மனிதர்கள் குடிப்பதற்கு நீரெடுக்கத் தடை விதிப்பார்கள். இவர்களோடு தொடர்பு கொண்டிருக்காதீர்கள் என்றும் எச்சரித்தார் டாக்டர் அம்பேத்கர்.
இப்படிப்பட்ட ஒரு ஒளி விளக்கைக் கையில் பிடித்துக் கொண்டு கிணற்றில் வீழ்வேன் என்றால் அதை என்னென்று விமர்சிப்பது!
இந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை அழித்தொழிக்கவும், முடக்கிப் போடவும் சுற்றறிக்கை அனுப்பிய கூட்டம் என்பது இவர்களுக்குத் தெரியுமா?
சுற்றறிக்கை 411 ஆர்.... 3003
11 ஆர்.எஸ்.எஸ். . 033..
இது ரகசியச் சுற்றறிக்கை. இதைப் படித்தவுடன் எரித்துவிட வேண்டும் என்ற குறிப்புடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது.
கெட்டுப்போன மருந்துகளை தாழ்த்தப்பட்டோருக்கும், முஸ்லீம்களுக்கும் தரும்படி மருத்துவர்களைத் தூண்டவேண்டும், அதற்கேற்ப அவர்களுக்கு இந்து மத வெறியை ஊட்டவேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் கள், சாராயம், பிராந்தி போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யவும் சூதாட்டங்களை ஆடவும் தூண்ட வேண்டும்.
தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்களையும், முஸ்லீம் பெண்களையும் வேசித் தொழிலில் ஈடுபடத் தூண்டவேண்டும்.
தாழ்த்தப்பட்டோரின் பிள்ளைகளுக்கு நஞ்சு கலந்த தின்பண்டங்களைக் கொடுத்து அவர்களுடைய மன வளர்ச்சியையும், உடல் வளர்ச்சியையும் முடக்க வேண்டும்.
கலவரங்களை ஏற்படுத்தி தாழ்த்தப்பட்டோரின் பெண்களையும், முஸ்லீம் பெண்களையும் கற்பழிக்க வேண்டும். அப்படிப்பட்ட நேரங்களில் நண்பரின் மனைவி, பழக்கப்பட்டோரின் சகோதரி என்றெல்லாம் ஈவிரக்கம் பார்க்கக் கூடாது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரிடையே மூட நம்பிக்கையைப் பரப்ப வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரிடையே குரோதத்தையும், வெறுப்பையும் உருவாக்கி, பூசல்களையும், மோதல்களையும் உண்டாக்க வேண்டும்.
1955ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திலிருந்து இந்தியா முழுக்க அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் ஒரு பகுதியே இது.

இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூடாரத்தில் தாழ்த்தப்பட்டோர் இணைவதும், பொறுப்பேற்பதும் அவமானம் மட்டுமல்ல, அழிவும் அல்லவா? பாமர தாழ்த்தப்பட்டவர்களாவது சொரணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே நமது துடிப்பு.

நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்
                                                 ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை