என்றுமே இளைஞர்!




இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் அவர்களுக்கு வயது 85 பிறந்து விட்டது என்று சொல்லுகிறது!

நானும் சென்ற இருபது வருஷங்களாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி வருவதும், அது பெரியாருக்கு ஒவ்வொன்றாக வயதை அதிகப்படுத்திக் கொண்டு போவதையும், அந்த நாளில் தமிழர்கள் விழாக் கொண்டாடி களிப்பதையும், அவருக்குப் பரிசுகள் அளித்து மகிழ்வதையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்!

ஏதோ எண்ணிக்கையைச் சேர்த்து 65, 70, 75, 80, 84, 85 என்று நம்பர் போட்டுக்கொண்டு தோழர்கள் அவரது வயதைச் சொல்லுகிறார்களே தவிர இவர்கள் சொல்லும் வயது நம்பருக்கும் அவர்கள் செய்து வருகின்ற வேலைகளுக்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதுவும் நமது நாட்டில் அய்ம்பதைத் தாண்டி விட்டாலே அய்யோடா அப்பாடா என்று முழங்காலைப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுகின்ற கிழவர்களையும் பத்தியச் சாப்பாட்டுத் தலைவர்களையும் பார்க்கும்போது,

பெரியார் அவர்களுக்கு 65 வயதுக்குப் பிறகு ஒரு வேளை வயது ரிவர்ஸ்லே (பின்னாலே) போகுதோன்னு கூட எனக்குச் சந்தேகமாயிருக்கு!

வேணும்ணா நீங்களே பழைய விடுதலை, குடிஅரசு பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள், பெரியார் அவர்கள் தனது 55 வயது முதல் 65 வயது வரையில் சொந்த வேலைகள், எழுதிய எழுத்துக்கள், நடத்திய போராட்டங்கள், பேசிய கூட்டங்கள் இவைகளுக்கு ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள்.

அப்படியே 65 வயது முதல் 75 வரைக்கும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு கணக்குப் போடுங்கள்.

பிறகு 75 முதல் 85 வரை ஒரு கணக்குப் போடுங்கள்!

உங்களுக்கே புரியும். 75க்குப்பிறகு உள்ள இந்த பத்து ஆண்டுகளில் தான் அவர் தனது வாழ்நாளிலேயே மிக அதிகமான கூட்டங்களில் கலந்துகொண்டு அறிவுரை ஆற்றியுள்ளார்!

மிக அதிகமாக புதிய புதிய கருத்துக்களை எழுதிக் குவித்து பல்லாயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்!

மிக முக்கியமான போராட்டங்களான சட்ட எரிப்பு, தேசப்பட எரிப்பு, இராமன் பட எரிப்பு, பிள்ளையார் உடைப்பு, இந்தி அழிப்பு - பிராமணாள் அழிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்.
மேலும், இந்தப் பத்து ஆண்டுகளில்தான் வாக்காளர் மாநாடு, திராவிடர் கழக மாநாடு, ஜாதி ஒழிப்பு மாநாடு, சட்ட எரிப்பு மாநாடு போன்ற லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்த மாபெரும் மாநாடுகளைக் கூட்டியுள்ளார்!

இந்தப் பத்து ஆண்டுகளில்தான் மக்கள் அவருக்கு ஏராளமான பரிசுகளையும், எடைக்கு எடை பொருள்களையும், வீடு, மனை, நிலங்களையும், மணிமகுடம், செங்கோல், வாள் மற்றும் பல தங்கம், வெள்ளி அணிகளையும் காணிக்கைகளாகக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்!

இந்தப் பத்து ஆண்டுகளின் தொடக்கத்திலேதான் அறிஞர், கலைஞர், நாவலர், காவலர் எல்லோரையும் பதவி மாளிகையில் போய்ப் படுத்துத் தூங்கச் சொல்லிவிட்டு தாமே தனித்து நின்று இனவுணர்ச்சி போர்க்களத்தில் வாகை சூடியுள்ளார்!
இந்தப் பத்து ஆண்டுகளின் இறுதிக் காலத்தில்தான், கூட இருந்த குருசாமியும் வேதாச்சலமும் குழிபறித்து விட்டு ஓடியும், அதைச் சிறிதும் பொருட்படுத்தாது பாடுபட்டுள்ளார்!

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது இனிமேல் 85-க்கும் 95க்கும் இடையில் உள்ள பத்து ஆண்டுகளில் இன்னும் எத்தனை திட்டங்களை நிறைவேற்றக் காத்துக்கொண்டுள்ளாரோ, அவைகள் 75க்கும் 85க்கும் இடையில் உள்ளதைப்போல எத்தனை மடங்கு அதிகம் இருக்குமோ என்று நம்மையறியாது எண்ணி வியப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கச் செய்கின்றது!

சென்ற சில தினங்களாக விடுதலையில் அவரது சுற்றுப்பயணத்தையும், விடுதலை மலருக்காக அவர் எழுதிக் குவிக்கின்ற எழுத்துக்களையும் பார்க்கும்போது நிச்சயமாக 75-85 விட, 85-95க்கு இடையே உள்ள வரப்போகும் பத்து ஆண்டுகளில்தான் அவர், நாட்டுக்கு மிகவும் பயன்தரத்தக்கப் பெரும் பெரும் பணிகளை ஆற்ற திட்டம் போட்டுள்ளார் என்றே நான் நம்புகிறேன்! எழுதுவதிலேதான் அவர் கரங்கள் ஓய்வு பெறுகின்றன!

பேசுவதிலேதான் உள்ளம் மகிழ்வு அடைகின்றது!

உழைப்பதிலேதான் அவர் உடல் சோர்வு நீங்குகிறது!

இதுவே பெரியாருடைய உடல் அமைப்பின் தத்துவ ரகசியமாகிவிட்டது!
அவரைப் பொருத்த வரையில் வயது என்பது வெறும் காலக்கணிப்பு அவ்வளவுதான்!

அவருக்கும் அவரது உடலுக்கும் - உழைப்பிற்கும், நினைவிற்கும், பேச்சுக்கும், எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை!
நரை அவரைக் கிழவர் எனலாம் - அவரது உடலில் ஆங்காங்கு காணப்படும் திரை அவருக்கு வயதேறிவிட்டது எனலாம். ஆனால் அவரது சொல் - தொண்டு - பலன் கருதாப்பணி இவைகள் அவரை என்றுமே இளைஞராகக் காட்டிக் கொண்டே உள்ளது!

அந்தச் செயல் இளைஞர் சிந்தை களிக்கும்படி நாம் பணிபுரிவோம்!
அவர் சொல்வதை முடிப்போம்!

கேட்பதைத் தருவோம்! எவ்வழி காட்டினும் அவ்வழி நடப்போம்!

காரணம் அவர் சுயநலமற்றவர் - சூது விரும்பாதவர் - சொந்த வாழ்வு இல்லாதவர்!

அவர் சேர்க்கும் பொருள், தேனீ சேர்க்கும் தேன்! பட்டுப் புழு தயாரிக்கும் பட்டு! பிறர் வாழத் தானுழைக்கும் பெருந்தகை அவர்! எனவேதான் எத்தனை ஆயிரம் பரிசாகப் பெற்றாலும் அந்த நேரத்தோடு சரி அது பற்றிய எண்ணம் - அடுத்த நாள் காலையில் எப்போதும்போல் - காட்சிக்கு எளியராய் - கடுஞ்சொல் இலாதவராய் - எளிமைக்கு உறைவிடமாய்க் காணப்படுகின்றார்!

தாம் சேமித்தப் பொருளைப்பற்றிய கவலை எல்லாம் சிந்தையில் இருத்திக் கொண்டால் இத்தனை பணிபுரிய இயலாது ஒருநாளும் என்பதை நன்றாக உணர்ந்தவர் அவர்!
அதை விளக்க இந்த ஒரு நிகழ்ச்சியே போதும், மன்னார்குடிப் பொதுக்கூட்டம் ஒன்றில், உங்களிடம் உள்ள பொருளையெல்லாம் அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமாமே? என்று கேள்வி கேட்டதும் உடனே சிறிதும் தயக்கமின்றி ரொம்ப நல்லதாப் போச்சு, நான் எதுக்காகப் பணம் சேர்த்துள்ளேன், மக்களுக்குச் சேவை செய்ய! அரசாங்கம் எடுத்துக்கொண்டாலும் மக்களுக்குத்தானே செலவு செய்யப்போகிறது என்று பட்டென்று பதில் கூறினார்!

பொதுவாழ்வில் இத்தகைய பற்றளவும் பக்குவமானதும் ஆன மனப்பான்மையை பெரியார் அவர்களைத் தவிர வேறு யாரிடம் காணமுடியும்?
- நடிகவேள் எம்.ஆர். இராதா
தந்தை பெரியார் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை