ஆதித்தனார் உங்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்கிறாரோ


லால்குடிக்கு அய்யா அவர்களுடன் போயிருந்தேன். அதுதான் அவர்களுடன் நான் சென்ற முதல் நிகழ்ச்சி. ஒரு தோழரின் வீட்டில் விருந்து. அய்யாவை அமரச் சொன்னார்கள். அமர்ந்ததும் அய்யாவுக்கு வெளியில் நின்ற என் நினைவு வந்தது. அவர் சாப்பிடுவதற்கு ஓட்டலில் ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். அவர் நம்மவர் தான் பிரியாணி சாப்பிடுவார் என்று தோழர்கள் தெரிவித்தார்கள். உடனே என்னை அழைத்து வரச்செய்து, அதே பந்தியில் அமரச் சொன்னார் அய்யா அவர்கள். அது முதல் எங்கு சாப்பாடு என்றாலும், அவர்களுடன் என்னை உட்காரச் சொல்லிவிடுவார். சில நேரம் சாப்பிட நேரம் இருக்காது. இரவில் ஒரு கூட்டத்தை முடித்துக்கொண்டு, உடனே அடுத்த ஊருக்குக் கிளம்ப வேண்டியிருக்கும். அப்பொழுது சாப்பாட்டை டிபன் கேரியரில் எடுத்துக் கொள்வார்கள். வண்டியில் சாப்பிட்டுக் கொண்டே செல்வார்கள். அப்பொழுது எனக்கும் சாப்பாடு வண்டியில்தான்!

அய்யா அவர்களின் பிறந்த நாள்களில் நானும் பெரியார் மாளிகைக்குப் போவேன். அவர்களுக்கு (மாலைக்குப் பதில்) ஒரு ரூபாய் கொடுப்பேன்! நீங்களுமா என்று சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டார்கள். நான் சென்னைக்கு வந்த பின்பு, சிந்தாதிரிப்பேட்டை வீட்டில் அய்யா அவர்களைப் பார்க்கப் போனேன். அப்பொழுது அவர்களிடம் ரூ.5 கொடுத்தேன். ஆதித்தனார் உங்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்கிறாரோ என்று அய்யா சிரித்துவிட்டார்கள்.

அய்யா ஆப்பிள் பழங்களை எடுத்து என் கை நிறையக் கொடுத்து, வீட்டுக்குக் கொண்டு போங்கள் என்பார்கள். பிறந்த நாள் வாழ்த்துக்காக வந்தவர்கள் கொண்டு வந்த பழங்கள் அவை. நான் வேண்டாம் என்றாலும் அய்யா விடமாட்டார்கள்; என் கைகளில் திணித்துவிடுவார்கள்.

அய்யா அவர்கள் யாரையும் உபசரிப்பது இல்லை, சாப்பிடச் சொல்லுவது இல்லை என்று சிலர் கூறும்பொழுது இந்த நிகழ்ச்சிகளை நான் அவர்களிடம் தெரிவிப்பது வழக்கம்.

- .மா.சாமி, தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள்
 விடுதலை மலர்



Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை