அய்யா காட்டிய அன்பு!
1971ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் பெரியார் பிறந்த நாள். தமிழகம் மட்டுமன்றி அயல் நாடுகளில் வாழுகின்ற தமிழர்களும் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விழா நடைபெற்ற வண்ணம் இருந்தது.
தலைநகரமாகிய சென்னையில் பல்வேறு இடங்களில் விழாக்கள் எழுச்சிக் கோலம் பூண்டு நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரியார் திடலில் தந்தை பெரியாரைக் கண்டு அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்துப் பெறுவதற்காக ஆயிரக் கணக்கில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அய்யாவைச் சந்திக்க மக்கள் வரிசையில் ஆர்வமாக நின்று கொண்டிருந்தனர். நானும் சில கழக நண்பர்களோடு பெரியார் திடலுக்குச் சென்றேன். நானும் அந்த வரிசையில் போய் நின்று கொண்டேன். என்னைக் கண்ட திராவிடர் கழகத் தொண்டர்கள், என்னைப் பார்த்து, ஆசிரியர் தமிழர் தலைவர் (வீரமணி) தங்களை அழைக்கிறார், வாருங்கள் என்றனர்.
நானும் அவர்களோடு உள்ளே சென்றேன். அறையில் அய்யா மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தார். தன்னைக் காண வந்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை எண்ணி முகம் மலர்ந்து காணப்பட்டார்.
அய்யாவின் அருகில் நின்று கொண்டிருந்த ஆசிரியருக்கு வணக்கம் கூறினேன். ஆசிரியர் அய்யாவிடம் கூறினார், நம்ம மேயர் வந்திருக்கிறார் என்று!
அய்யா அவர்கள் வாங்கோ, வாங்கோ என்று புன்முறுவல் பூக்க வணக்கம் என்றார். அவர் வணக்கம் கூறுவதற்கு முன்பே முந்திக் கொண்டு நான் வணக்கம் கூறிவிட்டேன்.
நான் கொண்டு வந்த புத்தம் புதிய ரோசா மாலையை அவரது கழுத்தில் அணிவித்து மகிழ்ச்சி பொங்க அய்யாவின் அருகில் நின்றேன். உட்காருங்கள் என்றார் அன்பொழுக.
தங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் என்றேன். நின்று கொண்டா? உட்காருங்கள் அருகில் என்றார். தீண்டத்தகாதவர் என்று நம்மில் எவருமில்லை; நெருங்கி உட்காருங்கள் என்றார். நெருங்கி உட்கார்ந்தேன். இன்னும் அருகில் என்று கூறியபடியே எனது தொடையை எடுத்து அவரது தொடை மீது வைத்துக் கொண்டு அவரது கையை எனது தொடை மீது ஊன்றியபடி புகைப்படத்துக்கு ஆயத்தமானார். ஆசிரியரைப் பார்த்து, இப்போ படம் எடுக்கச் சொல்லுங்கோ என்றார். ஆசிரியரும் கட்டளையிட, புகைப்படக்காரர் படம் எடுக்க ஆயத்தமானார். அய்யாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. ஒரு தொண்டனின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில், படம் எடுத்தவுடன் அய்யாவுக்கு மீண்டும் வணக்கம் செலுத்தியபடி நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டேன். ஆசிரியருக்கும் நன்றி கூறிப் புறப்பட்டேன். இரண்டு நாட்கள் கழித்துப் பெரியார் திடலுக்குச் சென்றேன். ஆசிரியரைச் சந்தித்தேன். எனது ஆவலை முகத்தில் கண்டார். எனது வாழ்நாளில் அய்யா பெரியாருடனான சந்திப்பு ஒரு பொன்னாள் என்றேன். புகைப்படம் எடுத்துக் கொண்ட நாள் தானே? என்றார். ஆமாம் என்றேன். அய்யா எவரையும் மிகவும் மதிப்பார். அன்பு காட்டுவார். நீங்கள் காலைத் தொட்டதைக் கண்டதும் துடித்துப் போனார். காலைத் தொடுவது அய்யாவுக்கு அறவே பிடிக்காது. அதனால் காலைத் தொடாதீர்கள் என்றார். பழக்க தோசம் என்பார்கள்; என்னை விட்டு எப்படி எளிதில் போகும்? என்றேன்.
ஆசிரியர் புகைப்படத்தை எடுத்துக் கொடுத்தார். அய்யாவுடன் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டதும், அய்யா அவர்கள் எல்லோரிடமும் காட்டும் அன்பொழுகும் படத்தைப் பார்த்தவுடன் வியப்பில் ஆழ்ந்தேன். எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.
அய்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த அரிய படத்தை ஆயில் பெய்ண்ட்டிங்கில் புகழ் பெற்ற ஓவியர் நடராசன் அவர்கள் வரைந்து கொடுத்தார்.
எனது இல்லத்தில் அந்தப் படத்தை சுவரில் மாட்டி வைத்துள்ளேன். அந்தப் படத்தைக் கண்டவர்கள் எல்லாம் அய்யாவுடன் அவ்வளவு நெருக்கமாக உட்கார்ந்திருக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டி இருப்பது ஓர் அரிய வாய்ப்பே என்பார்கள்.
அன்றாடம், நான் எனது வீட்டில் அந்தப் படத்தின் மூலம் அய்யாவைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை மட்டுமல்ல; புதிய தெம்பையும் தரும்.
நாள்தோறும் கழக நண்பர்களுடன் விடியற்காலையில் கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவேன். காந்தியடிகள் சிலை தொடங்கி அண்ணா சதுக்கத்தை அடைந்து, அங்கே அய்யாவின் அடியொற்றி நடந்து உறங்கும் அண்ணாவை வணங்கித் திரும்புவேன்.
கடற்கரையில் அண்ணா சதுக்கத்தை உருவாக்கி ஒரு புதிய சாதனையை உருவாக்கிய தலைவர் கலைஞரையும் மறக்கத்தான் முடியுமா?
அய்யா, அண்ணா ஆகியோரின் காலத்தில் வாழ்ந்தோம்; இட்ட கட்டளைகளைத் தொண்டுள்ளத்தோடு செய்யும் வாய்ப்புப் பெற்றோம் என நினைக்கையில் என் உள்ளம் பெருமிதம் அடைகிறது.
பகுத்தறிவுப் பகலவன் என்றும், பகுத்தறிவுத் தந்தை என்றும் போற்றப்படும் அய்யா அவர்கள் ஓர் ஒப்பற்ற உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். அத்தகையவரின் அரவணைப்பில் சில நிமிடங்கள் நான் இருந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.
- முன்னாள் மேயர் சா.கணேசன்
தந்தை
பெரியார் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment