குழந்தையைப்போன்ற பாசம் காட்டினார்



     இவர் ஒன்றும் இயக்கத்துக்காரர் இல்லை. சிறுநீரகத் துறையில் மிகப் பெரிய மருத்துவர். தந்தை பெரியார் அவர்களுக்கு குடல்இறக்க நோய்க்கு அறுவை மருத்துவம் செய்தவர். அதுமுதல் தந்தை பெரியாரின் பாசமிகுந்த பக்தர் ஆனார். முன்பின் அறியாத ஒரு மருத்துவர்கூட தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்த மாத்திரத்தில், சிறிது காலம் பழகிய சூழ்நிலையில், எந்த அளவுக்குப் பாதிப்புக்கு ஆளானார் என்பதை டாக்டர் பட் அவர்கள் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் உணர முடிகிறது. எத்தனையோ மரணங்களைச் சந்தித்த மருத்துவரை தந்தை பெரியாரின் மரணம் எப்படிப் பாதித்தது - தழுதழுத்த உணர்வை பேனா மையினால் நெகிழ விட்டுள்ளார். படியுங்கள் - கண்ணீர் உகுக்காமல் இருந்தால் ஆச்சரியம்தான்!

அன்புள்ள திரு. கி.வீரமணி அவர்களுக்கு,
சஞ்சலம் நீங்கி மனம் ஒருமுகப்பட்ட பின்பு உங்களுக்கு எழுதுகிறேன்; அய்யா மறைந்ததை ஒட்டி ஏற்பட்ட துன்ப நினைவுகளில் இருந்து மெள்ள மீண்டு வருவீர்கள் என நம்புகிறேன். துன்பத்தை முற்றிலும் உங்களால் போக்கிக் கொள்ள இயலாது என்பதைத் தெரிவேன். உங்கள் அன்றாட வாழ்வில், அய்யா இல்லாமையால் ஏற்பட்டுவிட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாது; என்றாலும் காலஞ் செல்லச் செல்ல அதை எதிர்கொள்ள உங்களால் இயலும். உங்களுடன் தொடர்பு கொண்ட நாளில் இருந்தே அய்யாவின் மீது உங்களுக்கிருந்த பாசத்தை நாங்கள் எளிதில் மதிப்பிட்டு விட்டோம். அத்துடன் அவர் மீது எனக்கு எவ்வாறு பற்று வளர்ந்தது என்பதை என்னால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. அவர் பரப்பிய உயர்ந்த எண்ணங்கள் மட்டும் அதற்குக் காரணமாக இருக்க முடியாது; காண முடியாத, விளக்க முடியாத பிணைப்பு என்னை அவரிடம் ஈர்த்தது என்று நான் அய்யாவுடன் முதலில் தொடர்பு கொண்டேனோ, அன்றிலிருந்து மற்றவர்களைப் போன்ற மிக முக்கியமானவர்களில் அவரும் ஒருவர் என எண்ண முடியவில்லை. அவர் முன்னிலையில் அடிக்கடி நான் பேச்சற்று வியந்து நின்றது உண்டு. அய்யா உடலால் இல்லை என்று உணர்வதே நமக்கு இயலாமல் இருக்கிறது. இருப்பினும், நீங்களும், மணியம்மையார் அவர்களும் அய்யாவின் குறிக்கோள்களை நிறைவேற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இடர்களை எதிர்த்துப் போரிட நேர்ந்தபொழுதும், அய்யா எவ்வளவு திறந்த உள்ளத்தினராக இருந்தார், குழந்தையைப் போன்ற பாசம் காட்டினார், இயல்பாக நடந்து கொண்டார்! நாணயத்துடனும், ஒரே குறிக்கோளுடனும் அய்யா போரிட்டார்! சில நிகழ்ச்சிகள் நேர்ந்த முறை என் ஆவலைத் தூண்டுவனவாக இருக்கின்றன. எந்த நாளில் அய்யா இங்குவரத் திட்டமிட்டிருந்தாரோ அந்நாளில் அவருடைய துணைவியாருக்கு அறுவை சிகிச்சை நடத்த வேண்டியதாயிற்று. வயிற்றுப் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதயத் தாக்கத்திற்கும் அய்யா ஆட்பட்டார்! அதுவும் எப்படிப்பட்ட இதயம்! ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் நிலவும் சமூக அநீதியை எதிர்த்து அவர் போராட்டம் நடத்திய காலங்களில் எதையும் தாங்கி வலிவாக நின்ற இதயம் அல்லவா? இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகளுடன் என் வாழ்வில் நிறையக் காலத்தைக் கழித்துவிட்டதாலோ, என்னவோ இப்படிப்பட்ட நேரங்களில் அமைதி என்னை ஆட்கொள்கிறது, நான் தெளிவாகப் பேச முடியாதவன் ஆகிறேன். இவ்வளவு பெரிய மனிதர், குழந்தையைப் போன்ற பார்வையையும், மிக எளிய தேவைகளையும் உடையவராக இருக்க முடியுமா? சொல்லுக்கும், செயலுக்கும் இடையில் இவ்வளவு மெல்லிய இடைவெளி உடையவராய் அய்யா தன்னுடைய வாழ்விலும், பணியிலும் இருந்ததைப் போல் இருக்க முடியுமா?

     நீண்ட வரலாற்றில் காந்தியாரைப் போன்ற சிலரைத் தவிர, தாம் சொன்னதைப் போன்றும் சிந்தித்ததைப் போன்றும் அய்யாவால் எவ்வாறு நடக்க முடிந்தது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இப்பொழுது அழும்பொழுது ஆறுதல் கூறுவதற்கு அய்யா நம்முடன் இல்லை! இருப்பினும், அய்யாவுடன் பேசவும், சிரித்து மகிழவும், உண்ணவுமாவது எனக்கும், சிலருக்கும், குறிப்பாக உங்களுக்கும் மணியம்மையாருக்கும் முடிந்தது என்பதை நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன். ஆனால், அதே பணியை (ஆறுதல் கூறும் பணியை) அய்யாவுடைய நினைவுகள் நமக்குச் செய்யும். அவர் உயிருடன் இருப்பதற்கு அடுத்த நிலையில் இருப்பவை அவரைப் பற்றிய நினைவுகள்தான். நீங்கள் செய்ய வேண்டிய கடமையை அவர் உங்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்; நீங்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. அய்யா பரப்பிய லட்சியங்களில் உங்களுக்கு இருக்கும் பற்றும், அர்ப்பணிப்பு உணர்வும் மற்றும் அய்யா மீது உங்களுக்குள்ள இணையற்ற பாசமும் உங்களுக்கு உந்தாற்றலாக இருக்கும். அவருடன் நீங்கள் கொண்டிருந்த உறவு பற்றிய நினைவுகள் உங்களுக்கு வழிகாட்டும். அய்யா சுடரை ஏற்றி வைத்துள்ளார், அவர் நம்மிடையே இல்லாவிடினும், அது தனக்குத் தானே ஊட்டம் பெற்று எரியும், காலப் போக்கில் அதை யாரும் அணைக்க முடியாது; ஒளியை மங்கச் செய்ய முடியாது! இருப்பினும் நாம் அனைவரும் அதை மேலும் ஒளிவிடச் செய்ய வேண்டும். அவருடன் உங்களுக்கு இருந்த உறவின் நினைவுகள் உங்களுக்கு வழிகாட்டுவனவாகவும், இயங்க வைப்பனவாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் என் மடலை முடிக்கிறேன். கண்ணீர் வற்றிய பின்பு கம்மிய குரல் தெளிவடையும் பொழுது நாம் சந்திப்போம்.
பாசவுணர்வுகளுடன்,
உங்கள் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும்
உண்மையுள்ள
எச்.எஸ். பட் (ஒப்பம்)
- எச்.எஸ்.பட்
எம்.எம்.,எஃப்,.சி.எஸ்., எஃப்..எம்.எஸ்., சிறுநீரக மண்டல மருத்துவம்
           தந்தை பெரியார் 130ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்

                  





Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை