திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நிறுவனர் நாள் விழா !



08.11.1967 இல் திருச்சிப் பெரியார் மாளிகையில் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் நிறுவனர் நாள் விழாவில் தந்தைப் பெரியார் . வெ. ராமசாமி அவர்கள் ஆற்றிய உரை: நாவலர் நெடுஞ்செழியன் தமிழக அமைச்சர் தலைமையில்:

தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! அமைச்சர் அவர்களே!  
 
இங்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் சார்பில் நிறுவனர் நாள் என்னும் பேரால் இன்று கூட்டப்பட்ட இந்தக் கூட்டம் நல்ல பெரிய விழா போல பெருமையாக நடைப்பெற்றது. என் இரண்டொரு சொற்களுக்குப் பின்னாலே, தலைவர் முடிவுரை நிகழ்ச்சி முடிவு பெறும். இதற்கு அப்புறம் இரவு11 மணி சுமாருக்கு இங்கே ஒரு சிறிய நடிப்பு நாடகம் என்னும் பேராலே பகுத்தறிவுக்கு ஏற்ற சில விஷயங்களை நடித்துக் காட்டப்படும்.

நேரம் அதிகமாயிட்டுது, நானும் அதிகமாகப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. உங்களுக்குச் சொல்ல வேண்டிய அருமையான விஷயங்களைப் பற்றி எல்லாம் அறிஞர் எல்லோரும், பெருமைக்குரிய அமைச்சர் அவர்களும், நல்ல வண்ணம் எடுத்துச் சொன்னார்கள். அதோடு கூடவே அவர்கள் பேசிய பெரும்பாலான நேரத்தை என்னைப் பாராட்டுவதைப் பற்றியும், என்னுடைய சிறு தொண்டுகளைப் பற்றியும், எடுத்து விளக்குவதைப் பற்றியும் மிக்கப்புகழ்ச்சியோடு, பெருமைக்குரிய வார்த்தைகளை எடுத்துச்சொன்னார்கள். அவைகளுக்கு எல்லாம் நான் பொருத்தமானவன் என்று நான் ஏற்றுக் கொண்டேன் என்று சொல்லுவதற்கில்லை. சம்பிரதாயமுறைக்கு சொல்லவேண்டிய அவசியம் இருந்திருக்கிறது. அத்தோடன்றி நம்மைப் பற்றி என்மீதுள்ள அன்பு காரணமாக சில வார்த்தைகள்சொல்லப்பட்டன. இருந்தாலும் நான் என் மனப்பூர்த்தியாக அதற்கு மீண்டும் நான் நன்றி செலுத்துகிறேன்.

இன்றைய தினம் நான் ஏதாவது சொல்ல வேண்டுமானால் எதோ இந்த மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு என்கிற முறையிலே (ஆசிரியர்) பயிற்சிக்காக வந்திருக்கிறவர்களுக்கு, சில வார்த்தைகள் சொல்லவேண்டியது கடமை என்று கருதுகிறேன். ஏனென்றால் வருஷத்துக்கு ஒரு முறைதான் இந்த மாணவர்களையோ, இந்த மாணவிகளையோ, இந்த ஆசிரியர்களையோ நான்கிட்டே நெருங்கிப் பார்க்கும்படியான வாய்ப்பு ஏற்படுகின்றது. வருஷம் எல்லாம் நான் இவர்களிடம் பேசுவதுமில்லை.

அவர்களை எல்லாம் நான் பார்ப்பதும் இல்லை. ஏதோ சில ஆசிரியர்களிடம் தான் பேசுவேன் சில பொதுக் காரியங்களிலே மற்ற ஆசிரியர்களிடமும் நான் பேசுவதுமில்லை.ஏதோ என்னுடைய இயக்கம் பகுத்தறிவு இயக்கமானாலும், என்னுடையதொண்டு பகுத்தறிவுத் தொண்டானாலும், அதை மக்களிடத்திலே நான் சொல்றதில்லை. எந்த மக்களிடத்திலே? இங்கேயிருக்கின்ற மாணவ மக்களிடத்திலே சொல்ல வேண்டிய வாய்ப்பு ஏதாவது உண்டென்றால் இப்படிப்பட்ட ஒரு நாளிலேதான். இது கல்வி ஸ்தாபனம்,அதுஅரசாங்கத்துக்குக்கட்டுப்பட்டது. அவர்களுக்குள் சில திட்டவட்டங்கள் உண்டு, அதுக்கு மாறாகப் போயிடுமோ என்னமோ நம்முடைய கருத்துக்கள் என்று வைத்தே நான் அவர்களிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதே இல்லை. இன்றைய தினம் தான் உங்களை எல்லாம் இவ்வளவு நெருக்கமாகப் பார்த்துப் பேசும்படியான வாய்ப்பு இருக்குது. அதுதான். ஆனதினாலே முதலிலே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பகுத்தறிவு ஆசிரியரால்தான் பகுத்தறிவுவாதிகளை உருவாக்க முடியும்:

நீங்கள் எல்லாம் முதலில் பகுத்தறிவுவாதிகளாக ஆகணும். ஏன் உங்களுக்கு அவ்வளவு சொல்லுகிறேன் என்றால் - நீங்கள் மாணாக்கர்கள் என்கிற பெயரே தவிர, நீங்கள் எல்லாம் ஆசிரியர்களாகப் போகிறவர்கள். ஒவ்வொருவரும் உங்களுக்குக் கீழே 100,200,300- பிள்ளைகளை வைத்து நீங்கள் அவர்களுக்கு கல்வி என்னும் பேராலே பயிற்சி அளிக்க உள்ளீர்கள், சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள். அதிலே உங்களுக்குச் சொல்ல வேண்டியதிருக்கு. நீங்கள் உங்களுடைய பாடமோ மற்றபடி அந்த பிள்ளைகள் பாஸ்பண்ண வேண்டியதற்காக எடுத்துக் கொள்ளவேண்டிய முயற்சியோ ஒரு பக்கமிருந்தாலும் அந்தப் பிள்ளைகளுக்கு தெரிவிக்க வேண்டிய லட்சியமெல்லாம் அவர்கள் பகுத்தறிவுவாதிகளாக ஆகணும். அதற்கு வேண்டிய முயற்சிகள் எல்லாம் நீங்கள் செய்யணும். அதற்கு முன்பே நீங்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகளாக ஆகணும்.

ஜனநாயகம் குறித்த தொலைநோக்குச்சிந்தனை

இந்த நாட்டிலே, அரசாங்கம் மூட நம்பிக்கைக்காகத் தான் இருக்குதே தவிர, ஏதோ சில கொள்கைகள் வைத்துத் தான் சில பேரின் வாழ்வு இருக்கிறதே தவிர மக்களை அடக்கி ஆண்டு மனிதத் தன்மைக்கு ஏற்ப பயிற்சி அளிக்க வேண்டுமென்கிற நிலைமை இல்லை. அதை ஆட்சியாளர் மீது குற்றம் சொல்லுவதற்கில்லை. அது ஜனநாயகம் என்றால் அப்படித் தான் இருக்கும். இன்னும் நாளாக நாளாக ஜனநாயகம் என்றால் நாமெல்லாம் ஒருவரை ஒருவர் கொல்லுகிற முறைக்குத்தான் வரும் அதனாலே. ஆனால் மக்களுக்கு நாம் வேண்டிய அளவுக்குப் பகுத்தறிவைப்பெற நாம் பயிற்சியைச் செய்து கொடுத்தோமானால் அவர்கள் கொஞ்சம் பலன் பெறும்படியான நிலைமைக்கு பலன் அனுபவிக்கும்படியான நிலைமைக்கு வரமுடியும்.

நம்ம நாட்டிலே பகுத்தறிவுப் படிப்பு இல்லே. ஆமாம் பகுத்தறிவுப்படிப்பு இல்லே. இப்போ உதாரணமாகச் சொல்லுவேன். இன்றைய தினம் நம்முடைய அமைச்சர் (இரா.நெடுஞ்செழியன் அவர்கள்) பேசினார். இங்கு பகுத்தறிவை அடிப்படையாக வைச்சிகிட்டு பேசினார். அதனாலே அவராலே இங்கு பல அரிய கருத்துக்களை எடுத்துச் சொல்ல முடிந்தது. நீங்க வேறு எந்த அமைச்சரை இங்கு அழைத்து வந்து பேசச் செய்தாலும் இந்தக் கருத்தை எடுத்துச் சொல்ல முடியாது. சொல்லவும் அவர்கள் துணிவு கொள்ளமாட்டார்கள். ஆனதினாலே பகுத்தறிவின் அடிப்படையிலேயே வாழ்க்கை நடத்துகிறாப்பிலே நாடும் பகுத்தறிவுமயமாக ஆகும் முறையிலே எவ்வளவு சொல்ல வேணுமோ அவ்வளவு சொல்லணும்.

பகுத்தறிவும் மூடநம்பிக்கைகளும்

வெறும் பகுத்தறிவு - பகுத்தறிவு என்றால் என்னா? என்று சொல்லுவீர்கள். அறிவுக்கு அவர் விளக்கம் சொன்னார் பகுத்தறிவுக்கு அமைச்சர் விளக்கம் சொன்னார். எதையும் ஏன்?, எதற்காக? எப்படி?, என்று கேட்கிற ஒரு துணிவு வரவேணும் உங்களுக்கு எப்பவும். பகுத்தறிவுக்கு விரோதி மூடநம்பிக்கை தான். உலகம் சர்வமும் மூட நம்பிக்கையிலேவந்திட்டுது. கடவுள் என்றால் மூடநம்பிக்கைதான்- மதம் என்றாலும் மூட நம்பிக்கைதான் - மகான்கள் என்றாலும் மூட நம்பிக்கைதான், சாஸ்திர, சம்பிரதாயம் என்றாலும் மூடநம்பிக்கைதான். இன்னைக்கு அவுங்களுக்கு மூடநம்பிக்கையாய் இருந்ததான்னு ஒரு கேள்வி கேட்கலாம்? ஒருசமயம்அன்னைக்கு, அவர்கள் அறிவுக்கு ஏற்றது அவ்வளவுதான் இருந்திருக்கலாம். என்றைக்கு இவைகள் எல்லாம் தோன்றிச்சோ அன்றைக்கு. இன்றைக்கு அவைகள் இருக்கிறதென்றால் மூடநம்பிக்கை- பேரால்தான் இருக்கிறதே தவிர உண்மையின்பேரால் இல்லை.

ஏனென்றால், அறிவைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னதை நம்ப வேணும், எழுதினதை நம்ப வேணும் ஏற்பட்டதை நம்ப வேணும் என்ற அந்த நம்பிக்கைக் காரணமாக வருகிறது தான். அதற்காக வேண்டி உண்மையையெல்லாம் துறந்துவிடவேண்டுமென்று நான் சொல்லலே. ஆராய்ந்து எதையும் ஒப்புக் கொள்ளுகிறது என்று துணிவு வைத்துக் கொண்டு நீங்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகளாக ஆகவேண்டும். பிள்ளைகளுக்கும் அதையே விளக்க வேண்டும். படிப்பைச் சொல்லிக் கொடுங்க. அவுக பாஸ் பண்ணவும் பாடுபடுங்க. ஆனால் அவர்களை அறிவாளிகளாக ஆக்க வேணும் என்கிற எண்ணம் முதலில் உங்களுக்கு இருக்க வேணும். அந்தப் படிப்பு இல்லை இன்னையவரைக்கும். இன்னும் கொஞ்ச நாளைக்கு வெள்ளைக்காரன் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ஆகியிருக்கும். அவன் போன உடனே மூட நம்பிக்கைக்கு வந்துட்டாங்க. அதில் மாற்றமடையணும். நமக்குத் தேவை இப்ப அந்த காரியம்தான். மக்களை பகுத்தறிவாளர்களாக்குவது தான்.

அய்யா ஆசிரியர்களிடம் கோருவது (வேலையை செய் () ராஜினாமா செய்:
அடுத்தாற்போல, உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் படிக்கிற பிள்ளைங்க, படிக்கிறபோதும் பிறகு நாளைக்கு வாத்தியாராவீங்க வாத்தியாராகிற போதும் நீங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கவும், அவர்கள் அறிவைத் தெளிவுபடுத்தவும் தான் நீங்கள் பாடுபட வேண்டுமே தவிர, நீங்கள் அரசியலிலேயோ, கிளர்ச்சிகளிலேயோ சம்பந்தப்படக்கூடாது. நாட்டுக்கு இப்ப எவனோ கண்டுப்பிடுச்சான், பிள்ளைகளுடைய படிப்பிலே மண்ணைப் போட வேணுமென்று; அதற்கு அவன் பிள்ளைகளைக்கிளர்ச்சி பண்ண ஆரம்பிச்சி விட்டுட்டான். இப்ப பார்த்தால், எங்கே பார்த்தாலும் மாணவர்களுடைய காலித்தனங்கள் தான் வளர்கிறது. இதுசிலபேருக்குலாபம்,இந்தப் பசங்களெல்லாம் படிக்காது மாடு மேச்சா நாம மாத்திரம் நல்லா பிழைக்கலாம்ணுகிற எண்ணமுடையவர்களுக்கு.

ஆனால் நம்மைப் பொறுத்தவரையிலும் - பார்த்தால் நம்ம பிள்ளைகள் தான் நாசமாகிறான். நன்றாக நீங்கள் நினைக்கணும். அந்தப் பக்கமே திரும்பக்கூடாது. படிச்சபிறகு உங்கள் வேலை தீர்ந்ததற்குப் பிறகு அரசியலிலோ அல்லது வேறு கிளர்ச்சிகளிலோ, போராட்டங்களிலோ நீங்கள் கலந்து கொள்ளுகிறதிலே எனக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லை. படிக்கிற போது பிள்ளைகளுக்குப் படிப்பைச் சொல்லிக்கொடுக்கிற ஒருமுக்கியமான பொறுப்பை நீங்கள் ஏற்று கொள்ளுகிறபோது கிளர்ச்சி என்னும் பேராலே காலித்தனங்களிலே ஈடுபட ஆரம்பிச்சால் நீங்கள் மாத்திரமல்ல உங்ககிட்டே படிக்கிறவன், படிச்சவங்க, உங்கள் வாழ்வு, எல்லாம் அழிவிலே போயிடும். மன்னிக்கணும். நான் சொல்றேன் இப்பதான் எனக்கு இந்த வாய்ப்பு. தினமுமா சொல்லப் போறேன்.

எந்தக் காரணம் கொண்டும் நீங்கள் கிளர்ச்சிகளில் இறங்கக்கூடாது. கிளர்ச்சிகளில் ஆசை இருந்ததுனா படிப்பை விட்டுட்டுப் போயிடணும். ராஜாங்க வேலையிலே இருக்கிறவங்க ராஜினாமா பண்ணிட்டு போயிடணும். இல்லே இந்தக் காரியத்தையே முக்கியமாகக் கொள்ள வேணும். நம்ம நாட்டிலே ஏன்? இப்ப பேருக்குப் படிச்சவங்கன்னு இருக்கிறாங்களே தவிர, அறிவாளிகள் எத்தனை பேரு இருக்கிறாங்க. பயன்படும்படியாக அவர்கள் படிப்பு அவர்களுக்கு உதவவில்லை. தயவு செய்து நீங்கள் எல்லாம் எந்தக் காரியத்தையும் எதுவாக இருந்தாலும் நல்லபடி ஆராய வேணும், நல்லபடி சிந்திக்க வேணும். பெரியவங்க சொன்னாங்கங்கிறதை மறந்திருங்க.

பெரியவர்களெல்லாம் பெரியவர்கள் அல்ல

பெரியவங்கங்கிறது, காட்டு மிராண்டிகளுக்குத்தான் அந்தப் பேரு தகும். நாம அவுகளுக்குத்தான் வைக்கிறோம். அறிவாளிகள்ன்னு நாம பெரியவங்களை சொல்றதில்லே. 100 வருஷம் 500 வருஷம் 1000 வருஷம் 2000 வருஷம் இருந்தவனை எல்லாம் நாம ரொம்ப பெரியவங்கங்கிறோம். அவனெல்லாம் எப்படி பெரியவனாய் இருக்க முடியும்? அந்தக் காலத்திலே பெரியவனாய் இருக்குறதுக்கு அவனுக்கு என்னா(பெரிய)ஆயுதம் இருந்தது? இந்த தெய்வ சங்கற்பத்தினாலே அவன்பெரியவனா? தெய்வத்துக்கு அவன் மாத்திரம் என்ன வேண்டியவன்? மற்றவன் என்னா வேண்டாதவன்? தப்பான கருத்திலே பெரியவங்களுக்கு நாம சொல்லுகிறோம். அதை விடணும் பெரியவங்க, அவுக எல்லாம் பழயவங்க அப்படீன்னு சொல்லணும். பெரியவங்கங்கிறதுக்கு பதிலா யாருப்பா அவரு? அவரு பழையவரு அப்படீன்னு சொல்லணும் (சிரிப்பு - கைத்தட்டல்) அவுகளால் நமக்கு இன்றைக்கு ஒண்ணும் உதவாது.

மனிதன் அறிவுபெறக்கூடாது வளர்ச்சி அடையக் கூடாதுங்கிறதுக்காகவே தான் பெரியவனே தவிர பெரியவங்க சொன்னது, பெரியவங்க எழுதினது, பெரியவங்க பண்ணினது, வெங்காயம்னு சொல்லுறாங்க. (சிரிப்பு, கைத்தட்டல்) கத்திக்கிட்டு இருக்கிறாங்க. நீங்கள் அதிலே ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேணும்.தவிரவும் நூறு வருஷத்துக்கு முன்னாலே இருந்தவன் புத்திக்கும் உங்கள் புத்திக்கும் ஏராளமான வித்தியாசமிருக்குதே? உங்க பாட்டான் அல்லது உங்கள் உங்க பாட்டோனோடு பாட்டன் அவன்புத்திக்கும் உங்கள் புத்திக்கும் இன்னைக்கு எவ்வளவு வித்தியாசமிருக்குது? நூறு வருஷத்திலேயே நீங்கள் இந்த வித்தியாசமடைந்தால் ஆயிரம் வருஷம், இரண்டாயிரம் வருஷம், ஐயாயிரம் வருஷம் இவ்வளவு அவ்வளவுண்ணா வெங்காயம் மனுஷன். அன்னைக்கு குரங்காட்டம் தான் இருந்திருப்பான்! (சிரிப்பு) இவன் சும்மா எருமை மாடாகத்தான் இருந்திருப்பான்! அது பழக்கம் . எல்லாம் காலத்தினாலே வருது. சொன்னாங்க இங்கே சந்திர மண்டலத்துக்குப் போயிட்டு வரான். வெள்ளி மண்டலத்துக்கு போறான். இன்னொரு மண்டலத்துக்குப் போறான். அப்படீன்னா அவனுக்கு முந்திய பெரியவன் எல்லாம் என்னாத்தைக் கண்டான்? சந்திரன் அவனுக்கு ஒரு பெண்டாட்டி அவனுக்கு ஒரு வைப்பாட்டி. அவள் அவன்கிட்டே இவன் கிட்டே (போனாள்) என்கிற கதைதான். சூரியன், சந்திரன் பற்றி கண்டுப் பிடிச்சானே தவிர இன்னைக்கு இருக்கிற சங்கதியை எவன் கண்டு பிடிச்சான்? இது இயற்கையைச் சொல்லுகிறேன் நான்.

வயதுக்கு மரியாதையா? அறிவுக்கு மரியாதையா?

அப்படித்தானே இருக்கும் எல்லா காரியமும். மனிதனை முட்டாளாக்குவதற்கு எடுத்துக்கிட்ட தந்திரமே அவன் பெரியவன் அவன்தெய்வீகசக்தியைகொண்டவன்? அவன் அந்தப் பெருமையோட மனுஷனுக்கு மீறின பெருமையோட வந்தவன் என்கிற முட்டாள் தனத்தைப் போட்டுத்தான் ஒருத்தனை பெரியவனாக்க வேண்டியதாய்ப் போச்சு. ஆனதினாலே அந்தப் பலன் தான் வருகிறதே தவிர பழமை என்று சொல்லுகிறதெல்லாம், பழமை இருக்கலாம். பத்தாயிரம் வருஷத்துக்கு முன்னேயும் நாலும் நாலும் எட்டுதான் .இன்னைக்கும் நாலும் நாலும் எட்டுதான்.

இன்னும் ஒரு பத்தாயிரம் வருஷம் பொறுத்தாலும் நாலும்நாலும் எட்டு தான். அது மாத்திரம் எப்படி? இந்தப் பக்கம் நாலு விரலை நீட்டுரே இந்தப்பக்கம் நாலுவிரலை நீட்டுரே இதை இரண்டையும் கூட்டினால்எட்டுதான்வரும். உனக்கு மாத்திரமல்ல .உலகம் பூராவுக்கும் நாலும்நாலும்எட்டுதான். அப்படிப்பட்ட உன்னுடைய பூரண திருப்திக்கு எந்த விதமாக எவனும் எதிர்க்கிறதுக்கு இல்லாமல் எவனும் ஆட்சேபனை சொல்லறதுக்கு இல்லாமல் திருப்பி விடணும் சில விஷயங்களை. அதைப் பற்றிக் கட்டாயப்படுத்தாமல் அவை தானாக வந்துவிடும். அதற்கு ஒரு வாத்தியார் வேண்டாம். சிறுபிராயத்திலே சொல்லிக் கொடுத்திட்டாங்கன்னா தீர்ந்து போச்சி அவ்வளவுதான். ஆனால் மற்ற மூடநம்பிக்கையான காரியங்களை எல்லாம் எங்க அய்யா சொன்னாங்க, அப்புறம் எங்க அம்மா சொன்னாங்க, எங்க குருநாதர் சொன்னாரு, எங்க அவர் சொன்னார், இவர் சொன்னார் அந்த புத்தகம் சொல்லுது இந்தப் புத்தகம் சொல்லுதுன்னு போனீங்கன்னா உன் கதிஎன்னா ஆகிறது? அப்புறம் நீ சொல்றது தான் என்னா? ஆகவே தான் ஒவ்வொருத்தரும் அறிவைக் கொண்டு சிந்திக்கணும். மற்றபடி நான் சொன்னது போல எல்லோரையும் நாம் மக்கள் என்று சமமாக கருதவேண்டும்.
நண்பர்கள் சொன்ன மாதிரி மனிதன்னாலே மேல் மகன், கீழ்மகன்,என்பதெல்லாம்குறும்புதான்.எல்லாம்மக்கள்தான்.ஏதோ மக்களிலே கொஞ்சம் ஒருத்தனுக்கு ஒருத்தன் அவன் சுற்றுச் சார்புக்குத் தகுந்தபடி அவன் பதவி பக்கத்துக்குத் தகுந்தபடி பேதம் இருக்கலாம். அந்தபேதம் எப்படி அவனை கீழ்மகனாகவும், கீழ்ஜாதியாகவும், மேல்மகனாகவும், மேல் ஜாதியாகவும் எப்படி ஆக்கமுடியும்?.இவைகளை எல்லாம் நீங்கள் சிந்திச்சி, கவலை எடுத்துக் கொண்டு, உங்களிடத்திலே நாளைக்கு ஒப்பிக்கபோகிற ஒரு பெரிய பொறுப்புக்கு அதையெல்லாம் பயன் படுத்த வேண்டும். அந்த குணம் இல்லாததினாலே தான் நாம இன்னைக்கு இந்தக் கீழ்த்தன்மையிலே இருக்கிறோம்.

தமிழ் காட்டுமிராண்டிமொழி

நாம் இப்ப10 நாளா ஒரு மாதமா போராடிகிட்டு வருகிறேன். நம்ம மொழி காட்டுமிராண்டி மொழி. எப்படிடா சொன்னேன்னான் ஒருத்தன்? நீயேகாட்டுமிராண்டி (பலத்த கைத்தட்டல் வெடிச்சிரிப்பு). நீ எந்ததெந்த இலக்கியத்தை ஆதாரத்தைக் கொண்டு வந்து காட்டுகிறியோ அதெல்லாம் சுத்த காட்டுமிராண்டி காலத்தது அப்படீன்னு சொன்னேன். இப்ப அந்தப் பசங்களுக்கு வாயே அடைச்சிப் போச்சி. (சிரிப்பு) நான் காட்டுமிராண்டி அல்லன்னு - இப்ப ஒருத்தனாலே கூட சொல்ல முடியலே. ஏன் காட்டுமிராண்டின்னா? (சிரிப்புடன் பேசுகிறார் பெரியார்)அந்தக் காலத்து முறையிலேயே நீ இன்னும் பழசைக் கட்டிக்கிட்டு அலைகிறே, அதனாலே நான் சொல்லுகிறேன்.

இன்றைய நிலைமையை நீ ஏற்றுக்கிட்டேயானால் உன்னை நான் இன்னையத்து மனுஷன்னு சொல்லுவேன்.உங்க எழுத்தெல்லாம் காட்டு மிராண்டி காலத்திலே உண்டானது. உன்மொழி எல்லாம் காட்டுமிராண்டி காலத்திலே உண்டானது. உன்னுடைய இலக்கியம் எல்லாம் காட்டு மிராண்டிகாலம். நீ கற்பிச்சிகிட்டு இருக்கிற கடவுள்கள் அத்தனை பேரும் காட்டுமிராண்டி காலத்தவைகள். காட்டுமிராண்டி காலத்து அறிவையே ஆதாரமாகக் கொண்டுள்ளாய். அப்புறம் நீ எதைக் கொண்டு நான் (காட்டுமிராண்டி) அல்லன்னு சொல்லுவே?

மனித வளர்ச்சி அறிவால்தான்

மனுஷன்வளர வேண்டுமானா அறிவைக் கொண்டு வளர்ந்தால் தான்மனுஷன் வளரமுடியுமே தவிர நான் உனக்கு வளர்ச்சி உண்டாக்கிறதும் நாமே மோட்சத்தையும் உண்டாக்குவதெல்லாம் பயித்தியக்காரத்தனம். உன்னுடைய அறிவு எவ்வளவுக்கு வளருதோ அவ்வளவுக்கு நீ பக்குவமடைகிறே. இதற்கு முன்னாலே அறிவு வளர்வதற்கு போதிய சாதனங்கள்கிடையாது. இன்னைக்கு எராளமான சாதனங்கள் வந்திட்டுது. அதைக் கொண்டு நீ எவ்வளவு பயன்படலாமோ, பயன் அனுபவிக்க வேண்டுமே தவிர, அதையும் பார்த்துகிட்டு அறிவைக் கெடுக்கிறதுக்கு, பழசையும்எடுத்துகிட்டு இருந்தாயானா நீ இரண்டும் கெட்டானாகத்தான் போகமுடியும். ஏன் இதை உங்களுக்குச் சொல்லுகிறேன்னா? நீங்கள் எல்லாம் இளைஞர்கள் அத்தோடு மட்டுமில்லாமல் நீங்கள் எல்லாம் ஆசிரியர்களாக ஆகப்போகிறவர்கள்.

  திருச்சியில் பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கை

அருமைத் தோழர்களே! மற்ற அரிய காரியங்களை எல்லாம் இங்கு (பேசியவர்கள்) எடுத்துச் சொன்னார்கள். நண்பர் வீரமணி அவர்கள் ரொம்ப நாளாய் நாம் பேசி கிட்டு இருக்கிறதை திருச்சியிலே ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டுமென்று சொன்னார்கள். அது ரொம்ப தேவையான காரியம். கோயம்புத்தூரில் ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டாம்ன்னு நான் சொல்லலே. தமிழ் நாட்டை எடுத்துகிட்டு 14 ஜில்லாக்களையும் எடுத்துகிட்டு - இங்கே இருக்கிற ஜன எண்ணிக்கையும் எடுத்துக்கிட்டு - மேல் நாட்டையும் மற்ற நாட்டையும் பார்த்தீங்கனா இங்கே (தமிழ்நாட்டில்) 5 அல்லது 6 யுனிவர்சிட்டியை ஏற்படுத்தலாம். ஏற்படுத்த வேண்டாம்ன்னு நான் சொல்லலே.

ஆனால் முக்கியம் எதுன்னா முறையா வருகிறதாயிருந்தால் கட்டாயம் இங்கே தான்(திருச்சி மாநகரத்தில்) வைத்துதான் ஆகணும். ஏன்? ஏறக்குறைய இந்த ஒரு ஊரிலேயே எட்டு காலேஜ் இருக்குது. இந்த ஜில்லாவிலே 3,4 காலேஜ் இருக்கு. அப்புறம் இதுக்கு சேத்தலாம் தஞ்சாவூரை அப்புறம் இதுக்குச் சேத்தலாம் இன்னுமொரு ஜில்லாக்களை. ஆனதினாலே இங்கே நல்ல ஒரு யுனிவர் சிட்டி வர்ராப்பிலே செய்யணும். பணம் இல்லேன்னு சொல்லுகிறாங்க. அது இந்த மந்திரிகளுக்கு தைரியமிருந்தா ஒரு யுனிவர்சிட்டிக்கு வேண்டிய பணம் நாளைக்கே வந்திடும். தைரியம் வேணும் அவர்களுக்கு. இன்னும் அவர்களுக்கு தன் காலிலே நிற்க தைரியம் வரலே, இன்னொருத்தருடைய உதவிவேணும். இன்னொருத்தனுடைய எதிர்ப்பு இல்லாமல் இருக்கணும். இவர்கள் பார்க்கிற நிலை.

கள்ளுக்கடைதிறந்தால் தொழிலாளர் உழைப்பும் மாவட்ட பொருளாதாரமும் பெருகும்:

நான் நினைச்சேன். இவுக (தி.மு.) ஆட்சிக்கு வந்ததும் கள்ளுக் கடையைத் திறந்து விடுவாங்கன்னு நினைச்சேன். பயந்து கிட்டாங்க. அதைத் திறந்தால் இன்னைக்கு 20 கோடி ரூபாய் வரும். 20 கோடிவரும். அதிலே ஒண்ணும் கரைச்சலில்லை. காண்ட்ராக்ட்டிலே (ஏலத்துக்கு) விட்டாலே வரும் (சிரிப்பு) அதுபாட்டுக்கு அதை திறந்திடரது, இதைபாட்டுக்கு இதை திறந்திட்டா தீர்ந்தது. (மீண்டும் சிரிப்பு, கைத்தட்டல்) தானாபணம் நமக்கு இருக்குது. மாட்டைக் கொன்று செருப்பு தானம் பண்ணினான்கிற மாதிரி நல்ல வரும் படியைப் பாழாக்கிக்கிட்டு ஏதோ இம்மாதிரி பண்ணுகிறோம் என்று சொன்னா அப்படியாவது என்னா உலகத்திலே இல்லாத அக்கிரமம் நீ பண்றே. எல்லா இடத்திலேயும் இருக்குது. இங்கேயுமிருக்கட்டுமே. ஏதோ பித்துக்குளித்தனமா இதை வேண்டாம்னு சொன்னானே தவிர, இதிலே எவனும் அறிவை வைத்து வேண்டாம்னு சொல்லலே.

நான் இன்னைக்குச் சொல்லலே. 1930 லேயே சொல்லியிருக்கிறேன். அது (மதுவிலக்கு) சுத்த தவறான காரியம் அதைச் செய்தது என்று ஆனதினாலே மதுக்கடைகள் இருக்கவேணுமென்று. இரண்டாவது ஏதாவது நியாயம் சொல்லுவாங்க. யார்யாருகெட்டுப் போவாங்கங்கிறதை நீ கண்டியான்னு, கெட்டுப் போறவன் எல்லாம் (கள்ளச்சாராயம் குடித்து) செத்துப் போறானே. (சிரிப்புகைத்தட்டல்) ஆனால் முன்னேயாவது கெட்டுப் போவின்னு சொல்லலாம். அதைப்பற்றி இப்ப நானு வாதம் பண்ண வரலே.அது போனதுக்கு அப்புறமே தொழிலாளியிடையே ஒழுக்கமே போயிட்டுது .நல்ல போதையாக குடிக்கிறவரைக்கும் தொழிலாளியிடத்தே ஒழுக்கமிருந்தது உழைப்பு இருந்தது சோம்பேறித்தனம் கிடையாது. நான் தினமும் 100 பேர் 50 பேரிடத்திலே வேலை வாங்குகிறவன். இப்ப (மதுவிலக்கால்) தொழிலாளர் உலகமே நாசமாயிட்டுதுஆனதினாலே நான் அதிகமாகச் சொல்லலே. அவர்களுக்கு (ஆட்சியினருக்கு) அது வேணுமானால் தமிழகத்தில் இன்னொரு மூணு நாலு யூனிவர்சிட்டி ஏற்படுத்தலாம். பணமில்லேன்னு கவலைப்பட வேண்டியதில்லை.தாராளமாகக் கொடுப்பாங்க. 20 கோடி ரூபாய்ங்கிறது குறைச்சல் நான் சொல்றது.

தவிரவும் சொல்றேன். எதைக் கொண்டு காப்பாத்த முடியும்? இந்த மலையாளத்திலே விற்கிறான் கள்ளு கோயம்புத்தூருக்கெல்லாம் அங்கிருந்து சப்ளையாகிறது. இங்கே புதுச்சேரியிலே விற்கிறான் கள்ளு. தென்னாற்காடு ஜில்லாவுக்கும், தஞ்சாவூர் ஜில்லாவுக்கும் அங்கிருந்து சப்ளையாகிறது. காரைக்காலிலும் இருக்குது, பாண்டிச் சேரியிலுமிருக்குது. அங்கிருந்து நம்ம நாட்டுக்குச் சப்ளையாகுது. இங்கே குடிச்சிட்டு கொஞ்சம் போதையா இருந்துகிட்டு பிறகு தெளிஞ்சதும் வேலை செய்வான். அவன் அங்கே போய் கள்ளுகுடிச்சிட்டு அஞ்சாறு நாள் அங்கேயிருந்துவிட்டு வருகிறான். (சிரிப்பு) நம்ம நாட்டு பணம் சுற்றிலுமுள்ள ஜில்லாவுக்கு அல்லவா கொள்ளைபோகுது?
பம்பாய்காரன் அவன் கொள்ளையடிக்கிறான். ஆந்திராகாரன் அவன் கொள்ளையடிக்கிறான். மைசூர்காரன் (கர்நாடகம்) அவன் கொள்ளையடிக்கிறான். நம்ம பணமெல்லாம் அங்கே போவுது. நாம என்னமோ வறட்டு வேதாந்தம் பேசிகிட்டு கள்ளு கூடாது, கள்ளு கூடாது என்கிறோம். இங்கே எதுக்கு இங்கே சொல்றேன்னா சுலபமா பணம் இதுக்கு (யூனிவர்சிட்டிக்கு) வந்துவிடும். போதும் அது. நாம பணம் சம்பாதிக்கிறதுக்கு உள்ளாகவே, நாம நல்ல அறிவை மக்களுக்குக் கொடுத்தோமானால் இந்த கள்ளை (குடியை) ஒரு அளவோடு செய்துக்குவான். அவன் நல்லதாகவே பண்ணிக்குவான்.

இப்ப நான் ஏன் பயப்படுகிறேன்னா இந்த அரசாங்கத்துக்கு என்னாலே ஒரு தொந்தரவும் இருக்காதுஎன்னாலே ஆன ஆதரவு உதவியை எல்லாம் இந்த அரசுக்குன்னுகொடுக்கணும். அப்படீன்னு கண்ணை மூடிக்கிட்டு துணிஞ்சிருக்கிறேன். இல்லாட்டா மற்றவங்களைப் போல நாமும் சத்தம் போடணும். தவிர காமராஜரிடம் நமக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கிறதினாலே, அவர் கொஞ்சம் பிடிவாதமா இருக்கிறாரே நாம ஏன் அதிகமாகக் கிளர்ச்சி பண்ண வேணும்? கிளர்ச்சியும் பயன்படாதே? அப்படீங்கிற ஓர் அளவுக்கு நிலைமை இப்படி இருக்கு.

ஆனதினாலே நான் வேண்டிக் கொள்ளுவது இப்போதுள்ள வாய்ப்பிலே, இந்த ஆட்சிக்காலத்திலே இரண்டு மூணு யூனிவர்சிட்டிகளை உண்டாக்கிடவேணும். இன்னைய வரையிலும் நாம் 100 க்கு 40 பேர் படிச்சிருக்கிறோம். நாம் இந்த 1967இல் இப்படி நாம் 100க்கு 100 பேர் படிச்சவங்களாக மக்களை ஆக்கணும். படிப்பை இன்னும் விரிச்சி விரிவா வைக்கலாம். ஆனதினாலே அவுக (ஆட்சியாளர்) இதையெல்லாம் செய்ய வேணும். நான் ரொம்பவே வேண்டிக்கிறேன். அவுக (ஆட்சியை) தங்களை காப்பாற்றிக் கிட்டு செய்யட்டும் கஷ்டப்படுத்திக்கிட்டு செய்ய வேணும்ன்னு நான் சொல்லவரலே. ஆனால் அதற்கெல்லாம் முடிவு பண்ணவேணும்.

அடுத்தாப்பிலேயும் இன்னொரு பள்ளிக் கூடமும் வைக்க வேணுமென்று அய்யா அவர்கள் இங்கே சொன்னார்கள். எனக்கு அடுத்து 90ஆவது பிறந்தநாள். இப்பவும் நானும் சொல்றேன். கோவிச்சுக்காதீங்க. மாசம்எண்ணிகிட்டுதான் இருக்கிறேன். என் உடல்நிலை அந்த அளவில் தான் இருக்குது. நான் என்ன பண்ணமுயும்? வேணும்ன்னா பணம் கொடுக்கலாம். 5 லட்சமோ 4 லட்சமோ யாராவது செய்கிறேன்னு முன் வந்தால் எடுத்துக் கொடுத்திடுவேன். (பலத்த கைத்தட்டல்) எனக்கு என்னத்துக்குப் பணம் (கைத்தட்டல்) யாராவது முன்னாலே செய்யணும் பள்ளிக் கூடமோ பிரச்சாரமோ வேறு எந்தவிதமான காரியங்களோ எனக்கு முடியலே. அப்படி ஒரு பள்ளிக் கூடம் (நம்ம கருத்துப்படி) இருந்தால் தேவைதான். பள்ளிக்கூடமே இல்லாமலேயே இவ்வளவு காரியம் நடந்திருக்குதே. இருந்தால் இன்னும் எவ்வளவோ நடக்கும் (கைத்தட்டல்) அப்படி ஒரு பள்ளிக்கூடம் அவசியம் இருக்கவே வேண்டியது தான். ஏதோ என் அளவுக்குப் பணவிஷயமாக ஏதோ உதவி பண்ணலாம்.அமைப்புவிஷயமாக ஏதாவது பண்ணவேணும்னா அமைச்சர் ஏதாவது செய்ய முன் வந்தால் நடக்கும். அவரு சொன்னால் யாரு வேண்டுமானாலும் முன்வருவாங்க.

பள்ளிக்குச் செல்லாது எல்லா ஞானத்தையும் பெற்றவர் பெரியார்

இங்கே பேசினாங்களே நண்பர் வீரமணி அவர்கள், ஆணைமுத்து அவர்கள், செல்வேந்திரன் அவர்கள், இவர்கள் எல்லாம் நல்ல அறிவுள்ளவர்கள் நல்ல விஷயம் தெரிந்தவர்கள். கொஞ்சம் ஏறக்குறைய வசதியுள்ளவர்கள். ஒண்ணும் கஷ்டமில்லை. உதவி பண்ணுவாங்க அதற்கு. அந்தமாதிரி நாட்டு வளப்பத்தைப் பயன்படுத்திக்க வேண்டியதுதான். நான் அதிகமாக ஒண்ணும் சொல்ல வரலே. ஏதோ சொல்லிவிட்டுப் போறேன். நானும் படிக்கலே
என்னுடைய 10ஆவது வயசிலே நாலாவது வகுப்பு பாஸ்
பண்ணினவன். அதுவும் இரண்டு வருஷம் படிச்சி முதல்
வருஷம் பெயிலாகி, அடுத்த வருஷம் பாஸ் பண்ணினேன் (சிரிப்பும், கைத்தட்டலும்) 1888,1889லே. எனக்கு ஞாபகமிருக்குது. என் 10ஆவது வயதிலேஅதற்கப்புறம் நானு எந்தப் பள்ளிக் கூடத்திலேயும் படிக்கலே. எனக்கு கடவுள் நம்பிக்கையில்லே பெரியவங்க நம்பிக்கையில்லே. எனக்கு இரண்டாவது நாட்டைப் பற்றி கவலை இல்லை. மொழியைப் பற்றிக் கவலை இல்லை. நம்ம நாட்டை எவன் அரசாளுகிறான் என்பதைப் பற்றியும் கவலையில்லை. அதனாலே இஷ்டம் போல என்னாலே பேச முடிஞ்சிது. மதப் பக்தி இருந்தால் முக்கால் முட்டாள். கடவுள் பக்தி இருந்தால் வேறு அவன் கைகாலு ஓடாதே சனியன். மதம் அப்படி சொல்லுதுங்கிறான். கடவுள் இப்படி சொன்னாரு என்கிறான். என்னைக் கடவுள் அப்படி நடத்தினாருங்கிறான். அப்புறம் என்னா பண்ணுவிங்க. எப்படி ஓடும், தொல்லை இல்லாமல் திட்டமா (வாழ்வை) வைச்சிக்கிட்டான்னாஒரு பற்றும் இல்லாமல் அவனுக்குப் பிடிபடுகிறதெல்லாம் ஏதாவது அறிவுக்கு ஏற்றதுதான் பிடிபடும். இல்லாவிட்டால் அவனுடைய சுற்றுச்சார்புதான் இழுத்துகிட்டு போயிடும். அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு இல்லாததினாலே - சின்ன பிள்ளையாய் இருக்கிறபோதே எனக்கு இல்லாததினாலே ஏதோ என் இஷ்டம் போல போக முடிஞ்சுது. நான் எழுதி இருக்கிறேனே. எனக்கு வயதுஏழு இருக்கிறபோது ஜலதாரியிலே நெல்லிக்காய்போகும். வெள்ளமடிச்சிகிட்டு ஜலதாரியிலே நிறையா நெல்லிக்காய்போகும்.

அதையெல்லாம் எடுத்து சாப்பிடுவேன். பார்ப்பான் ஜாதிப் பற்று கொண்டவன் மதம், கடவுளையும் நம்மிடையயே பரப்பி அந்தத்தம்பி இந்தத்தம்பின்னு அவன் ஜாதியைக்காக்கவே பாப்பான் பயன் படுத்துகிறான். மேல் நாட்டிலே அப்படி இல்லையே. அங்கே இருந்து இங்கு வந்தல்லவா தொண்டு செய்கிறான். நீங்கள் நினைக்கணும் ஆராயிரம் மைல் அந்தப் பக்கம் இருக்குது. அவனுக்குத்தன் பிழைப்பு தான் பெருசுன்னா அவன் அங்கேயல்லவா இருப்பான்? அவன் மதம் அவன் கடவுளு மற்றவனுக்கு தொண்டு செய்வதன் மூலம் வாழலாம்ன்னு கற்றுக் கொடுக்குது. இங்கே உன் மதம் ஊரானை ஏய்ச்சி உன் வயிற்றை ரொப்பிகிட்டு வாழலாம்ன்னு உன் மதம், உன் கடவுள் சொல்லிக் கொடுக்குது. அதையெல்லாம் சொல்லுவதற்கு இப்போது நேரமில்லே.

ஆசிரியர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்க விழையும் பெரியார்

ஆனால் உங்களை இன்னொரு நாளைக்கு எப்போ பார்ப்பேன். இன்னொரு வருஷம் பொறுத்து. அந்த வருஷம் உங்களுக்கோ எனக்கோ யார் கண்டா? ஆனதினாலே நீங்கள் எல்லாம் நல்லபடி பகுத்தறிவை எடுத்துக்கங்க. இரண்டாவது இன்னைக்கு கிடைக்க முடியாத வாய்ப்பு நம்முடைய அமைச்சர் (நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்) வந்து அருமையான சொற்பொழிவை எல்லாம் சொன்னார்கள். பழய ஜாதகத்தை (வரலாற்றை) எல்லாம் இங்கு நினைவுபடுத்தினார்கள். ரொம்ப சரி. ஒரு வருஷமிருந்தாலும் சரி -நான் இருக்கப் போவதில்லை. இருந்தாலும் சரி.இந்தநிலையிலேயே நாங்கள் (பகுத்தறிவுவாதிகளாக) இருக்க வேணுமென்று ஆசைப்படுகிறேன்.

காரணம், இந்த ஆட்சியினாலே நமக்கு ரொம்ப காரியம் ஆகணும். ரொம்ப காரியம் ஆகமுடியும். ஏன் அவ்வளவு சொல்லுகிறேன் - என்றால், அவர்கள் கொள்கை அப்படி. அவர்கள் பகுத்தறிவு வாதிகள். மற்றவர்களாலே முடியாது. அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தால் தான் முடியும், மற்றவர்கள் அவன் பகுத்தறிவுவாதிகள் அல்ல. இவர்கள் (தி.மு.) போனால், அடுத்தாற்பிலே வருகிறவன் அவன் மூட நம்பிக்கைக்காரன்தான் வருவான். எவன் வந்தாலும் ஒருக்கால் ரஷ்யாக்காரன் வந்தால் எப்படி இருப்பானோ தெரியாது. மற்றபடி எவன்வந்தாலும் மூடநம்பிக்கைக்காரன் தான் வருவான். அதனாலே ஒரு நல்ல வாய்ப்பு வேணும்னா இந்த வாய்ப்பு (தி.மு. அண்ணா அவர்கள் ஆட்சிதான்)பயன்படும். இன்றைக்கு (08.11.1967) வந்த நல்ல செய்தி உங்களுக்குத் தெரியும். எலக்ஷன் நடந்தது.ரொம்ப கீழ்த்தரமான போட்டி எல்லாம் நடந்தது. வெட்கமாய்ப் போய்ச்சி எனக்கே. நல்ல வாய்ப்பா1லட்சத்து5ஆயிரம்(வாக்கு)வித்தியாசத்திலே(தி.மு.
ஜெயிச்சிட்டாங்க (கைத்தட்டல்) ஒரு லட்சத்து அய்யாயிரம் ஓட்டு வித்தியாசத்திலே. இதற்குக்காரணம் எதிரிகள் செய்த கீழ்த்தரமானப் பிரச்சாரம்தான். எனக்குத் தோணுது. இவ்வளவு வேகம் வரவேண்டிய அவசியமில்லே. ரொம்ப கீழ்த் தரமான பிரச்சாரம் பண்ணி மக்கள் எண்ணத்திலே ஒரு அசிங்கத்தை உண்டாக்கிட்டாங்க. ஆனதினாலே நல்ல வாய்ப்பு. அவர் கூட (முதல்வர் அண்ணா கூட) நினைக்கலே. அவர் கூட சொன்னாராம். ஜெயிப்போம். ஆனால் அவ்வளவு அதிக வித்தியாசமிருக்காது ஏதோ கொஞ்சத்திலே ஜெயிப்போம்னாராம். என்னாடான்னா முன்பு என்ன வித்தியாசத்திலே இருந்தாங்களோ அதற்கு மேலே ஒண்ணுக்கு ஒண்ணரை வித்தியாத்திலே ஜெயிச்சிருக்கிறாங்க. அப்போ 9 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலே ஜெயிச்சாங்க. அப்ப நாலரை லட்சம் ஓட்டுக்கு எண்பதினாயிரம் ஓட்டு வித்தியாசம். இப்ப மூணு லட்சம் ஓட்டுக்கு எழுபத்தி எட்டுச்சில்லரை ஓட்டு வித்தியாசம். ஆகவேமுன்னே ஜெயிச்சதைவிட இப்ப இரண்டு பங்கு வித்தியாசத்திலே ஜெயிச்சிருக்காங்க. ஒண்ணும் குறைஞ்சி போடலே. ஜனங்களிடத்திலே அதிகமான பற்றுதலைப் பெற்றுதான் இவ்வளவு ஓட்டு வாங்கி இருக்கிறாங்க. ஆனதினாலே வசதியிருக்குது. துணிஞ்சி செய்ய முடியாத காரியம் எதையாவது செய்யணும். யாராலும் செய்யப்பட்டிருக்காத காரியங்களை எல்லாம் அவுக (அறிஞர் அண்ணா) காலத்திலே செய்யணும். அதைத்தான் நான் எதிர்ப்பார்க்கிறேன்.

மற்றும் வந்திருக்கிற தோழர்கள் எல்லாம் ஏதோ நம்ம என்னுடைய கருத்தை எடுத்துச் சொன்னேன். அவர்களுக்கும் சொல்லுகிறேன். உங்களுக்கும் சொல்லுகிறேன். உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து சரீன்னுப்பட்டதை எடுத்துக்கிட்டு தவறுங்கிறதைத் தள்ளி விடுங்கள் என்று கேட்டுக்கிறேன். மறுமுறையும் என்னுடைய உளம் நிறைந்த வணக்கத்தையும், நன்றியையும், பாராட்டுதலையும் நம்ம அமைச்சரவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டு வந்திருக்கும் பெரிய சுவாமி (பாதிரியார்) பிஷப் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்).

நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை