பெரியார் எப்போதும் தேவைப்படுகிறார்!
இந்த இயக்கம் எதிர்க்க,
எதிர்க்க வளரும்!
மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கும்,
எதிர்ப்புக்கும் இடையில், மிகுந்த சிறப்போடு இயற்கை மழை தொல்லை என்று இருந்தாலும், அடாத மழை பெய்தாலும் விடாது நடத்தியே தீருவார்கள் என்பதை உணர்ந்தோ என்னவோ இயற்கையே நம்மோடு ஒத்துழைக்கக்கூடிய அளவிற்கு மழையும் நின்று, உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய
137 ஆவது பிறந்த நாள் விழாவும் - திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
முதலாவதாக ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கே வருகின்றபொழுது, எங்களை எப்பொழுதும் அன்பொழுக வரவேற்கக்கூடிய ஒருவர் இன்றைக்குப் படமாகி விட்டார் என்ற மிகுந்த துயரத்தோடு, ஆடிட்டர் எஸ்.எம்.ராஜா அவர்களுடைய படத்தினை திறந்து வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பினை பெற்றிருக்கிறோம்.
சுயமரியாதைக்காரர்களை சமுதாயம் எளிதில் பெற்றுவிட முடியாது
இவ்வளவு கொடுமையான ஒரு நிகழ்வு இவ்வளவு விரைவில் ஒரு கடமையாக எனக்கு அமையும் என்று நான் சிறிதும் கருதவில்லை.
நாங்கள் எப்பொழுது கோவைக்கு வந்தாலும், ஆடிட்டர் ராஜா அவர்கள் மிகுந்த அன்போடு என்னை வந்து சந்திப்பார்கள்.
நிறைய நேரம் இருந்து என்னோடு உரையாடுவார்கள்.
அப்படிப்பட்ட ஒருவர் இன்றைக்கு இல்லை. ஒரு சுயமரியாதைக்காரர்,
ஒரு பெரியார் தொண்டர், ஒரு பகுத்தறிவுவாதி இறந்தால் -
ஒரு விஞ்ஞானி இறந்ததற்குச் சமமாகும். காரணம் என்ன வென்றால், ஒரு விஞ்ஞானியை அவ்வளவு எளிதில் சமுதாயம் பெற்றுவிட முடியாது. அதேபோலத்தான் சுயமரியாதைக்காரர்களையும் சமுதாயம் எளிதில் பெற்றுவிட முடியாது.
விஞ்ஞானியும் உண்மையைச் சொல்லக்கூடியவர்; சுயமரியாதைக்காரரும் உண்மையை மட்டுமே சொல்லக் கூடியவர். விஞ்ஞானியும் எதிர்நீச்சல் அடித்துத்தான் அவருடைய கருத்தை நிலை நாட்டுவார்.
சுயமரியாதை இயக்கத்துக்காரர்களும் எதையும் எதிர்நீச்சல் அடித்துத் தான் அன்று முதல் இன்று வரை தங்களுடைய கருத்துகளை மக்கள் முன் வைப்பார்கள்.
ஆகவே, அப்படிப்பட்ட அற்புதமான ஒருவரை இழந்து வாடுகின்ற அவருடைய குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு மட்டுமல்ல,
இந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல,
கழகக் குடும்பத்திற்கும், இந்தக் கொள்கைக் குடும்பத்திற்கும் உண்டு என்கிற வேதனையோடுதான் அவர்களுக்கு நாங்கள் ஆறுதல் சொல்கிறோம்.
என்றாலும்,
அடிக்கடி தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள்,
இயற்கையின் கோணல் புத்தி என்று. அப்படி வருகின்றபொழுது,
அதனை எண்ணி, எதைத் தவிர்க்க முடியாதோ, அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அந்த அடிப்படையில் ஆடிட்டர் ராஜாவிற்கு இயற்கையான எதிர்பாராத ஒரு பேரிடி போன்ற நிகழ்வு ஏற்பட்டது என்றாலும்,
அதனை ஏற்று, அவர் எப்படி இந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தாரோ,
அதேபோல அவருடைய குடும்பத்தினர் இந்த இயக்கத்திற்கு உறு துணையாக இருங்கள். இந்தக் கொள்கையை அவர் பரப்ப வேண்டும் என்று அவர் எப்படி கருதினாரோ, அதேபோல் இருங்கள். எங்களைப் பொறுத்தவரையில், ராஜா அவர்கள் இருந்தபோது இந்தக் குடும்பத்தினரிடம் எவ்வளவு ஈடுபாடு காட்டினோமோ,
அதேபோலதான்,
அவர் இருக்கிறார் என்று நினைத்து, அவருடைய குடும்பத்தோடு கழகம் நெருக்கமாக இருக்கும். அவருடைய தம்பி, அவரது குடும்பத்தினர் ராஜாவின் இடத்தை நிரப்பவேண்டும்;
அது மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில்தான்,
அவர் காண விரும்பிய சமுதாயத்தை அமைப்பதற்கு,
அவருடைய நோக்கம், அவருடைய லட்சியம் நிறைவேறுவதற்கு அதுதான் சிறந்த வழி என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
திராவிடர் கழகத்தினுடைய கொள்கைகள் ஏன் ஏற்கப்பட வேண்டியவை
அடுத்தபடியாக நண்பர்களே,
மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள். என்னுடைய உரை என்பது ஒரு 30, 40 நிமிட நேரத்திற்குள் முடியும். அதற்குள் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதற்காகத்தான், புத்தகங்கள் இங்கே இருக்கின்றன. அந்த புத்தகங்களை உங்களிடம் கொண்டு வருவார்கள்; அந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கவேண்டும்;
வாங்கிப் படிக்க வேண்டும், பரப்ப வேண்டும். தந்தை பெரியார்
137 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் - மிகச் சிறப்பான பல்வேறு செய்திகளைக் கொண்ட ஒன்றாகும்.
அதனையும் நீங்கள் வாங்கிப் பார்க்க வேண்டும். இவை எல்லாம் வெறும் வியாபாரத்திற்காக அல்ல.
எங்கள் கருத்துகள் எவ்வளவு ஆதாரபூர்வமானவை? பெரியாருடைய சிந்தனைகள் எப்படி மறுக்கப்பட முடியாதவை? திராவிடர் கழகத்தினுடைய கொள்கைகள் ஏன் ஏற்கப்பட வேண்டியவை?
இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வதற்காக அந்தப் புத்தகங்களையெல்லாம் வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கூட்டம் மழை விட்டதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் குளம்போல் நின்று கொண்டிருக்கிறது. நாற்காலிகள் எல்லாம் தண்ணீரால் நனைந்திருக்கின்றன.
அந்த நனைந்த நாற்காலிகளைத் துடைத்து விட்டு, நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இது எளிதில் காணப்பட முடியாத காட்சியாகும்.
மற்ற இடங்களில், மழை பெய்வதுபோல் இருந்தாலே, மக்கள் கூட்டத்திற்கு வரமாட்டார்கள். ஆனால், நீங்கள் இங்கே வெள்ளம்போல் திரண்டிருக்கிறீர்கள்.
இதற்கெல்லாம் காரணமான நம்முடைய அருமைத் தோழர்கள். எதிர்ப்பு, சலசலப்பு என்று சொல்லி, எங்கள் தோழர்கள் சரியாக விளம்பரம் செய்தார்களோ - இல்லையோ என்கிற கவலையினால், இந்தக் கூட்டத்தினுடைய விளம்பரத்தை எடுத்துக்கொண்ட,
இந்து முன்னணித் தோழர்கள், விஸ்வ இந்து பரிஷத் தோழர்கள், நம்மை எதிரிகள் என்று தவறாகக் கருதிக் கொண்டிருக்கின்ற நம்முடைய தமிழினப் பெருமக்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் வரும்போதெல்லாம் தவறாமல் இப்படி அடிக்கடி செய்யுங்கள்.
காவல்துறையினரைப் பார்த்ததும் எனக்கே ஒரு சந்தேகம் ஏற்பட்டது!
ஒரே ஒரு சங்கடம்தான் எனக்கு. இன்று காலையில் இருந்து வழக்கத்திற்கு மாறாக, காவல்துறை அதிகாரிகள் மற்றவர்கள் எல்லாம் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்தார்கள். அதனைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம்; என்னைக் கைது செய்வதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன். காரணம் என்ன வென்றால், கைது செய்வதற்காகத்தான் இவ்வளவு கூட்டமாக வருவார்கள்; அதனை நான் நெருக்கடி காலத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது வந்திருப்பது என்னுடைய பாதுகாப்பிற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை பிறகு அறிந்தேன்.
நாட்டில் மிகப்பெரிய பணிகள், ஏராளமான பணிகள் இருக்கிறது அவர்களுக்கு.
அதையெல்லாம் விட்டுவிட்டு, ஒரு எளிமையான மனிதனுக்கு, பெரியார் தொண்டர்களுக்கெல்லாம் தொண்டனாகப் பணியாற்றக் கூடிய என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு,
எந்தப் பதவிக்கும் போகாமல், எந்தப் புகழுக்கும் ஆளாக வேண்டும் என்று அவாவுறாத ஒரு சாதாரணமான ஆளுக்காக இவ்வளவு பேரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்களே, அதற்குக் காரணமாகி விட்டோமே என்பதை நினைத்துத் தான் எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
காவல்துறையினரின் பண்பாடு அது!
அருள்கூர்ந்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்;
அவர்களுடைய கடமையைச் செய்கிறார்கள்;
யாராக இருந்தாலும் அவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள்.
அந்தப் பணியை செவ்வனவே செய்கிறார்கள். அது பாராட்டுக்குரிய அவர்களுடைய பண்பாடு. அது மிகவும் சிறப்பானது.
ஆனால், அருமைத் தோழர்களே, எங்களை எதிர்ப்போம் என்று சொல்கின்ற நண்பர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், அவர்கள் எங்களை எதிரிகளாகக் கருதினால் கூட, நாங்கள் அவர்களை எதிரிகளாகக் கருதுவதில்லை.
இன எதிரிகளைத் தவிர, நாங்கள் அவர்களைக்கூட தனிப்பட்ட முறையில் வெறுப்பவர்களாக இருப்பவர்கள் கிடையாது. அப்படி இருக்கும்பொழுது, அவர்கள் வந்து,
பெரியார் பிறந்த நாள் விழாவை நடத்தக்கூடாது;
வீரமணி இங்கு வந்து பேசக்கூடாது என்று சொன்னால், இந்த ஒரு விழாவை நீங்கள் தடுத்து விட்டால், பெரியாருடைய கொள்கையை நீங்கள் தடுத்துவிட முடியுமா? பூனை கண்ணை மூடிக்கொண்டால்,
பூலோகமே இருண்டுவிட்டது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல, இந்தப் பூனைகள் எல்லாம் எங்கிருந்து வந்திருக்கின்றன? பூனைகள் எலிகளைப் பிடிக்க வேண்டுமே தவிர எங்களைப் பிடிக்கவேண்டும் என்று நினைக்கக்கூடாது.
ஆகவே, அந்த அடிப்படையில் கேட்கிறோம், நாங்கள் என்ன சமுதாய விரோதிகளா?
பெரியார் என்ன இந்த நாட்டிற்கு மிகப்பெரிய கேடு செய்தவரா? பெரியார் அவர்கள் எல்லோரையும் சமமாகக் கருதவேண்டும் என்பதற்குப் பாடுபட்டு,
தன்னுடைய
95 ஆண்டுகாலம் வரையில் வாழ்ந்தார்களே,
அதுவும் எப்படி? பெரிய செல்வ சீமான்; ஈரோடு நகரத்தில் இருக்கின்ற மிகப்பெரிய கட்டடங்கள் எல்லாம் அவருடையது. அப்படிப்பட்ட செல்வச் சீமானாக இருந்தவர்;
நம்மைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில். அந்தக் காலத்தில் பதவிகளுக்கு மரியாதை இருந்த காலத்தில்,
29 பதவிகளை ஒரே ஒரு வெள்ளைக் காகிதத்தில்,
நான் ராஜினாமா செய்கிறேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, பொதுமக்களுக்குத் தொண்டாற்ற வந்தவர். எவ்வளவு காலம் தொண்டாற்றினார்;
95 ஆண்டு காலம் வரையில் தொண்டாற்றினார். அதுவும் எப்படி தொண்டாற்றினார் என்பதை எண்ணிப்பாருங்கள்.
வயதான காலத்தில் நடக்க முடியவில்லை;
இந்தப் பக்கம் ஒருவர், அந்தப் பக்கம் ஒருவர் தாங்கிப் பிடித்துக்கொண்டு வரும் தொண்டுக் கிழம்; தொண்டு செய்து பழுத்த அந்தப் பழம்- தொண்டு கிழம் - அப்படிப்பட்ட அவருக்கு முதுமை காரணமாக இயற்கை வழியில் சிறுநீர் பிரிய முடியாத அளவிற்கு உடல் உபாதைகள் இருந்தன. அங்கே ஒரு ஓட்டை போட்டு, அதில் ஒரு குழாயை மருத்துவர்கள் பொருத்தி. அந்தக் குழாயில் சிறுநீர் வடிந்துகொண்டே இருக்கும், அதை ஒரு பாட்டில் வைத்து, அதனை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, அந்த வாளியைக் கையில் தூக்கிக்கொண்டு, நமக்காக 95 ஆண்டுகாலம் வரையில் வாழ்ந்தாரே தந்தை பெரியார் அவர்கள் - ஏதாவது பதவியைக் கேட்டிருப்பாரா?
உங்களிடம் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருப்பாரா?
என்னைப் பெருமைப்படுத்துங்கள், நான்தான் அவதாரம் என்று கேட்டாரா?
நீ ஏன் சூத்திரன் என்று கேட்டார்! என் சகோதரன், உழைக்கக்கூடியவன் ஏன் பள்ளன், பறையன்,
சக்கிலி,
தோட்டி என்று கேட்டார். அவர்களை மனிதர்களாக்க வேண்டாமா? என்று கேட்டார். உழைக்காத நீ எப்படி பார்ப்பானாக
- பிராமணனாக உயர்ந்த இடத்தில் இருக்கிறாய் என்று கேட்டார். எங்களுக்கு ஏன் படிப்பில்லை என்று கேட்டார். எங்களுக்குத் தகுதியில்லை,
திறமையில்லை என்று நீ பொய் சொல்லாதே என்று அதட்டிக் கேட்டார்.
பெண்களை மிருகங்களைவிட கேவலமாக நடத்தினார்கள்
எங்கள் தாய்மார்கள் எல்லாம் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகள், வேசிகள் என்று நீ எழுதி வைத்திருக்கிறாயே மனுதர்மத்தில்,
அந்த மனுதர்மத்தில் எங்களையெல்லாம் சூத்திரர்கள், பஞ்சமர்கள், நாலாம் ஜாதிக்காரர்கள், அய்ந்தாம் ஜாதிக்காரர்கள்,
பெண்கள் அதைவிட கீழானவர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்களே! மனித குலத்தினுடைய சரிபகுதி உள்ளவர்கள் பெண்கள். அவர்களையெல்லாம் மிருகங்களைவிட கேவலமாக நடத்தினார்களே! இவையெல்லாம் யாரால் மாற்றம் பெற்றன?
மலத்தை மிதித்தவுடன் என்ன செய்கிறார்கள்,
மிதித்த பகுதியை மட்டும் கழுவிக் கொள்கிறார்கள்,
நிம்மதி அடைகிறார்கள். சாணியை மிதிக்கிறான்,
அந்தப் பகுதியை மட்டும் கழுவி, தூய்மைப்படுத்திக் கொண்டு,
நிம்மதியடைகிறான்.
என்னுடைய சகோதரன், பாடுபட்டு உழைக்கின்ற சமுதாயத்துக்காரன் - அவன் சேற்றிலே கால் வைக்கவில்லை என்றால், இவன் சோற்றிலே கை வைக்க முடியாது என்கிற அளவிற்கு இருக்கக்கூடிய என்னுடைய பாட்டாளி சமுதாயத்தைச் சேர்ந்த தோழனை நீ பறையன் என்கிறாயே, தொடக்கூடாதவன் என்கிறாயே உன்னைவிட காட்டுமிராண்டி,
உலகத்தில் வேறு எவன் என்று கேட்டவர் தந்தை பெரியாரைத் தவிர வேறு எவராவது உண்டா?
திரும்பிப் போ! என்று எங்களைப் பார்த்து நீங்கள் சொல்லலாம்;
எங்களை எதிர்த்து நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்யலாம்.
எங்கள் இயக்கமே எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம். அடிக்க அடிக்க பந்து எழும்புமே தவிர, அது அமுங்காது. எதிர்க்க எதிர்க்க இந்த இயக்கம் வளரும்! வளரும்!! வளரும்!!!
ஆகவேதான், இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில், எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் என்ன சமுதாய விரோதிகளா?
தயவு செய்து நினைத்துப் பாருங்கள். எதிர்க்கின்றவர் எவராக வேண்டுமானாலும் இருக்கட்டும்;
பெரியார் அவர்களால் இதுவரை எந்த இடத்திலாவது ஒரு கலவரம் நடைபெற்றதுண்டா? எல்லா சமுதாயத்தினரையும் ஒன்றுபடுத்தியிருக்கிறார். உங்கள் மதங்கள் கலவரத்தை உருவாக்கியிருக்கின்றன. இன்னமும் கலவரத்தை உருவாக்கவேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
எப்படி பெரும்பான்மை சமுதாயத்திற்கு, உழைக்கின்ற சமுதாயத்திற்கு இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு நீங்கள் கலகத்தை உண்டாக்கவேண்டும் என்று நீங்கள் வேறுபடுத்தி, வேறுபடுத்தி பார்க்கிறீர்களோ,
அப்படி பிரித்தாளக் கூடிய அந்தக் கயமைத்தனத்தை நீங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறீர்களோ, அதேபோல, சிறுபான்மை சமுதாய மக்கள் - அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள். அவர்களும், அவர்களுக்குரிய உரிமைகளை நிலைநாட்டவேண்டும். இங்கே இருக்கின்ற இஸ்லாமியர் அரேபியாவில் இருந்து குதித்தவர் அல்ல; இங்கே இருக்கிற கிறிஸ்தவர் பெத்லகாமில் இருந்து, செருசலத்திலிருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவர் அல்ல. மூன்று, நான்கு, பத்து தலைமுறைகளுக்கு முன்பு நீ சொல்கின்ற உன்னுடைய இந்து மதத்தைச் சார்ந்தவர்.
திராவிடர் கழகம் ஒரு கட்சியல்ல;
அது ஓர் இயக்கம்!
அவர் ஏன் இஸ்லாமியர் ஆனார்? ஏன் அவர் கிறிஸ்தவர் ஆனார்? ஏன் அவர் வெவ்வேறு மதங்களுக்குப் போனார்? அதனை எண்ணிப் பார்க்கவேண்டாமா? நோய்நாடி நோய் முதல்நாடி அறிய வேண்டாமா? உன்னுடைய ஜாதி அகம்பாவம்; உன்னுடைய வருணாசிரம தருமக் கொடுமை, உன்னுடைய பெண்ணடிமைத்தனம், விதவைகளை உயிரோடு எரிக்கவேண்டும் என்கிற உன்னுடைய காட்டுமிராண்டித்தனம் இவை அத்தனையும் இருந்த காரணத்தினால்தானே,
அன்றைக்கு அவர்கள் மாறினார்கள்;
இன்றைக்கும் அந்த மாற்றம் தேவை. இந்த இயக்கம், திராவிடர் கழகம் ஒரு கட்சியல்ல; இது ஒரு அரசியல் கட்சியல்ல.
இது ஒரு இயக்கம்; வெளிநாட்டிலிருந்து வரக்கூடியவர்கள் என்னைப் பார்த்து கேட்பார்கள்,
வெளிநாட்டுக்காரர்கள்,
செய்தியாளர்கள்,
பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கும்பொழுது கேட்பார்கள், உங்கள் இயக்கத்திற்கு எவ்வளவு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று கேட்பார்கள்.
நான் சொல்வேன், இரண்டு வகையான உறுப்பினர்கள் எங்கள் இயக்கத்திற்கு உண்டு. கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள்; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் என்று இரண்டு வகை உண்டு என்று சொன்னவுடன், பேட்டி எடுத்துக்கொண்டு இருந்த ஒருவர், பேனாவை கீழே போட்டுவிட்டார்.
அய்யய்யோ, அண்டர்கிரவுண்ட் மூவ்மெண்ட் நடத்துகிறீர்களா? என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
நான் சொன்னேன், இல்லை, இல்லை. கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டிருப்பவர்கள் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள். கருப்புச் சட்டை போடாத எங்கள் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் எல்லா இயக்கத்திலும் உண்டு என்றேன்.
ஆகவே, அவர்கள் கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள். எங்கெங்கெல்லாம் இருப்பார்கள் என்பது எங்களுக்கே தெரியாது. காவல்துறையில் இருப்பார்கள்; அரசுத் துறையில் இருப்பார்கள்; விஞ்ஞானிகளாக இருப்பார்கள்; வழக்குரைஞர்களாக இருப்பார்கள்; மருத்துவர்களாக இருப்பார்கள் எங்கெங்கோ இருப்பார்கள். ஆகவேதான், அவர்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாத பகுத்தறிவாளர்கள், பெரியார் தொண்டர்கள், சிந்தனையாளர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட இயக்கம்தான் இந்த இயக்கம்.
அறிவு நேர்மை கொண்ட, அறிவு நாணயம் கொண்ட இயக்கம் திராவிடர் கழகம்!
எங்கள் இயக்கத்தினாலே ஒரு சமூகத்திற்கு விரோதமான செயல் உண்டா? எங்கள் இயக்கத்தினால் என்றைக்காவது காவல்துறைக்காவது ஒரு சிறு பிரச்சினை வந்ததுண்டா? காவல்துறைக்கும் மரியாதை இருக்கவேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். இன்னமும் அதனுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். சட்டத்தை நாங்கள் மீறுகிறோம் என்றால், திடீரென்று அங்கு சென்று செய்யாதவர்கள். எதையும் அறிவித்துவிட்டு, அறிவு நேர்மை கொண்ட, அறிவு நாணயம் கொண்ட இயக்கம், இந்த இயக்கம்.
எங்களுடைய கிளர்ச்சி,
தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்து இன்றுவரை,
சுமார்
80 ஆண்டு காலம் தாண்டிய இயக்கம், இந்த இயக்கம். அப்பேர்ப்பட்ட இந்த இயக்கத்தில்,
யாராவது விரலை மடக்கட்டும்;
இந்த இடத்தில் வன்முறை நடந்தது என்று. பெரியாருடைய தத்துவம் என்ன? பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிக்கக் கூடாது; பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடாது; அதேபோல, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. எந்தப் போராட்டம் நடத்தினாலும் எங்களை வருத்திக் கொண்டிருப்போமே தவிர, நாங்கள் கொளுத்துவதாக இருந்தாலும், நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருந்தாலும், அது எங்களைப் பொறுத்தது. பொதுமக்களை நாங்கள் வருத்தப்படுத்தியதே இல்லை.
ஆனால்,
இதுபோல் சொல்லக்கூடிய யோக்கியதை யாருக்காவது உண்டா?
பாபர் மசூதியை இடித்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள்!
இன்னமும் பாபர் மசூதியை இடித்த வழக்கில் குற்றவாளிகளாக இருக்கக்கூடியவர்கள் இன்றைக்கு மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள்; ஆளுங்கட்சித் தலைவர்களாக இருக்கிறார்கள். எங்களுக்கு அந்த நிலை உண்டா? வேறு செய்திகளைச் சொல்ல முடியுமா?
நாங்கள் ஊழல்வாதிகள் என்று எங்களைப் பார்த்து விரல் நீட்ட முடியுமா?
பெரியார் அவர்கள் தன்னுடைய பொருளையும் இந்த நாட்டு மக்களுக்குக் கொடுத்து, அவருக்கு மக்கள் அளித்த பொருளையும் சேர்த்து, அவற்றை யாருக்கு விட்டுவிட்டுப் போனார்? தன்னுடைய பிள்ளைக்காகவா விட்டுவிட்டுப் போனார்? இல்லையே! திருவண்ணாமலையில் இருக்கக் கூடிய ரமண ரிஷிபோல, தன்னுடைய குடும்பத்திற்கா உயில் எழுதி விட்டுப் போனார்? மக்களுக்காக, நமக்காக அல்லவா அவற்றை விட்டுவிட்டுப் போனார்! இதை யாராவது மறுக்க முடியுமா? இன்றைக்கு அதனால்தானே, பகுத்தறிவுப் பணி, ஏடுகள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், அதனால்தானே கல்வி நிறுவனங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் யார் படிக்கிறார்கள், திராவிடர் கழகத்துக்காரன் பிள்ளைகள் மட்டுமா படிக்கிறார்கள்.
பெரியார் என்ற மாமனிதர் இந்த நாட்டில் பிறந்த காரணத்தினால்தான்...
இந்த நாட்டில் திரும்புகிற பக்கம் எல்லாம் பொறியியல் கல்லூரிகள், திரும்புகிற பக்கம் எல்லாம் பல்கலைக் கழகங்கள். எல்லாருக்கும் எல்லாம்; கல்வி நீரோடை நாடெல்லாம் பாய்ந்தது என்று இருக்கிறதே, இது எப்படி நடந்தது தோழனே! எதிர்ப்புக் காட்டுகின்ற தோழனே! ஆர்ப்பாட்டம் செய்கின்ற மகாமகா அறிவாளிகளே, உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், இந்த இயக்கம் வந்திருக்காவிட்டால், பெரியார் பிறந்திருக்காவிட்டால், பெரியார் தன்னுடைய பணியை நடத்தியிருக்காவிட்டால், நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள்; பா.ஜ.க.வையும் சேர்த்தே சொல்கிறோம். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், தயவு செய்து நீங்கள் சிந்தியுங்கள். எங்கள் கருத்தைக் கேட்டு, அப்படியே நம்பவேண்டும் என்று ஒருபோதும் சொல்லாதவர்கள் நாங்கள். எங்கள் கருத்தை கேளுங்கள், கேட்டு சிந்தியுங்கள். அந்த வகையில் பார்க்கும்பொழுது, பெரியார் என்ற மாமனிதர் இந்த நாட்டில் பிறந்த காரணத்தினால்தான் நண்பர்களே, நம்முடைய பிள்ளைகள் படித்தவர்களாக இன்றைக்கு இருக்கிறார்கள், இதனை மறுக்க முடியுமா?
நெற்றியில் நன்றாகப் பட்டை அடித்துக் கொண்டிருப்பார்;
நாமம் போட்டிருப்பார்; கோவிலில் பிரபல பக்தராக இருப்பார்.
கடவுள் மறுப்பாளரான பெரியாரைப்பற்றி
- அவர் சொல்லுவார், பெரியாரை நாங்கள் ஒரு வகையில் கடவுளாகவே பார்க்கிறோம் என்று. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லி இருக்கலாம்;
ஆனால்,
பெரியார் இல்லை என்றால், என்னுடைய மகன் படித்திருக்க முடியாது என்று சொல்வார்; பெரியார் இல்லை என்றால், என்னுடைய மகன் வேலைக்குச் சென்றிருக்க முடியாது என்பார்.
இன்றைக்குக் காத்தான் மகன் கருப்பன் கணினி படிப்பு படித்து, பெரிய அதிகாரியாகி,
கனடாவில் அவன் இருக்கிறான்;
வாரந்தவறாமல் தன்னுடைய பெற்றோரிடம் பேசுகிறான் என்று சொன்னால், ஒரு நூறாண்டுக்கு முன்பாக இந்நிலை உண்டா? நண்பர்களே, எண்ணிப் பார்க்க வேண்டும் நீங்கள்.
திராவிடர் இயக்கம் வருவதற்கு முன்பாக இட ஒதுக்கீடு உண்டா? எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர்கள்தானே இருந்தார்கள்.
இந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிபதி - அப்பொழுதெல்லாம் இந்திய நீதிபதி என்று சொல்வார்கள்
- திருவாரூர் டி.முத்துசாமி அய்யர்; சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் இந்திய துணைவேந்தர் சர்.டி.சுப்பிரமணிய அய்யர். இப்படி முதல், முதல் என்பதில் எல்லாம் பார்ப்பனர்களாக இருந்தார்கள்.
அன்றைக்கு உஸ்மான் என்பவர் கவர்னராக இருந்தபொழுது, நீதிக்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தந்தை பெரியார் அவர்கள், கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
பொறியாளர்கள் எல்லாமே பார்ப்பனர்களாகவே இருக்கிறார்களே, எங்களுடைய ஆட்கள் யாருமே இல்லை என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்திற்கு ஆக்டிவ் கவர்னர் சர்.மகமது உஸ்மான் பதில் எழுதுகிறார்,
அய்யா உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் ஆட்களில் படித்தவர்கள் யாரும் இல்லை. இருந்தால்தானே போட முடியும்? என்று.
இந்தப் பழைய வரலாறெல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது;
இணைய தளத்தில் இதுபோன்ற செய்திகள் வரவேண்டும்;
வாட்ஸ்அப்பில்,
பேஸ்புக்கில் இதுபோன்ற செய்திகளைச் சொல்லவேண்டும்.
மனுதர்மம்தான் அரசியல் சட்டமாக மாறவேண்டும் என்று சொல்கிறார்கள்
மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்களே - படிக்க நமக்குத் தகுதியில்லை என்று சொன்னார்களே!
அந்த மனுதர்மத்தைத்தான் இப்பொழுதுள்ள மோடி அரசில் உள்ளவர்கள், இந்துத்துவாவாதிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அம்பேத்கருடைய தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திற்கு விடை கொடுங்கள்; தூக்கி எறியுங்கள்.
அதற்குப் பதிலாக மனுதர்மம்தான் அரசியல் சட்டமாக மாறவேண்டும் என்று சொல்கிறார்கள்.
நாம் கொஞ்சம் தூங்கினால், நாம் கொஞ்சம் அசந்தால், நாம் கொஞ்சம் ஏமாந்தால், அந்நிலைமை நாளைக்கு வரும். கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.
ஆகவே,
அந்தப் பணியை நாங்கள் செய்கிறோம். அவர்கள் சொல்வதுபோல் வந்தால் நிலைமை என்னாகும்? மீண்டும் சூத்திரப் பட்டம் இப்பொழுது சட்டத்தில் இருக்கிறது;
இன்னும் பளிச்சென்று வரும். நாளைக்கு உத்தரவு போட்டு விடுவார்கள்.
பெண்கள் நிலைமை என்னாகும்? இப்பொழுதே பேச ஆரம்பித்துவிட்டார்களே! பெண்கள் எதற்காக வெளியில் போகவேண்டும் என்று கேட்கிறார்கள். பெண்கள் சமையல் செய்துகொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டும் என்கிறார்கள்.
பெண் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்கள் படிக்கக்கூடாது.
இன்றைக்குக் காவல்துறையில் பெண்கள் உயரதிகாரிகளாக வருகிறார்கள்; இது எப்படி நடந்தது? சரசுவதி பூஜை கொண்டாடியதினாலா? ஆயுத பூஜை கொண்டாடியதினாலா? பெரியார் இயக்கம் இந்த நாட்டில் செய்த மகத்தான அறிவுப்புரட்சி, கல்விப் புரட்சியை செய்ததன் விளைவு தானே! இந்த இயக்கம் தோன்றி, நீதிக்கட்சி என்ற திராவிட இயக்கம் தோன்றி, உங்களில் பலர், எங்களில் பலர் பிறக்காத அந்தக் காலத்தில்,
1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாகாண மாநாட்டில் பெரியார் தீர்மானம் போடுகிறார். நீதிக்கட்சி, அதைச் சார்ந்த ஆதரவாளர்கள், பிரதமர்கள், முதல்வர்கள்,
அமைச்சர்கள் எல்லோரும் அந்த மாநாட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.
காவல்துறையிலும், ராணுவத்திலும் பெண்களுக்கும் இடம் கொடுக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டார்.
பேஸ்புக், வாட்ஸ்அப் வருவதற்கு முன்பு என்ன நிலை?
அன்றைக்கு எல்லோரும் இது நடக்குமா? காவல்துறையில் பெண்கள் இருக்க முடியுமா? என்று கேட்டார்கள்.
இன்றைக்கு இருக்கிறார்கள்; இருக்கிறார்கள், மன அழுத்தத்தோடு இறக்கிறார்கள்.
வேதனையாக இருக்கிறது. விஷ்ணுப்பிரியாக்களின் கதை ஒருபக்கம் இருக்கிறது.
அதற்கும் பாதுகாப்புத் தேடவேண்டியது எங்களைப் போன்ற இயக்கம் - மனிதாபிமான இயக்கம்தான் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு மனிதாபிமான இயக்கம், பதவியை நாடாத இயக்கம், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரு இயக்கம் - ஆகவே நீங்கள் எண்ணிப் பாருங்கள்,
பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்,
பெரியாருடைய பிரச்சாரமும், போராட்டமும், பணியும் தொடர்ந்திருக்காவிட்டால், இன்றைக்கு நாம் தோளிலே துண்டு போட்டிருக்கிறோமே,
அது தொங்க முடியுமா?
இப்பொழுதுள்ள இளைஞர்கள் வெறும் இணைய தளத்தைப் பார்த்துவிட்டு உருவானவர்கள். அவர்களுக்கு வாட்ஸ் அப் தெரியும்; பேஸ்புக் தெரியும். பழைய வரலாறுகள் தெரியாது. அதனால்தான், விவசாயிகளைப்பற்றி கவலைப்படுவதைவிட,
பிரதமர் மோடி அவர்கள் பேஸ்புக்கில் தன்னுடைய கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு என்று நான் சொல்லவில்லை.
அது வரவேற்கவேண்டிய விஷயம். ஆனால்,
அதே நேரத்தில், பேஸ்புக், வாட்ஸ்அப் வருவதற்கு முன்பு என்ன நிலை? என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
ராஜகோபாலாச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டம்!
ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலை? காமராசர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன நிலை? ராஜகோபாலாச்சாரியார், குலக்கல்வித் திட்டம் இவையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாதே!
1952ஆம் ஆண்டு ராஜகோபாலாச்சாரியார் கொல்லைப்புற வழியாக முதலமைச்சராக ஆட்சிக்கு வந்தவுடன்,
ஒரு உத்தரவைப் போட்டார். அதுதான் குலக்கல்வித் திட்டம். குலக்கல்வித் திட்டம் என்றால் என்ன? அரை நேரம் படிப்பு; அரை நேரம் வேலை. அதாவது, அவனவன் அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும். குலத் தொழிலை மகன் செய்யவேண்டும்.
சிரைப்பவன் மகன் சிரைக்கவேண்டும்;
மலம் எடுப்பவரின் மகன் மலம் எடுக்கவேண்டும்;
செருப்பு தைப்பவனின் மகன் செருப்பு தைக்கவேண்டும்;
வெளுப்பவன் பிள்ளை துணி வெளுக்க வேண்டும். துப்புரவு செய்பவருடைய பிள்ளை துப்புரவு பணிகளைச் செய்யவேண்டும் என்பதுதான்.
தந்தை பெரியார் அவர்கள் மிகப்பெரிய அளவிற்குப் போராடி
1954 ஆம் ஆண்டு, ராஜகோபாலாச்சாரியாரை,
அவருடைய இனத்தாரே கீழே இறங்க வைத்தார்கள்.
அப்பொழுதுதான்,
தயங்கிய காமராசரை முதலமைச்சராக நீங்கள் பதவி ஏறுங்கள் என்று சொல்லி, பெரியார் அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு ஓர் உந்து சக்தியாக விளங்கினார்.
ராஜகோபாலாச்சாரியார் மூடிய 6000 பள்ளிகளைத் திறந்தார் காமராசர்.
இந்த மாற்றங்கள் எப்படி வந்தன; பெரியாரால்தானே வந்தது. எங்களைத் திரும்பிப் போங்கள் என்பது, ஆர்ப்பாட்டம் செய்வது, கொடும்பாவி எரிப்போம் என்றால் நாங்கள் மிரண்டு போய்விடுவோமா?
நீ ஆளையே எரிக்க வந்தாலும், இந்தக் கொள்கையை உன்னால் அசைக்க முடியாது; ஆட்ட முடியாது.
பெரியாருடைய சிந்தனை உலகத்தில் வேறு எவருக்காவது வருமா?
மனிதன் மிருகமாக இருந்த நேரத்தில்,
விலங்காண்டிகளாக இருந்த நேரத்தில் எரித்திருக்கலாம். புரூனோவை எரிக்கவில்லையா?
நந்தனை எரித்த வரலாறெல்லாம் உண்டே! அதனால், எரிப்போம் என்று சொல்கின்ற புரூடா வெல்லாம் எங்களிடம் பலிக்காது. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்தவர்கள்.
பெரியார்மேல் செருப்பு வீசினார்கள்; ஒரு செருப்பு தானே வீழ்ந்தது;
இன்னொரு செருப்பு விழவில்லை என்று கேட்டவர் தந்தை பெரியார் அவர்கள். செருப்பு என்ன சாதாரண விஷயமா என்றார் அய்யா. 14 ஆண்டுகள் இந்த நாட்டையே ஆண்டு இருக்கிறதே என்றார். பெரியாருடைய சிந்தனை உலகத்தில் வேறு எவருக்காவது வருமா?
ஆகவே, இன்றைக்கு எங்களை எதிர்க்கின்ற தோழர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், எங்களை நீங்கள் எதிரிகளாகக் கருதலாம். சகோதரர்களே,
நீங்கள் வெறும் அம்புகள்தான்.
நாம் அடிமையாக இருக்கவேண்டும் என்பதுதானே மனு தர்மம். அப்படித்தானே நாம் இருந்தோம்.
ஆயிரம் ஆண்டு கால அடிமைத்தனம், அதனை உடைத்த பெருமை பெரியாரின் கைத்தடிக்கே உண்டு; பெரியாரின் இயக்கத்திற்கே அது உண்டு. ஏன் பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறோம்?
கொள்கைகளைச் சொல்வதற்காகத்தான். உங்களிடம் நாங்கள் என்ன கேட்கப் போகிறோம். நாங்கள் இல்லை என்றால் இட ஒதுக்கீடு வந்திருக்குமா?
இட ஒதுக்கீடு பிரச்சினையில் வருமான வரம்பைக் கொண்டு வந்தார் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அதனை திராவிடர் கழகம் எதிர்த்தது;
அவர் போட்ட ஆணையை எரித்து, மூட்டை மூட்டையாக சாம்பலை கோட்டைக்கு அனுப்பி வைத்தோம்.
உத்தரவை திரும்பப் பெற்ற எம்.ஜி.ஆர்.
நாவலர் அவர்கள் அப்பொழுது அ.தி.மு.க.வில் இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்கள், நாவலரை எங்களுக்குப் பதில் சொல்லச் சொன்னார். நீங்கள் பதில் சொன்னால்தான் வீரமணிக்குச் சரியாக இருக்கும் என்று.
நாவலர் அவர்கள், நீங்கள் சாம்பல் அனுப்பலாம்;
கோட்டையில் குரோட்டன்ஸ் செடி இருக்கிறது; நீங்கள் அனுப்பிய சாம்பலை அந்தச் செடிக்கு உரமாகப் போடுவோம் என்றார்.
நான் உடனே அடுத்த நாள் விடுதலையில் எழுதினேன்,
நாவலர் அங்கே சென்றிருக்கிறார்கள்,
அவரை நல்ல இடத்தில் வைத்திருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், எம்.ஜி.ஆர்.
தோட்ட வேலைக்குத்தான் அவரை வைத்திருக்கிறார் என்பது இப்பொழுதுதான் புரிந்தது என்று.
செல்வாக்குள்ள எம்.ஜி.ஆர்.
அவர்கள்,
பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்ததால், அப்பொழுது 38 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றார்.
பிறகு, எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த உத்தரவை திரும்பப் பெற்றாரா? இல்லையா? பெற வைத்தோமா இல்லையா? அந்த இயக்கம்தான் இந்த இயக்கம்.
பா.ஜ.க. அரசு ஒத்திகைப் பார்க்கிறது!
மீண்டும் பொருளாதார அடிப்படையைக் கொண்டு வரவேண்டும் என்று, ஆர்.எஸ்.எஸ்.
தூண்டுதலில்,
பா.ஜ.க.
அரசு ஒத்திகை பார்க்கிறது.
இரண்டாவது மண்டல் புரட்சி வரும்!
இப்பொழுதுகூட தலையைத் தூக்கிப் பார்த்தார்கள்,
பிகாரில் இருந்து லாலுபிரசாத் சொன்னார், இரண்டாவது மண்டல் புரட்சி வரும் என்றார்.
பிகாரில் தோற்றுவிடுவோமோ என்று நினைத்து, இல்லை இல்லை அது ஆர்.எஸ்.எஸ். சொன்னது; அது பி.ஜே.பி.யின் கொள்கை இல்லை என்று இப்போது பின்வாங்கியிருக்கிறார்கள்! ஆனால், பாம்பு ஒரு அடி வாங்கியதும், தலையை புற்றுக்குள் இழுத்துக் கொண்டுள்ளது.
ஆனால்,
இன்னும் அது சாகவில்லை;
மீண்டும் படமெடுத்து ஆடும்; நிரந்தரமாக அதனை அடிக்கின்ற அடி பெரியாரின் கைத்தடியால் மட்டும்தான் முடியும். சமூகநீதிக்கு எதிராக யார் எந்தப் பிற்போக்குச் சக்தி படமெடுத்து ஆடினாலும்,
அதனை ஒழிக்கவேண்டும்.
இந்தியாவில், தமிழ்நாட்டைத் தவிர
69 சதவிகித இட ஒதுக்கீடு வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? இவையெல்லாம் எப்படி வந்தன? இந்த இயக்கம் பாடுபட்டதினால் தானே!
இன்றைக்கு அய்.ஏ.எஸ்.
அதிகாரிகளாக,
அய்.பி.எஸ்.
அதிகாரிகளாக மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் வந்திருக்கிறதே,
அந்த இட ஒதுக்கீடு இல்லை என்றால், வந்திருக்க முடியுமா? இதை ஒழிக்கவேண்டும் என்று இன்றைக்குச் சொல்கிறார்களே - பழைய மாதிரி பார்ப்பனர்கள்தானே நூற்றுக்கு நூறு எல்லாத் துறைகளிலும் வருவார்கள்.
பெரியார் தேவைப்படுகிறார்;
என்றைக்கும் தேவைப்படுகிறார்; எப்பொழுதும் தேவைப்படுகிறார்.
மருந்து தொழிற்சாலைகள் எப்பொழுதும் தேவைப்படும்
மருந்து சாப்பிடுவதால்,
நோய் குணமாகி விடுகிறது.
உடனே நோய்தான் சரியாகிவிட்டதே,
மருந்து கடைகள் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? மருந்து தொழிற்சாலைகளே வேண்டாம் என்று மூட முடியுமா? எப்பொழுது வேண்டுமானால், அந்த நோய் வரலாம். அதிலும் இப்பொழுது திடீரென்று பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் மற்ற மற்ற நோய்கள் வருகின்றன.
அதனால்,
அந்த மருந்து தொழிற்சாலைகள் எப்பொழுதும் தேவைப்படும்.
மூச்சுக் காற்றினுடைய முக்கியத்துவம் எப்பொழுது தெரியும் என்றால்...
இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல நண்பர்களே, உங்களுடைய மூச்சுக் காற்று போன்றது. மூச்சுக் காற்று மிகவும் முக்கியம். ஆனால், யாராவது மூச்சுக்காற்றுக்கு நன்றி சொல்கின்றோமா?
நல்ல காற்றை உள்ளிழுத்து,
கெட்ட காற்றை வெளி விடுகிறோம். மூச்சுக் காற்றினுடைய முக்கியத்துவம் எப்பொழுது தெரியும் என்றால், மூச்சுத் திணறுகிறபோது, மாரடைப்பு ஏற்படும்பொழுதுதான்.
குழாயினை மூக்கினுள் விடும்போதுதான்.
அப்பொழுது தான் மூச்சுக் காற்றினுடைய முக்கியத்துவத்தின் அருமை புரியும்.
எனவே, மூச்சுக்காற்றுபோல இருக்கக்கூடிய இயக்கம் தான் பெரியார் இயக்கமாகும்.
அந்த இயக்கத்தினுடைய பணியை நீங்கள் பாராட்டினாலும் சரி, கல்லெடுத்துப் போட்டாலும் சரி, கொடும்பாவி எரித்தாலும் சரி, நீங்கள் வரவேற்பு கொடுத்தாலும் சரி, எங்கள் பணி ஓயாது! எங்கள் பணி நிற்காது! எங்கள் பணி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
மோடி வந்தால் மாற்றம் வரும் என்று சொன்னவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே! இதனை ஓராண்டுக்கு முன்பே இங்கே நடைபெற்ற கூட்டத்திலும் அதுபற்றி சொன்னோம். இன்றைக்கு விவசாயிகளின் நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா? தற்கொலைகள்தான் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்
தமிழ்நாடு மின் மிகை மாநிலமா? மின் புகை மாநிலமா? என்கிற வகையில் கரண்ட் கட் கோவை போன்ற இடங்களில் அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு வெளிமாநிலங்களிலிருந்து மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குகிறது. வட மாநிலத்தில் ஒரு யூனிட் 5.05 காசுக்கு கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அதானியிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு 7.10 காசுக்கு ஒப்பந்தம் போட்டு வாங்குகிறார்கள். அப்படி இருந்தும், இங்கே இருக்கின்ற குறு, சிறு விவசாயிகளுக்கு மின்சாரம் இல்லை.
எல்லோரும் வேண்டிக் கொண்டு திருப்பதிக்குச் செல்வார்கள்; திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒரு அறிக்கை கொடுக்கிறார்,
பெண்கள் யாரும் தனியாக திருப்பதிக்கு வராதீர்கள்;
அப்படி வந்தால் பாதுகாப்பு இல்லை. குடும்பத்தோடு வாருங்கள் என்று சொல்கிறார்கள்.
ஏழுமலையானின் சக்தியை நம்பாமல், குடும்பப் பாதுகாப்போடு வாருங்கள் என்று சொல்கிறார்.
ஏழு கொண்டலவாடு, கோவிந்தா! கோவிந்தாதான்! பகவானுக்கு சக்தியில்லை என்பது இப்பொழுது உங்களுக்கு நன்றாக விளங்குகிறதல்லவா!
விவசாயிகள் பிரச்சினையில் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
இன்றைக்கு காவிரி பிரச்சினை எந்த நிலைமையில் இருக்கிறது.
மன்மோகன்சிங் ஆட்சி இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது. இன்றும் இப்படித்தான் உள்ளது. அதற்கு முன்பு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது, தெளிவான ஒரு உத்தரவைப் போட்டார். இங்கே கலைஞர் ஆட்சியில் இருந்தபொழுது நடுவர் மன்றம் அமைத்தார்கள். நடுவர் மன்ற தீர்ப்பும் வந்தது. அதனை அமல்படுத்துவதற்கு பிரதமரிடமோ,
குடியரசுத் தலைவரிடமோ செல்லவேண்டிய அவசியமில்லை. காவிரி நீர் மேலாண்மை கண்காணிப்பு ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து எவ்வளவு நாள்களானது.
அதனை மத்திய அரசு செயல்படுத்தி இருக்கிறதா?
மோடி அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியிருக்கிறதே,
விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறார்?
இன்றைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்தானே எழுதுகிறார்.
கருநாடகத்தைப் பாருங்கள்,
கேரளாவைப் பாருங்கள், ஆந்திர மாநிலத்தைப் பாருங்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். முன்னாள் முதல்வர்,
இன்னாள் முதல்வர், அத்துணை பேரும் சேர்ந்து ஒரே குரலில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்கவேண்டாம் என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அந்த நிலை உண்டா? எல்லாப் பிரச்சினைகளிலும் தனித்தனியாகத்தானே நிற்கிறார்கள்.
ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டாமா?
எங்களைப் பார்த்து இந்துக்களுக்கு எதிராகப் பேசுகிறோம் என்று சொல்கிறீர்களே, மோடி ஆட்சிக்கு வந்தபின் அவர் அதிகமாக இருக்கும் இடம் வெளிநாடுகளில்தான்.
அவரை என்.ஆர்.அய். என்று சொல்கின்ற நிலைமை வந்திருக்கிறது.
நேபாள நாட்டைப்பற்றி சொல்லும்பொழுது ஒரே இந்து நாடு என்று சொன்னார்கள்.
ஆனால்,
இப்பொழுது நிலைமை என்ன? மோடி அரசு வருவதற்கு முன்பு வரை நம் ஆட்கள் மார்தட்டிச் சொல்வார்கள்,
நேபாளம் ஒரு இந்து நாடு என்று. ஆனால்,
இப்பொழுது நேபாளம் ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதனைப் பார்த்து இங்கே உள்ளவர்களுக்கு கோபம் ஏற்பட்டிருக்கிறது.
இங்கே இருக்கும் அரசியல்வாதிகள் இந்து நாடு என்பதைச் செயல்படுத்தினால்தான் உங்கள் நாட்டுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம் என்று கர்ஜித்தார்கள்.
ஆனால்,
அந்த நாட்டிலுள்ள அத்துணை பத்திரிகைகாரர்களும் எழுதுகிறார்கள்,
எங்கள் நாட்டில் அரசியல் சட்டத்தை எப்படி அமைக்கவேண்டும் என்பதை நாங்கள் ஓட்டு வாங்கி, முடிவு செய்திருக்கிறோம்.
மதச்சார்பற்ற தன்மைக்கு 90 சதவிகித ஆதரவை அளித்திருக்கிறார்கள். அதன்படி நாங்கள் செய்கின்றோம்.
இந்து நாடாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என்று கேட்கிறார்கள்.
எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடலாமா? என்று கேட்டார்கள்.
நாங்கள் தலையிடுவோம் என்று இங்கே மோடி அரசு சொல்கிறது.
ராஜபக்சே போர்க்குற்றவாளி என அறிவித்தது அய்.நா.
ஈழத்தில் என்ன நடந்தது? என் சகோதரிகள்,
என் தமக்கைகள், என் இனம், 90 ஆயிரம் சகோதரிகள் விதவைகள். நினைத்தாலே நெஞ்சம் வெடிக்கிறது;
உள்ளத்திலிருந்து ரத்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. சிங்களக் கொடுமையாளன், இனப்படுகொலையாளன் ராஜபக்சே செய்த இனப்படுகொலையால், அவனை போர்க் குற்றவாளி என்று அய்.நா. அறிவித்தது.
அய்.நா. அமைத்த மனித உரிமை ஆணையத்தின் மூவர் குழு ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவித்தனர்.
இன்றைக்கு பன்னாட்டு நீதிமன்றம் - சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற நிலை வந்தவுடன்,
அமெரிக்கப் பெருமுதலாளிகள், உலகத்தை அவர்கள்தான் ஆளவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில்,
அவனுக்கு ஒரே கவலை என்னவென்றால், இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த நேரத்தில், சீனா உள்ளே புகுந்து தன்னுடைய ஆளுமையை விரிவுபடுத்தியிருந்தனர்.
அதனைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதால்,
அமெரிக்கா என்ன சொல்கிறது,
இலங்கையைத் திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காக,
உள்நாட்டு விசாரணையே போதும் என்று சொல்கிறது.
கொலைகாரனையே நீதிபதியாக ஆக்குவதா?
கொலை செய்தவனையே நீதிபதியாக ஆக்குவதா? இதனை விட கொடுமை வேறு எங்காவது உண்டா?
இந்தப் பிரச்சினையில்கூட தமிழகத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும் என்று நினைக்காமல், தனித்தனியாகத்தானே முகத்தைக் காட்டுகிறார்கள்.
அதனை நினைத்தால் வேதனையாக அல்லவா இருக்கிறது.
எங்களைப் போன்றவர்கள் பொதுவாக இருக்கக்கூடியவர்கள் இதனை மக்கள் மத்தியில் சொல்லக்கூடும். எங்களுக்கு கட்சியில்லை,
ஜாதியில்லை,
மதமில்லை,
எங்களுக்குக் கொள்கை உண்டு. எங்களுக்கு இன உணர்வு உண்டு. எங்களுக்கு மனிதாபிமானம் உண்டு என்கிற அடிப்படையில் இதனை தெளிவாக எடுத்து உங்களிடம் சொல்கிறோம்.
தமிழக மீனவர் பிரச்சினையில் நிலைமை என்ன? தமிழக முதலமைச்சர்
62 கடிதங்களைப் பிரதமருக்கு எழுதினார்.
அந்தக் கடிதம் எல்லாம் மத்திய அரசாங்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னமும் ராணுவப் பிடியில் இருந்து வெளிவரவில்லை. தமிழர்கள் வாக்களித்த பிறகும்கூட, விக்னேசுவரன் போன்றவர்கள் முதலமைச்சர்களாக வந்த பிறகும்கூட, அவர்களுக்கு அதிகாரம் இல்லையே! இதனை இந்தியா கண்டிக்க வேண்டாமா என்று தமிழகத்திலுள்ள அத்துணை தலைவர்கள் கேட்டார்கள். தமிழக முதலமைச்சர் அவர்களும் சட்டப் பேரவையில் தீர்மானம் போட்டார். அந்தத் தீர்மானத்தை நாம் எல்லோரும் வரவேற்றோம்.
இலங்கைக்கு ஒரு நீதி - நேபாளத்திற்கு ஒரு நீதியா?
அந்தத் தீர்மானத்தில் மிக விரிவாக சொல்லியிருக்கிறார்கள். இதற்கு முன்பு 4 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம் என்று. ஆனால், அந்தத் தீர்மானத்தின் சரத்து நிறைவேற்றப்படவில்லை.
ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்திருக்கிறது.
கேட்டால், அது உள்நாட்டு விவகாரம் என்று இந்திய அரசாங்கம் சொல்கிறது. ஆனால், நேபாளம் உள்நாட்டு விவகாரம் இல்லையா? அதற்கொரு அளவுகோல், இதற்கொரு அளவுகோலா?
பெரியார்தான் கேட்பார், தலைக்கு ஒரு சீயக்காய்;
தாடிக்கொரு சீயக்காயா? என்று. அதுபோன்று நேபாளத்திற்கு ஒரு நீதி - இலங்கைக்கு ஒரு நீதியா?
காவல்துறை அதிகாரிகளுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி!
ஆகவே, நண்பர்களே பெரியாரின் பகுத்தறிவு என்பது எல்லாத் துறைகளுக்கும் போகவேண்டியது. பெண்ணடிமையா? பெண்ணுரிமையா?
மக்களுக்கு கல்வி உரிமையா? மூட நம்பிக்கை எதிர்ப்பா?
இவை அத்தனைக்கும் பெரியார் தேவைப்படுகிறார்; இந்த இயக்கம் தேவைப்படுகிறது. எனவே, இந்த மூச்சுக்காற்றின் முக்கியத்துவத்தை உணருங்கள், உணருங்கள்! என்று சொல்லி, இந்த மழையையும் பொருட்படுத்தாமல்,
உரையைக் கேட்ட உங்களுக்கு நன்றி! சிறப்பாகக் கடமையைச் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதோடு,
இவ்வளவு பெரிய எதிர்ப்பைக் காட்டி, ஒரு பரபரப்பை மழையிலும் உங்களை வரவழைத்த நம்முடைய இன எதிரிகளுக்கும் நன்றி, நன்றி, நன்றி! என்று கூறி முடிக்கின்றேன். வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- 28.09.2015 அன்று கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை.
நூல் - பெரியார் எப்போதும் தேவைப்படுகிறார்!
முப்பெரும் முழக்கங்கள்
தொகுப்பாசிரியர் - கி.வீரமணி
Comments
Post a Comment